Sunday, September 29, 2019

பெரிய புராணம் - இளையான் குடி மாறனார் - விருந்து

பெரிய புராணம் - இளையான் குடி மாறனார் - விருந்து 


விருந்தினரை உபசரிப்பதை ஒரு அறமாகக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.  விருந்தை எப்படி உபசரிக்க வேண்டும் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

விருந்தினரை எப்படி நடத்த வேண்டும் என்பதில் உச்சம் தொட்டவர்கள் நம்மவர்கள்.

சேக்கிழார் சொல்கிறார்,  விருந்தினர் தூரத்தில் வரும் போது, அவர் கண்ணுக்கு நாம் தெரிவோம். நாம் நிற்கும் நிலை, நமது மலர்ந்த முகம், சிரிப்பு, விரிந்த கைகள், அல்லது கூப்பிய கைகள் இவைகள்தான் விருந்தினருக்கு தெரியும். அந்த பார்வையிலேயே வருகின்ற விருந்தினர்க்குக்கு தெரிந்து விடுமாம், இவன் நம் வருகையை விரும்புகிறானா அல்லது நாம் அழையா விருந்தாளியா என்று.

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால், நாம் பேசுவது அவருக்கு கேட்கும். "வாங்க வாங்க...என்ன உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு, இப்பவாவது என் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதே" என்று இன் சொல் சொல்லி வரவேற்க வேண்டும்.

முதலில் பார்வைக்கு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். முகத்தை கடு கடு என்று வைத்து இருந்தால் வருகிறவன் கூட அப்படியே போய் விடுவான். அப்புறம், கொஞ்சம் கிட்ட வந்த பின், இன் சொல் கூற வேண்டும்.

பாடல்


ஆர மென்புபு னைந்த ஐயர்தம் அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும் நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்குவித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரிவெய்த முன்னுரை செய்தபின்.


பொருள்

ஆரம் = கழுத்தில் அணியும் மாலை

என்பு புனைந்த = எலும்பை அணிந்த

ஐயர்தம்  = தலைவரின்

அன்பர் = அன்பர்

என்பதொர் தன்மையால் = என்கிற தன்மையால்

நேர வந்தவர் = நேரே வந்தவர்

யாவ ராயினும்  = யாராக இருந்தாலும்

நித்த மாகிய = எப்போதும் இருக்கும்

பத்தி = பக்தி

முன் கூர = முன்பு வர

வந்தெதிர் = வந்து எதிர்

கொண்டு  = கொண்டு

கைகள் குவித்து = கைகளை குவித்து

நின்று = நின்று

செ விப்புலத் தீர = அவர்கள் காதில் விழும்படி

மென் = மென்மையாக

மது ர = மதுரமான

பதம் = சொற்களை கூறி

பரி வெய்த = பரிவுடன்

முன்னுரை செய்தபின். = வரவேற்புரை கூறிய பின்

இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு, வாங்க வாங்க என்று சொல்லக் கூடாது. எதிரில் சென்று அழைக்க வேண்டும்.

உட்கார்ந்து கொண்டே வாங்க என்று சொல்லக் கூடாது. எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்.

கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்.

இனிமையான சொற்களை மென்மையாக பேசி வரவேற்க வேண்டும்.

வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி வரவேற்க வேண்டும். வேண்டியவர், வேண்டாதவர், பணக்காரர், பெரியவர், சின்னவர் என்று பேதம் பார்க்கக் கூடாது.

இதெல்லாம் ஒரு பண்பாடு. அப்படி வாழ்ந்தார்கள் நம் முன்னவர்கள்.

அது ஒரு நல்ல பழக்கம் என்று தெரிந்தால், கடைபிடிப்பது நல்லது தானே?

அது மட்டும் அல்ல, பிள்ளைகளுக்கு இதை கதையாக சொல்லித் தர வேண்டும்.  அவர்கள் மனதில் பதியும். செய்வதும் செய்யாததும் அவர்கள் விருப்பம்.

நல்லதை விதைப்போம்.  அல்லதா விளைந்து விடும்?

சரி, இன் முகம் காட்டி, இன் சொல் கூறி வரவேற்றாகி விட்டது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_29.html

Saturday, September 28, 2019

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் - நம்பு வாய்மையில்

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் - நம்பு வாய்மையில்


நம் உடம்பில் எந்த உறுப்பு உயர்ந்தது ? எது தாழ்ந்தது  என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? அனைத்து உறுப்புகளும் ஒரே நிலை தான். கண் உயர்ந்தது, காது தாழ்ந்தது, வலது கை சிறந்தது, இடது கை தாழ்ந்தது என்று சொல்ல முடியுமா?

சரி.

சமுதாயத்தில் எந்த வேலை செய்பவர் உயர்ந்தவர்? எந்த வேலை செய்பவர் தாழ்ந்தவர் என்று கேட்டால்?

பூஜை செய்ப்வர் உயர்ந்தவர்....குப்பை அள்ளுபவர் தாழந்தவர் என்று கூற முடியுமா ?

கூறிக் கொண்டிருக்கிறோம். அது சரி அல்ல.

நமது முன்னோர்கள் சமுதாயத்தை நான்காக பிரித்தார்கள். அது இன்றைய பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதாவது,

- உற்பத்தி (production )
- விநியோகம் (distribution )
- நிர்வாகம் (Administration)
- தொலை நோக்கு திட்டமிடுதல் (Strategic Planning )

எந்த பெரிய நிறுவனத்தையும் இந்த நான்கு பிரிவாக பிரித்து விடலாம்.

சமுதாயத்தையும் அப்படியே.

அப்படி பிரித்து வைத்து இருந்தார்கள் -  அதற்கு வர்ணம் என்று பெயர்.

உற்பத்தி அடிப்படை. Goods and Services உற்பத்தி செய்யாவிட்டால் ஒரு சமுதாயம் படுத்து விடும்.  உற்பத்திதான் ஒரு சமுதாயத்தின் உயிர் நாடி. விவசாயம், மருத்துவம், சாலை போடுவது, போக்குவரத்து, தொழிற்சாலை , வங்கிகள்,  தொலை தொடர்பு என்ற அனைத்தும் இதில் அடங்கும். சமுதாயத்தை  இயக்குவது அதுதான். எனவே, அதில் உள்ளவர்களை சூத்திர தாரிகள், அல்லது சூத்திரர்கள் என்று கூறினார்கள்.

உற்பத்தி மட்டும் செய்து விட்டால் போதாது, அதை எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வைசியர்கள் என்று பெயர்.

அதே போல நிர்வாகம் செய்பவர்கள் ஷத்ரியர்கள் என்றும் திட்டம் தீட்டுதல்,  ஆராய்ச்சி செய்தல் போன்ற மூளை சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்களை  அந்தணர்கள் என்று பிரித்து பெயர் வைத்தார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இளையான்குடிமாற நாயனார் ஒரு விவசாயி. எனவே அவர் சமுதாய அமைப்பில் ஒரு சூத்திரர். சூத்திரர் என்ற நற்குலத்தில் பிறந்தவர் என்கிறார் சேக்கிழார். சிவனடியார்களை போற்றி அவர்களுக்கு விருந்து உபசரிப்பது என்பது அவரின் விரதம்.

பாடல்

அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளையான்கு டிப்பதி மாறனார்.


பொருள்

அம்பொன் = அழகிய பொன்

நீடிய = வேய்ந்த

அம்பலத்தினில் = அம்பலத்தில்

ஆடு வார் = ஆடுவார். யார் ஆடுவார்? சிவன்.

அடி சூடுவார் = அவருடைய (சிவனுடைய) அடிகளை சூடுபவர்

தம்பி ரான் = தம்பிரான்

அடி மைத் = அப்படி சிவனுக்கு அடிமையாக இருந்த

திறத்துயர்  சால்பின் = திறத்தினால்

மேன்மைத ரித்துளார் = மேன்மை பெற்றவர்

நம்பு வாய்மையில் = நம்புகின்ற வாய்மையில்

நீடு = உயர்ந்த

சூத்திர = சூத்திர

நற்குலஞ் = நல்ல  குலம்

செய்த வத்தினால் = செய்த தவத்தினால்

இம்பர் = இந்த

ஞாலம் = உலகம்

விளக்கி னார் = விளங்கும்படி

இளையான்கு டிப்பதி மாறனார். = இளையான்குடி பதி மாறனார் இருந்தார்

நம்பு வாய்மை = வாய்மையை நம்ப வேண்டும். வாய்மையே சிறந்த அறம் என்பார் வள்ளுவர்.

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் 
வாய்மையின் நல்லபிற

என்பது வள்ளுவம்.

வாய்மையை விட சிறந்தது ஒன்று இல்லை.

இறைவன் ஜாதி, குலம் , சமயம் என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. அவனுடைய அடியார்கள் என்று  சொல்லிக் கொள்பவர்கள்தான் இந்த பாகுபாடு செய்து கொண்டு  பேதைகளாய் மூடர்களாய் திரிகிறார்கள்.

தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்

ஓர்பொரு ளானது தெய்வம்.

என்பார் பாரதியார்.


எலும்பிலும், சதையிலும், தோலிலும் இலக்கம் (number ) போட்டு இருக்கிறதா என்று கேட்கிறார் சிவவாக்கியார் என்ற சித்தர்.

பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே.

சாதி மத பேதங்களை கடந்து, அன்பை நிலை நாட்ட வந்தது பெரிய புராணம்.

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_28.html


Thursday, September 26, 2019

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்



அந்தக் காலத்தில், நான் சொல்வது 1960 களில், இளங்கலை (BA ) படிப்புக்கு இளையான்குடிமாற நாயனார் புராணம் இருந்தததாக என் தந்தையார் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அது மட்டும் அல்ல, அதே புராணம்தான் அதற்கு முன்பு இருந்த  P  U  C , SSLC  போன்றவற்றிலும் இருந்ததாம்.

ஒரு இலக்கியத்தை சாரமற்றதாகச் செய்ய வேண்டும் என்றால், அதை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்த்து விட வேண்டும். பின், அதன் மேல் உள்ள மதிப்பு, மரியாதை எல்லாம் அந்த மாணவர்களுக்கு போய் விடும். படித்து மனப்பாடம் செய்து, நாலு மதிப்பெண் பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கும்.

பெரிய புராணம், 63 நாயன்மார் வரலாற்றை சொல்லுகிறது. அதில் மணிவாசகர் கிடையாது. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர் தவிர்த்து பல பேருக்கு மற்ற நாயன்மார் பெயர்கள் கூடத் தெரியாது. காரைக்கால் அம்மையார் தெரியும் ஏனென்றால் அவர் மட்டும் தான் ஒரே ஒரு பெண் அந்த நாயன்மார் வரிசையில்.

இந்த நாயன்மார்கள் ஏதோ பக்தி செய்தார்கள், இறைவன் அவர்களை சோதித்தான், பின் முக்தி கொடுத்தான். அவ்வளவுதான். இதைப் படித்து நமக்கு என்ன ஆகப் போகிறது ?

நம்மால் எல்லாம் அப்படி பக்தி செய்ய முடியாது.

இதையெல்லாம் படிப்பது வெட்டி வேலை என்று நாம் நினைக்கலாம்.

கடவுளே இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும் போது , பக்தி எங்கிருந்து வரும்?  அதிலும் அடியார்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து என்ன ஆகப் போகிறது  என்றும் தோன்றும்.

ஞாயமான சந்தேகம்தான்.

கடவுளை விட்டு விடுங்கள்.

பக்தியை விட்டு விடுங்கள்.

வீடு பேறு , முக்தி, சுவர்க்கம் இதையெல்லாம் விட்டு விடுங்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழுக்காக அதை படிக்கலாம். அத்தனையும்  தேன் சொட்டும் பாடல்கள்.

தமிழ் கொஞ்சும்.  கிறங்க அடிக்கும்.

தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டை அறிந்து கொள்ள படிக்கலாம்.

எப்பேற்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம், இப்போது இப்படி திக்கு திசை தெரியாமல்,  மேலை நாட்டு நாகரிகம், பண்பாடு இவற்றை நோக்கி கையேந்தி நிற்கிறோம் என்பது புரியும்.

நம் பாரம்பரியம் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தெரிந்தால், "அட, இப்படியும் கூட வாழ முடியுமா? இப்படி கூட வாழ்ந்திருக்கிறார்களா " என்ற ஆச்சரியம் வரும்.

ஒருவேளை அந்த பாரம்பரியம் பிடித்து கூட போகலாம். நாம் நம் ஆதார நிலை நோக்கி  திரும்பலாம்.

எது எப்படியோ, தமிழுக்காக படிக்கலாம். மற்றவை கிடைத்தால், நல்லது. இலவச இணைப்பாக பெற்றுக் கொள்ளலாம்.

இளையான்குடிமாற நாயனார் பற்றி வரும் நாட்களில் சிந்திக்க இருக்கிறோம்.

இது ஒரு முன்னுரை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_26.html

Wednesday, September 25, 2019

தேவாரம் - வழி வைத்தார்

தேவாரம் - வழி வைத்தார்


உங்களுக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

உங்களுக்கு கர்ம வினைகளின் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

நம் தமிழ் இலக்கியம் கர்மவினையை வெகுவாக நம்பியது என்றே நினைக்கிறேன்.

மனிதர்கள் மட்டும் அல்ல, தெய்வங்களும் இந்த கர்ம வினைக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பது அதன் முடிவு.

சிறு வயதில், கோபிகள் குளிக்கும் போது, அவர்களின் ஆடையை திருடி அவர்களை தவிக்க விட்டான் கண்ணன். அவன் ஆற்றில் குளிக்கும் போது அவன் கட்டியிருந்த கீழாடை நீரோடு போய் விட்டது.

அது அவன் செய்த வினை.

வெளியே வர முடியாமல் நின்ற போது பாஞ்சாலி தன் சேலையின் முந்தானையில் ஒரு நீண்ட பாகத்தை கிழித்து அவனிடம் தூக்கி எறிந்தாள்.
பின் ஒரு காலத்தில், பாஞ்சாலிக்கு கோடிக்கணக்கான புடவைகளை கண்ணன் தந்து அவள் மானம் காத்தான்.

அது அவள் செய்த வினைப் பயன்.

ஒரு முறை, பிரமன் ஏதோ தவறு செய்ய, அவனின் ஒரு  தலையை சிவன் கிள்ளி எடுத்து விட்டார்.  அந்தத் தலை சிவனின் கையோடு ஒட்டிக் கொண்டது. என்ன செய்தும் கையில் இருந்து அந்த மண்டை ஓடு நீங்கவில்லை.  சிவன் செய்த வினைக்கு பரிகாரம், அவர் அந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து  உண்டால் தான் போகும் என்பது.

வினை யாரையும் விடாது.

கடவுள்கள் பாடே அப்படி என்றால்....

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் முன்ன பின்ன தெரியாத ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால், அந்த ஊருக்குப் போகும் வழிப் படம் (map ) வேண்டும் அல்லவா. எப்படி போவது, எங்கே திரும்புவது, [போகிற வழியில் என்ன என்ன ஊர்கள் வரும் என்றெல்லாம் தெரிந்து இருப்பது நல்லது அல்லவா?

சொர்கத்துக்கு எப்படி போவது? வழிப் படம் இருக்கிறதா ? முன்ன பின்ன போனதும் கிடையாது. போய் வந்தவர்களிடம் கேட்கலாம் என்றால் அப்படி யாரும் இருப்பதாய் தெரியவில்லை.

பின் எப்படி போவது?

வழிப்படம் இருக்கிறது என்கிறார் திருநாவுக்கரசர். அந்த மேப்பை வைத்துக் கொண்டு  அதே வழியில் நாம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்



ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
    வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
    தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
    வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே


பொருள்

ஊனுடுத்தி  = ஆடை உடுத்துவோம். அது போல, இந்த உடம்பு சதையை உடுத்தி இருக்கிறதாம்.

யொன்பது வாசல் வைத்து = ஒன்பது வாசல் வைத்து

வொள்ளெலும்பு தூணா  = வெள்ளை எலும்புகளை தூண் போல வைத்து

வுரோமம் மேய்ந்து = அதற்கு மேல் கூரையாக முடியை வைத்து

தாமெடுத்த  கூரை = அவர் தாமே எடுத்த கூரை வீடு

தவிரப் = நீங்கும்படி ஆகும் சமயத்தில்

போவார் =  தானே வலிந்து போவார்

தயக்கம் பலபடைத்தார் = மயங்கும் படி பல வடிவில் வருவார்

தாமரையினார் = தாவுகின்ற மானை (தா+ மரை ) கையில் கொண்டவர் (சிவன்)


கானெடுத்து = கானகத்தில்

மாமயில்கள் = பெரிய மயில்கள்

ஆலுஞ் சோலைக்  = ஆடும் சோலை

கழிப்பாலை = கழிப்பாலை என்ற ஊரில்

மேய = உள்ள

கபாலப்பனார் = கையில் கபலாத்தைக் கொண்டவர் (மேலே உள்ள கதையைப் படிக்கவும்)

வானிடத்தை = வான் இடத்தில்

ஊடறுத்து = ஊடே அறுத்து

வல்லைச் செல்லும் = விரைந்து செல்லும்

வழிவைத்தார்க் = வழி வைத்தார்

கவ்வழியே போதும் நாமே = அந்த வழியாக நாம் போவோம்



அவன் இருக்கும் இடத்துக்கு செல்லும் வழியை அவன் அமைத்துக் கொடுத்து இருக்கிறான். அந்த வழியில் போனால், சீக்கிரத்தில் அவனை அடையலாம்.

அந்த வழி பற்றி திருப்பாலை தலத்து இறைவன் மேல் நாவுக்கரசர் பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

வேறென்ன சொல்லப் போகிறேன், முடிந்தால், மூலத்தை தேடிப் படியுங்கள்.

ஊன் உருகும். உயிர் உருகும் பாடல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_25.html

Saturday, September 21, 2019

கம்ப இராமாயணம் - வரும் நாள் அன்றி

கம்ப இராமாயணம் - வரும் நாள் அன்றி 


கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும்?

அது ஒரு கதை. அவ்வளவுதானே. உலகில் எத்தனையோ ஆயிரம் கதைகள் இருக்கின்றன. போதா குறைக்கு சினிமா, நாடகம், தொலைக் காட்சி நெடு நாடகங்கள் (சீரியல்) என்று இருக்கின்றன. இதில், இராமாயணம் போன்ற இலக்கியங்களும் ஒன்று. வேறு என்ன இருக்கிறது அதில் ?

இருக்கிறது.

கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்கள் வெறும் கதை அல்ல. அவை வாழ்க்கை நெறி முறைகளை சொல்ல வந்தவை.

அறம் , அறம் என்று சதா சர்வகாலமும் அதைப் பற்றியே சிந்தித்து, அதை எப்படி நமக்குச் சொல்லலாம் என்று இப்படிப் பட்ட கதைகளின் ஊடே அவற்றை சொல்ல முயற்சிக்கின்றன.

கதை அல்ல முக்கியம். வாழ்க்கை அறம் தான் முக்கியம்.

நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

அறம் சொல்ல ஒரு இடம் காலம் வேண்டாமா?

கதா நாயகனும், கதா நாயகியும் காதலித்து, ஆடி பாடி மகிழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரு மாலை நேரம் வேண்டும், பூஞ்சோலை வேண்டும் , மஞ்சள் வெயில் வேண்டும்....அல்லவா?

கம்பனுக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை. அறம் சொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டால் , இடம் பொருள் ஏவல் பார்ப்பது இல்லை.  எங்கெல்லாம் முடியுமோ, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொல்லி விடுவது என்ற முடிவோடு காப்பியம் செய்கிறான்.

அவன் வாழக்கை தத்துவம் சொல்லும் இடத்தைப் பாருங்கள்....

மூக்கும், காதும், முலையும் அறுபட்டு இரத்தம் சொட்ட சொட்ட, ஊரே பார்த்து  மிரண்டு போக இராவணன் சபையில் வந்து நிற்கிறாள் சூர்ப்பனகை.


அவமானம், வலி, வேதனை, கோபம், கொந்தளிப்பு...

இந்த இடத்தில் அறம் சொல்கிறான் கம்பன்.

சொல்லும் இடமா இது ? சொல்கிறான் கம்பன்

"என்ன தான் முயற்சி செய்தாலும், தவம் செய்தாலும் விதி என்று ஒன்று இருக்கிறது. அதன் படிதான் எல்லாம் நடக்கும். வரும் நாள் அன்றி எதுவும் யாருக்கும் வந்து விடாது. நீ எவ்வளவோ தவம் செய்தாய் அதன் பலன் இப்போதுதான் உனக்கு கிடைக்கப் போகிறது (அதாவது சீதையை அடைவதுதான் உன் தவப் பயன்)" என்கிறாள் சூர்ப்பனகை, இராவணனிடம்.

பாடல்

“தருவது விதியே என்றால்,
    தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி,
    வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும்,
    உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும், படைத்த செல்வம்
    எய்துவது, இனி நீ, எந்தாய்!‘‘


பொருள் 

“தருவது விதியே என்றால் = பலன்களை தருவது விதியே

தவம் பெரிது = பெரிய தவம்

உடையரேனும், = செய்தவர்கள் என்றாலும்

வருவது  = வரக்கூடியவை

வரும் நாள் அன்றி = வரக்கூடிய நாள் இல்லாமல்

வந்து கைகூட வற்றோ? = அதற்கு முன்னால் வந்து விடுமா? (வராது)

ஒருபது முகமும் = 10 தலைகளும்

கண்ணும், = கண்களும்

உருவமும் = பலமான உருவமும்

மார்பும் = பரந்த மார்பும்

தோள்கள்  இருபதும் = இருப்பது தோள்களும்

படைத்த செல்வம் = தவம் செய்து நீ படைத்த செல்வம்

எய்துவது = அடைவது

இனி நீ = இனிமேல்தான்

எந்தாய்!‘‘ = என் தந்தை போன்றவனே


நீ இதுவரை  பெற்றது எல்லாம் ஒரு பலன் இல்லை. நீ செய்த தவத்தின் பலன் இப்போதுதான் கிடைக்கப் போகிறது. இத்தனை காலம் நீ பொறுத்து இருக்க வேண்டியது இருந்தது. சீதைதான் உன் தவப் பயன் என்கிறாள் சூர்ப்பனகை.

ஆகும் நாள் அன்றி, ஒன்றும் வந்து சேராது என்று வாழ்க்கை தத்துவம் கூறுவது யார்?  சூர்ப்பனகை என்ற அரக்கி.

கூறியது யாருக்கு? இராவணன் என்ற அரக்கனுக்கு

கூறிய இடம்?  அவன் அரசவை

கூறிய நேரம்? காதும், மூக்கும், முலையும் இழந்து இரத்தம் சொட்ட நின்ற நேரம்.

இதுவா இடம், பொருள், ஏவல் ?

விதி வலியது. எல்லாம் என்னால் ஆனது என்று ஆடாதே. உனக்கு இப்போது செல்வம் வர  வேண்டும் என்று இருந்தால் வரும். நீ என்ன தவம் செய்தாலும், நேரம் சரி  இல்லை என்றால் வராது. ஆடாதே என்று அறம் சொல்கிறான் கம்பன்.

நான் படித்தேன், நான் திறமையாக வேலை செய்தேன், என் சாதுரியம், என்று மார்  தட்டாதே. அடங்கு.

உன்னை விட படித்தவன், உன்னை விட திறமைசாலிகள், உன்னைவிட சாதுரியம் மிக்கவர்கள்  உனக்கு பல படிகள் கீழே இருக்கிறார்கள்.

உன்னை விட குறைவாக படித்தவர்கள், குறைவான திறமை உள்ளவர்கள் உனக்கு பல படி மேலே இருக்கிறார்கள்.

இதை விதி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது என்று கம்பன் கேட்கிறான்.


அறிவோம். ஆணவம் குறைத்து வாழ்வோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_21.html

Friday, September 20, 2019

திருக்குறள் - பொறுமை - ஒருநாளை இன்பம்

திருக்குறள் - பொறுமை - ஒருநாளை இன்பம் 


இன்பமாக வாழ்வதுதானே வாழ்வின் குறிக்கோள்.

இனிப்பு உண்பது இன்பமா? துன்பமா?

இன்பம்தான். இலட்டு , அல்வா, ஐஸ் கிரீம், ஜிலேபி, எல்லாம் சாப்பிட்டால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

தினமும் சாப்பிட்டால் என்ன? இன்பம்தானே ? மகிழ்ச்சிதானே ?

செய்ய மாட்டோம். ஏன் என்றால், அது உண்ணும் போது இன்பம் தந்தாலும், பின்னால் பெரிய துயரைத் தரும். சர்க்கரை வியாதி வரும். உடல் பருமன் கூடும். இல்லாத நோய் எல்லாம் வந்து சேரும்.

எனவே,

உடனடி இன்பத்தை விட, நீண்ட நாள் இன்பம்தான் முக்கியம் என்று நமக்குத் தெரிவதால், அவற்றை நாம் முடிந்தவரை தவிர்க்கிறோம்.

அதே போல், ஓடுவது, பளு தூக்குவது, மாடி ஏறுவது போன்றவை கடினமான செயல்தான். எதுக்கு மூச்சு வாங்க நாலு மாடி ஏறனும் ? மின் தூக்கி (லிப்ட்) இருக்கிறதே என்று அதில் போகலாம்.

உடற் பயிற்சி செய்தால், அப்போது துன்பம் போலத்  தெரிந்தாலும், பின்னால் அது நல்லது செய்யும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். முட்டு , தசை எல்லாம் வலிமையாக இருக்கும்.

எனவே,

உடனடி துன்பம் என்றாலும், நீண்ட நாள் இன்பம் என்றால் அதை நாம் செய்கிறோம். செய்ய விரும்புகிறோம்.

ஒருவன் நமக்கு தீங்கு செய்தால், அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்தால் அது அப்போதைக்கு இன்பம்.  பதிலுக்கு பதில் திட்டி விடலாம், முடிந்தால் அடிக்கவும் செய்யலாம்,  இல்லை என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு  பேசாமல் நாலு நாள் இருக்கலாம்...

அப்படி செய்தால், நமக்கு உடனடி இன்பம் கிடைக்கும். அது நீண்ட நாள் இன்பமா?

அந்த உறவு நிலைக்குமா? அன்பு ஆழமாகுமா? நாம் அவவனுக்கு தீங்கு செய்தால் அவன் நமக்கு  அதை விட பெரிய தீங்கு செய்ய மாட்டானா? இது எங்கு போய் முடியும்?

மாறாக, தீங்கு செய்தவனை மன்னித்து பொறுத்துக் கொண்டால் ?

வள்ளுவர் சொல்லுகிறார்,

"நமக்கு தீங்குக்கு செய்தவனுக்கு பதிலுக்கு நாம் தீங்கு செய்தால், அது அந்த ஒரு நாளைக்கு இன்பம். மாறாக, அந்த தீமையை பொறுத்துக் கொண்டால், இறுதி வரை புகழ் நிலைக்கும்" என்று

பாடல்


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்


பொருள்

ஒறுத்தார்க்கு = தண்டித்தவர்க்கு

ஒருநாளை  = ஒரு நாள்

இன்பம்  = இன்பம்

பொறுத்தார்க்குப் = பொறுத்துக் கொண்டவர்களுக்கு

பொன்றும் = இறுதி வரை

துணையும் = துணையாக நிற்கும்

புகழ் = புகழ்

"இறுதி வரை" என்றால் எதன் இறுதி?

அவனுடைய வாழ் நாள் வரை, இந்த உலகத்தின் இறுதி வரை என்று கூட சொல்லலாம். பொறுமையை கடை பிடித்த மகான்களின் புகழ் அவர்கள் வாழ்நாள் தாண்டியும்  நிலைத்து நிற்கிறது அல்லவா?

தண்டித்தவர்களுக்கு ஒரு நாளுக்கு இன்பம்.

பொறுத்தவர்களுக்கு இறுதி வரை இன்பம் என்று சொல்லவில்லை. இறுதி வரை புகழ்  என்கிறார்.  பெருமை, உயர்வு.

ரொம்ப இல்லாவிட்டாலும்,

கணவன் மனைவி, பிள்ளைகளிடம், நண்பர்களிடம், மருமகளிடம், என்று வீட்டில் நெருங்கிய  உறவில் இருந்து இந்த பொறுமையை ஆரம்பிக்கலாமே?

முடிந்தால் பின்னால் விரிவு பண்ணிக் கொள்ளலாம்.

இது நடை முறை சாத்தியம் தானே? சாதாரண மனுஷன், மனுஷி செய்யக் கூடிய  செயல் தானே?

முயன்று பாருங்கள். நல்லதே நடக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_20.html


Thursday, September 19, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - தமிழ்த்தலைவன்

இராமானுஜர் நூற்றந்தாதி - தமிழ்த்தலைவன்


இரவு நேரம். வீட்டுக்குள் நுழைகிறோம். மின்சாரம் இல்லை. ஒரே இருட்டு.  எது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கண் திறந்துதான் இருக்கிறது. சாமான்கள் அந்தந்த இடத்தில் தான் இருக்கிறது. இருந்தும் கண் தெரியவில்லை.

ஏன் ?

இருட்டு.

வெளிச்சம் இருந்தால் தான் எது எங்கே இருக்கிறது என்று தெரியும்.

வெளிச்சம் இல்லாவிட்டால், கண் முன் இருக்கும் தூண் கூடத் தெரியாது. முட்டிக் கொள்வோம்.

இறைவன் கண் முன் இருந்த தூணில் இருந்தான். ப்ரகலாதனுக்குத் தெரிந்தது. இரணியனுக்கு தெரியவில்லை.

காரணம், அறியாமை என்ற இருள் அறிவை செயல் பட விடாமல் தடுக்கிறது.

அறியாமை என்ற இருள் விலகினால் இறை தரிசனம் கிடைக்கும். இல்லை என்றால், இருட்டில் நின்று கொண்டு, எதிரில் என்ன இருந்தாலும், எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் எல்லாம் பளிச் சென்று தெரியும்.

அமுதனார் சொல்கிறார்,

"கொடிய இருள் மறைந்த பின் திருக்கோவலூர் என்ற திருத்தலத்தில் உள்ள ஆயனை, அவனுடைய  தேவியுடன் தரிசிக்கப் பெற்ற தமிழ்த் தலைவன் பேயாழ்வாரின் பொன்னடிகளைப் போற்றும் இராமானுஜர் மேல் அன்பு பூண்டவர்களின் திருவடிகளை தலை மேல் சூடும் பக்தி உடையவர்கள் சிறந்தவர்களே "

பாடல்


மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.



பொருள்

மன்னிய = நிலைத்து நின்ற

பேரிருள்  = பெரிய இருள் (அறியாமை என்ற இருள்)

மாண்டபின் = மறைந்த பின்

கோவலுள் = திருக்கோவளுள்

மாமலராள் = திருமகள்

தன்னொடு = அவளோடு

மாயனைக் = மாயனை

கண்டமை = தான் தரிசித்ததை

காட்டும் = உலகுக்கு காட்டும்

தமிழ்த்தலைவன் = தமிழ் தலைவன்  (பேயாழ்வார்)

பொன்னடி = பொன் போன்ற அடிகளை

போற்றும் = போற்றும்

இராமா னுசற்கு  = இராமானுஜருக்கு

கன்பு = அன்பு

பூண்டவர்தாள் = கொண்டவர்கள் தாள் (அடிகள்)

சென்னியிற் = தலையில்

சூடும் = சூடிக் கொள்ளும்

திருவுடை யாரென்றும் சீரியரே = பக்தி உடையவர்கள் என்றும் சிறந்தவர்களே .


திருக்கோவலூர் மாயன், அவனுடைய தேவி திருமகள்

அவர்களின் தரிசனம் பெற்ற பேயாழ்வார்

பேயாழ்வாரின் திருவடிகளை போற்றும் இராமானுஜர்

இராமானுஜர் மேல் அன்பு கொண்டவர்கள்

அன்பு கொண்டவர்களின் பாதங்களை தலை மேல் சூடி கொண்டவர்கள் சிறந்தவர்கள்

புரிகிறதா ?

ஆண்டவன்,
அடியார்  (பேயாழ்வார்)
அடியார்க்கு அடியார் (இராமானுஜர்)
அடியார்க்கு அடியார்க்கு அடியார் (அவர் மேல் அன்பு கொண்டவர்கள்)
அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார் (அன்பு கொண்டவர்களின் திருவடிகளை தலை மேல் சூடி கொண்டவர்கள்)

ஆண்டவனை அடையும் படிகள்

பிறவி என்ற இருட்டில் கண் இருந்தும் தெரியாமல் தவிக்கிறோம்.

ஞான விளக்கை கையில் கொண்டவர் பேயாழ்வார். அவர் முன் செல்ல , அவர் பின்னே  வரிசையாக சென்று விட வேண்டியது தான்.


இராமானுஜர் நூற்றந்தாதியில் ஒவ்வொரு பாடலும் தேன் போல தித்திப்பவை.

உள்ளத்தை உருக்குபவை.

மூல நூலை தேடி படியுங்கள்.

நான் சொன்னதை விடவும் உங்களுக்கு மேலும்   பல தோன்றலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_19.html


Wednesday, September 18, 2019

திருக்குறள் - பொன் போல் பொதிந்து

திருக்குறள் - பொன் போல் பொதிந்து 


நமக்கு தீமை செய்தவரை நாம் பொறுத்துக் கொண்டே இருந்தால், உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கும் என்று வள்ளுவரைக் கேட்டேன். நம்மை இளிச்ச வாயன், ஏமாந்த சோணகிரி, கையாலாகாதவன் என்றல்லவா நகையாடும் என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார்,

"அப்படி அல்ல. ஒருவன் உனக்கு தீங்கு செய்தால், பதிலுக்கு அவனுக்கு நீ தீங்கு செய்தால், சான்றோர் உன்னை ஒரு நிறை மனிதனாக நினைக்க மாட்டார்கள். மாறாக, உனக்கு தீங்கு செய்தவனை நீ மன்னித்தால்,உன்னை பொன்னைப் போல போற்றி பாதுகாப்பார்கள்"

பாடல்


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து


பொருள்

ஒறுத்தாரை = தனக்கு தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களை

ஒன்றாக = சிறப்பாக

வையாரே = (ஆன்றோர்) வைக்க மாட்டார்கள்

வைப்பர் = வைப்பார்கள்

பொறுத்தாரைப் = பொறுத்துக் கொண்டவரை

பொன்போல் = பொன்னைப் போல

பொதிந்து = பாதுகாத்து

இப்படியே நமக்கு தீங்கு செய்பவர்களை எல்லாம் பொறுத்துக் கொண்டே போனால்,  நாம் அழிந்து போக மாட்டோமா என்பதற்கு மிக நுணுக்கமாக விடை தருகிறார் வள்ளுவப் பேராசான்.

நம்மிடம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் எப்படி பாதுகாப்போம்?  வங்கியில் உள்ள பெட்டகத்தில் வைப்போம். வீட்டில் ல், கனமான  பீரோவில் வைத்து பூட்டுவோம். அதற்கு ஒன்றுக்கு நாலு பூட்டு போடுவோம் . அதை நாம் எப்படி பாதுகாப்போமோ, அது போல உலகம் பொறுமை உள்ளவனை  பாதுகாக்கும் என்கிறார்.

"பொன் போல பொதிந்து"

பொன்னை எப்படி பொதிந்து பாதுகாப்பார்களோ அப்படி பொறுமை உள்ளவனை உலகம்  காக்கும் என்பது ஒரு பொருள்.

இரண்டாவது, பொன்னை நாம் எப்போதாவது காக்காமல் விடுவோமா?  இத்தனை காலம் பாது காத்தது போதும். இனி தூக்கில் தெருவில் போட்டு விடுவோம் என்று நினைப்போமா?  ஒரு காலும் நினைக்க மாட்டோம் அல்லவா? அது போல, பொறுமை உள்ளவர்களை உலகம் ஒரு போதும் கை விடாது.

மூன்றாவது, பொன் இருக்கிறதே, அது எப்போது சிறப்பு பெறுகிறது? நெருப்பில் சுட்டு, உருக்கி, சுத்தியால் அடித்து, நல்ல ஆபரணம் செய்த பின் அந்த பொன்னுக்கு   மதிப்பும் சிறப்பும் கூடுகிறது. அது போல, மனிதன் தனக்கு ஏற்படும்  துன்பங்களையும், தாழ்வுகளையும் பொறுத்துக் கொண்டால், பொன் போல் மதிப்பும் சிறப்பும் பெறுவான். பொன் அந்த வலிகளை பொறுத்துக் கொண்டதால் மின்னுமாப் போல்.

நான்காவது, பொன்னை வெறுப்பார் யாரும் இல்லை. தீயவர்கள் கூட பொன்னை போற்றுவார்கள்.  அது போல, பொறுமை உள்ளவர்களை உலகில் எல்லோரும் போற்றுவார்கள். தீமை செய்தவர்கள் கூட, ஒரு கால கட்டத்தில், "இவன்  மிக நல்ல மனிதன். இவனுக்குப் போய் நாம் தீங்கு செய்தோமே" என்று நினைத்து வருந்தி  அவனைப் போற்றுவார்கள்.


"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே"

ஒருவன் தீங்கு செய்கிறான். நாம் அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்கிறோம். நமக்கும் அவனுக்கும்  தீங்கு செய்வதில் என்ன வித்தியாசம்? அவன் முதலில் செய்தான். நாம் இரண்டாவது  செய்தோம் என்ற வித்தியாசம் தவிர, வேறு எல்லாம் ஒன்று தான்.  எனவே தான், இவனுக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான். "ஒன்றாக" என்றால் தனியாக, சிறப்பாக என்று அர்த்தம்.

விஸ்வாமித்ரன், தசரதனிடம்

"கரிய செம்மல் ஒருவனைத் தருதி" என்றார்.

இரண்டு பேர் கரிய நிற பிள்ளைகள். இராமனும், பரதனும். யாரைச் சொல்கிறார்   விஸ்வாமித்ரர்?  ஒருவனை என்றால் சிறந்தவனை என்று அர்த்தம். இராமன் தான் சிறந்தவன்.

"ஒரு திரு முருகன் வந்தான்" என்பார் கச்சியப்பர். இங்கே ஒரு என்றால் சிறந்த, தனித்துவம் வாய்ந்த என்று அர்த்தம்.

ஒறுத்தாரை சிறப்பாக கருத மாட்டார்கள் சான்றோர். எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான் என்று  நினைத்துக் கொள்வார்கள்.

பொறுமையின் பலன் புரிகிறது அல்லவா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_54.html

இராமானுஜர் நூற்றந்தாதி - மறையினை மன்ன வைப்பவரே

இராமானுஜர் நூற்றந்தாதி - மறையினை மன்ன வைப்பவரே


தாய் நமக்கு தந்தையை அறிமுகப் படுத்துகிறாள். அவள் சொல்லித்தான், தந்தை யார் என்று நாம் அறிந்து கொள்கிறோம்.

தந்தை நமக்கு ஆசிரியரை அறிமுகப் படுத்துகிறார். கை பிடித்துக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்து விடுகிறார்.

ஆசிரியர் நமக்கு இறைவனை அறிமுகப் படுத்துவார்.

அதெல்லாம் இல்லை, ஆசிரியர் பாடம் சொல்லித் தருவார்.அவருக்கே கடவுள் என்றால் யார் என்று தெரியாது. அவர் எப்படி எனக்கு கடவுளை காட்ட முடியும் என்று சிலர் கேட்கலாம்.

அவர் கடவுளை காட்ட வேண்டாம். கல்வியை ஒழுங்காக சொல்லித் தந்தால் போதும். அந்த கல்வி இறைவனை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்த்தும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்பார் வள்ளுவர்.

கல்வி, இறைவனின் திருவடிகளில் கொண்டு சேர்க்கும்.

எனவேதான் ஆசிரியர், ஆச்சாரியனை நம் இனம் கொண்டாடுகிறது.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

என்பார் அருணகிரிநாதர்.

ஆச்சாரியன் கையை பிடித்துக் கொண்டு இறைவனை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை.

இறைவனை விட்டு விடுங்கள் ,
அவனை கண்ட ஆழ்வார்களை விட்டு விடுங்கள்,
ஆழ்வார்களை மனதால் எப்போதும் கொண்ட இராமாநுஜரையும் விட்டு விடுங்கள்.
இராமானுஜரை மனதில் கொண்ட அடியவர்கள் யாரோ, அவர்களே இந்த உலகில் வேதம் நிலைத்து நிற்க செய்பவர்கள் என்கிறார்  அமுதனார்.

பாடல்


இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.


பொருள்


இறைவனைக் = இறைவனை

காணும் = காணும் போது

இதயத் திருள்கெட = இதயத்தில் உள்ள இருள் எல்லாம் கெட

ஞானமென்னும் = ஞானம் என்ற

நிறைவிளக் கேற்றிய = நிறைவான விளக்கை ஏற்றிய

பூதத் திருவடி = பூதத்தாழ்வார்

தாள்கள் = திருவடிகள்

நெஞ்சத் = மனதில்

துறைய = உறைந்து இருக்கும்படி

வைத் தாளும் = வைத்து போற்றும்

இராமா னுசன் = இராமானுசன்

புகழ் = புகழை

ஓதும் நல்லோர் = சொல்லும் நல்லவர்ககள்

மறையினைக்  = வேதத்தை

காத்த = காத்து

இந்த மண்ணகத் தே = இந்த மண்ணில்

மன்ன = நிலைத்து நிற்கும்படி

வைப்பவரே. = செய்வார்கள்


என்ன சொல்ல வருகிறார்?

இராமானுஜரை மனதில் வைத்து இருந்தாலே போதும், அவர்கள் தீய செயல்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்லும் வழி நல்ல வழியாகத்தான் இருக்கும். வேதம் சொன்ன வழியாகத்தான் இருக்கும். வேதத்தில் சொன்ன படி   வாழ்வதால், அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாழ்வார்கள். வேதம் வாழ்க்கையோடு சேர்ந்து நிலைத்து நிற்கும்.

யாருமே அதில் சொன்ன படி வாழாவிட்டால், பின் அந்த நூலுக்கு என்னதான் பலன், பயன்?

அது எப்படி இராமனுசரை மனதில் வைத்தாலே நாம் நல்லவர்களாகி விடுவோமா?

உதாரணம் பார்ப்போம்.

கைகேயி பெற்ற வரத்தால், இராமன் காடு செல்ல வேண்டி இருந்தது. அதைக் கேட்ட  இலக்குவன் கோபம் கொண்டு மிகையையாகப் பேசுகிறான். நிதானம் தவறி பேசுகிறான்.

அப்போது இராமன் சொல்கிறான்,

"வேதம் படித்த வாயால்" இப்படி பேசலாமா என்று.

வேதத்தைப் படித்தாலே போதும், வாழ்வில் நிதானம் வந்து விடும். வார்த்தையில்  கனிவு இருக்கும். பணிவு இருக்கும்.

அதாவது, படித்த பின் அதன் படி நடக்க நினைப்பவர்களுக்கு அப்படி நிகழும்.

"அதெல்லாம் நடை முறை இல்லை, நான் சாதாரண மனுஷன்/மனுஷி, நம்மால் அது முடியாது,  மனது ஏற்றுக் கொள்கிறது ஆனால் செய்யத்தான் முடியவில்லை " என்று சாக்கு போக்கு சொல்பவர்களுக்கு அல்ல.


ஆய் தந்து, அவன், அவ் உரை
    கூறலும் ‘ஐயன், ‘நின் தன்
வாய் தந்தன கூறுதியோ
    மறை தந்த நாவால்?
நீ தந்தது அன்றே நெறியோர்
    கண் இலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர்மேல்
    சலிக்கின்றது என்னோ? ‘

"வாய் தந்தன கூறுதியோ
    மறை தந்த நாவால்?"

வேதம் சொன்ன வாயால், வாய்க்கு வந்த படி பேசலாமா" என்று கேட்கிறான். படித்தால் மட்டும் போதாது, அதற்கு தக வாழவும் வேண்டும்.

இராமாநுஜரை மனதில் வைத்தவர்கள், வேதம் நிலைத்து இருக்கும் படி வாழ்வார்கள்.

அதாவது, நான் இராமானுஜரை வழிபடுகிறேன், அவரை மனதால் எப்போதும் வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது, வேதம் காட்டிய நல் வழியில் வாழவும் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சாதி மத பேதம் இல்லாமல், எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார் இராமானுஜர். அவரை மனதில் வைத்தவர்கள் அப்படி செய்ய வேண்டும் என்பது மறைமுக கட்டளை.

முடியுமா என்ன ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_18.html

Tuesday, September 17, 2019

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - காய்சின ஆலம் உண்டாய்

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - காய்சின ஆலம் உண்டாய் 


நமக்கு துன்பம் வரும் போது நாம் இறைவனை ஏசுகிறோம். "கடவுளே உனக்கு கண் இல்லையா,  நீ என்ன கல்லா ?"

ஏதாவது நல்லது நடந்தால் , "நான் பண்ணின பிரார்த்தனை வீண் போகவில்லை, நான் கும்பிட்ட சாமி நல்ல சாமிதான்" என்று  சாமிக்கு சான்றிதழ் வழங்குகிறோம்.

உங்கள் ஏச்சினாலும் , புகழ்ச்சியாலும் இறைவனுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லம். நீங்கள் புகழ்ந்தால் அவன் உடனே எல்லோரிடமும் சென்று நீங்கள் புகழ்ந்ததை சொல்லி மகிழப் போவதும் இல்லை, நீங்க திட்டினால் அதற்காக அவன் மனம் வருத்தப் போவதும் இல்லை.

உங்களுக்கு பொழுது போகவில்லை. ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

மணிவாசகர் சொல்கிறார் "நான் ஏசினாலும், புகழ்ந்தாலும் அது என் பிழைதான். நீ அதை எல்லாம் பெரிது பண்ணாமல் என்னை காப்பாற்றி கடையேற்றுவாய் . அமுது வந்த போது, அதில் உனக்கும் ஒரு பங்கு வந்திருக்க வேண்டும். அதை விடுத்து, நீ விஷத்தை உண்டாய். உனக்கு அமுதும், விஷமும் ஒன்றுதான். எனவே, என் ஏச்சையும், புகழையும் ஒன்றாகக் கொண்டு, தேவர்களை காத்தது போல என்னையும் காப்பாத்து "

என்று குழைந்து  வேண்டுகிறார்.

பாடல்


ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக்
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே.


பொருள்


ஏசினும் = ஏசினாலும்

யானுன்னை = யான் உன்னை

யேத்தினும் = ஏத்தினும், புகழ்ந்தாலும்

என்பிழைக்கே = என் பிழையினால்

குழைந்து = மனம் வருந்தி

வேசறு வேனை = துன்பப் படுவேனை

விடுதிகண்டாய் = விடுதலை அடையச் செய்வாய்

செம்பவள  = சிவந்த பவளம்

வெற்பின் = மலையின்

தேகடை யா = போல தேகம் உடையவனே

யென்னை  = என்னை

ஆளுடையாய் = ஆளுகின்றவனே

சிற் றுயிர்க் கிரங்கிக் = சிறிய உயிர்களுக்கு இரங்கி, இரக்கப் பட்டு (சிறிய உயிர் = தேவர்கள்)

காய்சின = பொங்கி வந்த

ஆலமுண்டாய் = ஆலகால விஷம் உண்டாய்

அமுதுண்ணக் கடையவனே. = அமுது உண்ண உடமை உள்ளவனே

அமுது நஞ்சு எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். நாம் தான் கிடந்து அலட்டிக் கொள்கிறோம்....கோவிலுக்குப் போய் அவன் பெயரில் அர்ச்சனை செய்வதும்,  ஆராதனை செய்வதும், அபிஷேகம் செய்வதும், மொட்டை அடிப்பதும் என்று.  இதை எல்லாம் பற்றி அவன் கவலைப் படுவதே இல்லை.

அமுதம் எங்கே. உலகை அழிக்கும் விஷம் எங்கே. அதற்கு பதில் இதை உண்டவன், இதை எல்லாம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவா போகிறான்.

எதற்கு இந்த ஆட்டம் ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_17.html

Monday, September 16, 2019

திருக்குறள் - பொறுமை - நிறையுடைமை

திருக்குறள் - பொறுமை - நிறையுடைமை 


நல்ல பேர் எடுப்பது என்பது ஒன்று, எடுத்த பேரை தக்க வைத்துக் கொள்வது என்பது மற்றொன்று.

பேர் எடுப்பதைவிட அதை தக்கவைத்துக் கொள்வது கடினமான செயல்.

எல்லோருக்கும் கொஞ்சம் நல்ல பெயர் இருக்கும். அன்பானவர்/ள் , யாருக்கும் உடனே உதவி செய்பவர்/ள், திறமையானவர்/ள், பொறுப்பானவர்/ள் என்று ஏதோ ஒரு விதத்தில் நல்ல பேர் இருக்கும்.

அந்த நல்ல பேர் நிலைக்க வேண்டும் என்றால், பொறுமை என்ற குணத்தை எப்போதும் கடை பிடிக்க வேண்டும்.

நல்ல பேருக்கும் , பொறுமைக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கு.

ஏதோ ஒரு நொடியில், யாரோ ஒன்றை தவறாக சொன்னார்கள், அல்லது செய்தார்கள் என்றால், நிதானம் தவறி நாம் ஒன்றை செய்து விடக் கூடும், அல்லது வாய் தவறி வார்த்தை வந்து விடலாம். நாம் அப்படி பொறுமை இழந்து ஏதேனும் செய்தால், சொன்னால், அது, நாம் இதுவரை சேர்த்து வைத்த நல்ல பெயரை அழித்து விடும்.

"அவரா அப்படி சொன்னார்/செய்தார்? அவர் அப்படி செய்ய மாட்டாரே, நம்ப முடியலியே..." என்று உலகம் சொன்னாலும், அந்த ஒரு செய்கை, சொல் எப்போதும் நம் மீது ஒரு கறையாக இருந்து கொண்டே இருக்கும்.  ஒரு முறை தவறு நிகழ்ந்து விட்டால், பின் அதை மாற்றுவது கடினம்.

ஒரு முறைதான் இராமன் மறைந்து நின்று அம்பு எய்தான். யுகம் எத்தனை ஆனால் என்ன?  அந்த கறை போகிறதா?

பாடல்


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

பொருள்

நிறையுடைமை = நிறைந்த தன்மை, உயர்வான குணங்கள் நிறைந்து இருக்கும் தன்மை

நீங்காமை = ஒருவனை விட்டு நீங்காமல் இருக்கும்படி

வேண்டின் = விரும்பினால்

பொறையுடைமை = பொறுமையுடன் இருத்தல்

போற்றி = போற்றி, சிறப்பாக, உயர்வாக,

ஒழுகப் படும் = கடை பிடிக்க வேண்டும்

ஒழுகுதல் என்றால் விடாமல் கடை பிடித்தல் என்று பொருள்.  ஏதோ ஒரு சமயம் செய்தோம், இன்னொரு சமயம் விட்டு விட்டோம் என்று இருக்கக் கூடாது.

போன மாதம், ஆறாம் தேதி நான் பொறுமையாக இருந்தேன் என்று சொல்லிப்  பயன் இல்லை. எப்போதும் பொறுமையை கடை பிடிக்க வேண்டும்.

அப்படி கடை பிடிக்காவிட்டால், நிறையுடைமை நீங்கி விடும்.

பொறுமை , நமது மற்ற நல்ல குணங்களை கட்டி சேர்த்து வைக்கும் அரண் போன்றது என்பது பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_16.html

Sunday, September 15, 2019

திருக்குறள் - பொறுமை - வலிமை

திருக்குறள் - பொறுமை - வலிமை 


பொறுமை நல்லது என்கிறார் வள்ளுவர். அதுவே தலையாய அறம் என்கிறார்.

நமக்கு தீங்கு செய்பவர்களை எல்லாம் பொறுத்துக் கொண்டே இருந்தால், உலகம் நம்மை கையாலாகாதவன் என்று இகழாதா. மானம், ரோசம், சூடு, சொரணை இல்லாதவன் என்று நம்மை பார்த்து சிரிக்காதா. அப்படி ஊர் சிரிக்க வாழும் வாழ்க்கை எப்படி சிறந்த அறம் ஆகும் என்று வள்ளுவரிடம் கேட்டபோது சொன்னார்,

"அப்படி அல்ல தம்பி. ஒருவன் உனக்கு தீங்கு (மிகை) செய்கிறான் என்றால் அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நினைப்பது எல்லோரும் செய்வது. அதில் என்ன பெரிய பெருமை இருக்கிறது. ஒருவன் உனக்கு தீங்கு செய்கிறான் என்றால் அதை பொறுத்துக் கொள்ளத்தான் பெரிய வலிமை வேண்டும். உடல் வலியை விட மன வலிமை வேண்டும்"

"ஐயா, அதெல்லாம் சரி. பல்கலைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன பெருமை. அவன் மீண்டும் நாளை இன்னொரு தீங்கு செய்வான். அவன் செய்வதைப் பார்த்து இன்னொருவன் செய்வான். போகிற வருகிறவன் எல்லாம் எனக்கு தீங்கு செய்வார்களே. இதை எப்படி தடுப்பது? என்று கேட்டேன்.

"நீ தவறாக உலகை எடை போடுகிறாய். பொறுமையாய் இருப்பவனை உலகம் எளியவன் என்று எடை போடாது. இவ்வளவு செய்த பின்னும் ஒருவன் பொறுமையாய் இருக்கிறான் என்றான் அவனுடைய நல்ல உள்ளத்தை, அவனுடைய சகிப்பு தன்மையை , உறுதியான உள்ளத்தை உலகம் பாராட்டும். அவனுக்கு தீங்கு செய்பவர்களை உலகம் தண்டிக்கும்" என்று சொல்லி விட்டு   அதற்கு ஒரு உதாரணமும் தந்தார்.

"உலகிலேயே பெரிய வறுமை எது என்றால், வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க முடியாத  வறுமைதான். அது போல, உலகிலேயே மிகப் பெரிய பலம் எது என்றால், முட்டாள்கள் நமக்கு செய்யும் தீமையை பொறுத்துக் கொள்ளுதல்"  என்றார்.

பாடல்

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


பொருள்


இன்மையுள் = இல்லாமையில் , வறுமையில்

இன்மை = இல்லாதது (வறுமையிலும் வறுமை)

விருந்தொரால் = விருந்தை விலக்குதல் (ஓரல் விலக்குதல் )

வன்மையுள் = வலிமையில்

வன்மை = பெரிய வலிமை

மடவார்ப் = முட்டாள்களின்

பொறை = (செயல்களை) பொறுத்தல்

இது கொஞ்சம் ஏற்றுக் கொள்ள கடினமான செய்திதான்.

அப்படி யாராவது வாழ்ந்தார்களா ? கதையாவது இருக்கிறதா என்றால் ...

இராமனுக்கு கைகேயி செய்த கொடுமையை விடவா பெரிய கொடுமை இருக்க முடியும்.  காட்டில் படாத பாடு பட்டான். மனைவியை இழந்தான். அரக்கர்கள்  எப்போதும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்.

எல்லாம் முடிந்து, இராவண வதம் முடிந்து, இறுதியில் தசரதன் சொர்க்கத்தில் இருந்து வருகிறான். இராமனைப் பாராட்டி "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்" என்கிறான்.

இராமன் என்ன கேட்டான் தெரியுமா ?


‘ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று
    உரை ‘என, அழகன்,
‘தீயள் என்று நீ துறந்த என்
    தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியுமாம் வரம்
    தருக ‘எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன
    உயிரெலாம் வழுத்தி.


"நீ தீயவள் என்று துறந்த என் தெய்வமாம் கைகேயியும், பரதனும் எனக்கு தாயும், தம்பியாக வேண்டும். அந்த வரத்தைத் தருவாய் " என்று கேட்டான்.

அதைக் கேட்டு உலகம் எல்லாம் "ஆஹா" என்று வாய் திறந்து ஆச்சரியத்தில் வாழ்த்தியது இராமனை.

இராமனை யாரும், இகழவில்லை.

கைகேயி உன் மனைவியாக வரம் தா என்று  கேட்கவில்லை. அவள் எனக்கு மீண்டும் தாயாக வேண்டும் என்று வேண்டினான்.

அதுவும் எப்படி, "என் தெய்வம்" என்கிறான்.

முடியுமா?

நாட்டைப் பறித்துக் கொண்டு, காட்டுக்கு விரட்டிய அந்த பெண்ணை, "தெய்வம்" என்று கூறுகிறான் இராமன்.

இராமன் கடவுள், "நான் சாதாரண மனுஷன்/மனுஷி" என்று சொல்லிக் கொள்ளலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பது மறை


இங்கே இருக்கும் போதே தெய்வ நிலையை அடையலாம் என்கிறார் பேராசான்.

இராமன் அளவுக்கு முடியாவிட்டாலும்,  முடிந்த வரை பொறுமை என்ற நல்ல குணத்தை  கடை பிடிக்கலாமே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_15.html

Saturday, September 14, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை


வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். அதற்கு திரி திரித்து போடுவார்கள். பஞ்சில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை எடுத்து அதை திரியாக திரித்து , எண்ணெயில் நனைத்து விளக்கு ஏற்றுவார்கள்.

ஒரே பஞ்சை போட்டால் என்ன? எரியாதா ?

எரியும். ஆனால் சீக்கிரம் கரிந்து விடும்.

இரண்டு அல்லது மூன்று பஞ்சை சேர்த்து திரிக்கும் போது, அந்த திரிகளுக்கு நடுவில் ஒரு மெல்லிய குழாய் போன்ற அமைப்பு உருவாகும். அதன் மூலம் எண்ணெய் வேகமாக மேலேறும். தமிழில் தந்துகி கவர்ச்சி என்பார்கள். ஆங்கிலத்தில் capillary effect என்று சொல்லுவார்கள்.

எப்படி திரி திரிப்பதால் எண்ணெய் நன்றாக மேலேறி வருகிறதோ, அது போல உண்மை என்ற எண்ணெய் மேலேறி வந்து உலகுக்கு எல்லாம் வெளிச்சம் காட்ட வேதத்தையும், தமிழையும் திரித்து உலகுக்கு  அளித்த பொய்கை ஆழ்வாரின் பாசுரங்களை மனதில் எப்போதும் வைத்திருக்கும் இராமானுஜன் , அவரே என் தலைவன், இறையவன் என்று அமுதனார் பாடுகிறார்.


பாடல்


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள்

வருத்தும்  = வருத்தம் தருகின்ற

புறவிருள் = புற இருள்

மாற்ற = மாற்ற, போக்க

எம் பொய்கைப்பி ரான் = பொய்கை பிரானான பொய்கை ஆழ்வார்

மறையின் = வேதத்தின் 

குருத்தின் = வெளிப்படும் உண்மை

பொருளையும் = அதன் பொருளையும்

செந்தமிழ் = தமிழ்

தன்னையும் = அதையும்

கூட்டி = சேர்த்து

ஒன்றத் = ஒன்றாக

திரித்தன் றெரித்த = திரித்து எரித்த, ஏற்றிய

திருவிளக் கைத் = திருவிளக்கை

தன் = தன்னுடைய

திருவுள்ளத்தே = மனதில்

இருத்தும் = எப்போதும் வைத்திருக்கும்

பரமன் = தலைவன்

இராமா னுசனெம் இறையவனே. = இராமானுசன் எம் இறையவனே

புற இருள் என்றால் என்ன ?

வெளியே ஏதோ இருக்கிறது என்று நாம் தேடி அலைகிறோம். இன்பம், செல்வம், புகழ், செல்வாக்கு, நட்பு, உறவு, என்று எதை எதையோ தேடி அலைகிறோம். கடைசியில் கையில் மிஞ்சுவது ஒன்றும் இல்லை. என்ன வேண்டும் என்றே தெரியாமல் தேடுகிறோம்.  எதைத் தொலைத்தோம் என்று தெரியாமலே தேடுகிறோம்.

எனவே, அதை இருட்டில் தேடுவது போல என்று புற இருள் என்றார்.

விளக்கை ஏற்றின்னால், இருள் அகன்று விடும்.

இங்கே இருள், வெளிச்சம் என்பது அறியாமை, ஞானம் என்பதைக் குறிக்கும்.

இராமானுஜர் நூற்றந்தாதியில் இப்படி பல அருமையான பாடல்கள் இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

நல்ல விஷயங்களுக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கினால்தான் என்ன?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_72.html

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பிழையெனக் கருதி னாயேல்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பிழையெனக் கருதி னாயேல்


இந்த உடம்பு நோய்க்கு இடமான ஒன்று. நோய் உள்ளே இருந்து கொண்டே இருக்கிறது. சமயம் பார்த்து வெளியே வருகிறது.

நோய்கள் நிறைந்த இந்த உடலை மெய் என்று கருதி, அதற்கு சோப்பு, எண்ணெய் , வாசனை திரவியங்கள் என்று போட்டு அழகு பார்க்கிறோம்.

அத்தனையும் பொய்.

உடம்பாவாவது ஏதோ நமக்கு உதவி செய்கிறது. வேலை செய்கிறது. புலன் இன்பங்களைத் தருகிறது.

ஆனால், இந்த தீயவர் சகவாசம் இருக்கிறதே, அதனால் என்ன பயன்? அத்தனையும் தீமையே. ஆனால், அதைத்தான் நாம் நாள் தோறும் கேட்கிறோம். தீயவர்கள் என்றால் ஏதோ கொலை களவு செய்பவர்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்

"பேயர்தாம் பேசும் அந்த பேச்சு" என்று.

அது என்ன பேயர் தாம் பேசும் பேச்சு?

பேயின் குணங்கள் என்ன ?

இருட்டில் மறைந்து இருக்கும். தன்னை வெளிப்படுத்தாது.

பிடித்தவர்களை விடாது.

தான் வெளிப்படாமல் மற்றவரின் உடம்பில் இருந்து கொண்டு அவர்கள் மூலம்  செயல்படும்.

அப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் பேயர்கள் .

நான் சொல்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள். அவர் சொன்னார் , இவர் சொன்னார் என்று  யாருக்கு பினாலாவது மறைந்து கொள்வார்கள். அது மட்டும் அல்ல,  தாங்கள் கண்டதே காட்சி , கொண்டதே கோலம் என்று சாதிப்பார்கள்.  எதையும் ஆராயும் அறிவு கிடையாது.

"நோய்க்கு இடமான இந்த உடலையும், பேயர்களின் பேச்சையும் நீ பிழை என்று கருதினால், அவற்றை விட்டு விட்டு, திரு வல்லவாழ் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமான் பெயரைக் கூறி, அவனோடு சேர்ந்து கொள் "

என்பது பாசுரம்.



பாடல்

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.


பொருள்

நோயெலாம்  = ஒண்ணு இரண்டு இல்லை, எல்லா நோயையையும்

பெய்ததோர் = சேர்த்த ஒரு

ஆக்கையை = உடலை

மெய்யெனக் = உண்மை என்று

கொண்டு = மனதில் நினைத்து

வாளா = ஒன்றும் செய்யாமல்

பேயர்தாம் = பேயர்களின்

பேசுமப் = பேசும் அந்தப்

பேச்சை = பேச்சை

நீ = நீ

பிழையெனக் = பிழை என்று

கருதி னாயேல், = நினைத்தால்

தீயலா  = தீ உலா

வெங்கதிர்த் = சிவந்த கதிர்களை உடைய  (சூரியனாய்)

திங்களாய் = குளிர் நிலவாய்

மங்குல்  = மேகம் நிரம்பிய

வா னாகி நின்ற = வானமாகி விரிந்து நின்ற

மாயனார் = மாயனார்

வல்லவாழ் = திருவல்லவாழ்

சொல்லுமா = சொல்லுகின்ற

வல்லையாய் = வலிமை உடையவனாய்

மருவு நெஞ்சே. = சேர்ந்து கொள் நெஞ்சே


இறைவனுடன் சேர என்ன பயம்? வலிமை உடையாய் என்று ஏன் கூறுகிறார்?


உடல் பற்று இருக்கிறது.

உறவின் மேல் பற்று இருக்கிறது.

இவற்றை எல்லாம் விட பயமாக இருக்கிறது. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்,இந்த உறவை எல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமே, இந்த சுகத்தையெல்லாம்  விட வேண்டி இருக்குமே என்ற பயம்.

மற்றவர்களுக்கு எதுவும் ஆகி விட்டால், அவர்களோடு உள்ள உறவு விட்டுப் போய் விடுமே.  கணவன், மனைவி, பிள்ளைகள்...எப்படி விட முடியும்?

இறுக பற்றிக் கொண்டு இருக்கிறோம்.

"பயப்படாமல் விட்டு விட்டு வா...விடுகின்ற வலிமை உனக்கு இருக்கிறது....அந்த வலிமை வர வேண்டும் என்றால்  ஒன்றே ஒன்று தான் வேண்டும்,  இவை எல்லாம் பிழை என்று உணர வேண்டும்"

என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

முதல் படி

உடல் பற்றை விடுவது

இரண்டாவது படி

உறவுகள் பிழை என்று அறிதல்

மூன்றாவது

அவன் பெயரைச் சொல்லுதல்

என்கிறார்.


ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே

என்பார் பட்டினத்தார்.

இது காலாகாலத்தில் புரிந்தால் நல்லா இருக்கும்...


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_14.html

Friday, September 13, 2019

திருக்குறள் - பொறுமை - மறப்போம், மன்னிப்போம்

திருக்குறள் - பொறுமை - மறப்போம், மன்னிப்போம் 


முந்தைய குறள் பற்றி சில வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பகிர்ந்து இருந்தார்கள்.

ஒரு முக்கிய குறிப்பு.

இங்கே பொறுமை என்பது, பொறுமையாக ஒரு வேலையைச் செய்வதை குறிப்பது அல்ல. பொறுமையாக சாலையை கடப்பது, பொறுமையாக ஒரு காரியத்தை செய்வது, மரம் வளர்ந்து கனி கொடுக்கும் வரை பொறுமையாக இருப்பது...அந்தப் பொறுமையைப் பற்றி திருவள்ளுவர் கூறவில்லை.

இங்கே பொறுமை என்பது , பொறுத்துக் கொல்வதைப் பற்றியதாகும்.  நமக்கு தீமை செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுதல் பொறுமை என்ற அர்த்தத்தில் பார்க்க வேண்டும்.

அடுத்த குறளுக்குப் போவோம்.

சிலர், தங்களுக்கு கெடுதல் செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுவார்கள் ஆனால், "அவனுக்கு ஆண்டவன் கொடுப்பான், எனக்கு கெடுதல் செய்தவன் நல்லா இருக்க மாட்டான்" என்று மனதுக்குள் கிடந்து புளுங்குவார்கள். தாங்களே சென்று கெடுதல் செய்யாமல் பொறுத்துக் கொண்டாலும், தங்களுக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கேடு வரவேண்டும் என்று மனதில் விரும்புவார்கள்.

அப்படி அவர்களுக்கு கேடு வந்து விட்டால், "பத்தியா , நான் நினச்சேன், எனக்கு  கேடு செய்தவனுக்கு ஆண்டவனே பார்த்து கொடுத்தான் " என்று மனதுக்குள்  மகிழ்ச்சி அடைவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார்,

"நமக்கு தீமை செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுதல் நல்லது தான். ஆனால், அந்த தீமையை மறந்து விடுவது அதைவிட நல்லது"

என்று.

பாடல்


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின்று நன்று


பொருள்

பொறுத்தல் = பொறுத்துக் கொள்ளுதல்

இறப்பினை  = மிகையான தீய செயல்களை

என்றும் = எப்போதும்

அதனை = அந்த தீய செயல்களை

மறத்தல் = மறந்து விடுதல்

அதனின்று = அதை விட

நன்று = நல்லது

மனதுக்குள் வைத்து பொறுமிக் கொண்டே இருந்தால், அது நமக்குத்தான் கேடு விளைவிக்கும்.

"சரி கழுத , விட்டுத் தள்ளு" என்று உதறி விட்டு மேலே செல்ல வேண்டும்.

மாறாக, "இப்படி செய்து விட்டானே, இப்படி செய்து விட்டானே" என்று மனதுக்குள் வைத்து  பொருமிக் கொண்டு இருந்தால், அது நம் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கும்.

மறந்து விடுதல் , நல்லது என்கிறார்.

"ஆமா, இப்படி நமக்கு தீமை செய்தவனை எல்லாம் மன்னித்தும், மறந்தும் இருந்தால், எல்லோரும் நம் தலையில் மிளகாய் அரைத்து விட்டுப் போய் விடுவார்கள். நாம் சரியான இளிச்ச வாயர்களாக இருக்க வேண்டியதுதான்...இதெல்லாம்  சொல்ல/கேட்க நல்லா இருக்கும், நடை முறைக்கு  சரி வருமா "

என்று உங்கள் சார்பாக வள்ளுவரிடம் கேட்டேன்.

அதுக்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_13.html





Thursday, September 12, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மருவு நெஞ்சே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மருவு நெஞ்சே 


நமக்கு உறவுகள் மேல் ஒரு பிடித்தம் உண்டு. தாய், தந்தை, தமக்கை, தமையன், நண்பர், உற்றார், உறவு என்று பெரிய கூட்டமே வைத்து இருக்கிறோம்.

இதில் யாருக்காவது ஏதாவது என்றால் நமக்கு துன்பமாக இருக்கிறது.

"என் தாய்/தந்தை இறந்த துக்கத்தை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை" என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் உண்டு.

தமிழில் உள்ள வார்த்தைகளை உற்று நோக்கினால் ஒன்று தெரியும்.

தந்தையார், தாயார், தமக்கையார், தமையனார் என்ற சொற்களை உற்று நோக்குங்கள்.

தந்தை + யார்

தாய் + யார்

தமக்கை + யார்

தமையன் + யார்

என்று ஒரு கேள்வி அதில் தொக்கி நிற்கும்.

இந்த உடலுக்கு இவர் தந்தை, தாய், தமையன், தமக்கை...அவ்வளவுதான்.

இதற்கு முன் எத்தனை உடலோ? எத்தனை தாயோ, எத்தனை தந்தையோ...

யாரை தந்தை என்று சொல்லுவது ? யாரை தாய் என்று சொல்லுவது?

முப்பது நாப்பது வருட தொடர்பு...அவ்வளவுதான்.

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,

வாழ்வில் ஒரு கட்டம் வரும். இந்த தந்தை, தாய், சுற்றம் எல்லாம் வியர்த்தம் என்று நொந்து கொள்ளும் நாளும் வரும். இந்த பந்தங்கள் பெரிய சுமை என்று மனதில் தோன்றும். அப்படித் தோன்றும் பொழுது, இந்த உலகில் எனக்கென்று யார் இருக்கிறார்கள் என்ற ஆயாசம் தோன்றும். ஒரு மாபெரும் தனிமை தோன்றும். அப்போதாவது, வல்லை வாழ் அந்தப் பெருமாளின் பெயரைச் சொல்ல இசைவாய் நெஞ்சே என்று தன் மனத்திடம் கூறுகிறார்.

பாடல்

தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற 
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ  பழியெனக் கருதி னாயேல் 
அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய 
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா  வல்லையாய் மருவு நெஞ்சே


பொருள்


தந்தை = தந்தை

தாய் = தாய்

மக்களே = பிள்ளைகள்

சுற்றம் = சுற்றம்

மென் = என்

உறுற்றுவர் = உறவினர்

பற்றி நின்ற  = என்று இந்த பந்த பாசங்களை பற்றி நின்று

பந்தமார் = பந்தங்கள் நிறைந்த

வாழ்க்கையை = இந்த வாழ்க்கையை

நொந்து = வருந்தி

நீ  = நீ

பழியெனக் கருதி னாயேல்  = பழி, குற்றம் என்று கருதினால்

அந்தமாய் = முடிவாய்

ஆதியாய் = தொடக்கமாக

ஆதிக்கும் ஆதியாய் = தொடக்கத்திற்கு முன்னால் உள்ள தொடக்கமாய்

ஆய னாய = ஆயர் குலத்தில் தோன்றியவனான

மைந்தனார் = மைந்தன்

வல்லவாழ் = திரு வல்லவாழ் என்ற திருப்பதியை

சொல்லும் ஆ  = வாயால் சொல்லினால்

வல்லையாய் = வலிமை உடையவனாவாய்

மருவு நெஞ்சே = ஏற்றுக் கொள் நெஞ்சே. ஒன்றாகிவிடு நெஞ்சே

இந்த உறவு பிடிப்பு தளரும். உறவுகளின் உண்மை ஒரு நாள் புரியும்.

எல்லாம் விட்டு தனித்து நிற்பாய்.

அப்போது, உன் சக்தியெலாம் கூட்டி, அவன் பெயரைச் சொல்லு

"பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ  பழியெனக் கருதி னாயேல் "

பந்தம் நிறைந்த வாழ்க்கையை நொந்து, வருந்தி, பழி என்று கருதினாயேல்

உங்களின் உறவுப்  பிடிப்புகளை கொஞ்சம் தளர விடுங்கள்.

நம் வாழ்கை மிக மிக சிறிது காலம்தான்.

அதிலும் இந்த உறவுகள் வருவதும் போவதும் அதிலும் சிறிய காலம் தான்.

20 அல்லது 25 வயதுக்கு மேல் கணவன்/ மனைவி வருகிறார்கள் நம் வாழ்வில்.  எத்தனை நாள் நம்மோடு இருப்பார்களோ. நாம் அவர்களோடு இருப்போமோ?

அப்புறம் பிள்ளைகள் வருகிறார்கள். கொஞ்சம் காலம். அவர்கள் திருமணம் ஆன பின்  பிரிந்து போய் விடுகிறார்கள்.

இந்த உறவுகளுக்கா இத்தனை சிரமம்?

நொந்து கொள்ளும் நாள் வரும் முன் யோசனை செய்யுங்கள்.

வெள்ளம் வந்த பின்பா கரை கட்டுவது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_12.html


Wednesday, September 11, 2019

திருக்குறள் - பொறுமை - அகழ்வாரை

திருக்குறள் - பொறுமை - அகழ்வாரை 


முந்தைய சில நாட்களில், பயனில் சொல்லாமை பற்றி சிந்தித்தோம்.

அடுத்தது பொறுமை பற்றி வள்ளுவப் பேராசான் என்ன கூறுகிறார் என்று சிந்திப்போம்.

பொறுமை என்ற குணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு.

யாரிடமும், யாருக்கும் பொறுமை இல்லை.

கணவன் மனைவி உறவில் பொறுமை இல்லை. வார்த்தைகள் வந்து விழுகிறது. கோபம் தெறிக்கிறது. உறவில் விரிசல் ஏற்படுகிறது.

பெற்றோர் பிள்ளைகள் உறவில் பொறுமை இல்லை. சகிப்பு தன்மை இல்லை.

தெருவில் வண்டி ஒட்டிக் கொண்டு போகிறவர்கள் மீது கோபம். பொறுமை இல்லாமல் வண்டி ஒட்டுகிறோம்.

பொறுமை என்பது தலையாய குணம் என்கிறார் வள்ளுவர்.

நமக்கு கெடுதல் செய்தவர்கள், நம்மைப் பற்றி தவறாக சொன்னவர்கள் மீது பொறுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.

பாடல்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பொருள்


அகழ்வாரைத் = தோண்டுபவரை, பள்ளம் பறிப்பவர்களை

தாங்கும் = தாங்குகின்ற

நிலம்போலத் = நிலத்தைப் போல

தம்மை = தம்மை

இகழ்வார்ப் = இகழ்பவர்களை

பொறுத்தல் = பொறுத்துக் கொள்ளுதல்

தலை = தலை சிறந்த அறம்


"நான் அவனுக்கு எவ்வளவோ செய்தேன், எனக்கு எதிராக, என்னைப் பற்றி இழிவாக பேசிவிட்டானே " என்று குமுறுபவர்கள் ஒரு வகை.

"என் உப்பை தின்றுவிட்டு எனக்கு துரோகம் செய்து விட்டானே" என்று வருந்துதல் இன்னொரு வகை.

ஒன்று சொல், இன்னொன்று செயல்.

வள்ளுவர் இரண்டையும் எப்படி சேர்கிறார் என்று பாருங்கள்.

"இகழ்வார் பொறுத்தல்" என்ற போது இகழ்ச்சியாக பேசியதை குறிப்பிடுகிறார்.

"அகழ்வாரை தாங்கும் நிலம் போல " என்று சொல்லும் போது தவறான செயல்களை செய்வதை குறிப்பிடுகிறார்.

நிலமானது நமக்கு இருக்க இடம், நாம் உண்ண காய் கனிகள் வளர தோட்டம், என்று எல்லாம் தருகிறது.

அதை கடப்பாரை கொண்டு குத்தினாலோ, மண்வெட்டி கொண்டு வெட்டினாலோ, குண்டு வைத்து தகர்த்தாலோ, அப்படி செய்பவர்களைக் கூட அது தண்டிப்பதில்லை. மாறாக அவர்களை தாங்குகிறது.

நம்மை பற்றி தவறாக , இழிவாக பேசுபவர்களை, செய்பவர்களை பொறுத்தால் மட்டும் போதாது  அவர்களுக்கு தீங்கு வராமல் தாங்க வேண்டும்.  தீங்கு செய்பவர்களை தாங்கும் நிலம் போல.



தன்னை காட்டுக்கு அனுப்பிய கைகேயியை மன்னித்து விடும்படி தயரதனிடம் , இராமன் வேண்டினான்.

அது பொறுமை.

அந்த அளவுக்கு நம்மால் போக முடியாவிட்டாலும்,  பொறுமை பற்றி சிந்தியுங்கள்.

எதற்கும் உடனடியாக சுவற்றில் எறிந்த பந்து போல பதில் சொல்ல முயலாதீர்கள்.  ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு ஒன்று சொன்னால், அதற்கு பதில் மேலும் உணர்ச்சியை காட்டுவது அல்ல.

பொறுமையை கடை பிடியுங்கள்.

இதுவரை எப்படியோ. இன்றில் இருந்து பொறுமையாக இருக்கப் பழகுங்கள்.
தீமை செய்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள்.

இதெல்லலம் நம்மால் முடியாது என்ற பழைய பல்லவியையே பாடாமல், பொறுமை பற்றி மேலும் சிந்தியுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_11.html

Monday, September 9, 2019

சகலகலாவல்லி மாலை - சொல்லும், பொருளும், பயனும்

சகலகலாவல்லி மாலை - சொல்லும், பொருளும், பயனும் 


கடந்த சில நாட்களாக பயனில் சொல்லாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை பற்றி சிந்தித்தோம்.

சொல்லுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம். சும்மா பேசிவிட்டுப் போக வேண்டியதுதானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், சொல்லின் பெருமை தெரியாமல் நாம் அதை விரயப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சிறு பிள்ளைக்கு வைரக் கல்லுக்கும், கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதது போல.

சொல் என்பது பல பரிமாணங்களை கொண்டது.

முதல் பரிமாணம், அதன் வரி வடிவம். ஒரு சொல் இந்த வடிவில் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. சொல்லின் வரி வடிவம் மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்த தமிழின் வரி வடிவம் வேறு, இப்போது இருக்கும் தமிழின் வரி வடிவம் வேறு.

இப்போது வள்ளுவர் வந்தால், அவரால் நமது திருக்குறளை வாசிக்க முடியாது. வரி வடிவம் மாறி விட்டது.

அடுத்த பரிமாணம், அதன் ஒலி வடிவம். ஓசை வடிவம். ஒரு சொல்லை சொல்லும்போது உண்டாகும் ஓசை. தமிழைப் பொறுத்தவரை அது நிறைய மாறவில்லை.

மூன்றாவது பரிமாணம், அந்த ஒலி குறிப்பிடும் பொருள். ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு பொருள் பற்றியே  பிறக்கிறது.

நான்காவது பரிமாணம், அந்த ஒலியின் உணர்ச்சி வடிவம்.

உதாரணமாக, "அம்மா" என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

அதன் வரி வடிவம், நாம் எழுதுவது.

அதன் ஒலி வடிவம், அது எழுப்பும் சப்தம்.

அதன் பொருள் வடிவம், அம்மா என்ற அந்தப் பெண்.

நான்காவதாக, அம்மா என்று சொல்லும் போது ஏற்படும் உணர்ச்சி.

ஒலி வந்து விட்டால், வரி வடிவத்தை விட்டு விடலாம்.

பொருள் வந்து விட்டால், ஒலியை விட்டு விடலாம்.

உணர்வு வந்துவிட்டால், பொருளை விட்டுவிடலாம்.

நாம் சொல்லும் சொற்கள் பொருள் உணர்த்தி நிற்கின்றன. உணர்வுகளை கொண்டு வரலாம்.

ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், சொன்னால் சொன்ன படி நடக்கும் சக்தி சொல்லுக்கு உண்டு.

மந்திரம் என்பது என்ன?

மனதில் நினைப்பதை ஸ்திரமாக நமக்குத் தருவது மந்திரம்.

மந்திரங்களுக்கு அந்த வலிமை உண்டு.

உயர்ந்தவர்கள், சான்றோர்கள், கற்புடைய பெண்களுக்கு அந்த ஆற்றல் உண்டு.

நளாயினி, "சூரியனே உதிக்காதே" என்றாள். உதிக்கின்ற சூரியன் நின்றது என்று வரலாறு சொல்கிறது.

கம்ப இராமாயணத்தில், சீதை கூறுவாள்,  "இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன்" என்று.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள் 

சொல்லுக்கு அவ்வளவு வலிமை. சொல்லினால் இல்லை இல்லாத இந்த உலகம் அனைத்தையும்  சுட்டு பொசுக்கி விடுவேன் என்கிறாள்.

விவிலியம் (பைபிள்) சொல்கிறது

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;  (யோவான் 1:1-18)

என்று.

முதலில் வார்த்தை இருந்தது. அதில் இருந்துதான் அனைத்தும் உண்டானது என்கிறது.

ஓம்
நாராயணாய நம
நமச்சிவாய நம

என்று மந்திரங்களை உச்சாடனம் செய்து பலன் பெற்றவர்கள் பலர்.


சகலகலாவல்லி மாலையில் , குமர குருபரர் சொல்லுவார்

"பாட்டும், பொருளும், அது பொருந்தும் பயனும் எனக்கு வரும்படி உன் கடைக்கண்ணால் அருள் செய்வாய் " என்று.


பாடல்


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் 
பயனுமென்பாற் 
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு
தொண்டர் 
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்
வண்ணம் 
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகலகலா
வல்லியே. 



பொருள்


பாட்டும் = பாட்டு (ஒலி வடிவம்)

பொருளும் = பொருளும்

பொருளாற்  = அந்தப் பொருளுக்கு

பொருந்தும்  = பொருத்தமாய் இருக்கும்

பயனுமென்பாற்  = பயனும் என் பால்

கூட்டும் படி = சேரும்படி

நின் கடைக்கணல் = உன்னுடைய கடைக் கண்ணால்

காயுளங் கொண்டு = தாய் உள்ளம் கொண்டு

 தொண்டர்  = தொண்டர்கள்

தீட்டுங் = இயற்றும்

கலைத் = கலை நிறைந்த

தமிழ்த் = தமிழ்

தீம்பா லமுதந் தெளிக்கும் = சுவையான பால் அமுதம் தெளிக்கும்

வண்ணம்  =படி

காட்டும் = காட்டுகின்ற

வெள் ளோதிமப் பேடே = வெள்ளை நிறத்தில் உள்ள அன்னம் போன்றவளே

சகலகலா வல்லியே. = சகலகலா வல்லியே

பயன் தரும் சொல்லை சொல்ல எனக்கு அருள் புரிவாய்  என்கிறார்.


இறைவன் நாத வடிவானவன் என்று நம் இலக்கியம் பேசும்.

இது பற்றி மேலும் சிந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_92.html

திருக்குறள் - சொற்குற்றம் - சொல்லுக, சொல்லற்க

திருக்குறள் - சொற்குற்றம் - சொல்லுக, சொல்லற்க 




எதைச் சொல்லணும், எதைச் சொல்லக் கூடாதுனு எல்லாம் சொல்லிட்டு தலைவர் கடைசியா ஒரு குறள் சொல்றார்.

எதைச் சொல்லணும் - பயனுள்ள சொல்லை

எதைச் சொல்லக் கூடாது - பயனற்ற சொல்லை

அவ்வளவுதாங்க.

பாடல்


சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்

பொருள்

சொல்லுக  = சொல்லுங்கள் என்று  ஒரு கட்டளையே போடுகிறார்.

சொல்லின் = சொற்களில்

பயனுடைய = பயனுள்ளவற்றை

சொல்லற்க = சொல்லாதீர்க்கள்

சொல்லின் = சொற்களில்

பயனிலாச் சொல் = பயனில்லாத சொற்களை


பேசப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டால், நாம் பேசுவதால் மற்றவர்களுக்கு என்ன பயன் என்று அறிந்து கொண்டு பேச வேண்டும். பயன் இல்லை என்றால் பேசக் கூடாது. மௌனம் சிறந்தது.

நம்ம எல்லாம் பேசவே முடியாது  போல இருக்கே.....

ஏன் சொல்லுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்.

காசா பணமா, சும்மா பேசி விட்டுப் போக வேண்டியதுதானே...என்று நாம் நினைப்போம்.

ஏன் என்றால்  நமக்கு சொற்களின் வலிமை புரிவது இல்லை.

ஒரு கழுதையின் கழுத்தில் வைர மாலையை கட்டிவிட்டால், அதற்குத் தெரியுமா  அந்த மாலையின் மதிப்பும், பெருமையும்?

அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும்.

வள்ளுவருக்குத் தெரிந்திருக்கிறது அது வைரம் என்றும்.

எனவே இவ்வளவு மெனக்கிடுகிறார்.

அப்படி சொல்லில் என்னதான் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_9.html

Sunday, September 8, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பொச்சாந்தும் சொல்லார்

திருக்குறள்  - சொற்குற்றம் - பொச்சாந்தும் சொல்லார் 


பயனுள்ள சொல்லை சொல்ல  வேண்டும்.அதுவும் இனிமையாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் எல்லோரும் நகைக்கும்படி ஆகிவிடும் என்றெல்லாம் பார்த்தோம்.

அதெல்லாம் சரிங்க, இந்த பயனுள்ள சொற்களை எப்படி பேசுவது? அதுக்குன்னு ஏதாவது கோர்ஸ் இருக்கா. புத்தகம் ஏதாவது இருக்கா படிக்க? அப்படியே வள்ளுவர் சில புத்தகங்களை சொல்லி இருந்தாலும், அது இந்தக் காலத்துக்கு பொருந்தி வருமா ? என்றெல்லாம் கேள்வி வரும் அல்லவா?

அனைத்து காலத்துக்கும் பொருந்தும்படி அறிவுரை சொல்ல வேண்டும்.

எப்படி சொல்லுவது ?

"மயக்கம் இல்லாத குற்றமற்ற அறிவுடையவர்கள் மறந்தும் கூட பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள்"

என்கிறார்.

புரியலையே....அது என்ன மயக்கம் இல்லாத குற்ற்றமற்ற அறிவு ?

முதலில் பாடலைப் பார்ப்போம்

பாடல்


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்


பொருள்

பொருள் = பயன்,

தீர்ந்த = இல்லாத

பொச்சாந்தும்  = மறந்தும்

சொல்லார் = சொல்ல மாட்டார்

மருள்தீர்ந்த = மயக்கம் இல்லாத

மாசறு = குற்றமற்ற

காட்சி யவர் = காட்சி உடையவர்



மறந்தும் சொல்ல மாட்டார்

சில சமயம் நமக்கு கோபம் வரும் போது ஏதாவது தவறான வார்த்தைகளை பேசி விடுவோம் . சில சமயத்தில்  பயத்தில்,சில சமயம் இலயிப்பில் ஏதாவது மறந்து பேசி விடுவோம்.

இவற்றிற்கு காரணம் என்ன ?

மனதில் எங்கோ ஒரு மூலையில் அழுக்கு, (மாசு) இருக்கிறது. அது நம்மை அறியாமல்  சில நேரங்களில் வெளிப்பட்டு விடுகிறது.

மனதில் குற்றமே இல்லை என்றால், ஒரு போதும் தவறான வார்த்தைகள் வராது அல்லவா ? மனதில் இருந்தால் தானே வாயில் வரும்.

மருள் தீர்ந்த

மயக்கம் இல்லாத என்று பொருள். மயக்கம் என்றால் என்ன ? தண்ணி அடித்துவிட்டு  மயங்கி ,  போதையில் ஏதாவது சொல்லிவிடுவதா என்றால் இல்லை.

நமக்கு உலகில் ஒன்றை அறிந்து கொள்ள முற்படும் போது இரண்டு விதமான  சிக்கலைகள் எழும்.

ஐயம் திரிபு என்ற இரண்டு சிக்கல்கள்.

ஐயம் என்றால் சந்தேகம். எது உண்மை, எது பொய் என்று அறியாமல் கலங்குவது.

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக திடமாக நம்புவது.

கயிறை பாம்பென்று நம்புவது.

செய்தித் தாளில், டிவியில் வருவது எல்லாம் உண்மை என்று நம்புவது.

முன்னோர்கள் சொன்னது எல்லாம் சரி என்று ஏற்றுக் கொள்ளுவது.

சந்தேகமே கிடையாது . நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று சொல்லுவாது.

இது திரிபு.

வாழ்வு நிரந்தரம் என்று நினைப்பது.

செல்வம் எப்போதும் நம்மிடம் இருக்கும் என்று நம்புவது.

கட்டுக் கதைகளை அப்படியே நம்புவது.

இவை எல்லாமே திரிபு.

ஐயமும் திரிபும் சேர்ந்தது மருள் அல்லது மயக்கம்.

உண்மை அறியாமல் இருப்பது.

அந்த மயக்கம் போனால்தான் பொருள் அற்றவற்றை பேசாமல் இருக்க முடியும்.

இல்லை என்றால் லொட லொட என்று எதையாவது பேசிக் கொண்டே இருக்கச்  சொல்லும்.

எனவே அறிவு சரியாக இருக்க வேண்டும். மருள் நீக்கம் பெற வேண்டும்.

மருள் நீங்கினால் மட்டும் போதாது.

அறிவு நன்றாக இருந்தாலும், சில சமயம் அது குறுக்கு சால் ஓட்டும். குயுக்தியாக சிந்திக்கும்.

எனவே மனமும் நன்றாக இருக்க வேண்டும்.

மனதில் குற்றம் இருக்கக் கூடாது.

கோபம், பொறாமை, மதம், மாச்சரியம், காமம், லோபம் போன்றவை இருக்கக் கூடாது.

அறிவும் மனமும் நன்றாக இருந்தால், மறந்தும் பொருள் அற்ற சொற்கள் வாயில் இருந்து வராது.

சிலருக்கு மனம் நன்றாக இருக்கும். அன்பு இருக்கும். காதல் இருக்கும். நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருக்கும். ஆனால் எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது.

சிலருக்கு அறிவு தெளிவாக இருக்கும்.அனுபவம் இருக்கும். இருந்தும் மனம் குறுகிக் கிடக்கும்.

இரண்டும் ஒன்று பட்டவர்கள் பயனற்ற சொற்களை பேச மாட்டார்கள்.

அப்படிப் பட்ட ஆள்களை தேடிக் கண்டு பிடித்து அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

நாமும் , நம்மை அப்படி ஒருவராக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி ஆகச் சொல்லவில்லை, முயற்சி செய்யச் சொல்கிறேன்.

முயற்சிதானே, செஞ்சுட்டு போறது...


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post.html

Saturday, September 7, 2019

கம்ப இராமாயணம் - தீக்குளிப்புக்கு பின் சீதை கூறியது

கம்ப இராமாயணம் - தீக்குளிப்புக்கு பின் சீதை கூறியது 


இராமன் , சீதையை தீயில் இறங்கி அவளுடைய கற்பை நிலை நாட்டச் சொன்னான். சீதையும் செய்தாள். அவள் தீயில் இறங்கி வெளி வந்த பின், அக்கினி, ப்ரம்மா, சிவன், தயரதன் எல்லோரும் வந்தது இராமனிடமும் சீதையிடமும் பேசினார்கள்.

சீதை வாயே திறக்கவில்லை. பின், எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு, வீடணன் கொண்டு வந்த விமானத்தில் ஏறி அயோத்தி நோக்கி செல்லத் தொடங்கினார்கள்.

இது வரை சீதை ஒன்றும் பேசவில்லை.

இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் , என்னை சிபிஐ custody இல் எடுத்து, "உண்மையைச் சொல்லப் போகிறாயா இல்லையா, சீதை என்னதான் பேசினாள் சொல் ...இல்லையென்றால் உன்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடுவோம்" வாசகர்கள் கிளம்பினாலும் கிளம்பலாம் என்ற பயத்தில் இன்று சொல்லி விடுவதாக முடிவு செய்து விட்டேன்.

வருகிற வழியில் இராமன் , சீதைக்கு பல இடங்களை காட்டிக் கொண்டு வருகிறான், சேது பந்தனம், வருணன் சரணாகதி அடைந்த இடம், சுக்ரீவனை சந்தித்த இடம் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வருகிறான்.

சீதை பேசவே இல்லை. மெளனமாக இருக்கிறாள்.

ஒரு புன்னகை சிந்தியதாகக் கூட கம்பன் காட்டவில்லை.

சுக்ரீவன் இருந்த இடத்துக்கு இராமனும், சீதையும் வந்து சேர்கிறார்கள். உபசரிப்பு நடக்கிறது.

அவர்கள் அங்கிருந்து கிளம்பும் இடத்தில் சீதை முதன் முறையாக பேசுகிறாள்.

என்ன பேசினாள் தெரியுமா ?

தீக்குளிப்பு, கற்பு, இராமன் பேசிய சுடு சொல், மற்றவர்கள் பேசிய பேச்சு, வருகிற வழியில் இராமன் சொல்லிக் கொண்டுவந்த கதைகள் எல்லாவற்றையும் கேட்டு விட்டு, சீதை சொல்கிறாள்

"ஐய , இப்போது இவ்வளவு பெரிய வானர வெள்ளத்தோடு நாம் அயோத்தி செல்கிறோம். அதில் ஒரு பெண் கூட இல்லை. அது எனக்கு என்னவோ போல் இருக்கிறது. இங்குள்ள வானர பெண்களையும் நம்மோடு அழைத்துச் செல்லலாம் " என்று கூறுகிறாள்.

நம்ப முடிகிறதா ?

மறந்து விட்டாளா? இல்லை அது ஒரு பெரிய சங்கதி இல்லை என்று விட்டு விட்டாளா ?

இனி அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது என்று விரக்தியில் விட்டு விட்டாளா ....தெரியாது

பாடல்




 கிட்கிந்தை இதுவேல், ஐய!
    கேட்டியால் : எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள
    மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ
    ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை
    ஏற்றுதல் கடன்மைத்து ‘என்றாள்.


பொருள் 

 கிட்கிந்தை = கிட்கிந்தை

இதுவேல், = இதுவாக இருக்குமானால்

ஐய! = ஐயனே

கேட்டியால் : = கேள்

எனது பெண்மை = எனது பெண்மை

மட்கும்தான், = ஒளி மட்டுப் படும்

ஆய வெள்ள = பெரிய வெள்ளம் போன்ற

மகளிர் இன்று ஆகி,= பெண்கள் இல்லாமல் (தோழிகள் இல்லாமல்)

வானோர் = தேவர்கள்

உட்கும் = பயப்படும்

போர்ச் சேனை சூழ = போர் சேனைகள் சூழ

ஒருத்தியே அயோத்தி எய்தின்; = நான் ஒருத்தி மட்டும் பெண்ணாக அயோத்தி அடைந்தால்

கள் கொந்து  = தேன் நிறைந்த

ஆர் குழலினாரை = பூக்களை கொண்ட குழல்களை உடைய  (இந்த வானர மகளிரை)

ஏற்றுதல் = நம்மோடு ஏற்றுக் கொண்டு போதல்

கடன்மைத்து ‘என்றாள்.=  முறையாக இருக்கும் என்றாள்

ஒரே ஆம்பிளைகள் கூட்டமாக இருக்கிறது. இந்த பெண்களையும் அழைத்துக் கொண்டு  செல்லலாம் என்கிறாள்.

இது தான் சீதை கூறிய முதல் வாசகம், தீக்குளிப்புக்கு பின்.

சீதை பேசவில்லையா, அல்லது கம்பன் விட்டு விட்டானா என்றும் தெரியவில்லை.

எனக்கும் பெரிய ஆச்சரியமும், வருத்தமும் தான்.

சீதை நாலு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா ?

சீதை அப்படி ஒன்று எதிர்த்து பேசாமல் இருப்பவள் அல்ல.

இருந்தும் இது பற்றி அவள் ஒன்றும் கூறவில்லை.

வானர பெண்களை அழைத்துக் கொண்டு போகலாம் என்கிறாள்.

இது என்ன reaction ?

கணவன் என்ன சொன்னாலும், செய்தாலும் மனைவி என்பவள்  கேட்டுக் கொண்டு அப்படியே சும்மா இருக்க வேண்டும்  என்பது தான் கம்பன் காட்டும் பாடமா ?

சிந்திப்போம்



Friday, September 6, 2019

கம்ப இராமாயாணம் - அங்கி புக்கிடு

கம்ப இராமாயாணம் - அங்கி புக்கிடு 


அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை இராமன் சந்தேகக் கண் கொண்டு பார்த்தான். அவள் மேல் சுடு சொற்களை வீசினான். அது பொறுக்க மாட்டாமல், சீதை தீயில் இறங்கி தன் கற்பை நிரூபித்தாள் என்று பார்த்தோம்.

 கேள்வி என்ன என்றால் தீயில் இருந்து வந்த பின் சீதை என்ன சொன்னாள் ? என்பதுதான்.

அங்கு வந்த சிவன், சொர்க்கத்தில் இருந்து தயயரதனை வரவழைக்கிறான் .

சீதை, தயரதனின் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறாள்.

அப்போது தயரதன் சொல்லுவான்


" சீதையே, மற்றபடி உன் கற்பினை உலகுக்கு காட்டவே உன்னை தீயில் இறங்கிடு என்று இராமன் உணர்த்தினான். அதை நீ மனதில் வைத்துக் கொள்ளாதே.  சந்தேகம் கொண்டவர்கள், இது போலச் செய்யச் சொல்லி நிரூபனங்களை பெறுவது உண்டு. அது உலக இயற்கை.  உன் கணவன் மேல் கொள்ளாதே "

இது தயரதன் கூற்று.


பாடல்


''நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட, 

அங்கி புக்கிடு'' என்று உணர்த்திய அது மனத்து  அடையேல்;

சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு; அது சரதம்; 

கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். 

பொருள்


''நங்கை! = பெண்ணே

மற்று  = மற்றபடி

நின் கற்பினை = உனது கற்பை

உலகுக்கு நாட்ட,  = உலகுக்கு நிலை நிறுத்தவே


அங்கி புக்கிடு' '  = தீயில் புகுந்திடு

என்று உணர்த்திய அது  = என்று உணர்த்தியது

மனத்து  அடையேல்; = அதை மனதில் வைத்துக் கொள்ளாதே

சங்கை  = சந்தேகம்

உற்றவர் = கொண்டவர்கள்

பெறுவதும் உண்டு = இது போல நிரூபணங்களை கேட்டுப் பெறுவது உண்டு

; அது சரதம்;  = அது உலக இயற்கை



கங்கை நாடுடைக் கணவனை = கங்கை நாட்டின் கணவனை

முனிவுறக் கருதேல்.  = கோபம் கொள்ளாதே


இந்தப் பாடலில் சில முக்கிய குறிப்புகளை நாம் கவனிக்க வேண்டும்.

முதலாவது, பெரும்பாலான இராம பக்தர்கள் கூறுவது என்ன என்றால் " இராமன் கோபித்து   பேசினான். ஆனால், அவன் சீதையை தீயில் இறங்கச் சொல்லவில்லை.  முன்னர் இலக்குவன் மேல் சந்தேகம் கொண்டதால், அதற்கு பரிகாரமாக,  சீதையே இலக்குவனை தீ வளர்க்கச் சொல்லி, அதில் இறங்கினாள் "

இது, பழியை சீதை மேல் போடும் உபாயம். இராமனை காப்பாற்ற வேண்டி, சீதையை  காவு கொடுத்து விடுகிறார்கள்.

தயரதன் அதை மறுக்கிறான். சீதையை தீயில் இறங்க உணர்த்தியது இராமன் தான்  என்று தெளிவாகச் சொல்லுகிறான்.

இரண்டாவது, இராமனுக்கு சீதை மேல் சந்தேகம் இல்லை , உலகுக்கு அவள் கற்பை நிலை நாட்டவே, அப்படிச் செய்தான் என்று தயரதன் , இராமனின் செயலுக்கு  நியாயம் கற்பிக்கிறான்.

அது சரி என்று வைத்துக் கொள்வோம். நாளை ஒவ்வொரு பக்தர்களும், அப்படிச் செய்ய தொடங்கி விட்டால்?

ஒவ்வொரு கணவனும், தங்கள் மனைவியை ஊர் அறிய தீயில் இறங்கி அவர்கள் கற்பை  நிலை நாட்டச் சொன்னால் , அது ஏற்றுக்க்கொள்ளக் கூடியதா?  எத்தனை பெண்கள், தீயில் இறங்க சம்மதிப்பார்கள் ?\\\\


மூன்றாவது, உலகுக்கு கற்பை நிலை நாட்டவே இந்த தீக்குளிப்பு நாடகம் என்று சொன்ன  தயரதன், அடுத்த வரியிலேயே அதை மாற்றுகிறான்.  "சந்தேகம் கொண்டவர்கள், இப்படி நிரூபணம் கேட்பது உலக இயற்கை" என்று   இராமனின் செயலை மேலும் நியாயப் படுத்த முயலுகிறான்.  இராமனுக்கு , சீதை  மேல் சந்தேகம், என்று தெள்ளத் தெளிவாக கூறி விடுகிறான்.

நான்காவது, அப்படி எல்லாம், இராமனுக்கு சந்தேகம் எல்லாம் இல்லை என்று இன்னும்  சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு, தயரதன் கடைசியாக ஒரு அடி அடிக்கிறான்.  "நீ இதை மனதில் வைத்துக் கொள்ளாதே. அவன் மேல் கோபப் படாதே" என்று.

தயாரதனுக்குத் தெரிகிறது. சீதை இதை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று. எனவே, அவளிடம் வேண்டுகிறான் "கண்டுக்காதே, கோவிச்சுக்காதே" என்று.

செய்றதையும் செய்திட்டு...


இப்போதாவது சீதை பேசினாளா என்றால், இல்லை.

இப்பவும் பேசவில்லை.

சரி என்றும் சொல்லவில்லை. மாட்டேன் என்றும் சொல்லவில்லை.

என்னடா இது...இவ எப்பதான் பேசுவாள். என்னதான் சொல்லினாள் ?

உங்களைப் போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன் தெரிந்து கொள்ள....

மேலும் காவியத்தை தேடுவோம். எப்போதாவது பேசி இருக்க வேண்டுமே?

கடைசி வரை பேசாமலேயா இருந்து  விடுவாள்?

பட்டாபிஷேகம் வரை போயாவது இதை கண்டு பிடிக்காமல் விடுவது இல்லை.

வாருங்கள், தேடுவோம்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_6.html

Tuesday, September 3, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பெரும் பயன் இல்லாத சொல்

திருக்குறள் - சொற்குற்றம் - பெரும் பயன் இல்லாத சொல் 


பயனுள்ள சொல்லைச் சொல்ல வேண்டும். அதுவும் பண்போடு சொல்ல வேண்டும் என்று நேற்றைய பிளாகில் சிந்தித்தோம்.

உடனே பல பேர், "இந்த மீம்ஸ் எல்லாம் மத்தவங்களுக்கு அனுப்புறோமே...அதைப் பார்த்து அவங்க சிரிப்பாங்க தானே...அதுவும் ஒரு பயன்தானே " என்று சொல்லலாம்.

இந்த டிவி சீரியல் எல்லாம் பாக்குறோமே...நல்லா போகுதே அதுவும் ஒரு பயன் தானே

காலையில் whatsapp இல் எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்றோம், நாலு கிழமையினா அது சம்பந்தமா வாழ்த்து போடுறோம், கல்யாண நாள், பிறந்த நாள் என்றால் வாழ்த்துச் சொல்றோம்...இதெல்லாம் பயன் இல்லையா? அதை அன்போடுதானே சொல்கிறோம்...

என்று  ஒரு கோஷ்டி ஆரம்பிக்கலாம்.

எனவேதான் வள்ளுவர் சொல்கிறார் "பெரும் பயன் இல்லாத சொல்" சொல்லக் கூடாது என்று.

சின்ன பயன் இருக்கிறது என்று வெட்டித் தனமாக எதையும் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. பெரும் பயன் வரும் என்றால் சொல்ல வேண்டும். இல்லை என்றால் சொல்லக் கூடாது.

அப்படி யார் சொல்லுவார்கள் என்றால்,  அரிய பயன்களை ஆராய்ச்சி செய்யும் அறிவு உள்ளவர்கள்,   பெரும் பயன் தராத சொற்களை சொல்ல மாட்டார்கள்.

அப்படி என்றால் என்ன அர்த்தம், நாம் பெரும் பயன் பெற வேண்டும் என்றால்,  அப்படிப் பட்டவர்களை கண்டு பிடித்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.

நாமும் அப்படி ஆராய்ந்து படிக்க வேண்டும். அறிய வேண்டும்.

கேட்டுக் கொண்டே இருந்தால் போதுமா? எப்போதுதான் சொல்வது?

பாடல்


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்


பொருள்

அரும்பயன் = அரிய பயன்கள். அரிய என்றால் கிடைத்தற்கு அரிய என்று பொருள். எது எளிதில் கிடைக்காது? வீடு பேறு , புகழ், மறுமைப் பயன்கள் போன்றவை அரிய பயன்கள்.  பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி,  சர்க்கரை பொங்கல் வைப்பது எப்படி என்பவை எளிய பயன்கள்.

 ஆயும்  = ஆராயும். படிக்கும் என்று சொல்லவில்லை.  யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படித்து விடலாம்.  அதை ஆராய வேண்டும்.  படிப்பதற்கு எல்லாம் மண்டைய ஆட்டுவது ஆராய்ச்சி இல்லை. படித்தவற்றை, கேட்டவற்றை ஆராய வேண்டும். சரி தப்பு, நல்லது, கெட்டது என்று பகுத்து உணர வேண்டும்.

அறிவினார் = ஆய்வு செய்யும் அறிவு உடையவர்கள்

சொல்லார் = சொல்ல மாட்டார்கள்

பெரும்பயன் = பெரிய பயன்

இல்லாத சொல் = இல்லாத சொற்களை

டிவியில் வரும் தொகுப்பாளர்கள் அப்படிப்பட்ட அரும் பயன் ஆராயும் அறிவு உள்ளவர்களா என்று அறிந்து கொண்டு , அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

யாரிடமாவது ஏதாவது கேட்க வேண்டும் என்றால், அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு  பின் அவர்களிடம் கேளுங்கள்.

உங்களுக்கு பெரிய பயன் கிடைக்கும்.

நாளையில் இருந்து அப்படிச் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எந்த ஒரு சொல்லுக்கும்  மூன்றுக்கு வேலை உண்டு.

நாம் பொதுவாக முதல் படியிலேயே நின்று விடுகிறோம்.

மிஞ்சி மிஞ்சிப் போனால், இரண்டாம் படிக்கு போவோம்

மூன்றாம் படி மிக உயர்ந்த படி. மிக மிக குறைந்த பேர்களே அந்த எல்லையைத் தொடுகிறார்கள்.

அது என்ன மூன்று படி என்று இப்போதே சொல்லி விடலாம்...பிளாக் நீண்டு விட்டால்  "ரொரம்ப பெரிசா இருக்கு...அப்புறம் படிக்கலாம் " என்று மூடி வைத்து விட்டேன்  என்று சிலர் சொல்லக் கூடும் என்பதால் அது  பற்றி பின்னொரு பிளாகில் சிந்திக்கலாம்தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_38.html


கம்ப இராமாயணம் - இரு மாதரை

கம்ப இராமாயணம் - இரு மாதரை 


சீதையின் கற்பை இராமன் சந்தேகித்தான். அதை அறிந்த சீதை தீயில் இறங்கி தன் கற்பை நிரூபித்தாள்.

இராமனுக்கு சீதையின் மேல் சந்தேகம் வந்தது போல சீதைக்கும் இராமன் மேல் சந்தேகம் வந்தால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமா என்று பெண்ணிய வாதிகள் கொந்தளிக்கலாம்.

ஒரு வேளை சீதையும் சந்தேகப் பட்டாளோ என்று சிந்திக்க வைக்கும் பாடல் உள்ளது.

அசோகவனத்தில் சிறை இருந்த சீதையை கண்ட அனுமன், இராமனிடம் கூற சேதி ஏதாவது உள்ளதா என்று கேட்கிறான்.

சீதைக்கும் இராமனுக்கும் இடையில் ஆயிரம் அந்தரங்க செய்தி பரிமாற்றம் இருந்திருக்கலாம்.  கணவன் மனைவி இடையில் அந்தரங்க செய்திக்கு பஞ்சமா?

இருந்தும், சீதை குறிப்பாக ஒரு செய்தியை கூறுகிறாள்.

"என்னை வந்து திருமணம் செய்து கொண்ட நேரத்தில், உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் நினைக்க மாட்டேன்  எனக்கு ஒரு வரம் தந்தார். அதை அவர் காதில உரக்கச் சொல்லு " என்று கூறுகிறாள்.


பாடல்

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்தவாறு திருச்செவி சாற்றுவாய்!

பொருள் 

வந்து = மிதிலைக்கு வந்து

எனைக்  = என்னை

கரம் பற்றிய  = கைகளை பற்றிய அந்த

வைகல்வாய் = நேரத்தில்

‘இந்த இப் பிறவிக்கு = இந்தப் பிறவியில்

இரு மாதரைச் = இரண்டு பெண்களை

சிந்தையாலும் தொடேன்  = மனதாலும்  தொட மாட்டேன்

‘என்ற = என்று கூறிய

செவ் வரம் = சிறந்த வரத்தை

தந்தவாறு = தந்ததை

திருச்செவி சாற்றுவாய்! = அவருடைய செவிகளில் சாற்றுவாய்

சாற்றுதல் என்றால் உரக்கச் சொல்லுதல், விளம்பரப் படுத்தல் என்ற பொருளில் வரும்.

இதை ஏன், மூன்றாம் மனிதனான, திருமணம் ஆகாத அனுமனிடம் கூற வேண்டும்?

இன்னொரு பெண்ணை தொட மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்திருக்கிறார். அதை அவருக்கு நினைவு படுத்து என்றால் என்ன அர்த்தம்?

சீதை அப்படி எல்லாம் நினைக்க மாட்டாள். அவள் அந்த அர்த்தத்தில் சொல்லி இருக்க  மாட்டாள் என்று யாரேனும் நினைக்கலாம் என்று நினைத்து, கம்பன் இன்னும் சில பாடலைகளை சேர்த்து இருக்கிறான். அவை பற்றி பின் ஒரு  நாள் சிந்திக்க இருக்கிறோம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சந்தகேம் பொது.

இராமன் சேந்தேகப் பட்டான், அக்கினி, ப்ரம்மா, சிவன் எல்லாம் வந்து சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை.

சிவன், வேறு வழியில்லை என்று தசரதனை அழைத்து வரச்சொன்னான்.

தயாரதனும் வந்தான்.

தயாரதனுக்கும் , இராமனுக்கும் இடையே நடத்த பேச்சு மிக சுவாரசியமானது.

அதை இல்லம் விட்டு விடுவோம். மேலே போவோம்.

தயரதன் சீதையிடம் என்ன சொன்னான்?

அதற்கு சீதை என்ன மறு மொழி சொன்னாள் என்று நாளை சிந்திக்க இருக்கிறோம்.

மறக்காம வந்திருங்க....

interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_3.html

Monday, September 2, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பயன்சாரா பண்பில் சொல்

திருக்குறள் - சொற்குற்றம் - பயன்சாரா பண்பில் சொல் 


சில பேர் நல்லது சொல்லுவார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் விதம் நன்றாக இருக்காது.

அப்பா மகனிடம், "நீ ஒழுங்கா படிக்கலேன்னா மாடு மேய்க்கத் தான் போற..." என்று சொல்லும் போது , அவர் பிள்ளையின் மேல் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் வெளிப்படாது. அவர் சொல்வது அவனுடைய நன்மைக்குத்தான் என்றாலும், சொல்லும் விதம் இருக்கிறது அல்லவா.

நல்லதும் சொல்ல வேண்டும், அதை இனிமையாகவும், அழகாகவும் சொல்ல வேண்டும்.

சொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டால், மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடக் கூடாது. அதை எப்படி சிறப்பாக சொல்வது என்று சிந்தித்து பின் நம் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சில கணவன்மார்கள், மனைவியிடம் "என்ன இன்னும் சமையல் ஆகலையா"" என்று அதிகாரத்தோடு கேட்பார்கள்.

பதில் "செஞ்சுகிட்டு தான இருக்கேன்...எனக்கு என்ன பத்து கையா இருக்கு" என்று வரும்.

அதுவே, "ரொம்ப பசிக்குதும்மா...இன்னும் நேரம் ஆகுமா" னு மென்மையா கேட்டால் "...இல்லீங்க, இதோ இப்ப தயார் ஆகிரும்...நீங்க கை கால் கழுவிட்டு வாங்க..." னு அன்போடு பதில் வரும்.

வள்ளுவர் சொல்கிறார், "பயன் இல்லாத, பண்பற்ற சொற்களை கூறினால், அது ஒருவனுக்கு வந்து சேர வேண்டிய அனைத்து நல்லவைகளில் இருந்தும் அவனை தள்ளி விடும்" என்று


பாடல்



நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து

பொருள்

நயன்சாரா = நயத்தல் என்றால் விரும்புதல். விருப்பம் இல்லாத

நன்மையின் = நன்மைகளில் இருந்து

நீக்கும் = நீக்கிவிடும். எது நீக்கிவிடும் என்றால்

 பயன்சாராப் = பயன் தராத

பண்பில்சொல் = பண்பற்ற சொற்கள்

பல்லார் அகத்து = பலபேரிடம்


பயன் உள்ள சொற்களை சொல்ல வேண்டும்.

அதற்காக, "நாயே, பேயே ஒழுங்கா படி" என்று சொல்லுது பயன் உள்ள சொல் தான் என்றாலும், அது பண்பற்ற சொல்.

பயனும் இருக்க வேண்டும், பண்பும் இருக்க வேண்டும்.

அப்படி சொல்லவில்லை என்றால் அந்த மாதிரி பேச்சே நல்ல நன்மைகளில் இருந்து  நம்மை நீக்கி விடும்.

"நான் மாடா உழைக்கிறேன், எல்லோருக்கும் நல்லது செய்கிறேன், ஆனா என்னை மட்டும் யாருக்கும்  பிடிக்க மாட்டேங்குது" என்று அங்கலாய்த்து பலன் இல்லை.

நன்மை வேண்டுமா?

எல்லோரும் உங்களிடம் அன்பாக இருக்க வேண்டுமா ?

பணமும், புகழும் வேண்டுமா ?

பயனுள்ளவற்றைப் பேசுங்கள், அதையும் பண்போடு பேசுங்கள்.

நன்மை தானே வரும்.

சரியா இருக்கும் போல இருக்குல்ல? நீங்க என்ன நினைக்கிறீரங்க?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_58.html

கம்ப இராமாயணம் - நின் மைந்தனை தெருட்டி

கம்ப இராமாயணம் - நின் மைந்தனை தெருட்டி 


தீக்குளித்து வந்த பின் சீதை களங்கம் அற்றவள் என்று அக்கினி தேவன் கூறினான்.

பிரமனும் சிவனும் அப்படியே கூறினார்கள்.

சிவன் யோசித்தார்...இனி என்ன செய்வது என்று.

இதற்கு ஒரே வழி.....

தசரதனை கூப்பிடுவது தான் என்று எண்ணி தசரதனை கூப்பிட்டார்.

ஆம், இறந்து ஸ்வர்கம் போன தசரதனை அழைத்தார் சிவன். என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது பாருங்கள்.

சொர்க்கத்தில் இருந்த தசரதனை சிவன் அழைத்து,

"மெய் அன்பு உள்ளவனே, உன் மைந்தனின் குழப்பத்தை தெளிவு படுத்தி அவனுக்கு வந்த கடுமையான துயரத்தை நீக்குவாயாக "

என்று கூறினான்.

பாடல்

பின்னும் நோக்கினான், பெருந் தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள்  இருந்த
மன்னவற் சென்று கண்டு, 'நின் மைந்தனைத் தெருட்டி,
முன்னை வன் துயர் நீக்குதி, மொய்ம்பினோய்!' என்றான்.

பொருள்

பின்னும் நோக்கினான் = சிவன் மேலும் சிந்தித்து


பெருந் தகைப் = பெரியவர்

புதல்வனைப் பிரிந்த = இராமனைப் பிரிந்த

இன்னலால் = துன்பத்தால்

உயிர் துறந்து, = உயிரை விட்டு

இருந் துறக்கத்துள்  இருந்த = துறக்கம் என்ற சொல் ஆழமான சொல். இந்த இடத்தில், சுவர்க்கம் என்று வைத்துக் கொள்ளலாம்

மன்னவற் சென்று கண்டு, = மன்னனான தசரதனை சென்று கண்டு

'நின் மைந்தனைத் = உன் மகனான இராமனை

தெருட்டி, = தெளிவு படுத்துவாய்

முன்னை = முதலில்

வன் துயர் நீக்குதி, = அவனுக்கு  வந்த பெரிய துயரை நீக்குவாய்

மொய்ம்பினோய்!' = உண்மையான அன்பு கொண்டவனே

என்றான். = என்று சிவன் கூறினான்

ஊடல் தீர்க்கும் வாயில்கள் பற்றி முன்னம் ஒரு ப்ளாகில் பார்த்தோம்.

அக்கினி, பிராம்மா , சிவன் என்று யார் சொல்லியும் இராமனின் குழப்பம் தீரவில்லை.

இராமனுக்கு குழப்பம் என்று சிவன் வாயிலாக கம்பன் பதிவு செய்கிறான்.

"தெருட்டி" என்று என்றால் தெளிவு செய்தல்.

அது மட்டும் அல்ல, சீதையை எப்படி ஏற்றுக் கொள்ளுவது என்ற குழப்பம் மட்டும் அல்ல,  அது ஒரு துயரமான ஒன்றாகப் படுகிறது இராமனுக்கு.

"வன் துயர் நீக்குதி" என்றான்.

என்ன துயரம்?

இராவணன் இறந்து விட்டான்.

வீடணனுக்கு முடி சூட்டியாகி விட்டது.

சீதை சிறை மீண்டு வந்து விட்டாள்.

தீக்குளித்து கற்பை நிலை நிறுத்தியாகி விட்டது.

அக்கினி, ப்ரம்மா, சிவன் எல்லோரும் வந்து சொல்லிவிட்டார்கள்.

இருந்தும் "வன் துயர்" ...என்ன துயரம்?

சீதையை எப்படி ஏற்றுக் கொள்வது என்றா ? அல்லது இப்படி வாய்க்கு வந்தபடி பேசி விட்டோமே,  இனி இவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்  என்ற துயரமா? அல்லது இவளை ஏற்றுக் கொண்டு சென்றால், ஊருக்குள் யார் என்ன பேசுவார்களோ  என்ற துயரமா?

கம்பன் சொல்லவில்லை.

ஏதோ ஒரு துயரம்.

இராவணனை கொன்று, சீதையை சிறை மீட்டது, அவளை மீண்டும் கண்டது, இராமனுக்கு  மகிழ்ச்சியைத் தரவில்லை என்று மட்டும் புரிகிறது.

ஒரு சாதாரணமான மானிடனைப் போல, மாற்றான் வீட்டில் பல காலம் சிறை இருந்த  மனைவியை சந்தேகிப்பது போல இராமன் சந்தேகிக்கிறான்.

சரி.

சீதையைப் பிரிந்து இராமன், காட்டில் இருந்தானே.

அவனை, சீதை சந்தேகப் படலாம்தானே?

அரசர்கள் பல பெண்களை மணந்து கொள்வதும், மணம் செய்யாமல் உறவு கொள்வதும்  ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்க்கை முறை தானே.

அப்படி இருக்க, தன்னைப் பிரிந்த இராமன் வேறு ஒரு பெண்ணை நாடி இருக்கலாம் என்று சீதை  நினைத்தால் அதில் தவறு உண்டா?

சீதை அப்படி நினைப்பாளா?  அதுவும் இராமனைப் பற்றி....

நாளை சிந்திப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_2.html

Sunday, September 1, 2019

கம்ப இராமாயணம் - வரதர்க்கும் வரதன்

கம்ப இராமாயணம் - வரதர்க்கும் வரதன்


சீதை தீக்குளித்து வந்து விட்டாள். அக்கினி தேவன் , சீதை கற்புள்ளவள் என்று சான்றிதழும் கொடுத்து விட்டான். பத்தா குறைக்கு "இராமா, நீ இப்படி செய்வது அறம் அல்ல" என்றும் உபதேசம் செய்தான்.

சீதை பேசவில்லை.

அடுத்து பிரமன் வருகிறான். அவன் இராமனுக்கு அவன் யார் என்று சொல்லுகிறான்.

சீதை பேசவில்லை.

அடுத்து சிவன் வருகிறான். அவனும் இராமனைப் பற்றி அவனுக்கே எடுத்து உரைக்கிறான்.

எல்லாம் சொல்லிவிட்டு சொல்லுவான்

"இந்த சீதை இருக்கிறாளே, இவள் உன்னால் கைவிடப் படக் கூடியவள் அல்லள். இந்த உலகம் அனைத்துக்கும் தாய் போன்றவள் அவள். இவள் தவறு செய்தால் என்றால், இந்த உலகில் பல உயிர்கள் அழிந்து போகும். நீ இவளை இகழ்வாக எண்ணியதை மறந்து விடு " என்று சொன்னான்.

சொன்னது யார், வரம் தருபவர்களுக்கு வரம் தருபவன். அதாவது கடவுள்களுக்கே வரம் தரும் சிவன்.

பாடல்

'துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இராமன்! நீ இவள் திறத்து  இகழ்ச்சி
மறக்கும் தன்மையது' என்றனன் - வரதர்க்கும் வரதன். 



பொருள்

'துறக்கும் = துறந்து விடக் கூடிய

தன்மையள் அல்லளால் = தன்மை கொண்டவள் அல்ல இவள்.

தொல்லை = பழமையான

எவ் உலகும் = அனைத்து உலகும்

பிறக்கும் = தோன்றும்

பொன் வயிற்று அன்னை = பொன் போன்ற வயிற்றை கொண்ட தாய் இவள்

இப் பெய்வளை = இந்த வளையல்கள் அணிந்த சீதை

பிழைக்கின், = பிழை செய்தால்

இறக்கும் பல் உயிர் = பல உயிர்கள் அழிந்து போகும்

இராமன்! = இராமா

நீ இவள் திறத்து = நீ இவள் பால் கொண்ட

இகழ்ச்சி = இகழ்ச்சி, தாழ்ந்த எண்ணம்

மறக்கும் தன்மையது'  = அதை மறந்து விடு. அது மறக்கும் தன்மையது

என்றனன் = என்றான்

வரதர்க்கும் வரதன்.  = வரம் தருபவர்களுக்கு வரம் தருபவன்


சீதையின் கற்பை உலகுக்கு காட்டவே இராமன் அவளை தீயில் இறங்க வைத்தான் என்று  சிலர் கூறுவார்கள். இராமனை எப்படியாவது அந்த அபவாதத்தில் இருந்து  காப்பாற்ற அவன் பக்தர்கள் செய்யும் வேலை அது.

சிவன் சொல்கிறான், "அவள் மேல் நீ கொண்ட இகழ்வான எண்ணத்தை மறந்து விடு " என்று.

இராமனுக்கு, சீதை மேல் தாழ்வான எண்ணம் இருத்தது என்று சிவன் சொல்கிறான், எல்லோர் முன்னிலையிலும்.  இராமன், சீதையை தவறாக நினைத்தான் என்றே கம்பனும் காட்டுகிறான்.

கம்பன் நினைத்து இருந்தால், இந்தப் பகுதியை அப்படியே நீக்கி இருக்கலாம். காப்பிய போக்கு ஒன்றும் கெட்டு விடாது.

வேலை மெனக்கிட்டு கம்பன் எழுதுகிறான் "அவள் மேல் கொண்ட இழிவான எண்ணத்தை  மறந்து விடு" என்று சிவன் சொன்னதாக.

இதற்கு இராமன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

சீதையும் பேசவில்லை.

சிவனுக்கு என்ன செய்வது  என்று தெரியவில்லை.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.

கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்களை ஊரறிய செய்தால் இதுதான்  நடக்கும்  என்று கம்பன் சொல்லாமல் சொல்கிறானோ என்னவோ.

அக்கினி தேவன் சொல்லியாச்சு...ஒன்றும் நடக்கவில்லை.

பிரம்மன் சொல்லியாச்சு ...ஒன்றும் நடக்கவிலை

சிவன் வந்து சொல்லிப் பார்த்தான்....ஒன்றும் நடக்கவில்லை

இனி என்னதான் செய்வது...

பார்த்தார் சிவன், இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்று நினைத்து அதைச் செய்தார்....

அது என்ன வழின்னா.....


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_1.html