திருக்குறள் - ஈயும் இன்பம்
நீங்கள் ஏதோ ஒரு அயல்நாட்டுக்கு சென்று திரும்பி வந்திருகிறீர்கள். உங்கள் நண்பரைப் பார்த்து, அந்த நாட்டில் உண்ட ஒரு புது மாதிரியான, மிகச் சுவையான ஒரு உணவைப் பற்றி விலாவாரியாக விவரிகிரீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பருக்கு ஏதாவது புரியுமா?
நீங்கள் எவ்வளவுதான் விளக்கிச் சொன்னாலும் அந்த உணவின் சுவை அவருக்கு புரியவே புரியாது.
அதற்கு ஒரே வழி அவரும் அதை சுவைத்துப் பார்பதுதான்.
கற்கண்டு எப்படி இருக்கும் என்று எத்தனை ஆயிரம் பக்கம் விளக்கினாலும் விளங்காது. ஒரு துண்டு அதை எடுத்து வாயில் போட்டால் உடனே தெரிந்து விடும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
நாம் நமக்கு விருப்பம் இல்லாத செயலை செய்வோமா? மாட்டோம் அல்லவா?
பிறருக்கு நம் பொருளை கொடுப்பது இன்பமான செயலா? மிக முயன்று சேர்த்த பொருளை மற்றவர்களுக்கு கொடுப்பதில் என்ன இன்பம் இருக்க முடியும்? வள்ளுவர் சொல்கிறார் என்பதற்காக இருக்கின்ற பொருளை எல்லாம் தானம் செய்ய முடியுமா?
நமக்கு துன்பம் தரும் செயலை நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம்.
பொருளை இழப்பது இன்பமா? துன்பமா? துன்பம்தான். சதேகம் இல்லை.
யாருக்கும் கொடுக்காமல் நம் பொருளை நாம் ஏதோ ஒரு விதத்தில் முதலீடு செய்கிறோம். அதில் இருந்து வட்டி வரும், வருவாய் வரும், நாளை அதன் விலை உயரும், இலாபம் வரும் என்று.
ஒரு வேளை முதலீடு செய்த ஒன்று நட்டம் ஆகிவிட்டால்? முதலீடு செய்த நிறுவனம் மூடப் பட்டு விட்டால்?
இன்று ஏதேதோ நாடுகளில் யுத்தம் நடக்கிறது. அங்கெல்லாம் உள்ள மக்கள் எவ்வளவோ முயன்று, சேமித்து, வீடு வாங்கி இருப்பார்கள், நிலம் வாங்கி இருப்பார்கள். இன்று யுத்தம் என்று குண்டு போட்டு அவற்றை அழிக்கிறார்கள். என்ன செய்வது.
சில சமயம் வெள்ளம் வருகிறது.
பண வீக்கம் வந்து சேமித்து வைத்த செல்வம் செல்லா காசாகி விடுகிறது.
திருடு போய் விடலாம்.
இப்படி பல விதங்களில் நம் செல்வம் நமக்கு பயன்படாமல் போய் விடலாம்.
பசி என்று ஒருவன் வந்து நிற்கிறான். அவன் பசியை போக்க உதவி செய்கிறோம். அவன் வயிறார உண்கிறான். அதை பார்க்கும் போதும் நம் மனம் நெகிழாதா. என்னால் அவன் பசியை போக்க முடிந்தது என்று மனதுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி, பெருமிதம் வரும் அல்லவா?
இனி இதை எல்லாம் ஒன்றாக சேர்த்து சிந்தித்து ஒரு குறள் எழுதுகிறார் வள்ளுவ ஆசான்.
பாடல்
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_31.html
(pl click the above link to continue reading)
ஈத்துவக்கும் இன்பம் = ஈந்து உவக்கும். ஈவதனால் வரும் இன்பத்தை அனுபவித்தல்
அறியார்கொல் = தெரியாதவர்கள் போலும்
தாம்உடைமை = தங்களுடைய பொருளை
வைத்துஇழக்கும் = சேர்த்து வைத்து, பின் இழக்கும்
வன்க ணவர் = கல் நெஞ்சக் காரார்கள்
வன்கணவர் என்பதை அருள் இல்லாதவர்கள் என்கிறார் பரிமேலழகர்.
அன்பு என்பது நம்மைச் சார்ந்தவர்களிடம் காட்டும் பரிவு.
அருள் என்பது நம்மைச் சார்தவர்களிடமும் காட்டும் பரிவு.
தெருவில் போகும் பிச்சைகாரனுகும் நமக்கும் என்ன உறவு? அவனுக்கு செய்யும் உதவி, அருள்.
அந்த அருள் நெஞ்சம் இல்லாதவர்கள், கொடுப்பதனால் வரும் இன்பத்தை அனுபவிக்கத் தெரியாதவர்கள்.. அது தெரிந்து இருந்தால், அனாவசியமாக பொருளை சேர்த்து வைத்து, பின் இழப்பார்களா?
கொடுப்பது இன்பம் என்று தெரியாவிட்டால் கொடுக்க முடியாது.
கொடுப்பதற்கு நெஞ்சில் அருள் வேண்டும்.
முதலில் அன்பு வேண்டும். அன்பில் இருந்து அருள் பிறக்க வேண்டும்.
சில பேர் பெற்ற பிள்ளைகளுக்கும், கட்டிய மனைவிக்குமே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். உடன் பிறந்த உறவுகளுக்கு உதவ மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்?
இல்லறம், அன்பை பெருக்க வேண்டும். அது பெருகி அருளாக மாற வேண்டும்.
ஒருவன் நல்ல இல்லறம் செய்கிறானா இல்லையா என்பது அவன் செய்யும் தான தர்மத்தில் இருந்து தெரியும்.
முதலில் அன்பு, பின் அது முதிர வேண்டும், முதிர்ந்து அருளாக வேண்டும்.