தேவாரம் - திரு ஆனைக்காவில் - சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
ஒரு மனிதனுக்கு வரும் மிகப் பெரிய ஏமாற்றம் எது என்று கேட்டால் வயதான காலத்தில் யாரும் துணைக்கு இல்லாமல் இருப்பது.
பிள்ளைகள், கணவன், மனைவி, சுற்றம், நட்பு எல்லாம் ஏதோ கொஞ்ச நாள் வரும் போகும். எந்நேரமும் நம் கூடவே இருக்க முடியுமா.
காது சரியா கேட்காது, கண் பார்வை மங்கும், ஞாபகம் தப்பும், உடல் வலி குன்றும், உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாது. மிக மிக தனிமையாக உணர்வோம்
அப்படி எல்லாம், என் பிள்ளை என் கூடவே இருப்பான், என் மனைவி என்னை அன்போடு பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை உள்ளவர்கள், சுத்தி முத்தி பார்க்க வேண்டும். எது எதார்த்தம் என்று புரியும்.
திருநாவுக்கரசர் சொல்கிறார்:
"தாய், தந்தை, சுற்றம், செல்வம் இதில் எது நமக்கு நல்லது செய்யும்? நாம் இறந்த பின் நமக்கு யார் உதவுவார்கள்? ஒருவரும் இல்லை. இடுகாட்டில் நம் உடலை தீ மூட்டி விட்டு, அது முழுவதும் எரிந்து முடிவதற்கு முன்பே வீட்டுக்குப் போய் விடுவார்கள். திரு ஆனைக்காவில் உள்ள சிவ பெருமானே, உன் திருவடிகளைப் பற்றினால், நான் துன்பம் அற்ற நிலையை அடைவேன்"
என்கிறார்.
பாடல்
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_5.html
(Pl click the above link to continue reading)
எத்தாயர் = எப்படிப்பட்ட உயர்ந்த தாயார்
எத்தந்தை = எப்பேற்பட்ட தந்தை
எச்சுற்றத்தார் = எவ்வளவு உயர்ந்த சுற்றத்தார்
எம்மாடு = எத்தனை செல்வங்கள்
சும்மாடாம் = இவை எல்லாம் நம்மைத் தாங்குமா ?
எல்லாம் ஏவர் நல்லார் = எதில் யாரெல்லாம் நல்லவர்கள்
செத்தால் = நாம் இறந்தால்
வந்து உதவுவார் ஒருவ ரில்லை = வந்து உதவி செய்பவர் ஒருவரும் இல்லை
சிறுவிறகால்= சிறு சிறு விறகுகளால்
தீமூட்டிச் = நம் உடலுக்கு தீ மூட்டி
செல்லா நிற்பர் = சென்று விடுவர்
சித்தாய வேடத்தாய் = ஞானமே வடிவானவனே
நீடு பொன்னித் = நீண்ட பொன்னி நதிக் கரையில் உள்ள
திருவானைக் காவுடைய = திரு ஆனைக்கா என்ற தலத்தில் உறைபவனே
செல்வா = செல்வா
என்றன் = என்
அத்தா = தலைவனே
உன் = உன்
பொற்பாதம் அடையப் பெற்றால் = திருவடிகளை அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்ட = அல்லல் (துன்பம்) தரும் அந்த நிலையினை விட்டு அகல
அடியேன் என்செய் கேனே. = நான் என்ன செய்வேன். ஒன்றும் செய்ய மாட்டேன்.
யார் இருந்து, என்ன இருந்து என்ன பயன். இறைவா உன் திருவடிகள் ஒன்றே துணை என்கிறார்.
"சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர்" என்ற வரி விளங்க கொஞ்சம் இலக்கணம் வேண்டும்.
செல்லா நிற்பர் என்றால் செல்லாமல் நிற்பார்கள் என்று அர்த்தம் தோன்றும். சிதைக்கு நெருப்பு மூட்டிவிட்டு வீட்டுக்குப் போகாமல் அங்கேயே நிற்பார்கள் என்ற அர்த்தம் தொனிக்கிறது. அப்படி ஒன்றும் நடப்பது இல்லை.
"செல்லா" என்பது செய்யா எனும் வாய்பாடு.
வாய்பாடு என்றால் template
சொற்களை இரண்டு விதமாக பிரிக்கலாம்.
பெயர்ச் சொல், வினைச் சொல் என்று.
வினைச் சொல் என்றால் செயலை குறிக்கும் சொல்.
ஒரு வினைச் சொல்லுக்கு மூன்று பெரும் பகுதிகள் உண்டு.
பகுதி + இடை நிலை + விகுதி என்பன அவை.
முதலில் வருவது பகுதி. இது எந்த செயல் என்று காட்டும்.
நடுவில் வரும் இடை நிலை அந்த செயல் நிகழ்ந்த காலத்தைக் காட்டும்
இறுதியில் வரும் விகுதி யார் அந்த செயலை செய்தார்கள் என்று சொல்லும்.
உதாரணமாக:
வந்தான் என்ற வினைச் சொல்லை
வா + த் + ஆன்
என்று பிரிக்கலாம்.
வா என்பது வருகின்ற செயலை குறிக்கும். அது வ என குறுகியது விகாரம்.
த் இறந்த காலம் காட்டும் இடைநிலை
ஆன் = ஆண் பால், படர்கை, விகுதி
தமிழில் சிறப்பு என்ன என்றால் இந்த மூன்று பகுதிகளையும் தனித் தனியாக நாம் மாற்றலாம்.
உதாரணமாக
வா + த் + ஆள் என்று விகுதியை மட்டும் மாற்றினால் அது வந்தாள் என்று பெண் பாலாகிவிடும்
வா + த் + ஆர் = என்று விகுதியை மீண்டும் மாற்றினால் அது வந்தார் என்று பலர் பாலாகிவிடும்.
வா + த் + அது = வந்தது என்றால் ஒன்றன் பாலாகிவிடும்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது காலம் காட்டும் இடை நிலை.
நிகழ் காலத்தை காட்டுவதற்கு மூன்று இடை நிலைகள் உள்ளது.
கிறு
கின்று
ஆநின்று
அது என்ன கிறு, கின்று
வருகிறான் = வா + கிரு + ஆன் எனப் பிரியும். நடுவில் உள்ள கிரு நிகழ் காலத்தை குறிக்கும்.
வருகின்றான் = வா + கின்று + ஆன்
இந்த இரண்டு இடை நிலைகளையும் நாம் இப்போதும் பயன் படுத்துகிறோம்.
அந்த "ஆநின்று" என்ற ஒரு இடை நிலை இருக்கிறது.
அதை நாம் இப்போது பயன் படுத்துவது இல்லை.
முன்பு பயன் படுத்தினார்கள்.
வருகிறான்
வருகின்றான்
வாராநின்றான் = வா + ஆநின்று + ஆன்
வராநின்றான் என்றால் வராமல் நின்றான் என்று பொருள் அல்ல. வருகிறான் என்றுதான் பொருள். கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் அதை நாம் இப்போது தவிர்த்து வருகிறோம்.
சிறுவிறகால் தீ மூட்டி செல்லா நிற்பர்
என்பதில் உள்ள செல்லா என்ற சொல் செல்வர் என்று குறிக்கும்.
உடல் முழுவதும் எரியும் வரை கூட இருக்க மாட்டார்களாம். அவரவர் வேலையை பார்க்க போய் விடுவார்கள்.
அவ்வளவுதான் சொந்தம். பாசம். எல்லாம்.
இதற்கா இந்தப் பாடு. ஓடி ஓடி உழைத்து, இரவு பகல் கண் விழித்து...யோசிக்க வேண்டும்.