Sunday, October 27, 2019

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்


கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 




குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

இந்தப்  பாடலை  சில நாட்களுக்கு முன்னால் பதிவிட்டிருந்தேன்.

அது என்ன அறிவு அற்று, அறியாமையும் அற்று என்று சில அன்பர்கள் கேள்வி கேட்டு இருந்தார்கள்.

அறியாமை அற்றது சரி. அறிவு ஏன் அற்றுப் போக வேண்டும். அறிவு போய் விட்டால் அறியாமை வந்து விடாதா என்பது அவர்கள் கேள்வி.

சிந்திப்போம்.


நிறைய வாசிக்கிறோம். சொற்பொழிவுகள் கேட்கிறோம். கோவில்களுக்குப் போகிறோம். பூஜை, விரதம் போன்றவற்றை மேற்கொள்கிறோம்.

எதற்கு ?

வாசிக்க வாசிக்க, வந்து கொண்டே இருக்கும்.  படிக்க வேண்டியது கடல் போல இருக்கிறது.  அனைத்தையும் வாசித்து விட முடியுமா ? அப்படியே வாசித்து விட்டாலும், எல்லாம் புரிந்து விடுமா? அப்படியே புரிந்தாலும், நமக்கு புரிந்துதான் சரி என்று நாம் எப்படி அறிந்து கொள்வது?

சிலர் கூறுவார்கள் , தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த ஒரு குறிப்பிட்ட பாடல்களை, முழுவதும் சொல்லிவிட்டுத் தான் காப்பியே குடிப்பேன் என்று.

மூன்று வேளை அதை செய்வேன், ஆறு வேளை இதைச் செய்வேன், மாதம் இருமுறை அதைச் செய்வேன் என்று.

இப்படி செய்து கொண்டே இருந்தால், நேரே சுவர்க்கம், இறைவன் திருவடி என்று எதையோ அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அது சரி அல்ல.

மாடிக்கு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு படியாக எறிச் செல்ல வேண்டும். நான் தினமும் பத்து படி ஏறி இறங்குவேன், ஒரு நாளைக்கு இருப்பது முறை  ஏறி இறங்குவேன், இப்படி இருப்பது வருடம் செய்து கொண்டு இருக்கிறேன்.  வாழ் நாள் பூராவும் இப்படி செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள் முழு மாடியும் ஏறி விடுவேன் என்று யாராவது சொன்னால் இப்படி இருக்கும்.

ஒரு படியை அடைந்து விட்டால், அடுத்த படிக்கு செல்ல வேண்டும். ஏறிய படி எவ்வளவு  நன்றாக இருந்தாலும், அதை தாண்டி மேலே செல்ல வேண்டும்.

அந்த பாசுரம் எவ்வளவு நல்லா இருக்கு, இந்த பாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாக இருக்கிறது   என்று அதிலேயே நின்று விடக் கூடாது.

பள்ளிக் கூடம் போனால்,  ஒவ்வொரு வகுப்பாக மேலே செல்ல வேண்டும்.

இரண்டாம் வகுப்பு பிடித்து இருக்கிறது என்று ஒரு 30 வருடம் இரண்டாம் வகுப்புக்கே போய் கொண்டு இருக்க முடியுமா ?

அவ்வளவு ஏன் ?

வீடு குப்பையாக இருக்கிறது. விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்கிறோம். குப்பை எல்லாம் ஒரு   ஓரத்தில் தள்ளி விட்டோம். வீடு சுத்தமாகி விட்டது.

வீடு சுத்தமானபின் விளக்குமாறை என்ன செய்வது?

"அடடா, என் அருமை விளக்குமாறே , நீ அல்லவா இந்த வீட்டை சுத்தம் செய்தாய். எனவே உன்னை நான் நடு வீட்டில் வைக்கிறேன் " என்று யாராவது சொல்வார்களா?

குப்பையை கூட்டியபின் பின் விளக்குமாறை குப்பையோடு சேர்த்து ஓரமாக  வைத்து விட வேண்டும்.

அறியாமை என்ற குப்பை நீங்கியபின், அறிவு என்ற விளக்குமாறு எதற்கு?

படித்துக் கொண்டே இருக்கக் கூடாது. படித்ததை வைத்து மேலே செல்ல வேண்டும்.  வாழ்நாள் எல்லாம் படித்துக் கொண்டே இருப்பேன் என்பது, விளக்குமாறை தலையில் வைத்துக் கொண்டு  அலைவது போலத்தான்.



பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது

அறிவு என்பது இறைவனை அல்லது உண்மையை அறிய பெரிய தடை. 

சொல்வது, அருணகிரி நாதர் மட்டும் அல்ல. மணிவாசகரும் சொல்கிறார். 

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.  

செல்வம் சேர்த்து வைத்து வைத்தால், அதை விட்டுப் போக மனம் வராது. இன்னும் அனுபவிக்க வேண்டும்  என்றே மனம் பற்றும். 

அன்பான மனைவி கிடைத்தால், அவளை விட்டு பிரிய மனம் வராது.  ஆசை மேலும் மேலும் வளரும். 

பிள்ளைகள், கேட்கவே வேண்டாம். பிள்ளைகளை விட்டு விட்டு எப்படி போவது. 

இதெல்லாம் நமக்குத் தெரிகிறது. 

அடுத்து ஒன்றைச் சொல்கிறார் மணிவாசகர் - "கல்வி" 

கல்வியும்  சித்தத்தைக் குழப்பும் என்கிறார். 

இறைவனை அடைய செல்வம், மனைவி, பிள்ளைகள் எப்படித் தடையோ அப்படி கல்வியும். 

காரணம், கல்வியில் இறங்கியவர்கள் அதில் போய் கொண்டே இருப்பார்கள். அதுவே குறிக்கோள் என்பது  போல .

"கற்பனவும் இனி அமையும்" என்பார் மணிவாசகர். 

படியுங்கள். பூஜை செய்யுங்கள். விரதம் இருங்கள். ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்கள்  எல்லாம்  சொல்லுங்கள்  

ஆனால், அதுவே முடிவானாது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.  

அதைத் தாண்டி போக வேண்டும். 

அறியாமை அற்று, அறிவும் அற்றுப் போக வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_27.html

4 comments:

  1. //ஒரு படியை அடைந்து விட்டால், அடுத்த படிக்கு செல்ல வேண்டும். ஏறிய படி எவ்வளவு நன்றாக இருந்தாலும், அதை தாண்டி மேலே செல்ல வேண்டும்.// அருமை.

    ReplyDelete
  2. மனைவி,பிள்ளைகள் உதாரணம் பொருந்தாது.அறிவுடன் ஒரு படி மேலே போனால்,இன்னும் அறிவு பெற்று மேலே போவதுதான் முறை.கடைசி படி(மோக்ஷம்) வந்தவுடன் அறிவை அற்றுப்போக சொல்லலாம் என தோன்றுகிறது.

    ReplyDelete
  3. அறிவு என்று இருப்பதை உணர்ந்தால், சரணாகதி என்ற உணர்வு எழாது. அறிவு "தான்" என்ற உணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

    "பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
    பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
    தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
    எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்"

    ReplyDelete
  4. கடைசிப் படியைத் தாண்டி ஏறி விட்டால், அப்புறம் அறிவு எதற்கு என்பது பொருளாக இருக்கலாம். நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete