Wednesday, May 31, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 3

  திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 3


(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)



இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து.  வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்,  புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல் , இனியவை கூறல் , செய்நன்றி அறிதல்


என்ற 10 அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


11. நடுவு நிலைமை : இல்லறத்தில் ஈடுபட்டு இருக்கும்போது, நண்பர்கள், உறவினர்கள் என்று  இல்லறம் பரந்துபட்டு இருக்கும். அவர்கள் நமக்கு பல நன்மைகள் செய்து இருப்பார்கள். உதவி செய்து இருப்பார்கள். நாளும் கிழமையும் என்றால் வாழ்த்துச் சொல்வார்கள், பரிசுகள் தருவார்கள். நம் வீட்டில் நடக்கும் நல்லது, அல்லாதது போன்ற நிகழ்வுகளுக்கு  வருவார்கள். ஆனால், அவர்கள் நமக்கு முக்கியமானவர்கள் என்று நினைத்து நீதி அல்லாத, நடு நிலை தவறி நாம் ஒன்று செய்து விடக்கூடாது. ஒரு நீதிபதி, ஒரு காவல் அதிகாரி, ஒரு அரசாங்க அதிகாரி வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் நடுவு நிலையாக செயல் பட வேண்டும். அம்மாவுக்கும், மனைவிக்கும்  இடையில் மனக்கசப்பு என்றால், நடு நிலை பேண வேண்டும். நமக்கு பிடித்த தலைவர், கட்சி என்றால் செய்தது எல்லாம் சரி என்று சொல்லக் கூடாது. அதே போல பிடிக்காத கட்சி, தலைவர் என்றால்   செய்வது எல்லாம் தவறு என்றும் சொல்லக் கூடாது. நடு நிலை மிக அவசியம். 



12. அடக்கமுடைமை - நடுவு நிலை என்றால் மற்றவர்கள் பொறுத்தது மட்டும் அல்ல. நாமே தவறு செய்தாலும், அது தவறு என்று அதை அறிந்து, கடிந்து, திருத்திக் கொள்ள வேண்டும். நான் எப்படி தவறு செய்வேன், என்று அடம் பிடிக்கக் கூடாது. அப்படி தவறை திருத்த முயற்சி செய்யும் போது , தவறான வழியில் செல்லும் மனம், வாக்கு, உடம்பை கட்டுப் படுத்த வேண்டும். எனவே, அடுத்து அடக்கமுடைமை பற்றி கூறுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/3.html



(please click the above link to continue reading)


13. ஒழுக்கமுடைமை: நடுநிலையில் நின்று, மெய், வாக்கு, உடலை அடக்கி ஆண்டாள், ஒழுக்கம் தானே வரும் என்பதால் அது பற்றி அடுத்துக் கூறினார். 


14. பிறனில் விழையாமை - ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால், அதில் உள்ள சமுதாயங்கள் சிறக்க வேண்டும். சமுத்தியாம் சிறக்க வேண்டும் என்றால், குடும்பங்கள் சிறக்க வேண்டும். குடும்பத்தின் ஆணி வேர் கணவன் மனைவி உறவு. பந்தம். அது அசைக்கப் படும் என்றால், குடும்பம் சீரழியும், சமுதாயம் கெடும், நாடு கெடும். எனவே, ஒழுக்கமுடைமையின் பின் பிறனில் விழையாமை பற்றிக் கூறினார். வல்லவர்கள், பணம் உள்ளவர்கள், அழகு உள்ளவர்கள் அது அவ்வளவாக இல்லாத ஒருவனின் மனைவியை ஏதோ ஒருவிதத்தில்   அபகர்த்துக் கொள்ள முடியும் என்றால், பின் சமுதாயம் சீர் குலையத் தொடங்கி விடும். 


15. பொறையுடைமை - பொறுமையை கடைபிடித்தல். எதற்கு எடுத்தாலும் கோபம், எரிச்சல், பகைமை என்று போகாமல், பொறுமையை சொல்லும் அதிகாரம். எதை எடுத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொள்ள முடியும், ஆனால் ஒருவனின் மனைவியை எடுத்துக் கொண்டால் பொறுக்க முடியுமா?  அந்த சமயத்திலும் பொறுமை வேண்டும் என்று சொல்வதற்காக இந்த அதிகாரத்தை பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தின் பின் வைத்தார். தன் மனைவியை கவர்ந்து சென்ற இராவணனிடம் பொறுமை காட்டினான் இராமன் (இன்று போய் நாளை வா), தன் மனைவியை சபையில் மானபங்கப் படுத்திய துரியோதனன் மீது பொறுமை காட்டினார் தர்மர். நம் இதிகாசங்கள் போதிக்கும் அறம் இது. 


[


தொகுப்புரை - பாகம் 1


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html

தொகுப்புரை - பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html



]












Wednesday, May 24, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - சூழ்வு இலா மாயம் செய்து

 

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - சூழ்வு இலா மாயம் செய்து


(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


பல சந்தர்ப்பங்களில் நாம் நமக்கு வேறு வழியே இல்லை, ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். இருப்பது ஒரே ஒரு வழிதான் என்றால் அதைச் செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். 


அது ஒரு மிகத் தவறான பாதை. 


தற்கொலை செய்து கொள்பவர்களை பற்றி சிந்திப்போம். அவர்கள் நினைக்கிறார்கள் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று நினைக்கிறார்கள். தற்கொலை முயற்சி செய்து, அதில் பிழைத்துக் கொண்டவர்களை கேட்டால் சொல்வார்கள், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று. 


தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, தொழிலில் தோல்வி என்று வந்துவிட்டால் பலர் உடைத்து போய் விடுகிறார்கள். 


கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை, விசா கிடைக்கவிலை, என்றால் ஏதோ உலகமே  இருண்டு போன மாதிரி நினைத்துக் கொள்கிறார்கள். 


கணவன் மனைவி மனத் தாங்கல், அதிகாரிகளுடன்  சண்டை, விபத்தில் அங்கம் குறைவு, நெருங்கிய உறவினரின் மரணம்   என்று வந்தால், என்ன செய்வது, அவ்வளவுதான் வாழக்கை என்று நினைத்துக் கொள்கிறார்கள். 


இன்றெல்லாம் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தி விடுகிறார்கள். வேலையை இழந்தவர்கள் மனம்  ஒடிந்து எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. 


எந்த சூழ்நிலையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் நமக்கு உண்டு. 


மனைவியை ஒருவன் கவர்ந்து சென்றுவிட்டான், காப்பாற்ற சென்ற பெரிய தந்தையை கொன்று விட்டான். அவனை என்ன செய்யலாம்?


இலக்குவன் நினைக்கிறான், வேறு வழியே இல்லை, அவனை போர் செய்து அழிக்க வேண்டியதுதான். வேறு என்ன செய்வது  என்று நினைக்கிறான். 


இராமன் அப்படி நினைக்கவில்லை. 



பாடல் 


‘வாழியாய்! நின்னை அன்று

    வரம்பு அறு துயரின் வைக,

சூழ்வு இலா மாயம் செய்து, உன்

    தேவியைப் பிரிவு சூழ்ந்தான்;

ஏழைபால் இரக்கம் நோக்கி,

    ஒரு தனி இகல் மேல் சென்ற,

ஊழி காண்கிற்கும் வாழ்நாள்

    உந்தையை உயிர் பண்டு உண்டான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_24.html


(pl click the above link to continue reading)




‘வாழியாய்!  = என்றும் வாழ்பவனே, முடிவு இல்லாதவனே 


நின்னை = உன்னை 


அன்று = அன்றொருநாள் 


வரம்பு அறு = வரம்பு இல்லாத, எல்லை இல்லாத 


துயரின் வைக = துன்பத்தில் மூழ்க வைக்க 


சூழ்வு இலா = இதுவரை கேட்டிராத சூழ்ச்சி 


மாயம் செய்து = மாயம் செய்து  


உன் = உன்னுடைய 


தேவியைப் = மனைவியை (சீதையை)  


பிரிவு சூழ்ந்தான் = பிரிக்க நினைத்தான் 


ஏழைபால் = அந்த சீதையின் மேல் 


இரக்கம் நோக்கி = இரக்கம் கொண்டு 


ஒரு தனி = ஒரு பெரிய 


இகல் = போர், சண்டை 


மேல் சென்ற = செய்யச் சென்ற 


ஊழி காண்கிற்கும் வாழ்நாள் = நீண்ட வாழ் நாளை உடைய 


உந்தையை = உன் தந்தைக்கு நிகரான ஜடாயுவின்  


உயிர் = உயிரை 


பண்டு உண்டான் = முன்பு பறித்தான் 


என்று இலக்குவன் கூறினான்.


இவ்வளவு செய்த இராவணனை கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பது அவன் எண்ணம். நாமும் அப்படித்தான் நினைப்போம். 


இராமன் அப்படி நினைக்கவில்லை. 


எந்த சிக்கலான சூழ்நிலையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. 


அதை அறிய அறிவும், தெளிவும், தெளிவான சிந்தனையும் வேண்டும்.  



[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html

கருணையின் நிலையம் அன்னான்


]


Monday, May 22, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 2

 

 திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 2


(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து. 


வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்


என்ற ஐந்து அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


6. புதல்வரைப் பெறுதல் - இல்வாழ்வில், மனைவியோடு வாழும் ஒருவன் அடுத்து அடைவது குழந்தைப் பேறு. குழந்தைகள், அவர்களின் இனிமை, அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதெல்லாம் இந்த அதிகாரத்தில் கூறுகிறார். சில இல்லறக் கடமைகளை பிள்ளைகள் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்றும் வலியுறுத்துகிறார். 


7. அன்புடைமை - மனைவி, குழந்தைகள் என்று வரும் போது , ஒருவனின் அன்பு வட்டம் விரிகிறது. தனக்கு தனக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தவன், தன் மனைவி, தன் பிள்ளைகள் என்று அவர்கள் மேல் அன்பு செலுத்தத் தொடங்குகிறான். அவனின் அன்பின் எல்லை விரிகிறது. இதுவரை பெற்றோரிடம் இருந்து அன்பை பெற்றுக் கொண்டிருந்தவன் , இப்போது அன்பை கொடுக்கப் பழகுகிறான். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html

(please click the above link to continue reading)



8. விருந்தோம்பல் - தான், மனைவி, மக்கள் என்று விரிந்த அன்பின் எல்லை மேலும் விரிகிறது. வீடு என்று இருந்தால் விருந்தினர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்க வேண்டும், போற்ற வேண்டும், உபசரிக்க வேண்டும். அவர்கள் மேல் அன்பில்லாமல் அது முடியாது. அன்பின் எல்லை மேலும் விரிந்து விருந்தினர்களையும் சேர்த்துக் கொள்கிறது. 


9. இனியவை கூறல் - விருந்தோம்பல் என்று கூறினால், எப்படி விருந்தை உபசரிப்பது என்ற கேள்வி வரும். இனிய சொல் சொல்லாதவன் வீட்டுக்கு யார் வருவார்கள். பேச்சில் இனிமை வேண்டும். அது இல்லறத்தில் உள்ளவனுக்கு இன்றியமையாத பண்பு. எனவே, அதை அடுத்துக் கூறினார். 


10. செய்நன்றி அறிதல் - வீடு என்று இருந்தால் நண்பர்கள், உறவினர்கள் வருவார்கள். நாம் அவர்களுக்கு சிலவற்றை செய்வோம். அவர்கள் நமக்கு சில நன்மைகளைச் செய்வார்கள். அப்படி நாம் பெற்ற நன்மைகளை ஒரு நாளும் மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்த இந்த அதிகாரம் செய்தார். பெற்றோர், ஆசிரியர், அக்கம், பக்கம், நட்பு, உறவு, உணவு செய்யும் உழவன், நாட்டைக் காக்கும் வீரன், உயிர் காக்கும் மருத்துவன் என்று ஆயிரம் பேரிடம் நாம் உதவிகளைப் பெறுகிறோம். அந்த உதவிகளை மறக்கக் கூடாது என்று கூறும் அதிகாரம் இது. 


(மேலும் சிந்திப்போம்) 



[

தொகுப்புரை - பாகம் 1

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html


]







Thursday, May 18, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 1

 திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 1


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து. இந்த உலகம் மூன்று குணங்களின் தொகுதியால் ஆனது. சத்துவம், தாமசம், ராஜஸம் என்ற இந்த  முக்குண கூட்டே இந்த உலகு. உலகம் என்பது பொருள்களால் ஆனது என்று நாம் அறிவோம். காடு, மலை, கடல், மரம், செடி, கொடி, கல், மண் என்று அமைந்து இருக்கிறது. இந்த பொருட்கள் எல்லாம் குணங்களின் தொகுதியே. குணங்களை எடுத்து விட்டால் பொருள் என்று ஏதும் தனித்து இல்லை. அப்படி அமைந்தவற்றில் பதி , பசு, பாசம் என்பவை நிரந்தரமானவை. அவற்றுள் முதலான பதி பற்றி முதலில் கூறினார். 


வான்சிறப்பு - திருக்குறள் என்பது ஒரு அற நூல். இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்களைப் பற்றி கூறும் நூல். இந்த இரண்டு அறங்களும் செவ்வனே நடக்க வேண்டும் என்றால் மழை இன்றி அமையாதது. மழை இல்லாவிட்டால் எல்லா அறங்களும்  பாழ்பட்டு விடும் என்பதால், அதை கடவுள் வாழ்த்துக்குப் பின் கூறினார். 


நீத்தார் பெருமை - அறம் என்றால் என்ன? அது காலத்தோடு மாறுவது. அதை சரியானபடி எடுத்துச் சொல்ல ஆள் வேண்டும். இல்லறத்தில் இருப்பவனுக்கு ஆயிரம் நெருக்கடிகள். மனைவி, குழந்தைகள், உற்றார், உறவு, மேலதிகாரி, அரசாங்கம் என்று அவன் பயந்து வாழ வேண்டும். அவனால் தைரியமாக உண்மையை சொல்ல முடியாது. முற்றும் துறந்த துறவியால்தான் அறத்தை உள்ளது உள்ளபடியே கூற முடியும் என்பதால், முற்றும் துறந்தாரைப் பற்றி "நீத்தார் பெருமை" என்று அடுத்த அதிகாரத்தில் கூறினார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html


(please click the above link to continue reading)


"அறன் வலியுறுத்தல்" - அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வை நான்கு கூறுகளாக பிரித்துக் கொள்ளலாம். இதில் இன்பம்தானே எல்லோரும் விழைவது. அதை முதலில் கூறினால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கலாம். மக்களுக்கு ஒரு ஈர்ப்பு வரும் அல்லவா? இன்பத்துப் பாலை முதலில் சொன்னால் என்ன?  


அறம் என்பது இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றையும் தரும். 


பொருள் என்பது இம்மை, மறுமைக்கு இன்பம் தரும். வீடு பேற்றைத் தராது. 


இன்பம் என்பது இம்மைக்கும் மட்டும் நலம் பயக்கும். மறுமையும், வீடும் அதில் வராது. 


எனவே, இந்த மூன்றில் அதிகமான பபாலன் தரும் அறத்தை முதலில் சொல்லத் தொடங்கி, "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரத்தை அடுத்து வைத்தார்.  


"இல் வாழ்க்கை". வீடு பேறு வாழ்வின் நோக்கம். அதற்கு துறவு வேண்டும். துறவுக்கு இல்லறம் வேண்டும். இல்லறத்தில் அன்பு விரியும். விரிந்து கொண்ட போகும் அன்பு அருளாக மாறும். அருள் , துறையில் கொண்டு சேர்க்கும். துறவு வீடு பேற்றினைத் தரும் என்பதால், முதலில் இல்லறம் பற்றி கூறினார். 


"வாழ்க்கைத் துணை நலம்" , இல்வாழ்க்கை என்பது பொறுப்புகளும், கடமைகளும் நிறைந்தது. அவற்றை தனி ஒருவனாக ஒருவனால் செய்து முடிக்க முடியாது.  அவனுக்கு ஒரு துணை வேண்டும். அது தான் மனைவி. அவளின் சிறப்பு மற்றும் நன்மைகளை அடுத்து "வாழ்க்கை துணைநலம்" என்ற அதிகாரத்தில் கூறினார். 






Tuesday, May 16, 2023

கந்தரனுபூதி - மின்னே நிகர்வாழ்வை

                            

 கந்தரனுபூதி -   மின்னே நிகர்வாழ்வை


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


வாழ்க்கை நிரந்தரமானது அல்ல, செல்வம், இளமை என்பனவும் நிரந்தரம் அல்ல. 


இதெல்லாம் நமக்குத் தெரியும். 


இருந்தும் ஏதோ கற்ப கோடி ஆண்டுகள் வாழப் போவது போல சொத்து சேர்க்கிறோம், சண்டை பிடிக்கிறோம், நான் , எனது என்று இறுமாக்கிறோம்.  



மரணம் எப்பவும் வரலாம் என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு சிக்கல்? 


அருணகிரிநாதர் சொல்கிறார், 


"எல்லாம் விதியின் பயன்". 


அறிவு இருந்தாலும், வேலை செய்யாது. 


எத்தனை ஆயிரம் புத்தகம் படித்தாலும், எத்தனை ஆயிரம் சொற்பொழிவுகள் கேட்டாலும், எவ்வளவு ப்ளாகுகள் வாசித்தாலும்,  புரிந்தாலும் நடை முறை படுத்த முடியாது. 


காரணம், கொண்டுவந்த விதி. 



"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" 


என்ற ஒரு வாக்கியத்தைப் படித்தவுடன் ஞானம் வந்து துறவி ஆனார் பட்டினத்தார். 


நாமும்தான் வாசிக்கிறோம். விட முடிகிறதா? 


காரணம் அவர் விதி வேறு, நம் விதி வேறு. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சிறு வயதில் பல board game கள் விளையாடி இருப்போம். 


பலவற்றில் இராஜா, இராணி, குதிரை, பணம், வீடு என்றெல்லாம் பொம்மைகள், காகிதங்கள் இருக்கும். பிள்ளைப் பருவத்தில்  அவற்றை நிஜம் என்று எடுத்துக் கொண்டு தீவிரமாக விளையாடுவோம். 


அந்த விளையாட்டில் இருக்கும் பணம் உண்மையான பணம் அல்ல. 


அது போல, 


பெரியவர்கள் ஆன பின், பல உலோகங்களை வாங்கி வைத்துக் கொண்டு இது தங்கம், இது வெள்ளி என்றும் சில பல கற்களை  எடுத்து வைத்துக் கொண்டு இது வைரம், அது வைடூரியம் என்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். 


எது உண்மையான தங்கம், வைரம், பொருள் எல்லாம்?


அருணகிரிநாதர் சொல்கிறார். 



பாடல் 



மின்னே நிகர்வாழ்வை விரும்பியயா 

னென்னே விதியின் பயனிங்கிதுவோ 

பொன்னே மணியே பொருளே அருளே 

மன்னே மயிலேறிய வானவனே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html


(pl click the above link to continue reading)



மின்னே = மின்னலுக்கு 


நிகர் = நிகரான 


வாழ்வை = வாழ்க்கையை 


விரும்பிய = விருப்பப்பட்ட 


யான் = நான் 


என்னே = என்ன ஆச்சரியம் 


விதியின் பயனிங்கிதுவோ = விதியின் பயன் இதுதானா ?

 


பொன்னே  = பொன்னே 


மணியே = மணியே 


பொருளே = பொருளே 


அருளே = அருள் வடிவானவனே 

 


மன்னே = என்றும் நிலைத்து இருப்பவனே 


மயிலேறிய வானவனே = மயில் மேல் ஏறிய உயர்ந்தவனே  


பொன்னும், மணியும், பொருளும், அருளும் இறைவன் தானே அன்றி நாம் நினைக்கும் இந்த உலோகங்கள் அல்ல.


அது ஏன் தெரிய மாட்டேன் என்கிறது. 


அஞ்ஞானம். 


அதற்குக் காரணம், விதி. 


விதி மதியை மறைக்கும். 


இருக்கின்ற கொஞ்ச வாழ் நாளை  இந்த நிலையில்லா வாழ்வை நிலைப் படுத்தவும், அர்த்தமில்லா செல்வங்களை சேர்க்கவும் நாம்   வீணடிக்கக் காரணம் நம் விதி 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




Sunday, May 14, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்ல வேண்டியதும் வேண்டாததும்

      

 திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்ல வேண்டியதும் வேண்டாததும் 



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


முந்தைய குறளில் 


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீரந்த

மாசறு காட்சி யவர்.


என்று கூறினார். 


அதாவது மயக்கம் அற்ற, குற்றம் அற்ற பார்வை உடையவர்கள் மறந்தும் கூட பொருள் இல்லாத வெட்டிப் பேச்சுகளை பேசமாட்டார்கள் என்றார். 


சரி. 


எதை பேச மாட்டார் என்று கூறினார். 


எதைப் பேச வேண்டும் என்றும் கூற வேண்டும் அல்லவா?


அதை இங்கே கூறுகிறார். 



முதலில் ஒன்றுமே பேசாமல் இருப்பது நலம். 


ஒருவேளை பேச வேண்டி வந்தால், மிக்க பலன் உள்ள சொற்களை தேர்ந்து எடுத்து பேச வேண்டும்.  பெரும் பலன் தராத   சொற்களைப் பேசக் கூடாது என்கிறார். 


பாடல் 


சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க

சொல்லின் பயனிலாச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_14.html


(please click the above link to continue reading)


சொல்லுக = சொல்ல வேண்டி வந்தால் சொல்லுக 


சொல்லின் = சொற்களில் 


பயனுடைய = பயனுடைய சொற்களை 


சொல்லற்க = சொல்லாமல் விடுக 



சொல்லின் = சொற்களில் 


பயனிலாச் சொல் = பயன் இல்லாத சொற்களை 



முதலில், இவரோடு, இன்று, இது பற்றி பேச வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். கேட்பவர் தரம் அறிந்து பேச வேண்டும். தெரியாதவர்களுக்கு விளங்கும்படி பேச வேண்டும். அறிந்தவர்களுக்கு சுருக்கமாக பேச வேண்டும். என்ன பேசப் போகிறோம் என்று அறிந்து பேச வேண்டும். எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். இவை எல்லாம் அறிந்து தெளிந்த பின்தான் பேசவே தொடங்க வேண்டும். 


சும்மா, தொலைபேசி வந்தால் உடனே எடுத்து மணிக்  கணக்கில் வள வளா என்று பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. 


சரி, பேசுவது என்று முடிவு எடுத்து விட்டால், நாம் பேசுவதால் கேட்பவருக்கு என்ன பலன் என்று அறிந்து பேச வேண்டும். ஒரு மணி நேரம் சிலர் பேசுவார்கள். ஒரு சாரமும் இருக்காது. பேசிய பின் தொலை பேசியை வைத்து விட்டு நாம் நம் வேலையை பார்க்க போய் விடலாம். ஒரு பலனும் இருக்காது. அப்படிப் பேசக் கூடாது. பேசினால், கேட்பவருக்கு ஏதோ ஒரு பலன் இருக்க வேண்டும்.


சொல்ல ஒன்றும் இல்லையா, அல்லது சொல்ல வந்த விடயத்தை எப்படி தெளிவாகச் சொல்வது என்று தெரியவில்லையா? பேசாமல் இருந்து விடுவது நலம். 


"சொல்லற்க" என்று ஒரு கட்டளையாகச் சொல்கிறார். 


நீ சொல்வதால் ஒரு பலனும் இல்லை என்றால் எதற்கு உன் நேரத்தையும், கேட்பவர் நேரத்தையும் வீணாக்குகிறாய் என்று கேட்கிறார். 


சில பேர் இருக்கிறார்கள், என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. அல்லது தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் சொல்வதால் ஒரு பயனும் இல்லை என்பதால், சொல்லாமல் இருப்பதே நலம். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


பயனில சொல்லாமை நன்று




அரும்பயன் ஆயும் அறிவினார்

Sunday, May 7, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - வழி அலா வழி

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - வழி அலா வழி


(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


போருக்கு முன்னால் இராவணனுக்கு ஒரு தூது விட வேண்டும்  இராமன் கூறுகிறான். 


அதை மறுத்து இலக்குவன் கூறுகிறான். 


"இராவணன்   அயோக்கியன். சீதையை சிறை பிடித்து வைத்து இருக்கிறான். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், அந்தணர்களுக்கு சொல்ல முடியாத துன்பங்களை செய்து கொண்டிருக்கிறான். யாருக்கும் எதுவும் கொடுக்காமல் எல்லாம் தனக்கே என்று எடுத்துக் கொள்பவன். வழி அல்லாத வழியில் செல்பவன்" என்று கூறினான்.


பாடல் 


தேசியைச் சிறையில் வைத்தான்;
    தேவரை இடுக்கண் செய்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்;
    மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா
    உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்;
    வழி அலா வழிமேல் செல்வான்.


பொருள் 



(pl click the above link to continue reading)

தேசியைச் = தேசு என்றால் ஒளி. ஒளி பொருந்திய தேவியை 


சிறையில் வைத்தான் = சிறையில் வைத்தான் 


தேவரை = தேவர்களுக்கு 


இடுக்கண் செய்தான் = துன்பம் செய்தான் 


பூசுரர்க்கு = பூ உலகின் தேவர் போன்ற அந்தணர்களுக்கு 


அலக்கண் ஈந்தான் = பல துன்பங்களை தந்தான் 


 மன்னுயிர் = நிலைத்த உயிர்களை 


புடைத்துத் தின்றான்; = கொன்று தின்றான் 


ஆசையின் அளவும் = அளவற்ற ஆசையால் 


எல்லா = அனைத்து 


உலகமும் தானே ஆள்வான் = அனைத்து உலகங்களையும் தானே ஆள்வான் 


வாசவன் = இந்திரனின் 


திருவும் கொண்டான் = செல்வங்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டான் 


வழி அலா வழிமேல்  = வழி அல்லாத வழியில் 


செல்வான் = செல்வான் 

அது என்ன வழி அலா வழி?

பேசாமல் தீய வழி என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே?


பெரியவர்கள் எப்போதும் உயர்ந்தவற்றையே நினைப்பார்கள். அவர்கள் வழி என்று சொன்னால் அது நல்ல வழி என்றுதான் கொள்ள வேண்டும். 


எனவே வழி அலா வழி என்பது தீய வழி. 



ஒளவையார் "வழியே ஏகுக, வழியே மீளுக" என்றாள். நல்ல வழியில் போய் , நல்ல வழியில் திரும்பி வா என்று அர்த்தம். 



 நெறியல்லா நெறி என்பார் மணிவாசகர்.



 நெறியல்லா நெறிதன்னை
    நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
    திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
    கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
    றார்பெறுவார் அச்சோவே 


இராவணன் கொடியவன். ஏன் ?

இலக்குவன் மூலம் கம்பர் பட்டியல் இடுகிறார். 

1. மாற்றான் மனைவியை கவர்ந்தான். 

2. நல்லவர்களுக்கு தீமை செய்தான் 

3. எல்லாம் தனக்கு என்று வைத்துக் கொண்டான். யாருக்கும் எதுவும் கொடுக்கும் மனம் இல்லை. 

4. பேராசை. இருக்கின்ற செல்வம் போதாது என்று மேலும் மேலும் அலைந்தான். 

இவை எல்லாம் தீய குணங்கள். இந்தக் குணங்கள் இருப்பவர்கள் தீயவர்கள். 

நம்மிடம் இந்தத் தீக் குணங்கள் இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும். 




[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html

கருணையின் நிலையம் அன்னான்


]


Saturday, May 6, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - மாசறு காட்சி யவர்

     

 திருக்குறள் - பயனில சொல்லாமை - மாசறு காட்சி யவர்



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


ஏன் பயனற்ற சொற்களை பேசுகிறோம்? 


இது பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா? 


பொழுது போகவில்லை, சும்மா அரட்டை அடிப்பது...


பேச ஒன்றும் இல்லை. சும்மா மெளனமாக இருக்க முடியுமா? எதையாவது பேசுவது. 


என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பது. 


இப்படி பல காரணங்கள். 


எல்லாவற்றையும் ஆராய்ந்து, வள்ளுவர் சொல்கிறார் 


நாம் தேவையற்ற சொற்களை பேசுவதற்கு காரணம் நம்மிடம் ஒரு தெளிவு இல்லாமை என்று. 


எது சரி, எது தவறு என்ற தெளிவு இல்லை. 


எது நல்லது, எது கெட்டது என்ற தெளிவு இல்லை. 


எது உண்மை, எது அபிப்ராயம் என்ற தெளிவு இல்லை. 


உண்மையை கண்டு பிடிக்க முயற்சி செய்வது இல்லை. சொல்வதை எல்லாம், கேட்பதை எல்லாம் 

நம்பிக் கொண்டு, அது தான் சரி என்று வாதம் செய்துகொண்டு திரிவது. 


இப்படி பல காரணங்களால் நம்மிடம் ஒரு தெளிவு இருப்பது இல்லை. 


பாடல் 

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post.html



(please click the above link to continue reading)



பொருள்தீர்ந்த = பொருள் தீர்ந்து போன, பொருளற்ற, அர்த்தம் இல்லாத, பயனில்லாத (சொற்களை)

 


பொச்சாந்தும் = மறந்தும் கூட 


சொல்லார் = சொல்ல மாட்டார்கள் 


மருள்தீர்ந்த = மயக்கம் நீங்கிய, மயக்கம் இல்லாத, 


மாசறு = குற்றம் இல்லாத 


காட்சி யவர் = பார்வை கொண்டவர்கள். 


மருள் என்றால் மயக்கம். 


இதுவா, அதுவா எது சரி என்று தெரியாமல் மயங்குவது. 


இதுவோ, அல்லது அதுவோ என்று குழம்புவது. 


எப்படி முடிவு செய்வது என்று அறியாமல் தவிப்பது. 


இந்த மயக்கம் முதலில் தீர வேண்டும். 


அப்படி தீர்ந்தால், மாசறு காட்சி கிடைக்கும். 


அது என்ன மாசறு காட்சி. 


நாம் ஒன்றை பார்க்கிறோம் (கேட்கிறோம், படிக்கிறோம்) என்றால் அது உண்மையில் என்ன என்று பார்பது கிடையாது. 


நமக்கு தெரிந்த, பிடித்த, நாம் நம்பும் வகையில் அவற்றைப் பார்ப்போம்.


அது குற்றம் உள்ள பார்வை. வேண்டியவன், வேண்டாதவன், பிடித்தது, பிடிக்காதது, என்பதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, தெளிவான காட்சி இருந்தால், பேச்சு குறையும். பயனற்ற பேச்சு குறையும். 


மருள் தீர்ந்த 

மாசறு காட்சி 


நம்மிடம், எத்தனை விடயங்களில் இப்படிப்பட்ட காட்சி இருக்கிறது?


நாம் நம்புவது எல்லாம் சரியாகி விடாது. நம்பிக்கையைத் தாண்டி உண்மை எது என்று அறிய வேண்டும். அந்த உண்மையின் மேல் ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது. அப்போது தெளிவான காட்சி கிட்டும். அப்போது பயனற்ற சொற்கள் மறையும். 







(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


பயனில சொல்லாமை நன்று




அரும்பயன் ஆயும் அறிவினார்