நாலடியார் - கண் குத்திய கை
நட்பிலும், உறவிலும் சில சமயம் வேண்டத்தகாதன ஏதாவது நிகழ்ந்து விடும்.
நண்பர்கள் நம் மனம் நோகும் படி ஏதாவது சொல்லி விடுவார்கள், அல்லது செய்து விடுவார்கள். நாம் எதிர்பார்த்து இருக்கவே மாட்டோம்.
என்ன செய்வது?
அப்படி செய்து விட்டார்களே என்று அவர்களோடு விரோதம் பாராட்டி, நட்பை துண்டித்து விடலாமா?
அல்லது சரி சரி என்று கண்டும் காணாததும் போல் இருந்து விடலாமா?
எப்படித்தான் மறந்தாலும், மன்னித்தாலும், மீண்டும் அவர்கள் முகம் பார்க்கும் போது பழையன எல்லாம் வந்து போகும்தானே.
எப்படி இந்த தர்ம சங்கடத்தில் இருந்து மீள்வது?
நாலடியார் அதற்கு ஒரு வழி சொல்கிறது.
சில சமயம் நம் விரல் நம் கண்ணில் பட்டுவிடும். வலி உயிர் போய்விடும்.
இவ்வளவு வலிதந்தாயே என்று விரலை வெட்டி விட முடியுமா?
நம் விரல்கள் நமக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கின்றன. இனியும் அவை நமக்கு உதவி செய்யும். அப்படி இருக்க, ஏதோ ஒரு தடவை தவறு நிகழ்ந்தது என்பதற்காக விரலை வெட்டி விட முடியுமா?
அது போல நண்பர்கள் எப்போதேனும் தவறு செய்து விட்டால், அதை பெரிது படுத்தாமல் கண் குத்திய விரலை ஏற்றுக் கொள்வது போல் அவர்களை ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும்.
பாடல்
இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை.
பொருள்
இன்னா செயினும் = நமக்கு துன்பம் செய்யினும்
விடுதற் கரியாரைத் = விட்டு விட முடியாதவரை. நல்ல நண்பர்களை
துன்னாத் துறத்தல் = நெருங்கி இல்லாமல் விட்டு விலகிப் போய் விடுவது. (துன்னுதல் = நெருங்குதல்)
தகுவதோ = சரி தானா ? (சரி இல்லை)
துன்னருஞ் = நெருங்க முடியாத
சீர் = சிறந்த
விண்குத்து = வானத்தை குத்துவது போல
நீள்வரை வெற்ப ! = உயர்ந்த மலைகளை கொண்ட நாட்டின் அரசனே
களைபவோ = யாராவது வெட்டி விடுவார்களா?
கண் குத்திற் றென்றுதங் கை = கண்ணை குத்தியது என்பதற்காக தன் கையை ?
நன்கு ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.
அதற்குப் பின் என்ன நடந்தாலும் அந்த நட்பை விட்டு விடக் கூடாது.
வார்த்தைகள் முத்திப் போய் அடி, தடி, சண்டை, சச்சரவு, வழக்கு, வக்கீல், நீதி மன்றம், விவாகரத்து என்று போகின்ற இந்தக் காலத்தில், இது போன்ற அறவுரைகள் மிகவும் தேவையான ஒன்று.