Friday, June 23, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அறிவினுள் எல்லாம் தலை

 திருக்குறள் - தீவினையச்சம் - அறிவினுள் எல்லாம் தலை 


நமக்கு தீமை செய்பவர்களுக்கு, பதிலுக்கு தீமை செய்யாமல் விட்டு விடுவது அறிவினுள் எல்லாம் தலை சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


அவருக்கு என்ன எளிதா சொல்லிவிட்டுப் போய் விடுவார். இதெல்லாம் முடிகிற காரியமா? நமக்கு தீமை செய்பவர்களுக்கு பதிலுக்கு பதில் கொடுக்காவிட்டால் அவர்கள் மீண்டும் மீண்டும் நமக்கு தீமை செய்து கொண்டே இருக்க மாட்டார்களா?  இது என்ன அறிவுரை ? என்று நாம் நினைப்போம். பரிமேலழகர் இல்லாவிட்டால் 


பாடல் 


அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_23.html


(pl click the above link to continue reading)


அறிவினுள் = நன்மை தருகின்ற அறிவினுள் 


எல்லாம் = அனைத்திலும் 


தலை = உயர்ந்தது, சிறந்தது 


என்ப = என்று சொல்லுவார்கள் 


தீய செறுவார்க்கும்  = (நமக்கு) தீமை செய்தவர்களுக்கும் 


செய்யா விடல் = (பதிலுக்கு) தீமை செய்யாமல் விட்டு விடுதல் 


சரி, அப்படி என்னதான் பரிமேலழகர் சொல்லி இருப்பார்?


தீமை செய்தால் தீமை விளையும், நன்மை செய்தால் நன்மை விளையும் என்பதில் சந்தேகம் இல்லையே?  


ஒருவன் நமக்கு தீமை செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக்கு தீமை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? அவன் முதலில் செய்தான், நாம் இரண்டாவது செய்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வித்தியாசம்? இருவர் செய்ததும் தீமைதான். ஒருவர் முதலில் செய்தார், மற்றவர் இரண்டாவது செய்தார்.  எனவே இருவருக்கும் செய்த தீமைக்கும் பலன் கிடைக்கும்தானே. 


அது மட்டும் அல்ல. 


ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான். அது நமக்கு நிகழும் முதல் தீமை. நாம் பதிலுக்கு அவனுக்கு ஏதோ ஒரு தீமை செய்கிறோம். அப்படி நாம் தீமை செய்தால், அந்த தீமைக்கு நமக்கு பின்னாளில் வேறு ஒரு தீமை வரும். அது நமக்கு இரண்டாவது நிகழும் தீமை. அது புத்திசாலித்தனமா?


சின்ன உதாரணம். 


ஒருவன் நம்மை ஏதோ தவறான சொல் சொல்லி திட்டிவிடுகிறான். நாம் பேசாமல் போய் இருந்தால் அதோடு போய் இருக்கும். அதெப்படி சும்மா விடுவது என்று பதிலுக்கு நாம் அவனை திட்டினால், அவன் நம்மை மேலும் பல வார்த்தைகள் சொல்லித் திட்டலாம். முதலில் ஒரு தரம் திட்டு வாங்கினோம், பின் இரண்டாவது முறை திட்டு வாங்குகிறோம். அது புத்திசாலித்தனமா? 


எனவே, வள்ளுவர் செய்கிறார், நாம் பதிலுக்கு தீமை செய்தால் நமக்கு மீண்டும் தீமை வரும் என்று "அறிந்து" பதிலுக்கு தீமை செய்யாமல் விடுதல் அறிவினுள் எல்லாம் உயர்ந்த அறிவு என்றார். 


இது எளிதில் புரியாது. அடியும் வாங்கிக் கொண்டு, சும்மா இருப்பது நல்லது என்று அறிந்து கொள்ளும் அறிவு எளிதில் வராது. அடித்தால் திருப்பி அடிக்கத் தான் தோன்றும். அதை விடுத்து, தீங்கு செய்தார்க்கும் தீமை செய்யாமல் விடுதல் ஏதோ அவனுக்கு செய்த நன்மை அல்ல, அது நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை என்ற அறிவு இருக்கிறதே,  அது எல்லாவற்றிலும் உயர்ந்த அறிவு என்கிறார். 


"தலை என்ப" என்றால் தலை சிறந்தது என்று சொல்லுவார்கள் என்று அர்த்தம். யார் சொல்லுவார்கள்?  அறிவுள்ள சான்றோர்கள் சொல்லுவார்கள். அறிவில்லாதவர்கள் என்ன சொல்லுவார்கள்? பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்று கொந்தளிப்பார்கள். அறிவுடையார் சொல்லக் கேட்டு நடப்பது சிறந்த அறிவு. 


"அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்"


 என்பதில் ஒரு சின்ன இலக்கண நுணுக்கம் இருக்கிறது. 


அறிவினுள் எல்லாம் தலை சிறந்தது இன்னொரு அறிவாகத்தானே இருக்க முடியும்?  குத்து சண்டை வீரர்களில் தலை சிறந்தவர் என்றால் முகமது அலி, டைசன் என்று ஒரு குத்து சண்டை வீரரைத்தானே சொல்ல முடியும். அது போல அறிவில் எல்லாம் சிறந்தது என்றால் அது ஒருவிதமான அறிவாகத்தானே இருக்க முடியும்? ஆனால், குறளில் அப்படி ஒரு அறிவு பற்றி சொல்லவில்லையே என்றால் "செய்யா விடல்" என்பதில் செய்யாமல் இருப்பது சிறந்த அறிவு அல்ல, செய்யாமல் இருக்க வேண்டும் என்று அறிகிறோம் அல்லவா, அந்த அறிவு மற்றவை எல்லாவற்றையும் விட சிறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர். 


எவ்வளவு நுணுக்கமாக எழுதி இருக்கிறார் வள்ளுவர், அதை எப்படி படித்து, அறிந்து சொல்லி இருக்கிறார் பரிமேலழகர்.


யார் மேலாவது கோபம் வந்தால், அவர்களுக்கு எப்படியாவது ஒரு தீமை செய்யவேண்டும் என்று தோன்றினால், இந்தக் குறளை ஒரு முறை நினைத்துக் கொள்ள வேண்டும். 




Sunday, June 11, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தீயும், தீயவையும்

 திருக்குறள் - தீவினையச்சம் - தீயும், தீயவையும் 


தீவினைகளை செய்து பழகியவர்கள் பயம் இல்லாமல் அவற்றைச் செய்வார்கள் என்றும், அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் தீயவை செய்ய பயம் கொள்வார்கள் என்றும் முந்தைய குறளில் கூறினார். 


தீயவை செய்தால் என்ன?  தீயவை செய்பவர்கள் எல்லோரும் சுகமாகத்தான் இருக்கிறார்கள். இந்த பாவம், புண்ணியம் என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் ஒரு பலனும் இல்லை என்று சிலர் நினைக்கலாம். 


தீயவை செய்தால் என்ன நிகழ்ந்து விடும்?  ஒரு கை பார்த்து விடலாம் என்று கூட சிலர் நினைக்கலாம்.


வள்ளுவர் சொல்கிறார், "தீயவை செய்தால் தீமையே வந்து சேரும் என்பதால், தீயவற்றை தீயை விட மோசமானது என்று எண்ண வேண்டும்" என்கிறார். 


பாடல் 


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_11.html



(pl click the above link to continue reading)


தீயவை  - தீய வினைகள் 


தீய பயத்தலால் = தீமை தருவதால் 


தீயவை = அந்தச் தீச் செயல்கள் 


தீயினும் = தீயைவிட 


அஞ்சப் படும் = அச்சம் கொள்ள வைக்கும். 


அது என்ன தீயை விட? 


தீ, சுட்ட போது வலிக்கும். போன வருடம் தீபாவளியின் போது வெடி வெடித்த போது கையை சுட்டுக் கொண்டாலும், அது இந்த வருடம் வலிக்காது.  அது ஒரு சில நாள் இருக்கும், அப்புறம் போய் விடும்.  ஆனால், தீமை ஒரு காலத்தில் செய்தால் அது எப்போது வேண்டுமானாலும் வந்து சுடும். எப்போது சுடும் என்று தெரியாது. எப்ப வருமோ, எப்ப வருமோ என்ற வலி ஒருபுறம், பின் எதிர் பாராத நேரத்தில் வந்து தாக்கும் போது வலி பல மடங்காக இருக்கும். 


தீயால் சில சமயம் நன்மைகளும் உண்டு. உணவு சமைக்கலாம், குளிர் காயலாம். ஆனால், தீய செயல்களால் ஒரு காலத்திலும் ஒரு நன்மையையும் கிடையாது என்பதால் தீயினும் அஞ்சப்படும் என்றார். 


நாம் யார்க்கும் ஒரு தீங்கும் செய்து இருக்க மாட்டோம். ஒருத்தரைப் தவறாக பேசி இருக்க மாட்டோம். சட்ட திட்டங்களுக்கு பயந்து நடப்போம். இருந்தும் பெரிய துன்பங்கள் சில சமயம் நம்மை தாக்கியிருக்கும். ஏன்?  என்றோ, எந்தப் பிறவியிலோ செய்த தீமை இந்தப் பிறவியில் வந்து தாக்குகிறது.   தீ ஒரு பிறவியில் சுட்டால், அந்தப் பிறவியோடு போய் விடும். ஆனால், தீய வினைகள் மறு பிறவியில் கூட வந்து தாக்கும். 


தீமை செய்பவர்கள் நினைக்கலாம், தப்பிவிட்டோம் என்று. ஆனால், அறம் விடாது.  எங்கு எப்படி திருப்பித் தர வேண்டுமோ, அப்படித்  தரும்.


எனவே, தீயவை செய்ய அச்சம் கொள்ள வேண்டும். ரொம்ப பயப்பட வேண்டும். 


 



Wednesday, June 7, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தீவினை எனும் செருக்கு

 திருக்குறள் - தீவினையச்சம் - தீவினை எனும் செருக்கு 


பயனிலசொல்லாமை பற்றி முந்தைய அதிகாரத்தில் கூறினார். 


அடுத்தது, உடலால் ஏற்படும் குற்றங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறுகிறார். 


தீவினையச்சம் என்றால், தீய செயல்கள் செய்ய அச்சப் படுதல். 


தீவினை ஏன் செய்யாமல் இருக்கிறோம், என்றால் அதைச் செய்வதில் உள்ள அச்சம். 


மாட்டிக் கொண்டால், தண்டனை கிடைக்கும். வெளியில் தெரிந்தால் அசிங்கம், அவமானம் என்றெல்லாம் அச்சம் வருவதால் தீவினை செய்ய பயப்படுகிறோம். 


அந்த பயம் இல்லை என்றால், துணிந்து தீய செயல்களை செய்ய முடியும். 


பாடல் 

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_7.html


(Pl click the above link to continue reading)


தீவினையார் = தீய செயல்களை செய்பவர்கள் 


அஞ்சார் = அச்சம் கொள்ள மாட்டார்கள் 


 விழுமியார் = அந்த அச்சம் இல்லாத நல்லவர்கள் 


அஞ்சுவர் = பயப்படுவார்கள்  


தீவினை = தீயவினை 


என்னும்  = என்று சொல்லப்படும் 


செருக்கு = மயக்கம். 


கெட்டவர்கள் தீய செயல்களை செய்ய அஞ்ச மாட்டார்கள். நல்லவர்கள் அஞ்சுவார்கள். 


இது மிக மேலோட்டாமான பொருள். 


இதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரை பிரமிப்பைத் தரக்கூடியது. 


நம்மால் சிந்தித்தும் பார்க்க முடியாத ஒன்று. 


ஒன்று செய்யுங்கள். ஒரு நிமிடம் மீண்டும் ஒரு முறை இந்தக் குறளைப் படியுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சிந்தித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு சிந்தியுங்கள். பின் பரிமேலழகர் உரையைப் படியுங்கள். அவர் உரையின் ஆழம் அப்போது புரியும். 


முதலாவது, "தீவினை என்னும் செருக்கு". செருக்கு என்றால் பெருமிதம், ஒரு தன் மதிப்பு என்று நாம் பொருள் சொல்வோம். ஒரு தீவினையை செய்து விட்டு மாட்டிக் கொள்ளவில்லை என்றால் அது ஏதோ பெரிய சாமர்த்தியம் போல காண்பித்துக் கொள்கிறோம். நினைக்கிறோம்.   பரிமேலழகர் சொல்கிறார். அது பெருமிதம் அல்ல, அது ஒரு பெருமை போன்ற ஒரு மயக்கம். அதில் எல்லாம் ஒரு பெருமையும் கிடையாது. மயங்காதே என்கிறார்.


இரண்டாவது, நாம் ஒரு செயலை செய்யும் போது அச்சம் வருகிறது என்றால் என்ன அர்த்தம்? அதை முன்ன பின்ன செய்து பழக்கம் இல்லை என்று அர்த்தம். முதன் முதலாக கார் ஓட்டும் போது ஒரு பயம் வரும் அல்லவா. போகப் போக பழகி விடும். ஒருவன் பயம் இல்லாமல் தீ வினை செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்?  அவனுக்கு அதில் நல்ல பழக்கம் என்று அர்த்தம். 


பரிமேல் அழகர் சொல்கிறார், இந்தப் பிறவியில் பழகியது மட்டும் அல்ல, முன் பிறவிகளிலும் ஒருவன் தீய செயல் செய்து பழகி இருப்பான். அதனால் இந்தப் பிறவியில் அவ்வளவு எளிதாக செய்ய முடிகிறது என்கிறார்.


நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நள்ளிரவில், ஒரு பெண்ணை, ஒரு பேருந்தில் மிருகத்தை விட கேவலமாக நடத்தி இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு பெரிய தீய செயலை இந்தப் பிறவியில் செய்து பழகி இருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 


இதில் இருந்து நாம் சில பாடங்களை படித்துக் கொள்ள முடியும். 


முதலில், சிறு சிறு தவறுகளை செய்வதை நிறுத்த வேண்டும். ஏன் என்றால் அது செய்யப் பழகிவிட்டால் பயம் போய் விடும். அதை விட கொஞ்சம் அதிகம் செய்தால் என்ன என்ற தைரியம் வரும்.  அலுவகலத்தில் இருந்து பேனா, பென்சில், பேப்பர் எடுத்து வருவது, அலுவலக xexrox இயந்திரத்தை சுய உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்வது என்று ஆரம்பித்து பெரிய அளவில் போய் முடியும். 


இரண்டாவது, இந்தப் பிறவியில் தீ செயல் செய்து பழகினால் அது அடுத்த பிறவிக்கும் வரும். இன்று அதிகாரம் இருக்கிறது, பணம் இருக்கிறது என்று தீய செயல் செய்ய ஆரம்பித்தால், அடுத்த பிறவியில் தீய செயல் செய்ய எளிதாக வரும். ஆனால், அதிகாரமும், பணமும் இல்லாமல் போகலாம். தண்டனை அங்கு கிடைக்கும். 


மூன்றாவது, ஒரு சிகரெட் தானே, ஒரு peg தானே என்று ஆரம்பித்து பின் அதில் உள்ள பயமும், கூச்சமும் விட்டுப் போய் விடும். ஒன்று பலதாக மாறி, பெரிய துன்பத்தில் தள்ளி விடும். 


தீவினை செய்ய அச்சப் பட வேண்டும் என்கிறார். 








Monday, June 5, 2023

கந்தரனுபூதி - யானாகிய என்னை விழுங்கி

கந்தரனுபூதி -   யானாகிய என்னை விழுங்கி 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நான் என்பது என்ன?


இது ஒரு மிகப் பெரிய கேள்வி. உன்னையே நீ அறிவாய் என்பது மகா வாக்கியம். 


நான் என்பது இந்த உடம்பா? இல்லை. 


இந்த உடம்புக்குள் இருக்கும் நினைவுகள், ஞாபகங்களா?  


யோசித்துப் பாருங்கள், உங்கள் அனைத்து ஞாபகங்களும் மறந்து போய்விட்டது என்றால் எப்படி இருக்கும் என்று. 


உங்கள் பெயர், உங்கள் ஊர், அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம், படித்த பாடங்கள், பார்த்த சினிமா , கேட்ட பாடல்கள் எல்லாம் மறந்து போய் விட்டது என்றால் நீங்கள் யார்? 


சரி, என் நினைவுகள் மட்டுமா நான்? எத்தனையோ விடயங்களை மறந்து போயிருக்கிறேன். அதானால் என்ன கெட்டு போய்விட்டது?  


இல்லை என்றால் உடலுக்குள் இருக்கும் உயிரா? மனமா? சித்தமா ...எதுதான் நான்?


நான் என்பது இவையெல்லாம் கடந்த ஒன்றா?  


"நான்" என்று சொல்லும் போது , நான் வேறு, இந்த உலகம் வேறு என்று பிரித்துப் பார்க்கிறேன். நான் என்ற எண்ணம் போய் விட்டால் , நான் வேறு, உலகம் வேறு என்பது இல்லமால் போகும் அல்லவா?



ஆற்று நீர், கடலோடு சேர்ந்தால், இரண்டு வேறு வேறு நீர் இருக்காது அல்லவா?



குடத்துக்குள் ஒரு வெளி இருக்கிறது. குடத்துக்கு வெளியே ஒரு வெளி இருக்கிறது. குடம் உடைந்து போனால், இரண்டு வெளியும் ஒன்றாகி விடும் அல்லவா? 


நான், எனது என்ற அகங்கார மமகாரம் போய் விட்டால், எப்படி இருக்கும்?


நன்றாக இருக்கும் என்று சொல்லக் கூட முடியாது. யாருக்கு நன்றாக இருக்கும் என்ற கேள்வி வரும். நான்   இல்லை என்றால்   நன்றாக இருக்கும் என்று சொல்லுவது யார்?


அருணகிரிநாதர் வியக்கிறார். மலைத்துப் போகிறார். 


பாடல் 


ஆனா வமுதே யயில்வேலரசே 


ஞானா கரனே நவிலத்தகுமோ 


யானா கிய என்னை விழுங்கிவெறும் 


தானாய் நிலைநின்றது தற்பரமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post.html


(pl click the above link to continue reading)


ஆனா வமுதே = ஆனாத + அமுதே = அழிவு இல்லாத அமுதம் போன்றவனே 


அயில்வேலரசே = அயில் + வேல் + அரசே = கூரிய வேலாயுதத்தை உடைய தலைவனே 

 


ஞானா கரனே = ஞானமே வடிவானவனே 


நவிலத்தகுமோ = சொல்ல முடியுமா?

 

யானா கிய = நான் என்று சொல்லப்படும் 


என்னை = என்னை 


விழுங்கி = உள் வாங்கி 


வெறும் = வெறுமனே


தானாய் = தான் மட்டுமாய் தனித்து  


நிலைநின்றது = நிலையாக நின்றது 


தற்பரமே = மேலான பொருளே 


நான் என்ற என்னை விழுங்கி, தனக்குளே ஒன்றாக்கிக் கொண்ட உயர் பொருளே என்கிறார். 


எது உண்டது? எதை உண்டது? உண்ட பின் நின்றது எது?


அவருக்குத் தெரிகிறது. ஆனால், அதை சொல்ல முடியவில்லை. சொன்னால் புரியாது என்று நினைத்து இருக்கலாம். 


"நவிலத் தகுமோ" என்கிறார். 


சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.  


நானே இல்லை என்ற பின் சொல்ல யார் இருக்கிறார்கள்?  எப்படிச் சொல்ல முடியும்?


அனுபவம் மட்டும் நிற்கிறது. 


என்னை அது தன்னுள் கொண்டுவிட்டது. இப்போது நான் அதுவாகிவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால், அப்படியும் சொல்ல முடியாது. ஏன் என்றால் நான் என்பதே இல்லையே.


யோசனை செய்து பாருங்கள். 

 



 [


மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html


]






Saturday, June 3, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 4

   திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 4



(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து.  வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்,  புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல் , இனியவை கூறல் , செய்நன்றி அறிதல்,  நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை,  பிறனில் விழையாமை, மற்றும் பொறையுடைமை 


என்ற 15 அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


16. அழுக்காறாமை - பொறையுடைமையைத் தொடர்ந்து அடுத்த அதிகாரமாக அழுக்காறாமை என்ற அதிகாரத்தை வைக்கிறார். அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமல் இருத்தல். பொறாமை ஏன் வருகிறது? மற்றவன் வைத்திருக்கும் ஏதோ ஒன்றின் மேல் நமக்கு ஆசை. அது நமக்கு கிடைக்கவில்லை. மற்றவனுக்கு கிடைத்து விட்டது. எனவே ஒரு பொறாமை வருகிறது. அடக்கமும் பொறுமையும் இருந்தால், இந்த பொறாமை வராது என்பதால், இதை அந்த அதிகாரங்களுக்குப் பின் வைத்தார். 


17. வெஃகாமை: அதாவது பிறரது பொருளை தவறான வழியில் அபகரிக்க நினைக்காமல் இருப்பது. பொறாமை வந்தால், எப்படியாவது மற்றவன் பொருளை தான் அடைய வெறி வரும். அது சில சமயம் தவறான வழியிலும் நம்மை இட்டுச் சென்று விடலாம் என்பதால், இதை அழுக்காறாமையின் பின் கூறினார். இலஞ்சம், கொள்ளை, திருட்டு, போன்றவை ஏன் நிகழ்கின்றன?  பிறரது பொருளை தவறான வழியில் அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில். அதைத் தவிர்க்க இந்த அதிகாரம் செய்தார். 



https://interestingtamilpoems.blogspot.com/2023/06/4.html


(please click the above link to continue reading)




18. புறங்கூறாமை - புறம் சொல்லுதல் என்றால் ஒருவரை பற்றி தவறாக அவர் இல்லாத போது மற்றவர்களிடம் சொல்லுவது. இது சொல்லில் வரும் குற்றம் என்பதால் அழுக்காறாமை, வெஃகாமை போன்ற மனக் குற்றங்களுக்குப் பின் வைத்தார். 


19. பயனில சொல்லாமை - சொல்லில் வரும் குற்றங்கள் நான்கு. அவையாவன, பொய், குறளை , கடுஞ் சொல், பயனில்லாத சொல் என்பன. இதில், இல்லறத்தில் இருப்பவன் பொய்யை முழுவதும் விட முடியாது. சில சில தீமை இல்லாத பொய்களை சொல்லத்தான் வேண்டி இருக்கும். சமையல் எப்படி இருக்கிறது என்று மனைவி கேட்டால், அது நன்றாக இல்லாவிட்டாலும் "மிகப் பிரமாதம்" என்று பொய் சொல்லத்தான் வேண்டும். அது தவிர்க்க முடியாது என்பதால் அதை விட்டுவிட்டார். குறளை என்பது புறம் சொல்லுவது. அது பற்றி முந்தைய அதிகாரத்தில் பார்த்தோம். கடும் சொல் கூறக் கூடாது என்பதை "இனியவை கூறல்" என்ற அதிகாரத்தில் கூறினார். எனவே, இறுதியாக பயனில சொல்வதை பற்றி இணைத்த அதிகாரத்தில் கூறினார்.


இதுவரை நாம் சிந்தித்த திருக்குறளின் தொகுப்பை பார்த்தோம். இனி அடுத்த அதிகாரமான "தீ வினை அச்சம்" பற்றி சிந்திப்போம். 


[

தொகுப்புரை - பாகம் 1

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html

தொகுப்புரை - பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html

தொகுப்புரை - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/3.html


]