Thursday, November 24, 2016

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு 


வாழ்க்கை நிலையாமை கூட எல்லோருக்கும் புரிந்து இருக்கிறது. இன்றில்லா விட்டால் என்றாவது ஒரு நாள் மரணம் வரும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆனால், தெரியாத இரண்டு நிலையாமை இருக்கிறது.

ஒன்று, செல்வம்.

இன்னொன்று இளமை.

இளமை எப்போதும் இருக்கும் என்று மனிதன் நினைக்கிறான். முதுமை எட்டிப் பார்த்தால் கூட அதை மறுதலிக்கிறான். எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அதை மறுக்கப் பார்க்கிறான்.

முடி நரைக்கிறது  - சாயம் பூசி அதை மீண்டும் கறுப்பாக காட்டுகிறான்.

பல் ஆடுகிறது, விழுகிறது - ஏதேதோ சிகிச்சை செய்து முன்பு போல் செய்து கொள்கிறான்.

எத்தனை க்ரீம்கள், பவுடர்கள் , பூச்சுகள், என்று கல்லறைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அழகாக , இளமையாக தோன்ற வேண்டும் என்று நினைப்பது என்ன தவறா ?

தவறில்லைதான்...இருந்தாலும், அந்த இளமையை பற்றிக் கொண்டு இருப்பதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

பாடல்

மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!-
முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு!

பொருள்

மற்று = பின்னால்

அறிவாம் = அறிவோம், செய்வோம்

நல் வினை; = நல்ல வினைகளை

யாம் இளையம்' = நாம் இளமையானவர்கள் என்று

என்னாது = எண்னாமல்


கைத்து = கையில்

உண்டாம் = உள்ள

போழ்தே = போதே

கரவாது = மறைக்காமல்

அறம் செய்ம்மின்! = தான தர்மங்களை செய்யுங்கள்

முற்றி = முற்றி

இருந்த = இருக்கும்

கனி ஒழிய = கனியை விட்டுவிட்டு

தீ வளியால் = வெப்பக் காற்றில்

நல் காய் = நல்ல காய்

உதிர்தலும் உண்டு! = உதிர்ந்து விடுவதும் உண்டு

எப்போதும் இளமையாக இருக்க நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்படி இளமையாக இருப்பதாக  நினைத்துக் கொண்டு, நல்ல காரியங்களை பின்னால் பார்த்துக்  கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், சில சமயம் கனிந்த பழம் இருக்க காய் உதிர்வதும் உண்டு.

வயதான பின் தான் மரணம் வரும், நினைவு தவறும் என்று நினைக்கக் கூடாது.

வாழ்க்கை என்பது நீர் குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் .

எனவே, நல்ல காரியங்களை தள்ளிப் போடாமல் உடன் செய்வது நல்லது.



Wednesday, November 23, 2016

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை 


ஒரு பெண் திருமணம் ஆன பின் தன் பெற்றோர், உடன் பிறந்தோர், தோழிகள் என்று எல்லோரையும் விட்டு விட்டு கணவன் பின்னால் வந்து விடுகிறாள். இத்தனையும் விட்டு விட்டு வருவது எவ்வளவு பெரிய கடினமான செயல் என்று ஆண்களுக்கு புரிவது இல்லை, காரணம் அவர்கள் அப்படி எதையும் விட்டு விட்டு வருவது இல்லை.

சரி, அந்த வலி புரியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஒரு ஆறுதல் கூட சொல்லுவது கிடையாது. என்ன பெரிய தியாகம் என்று அதை ஒரு சாதாரண செயலாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

மனைவியின் அருமை எப்போது தெரிகிறது என்றால் ஒன்று வாழ்வில் அடிபடும் போது அல்லது வயதான காலத்தில் புரிகிறது.

கோவலன் ரொம்பத்தான் ஆட்டம் போட்டான். கையில் மிகுந்த செல்வம். இளமை. கண்ணகியின் அருமை புரியவில்லை.

நாளடைவில் எல்லா செல்வமும் கரைந்து, அடி பட்டு , கண்ணகியிடம் வந்து நிற்கிறான். கண்ணகியும் அவனை வெறுத்து ஒதுக்கவில்லை. கால் கொலுசு இருக்கிறது என்று தருகிறாள்.

இருவரும், மதுரைக்கு போகிறார்கள்.

கண்ணகியை வீட்டில் வைத்துவிட்டு, சிலம்பை விற்க கோவலன் கிளம்புகிறான்.

இந்த இடத்தில்  , கோவலன் , கண்ணகியை போற்றுகிறான். "நீ எல்லோரையும் விட்டு விட்டு என் பின்னால் வந்து விட்டாய். நான் செய்த தவறுகளை எல்லாம் பொறுத்து  எனக்கு துணையாக இருந்தாய். பொன்னே, மணியே, பூவே ...கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி ...நான் போய் இந்த சிலம்பை விற்று, கொஞ்சம் பொருள் கொண்டு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

பாடல்

குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்

பொருள்

குடிமுதற் = குடி முதல், உன் குடும்பம் முதல்

சுற்றமும் = உறவினர்கள்

குற்றிளை யோரும் = குற்று + இளையோரும்.  குற்றேவல் செய்யும் வேலை ஆட்களையும் 

அடியோர் பாங்கும் = வேலை ஆட்களையும்

ஆயமும் நீங்கி = தோழிகளையும் விட்டு வந்தாய் 

நாணமும் = நாணத்தையும்

மடனும் = மடனையும்

நல்லோ ரேத்தும் = நல்லவர்கள் போற்றும்

பேணிய கற்பும் = பெருமையக்குரிய கற்பையும்

பெருந்துணை யாக = பெரிய துணையாகக்

என்னொடு = என்னோடு

போந்து = என்னோடு வந்து

ஈங்கு  = இங்கு

என் = என்னுடைய

துயர் = துன்பத்தை

களைந்த = போக்கிய

பொன்னே = பொன் போன்றவளே

கொடியே = கொடி போன்றவளே

புனைபூங் கோதாய் = பூக்களை புனைந்தவளே )சூடிக் கொண்டவளே )

நாணின் பாவாய் = நாணமே உருவான பெண்ணே

நீணில விளக்கே = நீண்ட இந்த நில உலகிற்கு விளக்கு போன்றவளே

கற்பின் கொழுந்தே = கற்பின் கொழுந்தே

பொற்பின் செல்வி = செல்வம் நிறைந்தவளே

சீறடிச் = உன்னுடைய சிறந்த பாதங்களில் உள்ள

சிலம்பி னொன்று = சிலம்பில் ஒன்று

கொண் டியான்போய் = கொண்டு யான் போய்

மாறி  வருவன் = மாற்றி வருவேன்

மயங்கா தொழிகெனக் = கவலைப் படாதே

பாடலின் உள்ளோடும் சில விஷயங்களை பார்ப்போம்.

முதலாவது,  மனைவியின் தியாகம் என்பதை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு துன்பம் வரும் வரை அல்லது வயதான காலம் வரை காத்திருக்கக் கூடாது.

இரண்டாவது, பெண்ணின் இயல்புகளில் ஒன்று "மடமை" என்பது. மடமை என்றால்  ஏதோ முட்டாள் தனம் என்று கொள்ளக் கூடாது. "கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" என்பார்கள். அதாவது, சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது, தான் கொண்ட எண்ணத்தில் இருந்து மாறாமை. ஒரு பெண் மனதில் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்ற யாராலும் முடியாது. சரி, தவறு, போன்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் இடம் இல்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும்  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு , கடைசியில் தான்  முதலில் எங்கு ஆரம்பித்தாளோ அங்கேயே வந்து நிற்பாள். தான் கொண்டவற்றின்  விளைவுகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை.

உதாரணம் , கைகேயி. கணவனை இழந்தாள் , ஆசை ஆசையாக வளர்த்த இராமனை  இழந்தாள் , பரதனும் அவளை இகழ்ந்தான். அதெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. தான் வேண்டும் என்று கேட்டது வேண்டும்.

உதாரணம், சீதை. பொன் மான் வேண்டும் என்று அடம் . இராமானுக்குத் தெரிந்திருக்கிறது. அவளிடம் சொல்லி புண்ணியம் இல்லை. இராமனுக்குத் தெரியும் பொன் மான் என்று ஒன்று கிடையாது. இலக்குவன் சொல்கிறான். இலக்குவனுக்குத் தெரிந்தது  இராமானுக்குத் தெரியாது. தெரியும். இருந்தும், சீதையிடம் சொல்லி பயனில்லை. அது தான் பெண் மனம்.

இவன் தான் என் கணவன், இது என் குடும்பம் , இதை நான் போற்றி பாதுகாக்க வேண்டும்  என்று ஒரு பெண்ணின் மனதில் விழுந்து விட்டால், பின் அங்கே என்ன நிகழ்ந்தாலும் அவள் அதை விட மாட்டாள்.  கணவனோ, பிள்ளைகளோ, மாமனார் மாமியார் என்று புகுந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவள் அதை விட்டு கொடுக்க மாட்டாள்.

கோவலன் செய்தது அனைத்தும் தவறு தான். இருந்தாலும் , அவனுக்கு துணை செய்வது  என்று அவள் முடிவு செய்து விட்டாள் . கடைசியாக இருப்பது சிலம்பு ஒன்று தான். இந்தா, இதையும் பெற்றுக் கொள் என்று நின்றாள்.

அரிச்சந்திரனுக்காக தன்னையே விற்க முன் வந்தாள் சந்திரமதி.

பெண்ணை, என்ன என்று சொல்லுவது. !

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றான் பாரதி.


 மூன்றாவது, எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும். மறந்தும்  அமங்கல சொற்களை  சொல்லக் கூடாது. மொழியிலேயே, அதன் இலக்கணத்திலேயே  மங்கல வழக்கு என்று வைத்த மொழி தமிழ் மொழி. இறந்தார் என்று  சொல்லுவது இல்லை. அமரர் ஆனார், இறைவன் திருவடி அடைந்தார் என்று தான்   சொல்லுவது வழக்கம். 

இங்கே, கோவலன் சிலம்பை விற்று வருகிறேன் என்று சொல்ல வேண்டும்.  விதி,  அவன் வாயில் அவனை அறியாமலேயே அமங்கல சொல் வந்து விழுகிறது. 

 "மாறி வருவன் மயங்கா தொழிகெனக்"

போய் மாறி வருவேன், நீ மயங்காது ஒழிக  என்கிறான்.

அவனுக்குத் தெரியாது  நடக்கப் போவது. இருந்தும், அவன் வாயில் அமங்கலச் சொல்  வருகிறது. பாடலை எழுதிய இளங்கோவுக்குத் தெரியும். கோவலன் வாயில் இருந்து அப்படி ஒரு சொல்லை வரும்படி எழுதுகிறார்.

நமக்கு ஒரு பாடம் அது. 

கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது. 

திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில்  விழுந்து விடக் கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள். 

நல்ல சொற்களை பேச வேண்டும். கேட்க வேண்டும்.

இப்படி ஆயிரம் வாழ்க்கைக்கு வேண்டிய நல்லவற்றை சொல்லுவது நம் தமிழ் இலக்கியம். படியுங்கள். 

நல்லதே நடக்கட்டும். 

 


Tuesday, November 22, 2016

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?


பிள்ளைகள் எதற்கு என்று கேட்டால், "எனக்கு கொள்ளி போட ஒரு பிள்ளை வேண்டாமா ?" என்று சிலர் கூறுவார்கள்.

அவர்கள் விரும்பியபடியே பிள்ளை பிறக்கும்...கொள்ளி போட ...சில சமயம் உயிரோடு இருக்கும் போதே கூட.

சிலர் , "எனக்குப் பிறகு இந்த சொத்தை எல்லாம் ஆள ஒரு வாரிசு வேண்டாமா ?" என்று பிள்ளை பெறுவதற்கு காரணம் சொல்லுவார்கள். அவனுக்கு வரும் பிள்ளை, அவன் மேல் கோர்ட்டில் கேஸ் கொடுக்கும்...."சொத்தை பிரித்து தா"..என்று.

இன்னும் சிலரோ, "வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்ள ஒரு பிள்ளை வேண்டாமா " என்று கேட்பார்கள்.

இதெல்லாம் சுயநலத்தில் இருந்து எழும் ஆசைகள்.

திருஞான சம்பந்தரின் தந்தையார் , தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று தவம் இருந்தார். எதற்காக தெரியுமா ?

பாடல்

மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே யாடியசே வடிக்கமல
நினைவுறமுன் பரசமய நிராகரித்து, நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.


சீர் பிரித்த பின் 

மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடி கமல 
நினைவுற முன் பர சமய நிராகரித்து, நீறாக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெற ப் போற்றும் தவம் புரிந்தார்.


பொருள் 

மனை = வீடு

அறத்தில்= அறத்தில்

இன்பம் = இன்பம்

உறு = பெறும் , பெற

மகப் = பிள்ளைகளை

பெறுவான் = பெறுவதற்காக

விரும்புவார் = விரும்பி

அனைய = அந்த

நிலை = நிலையில்

தலை = சிறப்பாக

நின்றே = நின்றே

ஆடிய = ஆடிய

சேவடி = சிவந்த திருவடிகளை

கமல = தாமரை போன்ற

நினைவுற = மனதில் நினைத்து

முன் = முன்பு

பர = மற்ற

சமய = சமயங்களை

நிராகரித்து = நிராகரித்து

நீறாக்கும் = திருநீற்றின் பெருமையை விளங்கும்படி செய்து

புனை = அணியும் (புனைந்து கொள்ளுதல் )

மணிப்பூண் = மணிகள் கொண்ட பூணை

காதலனைப் = காதல் கொண்ட மகனை

பெறப் = பெறுவதற்காக

போற்றும் = போற்றுதலுக்கு உரிய

தவம் புரிந்தார் = தவத்தினை செய்தார்

பிள்ளைகளைப் பெறுவதைப் பற்றி பேச வந்த வள்ளுவர் கூறுவார்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

பெறக் கூடியவற்றில் அறிவான பிள்ளைகளை பெறுவதைத் தவிர சிறந்தது ஒன்றும் இல்லை என்றார். 

அழகான பிள்ளை, ஆரோக்கியமான பிள்ளை என்று சொல்லவில்லை ... அறிவான பிள்ளை என்றார். 

திருஞான சம்பந்தரின் தந்தையார் பிள்ளை வேண்டி தவம் இருந்தார்...

எதற்காக பிள்ளை வேண்டினார் ?

இல்லறத்தில் இருந்து பெறும் இன்பம் பிள்ளைகள் மூலம் வரும். 

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம், அவர் பேசுவதைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பார் வள்ளுவர். 

அந்த இன்பத்தை பெற தவம் செய்தார்.

அது மட்டும் அல்ல. 

"பர சமய நிராகரித்து, நீறாக்கும்"

மற்ற சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமையை விளங்கச் செய்ய பிள்ளை வேண்டும் என்று  தவம் செய்தார். 

பிள்ளைகளை பெறுவது , மற்ற உயிர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு. 

கொள்ளி வைப்பதற்கோ, சொத்தை அனுபவிப்பதற்கோ அல்ல.

பர சமயங்களை ஏன் நிராகரிக்க வேண்டும் ?

மக்கள் எது உண்மை, எது தவறு என்று அறியாமல் தடுமாறிய சமயம். 

எது அறம் , எது அறம் அல்லாதது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம். 

பலப் பல சமயங்கள். ஆளுக்கு ஒன்றை கூறுகிறார்கள். பாமர மக்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது.  

உண்மை புரியாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு சீரழிந்து கொண்டிருந்த நேரம். 

அந்த நேரத்தில், மற்ற பொய்யான சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமை விளங்க ஒரு புதல்வன் வேண்டும் என்று தவம் செய்தார். 

மக்கள் உய்யும் பொருட்டு பிள்ளை வேண்டினார்.

அது தான் கருத்து. 

நம் பிள்ளைகளும், வீட்டுக்கு மட்டும் இன்றி நாம் வாழும் சமுதாயத்துக்கும், இந்த  நாட்டுக்கும்,மற்றைய உயிர்களுக்கும்  பயன் படும்படி வாழ நாம் கற்றுத் தர வேண்டும். 

தேவர்கள் , சிவனை வேண்டி , தங்கள் துயர் தீர்க்க ஒரு பிள்ளையைத் தர வேண்டும் என்று வேண்டினர். முருகன் தோன்றினான். 

ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்.

என்பது கந்த புராணம். 

தயரதனுக்கு நீண்ட நாள் பிள்ளை இல்லை. அவனுடைய குல குருவான வசிட்டரிடம் சென்று தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று கூறினான். பிள்ளை எதற்கு தெரியுமா ? தனக்கு பின்னால் அரசை ஆள  அல்ல.

தனக்குப் பின்னால் , இந்த மக்களை யார் காப்பாற்றுவார்கள் ? அவரக்ளை காக்க வேண்டுமே என்ற கவலையில் பிள்ளை வேண்டினான். 

‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.

என்பது கம்ப இராமாயணம். 

அறுபதினாயிரம் ஆண்டுகள் , பகைவர்களை ஒடுக்கி, இந்த உலகை நான் காத்து வந்தேன். வேறு ஒரு குறையும் இல்லை. எனக்குப் பின் இந்த வையகம் துன்பப் படுமே என்று ஒரு வருத்தம் இருக்கிறது என்று கூறினான். 

இந்த உலகைக் காக்க ஒரு பிள்ளை வேண்டினான். அப்படியே பெற்றான்.  

பிள்ளைகளைப் பெறுவது, உலக நன்மைக்காக என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன. 

பெரிய புராணம் காட்டும் வழியும் அதுவே. 


 

Sunday, November 20, 2016

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.


வீடுகளில் , சாயந்தரம் விளக்கு ஏற்றுவார்கள். கார்த்திகை போன்ற மாதங்களில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.

எதற்கு விளக்கு ஏற்ற வேண்டும் ?

திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் பிறந்து, தடம் மாறி சமண சமயத்தில் சேர்ந்தார். அந்த சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்தார். பின் , மீண்டு சைவ சமயத்தில் வந்து சேர்ந்தார். அவர் அப்படி சமண சமயத்தை விட்டு விட்டு சைவ சமயத்தில் சேர்ந்ததில் சமணர்களுக்கு மிகுந்த கோபம். அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு நிறைய துன்பங்கள் செய்தார்கள்.

கல்லைக் கட்டி கடலில் போட்டார்கள், சுண்ணாம்பு உள்ள அறையில் அடைத்து வைத்தார்கள், அறையில் அடைத்து வைத்து விறகை போட்டு தீ மூட்டினார்கள், யானையை கொண்டு அவருடைய தலையை மிதிக்கச் சொன்னார்கள்....

அந்த சமயத்தில், நாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் என்ற பத்து பாடல்களை பாடினார்.

அதில் ஒன்று

பாடல்

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொருள்

இல்லக = இல்லத்தினுள்

விளக்கது = உள்ள விளக்கானது

விருள்கெ டுப்பது = இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது

சொல்லக = சொல்லினுள் உள்ள

விளக்கது = விளக்கானது

சோதி யுள்ளது = ஜோதி வடிவில் உள்ளது

பல்லக = பலருடைய மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

பலருங் காண்பது = எல்லோரும் காண்பது

நல்லக = நல்லவர்களின் மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

நமச்சி வாயவே = "நமச்சிவாய" என்ற மந்திரம்

என்ன இது வீட்டில் உள்ள உள்ள விளக்கு, சொல்லில் உள்ள விளக்கு, பலருடைய மற்றும்  நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு என்று ஒரே விளக்காக இருக்கிறதே...என்ன அர்த்தம் ?

விளக்கு என்பது இருளை போக்குவது. இருளை விலக்க வேண்டும் என்றால் , இருளை குறைக்க முடியாது. ஒரு விளக்கை ஏற்றினால் தானே இருள் விலகி விடும்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த இருளாக இருந்தாலும் ஒரே ஒரு விளக்கை கொண்டு வந்தால் அந்த இருள் அகன்று விடும்.

அஞ்ஞானம் என்ற இருள் நம்மிடம் மண்டிக் கிடக்கிறது. எத்தனையோ பிறவிகளில் சேர்த்த இருள்.  அந்த இருளை எப்படி போக்குவது ? நிறைய புத்தகங்களை கொண்டு வந்து வைத்தால் அது போகுமா ? நிறைய செல்வங்களை கொண்டு வந்து வைத்தால் போகுமா ? போகாது. ஒரே ஒரு விளக்கு போதும் அந்த இருளை விரட்ட.

அந்த விளக்கு "நமச்சிவாய" என்ற மந்திர விளக்கு. நமச்சிவாய என்று சொன்னால் அஞ்ஞான இருள் அகன்று விடும்.

இல்லத்தினுள் இருக்கும் இருளை எப்படி விளக்கின் ஒளி கெடுக்கிறதோ, அது போல் மனதில் உள்ள இருளை கெடுப்பது நமச்சிவாய என்ற மந்திரச் சொல்.

அது எப்படி, நமச்சிவாய என்று சொன்னால் இருள் போகுமா ? அந்த சொல்லில் அப்படி என்ன இருக்கிறது ?

அந்த சொல்லுக்குள் ஜோதி இருக்கிறது.

"சொல்லக விளக்கது ஜோதி உள்ளது"

அந்த சொல்லுக்குள் ஜோதி உள்ளது.

சரி, அது சைவ சமயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே பொருந்தும். நமச்சிவாய என்று மற்ற மதத்தில் , ஏன், இந்து சமயத்தில் உள்ள மற்ற பிரிவினர் கூட சொல்ல மாட்டார்களே..என்ன செய்வது ?

அது எல்லோருடைய மனதிலும் உள்ளது. சைவ சமயத்துக்கு மட்டும் சொந்தம் இல்லை.

"பல்லக விளக்கது பலரும் காண்பது"

பலருடைய மனதிலும் உள்ளது.  பலரும் காணும்படி உள்ளது.

அப்படியானால், எல்லோரும் காணமுடியுமா ? சிலர் இதெல்லாம் இல்லை , தவறு என்று சொல்கிறார்களே ?

நல்லவர்களின் மனதில் உள்ளது.

நல்லக விளக்கது நமச்சிவாயவே . நல்லவர்களின் மனதில் தோன்றி சுடர் விடும் விளக்கு அது.

கொஞ்சம் நம்பும்படி இல்லையே ... நமச்சிவாய என்று சொன்னால் அனைத்து பாவங்களும் அஞ்ஞானமும் போய் விடுமா ?

அதற்கு பாரதியார்  பதில் சொல்கிறார்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'

காடு பெரியது தான், அதற்காக பெரிய நெருப்பு வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். காடு வெந்து தணியும். அது போல சேர்த்து வைத்த பாவங்களும், அஞ்ஞானமும் எவ்வளவு இருந்தாலும் ஒரே வார்த்தையில் போகும்.

சரி, இப்படி விளக்கு ஏற்றியவர் அப்பர் மட்டும்தானா ?

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்

என்று ஞான விளக்கு ஏற்றினார் பூதத்தாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே

என்று கதிரோனையே விளக்காக ஏற்றினார் பொய்கை ஆழ்வார்.



விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்.





நான்மணிக் கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன

நான்மணிக்  கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன


எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. சிலவற்றை உடனடியாகச் செய்கிறோம். மற்றவற்றை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கிறோம்.

தள்ளி வைத்த காரியங்கள் குவிந்து கொண்டே போகின்றன. நமக்கு நிறைய காலம் இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

காலம் இருக்கத்தான் செய்கிறது. இல்லை என்று சொல்வதற்கில்லை. இருந்தும், அந்தக் காலங்கள் அனைத்தும் உருண்டோடி விடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் , கடைசியில் ஒன்றும் இருக்காது.  எனவே தள்ளிப் போடும் காரியங்கள் எவை எவை என்று பாருங்கள்.

முடிந்தவரை தள்ளிப் போடாமல் செய்யப் பாருங்கள்.


பாடல்

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

சீர் பிரித்த பின்


ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

பொருள்


ஊழியும் = ஊழிக் காலமும்

ஆண்டு = ஆண்டுகளால்

எண்ணி = எண்ணிக்கையில்

யாத்தன = செய்யப் பட்டன. யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள்.

யாமமும் = யாமமும்

நாழிகையானே = நாழிகையால்

நடந்தன = நடந்து முடியும்

தாழீயா = காலம் தாழ்த்தாமல்

தெற்றென்றார் கண்ணே  = தெளிந்தவரிடம் சென்று

தெளிந்தனர் = தெளிவு பெற்றனர்

வெட்கென்றார் = அறிவு இல்லாதவர்கள்

வெஞ் சொலால் = பயனில்லாத சொற்களால்

இன்புறுவார் = இன்பம் அடைவார்கள்

ஊழிக் காலம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமாய் தேய்ந்து, பின் அது கொஞ்சம்  யாமங்களாக மாறும். பின் அந்த யாமங்கள் குறைந்து குறைந்து நாழிகையாகி பின்  அதுவும் இல்லை என்று ஆகிவிடும்.

அறிவுள்ளவர்கள் , காலம் நிறைய இருக்கிறது, பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க மாட்டார்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பின்னால்  செய்ய வேண்டும் என்று மற்ற படித்து தெளிந்தவர்களிடம் சென்று  கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடப்பார்கள்.

அறிவில்லாதவர்கள், வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு அதில் இன்பம் காண்பார்கள்.

"தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்" . நாமே எல்லா புத்தகங்களையும் படித்து  தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்க  ஒரு ஆயுள் போதாது. அப்படியே படித்து விட்டாலும், தெளிவு பிறக்காது . படிக்க படிக்க குழப்பம் அதிகரிக்கும்.

பின் எப்படி தெளிவு பெறுவது ?

எதைப் படிப்பது, எப்படி படிப்பது, எப்போது படிப்பது , அவற்றின் சாரம் அல்லது அர்த்தம் என்ன என்று படித்து தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலம் இருக்கிறதே என்று நல்ல காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. காலம் கரைந்து விடும்.




Friday, November 18, 2016

திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை

திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை 


பொருள் தேட வேண்டும். பணம் இருந்தால் மற்ற எதைப் பற்றியும் கவலை இல்லை. வேண்டிய அளவு பணம் மட்டும் இருந்து விட்டால் உலகில் மிக சந்தோஷமாக வாழலாம். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம் என்றுதான் எல்லோரும் நம்பி , அந்த பணத்தை சேர்க்க வாழ்நாள் எல்லாம் முயற்சி செய்கிறார்கள்.


பணம் இல்லாவிட்டால் வாழ்வில் மற்றவை எது இருந்தும் பயனில்லை. பணம் ஒன்றுதான் குறி என்று உலகம் சென்று கொண்டிருக்கிறது.

நம்மிடம் பணம் இல்லை, செல்வம் இல்லை , எனவே அதை சேர்க்க முயற்சி செய்கிறோம். இதில் தவறென்ன.

பணம் மட்டும் அல்ல, நாம் வேறு சிலவற்றையும் சேர்க்க முயற்சி செய்கிறோம்.

நல்ல ஆரோக்கியம், உறவுகள், நட்பு, புகழ் , செல்வாக்கு, மதிப்பு, என்று இப்படி  பலவற்றை  சேர்க்க ஆசைப் படுகிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறோம்.

அது என்ன ?

அறிவு !

பாடல்

அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை 
இன்மையா வையா துலகு.

கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

அறிவு இன்மை , இன்மையுள் இன்மை பிறிது இன்மை 
இன்மையாக  வையாது உலகு 

பொருள் 

அறிவு இன்மை = அறிவு இல்லாமை 

இன்மையுள் = இல்லாதவற்றில் 

இன்மை  = பெரிய இல்லாதது 

பிறிது இன்மை = மற்றவை இல்லை என்றாலும் 
 
இன்மையாக  = இல்லாததாக 

வையாது = கொள்ளாது 

உலகு = உலகம் 

இல்லாதவற்றில் பெரிய இல்லாதது அறிவு இல்லாததே. மற்றயவை இல்லாவிட்டாலும் அதை பெரிதாக நினைக்காது உலகு. 


இது சரிதானா ? வள்ளுவர் சொல்லுவது நடை முறைக்கு சாத்தியமா ? அறிவு மட்டும் போதுமா ? மற்றவை வேண்டாமா ? பொருள் இல்லாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது, நல்ல உடை, இருக்க இடம், வாழ்க்கை வசதிகள், பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றிற்கு பொருள் வேண்டாமா ? அறிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

இது கேள்வி. 

சிந்திப்போம். 

முதலாவது, சரி, அறிவு வேண்டாம். பொருள் மட்டும் வேண்டும் என்று செல்வத்தின் பின்னால் சென்றால் என்ன ஆகும் ? எந்த வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று தெரியாது. எப்படியோ பொருள் சேர்த்தால் சரிதான் என்று நினைத்து , தவறான வழியில் பொருள் சேர்த்து பல சிக்கல்களில் மாட்டித் தவிப்பவர்கள் பலர்.  எனவே, பொருள் சேர்க்கவும் அறிவு வேண்டும். 

இரண்டாவது, சரி எப்படியோ நல்ல வழியில் பொருள் சேர்த்தாகி விட்டது. இனி என்ன  சிக்கல் என்றால் ? சேர்த்த பணத்தை என்ன செய்வது ? பல பேருக்கு பணம்  சேர்க்கத் தெரியும். அதை நல்ல வழியில் செல்வழிக்கத் தெரியாது. நல்ல துணிமணி, பெரிய வீடு, ஆரோக்கியமான சூழ்நிலை என்று வாழத் தெரியாமல் எல்லா பணத்தையும் வங்கிகளிலும், நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்து விட்டு , ஒரு சுகமும் அனுபவிக்காமல் இருப்பார்கள். செலவழிக்கவும் அறிவு வேண்டும்.  


மூன்றாவது,  சேர்த்த பணத்தை நல்ல வழியில் முதலீடு செய்து அதை பாதுகாத்து மேலும் அதை அதிகரிக்கத் தெரியாது.  தவறான இடங்களில் முதலீடு செய்து  கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை இழந்து முதுமையில் வறுமையால் வாடுவார்கள். எத்தனையோ நடிகர் நடிகைகளை பார்க்கிறோம். சரியான வழியில் முதலீடு செய்யாமல் கைப் பொருளை இழந்து பிச்சைக்காரர்களை விட  கேவலமாக வாழ்பவர்களை பார்க்கிறோம். முதலீடு செய்யவும் அறிவு வேண்டும். 

நான்காவது, சிலர் கையில் நாலு காசு சேர்ந்தவுடன் அதை கண்ணு மண்ணு தெரியாமல் செலவழிப்பார்கள். சூதாட்டம், கள் ,  கெட்ட சகவாசம் என்று செலவழித்து அதனால் பொருளையும் இழந்து, பெருமையையும் இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து துன்பப் படுவார்கள். 

ஐந்தாவது, சரி பணம் மட்டும் தானா, உறவு நட்பு இது எல்லாம் வேண்டாமா ? அறிவு இல்லை என்றால் சிறந்த நண்பர்களை தேர்ந்து எடுப்பது கடினம். கெட்ட நண்பர்கள் நம்மை துன்பத்தில் தள்ளி விடுவார்கள். உறவுகளில் ஆயிரம் சிக்கல் வரும். ஏன் கணவன் மனைவிக்கு நடுவில் கூட சிக்கல்கள் வரலாம். பணம் இல்லாத ஏழைகள் வீட்டில் கணவன் மனைவி அன்போடு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அன்பு செலுத்தி  இன்பமாக இருப்பதைக் காணலாம். பணம் படைத்த வீட்டில் , கணவனும் மனைவியும் அன்பில்லாமல், நாளும் சண்டையிட்டுக் கொண்டு வாழக்கை நரகமாக வாழ்வதையும் காணலாம். தேவை இல்லாத உறவுகளை கொண்டாடுவது, தேவையான உறவுகளை மதிக்காமல் இருப்பது போன்றவை அறிவின்மையால் நிகழும். 

சரி, இதெல்லாம் சரிதான். அதுக்காக எந்நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் போதுமா என்றால் , அறிவு வளர்ந்தால் பணம் சம்பாதிப்பது எப்படி, செலவழிப்பது எப்படி, இதில் முதலீடு செய்யலாம், எப்படி மகிழ்ச்சியாக வாழலாம், உறவுகளில் வரும் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்று தெரிந்து அதன் படி   செயல் பட முடியும். 

அறிவு இவை அனைத்தையும் கொண்டு வரும். 

எனவே அறிவைப் பெற்றால் அறிவும் கிடைக்கும் மற்றவையும் கிடைக்கும். 

அறிவில்லாத மற்றவற்றாரால் அவ்வளவாக சிறப்பு இல்லை. சில சமயம் அதனால் துன்பம் கூட வரும். 

அது மட்டும் அல்ல, அறிவினால் இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கும் வேண்டிய  நன்மைகளை தேடிக் கொள்ள முடியும். 

மற்றவை வேண்டாம் என்று சொல்லவில்லை வள்ளுவர். மற்றவை இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சொல்லவில்லை. தேவையான பொருள் இல்லாவிட்டாலும், நல்ல உறவும் நட்பும் இல்லாவிட்டாலும், ஆரோக்கியம் இல்லாவிட்டாலும்  குறை தான். ஆனால், அவற்றை ஒரு பெரிய குறையாக உலகம் கருதாது என்றார் வள்ளுவர். 

அறிவைத் தேடுங்கள். மற்றவை தானே வரும். 



 


Thursday, November 17, 2016

திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக

திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக 


வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் நிறைந்ததுதான். இன்பம் மட்டுமே வேண்டும். துன்பம் வேண்டவே வேண்டாம் என்று தான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன. ஆனாலும் , துன்பம் அழையா விருந்தாளியாக வந்து வந்து போகத்தான் செய்கிறது.

துன்பம் வந்தால் என்ன செய்வது ?  சிரித்து விடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்பது இல் 

பொருள்

இடுக்கண் = துன்பம்

வருங்கால் = வரும்போது

நகுக = சிரிக்க

அதனை = அந்த துன்பத்தை


அடுத்தூர்வது = சென்று போராடுவது

அஃதொப்பது = அதைப்போன்ற ஒன்று

இல் = இல்லை


வள்ளுவருக்கு என்ன சொல்லிவிட்டு போய் விடுவார். துன்பம் வரும் போது சிரியுங்கள் என்று.  அதெல்லாம் நடக்குமா ? நடைமுறைக்கு சாத்தியமா ? கேட்க வேண்டுமானால்  நல்லா இருக்கும் என்று நாம் எப்போதும் போல நினைப்போம்.

வள்ளுவர் சும்மா சொல்ல மாட்டார். அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்.

அது என்னவாக இருக்கும் என்று சிந்திப்போம்.


துன்பம் வேண்டாம் தான் நினைக்கிறோம். ஆனால் நம்மை யார் கேட்கிறார்கள். துன்பம் வந்து விட்டது.

உடல் நிலை குறைவு, பணத் தட்டுப்பாடு, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் திருமணம்,  தொழிலில் தொய்வு, அலுவலகத்தில் சிக்கல், உறவுகளில் குழப்பம், விரிசல், நெருங்கியவர்கள் புரிந்து கொள்ளாமை , நினைத்தது நடக்காமை, தேர்வில் குறைந்த மதிப்பெண், என்று ஏதோ ஒரு வகையில் துன்பம் வந்து விடுகிறது.

வந்தவுடன் என்ன செய்யலாம் ?

துவண்டு போய் விடலாம்.

வீட்டுக்குள் முடங்கி விடலாம்.

விதியை நோகலாம்.

நமக்கு உதவி செய்ய யாரும் இல்லையே என்று எல்லோரையும் நோகலாம்.

தெய்வத்தை பழிக்கலாம்.

விதியை நோகலாம்.

....

ஆனால் இப்படி எல்லாம் செய்வதனால் வந்த துன்பம் நீங்கி விடுமா ? வந்த துன்பத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதை எதிர்த்து போராட வேண்டும்.

என்னால் என்ன முடியும் என்று முடங்கிக் கிடந்தால் எப்படி போராடுவது ?

போராட வேண்டும் என்றால் அதற்கு ஒரு உற்சாகம் வேண்டும், உத்வேகம் வேண்டும், முயற்சி வேண்டும்.

அந்த முயற்சிக்கு ஒரே வழி , "இந்த துன்பத்தை நான் வெற்றிக்கு கொள்வேன் " என்ற  தன்னம்பிக்கை.

இரண்டாவது, துன்பம் வந்தால் யாரிடமாவது உதவி கேட்க வேண்டும். உதவி கேட்கப் போகும் போது முகத்தை வாட்டமாக, தொங்கப் போட்டுக் கொண்டு சென்றால்  உதவி செய்யலாம் என்று நினைப்பவர்கள் கூட செய்ய மாட்டார்கள். நினைத்துப் பாருங்கள், உங்களுக்கு கொஞ்சம் பணம் வேண்டும். சோகமான முகத்துடன், பயந்த விழிகளோடு , தயங்கி தயங்கி கேட்டால் பணம் கிடைக்குமா. தைரியமாக, தன்னம்பிக்கையோடு சிரித்த முகத்தோடு கேட்டால்  கிடைக்குமா ?

பணம் இல்லாதது துன்பம் தான். ஆனால் அதற்காக அழுது வடிந்து கொண்டு இருந்தால் , உதவி செய்ய நினைப்பவர்கள் கூட உதவி செய்ய மாட்டார்கள். மலர்ந்த  முகத்தோடு இருங்கள்.

மூன்றாவது, "அடுத்தூர்வது" என்றார். அது என்ன அடுத்தூர்வது ? அடுத்து + ஊர்வது.

அடுத்தல் என்றால் போராடுதல். அடுகளம் என்றால் போர் களம்.  துன்பத்தை எதிர்த்து போராடுவது என்று அர்த்தம். போராடும் போது ஒரு வலிமை, ஒரு உத்வேகம். இல்லை என்றால் தோல்வி நிச்சயம். பணம் வேண்டுமா, ஒன்றுக்கு பத்து பேரிடம்  கேட்போம் என்று கிளம்ப வேண்டும்.  கட்டாயம் கிடைக்கும் என்று  ஒரு புன்னகையோடு கிளம்ப வேண்டும். "எங்க கிடைக்க போகுது, எவன் தருவான் " என்று சோர்வோடு கிளம்பினால் கட்டாயம் கிடைக்காது.

நோய் வந்து விட்டதா ? அவ்வளவுதான், இனிமேல் பிழைக்க மாட்டேன் என்று துவண்டு விடக் கூடாது. மருந்து வேலை செய்யும். மருத்துவர்கள் உதவி செய்வார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் எனக்கு உதவி செய்வார்கள். இந்த நொடியில் இருந்து விடுபடுவேன் என்று தன்னம்பிக்கையோடு இருந்தால்  நோயிலிருந்து விடுபடலாம். மாறாக, என்ன மருந்து சாப்பிட்டு என்ன பயன் என்று துவண்டு விட்டால் , நோய் குணமாகாது.

நான்காவது, "அஃதொப்பது இல்" என்றார். அப்படி என்றால் என்ன ? துன்பத்தை வெல்ல பல வழிகள் இருக்கலாம். இறைவனை நம்பலாம். கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளலாம். வள்ளுவர் அதை எல்லாம் தவிர்க்கச்  சொல்லவில்லை. துன்பத்தை கண்டு சிரிப்பது உள்ளதிற்குள் சிறந்தது. அதற்கு இணையான ஒன்று இல்லை என்கிறார். அதை விட சிறப்பு குறைந்தவை இருக்கலாம். ஆனால் அதற்கு இணையான ஒன்று இல்லை. சிறந்தது இருக்கும் போது மற்றவற்றை ஏன் நாட வேண்டும் ?

துன்பம் வந்தால், எதிர்த்துப் போராடுங்கள். போராட ஒரு முயற்சி, உற்சாகம், உத்வேகம் வேண்டும்.

அதற்கு ஒரு தன்னம்பிக்கை, ஒரு மலர்ந்த முகம் வேண்டும்.

எனவே, துன்பம் வந்தால் துவண்டு விடாமல், சிரித்த முகத்தோடு போராடுங்கள். அதை விட சிறந்த வழி இல்லை.