திருவாசகம் - அதிசயப் பத்து - குடி கெடுகின்றேன்
நாம் ஒரு தவறான காரியத்தைச் செய்கிறோம் என்றால் அது நம்மை மட்டும் பாதிப்பது இல்லை. நம் குடும்பத்தை, பிள்ளைகளை, அவர்களின் பிள்ளைகளை என்று இனி வரும் தலைமுறையையும் சேர்த்துப் பாதிக்கும்.
அது எப்படி?
ஒருவன் நன்றாக உழைக்காமல், ஏதோ வந்தோம் போனோம் என்று வேலை செய்கிறான். ஏதோ சம்பளம் வருகிறது. காலம் ஓடுகிறது. பிள்ளைகள் சாதாரண பள்ளிகளில் படிக்கிறார்கள். உள்ளூரிலேயே ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள். அங்கேயே வேலை கிடைக்கிறது.
அவனே முயன்று அதிக உழைப்பை தந்திருந்தால், அதிகம் சம்பாதித்து இருக்கலாம். பிள்ளைகளை பெரிய சிறந்த பள்ளிகளுக்கு அனுப்பி இருக்கலாம். மேற் படிப்புக்கு அயல் நாட்டிற்கு அனுப்பி உலகிலேயே சிறந்த கல்லூரிகளில் படிக்க வைத்து இருக்கலாம்.
அவனுடைய முயற்சின்மை அவனை மட்டும் அல்ல, அவன் குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் பாதிக்கிறது அல்லவா.
அது போல,
இறை வழியில் செல்லாமல் கண்ட படி சுத்தித் திரிந்தால், கெடுவது அவன் மட்டும் அல்ல, அவன் குலமே கெடும் என்கிறார் மணிவாசகர்.
இறை வழியில் சென்று உண்மையை உணர்ந்து இருந்தால், அதை தன் பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்திருப்பான். அவன் அறியாததால் அவன் பிள்ளைகளும் அறியவில்லை. இப்படி பின் வரும் சந்ததிகள் அந்த அறிவை அடையாமலேயே போய் இருக்கும்.
மணிவாசகர் சொல்கிறார்
"இறைவனை போற்றும் அடியவர்கள் பால் செல்ல மாட்டேன். பூக்களைத் தூவி இறைவனை வழிபடமாட்டேன். மலர் சூடிய பெண்கள் பின்னால் சென்று என் குடியையே நாசம் செய்வேன். அப்படிப்பட்ட என்னை, இரவில், அனலை கையில் ஏந்தி ஆடும் எம் இறைவன், பொன் போல் மின்னும் ஜடா முடி கொண்டவன், என்னை ஆட்கொண்டு, தன் அடியவர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது "
என்று.
பாடல்
பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;
குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை
இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.
பொருள்
பரவுவார் = இறைவன் புகழை பாடுவார், சொல்லுவார்
அவர் பாடு = அவர்களிடம்
சென்று அணைகிலேன் = சென்று அவர்களோடு சேர்ந்து இருக்க மாட்டேன்
பல் மலர் பறித்து = பல விதமான மலர்களைப் பறித்து
ஏத்தேன் = உன்னை புகழ மாட்டேன்
குரவு வார் = குரவு என்ற மலர்களை அணிந்த
குழலார் = நீண்ட குழல் உடைய பெண்கள்
திறத்தே நின்று = அவர்கள்பால் சென்று, அவர்களோடு இருந்து
குடி கெடுகின்றேனை = என் குடியோடு கெடுகின்ற என்னை
இரவு நின்று = நள்ளிரவில்
எரி ஆடிய = எரியும் சுடுகாட்டில் திருநடனம் புரியும்
எம் இறை = என்னுடைய இறைவன்
எரி சடை மிளிர்கின்ற அரவன் = ஒளி வீசும் சடை முடி உடையவனை, பாம்பை அணிகலனாக அணிந்தவனை
ஆண்டு = என்னை ஆட்கொண்டு
தன் அடியரில் கூட்டிய = தன்னுடைய அடியவர்களில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்ட
அதிசயம் கண்டாமே = அதிசயத்தைக் கண்டேன்
அடியவர்களோடு சேர்ந்து இருப்பது, மலர் தூவி வழிபடுவது - நல்ல நெறி
பெண்கள் பின்னால் சுற்றுவது = தீ நெறி
சரி, அப்படி என்றால் பெண்களுக்கு என்று ஒன்றும் சொல்லவில்லையா? பெண்கள் ஆண்கள் பின்னால் சுற்றலாமா? ஏன் எப்போதும் பெண்களையே பற்றி பேசுகிறார்கள்.
பல காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, பெண் பின்னால் போவது, அல்லது பெண் சுகம் தேடுவது என்பது ஒரு குறியீடு. அதாவது புலன் இன்பங்களின் பால் போகாமல் இருப்பது.
வேறு ஏதாவது சொல்லலாமே, ஏன் பெண்களை முன்னிறுத்தி சொல்ல வேண்டும்?
சொல்லலாம். ஆனால் அந்த மாதிரி இன்பங்கள் எல்லோருக்கும் ஆசை இருக்குமா என்று தெரியாது.
உதாரணமாக, "மது அருந்தி கேடு அடையும் என்னை" என்று சொல்லலாம். அப்படிச் சொன்னால், மது அருந்தாத பலர் இருப்பார்கள். அவர்கள் "மாணிக்க வாசகர் சொல்லுவது நம்மை அல்ல" என்று நினைத்துக் கொள்வார்கள். பெரும்பாலானோருக்கு பொதுவான ஒன்று என்றால் அது ஆணுக்கு பெண் மேல் உள்ள ஈர்ப்பும், பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள ஈர்ப்பும்.
உண்பது, உறங்குவது, மது, புகை பிடித்தல் போன்றவை பெரிய அளவில் மாறுபாடு இருக்கும். ஆண் பெண் கவர்ச்சி எல்லோருக்கும் உள்ள ஒன்று.
சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், ஏன் ஆணுக்கு பெண் மேல் உள்ள கவர்ச்சியை மட்டும் பேச வேண்டும். பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள கவர்ச்சி பற்றி பேசக் கூடாதா?
பேசலாம்.
ஆனால், ஒரு வயதுக்குப் பின், இயற்கையிலேயே பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து போகிறது. வயதான காலத்தில், ஆன்மீகத்தில் ஈடுபடும் நாட்களில், ஆணின் ஈர்ப்பு, பெண்ணை வெகுவாக பாதிப்பது இல்லை. அது இயற்கையிலேயே அமைந்த ஒன்று. ஆணுக்கு அப்படி இல்லை. இனக் கவர்ச்சி என்பது ஆணுக்கு மிக நீண்ட நாட்கள் இருக்கும். எனவே அது ஒரு தடை. எனவே, அது பற்றி வெகுவாக பேசப் படுகிறது.
நான் தவறாகக் கூட இருக்கலாம். ஒரு சிந்தனை என்ற அளவில் அது பற்றி யோசிக்கலாம். சரி தவறு என்று வாதிக்க அல்ல.