Tuesday, October 15, 2019

அபிராமி அந்தாதி - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி

அபிராமி அந்தாதி - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி


நேற்று சாப்பிட்டது ஞாபகம் இருக்கிறது. அதற்கு முந்தின நாள்? போன வாரம், போன மாதம், போன வருடம் இதே நாள் என்ன சாப்பிட்டோம் என்று நினைவு இருக்கிறதா? இல்லை அல்லவா.

ஒரு மாடு, நெல் விளைந்த ஒரு வயல் காட்டில் சென்று வளர்ந்து இருக்கின்ற நெல் பயிரை மேய்ந்து விடுகிறது. வயலுக்கு சொந்தக்காரன் வந்து தடியால் இரண்டு அடி போட்டு மாட்டை விரட்டுகிறான்.  மறு நாளும் அந்த மாடு அதே வயக்காட்டில் இறங்கி பயிரை மேயும். "அடடா, நேற்றுதானே இந்த பயிரை மேய்ந்ததற்கு தடியால் அடித்தார்கள்" என்ற நினைவு இருக்காது. செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யும். மறந்து போய் விடுகிறது.

நாமாக இருந்தால் அப்படி செய்வோமா? நம்மை சரியாக மதிக்காதவர் வீட்டுப் பக்கம் கூட நாம் போக மாட்டோம் அல்லவா? காரணம், அவர் செய்த மரியாதை குறைவான செயல் நம் மனதில் நிற்கிறது. அது மனதில் நிற்காவிட்டால்? மீண்டும் அவர் வீட்டுக்குப் போவோம் அல்லவா?

நேற்று சாப்பிட்டதே மறந்து போய் விடுகிறது. போன பிறப்பும் அதற்கு முந்தைய பிறப்பும் நினைவு இருக்குமா?

மாட்டுக்கு நினைவு இல்லாதது, நமக்கு நினைவில் இருக்கிறது.

நமக்கு நினைவில் இல்லாதது, பெரியவர்களுக்கு, சான்றோர்களுக்கு நினைவில் நிற்கிறது.

எத்தனை முறை மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து இப்படி துன்பப் படுவது என்று  அவர்கள் தளர்ந்து போகிறார்கள்.

பட்டர் சொல்கிறார்,

"தயிர் கடையும் மத்தின் இடையில் அகப்பட்ட தயிர் போல என் ஆவி ஆனது சுழல்கிறது. பிறக்கிறது, பிறக்கிறது, இறக்கிறது...நான் தளர்ந்து போய் விட்டேன். தளர்வு அடையாமல் நான் ஒரு நல்ல கதி அடைய எனக்கு அருள் செய்வாய். பிரமனும், திருமாலும், சிவனும், துதிக்கும் சிவந்த திருவடிகளை கொண்டவளே " என்று

பாடல்


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


பொருள்

ததி = தயிர்

உறு = அடைகின்ற

மத்தின் = மத்தின். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல

சுழலும் என் ஆவி = சுழலும் என் ஆவி

தளர்வு இலது ஓர் = தளர்வு இல்லாத ஒரு

கதியுறுவண்ணம் = கதியினை அடைய

கருது கண்டாய் = அருள் புரிவாய்

கமலாலயனும், = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

மதியுறு = நிலவை உள்ள

வேணி = சடை முடியுள்ள

மகிழ்நனும் = உன்னோடு சேர்ந்து மகிழும் சிவனும்

மாலும் = திருமாலும்

வணங்கி = வணங்கி

என்றும் = எப்போதும்

துதியுறு = துதி செய்யும்

சேவடியாய் = சிவந்த அடிகளைக் கொண்டவளே

சிந்துரானன சுந்தரியே. = சிவந்த குங்குமம் அணிந்த அழகியே

மறு பிறப்பு உண்டா ? இது பற்றி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா?

மணிவாசகர் சொல்வார்

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று திருவாசகத்தில்


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.


புல் , பூண்டு, புழு, மரம், பலவிதமான மிருகங்கள், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள் , அசுரர், தேவர், முனிவர் என்று எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார்.

எப்படி எல்லாம் பிறந்திருக்கோம் என்பதல்ல முக்கியம், எப்படி எல்லாம் இனி பிறக்க  இருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது.

நமக்கு ஞாபகம் இல்லை. மறந்து போய் விட்டது.

அவருக்கு ஞாபகம் இருக்கிறது.

மீண்டும் மீண்டும் பிறந்து எல்லோருக்கும் சலிப்புத்தான் வருகிறது.

என்னை மீண்டும் மீண்டும் பெற்று என் தாயர்கள் உடல் சலித்து விட்டார்கள், நான் நடந்து நடந்து கால் சலித்து விட்டேன், என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்துப் போய் விட்டான். இருப்பையூயூர் வாழ் சிவனே, இன்னம் ஒரு கருப்பையூர் வாராமல் காப்பாற்றுவாய் என்று கதறுகிறார் பட்டினத்தார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை

கருப்பையூர் வாராமற் கா


அறிவு இருந்தால், மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியைக் கண்டு கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி

மற்று ஈண்டு வாரா நெறி.  மறுபடியும் இங்கு வராத வழி.

பட்டர் அதையெல்லாம் நினைத்து அலட்டிக் கொள்ளுவது இல்லை.

அபிராமி, நான் மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியைப் பார் என்று அவள்  மேல் பாரத்தை போட்டு விடுகிறார்.

அம்மாவின் இடுப்பில் இருக்கும் குழந்தை, தாய் தன்னை கீழே போட்டு விட மாட்டாள் என்று  எவ்வளவு உறுதியாக இருக்குமோ அப்படி உறுதியாக இருக்கிறார்.

பாடலை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். சிந்துரானன சுந்தரியே என்று கொஞ்சுகிறார்.

இப்படி வந்து கேட்டால், எந்த தாய் தான் மறுப்பாள் ?

கேட்டுப் பாருங்கள்.

interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_15.html

3 comments:

  1. இதை விட அழகாகவும்,விளக்கமாகவும் கூற முடியுமா?மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பாடல். அருமையான விளக்கம்.

    நன்றி.

    ReplyDelete
  3. சிவாய நம திருச்சிற்றம்பலம்
    அருமை ஐயா ... எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது....

    ReplyDelete