திருக்குறள் - ஒப்புரவறிதல் - வேளாண்மை
ஊருக்கு நல்லது செய்வது என்பதுதான் ஒப்புரவு.
எவ்வளவு செய்வது? யாருக்குச் செய்வது என்றெல்லாம் கேள்வி வரும். ஊருக்கு செய்வது என்றால் செய்து கொண்டே இருக்கலாம். எவ்வளவு செய்தாலும், மேலும், மேலும் வேண்டும் என்று தோன்றும். நம்மிடம் அவ்வளவு செல்வம் இருக்க வேண்டுமே.
அது முதல் சிக்கல்.
இரண்டாவது, ஊருக்குள் பல பேர் வேலை வெட்டி இல்லாமல், சோம்பேறியாக திரிந்து கொண்டிருப்பான். நல்லது செய்கிறேன் என்று அவர்களை எல்லாம் கூட்டி வந்து சாப்பாடு போட்டு பராமரிக்க முடியுமா?
மூன்றாவது, ஒருவனிடம் உள்ள செல்வம் அவன் மூதாதையர் தந்த செல்வமாக இருக்கலாம். பரம்பரை சொத்து என்று சொல்வார்கள். அதை தானம் செய்ய அவனுக்கு அதிகாரம் கிடையாது. பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அதற்கு வாரிசு. பணம் இருக்கும், ஆனால், கொடுக்க முடியாது.
நான்காவது, தவறான முறையில் சேர்த்த பணத்தில் அன்ன தானம் செய்கிறேன், தண்ணீர் பந்தல் வைக்கிறேன் என்று ஊருக்கு நல்லது செய்தால் அது சரியா? ஊரை ஏமாற்றி, பொய் சொல்லி, திருடி, இலஞ்சம் வாங்கி சேர்த்த பணத்தில் ஊருக்கு நல்லது செய்யலாமா?
இப்படி பல நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கொண்டு, ஒரே குறளில் அனைத்திற்கும் பதில் தருகிறார் வள்ளுவ ஆசான்.
பாடல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_20.html
(please click the above link to continue reading)
தாளாற்றித் = முயற்சி செய்து
தந்த = பெற்ற
பொருளெல்லாந் = பொருள் எல்லாம், செல்வம் எல்லாம்
தக்கார்க்கு = தகுதியானவர்களுக்கு
வேளாண்மை = உதவி
செய்தற் பொருட்டு = செய்வதற்காக
முயற்சியால் பெற்ற செல்வம் , மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக.
இதில் எங்கே மேலே சொன்ன கேள்விகளுக்கு விடை இருக்கிறது?
தாளாற்றி = முயற்சியால்.
அதாவது ஒருவனின் சொந்த சம்பாத்தியம். பரம்பரை சொத்து இல்லை.
மேலும், திருடி, கொள்ளை அடித்து அல்ல. வேலை செய்து, முயற்சியால் ஈட்டிய செல்வத்தைப் பற்றி இங்கே கூறுகிறார்.
தக்கார்க்கு = தகுதி உள்ளவர்களுக்கு. அரசியல்வாதிகளுக்கு நன்கொடை கொடுப்பதைப் பற்றி இங்கே கூறவில்லை. நாம் உதவி செய்ய, அதை பெற்றுக் கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்று அறிந்து செய்ய வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்லுவார்கள்.
வேளாண்மை செய்தல் = வேளாண்மை என்றால் உதவி. உதவி செய்யச் சொல்கிறார். இந்த அதிகாரம் ஒப்புரவு. எனவே, இது தனி மனித உதவி அல்ல. சமுதாய உதவி. சமுதாயத்தில் எந்தப் பிரிவினருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
பொருள் எல்லாம் = இது ஒரு சிக்கலான இடம். தன்னிடம் உள்ள பொருள் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் சொல்கிறார். அது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று. எல்லாவற்றையும் எப்படி கொடுக்க முடியும். இதற்கு சரியான பொருள் எனக்குத் தெரியவில்லை. எப்படி வலிந்து பொருள் சொன்னாலும், அது மனதுக்கு சரி என்று படவில்லை. சிந்திக்க வேண்டிய இடம். அறிவும், அனுபவமும் வளர்ந்தால், ஒரு வேளை இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வரலாம். பொறுத்து இருக்க வேண்டும்.
இந்தப் குறளில் பரிமேலழகர் ஒரு பெரிய நுணுக்கம் செய்கிறார். உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்று பாருங்கள்.
இந்த குறளை இரண்டு விதமாக பிரிக்கலாம்.
தாளாற்றி தந்த பொருள் எல்லாம்
தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு
என்று பிரித்தால், நாம் மேலே சொன்ன பொருள் வரும்.
மாறாக, பரிமேலழகர் இதை,
தாளாற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்று பிரிக்கிறார்.
அதாவது, முயற்சியால் வரும் பொருள் எல்லாம் நல்லவர்கள் கையில் போய் சேர்ந்தால், அது பிறருக்கு உதவியாகப் பயன்படும் என்று பொருள் கொள்கிறார்.
தாளாற்றி வந்த செல்வம் எல்லாம் தக்கார்க்கு ஆயின், அவர்களுக்கு கிடைக்கும் என்றால், அது வேளாண்மை செய்தல் பொருட்டு, அது ஊருக்கு உதவி செய்ய கிடைத்த மாதிரி என்று பொருள் கொள்கிறார்.
நல்லவன் கையில் கிடைத்த பொருளால் ஊருக்கு நன்மை உண்டு; கெட்டவன் கையில் கிடைத்த பொருளால் ஊருக்கு ஒரு நன்மையையும் இல்லை. தனக்கும் தன் குடும்பத்துக்கும் என்று வைத்துக் கொள்வான் என்று பொருள் சொல்கிறார்.
கொஞ்சம் நீட்டித்து பொருள் சொல்வதாகப் படுகிறது.
உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.