Sunday, February 24, 2013

இராமாயணம் - பள்ளி எழுச்சி


இராமாயணம் - பள்ளி எழுச்சி 


இறைவனை துயில் எழுப்புவது நம் பக்தி இலக்கியங்களில் ஒரு பகுதியாக இருக்கிறது

திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, சுப்ரபாதம் என்று இறைவனை துயில் எழுப்பும் பாடல்கள் உள்ளன.

அது இறைவனை துயில் எழுப்புவதா அல்லது நமக்குள் உறங்கி கிடக்கும் ஏதோ ஒன்றை துயில் எழுப்புவதா ?

சீதையை கன்னி மாடத்தில் பார்த்தபின் இரவெல்லாம் அவள் நினைவாகவே இராமன் இருக்கிறான்...அந்த நினைவிலேயே தூங்கிப் போகிறான்.

மறு நாள் காலை...

இராமன் உறங்குகிறான்.

கதிரவன் எழுகிறான். தன்னுடைய கிரணங்கள் என்ற கையால் அவன் பாதம் வருடி அவனை எழுப்புகிறான். பெரியவர்களை எழுப்பும் போது அவர்கள் பாதம் தொட்டு எழுப்ப வேண்டும் என்பது மரபு.


பாடல்


கொல் ஆழி நீத்து, அங்கு ஓர் குனி வயிரச் சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே.



பொருள்



Saturday, February 23, 2013

அபிராமி அம்மை பதிகம் - நம்மை துரத்துபவை

அபிராமி அம்மை பதிகம் - நம்மை துரத்துபவை 


பிறந்தது முதல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்று நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது. 

அபிராமி பட்டர் பட்டியல் போடுகிறார்....

பாடல் 


மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி 
     ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, 
     மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் 
     துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், 
     பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, 
     வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை 
     நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! 
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! 
     அருள் வாமி! அபிராமியே! (11) 


பொருள்
 

இராமாயணம் - ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் ?



இராமாயணம் - ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் ?


காப்பியத்தை அதன் போக்கிலேயே சென்று இரசிப்பது ஒரு வகை.

காப்பியத்தின் போக்கு வேறு விதமாக போய்  இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து இரசிப்பது இன்னொரு வகை.

உதாரணத்திற்கு ஒன்றிண்டை சிந்திப்போமா ?

தசரதன் இராமனை கானகம் போகச் சொன்னான். இராமன் அதை ஏற்றுக் கொண்டு கானகம் போனான்.

ஒரு வேளை இராமன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகி இருக்கும் ?

ஒரு வேளை  இராமன் "இந்த இராஜ்ஜியம் எனக்கு உரியது. நான் இதை ஏற்க்க மறுத்தால் அது முறை அன்று. யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். வேண்டுமானால் பரதனை கூப்பிடுங்கள். கேட்டு விடுவோம்....அவனுக்கு இது சம்மதமா""  என்று இராமன் ஆரம்பித்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் ?

முதலில், தசரதன் வாய்மை தவறினான் என்ற பழிச் சொல் வந்திருக்கும் கைகேயிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதவன் என்ற பழி வந்து இருக்கும்.


இரண்டாவது, தசரதனை தந்தையாகப் பார்க்காமல் அரசனாகப் பார்த்தால், இராமன் அரச ஆணையை மீறினான் என்ற குற்றம் வந்து சேரும். நாளை இராமன் பதவி ஏற்றப் பின் ஒரு ஆணை பிறப்பித்தால் அதை யாரும் மதிக்க மாட்டார்கள். இராமன் அரசாணையை மீறலாம் என்றால் மற்றவர்கள் ஏன் மீறக் கூடாது ?

மூன்றாவது, இராஜியத்தில் உள்ள பிள்ளைகள் யாரும் தந்தை சொல் கேட்க்க மாட்டார்கள். இராமனே கேட்க்கவில்லை, நாங்கள் ஏன் கேட்க்க வேண்டும் என்று அந்த பிள்ளைகள் கேட்டால் என்ன பதில் சொல்லுவது ? அன்று மட்டும் அல்ல...இன்று வரை பிள்ளைகள் அதையே சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இராமன் என்பவன் இந்த கலாசாரத்தின் ஒரு அடையாளமாக இல்லாமல் போய்  இருப்பான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இராமாயணத்தை பற்றி சொல்லவே மாட்டார்கள்

நான்காவது, இராமனுக்கு தசரதன் மேல் அவ்வளவு ஒன்றும் அன்பு இல்லை என்று ஆகும். "போய்யா , உனக்கு ஒரு வேலை இல்லை " என்று இராமன் சொல்லி விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு இடையே நல்ல உறவு இல்லை என்றே ஆகி இருக்கும். தசரதன் நல்ல தந்தை இல்லை, இராமன் நல்ல மகன் இல்லை என்றே ஆகி இருக்கும்.

இராமன் தன் சுகம், தன்  சந்தோஷம் மட்டும் நினைக்க வில்லை. வரும் கால காலத்திற்கு தன்  செயல் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு செயல் பட்டிருக்கிறான் என்பது புரியும்.

இதை எல்லாம் ஏதோ நான் சொந்தமாக சிந்தித்து சொல்வதாக நினைக்காதீர்கள்....வால்மீகியும், கம்பனும் இதை எல்லாம் சிந்தித்து மட்டும் அல்ல சொல்லி விட்டே போய்  இருக்கிறார்கள்....நான் அதை எடுத்துச் சொல்கிறேன்..அவ்வளவு தான்.

இலக்குவனை இராமன் சமாதனப் படுத்தும் இடம்....

பாடல்


நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான். 


பொருள்



Friday, February 22, 2013

திருக்குறள் - அடக்கம்

திருக்குறள் - அடக்கம்



காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனிநூஉங் கில்லை உயிர்க்கு



நம்மிடம் யாரவது வந்து உங்களிடம் என்னென்ன சொத்துக்கள் (உடமைகள்) இருக்கிறது  கேட்டால் நாம என்ன சொல்லுவோம்...

...கொஞ்சம் பணம், நகை, நட்டு, வீடு, பிளாட்டு, பங்கு பத்திரம், வங்கி கணக்கு அப்படின்னு ஒரு பெரிய பட்டியல் தருவோம்.

வள்ளுவர் இன்னொரு பட்டியல் வைத்து இருக்கிறார் ...எது எல்லாம் ஒருவனுக்கு உடமைகளாக இருக்க வேண்டும் என்று....

- அறிவுடைமை
- அருளுடைமை
- ஒழுக்கமுடைமை
- ஆள்வினை உடைமை (personality )
-  பண்புடைமை
- நாணம் உடைமை
- பொறை உடைமை

இது எல்லாம் இல்லாமல் மத்த உடமைகளால் என்ன பயன் ?

இதனுடன் சேர்த்து அடக்கமுடைமை என்று அடக்கத்தையும் ஒரு உடமையாக, ஒரு சொத்தாக வள்ளுவர் கூறுகிறார்.

அடக்கம் என்றால் எதுவோ எதிலோ அடங்குவது.

அது தானே அடக்கம்.

அடக்கம் ஒரு உடமை என்றால் அது ஒரு சொத்து போல. ஒரு பொருள் போல.

பொருள் என்றால் அது சிறந்த பொருளா இல்லை வேண்டாத ஒரு பொருளா என்ற கேள்வி எழும் அல்லவா.

வள்ளுவர் சொல்கிறார், அடக்கம் என்பது ஒரு நல்ல, விலை மதிக்க முடியாத பொருள்.

அது காக்க பட வேண்டிய ஒரு பொருள். அலட்சியமாக தூக்கி எரிந்து விடக் கூடிய பொருள் அல்ல.

காக்க பொருளா அடக்கத்தை என்கிறார் வள்ளுவர். ஒரு பொருளை போல அடக்கத்தை காக்க வேண்டும்.

சரி அப்படி அடக்கத்தை காத்தால் நமக்கு என்ன கிடைக்கும் ?

ஆக்கம் அதனிநூஉங் கில்லை உயிர்க்கு

அப்படி காப்பாற்றினால் உயிர்க்கு அதை விட சிறந்த ஆக்கம் இல்லை.

எதை அடக்க வேண்டும் ?

புலன்களை, மனதை அடக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நாக்கை.

யாகாவாராயினும் நா காக்க என்றார் வள்ளுவர்.

எல்லா புலன்களையும் காக்க வேண்டும். ஒரு வேளை  எல்லாவற்றையும் காக்க முடியா விட்டால், நாக்கை மட்டுமாவது காக்க வேண்டும்.

கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும்
கண்டதை பேசி நம்மையும் பிறரையும் சங்கடத்தில் வைக்காமல் இருக்கவும் குறைந்த பட்சம்  நாக்கையாவது அடக்க வேண்டும்.

அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில் ,ஒரு குறளுக்குள் இவ்வளவு விஷயம். மொத்தம் 1330 குறள் இருக்கு.

அவ்வளவு தான் நான் சொல்வேன். 

Thursday, February 21, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - வேதங்களை காப்பவர்



இராமானுஜர் நூற்றந்தாதி - வேதங்களை காப்பவர் 


வேதம்.

எப்போது அது எழுதப் பட்டது, யார் அதை எழுதினார்கள் என்று தெரியாது.

காகிதமும், அச்சுக் கலையும் , கணணிகளும் இல்லாத காலத்தில் இருந்து அந்த வேதங்களை இன்று வரை நமக்காக பத்திரப் படுத்தி கொண்டு வந்து தந்தது யார் ?

சிதைந்தும் காணமல் போகவும் எவ்வளவோ காரணங்கள் இருந்தும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படாமல் பத்திரமாக வந்து சேர்ந்து இருக்கிறது என்றால் அது யாரால் ?

எத்தனையோ நல்லவர்கள், பெரியவர்கள் இனி வரும் காலத்தின் சந்ததிகளுக்கும் பயன் பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அந்த வேதங்களை காத்து நம்மிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்.

அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நாம் நன்றி சொல்வோம்.

பாடல்

இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.

 சீர் பிரித்த பின்

இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் 
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் 
மறையினை காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே 

பொருள்


Wednesday, February 20, 2013

இராமாயணம் - வெந்துயர் கடலில் வீழ்ந்தேன்


இராமாயணம் - வெந்துயர் கடலில் வீழ்ந்தேன் 


வாலி வதைக்குப் பின்னால் சுக்ரீவன் பட்டாபிஷேகம் நிகழ்கிறது.

முடி சூட்டு விழாவிற்குப் பின், இராமன் சுக்ரீவனுக்கு பலப் பல அறிவுரைகள் கூறுகிறான்.

யாரையும் சிறியவர்கள் என்று எண்ணி ஏளனம் செய்யாதே. அப்படி கூனியையை ஏளனம் செய்ததால் நான் இன்று துயரப் படுகிறேன்.

பாடல்


சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

பொருள்


திருக்குறள் - உறக்கமும் விழிப்பும்


திருக்குறள் - உறக்கமும் விழிப்பும் 


உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள் 

தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது.

அது தான் இறப்பது. 

தூங்குவது போலும் சாக்காடு.

இறப்பது என்பது தூங்குவதைப் போல என்கிறார் வள்ளுவர் 

அது எப்படி ? தூங்குனா காலைல முழிச்சுகுவோம்ல...செத்து போய்டா எப்படி முழிப்போம் ? என்று நீங்க கேட்பது வள்ளுவருக்கு கேட்டிருக்கிறது.

தூங்கி விழிப்பது போலும் பிறப்பு 

அப்படினுட்டார்....

நீங்க பிறந்தது தூங்கி   முழிச்ச மாதிரி. 

தூங்கினது வேற ஆளு, முழிச்சது வேற ஆளுன்னு நீங்க சொல்றீங்க.

வள்ளுவர் அப்படி நினைக்கலியே. தூங்கியதும், விழித்ததும் ஒரே ஆள் தான், வேற வேற உடல். ஆள் ஒண்ணு தான் என்கிறார். 

தூங்குவதும் விழிப்பதும் உடலுக்கு எப்படி தினம் நடக்கும் சர்வ சாதாரணமான ஒரு நிகழ்ச்சியோ அது போல இறப்பதும் பிறப்பதும் உயிருக்கு சாதாரணமான நிகழ்ச்சி. 

இறப்பதும், பிறப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும் ஒரு சுழற்சியான நிகழ்ச்சி. 

இதுக்கு போய்  அலட்டிக்கலாமா ?

உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு