Saturday, June 14, 2014

திருக்குறள் - தவறு செய்த பின் ....

திருக்குறள் - தவறு செய்த பின் ....


பாடல்

எற்றென் றிரங்குவசெய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று.

சீர் பிரித்த பின்

எற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன் 
மற்று அன்ன செய்யாமை நன்று 

"ஐயோ என்ன தவறு செய்து விட்டோம்" என்று நினைத்து வருந்தும்படியான தவறுகளை ஒருவன் செய்யக் கூடாது. ஒரு வேளை அவ்வாறு செய்து விட்டால், அதை நினைத்து இரங்காமல்  இருக்க வேண்டும்"

சற்றே சிக்கலான குறள். முதல் பாதி சரியாகப் புரிகிறது. தவறு செய்யக் கூடாது என்கிறார்.

தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது.

அது வள்ளுவருக்கும் தெரியும்.

 எனவே,ஒரு வேளை தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை   தருகிறார்.

அந்த விடையில் தான் சிக்கல். உரை எழுதிய பெரியவர்கள் வேறுபட்ட உரைகளைத்  தருகிறார்கள். அனைத்தையும் தொகுத்துத் தருகிறேன்.

சரி என்று படுவதை எடுத்துக் கொள்ளுங்கள்.

பரிமேல் அழகர் சொல்கிறார் - செய்த தவறுக்காக இரங்கக் கூடாது என்று. அதற்கு  அவர் சொல்லும் காரணம், முதல் வரியில் 


எற்றென் றிரங்குவசெய்யற்க

எற்று என்று இரங்குவது செய்யற்க என்று வருகிறது. பின்னால் மற்றன்ன செய்யாமை நன்று என்பதில் வரும் மற்று என்ற வார்த்தை முன்னால் வரும் "இரங்கத் தக்க செயல்களையே " குறிக்கும்.

ஒரு தவறான செயலை செய்து விட்டு, செய்து விட்டோமே, செய்து விட்டோமே என்று  அதை நினைத்து இரக்கப்பட்டுக் கொண்டு இருப்பதில் ஒரு புண்ணியமும்  இல்லை. என்று வள்ளுவர் சொல்லுவதாக பரிமேலழகர் சொல்கிறார்.

அதாவது, அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடச் சொல்கிறார். குற்ற உணர்வு  எதையும் சாதிக்க பயன்படாது.

இது அனைத்து மதங்களிலும் கடை பிடிக்கப் படும் ஒன்றுதான்.

மனிதனை அவனின் பாவச் சுமையை குறைக்க ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கிறது.

பாவ மன்னிப்பு, கங்கையில் சென்று நீராடுதல், காசி போன்ற புனித தலங்களுக்குப் போதல் போன்றவை பாவத்தில் இருந்து விடுதலை தரும் என்று மதங்கள்  போதிக்கின்றன.

இன்னொரு அர்த்தம் - மணக்குடவர், தேவநேய பாவணர் போன்றோர் கூறியது.

மற்றன்ன செய்யாமை நன்று என்றால் - அது போல மீண்டும் தவறுகளைச் செய்யக் கூடாது  என்பதாகும்.

மீண்டும் மீண்டும் வருந்தத் தக்க தவறுகளை செய்யக் கூடாது  

நாம் இரண்டையும் எடுத்துக் கொள்வோமே ....

மீண்டும் அது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது, செய்த தவறுக்கு வருந்திக் கொண்டே  இருக்கக் கூடாது . மேலே ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.

மற்றன்ன செய்யாமை நன்று.......

சிந்திக்க வேண்டிய தொடர்


Friday, June 13, 2014

இராமாயணம் - வருவது நாள் அன்றி வராது

இராமாயணம் - வருவது நாள் அன்றி வராது 


கம்பன் விதியை மிக ஆழமாக நம்புபவன்.

எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்று பல இடங்களில் சுட்டிக் காட்டுக்கிறான்.

விதியை  எதிர்ப்பேன் என்று புறப்பட்ட இலக்குவன் கூட பின்னாளில் சீதை அவனை இராமனைத் தேடித் போ என்று அனுப்பியபோது விதியை நொந்து, நம்பி போனான் என்று காட்டுவான்.

இங்கே , சூர்பனகை இராவணனிடம் சொல்லுகிறாள்.

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சீதை கிடைக்க நீ இத்தனை காலம் காத்து இருக்க வேண்டி இருந்தது. பெரிய பெரிய தவம் செய்யும் முனிவர்களுக்குக் கூட விதிப் படித்தான் எல்லாம் நடக்கும். எனவே, கவலைப் படாதே, உன் தவப் பயன், நீ இன்று சீதையை அடையப் போகிறாய்.

அவள் அழகை இரண்டு கண்ணால் இரண்டு கையால் அனுபவிக்க முடியாது. உங்கக்குத் தான் இருபது  கண்களும்,இருபது கைகளும் இருக்கின்றதே. நீ அவளின் அழகை முழுவதும் அனுபவிக்க முடியும் என்று கூறுகிறாள்.

பாடல்

“தருவது விதியே என்றால்,
    தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி,
    வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும்,
    உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும், படைத்த செல்வம்
    எய்துவது, இனி நீ, எந்தாய்!‘‘


பொருள்

“தருவது விதியே என்றால் = மனிதனுக்கு நல்லதும் அல்லாததும் தருவது விதிதான்

தவம் பெரிது உடையரேனும் = பெரிய பெரிய தவங்கள் செய்தவர்களுக்குக்  கூட

வருவது வரும் நாள் அன்றி, = என்று நல்லவை வர வேண்டும் என்று விதி இருக்கிறதோ  அந்த நாள் இன்றி

வந்து கைகூட வற்றோ? = முன்னால் கிடைக்காது

ஒருபது முகமும் = பத்துத்  தலைகளும்

கண்ணும் = கண்களும்
   
உருவமும் = உருவமும்

மார்பும் = பரந்த மார்பும்

தோள்கள் இருபதும் = இருபது தோள்களும்

படைத்த செல்வம் = நீ பெற்றதன் பயன்

எய்துவது = அடைவது

இனி நீ, எந்தாய்! = இப்போது, என் தந்தை போன்றவனே

இந்த இருபது தோள்களும், இருபது கண்களும் பெற்றதன் பயன் , சீதையின் அழகை அனுபவிக்கத்தான் என்று கூறுகிறாள்.

முருகனை காண

"நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான் முகனே " என்று அருணகிரியார்  வருந்தினார்.

இருபது கண்களைக் கொண்டு அவளின் அழகை அள்ளிப் பருகு என்று அவனை தூண்டுகிறாள்  சூர்பனகை.



Thursday, June 12, 2014

அதிசயப் பத்து - வைப்பு மாடு

அதிசயப் பத்து - வைப்பு மாடு 



இறைவனை எப்போது நினைப்போம் ?

எப்போதாவது துன்பம் வந்தால் அவனை நினைப்போம். ஐயோ, இந்த துன்பம் என்னை இப்படி வாட்டுகிறதே, இதற்கு ஒரு விடை இல்லையா, நான் என்ன செய்வேன், இறைவா நீ தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும், உன் கோவிலுக்கு வருகிறேன், பூஜை செய்கிறேன்  என்று மனிதன் துன்பம் வரும் போது இறைவனை நினைக்கிறான்.

துன்பம் வரும். அந்த காலத்தில் நமக்கு உதவுபவன் இறைவன் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.

துன்பம் வரவே வராது. வந்தாலும் நான் தனி ஆளாக அவற்றை சமாளித்துக் கொள்வேன் என்று ஆணவம் கொள்ளக் கூடாது.

அப்படி இறைவனை நினைக்காமல், பெண்கள் பின்னால் சுற்றித் திரிந்த என்னையும் ஆட்கொண்டு, தன் அடியவர்களோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன என்று சொல்லுவது என்று அதிசயிக்கிறார் மாணிக்க வாசகர்.

பாடல்

வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே,
செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள்

வைப்பு, மாடு, = இளைத்த காலத்தில் உதவும் செல்வம். சேமித்து வைத்த செல்வம். சேம நிதி. மாடு என்றால் செல்வம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

என்பது வள்ளுவம்


என்று = என்று

 மாணிக்கத்து ஒளி என்று = மாணிக்கத்தின் ஒளி என்று

மனத்திடை உருகாதே = மனதில்    நினைத்து உருகாமல்

செப்பு நேர் முலை = செப்புக் கிண்ணங்கள் போல உள்ள மார்பகங்களைக் கொண்ட

மடவரலியர்தங்கள் = இளம் பெண்களின்

திறத்திடை = மையலில்

நைவேனை = நைந்து கிடக்கும் என்னையும்

ஒப்பு இலாதன = தனக்கு ஒப்பு ஒருவன் இல்லாத

உவமனில் இறந்தன = உவமை என்று காட்ட ஒன்றும் இல்லாத

ஒள் மலர்த் திருப் பாதத்து = சிறந்த மலர் போன்ற திருவடிகளில்

அப்பன் ஆண்டு = என் அப்பன் என்னை ஆட்கொண்டு

தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை கண்டு வியக்கிறேன்

நான் என்ன செய்து விட்டேன் என்று என்னை இறவன் ஆட்கொண்டான் என்று அவ்வளவு பணிவுடன் சொல்கிறார் மணிவாசகப் பெருந்தகை.

உங்களுக்கும் அருள்வான் என்பது அவர் தரும்  நம்பிக்கை.



Wednesday, June 11, 2014

அதிசயப் பத்து - பொய்யான மெய்

அதிசயப் பத்து - பொய்யான மெய்  


நீங்கள் இந்தப் ப்ளாகைப் படிப்பது எவ்வளவு பெரிய அதிசயம் !

உங்களைப் போல ஒருவர் உண்டாகி, வளர்ந்து, தமிழ் படித்து, இதில் ஆர்வம் கொண்டு, கணணி இயக்கி, இதைப் படிப்பது என்பது எவ்வளவு பெரிய அதிசயம்.

நாம் பிறந்து, வளர்ந்தது, படித்தது, உடல் நலக் குறைவு இல்லாமல் இருப்பது..இப்படி எத்தனையோ அதிசயங்களின் தொகுப்பு நாம்.

உங்கள் கட்டுப் பாடில் இல்லாமல், உங்களையும் மீறி இத்தனையும் நிகழ்ந்துள்ளது.

அதிசயம் தானே !

மாணிக்க வாசகர் இவற்றை கண்டு எல்லாம் அதிசயப் படுகிறார்.

இது எப்படி நிகழ்ந்தது. எனக்கு எப்படி இறைவன் அருள் கிடைத்தது என்று அதிசயித்து பாடிய பத்துப் பாடல்கள் அதிசயப் பத்து என்ற தொகுப்பு.

மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனின் ஆணவம்.

ஆணவத்தின் இரண்டு கூறுகள் - நான், எனது என்பன.

நான் யார் தெரியுமா - படித்தவன், பண்பாளன், தலைவன், பணக்காரன், அழகன், திறமை சாலி என்று ஆயிரம் வழிகளில் நம் ஆணவம் வலுப் பெறுகிறது.

அந்த நான் என்ற ஒன்றை மேலே கொண்டு செல்ல, மேலும் மேலும் கிடந்து உழல்கிறோம். மேலும் படிக்கிறோம், மேலும் சம்பாதிக்கிறோம், மேலும் இந்த உடலை அழகு செய்கிறோம்.

உடலுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று மரண பயம் வாட்டுகிறது.

இந்த உடல் மெய்யானதா ?

துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவர் இது. புழுக்கள் நிறைந்தது. அழுக்கு நீர்கள் எப்போதும் வடியும் உடல். பொய்யான கூரை உடையது. இதை மெய்யானது என்று எண்ணி துன்பம் என்ற கடலில் கிடந்து உழல்வேனை, அவன் தன் அடியார்களோடு சேர்த்துக் கொண்டது எவ்வளவு பெரிய அதிசயம்.

பாடல்

பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை;
இத்தை, மெய் எனக் கருதிநின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை
முத்து, மா மணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின், முழுச் சோதி,
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள்

பொத்தை ஊன் சுவர் = பொந்துகள், துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவர்

புழுப் பொதிந்து = புழுக்கள் நிறைந்து

 உளுத்து = நாளும் அரிக்கப்பட்டு

அசும்பு ஒழுகிய = நிண நீர் ஒழுகும்

பொய்க் கூரை = பொய்யான கூரை கொண்டு  இருக்கும்

இத்தை = இதனை (இந்த உடலை)

மெய் எனக் கருதிநின்று, = உண்மை என்று நம்பி இருந்து

இடர்க் = துன்பம்

கடல் = கடல்

சுழித் = சுழலில் 

தலைப் படுவேனை = கிடந்து உழல்வேனை

முத்து = முத்து

 மா மணி = பெரிய மணி

மாணிக்க = மாணிக்கம்

வயிரத்த = வைரம்

பவளத்தின் = பவளம்

முழுச் சோதி = முழுமையான ஜோதி

அத்தன் = என் அத்தன்

ஆண்டு = என்னை ஆட்கொண்டு

 தன் அடியரில் = தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக

கூட்டிய அதிசயம் கண்டாமே!  = சேர்த்துக் கொண்ட அதிசயத்தை கண்டோமே



இராமாயணம் - கடல் எனும் ஆடை உடுத்த நில மங்கை

இராமாயணம் - கடல் எனும் ஆடை உடுத்த நில மங்கை 


பெண்கள் உடுத்தும் உடைகள் காற்றில் லேசாக சிலு சிலுக்கும். அலை அலையாக அவர்கள் உடலோடு ஒட்டி உறவாடும். அதைப் பார்க்கும் போது கம்பனுக்கு ஒன்று தோன்றுகிறது.

இந்த நிலம் என்ற மங்கை கடல் என்ற ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டு இருக்கிறாள். அந்த ஆடை , அதன் ஓரங்களில் சிலிர்ப்பது , அந்தக் கடலில் அலை அடிப்பது போல இருக்கிறது.

சூர்பனகை சொல்லுகிறாள் இராவணனிடம்,

"மீன்கள் ஆடும் கடலை  மேகலையாக இந்த உலகம் உடுத்திக் கொள்ள, அந்த உலகில், தேன் கொண்ட மலர்களை சூடிய , சிறிய இடை கொண்ட சீதையோடு நீ உறவாடு, உன் வாளின் வலிமையை இந்த உலகம் காணும் படி, இராமனை வென்று எனக்குத் தா...நான் அவனோடு உறவாட"

பாடல்


“மீன்கொண்டு ஊடாடும் வேலை
    மேகலை உலகம் ஏத்தத்
தேன்கொண்டு ஊடாடும் கூந்தல்,
    சிற்றிடைச் சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ; உன்
    வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும் வண்ணம்,
    இராமனைத் தருதி என்பால்.‘

பொருள் 

“மீன்கொண்டு = மீன்களை கொண்டு

 ஊடாடும் = ஆடும்

வேலை = கடல் எனும்

மேகலை = மேகலை. பெண்கள் இடையில் உடுத்தும் ஒரு ஆபரணம்.

உலகம் ஏத்தத் = நில மகள்  அணிந்து கொள்ள

தேன்கொண்டு ஊடாடும் கூந்தல் = தேன் கொண்ட மலர்களை கூந்தலில் சூடிக் கொண்ட

சிற்றிடைச் = சிறிய இடை

சீதை என்னும் = சீதை என்ற

மான் கொண்டு ஊடாடு நீ = மானை கொண்டு நீ ஊடல் ஆடு

 உன் வாள் வலி உலகம் காண = உன் வாளின் வலிமையை உலகம் காண

யான் கொண்டு ஊடாடும் வண்ணம் = நான் கொண்டு ஊடல் ஆடும் வண்ணம்

இராமனைத் தருதி என்பால் = இராமனை எனக்குத் தா

நீ சீதையை எடுத்துக் கொள். எனக்கு இராமனைத் தா என்கிறாள்.

சீதை மேல் காமத்தை விதைக்கும் அதே நேரத்தில் இராவணனின்  வீரத்தையும் விசிறி விடுகிறாள்.



Tuesday, June 10, 2014

மூத்த திருப்பதிகம் - எங்கள் அப்பன் ஆடும் திருவாலங்காடே

மூத்த திருப்பதிகம் - எங்கள் அப்பன் ஆடும் திருவாலங்காடே 


காரைக்கால் அம்மையார் பாடியது மூத்த திருப்பதிகம். தான் பேய் உரு பெற்றபின், சுடுகாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளைப் பற்றி பாடி  இருக்கிறார்.

ஒரு பெண் பேயைப் பற்றி பாடி இருப்பது ஆச்சரியமான விஷயம்.

சுடு காட்டில் பூஜை செய்பவர்கள் ஓமம் வளர்ப்பார்கள். அந்த ஓம குண்டத்தில் சோற்றினை போட்டு தீ வளர்ப்பார்கள். பூஜை முடிந்தவுடன், நெருப்பு தணிந்தவுடன், காட்டில் உள்ள நரிகள் அந்த சோற்றை தின்ன  வரும்."அடடா இது நமக்கு முன்னாலேயே தெரியாமலேயே போய் விட்டதே. தெரிந்திருந்தால் முன்னமேயே வந்து நாம் இதை உண்டிருக்கலாமே" என்று பேய்கள் ஓடி வந்து நரிகளோடு போட்டி போடும்.

அந்த சுடுகாட்டில் வசிப்பவள் காளி. அந்த காளியோடு வாதம் செய்து, போட்டி போட்டு, காலை ஆகாயம் வரை தூக்கி நடனம் ஆடும் எங்கள் அப்பன் சிவன் உள்ள இடம் இந்த சுடுகாடு

பாடல்

குண்டின்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன, ‘அதனை முன்னே

கண்டிலம் என்று கனன்று பேய்கள்
கையடித்(து) ஓ(டு)இடு காட்ட ரங்கா

மண்டலம் நின்றங்(கு) உளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்

அண்டம் உறநிமிர்த்(து) ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே. 

பொருள்

குண்டின்ஓ மக்குழிச் = ஓமக் குண்டத்தின் குழியில் உள்ள


சோற்றை வாங்கிக் = சோற்றினை எடுத்து

குறுநரி தின்ன, = குள்ள நரிகள் தின்ன

 ‘அதனை = அந்த சோறு அங்கே இருக்கிறது என்று

முன்னே = முன்பே

கண்டிலம் = நாம் காணவில்லையே

என்று = என்று

கனன்று = கோபம் கொண்டு

பேய்கள் = பேய்கள்

கையடித்(து) = கையை அடித்துக் கொண்டு

ஓ(டு) = ஓடி வரும் 

இடு  காட்ட ரங்கா = இடு காட்டை அரங்கமாக கொண்டு

மண்டலம் = மண்டலம் எங்கும்

நின்றங்(கு) = நின்று அங்கு

உளாளம் இட்டு = இருப்பவள் (காளி )

வாதித்து = அவளிடம் வாதம் செய்து

வீசி எடுத்த பாதம் = காலைத் தூக்கி ஆடி

அண்டம் உறநிமிர்த்(து) = அண்டம் நிமிர்ந்து பார்க்க 

ஆடும் எங்கள் = ஆடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.= அப்பன் (சிவன்) இருக்கும் இடம் திருவாலங்காடே

சுடு காடு என்பது வேறு எதுவும் அல்ல....நாம் இருக்கும் இடம் தான்.  பேய்களும், நரிகளும் உணவுக்கு அடித்துக் கொள்ளும் இடம்  இதுதான்.

சுடு காடு என்பது நாம் வாழும் இடத்தின் ஒரு  பகுதி.அது ஏதோ வேறு கிரகத்தில்  உள்ளது அல்ல. 

சுடுகாட்டின் எல்லைகளை சற்று விரிவாக்கிப் பாருங்கள். உலகம் பூராவும் சுடுகாடாய்  தெரியும்.

 சண்டையும், போட்டியும் , ஆணவமும் ,  பொறாமையும் இங்குதான்.

இதற்கு நடுவில் ஊடாடும் அந்த இறை தன்மையை காண கண் வேண்டும். 


கோயில் திருப்பதிகம் - ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை

கோயில் திருப்பதிகம் - ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை


திருவாசகத்தின் சாரம் என்று சொல்லக் கூடிய பாடல் இது. மிக மிக ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டது. நினைந்து நினைந்து ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டும்.

முதலில் பாடலைப் பார்த்து விடுவோம் .


பாடல்

இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று

நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை;

சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!

ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?

பொருள்:

இன்று = இன்று என்றால் என்று ? அவன் அருள் புரிந்த நாளே இன்று. அதற்குப் பின் காலம் நகர்வது இல்லை. அந்த "இன்று" என்றுமாய் நிலைத்து  நிற்கிறது. இல்லை என்றால் "அன்று" என்று சொல்லி இருப்பார்.

வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே.

என்பார் அருணகிரி.

இரவும் பகலும் அற்றுப் போய் விடும். இரவும் பகலும் இல்லை என்றால் நாள் ஏது ?  நாள் இல்லை என்றால் நேற்று ஏது , இன்று ஏது , நாளை என்பதும் ஏது ? எல்லாம்   இன்றுதான்,இந்த நொடிதான். இறந்த காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை. 


எனக்கு அருளி = எனக்கு அருள் செய்து

இருள் கடிந்து = என் அறியாமை என்ற இருளைப் போக்கி

 உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று = உள்ளத்து எழுகின்ற அறிவு சூரியனைப் போல


நின்ற = நீ என்னுள் நின்ற

நின் தன்மை = உன்னுடைய தன்மையை

நினைப்பு அற நினைந்தேன் = நினைப்பு என்று ஒன்று இல்லாமல்  நினைத்தேன். அது என்ன நினைப்பு இல்லா நினைப்பு ? நான் வேறு அவன் வேறு என்று இருந்தால் நான் அவனைப் பற்றி நினைக்க முடியும். நானும் அவனும் ஒன்று என்று அறிந்த பின் நானே எப்படி  நினைக்க முடியும் ?  ,நினைப்பதும், நினைக்கப் படுவதும் ஒன்றே



நீ அலால் பிறிது மற்று இன்மை = இந்த உலகில் நீ தான் எல்லாம். நீ இல்லாமல் வேறு ஒன்றும் இல்லை.

சென்று சென்று = சென்று சென்று

அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து = கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து

ஒன்று ஆம் = ஒன்றானவன்

உண்மையைத் தேடிச் சென்றால் , இது  உண்மையா,இது உண்மையா என்று ஒவ்வொன்றாய் ஆராய்ந்து , இது இல்லை, இதுவும் இல்லை என்று ஒவ்வொன்றாக கழித்துக் கொண்டே இருப்போம். அங்கும் இங்கும் அலைந்து, இது அல்ல, அது அல்ல என்று எல்லாவற்றையும் விலக்கி கடைசியில் ஒரு புள்ளியில் வந்து நிற்ப்போம். அந்த ஒன்று தான்  இறைவன்.

வெளியில் உள்ள புறத் தோற்றங்கள் , வடிவங்கள் எல்லாம் அடிப்படையில் ஏதோ ஒன்றின் வெளிப்பாடுதான். அந்த ஏதோ ஒன்று தான் அவன்.

மாணிக்க வாசகர் அது தான் இறைவன் என்று  சொல்லவில்லை. அவர் சொன்னது "ஒன்று ஆம்"  என்கிறார். அந்த ஒன்று எது ?

திருப்பெருந்துறை உறை சிவனே! =  திருபெருந்துறையில் உறைகின்ற சிவனே

ஒன்றும் நீ அல்லை = இந்த பொருள்களும் உயிர்களும் நீ இல்லை

அன்றி, ஒன்று இல்லை; = நீ இல்லாமல் வேறு எதுவும் இல்லை

யார் உன்னை அறியகிற்பாரே? = உன்னை யார் அறிவார்கள் ?

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடல்.