Sunday, May 11, 2014

இராமாயணம் - மண்டோதரி புலம்பல் - கடல் மேல் மின்னல் வீழ்ததென

இராமாயணம் - மண்டோதரி புலம்பல் - கடல் மேல் மின்னல் வீழ்ததென 


இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அரக்கியர்கள் எல்லோரும் அவன் மேல் விழுந்து அழுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மண்டோதரி வருகிறாள்.

மண்டோதரி புலம்பலில் நாம் சோகத்தையும், வாழ்வின் நிலையாமையும், ஆறாம் பிறழ்ந்த வாழ்வின் முடிவும், விதியின் வலியும் , இறைத் தத்துவங்களையும் காண முடியும்.



இராவணன் மேல் மண்டோதரி வந்து விழுகிறாள். கடல் மேல் மின்னல் விழுந்தது மாதிரி இருந்தது என்கிறான் கம்பன்.

என்ன உதாரணம் இது ?

இராவணின் மேனி பெரிய கரிய மேனி. கடல் போல. மண்டோதரி மின்னல் போல மெலிந்து, ஒளி பொருந்தியவள் என்பது ஒரு அர்த்தம்.

கடல் மேல் மின்னல் விழுந்தால் அதைப் பின் கடலில் இருந்து பிரித்து எடுக்க முடியாது என்பது ஒரு அர்த்தம்.

மின்னல் கடல் மேல் விழுந்தால், கடலுக்கு ஒன்றும் ஆகி விடாது. ஆனால், அதே மின்னல் வேறு எதன் மேல் விழுந்தாலும் அது எரிந்து சாம்பாலாகி விடும். பெண், கணவனோடு சேர்ந்தால் ஒரு குழப்பமும் இல்லை. மாறாக பிற ஆடவன் தீண்டினால், அவனை எரிக்கும் அவள் கற்பு.  கற்பின் பெருமையை சொல்லும் அர்த்தம் இன்னொன்று.


அப்படி மண்டோதரி புலம்பும் போது வாய் இல்லாத மரங்களும் மலைகளும் அதைக் கண்டு உருகின.



பாடல்

தரங்க நீர் வேலையில் தடித்து வீழந்தென,
உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள், 
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து, 
இரங்கினள் - மயன் மகள், - இனைய பன்னினாள்: 

பொருள்

தரங்க நீர் = அலை கொண்ட நீர்

வேலையில் = கடலில்

தடித்து வீழந்தென = மின்னல் விழுந்தது போல

உரம் = வலிமை

கிளர் = பொங்கும்

மதுகையான் = இராவனைனிடம்

உருவின் உற்றனள் = உடலின் மேல் விழுந்து

மரங்களும் மலைகளும் உருக = மரங்களும் மலைகளும் உருக

வாய் திறந்து = வாய் திறந்து

இரங்கினள் = அழுதாள்

மயன் மகள் = மயனின் மகள்

இனைய பன்னினாள் = இவற்றை செய்தாள் . அதாவது பின் வரும் புலம்பலாகிய செயலைச் செய்தாள்.

பின் வரும் மண்டோதரியின் புலம்பலுக்கு கட்டியம் கூறுகிறான் கம்பன்.

மண்டோதரியின் வாயிலாக இராமனின் மன நிலை, கம்பனின் மன நிலை, இராவணன் மேல்  மண்டோதரி கொண்ட பாசம், அத்தனையும் வெளிப் படுகிறது.

அவற்றைப் பார்ப்போம்.



நீதி நூல் - பட்டினியே நல்ல மருந்து

நீதி நூல் - பட்டினியே நல்ல மருந்து 


பசித்து இருப்பது நல்லது. பசிக்காமல் இருக்கும் போது உண்பது நோய் செய்யும். அந்த நோய்க்கு மருந்து ஒன்றும் கிடையாது, பட்டினி போடுவதைத் தவிர.

சாப்பிடுவது என்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை.

நினைத்த போது நினைத்ததை சாப்பிடக் கூடாது. எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், ஏன் சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும்  என்று அறிந்து உண்ண வேண்டும். காரண காரியங்களை அறிந்து உண்ண வேண்டும்.

பாடல்

பாரண மின்றிச் சின்னாள் பசித்திருந் தாலு நன்றாஞ்
சீரண மின்றி யுண்ணும் தீனிநோய் செயும தற்கோர்
சூரண மிலைமெய்த் தன்மை துவ்வுணாத் தன்மை யேனைக்
காரண காரி யங்கள் கண்டுண்பா ரறிஞ ரம்மா.

சீர் பிரித்த பின்

பாரணம் இன்றி சில நாள் பசித்து இருந்தாலும் நல்லதாம் 
சீரணம் இன்றி உண்ணும்  தீனி நோய் செய்யும் அதற்கு ஓர் 
சூரணம் இல்லை மெய்த் தன்மைது உண்ணாத்  தன்மை யேனைக்
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா 


பொருள்

பாரணம் இன்றி = உணவு இன்றி

சில நாள் = சில நாள் (சில மணி நேரம் இல்லை )

பசித்து இருந்தாலும் = பசியோடு இருந்தாலும்

நல்லதாம் = நல்லதே

சீரணம் இன்றி = முன் உண்ட உணவு சீரணம் ஆவதற்கு முன்னால்

உண்ணும்  = உண்ணும்

தீனி = உணவு அல்ல தீனி. தீனி என்பது விலங்குகள் உண்ணும் உணவு.

நோய் செய்யும் = நோயை உண்டாக்கும்

அதற்கு ஓர் சூரணம் இல்லை = அந்த நோய்க்கு மருந்து இல்லை.

மெய்த் தன்மைது = உண்மை உணர்ந்து

உண்ணாத்  தன்மை யேனைக்  = உண்ணாத தன்மையே அதற்கு மருந்து

காரண காரியங்கள் கண்டு  = உண்பதற்கான காரண காரியங்களை கண்டு

உண்பார் = பின் அதுற்கு தகுந்த மாதிரி உண்பார்கள்

அறிஞர் அம்மா = அறிஞர்கள்.

காரணம் காரியம் இல்லாமல் உண்பவர்கள் மடையர்கள் என்பது சொல்லாமல்  சொன்ன பொருள்.



Saturday, May 10, 2014

இராமாயணம் - இறந்த பின்னும் மறக்காத மனம்

இராமாயணம் - இறந்த பின்னும் மறக்காத மனம் 



இருக்கும் போது காதலிப்பவர்களை கேட்டு  இருக்கிறோம்.இறந்த பின்னும் காதலிப்பவர்களை கேட்டு இருக்கிறோமா ?


இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அவன் மேல் அரக்கியர்கள் எல்லாம் விழுந்து அழுகிறார்கள்.

அவர்களுக்குத் தெரியும் இராவணன், சீதை மேல் கொண்ட காதல்.

அறம் தொலைந்து போக மனத்தில் சீதையை மனத்தில் அடைத்து வைத்தாய். அவளை இன்னுமா மறக்கவில்லை. அவளை மறக்காததால் எங்களோடு பேச மாட்டேன் என்கிறாய். எங்களை கண் திறந்தும் பார்க்க மாட்டேன் என்கிறாய். எங்களுக்கு அருளும் செய்ய மாட்டேன் என்கிறாய். ஒரு வேளை நீ இறந்து விட்டாயோ என்று ஏங்கி அழுதனர்.


பாடல்

அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர் 
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை; 
இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். 

பொருள்

அறம் தொலைவுற = அறம் தொலைந்து போக

மனத்து அடைத்த சீதையை = மனதில் அடைத்து வைத்த சீதையை

மறந்திலையோ, இனும்? = இன்னுமா மறக்காமல் இருக்கிறாய் ?

எமக்கு = எங்களுக்கு

உன் வாய்மலர் திறந்திலை = உன் வாய் என்ற மலரை திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேன் என்கிறாய்

 விழித்திலை; = எங்களை பார்க்கவும் மாட்டேன் என்கிறாய்

அருளும் செய்கிலை = எங்களுக்கு அருளும் செய்யவில்லை

இறந்தனையோ?' = ஒருவேளை இறந்து விட்டாயோ

என இரங்கி, ஏங்கினார் = என வருத்தப் பட்டு ஏங்கி அழுதனர்

சீதையின் நினைவாகவே இருந்ததால் பார்கவோ , பேசவோ இல்லையோ என்று அவர்கள்  நினைத்தார்கள். அது இராவணனின் காதலின் ஆழம்.



Friday, May 9, 2014

இராமாயணம் - திருத்தமே அனையவன்

இராமாயணம் - திருத்தமே அனையவன்


பிரமன் இராவணனைப் படைத்தான். ஏதோ சரி இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

கொஞ்சம் திருத்தினான். அப்புறமும் சரி இல்லை என்று பட்டது.

இன்னும் கொஞ்சம் திருத்தினான்.

இப்படி மாறி மாறி திருத்தி திருத்தி உன்னதமாக வடிவமைக்கப் பட்ட உருவம் இராவணனின் உருவம்.

திருத்தங்களின் மொத்த உருவம் அவன். Perfect Person. "திருத்தமே அனையவன்"

அப்பேற்பட்ட இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அவன் மேல் அரக்கியர்கள் விழுந்து அழுகிறார்கள்.

அவர்களுக்கு வாழ்க்கை என்ன என்றால் அவனோடு எப்போதும் பொருந்தி வாழ்வது மட்டும்தான்.

அவர்களுக்குத் துன்பம் எது என்றால் அவனை விட்டு பிரிந்து இருப்பது மட்டும்  தான்.

அப்படிப்பட்ட அரக்கியர் அவன் மேல் விழுந்து புலம்பினார்கள். அவர்கள் உடல் அவன் மேல் விழவில்லை....அவர்களின் உயிர் அவன் மேல் விழுந்து அழுததாம்.

பாடல்

வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். 


பொருள்

வருத்தம் ஏது எனின் = (அரக்கியர்களுக்கு) வருத்தம் என்ன என்றால்

அது புலவி = (இராவணனை விட்டு விலகி இருத்தல்)

வைகலும் = நாளும்

பொருத்தமே வாழ்வு  = அவனோடு பொருந்தி இருப்பதே வாழ்க்கை

எனப் பொழுது போக்குவார் = என பொழுதைப் போக்குவார்

ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து = ஒருவர் மேல் ஒருவர் விழுந்து

உயிரின் புல்லினார் = உயிரால் தழுவினார்கள்

திருத்தமே அனையவன்  = திருத்தங்களின் மொத்த உருவமான இராவணனின். இந்த வார்த்தைக்கு பல பொருள் சொல்கிறார்கள். திருத்தி அமைக்கப் பட்ட தோள்கள் என்கிறார்கள். தீர்த்தம் என்பதன் மருஊ என்று பாடம் சொல்வாரும் உண்டு.  தவறுகள் ஏதும் இன்றி, அப்பழுக்கு இல்லாத வடிவம் உடையவன் இராவணன் என்பது சரியான அர்த்தம் என்று தோன்றுகிறது.  

சிகரத் தோள்கள்மேல் = மலை போன்ற தோள்களின் மேல் 

Thursday, May 8, 2014

பழ மொழி - சொல்லாக்கால் சொல்லுவது இல்

பழ மொழி - சொல்லாக்கால் சொல்லுவது இல்


சொல் திறம், சொல் வன்மை என்பது மிக மிக இன்றி அமையாதது.

சில பேர் நன்றாகப் படித்து அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். கடுமையாக வேலையும் செய்வார்கள். இருந்தாலும் வாழ்வில் முன்னேற முடியாமல் தவிப்பார்கள். அவர்களை விட அறிவும், அனுபவும் குறைந்தவர்கள் மேலே மேலே சென்று கொண்டே இருப்பார்கள்.

காரணம் - சொல் திறம். எப்படி பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும், எதைப் பற்றி பேச வேண்டும் என்ற பேச்சுத் திறன் இன்மையால்.

பெரும் தவம் செய்த முனிவர்களுக்குக் கூட நா வன்மை இல்லை என்றால் அவர்களின் தவத்தால் ஒரு பயனும் இல்லை என்கிறது இந்த பழமொழிப் பாடல்.

பாடல்

கல்லாதான் கண்டகழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு)அடு கிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.

பொருள் 

கல்லாதான் = படிக்காதவன்

கண்ட = அறிந்த

கழிநுட்பம் = ஆழ்ந்த நுண்ணிய பொருள்

காட்டரிதால் = மற்றவர்களுக்கு சொல்ல முடியாது

நல்லேம்யாம் = இருப்பினினும், அவன் தான் நல்லவன் அறிஞன் என்று

என்றொருவன் = என்று ஒருவன் தனக்குத் தானே

நன்கு மதித்தலென் = நன்றாக பெருமை பட்டுக் கொண்டால் என்ன பயன்

சொல்லால் = மந்திரங்களால்

வணக்கி = வழிபட்டு

வெகுண்(டு) = சாபம் தரும் அளவுக்கு கோபம் கொண்டு

அடு கிற்பார்க்கும் = செயல்களை செய்யும் முனிவர்களுக்கும்

சொல்லாக்கால் சொல்லுவது இல் = தாங்கள் அறிந்தவற்றை சொல்ல முடியாவிட்டால் , அவர்களைப் பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

மற்றவர்களிடத்து எடுத்துச் சொல்ல முடியாவிட்டால், கற்றவனும் கல்லாதவன் போலவே கருதப்  படுவான்.

என்ன படித்து என்ன பயன், பரிட்சையில் ஒழுங்காக எழுதாவிட்டால் குறைந்த மதிப்பெண்கள் தானே கிடைக்கும்.

அறிந்ததை, தெரிந்ததை, செய்ததை மற்றவர்கள் அறியும்படி அழகாகச் சொல்லத் தெரிய வேண்டும்.

நீங்கள் அது மாதிரி சொல்லா விட்டால் உங்களைப் பற்றி மற்றவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  குடத்தில் இட்ட விளக்காய் இருக்க வேண்டியதுதான்.

பேசப் படியுங்கள்.



இராமாயணம் - நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்

இராமாயணம் - நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்


போரில் இறந்து கிடக்கும் இராவணனை காண அவன் மனைவி மண்டோதரி வருகிறாள்.

அவளின் கற்பை சீதையின் கற்புக்கு இணை சொல்வான் கம்பன். அனுமனே மண்டோதரியைப் பார்த்து அவள் சீதையோ ஒரு கணம் திகைத்தான்.

மண்டோதரி கணவனை ஒரு பொழுதும் மறக்காத மனம் படைத்தவள். நினைப்பும் இல்லை, மறதியும் இல்லை.


நினைந்ததும் மறந்ததும் இல்லாத நெஞ்சினள்  .என்கிறான் கம்பன்.

பாடல்

அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, எய்தினாள் என்ப -
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 

பொருள்


அனந்தம் = அநேகம்

நூறாயிரம் = நூறு ஆயிரம்

அரக்கர் மங்கைமார் = அரக்கப் பெண்கள்

புனைந்த பூங் குழல் = முடித்த தலை முடியை

விரித்து = விரித்து

அரற்றும் = அழுது

பூசலார் = வணங்குபவர்கள்  (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்)


இனம் தொடர்ந்து உடன் வர = அந்த அரக்கியர் என்ற  இனம் தொடர்ந்து கூட வர

எய்தினாள் = இராவணன் இறந்து கிடக்கும் இடத்தை அடைந்தாள்

என்ப = அடைந்தது யார் தெரியுமா ? இது வரை அப்படி வந்தது யார் என்று சொல்லவில்லை.  அடுத்த வரியில் சொல்கிறான்.

நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் = நினைப்பும் மறப்பும் இல்லாத மனம் கொண்டவள்

எவ்வளவு  உயர்ந்த பெண் ?

கணவன் இன்னொரு பெண்ணை  விரும்பினான் என்று தெரிந்த போதும் அவனை வெறுத்து ஒதுக்கி விடவில்லை. அவனோடு துணை நின்றாள்.

இன்னும் தொடர்ந்து வரும் பாடல்களையும் பார்ப்போம்.



Wednesday, May 7, 2014

பழ மொழி - நல்லாரை நல்லாரே உணர்வர்

பழ மொழி - நல்லாரை நல்லாரே உணர்வர் 


உங்களை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, உங்கள் நல்ல மனதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று வருத்தப் பட்டது உண்டா ?

கவலையை விடுங்கள்.

படித்த அறிஞனை இன்னொரு அறிஞனால்தான் அறிய முடியும். முட்டாளால் அறிவாளியை அறிய முடியாது.

அது போல நல்லவர்களை இன்னொரு நல்லவன் தான் அறிய முடியும். மற்றவர்களால் முடியாது.

இரும்பை பிளக்க  வேண்டும் என்றால் அது இன்னொரு இரும்பு அல்லது இரும்பை விட உறுதியான ஒன்றினால்தான் முடியும்.

முட்டாள்களோடு பேசியோ, வாதம் பண்ணியோ புண்ணியம் இல்லை. அவர்கள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

நல்லவர்கள் தான் நல்லவர்களை அறிவார்கள்.

பாடல்

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில்.


பொருள் 

நல்லார் = நல்லவர்களின்

நலத்தை = நல்ல குணத்தை

உணரின்= உணர வேண்டும் என்றால்

அவரினும் நல்லார் உணர்ப = அவரை விட நல்லவர்களே அதை உணர்வார்கள்

 பிறருணரார் = பிறர் உணர மாட்டார்கள்

நல்ல = நல்ல

மயிலாடு = மயில் ஆடுகின்ற

மாமலை = பெரிய மலையை

வெற்ப = அரணாகக் கொண்டவனே 

மற்(று) என்றும் = மற்றபடி எப்போதும்

அயிலாலே = இரும்பாலே

போழ்ப = பிளக்க முடியும்

அயில் = இரும்பை

உங்களை விட நல்லவர்களைத்  போங்கள் , அவர்கள் உங்களை அறிந்து கொள்வார்கள்.

உங்களை விட கீழே உள்ளவர்கள் உங்களை ஒரு காலும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.