Sunday, October 20, 2019

வில்லி பாரதம் - எது நல்லது ?

வில்லி பாரதம்  -  எது நல்லது ?


எது நல்லது?

எது உடனடி சுகம் தருகிறதோ, அதுவே நல்லது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.

படிப்பதைவிட டிவி பார்ப்பது சுகமாக இருக்கிறது.

வேலை செய்வதை விட, படுத்து தூங்குவது நல்லா இருக்கிற மாதிரி தெரிகிறது.

நல்ல விஷயங்களை படிப்பதைவிட whatsapp ல் அரட்டை அடிப்பது நல்லா இருக்கிற மாதிரி தோன்றுகிறது.

கருத்து வேற்றுமை வந்தால், விட்டுக் கொடுத்து, அதனால் வரும் தோல்வியை விட, சண்டை போட்டு வெற்றி பெறுவது சுகமாக இருக்கிறது.

அது சரியா ?

பாண்டவர்களிடம் கண்ணன் கேட்கிறான், வனவாசம் முடிந்து விட்டது, அஞ்ஞாத வாசம் முடிந்து விட்டது. இப்போது என்ன செய்ய உத்தேசம் என்று.

அதற்கு தர்மன் சொல்கிறான் (முந்தைய பிளாகின் தொடர்ச்சியாக)

"குலத்தில் உதித்த பெரியவர்களையும், உறவினர்களையும், துணைவர்களையும், கொன்று, போரில் வென்று, இந்த உலகம் முழுவதையும் ஆழ்வதை விட, திருதராஷ்டிரன் சொன்ன மாதிரி, நாங்கள் காட்டில் காய் கனிகளை உண்டு வாழ்வது எவ்வளவோ சிறந்தது "

என்று.

பாடல்

'குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும்,
                  கொன்று, போர் வென்று,
அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி
                  ஆளும் அரசுதன்னில்,
கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த
                  மொழிப்படியே, கானம்தோறும்,
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல்
                  இனிது, நன்றே!

பொருள்


'குரவரையும் = தலைவர்களையும், முதியவர்களையும்

கிளைஞரையும் = உறவினர்களையும்

குலத்து உரிய துணைவரையும் = குலத்தில் கூட உதித்த துணைவர்களையும்

கொன்று = கொன்று

போர் வென்று, = போர் வென்று

அரவ = ஆதி சேஷன் என்ற பாம்பின் தலையில் இருக்கும்

நெடுங் கடல் = பெரிய கடலை

ஆடை = ஆடையாக உடுத்திய இந்த

அவனி எலாம் = உலகம் எல்லாம்

தனி = தனி ஆளாக

ஆளும் அரசுதன்னில், = ஆளுகின்ற அரசை விட

கரவு உறையும் = வஞ்சம் நிலவும்

மனத்  = மனத்தைக் கொண்ட

தாதை  = தந்தை (திருதராஷ்டிரன்)

முனிக்கு = சஞ்சய முனிவனுக்கு

உரைத்த = கூறிய

மொழிப்படியே, = சொற்படி

கானம்தோறும் = காடுகள் எல்லாம் சென்று

இரவு பகல் = இரவு பகல் எல்லா நேரமும்

பல = பலவிதமான

மூல சாகம் = பழங்களையும், காய்களையும்

நுகர்ந்து = உண்டு

உயிர் வாழ்தல் = உயிர் வாழ்தல்

இனிது, நன்றே! = இனிமையானது, நன்மை பயப்பது


எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு.

வெற்றி பெற வேண்டுமா, உலகை ஆள வேண்டுமா, அதற்கு ஒரு விலை உண்டு.

பெரும் செல்வம் சேர்க்க வேண்டுமா, அதற்கும் ஒரு விலை உண்டு.

அந்த விலை கொடுத்து அந்த செல்வத்தை பெறுவது நல்லதா என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டியது நம் கடமை.

பணம் பணம் என்று சென்று, வாழ்கையை தொலைத்தவர்கள் பலர்.

மனைவி, மக்கள், அன்பு, பாசம், உறவு எல்லாம் விளையாகக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

இங்கே தர்மன் சொல்கிறான்.

எல்லாரையும் பலி கொடுத்தால் பெரிய அரசு கிடைக்கும்.

அது தேவை இல்லை என்கிறான்.

தர்மன் செய்தது தவறா சரியா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் எதை அடைய எதை இழக்கிறீர்கள் என்பதை அறிந்து  கொள்ளுங்கள்.

கணவனை (மனைவியை) விட நான் பெரிய ஆள், புத்திசாலி என்று நிலை நிறுத்த விரும்புகிறீர்களா? செய்யுங்கள். அதன் விலை, அவர்களின் அன்பை, காதலை இழக்க  வேண்டி வரும். அவ்வளவுதான்.

வில்லி பாரதத்தில் இது போல எவ்வளவோ கருத்துகள் கொட்டிக் கிடக்கிறது.

அள்ளிக் கொள்ளுங்கள். அத்தனையும் இலவசம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_20.html

2 comments:

  1. நிதானத்துடன் செயல்ப் படாது ஒன்றையே குறிக்கோளாக நினைத்து முடிவு எடுப்பது சரியல்ல.பெறுவது இழப்பதைவிட அதிகமாயென்பதை ஆலோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. போன பாடலையும், இந்தப் பாடலையும் படித்தால், தருமன் இரண்டு விஷயங்களை விட்டு விட்டான் என்று திரிகிறது: ஒன்று, வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம்; இரண்டு, நாடாள வேண்டும் என்ற ஆசை.

    அப்படி ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய தருமனா முன்பு சூதாடி எல்லாம் தோற்றான் என்று எண்ணவைக்கின்றன.

    ReplyDelete