Sunday, July 14, 2024

கந்தர் அநுபூதி - எப்படிச் சொல்வது

கந்தர் அநுபூதி - எப்படிச் சொல்வது 


அனுபவங்களை வார்த்தைகளில் கொண்டுவருவது கடினம். 


தீ சுட்டுவிட்டது. வலி உயிர் போகிறது. அந்த வலியை கொஞ்சம் விளக்கமாகச் சொல் என்றால் எப்படிச் சொல்வது. 


காதலிக்காக காத்து இருக்கிறான் காதலன். சற்று நேரம் கழித்து வருகிறாள். அவள் மேல் கோபிக்கிறான். பின் இருவரும் அன்யோன்யமாக பேசி சிரித்து மகிழ்கிறார்கள். எங்கே அந்த சந்தோஷத்தை விளக்கிச் சொல் என்றால் எப்படிச் சொல்வது?


அனுபவங்களை, அனுபவித்துதான் அறிய முடியும். சொல்லிப் புரியாது. 


சாதாரண உலக அனுபவங்களே இப்படி என்றால், இறை அனுபவம் எப்படி இருக்கும்?  


அருணகிரிநாதர் இறை அனுபவம் பெற்ற பின் திகைக்கிறார். 


எப்படிச் சொல்வது?  யாரிடமும் சொல்ல முடியவில்லை. தன்னந்தனியே இருப்பது போல் இருக்கிறது.  அனுபவம் புரிகிறது. சொல்ல வார்த்தை இல்லை. தவித்துப் போகிறார். 


 

பாடல் 


தன்னந்தனி நின்றது தானறிய 

இன்னம் மொருவர்க்கிசை விப்பதுவோ 

மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார் 

இன்னங்களையும் கருபை சூழ் சுடரே . 


பொருள் 



தன்னந்தனி நின்றது = தனந்தனியனாய் நின்றதை 


தானறிய = தான் மட்டும் அறிய 

 

இன்னம் = மேலும் 


 மொருவர்க்கிசை விப்பதுவோ = ஒருவற்கு + இசைவிப்பதுவோ ? வேறு ஒருவருக்கு சொல்ல முடியுமா? 

 

மின்னும் = மின்னல் போல்  


 கதிர்வேல் =  ஒளிக் கதிர்களை வீசும் வேலாயுதத்தை உடைய முருகா 

 


விகிர்தா =பல்வேறு வடிவங்களை உடையவனே 


நினைவார் = உன்னை தங்கள் மனத்தில் நினைப்பவர் 

 

இன்னங்களையும் = இன்னல்களை களையும், துன்பங்களைத் துடைக்கும் 


கருபை சூழ் சுடரே = கருணை நிறைத்த சுடரே 


நமக்கெல்லாம் ஒரு அனுபவம் நிகழ்ந்தால், அதை மற்றவர்களுக்குச் சொன்னால்தான் ஒரு திருப்தி வரும். 


சினிமா பார்த்தாலும் சரி, நாலு இடத்துக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் சரி, கல்யாணம் போன்ற சடங்குகளை நேரில் சென்று பார்த்து வந்தாலும் சரி, உடனேயே நாலு பேருக்குச் சொல்ல வேண்டும். படம் எடுத்து whatsapp போன்றவற்றில் பகிர வேண்டும். comments, like  ம் அள்ள வேண்டும். 


பகிர முடியாத அனுபவங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது ?


 


Thursday, July 11, 2024

திருக்குறள் - சிலர் பலர்

 திருக்குறள் - சிலர் பலர் 


இன்றைய குறளுக்கு முதலில் மேலோட்டமான உரை என்ன என்று பார்ப்போம். பின், பரிமேலழகர் தரும் நுணுக்கமான உரையை பற்றிச் சிந்திப்போம். 


இந்த உலகில் பணக்கார்கள் சில பேர் தான் இருக்கிறார்கள். ஏழைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். 


ஏன்?


ஏன் மாறி இருக்கக் கூடாது? நிறைய பணக்கார்கள், கொஞ்சம் போல ஏழைகள் என்று ஏன் இருக்கக் கூடாது?


இதை பணம் மட்டும் அல்ல, அறிவாளிகள், ஞானிகள் சிலர், கல்லாத மூடர்கள் பலர். 


இது ஏன் இப்படி இருக்கிறது?


வள்ளுவர் சொல்கிறார் 


"இல்லாதவர்கள் பலராகவும், இருப்பவர்கள் சிலராகவும் இருக்கக் காரணம் தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதால்"


என்று. 


பாடல் 


இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.


பொருள் 


இலர் = இல்லாதவர்கள் 


பலர் = அதிக எண்ணிகையில் 


ஆகிய = ஆனதற்கு 


காரணம் = காரணம் 


நோற்பார் = நோன்பு நோற்பார், தவம் மேற்கொள்வார் 


சிலர் = சிலராகவும் 


பலர் = அதிக எண்ணிகையில் உள்ளவர்கள் 


நோலா தவர் = தவத்தை செய்யாதவர்கள்.


இந்த உரை ஒரு மேலோட்டமான ஒரு உரை. 


இதில் உள்சென்று பரிமேலழகர் ஒரு உரை செய்கிறார். 


"செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன"


இருப்பதும், இல்லாததும் என்பது பொருள் செல்வத்தைப் பற்றியது அல்ல, அது அறிவு இருப்பதும், இல்லாததும் பற்றி என்கிறார். 


அது எப்படி இலர்பலர் என்று தானே இருக்கிறது. அதை எப்படி குறிப்பாக அறிவு இல்லாதவர் பலர் என்று கூற முடியும் என்ற கேள்விக்கு பரிமேலழகர் நாலடியாரில் இருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார். 


நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,

பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,

கண் அவாத் தக்க கலம்?


கொஞ்சம் நாலடியாருக்குள் செல்வோம். 


இந்த உலகில் அறிவில்லாத மடையர்களிடம் நிறைய செல்வம் குவிந்து கிடக்கிறதே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்?  யாருக்கு வேண்டும் அறிவு? நிறைய செல்வம் இருந்தால் போதாதா?  அறிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?


நாலடியார் சொல்கிறது, 


"ஆண்மை இல்லாமல், பெண் குணம் நிறைந்த ஒரு பேடி நிறைய அணிகலன்களை அணிந்து கொள்ளலாம். அது அவனுக்கு அழகு செய்யுமா?  அசிங்கமாக அல்லவா இருக்கும்? அருவெறுக்கும் படி அல்லவா இருக்கும். அது போல, அறிவில்லாதவன் கையில் உள்ள செல்வமும் என்கிறது நாலடியார். 


மீண்டும் குறளுக்கு வருவோம். 


இல்லாமை என்பது இங்கே அறிவின்மையை குறிக்கிறது என்கிறார். 


அறிவில்லாவிட்டா இந்தப் பிறவியிலும் பலன் இல்லை. மறு பிறவியிலும் பலன் இல்லை.


இந்தக் குறளோடு தவம் என்ற அதிகாரம் முடிவடைகிறது. 


மீண்டும் ஒரு முறை அந்தப் பத்து குறளையும் வாசித்துப் பாருங்கள். 


ஏதேனும் புதிய பொருள் தோன்றலாம்.




Wednesday, July 10, 2024

கந்தர் அநுபூதி - அறிவு

கந்தர் அநுபூதி - அறிவு 


நாம் அறிவு என்று எதைச் சொல்கிறோம்? எதையாவது ஒன்றிற்கு பேர் வைத்து விட்டால் அது அறிவு என்கிறோம். 


உதாரணமாக, நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்கிறோம். பெரிய அறிவாளி, அதைக் கண்டு பிடித்தவர் என்கிறோம். 


மரத்தில் இருந்து ஆப்பிள் விழுகிறது.  ஏன் விழுகிறது என்று தெரியவில்லை. ஆனால், அப்படி விழுவதற்கு பெயர் புவி ஈர்ப்பு விசை என்று பெயர் வைத்தார். 


தாவரங்கள் ஏன் பச்சையாக இருக்கிறது? அதில் குளோரோபில் என்ற ஒரு பொருள் இருக்கிறது. எனவே பச்சையாக இருக்கிறது. ஏன் குளோரோபில் பச்சையாக இருக்கிறது என்று கேட்டால் பதில் இல்லை. 


ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஒரு பொருளுக்கும் பெயர் இல்லை என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு இந்த உலகம் பற்றி என்ன தெரியும்?  


அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். 


உங்கள் பெயர், உங்கள் படிப்பு, நீங்கள் செய்யும் வேலை இந்த மூன்றும் இல்லாமல் உங்களை மற்றவர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்?  


அது இது என்ற பெயர்களைத் தாண்டி பொருளில் என்ன இருக்கிறது?  உலகில் என்ன இருக்கிறது?  அது உண்மையான அறிவு. 


அந்த அறிவு யாருக்கு வரும்? 


அப்படிப்பட்ட அறிவாளிகள், ஞானிகள் எப்படி இருப்பார்கள்?  அந்த ஞானத்தை அடைந்தால் நாம் எப்படி இருப்போம்?


இவற்றை விளக்குகிறார் அருணகிரியார்.


பாடல் 


அறிவொன்றற நின்றறிவா ரறிவிற் 

பிறிவொன்றற நின்ற பிரானலையோ 

செறிவொன்றற வந்திருளே சிதைய 

வெறிவென்ற வரோறுேம் வேலவனே . 


சீர் பிரிக்காவிட்டால் படிப்பதே சிரமம் 

 

அறிவு ஒன்று அற  நின்ற அறிவார் அறிவில்  

பிறிது ஒன்று அற  நின்ற பிரான் நீ அலையோ

செறிவொன்று அற வந்த இருளே சிதைய 

வெறி வென்றவர் உறும்  வேலவனே .


பொருள் 


அறிவு ஒன்று  = புற அறிவுகள், உலகப் பொருள்களைப் பற்றிய அறிவுகள்


அற = நீங்க 


நின்ற அறிவார் அறிவில் = நிலைத்து நிற்கும் அறிவால் அறிவார் 

  

பிறிது ஒன்று அற = உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லாத 


நின்ற பிரான் = நிலைத்து நிற்கும் பிரான் 


நீ அலையோ = நீ அல்லவா 


செறிவொன்று அற = செறி என்றால் அடர்ந்த. ஞானத்தை மூடி மறைக்க. 


 வந்த இருளே சிதைய =  வந்த அஞ்ஞானம் என்ற இருள் விலக 


வெறி = காமம், கோபம் போன்ற வெறித்தனமான உணர்வுகளை 


வென்றவர் = வென்ற ஞானிகள் 


 உறும்  வேலவனே  = அடையும் வேலவனே 


என்ன சொல்ல வருகிறார்?


உலக அறிவு மாறிக் கொண்டே இருக்கும். இன்று இருப்பது நாளை இருக்காது. புதிதாக வேறு ஒன்று வந்து விடும். இவற்றின் பின்னால் போனால், அதற்கு ஒரு முடிவே இல்லை. 


மாறாத, நிலைத்த ஞானம் ஒன்று இருக்கிறது. அதை அடைய வேண்டும். அது எப்போது வரும் என்றால், காமம், குரோதம், போன்ற உணர்வுகள் விலகி மனம் அமைதி அடைந்தால் வரும். அப்படி, அந்த நிலையை அடைந்தவர்கள் வணங்கும் வேலவனே என்று அவனைத் துதிக்கிறார். 


எது உண்மையான அறிவு என்று சிந்திக்க வைக்கிறார்.  


 



Tuesday, July 9, 2024

திருக்குறள் - கூற்றம் குதித்தலும் கை கூடும்

 திருக்குறள் - கூற்றம் குதித்தலும் கை கூடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post_9.html


நமது பெரும்பாலான  துன்பங்களுக்கு  அடிநாதமாக இருப்பது மரண பயம்.  


எந்த துன்பத்தை எடுத்துக் கொண்டாலும், ஆழ்ந்து சிந்தித்தால் அதன் அடியில் இருப்பது மரணம் பற்றிய பயம் என்று தெரிய வரும். 


இப்படி யோசித்துப் பார்ப்போம், மரணமே கிடையாது என்று ஒரு வரம் நமக்கு கிடைத்து விட்டால் எப்படி இருக்கும். பசி, பிணி, ஏழ்மை, எதினாலும் நமக்கு மரணம் வராது என்று இருந்தால் எப்படி இருக்கும்?  


மரண பயம் பெரும் பயம்.


பெரிய பெரிய தவம் செய்தவர்கள் இறைவனிடம் கேட்பது "மரணத்தை வெல்ல வேண்டும்" என்ற வரம் தான். எந்த வரத்தையும் தரவல்ல இறைவன் கூட, "மரணத்தை வெல்லும் வரத்தை மட்டும் இது வரை யாருக்கும் தரவில்லை.". 


பெரிய பெரிய ஞானிகளைக் கூட இந்த மரண பயம் விட்டுவைக்கவில்லை. 


 காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்


என்பார் பாரதியார். 


"மரணப் பிரமாதம் நமக்கு இல்லை" என்பார் அருணகிரி. 


மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை

கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள

சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா

பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.


"காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் "

என்பார் அபிராமி பட்டர். 


இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க

அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.

உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே


மரண பயம் எல்லோருக்கும் இருக்கிறது. 


மரணத்தை வெல்ல முடியாது. தோன்றியது இறந்தே தீரும். பின் என்ன செய்வது. 


இந்த பயத்தைத் தாண்டி போய் விட முடியும் என்கிறார்.


தவம் செய்தால் மரணத்தை தாண்டிச் செல்ல முடியும் என்கிறார். 


பாடல் 



கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு


பொருள் 



கூற்றம் = கூற்றுவன், எமன், காலன். உடலையும், உயிரையும் கூறு படுத்துவதால் அவன் கூற்றுவன் 


குதித்தலும் = தாண்டிச் செல்லுதலும் 


கைகூடும் = கை கூடும். முடியும். 


நோற்றலின் = தவம் நோர்பவற்கு 


ஆற்றல் = அந்த ஆற்றலினால் 


தலைப்பட் டவர்க்கு = முனைந்து அடைந்தவர்களுக்கு 


தவம் நோற்று, அதில் வெற்றி கண்டவர்களுக்கு, எமனையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிறார். 


இங்கே குதித்தலும் என்ற சொல்லை கையாண்டிருக்கிறார். பலர் பல அர்த்தம் சொல்கிறார்கள். பரிமேலழகர் எமனை கடந்து செல்ல முடியும் என்று பொருள் சொல்கிறார். 


சிந்திக்க வேண்டிய சொல். 


Sunday, July 7, 2024

பெரிய புராணம் - விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே

 பெரிய புராணம் - விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே 


இறைவனை எப்படி அடைவது?


இறைவனை அடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறதா? அல்லது பல வழிகள் இருக்கின்றனவா?


பூஜை என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும், ஆசாரம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...குளித்து, முடித்து, ஈரத் துணி உடுத்து, இறைவன் மேல் பாடல்களைப் பாடி, கற்பூர தீபம் காட்டி...என்று ஒரு வழி முறை இருக்கிறதா அல்லது எப்படி வேண்டுமானாலும் வழிபடலாமா? 


எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம்...அன்பும், பக்தியும் தான் முக்கியம். என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்பதல்ல முக்கியம் என்பதை விளக்க வந்த நூல் பெரிய புராணம். 


ஒவ்வோரு நாயன்மாரும் வேறு வேறு வழியில் சென்று இறைவனை அடைந்தார்கள். எல்லோரும் ஒரே வழியில் செல்லவில்லை. 


அடிப்படை ஒன்றுதான். இறைவன் மேல் அன்பு, காதல், பற்று, பக்தி. அவன் அடியார்கள் மேல் அன்பு, மரியாதை, மதிப்பு. மத்தபடி அவர்கள் செய்தவை ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவை. 


கண்ணப்பர் வாயில் நீரை கொண்டுவந்து, இறைவன் மேல் கொப்பள்ளித்து அபிஷேகம் பண்ணினார், மாமிசத்தை கடித்துப் பார்த்து சரியாக உள்ளதை இறைவைனுக்கு படையல் செய்தார், தலையில் சூடிய மலரை இறைவனுக்கு படைத்தார்...அவர் தொடங்கிய ஆறே நாளில் இறைவனை அடைந்தார். 


"நாளாறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லேன்" என்பார் பட்டினத்தார். 


வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன் 

மாதுசொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன் 

தொண்டு செய்து நாளாறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன் 

நான் இனிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே


அதே கோவிலில் ஆசார அனுஷ்டாங்களை கடைப்பிடித்து வாழ் நாள் எல்லாம் பூஜை செய்த சிவ கோச்சாரியாருக்கு இறைவன் காட்சி தரவில்லை. 


பெரிய புராணம் சொல்லும் செய்தி,  பக்தி முக்கியம். ஆராதனை, அபிஷேகம், தோத்திரம், ஆசாரம் முக்கியம் அல்ல என்பதுதான். 



"நிலவை தலையில் சூடி, மன்றத்தில் நடனமாடும் சிவனை துதி செய்யும் நாயன்மார்களும் அவர்களது அடியார்களும் சேர்ந்த பெரிய குழு கடைபிடித்த விதிகள் உலகில் என்றும் சிறந்து விளங்கட்டும்"


என்று ஆரம்பிக்கிறார் சேக்கிழார். 


பாடல் 


மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்

துதிசெயு நாயன்மார் தூய சொன்மலர்ப்

பொதிநல னுகர்தரு புனிதர் பேரவை

விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.


பொருள் 


மதி = நிலவு 


வளர் = வளரும். தேய் பிறை வளரும் 


சடைமுடி = சடை முடியைக் கொண்ட 


மன்று ளாரை = மன்றத்தில் உள்ளவரை  


முன் = முன்பு 


துதி = தோத்திரம் 


செயு = செய்யும் 


நாயன்மார் = நாயன்மார்களது  


தூய = தூய்மையான 


சொன் மலர்ப் = சொல்லிய ம் மலர். அதாவது தேவாரம், திருவாசகம் போன்ற பாமாலைகள் 


பொதிநல னுகர் = பொதி + நலன் + நுகர் = பொதிந்த நல்லனவற்றை அறிந்து அனுபவிக்கும் 

 


தரு = தரக் கூடிய 


புனிதர் பேரவை = புனிதர்கள் நிறைந்த பெரிய அவை (குழு) 


விதிமுறை  = அவர்கள் செய்த விதியினை 


உலகினில் = இந்த உலகில் 


விளங்கி = விளங்கச் செய்து 


வெல்கவே = அவை வென்று நிலைக்க வேண்டும்.


பேரவை - பெரிய அவை. இறைவனை வழிபடும் கூட்டம் நேற்று இருந்தது, இன்று இருக்கிறது, நாளையும் இருக்கும். அவர்கள் எல்லோரையும் சேர்த்தால் அது பெரிய கூட்டமாக இருக்கும் என்பதால் பேரவை என்றார். 


விளங்கி வெல்கவே - அவர்கள் செய்த நூல்கள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை இவற்றை உலகுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும். விளங்கினால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த விதி வென்றுவிடும். புரியாமலேயே, கண்மூடித்தனமாக நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றைப் பின் பற்றினால் அது நீண்டு நிலைக்காது. புரிந்து செய்வது நிலைத்து நிற்கும். "விளங்கி, வெல்கவே". 


பொதி நலன் நுகர் = உண்மை அந்த நூல்களில் பொதித்து வைக்கப் பட்டு இருக்கிறது. அந்த நூல்களில் உள்ள நன்மையை ஆராய்ந்து எடுத்து அவற்றை அனுபவிக்க வேண்டும். 


முன் துதி செய்யும் நாயன்மார் = முன் என்றால் முன்பு. முன்பு நடந்ததை நினைத்து. துதி, மனதால் நினைத்து. செய்யும் என்றால் கையால் தொழுது. மனம், வாக்கு, செயல் என்ற மூன்றாலும் வழிபட்டு என்று பொருள். 



Friday, July 5, 2024

திருக்குறள் - உயிர்கள் எல்லாம் தொழும்

 திருக்குறள் - உயிர்கள் எல்லாம் தொழும் 


தவம் எப்போது செய்ய முடியும்?  நினைத்தவுடன் தவம் செய்து விட முடியுமா?


இன்று திருக்குறளில் தவம் என்ற அதிகிஆரத்தைப் படித்தேன்..என்னமா எழுதி இருக்கிறார்...நானும் இன்றே தவம் செய்யப் போகிறேன் என்று நினைத்தால் முடியுமா?


இரண்டாவது, தவம் செய்ய இடம் வேண்டாமா?  புராண கதைகளில் எல்லாம் தவம் செய்ய வேண்டும் என்றால் காட்டுக்குப் போக வேண்டும், குகையில் அமர்ந்து தவம் செய்ய வேண்டும் என்றெல்லாம் வருகிறது. காட்டுக்குப் போனால், பசி, தாகம், காட்டு மிருகங்களால் வரும் அபாயம் எல்லாம் இருக்குமே. அதை பார்பதா, தவம் செய்வதா?  


வள்ளுவர் சொல்கிறார், 


நான், எனது என்ற அக புற பற்றுகளை விடுத்து எவன் வேலை செய்கிறானோ, அவனே தவம் செய்பவன் ஆகிறான். அவனை நோக்கி அனைத்து உயிர்களும் தொழும் என்கிறார். 


சற்று சிக்கலான குறள். 


பாடல் 



தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்


பொருள் 


தன்னுயிர் = தன்னுடைய உயிர் 


தான் = தான் என்ற எண்ணம் 


அறப்  =  அறவே நீங்கப் 


பெற்றானை = பெற்றவனை 


ஏனைய = மற்றைய 


மன்னுயிர் = நிலைத்து வாழும் உயிர்கள் 


எல்லாம் தொழும் = எல்லாம் கை கூப்பி வணங்கும் 


அது என்ன, தன்னுயிர், தான் அறப்பெற்றானை ?


தனது உயிரைப் பற்றியும் கவலைப் படாமல், தனது உடமைகளைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு பொது நோக்குக்காக வாழ்பவனை எல்லா உயிர்களும் தொழும். 


இல்லையே. சரியா புரியலியே....


ஒரு விஞ்ஞானி இருக்கிறார். மக்களை வாட்டி வதைக்கும் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடு பட்டிருக்கிறார். சோறு, தண்ணி, தூக்கம் இல்லை. இராவா, பகலா பாடுபட்டு இறுதியில் அந்த மருந்தைக் கண்டு பிடித்து விடுகிறார். 


அந்த மருந்தினால் எத்தனையோ தலைமுறைகள் பயன் பெறப் போகின்றன. 


"இந்த மருந்தை கண்டுபிடித்த அந்த மகராசன் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்துவோம் அல்லவா?


கான்சருக்கு மருந்து கண்டு பிடித்தவர்கள், ஆபரேஷன் க்கு மயக்க மருந்து கண்டு பிடித்தவர்கள் என்று பட்டியல் நீளும். 


தன் சுகம், தன் குடும்பம் என்று இருக்காமல், பொது நலம் கருதி, உழைப்பவர்களை (தவம் செய்பவர்களை), எல்லா உயிரும் தொழும். 


பெனிசிலின் மருந்தை என்றோ கண்டு பிடித்தார், இன்றும் உயிர் காத்து நிற்கிறது அல்லவா. 


தவம் செய்பவர்களை உலகில் உள்ள உயிர்கள், இன்று மட்டும் அல்ல, வரும் நாட்களிலும் கை கூப்பித் தொழும் என்றவாறு. 






Monday, July 1, 2024

பெரிய புராணம் - மனிதப் பிறவியின் நோக்கம்

 பெரிய புராணம் - மனிதப் பிறவியின் நோக்கம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post.html

மனிதர்களுக்கு விலங்குகளுக்கும் உள்ள பெரிய வேற்றுமை என்று சொன்னால், மனிதன் சிரிக்கத் தெரிந்தவன், விலங்குகளுக்கு சிரிக்கத் தெரியாது என்று பலர் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


அது மட்டும்தான் வேறுபாடா?


மனிதர்களால் சிந்திக்க முடியும். விலங்குகளும் சிந்திக்கும். மனிதன் அளவுக்கு இல்லை என்றாலும் அடிப்படை சிந்தனை இருக்கிறது. எதிர்காலத்துக்கு வேண்டும் என்று சேர்த்து வைக்கின்றன, கூடு கட்டுகின்றன, குஞ்சுகளை பாதுகாக்கின்றன, குட்டிகளுக்கு இரை தேடித் தருகின்றன. 


இருந்தும், 


அவற்றின் சிந்தனை ஒரு எல்லையில் நின்று விடுகிறது. மனிதனின் சிந்தனை விரிந்து கொண்டே போகிறது. அதற்கு ஒரு எல்லை இல்லை. 


எதை அடைய இந்த பிறவி நமக்கு கிடைத்து இருக்கிறது என்று மனிதன் சிந்திக்கிறான். பொருள் சேர்க்கவா?  இன்பங்களை அனுபவிக்கவா?  அதிகாரம் செய்யவா?  இன விருத்தி செய்யவா? என்று கேட்டுக் கொண்டே போன மனிதனுக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்தது. 


இவை எல்லாம் அழியக் கூடியன. செல்வம், இளமை, அதிகாரம், செல்வாக்கு, உறவுகள் எல்லாம் நிரந்தரம் இல்லாதவை. இன்று இருக்கும், நாளை போகும். அவற்றை அடைவதால் என்ன பயன். நாளை நம்மை விட்டுப் போய் விடும். அதற்காக நேரத்தை செலவழிப்பானேன் என்று நினைத்த மனிதன், இறுதியாக ஒன்றை கண்டு கொண்டான். 


என்ன ஆனாலும் சரி, அழியாத, மாறாத, நிரந்தரமான ஒரு உறுதியான பொருளை அடைவதுதான் பிறவியின் நோக்கம். அது என்ன என்று சிந்திக்கத் தலைப்பட்டான். 


அதை எப்படி அடைவது என்று சிந்தித்து, சிந்தித்து அவன் ஒரு முடிவுக்கு வந்தான். இறைவனின் திருவடிகளே உறுதியான பொருள். அதை அடைவதான் பிறவியின் நோக்கம் என்று உணர்ந்தான். 


பாடல் 

ஊன டைந்த உடம்பின் பிறவியே

தான டைந்த உறுதியைச் சாருமால்

தேன டைந்த மலர்ப்பொழிற் றில்லையுள்

மாந டஞ்செய் வரதர்பொற் றாடொழ.


பொருள் 


ஊன டைந்த = ஊனை அடைந்த, பெற்ற 


உடம்பின் = இந்த உடம்பின் 


பிறவியே = பிறவியின் நோக்கம் என்பது 


தான டைந்த = தான் இந்தப் பிறவியை அடைந்ததின் 


உறுதியைச் = நோக்கம் என்பது உறுதிப் பொருளை 


சாருமால் = சார்ந்து இருப்பதே. அதை எப்படி அடைவது என்றால்  


தேன டைந்த = தேன் நிறைந்த 


மலர்ப் = மலர்கள் உள்ள 


பொழிற் றில்லையுள் = சோலைகள் உள்ள தில்லையில் 


மாந டஞ்செய் = பெரிய நடனம் செய்யும் 


வரதர் = வரம் தருபவர் (சிவன்) 


பொற் றாடொழ = பொன் போன்ற பாதங்களைத் தொழுவதே 


அதை விட்டு விட்டு மற்றதெல்லாம் தேவை இல்லாத ஒன்று என்கிறார் சேக்கிழார் பெருமான். 


கற்றதனால் ஆய பயன் என்கொல்  வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 


என்பார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். 


படி. நிறைய படி. படிக்க படிக்க, வரும் ஞானம் உன்னை இறைவனிடம் இட்டுச் செல்லும். 


இதையே அப்பரடிகளும் 


"...இனித்தமுடன் எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே"


என்பார். இறைவனின் திருவடிகளை அடைய வேண்டும் என்றால், மனித பிறவி வேண்டும். 


ஞானம் என்பது தமிழ் படிப்பதாலோ, பக்தி இலக்கியம் படிப்பதாலோ மட்டும் வருவது அல்ல. எந்தத் துறையில், எதைப் படித்தாலும், அது முடிவில் இறைவன் திருவடிகளையே சென்று அடையும் என்பது அவர்கள் முடிவு. 


பயணத்தை தொடங்குவோம். முடிவு வரும் போது வரட்டும்.