திருமந்திரம் - குறியாத தொன்றைக் குறியாதார்
சிறு பிள்ளைகள், மணலில் விளையாடும். அதில் அவர்கள் சோறு, கறி எல்லாம் செய்வார்கள். செய்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பார்கள். சாப்பிடுவது போல பாவனை செய்து, ஏப்பமும் விடுவார்கள்.
அது சிறு பிள்ளை விளையாட்டு. அது சோறும் இல்லை. அது பசியையும் தீர்க்காது.
அது போல, நாம் இந்த உலகியல் அனுபவங்களில் திளைத்து இருந்து கொண்டு, அதுவே சுகம், அதுவே வீடு பேறு , முக்தி இவற்றை தரும் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்கிறார் திருமூலர்.
பாடல்
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே .
பொருள்
சிறியார் = சிறுவர்கள்
மணற்சோற்றில் = மணலால் செய்த சோற்றில்
தேக்கிடு மாபோல் = உண்டு ஏப்பம் விடுவது போல (தேக்கு = ஏப்பம்)
செறிவால் = கூடி இருப்பதால் (கணவன், மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவு)
அனுபோகஞ் சித்திக்கும் என்னில் = உயர்ந்த போகம் கிடைக்கும் என்று எண்ணுவது
குறியாத தொன்றைக் = குறிப்பாக சொல்ல முடியாத ஒன்றை
குறியாதார் = குறித்துக் கொள்ளாதவர்கள்
தம்மை = தங்களை
அறியா திருந்தார் = அறிய மாட்டார்கள்
அவராவர் = அவர் என்ற தலைவரை
அன்றே = அப்போதே
உலக இன்பங்களில் திளைத்து இருப்பவர்கள் தங்களையும் அறிய மாட்டார்கள், "அவரையும்" அறிய மாட்டார்கள்.
வீடு, வாசல், பணம், நகை,நட்டு, உறவு என்று அலைந்து கொண்டு இருப்பவர்கள், பிள்ளைகள் மணல் சோறு செய்வது போல சிறு பிள்ளைகளாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
மணல் சோறு பசியை எப்படி போக்காதோ, அப்படியே இவையும் என்று அறிக.
interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_37.html
வித விதமாக பல சான்றோர்கள் நம் அறியாமையை எடுத்து கூறி முக்தி பெற வழியை காண்பித்து உள்ளார்கள்.நீங்களும் உங்கள் பதிவுகள் மூலமாக சொல்லி வருகிறீர்கள்.உங்களிடம் கடன் பட்டு இருக்கிறோம்.
ReplyDeleteநன்றி இறைவா நன்றி ஐயா 🌺🌈🙏
ReplyDelete