Monday, September 26, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


எந்த பிறவிக்கும் ஒரு அர்த்தம் , நோக்கம் வேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த நோக்கத்தை நோக்கி நகர வேண்டும்.

நாவுக்கரசருக்கு இறைவன் திருவடி அடைவதுதான் நோக்கம்.  அவனை நினைக்க வேண்டும், அவனைப் பற்றி பேச வேண்டும். அப்படி பேசாத நாள் எல்லாம் , பிறவாத நாள் என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
                   சூழ் வலஞ்சுழியும் கருதினானை, 
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
         ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே; 
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
                  எப்பொழுதும் வணங்கி ஏத்தப்- 
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
                          எல்லாம் பிறவா நாளே.

பொருள்

கற்றானை = எல்லாம் அறிந்தவனை

கங்கை வார்சடையான் தன்னை = கங்கையை தலையில் கொண்டவனை

காவிரி சூழ் = காவிரி ஆறு சூழும்

வலஞ்சுழியும் = திருவலம் சுழி என்ற திருத்தலத்தில்

கருதினானை = இருப்பவனை

அற்றார்க்கும் = செல்வம் அற்ற ஏழைகளுக்கும்

அலந்தார்க்கும் = கலங்கியவர்களுக்கும்

அருள் செய்வானை = அருள் செய்வானை

ஆரூரும் புகுவானை = திருவாவூரிலும் இருப்பவனை

அறிந்தோம் அன்றே = அன்றே அறிந்து கொண்டோம்

மற்று ஆரும்  = வேறு யாரும்

தன் ஒப்பார் இல்லாதானை = தனக்கு ஒப்பு இல்லாதவனை

வானவர்கள் = தேவர்கள்

எப்பொழுதும் = எப்போதும்

வணங்கி ஏத்தப் = வணங்கு துதிக்க

பெற்றானை = பெற்றவனை

பெரும்பற்றப்புலியூரானை = புலியூரில் இருப்பவனை

பேசாத நாள் எல்லாம் = பேசாத நாள் எல்லாம்

பிறவா நாளே = பிறக்காத நாளே

வறுமை ஒரு துன்பம். 

கொடியது கேட்கின் நெடு வடிவேலோய் 
கொடிது கொடிது வறுமை கொடிது என்பாள் அவ்வை.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார் வள்ளுவர். 

பொருள் இருந்தாலும், வாழ்வில் சில சமயம் கலக்கம் வரும். 

உறவுகள் பிரிவதால் , பொருள் பிரிவதால், நோய் வருவதால், முதுமை வருவதால், எதிர் காலம் பற்றிய பயத்தால்  ....இப்படி பலப் பல காரணங்களினால் கலக்கம் வரும். 

அப்படி கலங்கியவர்களுக்கும் அருள் தருபவன் அவன். 

அதெல்லாம் சரி, அருள் தருவான் என்பது என்ன நிச்சயம் ? அப்படி யாருக்காவது அருள் செய்திருக்கிறானா என்று கேட்டால் , அப்பரடிகள்  கூறுகிறார் 

ஆமாம், செய்திருக்கிறான் , அதை "அறிந்தோம் அன்றே " என்று கூறுகிறார். நான் அறிந்தேன் என்று சாட்சி சொல்கிறார். 

அறிந்தோம் என்ற பன்மையால், தான் ஒருவர் மட்டும் அல்ல, தன்னைப் போல பலர் அறிந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். 

அவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

உடல் பிறந்து விடும். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. 

அறிவு பெற்று, தான் என்பது அறிந்து, உண்மையை அறியும் நாள் மீண்டும்  ஒரு பிறப்பு நிகழ்கிறது.  அதுவரை , அறிவில்லா இந்த உடல் சும்மா  அலைந்து கொண்டிருக்கும். ஒரு விலங்கினைப் போல. 

என்று இவற்றை அறிகிறோமோ, அன்று தான் உண்மையான பிறந்த நாள். 

அதுவரை பிறவா நாளே 



Sunday, September 25, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?

தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?



மூப்பு கொஞ்சம் சங்கடமான விஷயம்தான். புலன்கள் தடுமாறும். நினைவு தவறும். கண் ,  போன்ற புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்  இழக்கும். பேசுவது கேட்காது. கேட்டாலும் மனதில் நிற்காது. சுற்றி உள்ள இளையவர்கள் , கேலி செய்வார்கள். நாம் வளர்த்த பிள்ளைகள் நம்மை ஏளனம் செய்வது தாங்க முடியாத ஒன்று தான்.

என்ன செய்வது ? காய்ந்த மட்டையைப் பார்த்து இள மட்டை பரிகசிப்பது எப்போதும் நடக்கும் ஒன்று தான்.

அப்படி ஒரு மூப்பு வருமுன்னம், நல்லதைத் தேடு மனமே என்று மனதிடம் சொன்னால் அது எங்கே கேட்கிறது.

புலன் இன்பங்களின் பின்னால் ஓடுகிறது. உணவு, இசை, உறவுகள், நட்புகள், சினிமா,  நாடகம், ஊர் சுற்றல் என்று ஆசைகளின் பின்னால் அங்காடி நாய் போல் அலைகிறது இந்த மனம்.

சொன்னாலும் கேட்க மாட்டேன்  என்கிறது. ஒரு வேளை அந்த மனதுக்கும் நமக்கும் ஏதோ பழைய பகை இருக்குமோ ? அதனால் தான் நாம் நல்லது சொன்னால் கேட்காமல் நம்மை தீய வழிகளில் இட்டுச் செல்கிறதோ என்று சந்தேகப் படுகிறார் நாவுக்கரசர்.

பாடல்

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்

பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ

முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியால் உறவணங்கி முற்றம் பற்றி

அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.


பொருள்


எழுது = கண்ணில் மை எழுதும்

கொடியிடையார்= கொடி போன்ற இடையைக் கொண்ட

ஏழை மென்றோள் = மெலிந்து இருக்கும் மெல்லிய தோள்கள் கொண்ட

இளையார்கள்= இளம் பெண்கள்

நம்மை யிகழா முன்னம் = நம்மை இகழ்வதன் முன்னம்

பழுது படநினையேல் = கெட்ட வழியில் செல்ல நினைக்காதே

 பாவி நெஞ்சே = பாவி நெஞ்சே

பண்டுதான் = முன்பு, பழைய காலத்தில்

என்னோடு =என்னோடு

பகைதா னுண்டோ = உனக்கு பகை ஏதேனும் உண்டோ ?

முழுதுலகில் = முழுமையான உலகில். அனைத்து உலகிலும்

வானவர்கள் = தேவர்கள்

முற்றுங் கூடி =  அனைவரும் கூடி

முடியால் =தலையால்

உறவணங்கி = முற்றும் தரையில் பட வணங்கி

முற்றம் பற்றி = முழுவதும் பற்றி

அழுது = அழுது

திருவடிக்கே பூசை செய்ய = திருவடிகளுக்கே பூசை செய்ய

இருக்கின்றான் = இருக்கின்றான்

ஊர்போலும் ஆரூர் தானே = ஊர்தான் திருவாரூர்

வயதாகும். மதி மயங்கும். அதற்கு முன் எது சரியோ அதை செய்து விட வேண்டும்.

உற்றார் அழுமுன்னே. ஊரார் சுடுமுன்னே , குற்றாலத்தானையே கூறு என்பார் பட்டினத்தார்.

நேற்று வரை எப்படியோ. இன்றில் இருந்து ஆரம்பிப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_25.html


Saturday, September 24, 2016

இராமாயணம் - விராதன் வதை படலம் - உறங்குதியால் உறங்காதாய்!

இராமாயணம் - விராதன் வதை படலம் -  உறங்குதியால் உறங்காதாய்!


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் அரக்கனாய் பிறந்து, இராமனோடு சண்டையிட்டு, இராமன் திருவடி பட்டு, சாபவிமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன் , இராமனைப் பற்றி சிலச் சொல்லுகிறான்.


இன்பம் வேண்டும் என்றுதான் வாழ்வில் ஒவ்வொன்றையும் செய்கிறோம். இருந்தும் துன்பம் வருகிறது. நல்லது வேண்டும் என்று தான் நினைக்கிறோம், இருந்தும் துன்பம் வருகிறது.

ஏன் ?

இன்பம் மட்டுமே இருக்கக் கூடாதா ? நல்லது மட்டுமே நடக்கக் கூடாதா ?

ஏன் இந்த கஷ்டங்கள் வருகின்றன ?

இதற்கு காரணம் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பாகங்கள்  மாதிரி. ஒரு பாகம் மட்டும் வேண்டும் என்றால் எப்படி முடியும் ?

நாய்த குட்டியின் தலையை தூக்கினால் வாலும் கூடவே சேர்ந்தே வரும்.

இன்பம் உருவம் என்றால் , துன்பம் நிழல்.

நன்மை உருவம் என்றால் , தீமை நிழல்.

இரண்டையும் பிரிக்க முடியுமா ?

இதை அறிந்தவர்கள் இந்த நல்லது/கெட்டது , நன்மை/தீமை, உயர்வு/தாழ்வு என்ற இரட்டைகளை தாண்டி நடுவில் நிற்பார்கள்.

ஒரு சம நோக்கு இருக்கும் அவர்களுக்கு.

பாடல்

பொரு அரிய சமயங்கள்
    புகல்கின்ற புத்தேளிர்,
இரு வினையும் உடையார்போல்
    அருந்தவம் நின்று இயற்றுவார்;
திரு உறையும் மணிமார்ப!
    நினக்கு என்னை செயற்பால?
ஒரு வினையும் இல்லார்போல்
    உறங்குதியால் உறங்காதாய்!


பொருள்

பொரு அரிய = பொருவு என்றால் ஒப்பு. பொருவு அரிய என்றால் ஒப்பு, உவமை கூற முடியாத

சமயங்கள் = பல சமயங்கள்

புகல்கின்ற = சொல்கின்ற

புத்தேளிர் = தேவர்கள்

இரு வினையும் = இரண்டு வினைகள். நல்லது/கெட்டது  போன்ற வினைகள்

உடையார்போல் = உடையவர்களைப் போல

அருந்தவம் = பெரிய தவத்தை

நின்று இயற்றுவார்  செய்வார்கள்

திரு = திருமகள்

உறையும்  = வாழும்

மணிமார்ப! = கௌஸ்துபம் என்ற மணியை அணிந்த மார்பை உடையவனே

நினக்கு = உனக்கு

என்னை = என்ன

செயற்பால? = செய்ய வேண்டும் ?

ஒரு வினையும் = ஒரு வேலையும்

இல்லார்போல் = இல்லாதவர் போல

உறங்குதியால் = உறங்குகிறாயா ?

உறங்காதாய் = உறங்காதவனே

இராமன் ஏதோ வினை செய்வது போல இருக்கிறது. ஒன்றும் செய்யாதவன் போலவும்  இருக்கிறான். உறங்குகிறானா, விழித்து இருக்கிறானா  என்று தெரியவில்லை.

வினை செய்வதற்கு முன் அந்த வினையை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அப்படி தேர்ந்தெடுக்க , அந்த வினை நல்லதா, கெட்டதா என்று தேர்வு செய்ய வேண்டும்.  நல்லது கெட்டது நின்ற பிரிவினை மறைந்து விட்டால்  எந்த வினையை செய்வது ?

அதற்காக ஒன்றும் செய்யாமலும் இருக்க முடியுமா ?

இந்த இருமைகளை தாண்டினால் அது புரியும்.

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே,
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே,
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே,
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே,
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே,
நரர்களுக்கும் சுரரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே,
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே,
என் அரசே, யான் புகலும் இசையும் அணிந்து அருளே!

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பார் வள்ளுவர்.

வேண்டுதலும் இல்லை, வேண்டாமையும் இல்லை.

இன்பத்தையும்,  துன்பத்தையும் சமமாக காணும் அந்த நிலை சுகமானதுதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_42.html

Thursday, September 22, 2016

திருக்குறள் - யாமும் உளேம் கொல்

திருக்குறள் - யாமும் உளேம் கொல் 


காதலை, பிரிவை, அன்பை, ஏக்கத்தை, ஆண் பெண் உறவின் சிக்கலை ஒண்ணே முக்கால் அடியில் சொல்ல முடியுமா ?

வியக்க வைக்கும் காமத்துப் பால். ஒற்றை வார்த்தையில் ஒரு மனதின் அத்தனை உணர்ச்சிகளையும் ஏற்ற முடியுமா ? சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.

பாடல்

யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்


பொருள்

யாமும் = நாங்களும்

உளேம்கொல் = இருக்கிறோமா ?

அவர்நெஞ்சத்து = அவருடைய நெஞ்சத்தில்

எம்நெஞ்சத்து = எங்கள் நெஞ்சில்

ஓஒ உளரே அவர் = அவர் இருப்பது போல

அவ்வளவுதான் பாடல்.

கொட்டிக் கிடைக்கும் உணர்ச்சிகளை எப்படி சொல்லுவது.

அவர் நெஞ்சத்து என்பதால் இது ஒரு பெண்ணின் மன நிலையை குறிக்கும் பாடல் என்று   தெரிகிறது.

இரண்டாவது, என் மனதில் அவர் இருப்பது போல அவர் மனதில் நான் இருப்பேனா என்று கேட்பது போல உள்ள பாடல். ஒவ்வொரு     வார்த்தையிலும் கொட்டிக் கிடக்கும் அர்த்தம்.

மூன்றாவது, "யாமும்" என்பதில் அவன் மனத்தில் யார் யாரோ இருக்கிறார்கள். நானு'ம்' இருக்கிறேனா என்று கேட்கிறாள். யாம் உளேம் கொல் என்று சொல்லி இருக்கலாம். யாமும் என்ற சொல்லில் அவன் மனதில் வேறு யாரோ இருக்கிறார்களோ என்ற பெண்ணின் இயல்பாலான  சந்தேகம் தொக்கி நிற்கிறது.


பாரதி சொல்லுவான் "யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் "என்று. கண்டது அவன் மட்டும் தான். ஆனால், தன்னை சொல்லும் போது "யாம்" என்று கூறுகிறான். ஆங்கிலத்தில் "royal we " என்று சொல்வார்கள். அவள் ஒரு பெரிய இடத்துப் பெண் அல்லது ஏதோ ஒரு சிறப்பு அவளிடம் இருக்க வேண்டும்.


யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்பார் நாவுக்கரசர்.

நான்காவது, "உளேம் கொல்" இருக்கிறோமா என்பது கேள்விக் குறி. இருக்க வேண்டும். ஆனால் இருக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு வேளை மறந்திருப்பானோ என்ற பயம் இருக்கிறது.

ஐந்தாவது, யானும் என்று ஒருமையில் சொல்லி இருக்கலாம். யாமும் என்று பன்மையில் சொல்லும் போது ஒரு அன்யோன்யம் விட்டுப் போகிறது.  "எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்று மனைவி கேட்பதற்கும்  "எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்று கேட்பதற்கும் வேறுபாடு உண்டு.


ஆறாவது, எம் நெஞ்சில் அவரே இருப்பது போல.  மீண்டும் பன்மை. எம் நெஞ்சில் என்கிறாள். என் நெஞ்சில் என்று சொல்லி இருந்தால் தளை ஒண்ணும் தட்டி இருக்காது.

ஏழாவது, எம் நெஞ்சில் அவர் இருப்பது போல என்று கூறும் போது , "என் நெஞ்சில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதே மாதிரி  அவன்  நெஞ்சிலும் நான் மட்டும் தான் இருக்க வேண்டும், வேறு யாரும்  இருக்கக் கூடாது" என்று அவள் எதிர்பார்ப்பது தெரிகிறது.


எட்டாவது, "உளரே அவர்" உளர் அவர் என்று சொல்லி இருக்கலாம். உளரே என்ற ஏகாரத்தில் ஒரு அழுத்தம்.ஒரு உறுதி. இராமன் வந்தான் என்று சொல்வதற்கும். இராமனே வந்தான் உள்ளதற்கும் உள்ள வேறுபாடு. இராமன் வந்தான் என்றால் ஏதோ ஒரு ஆள் வந்தான் என்று தெரியும். இராமனே வந்தான் என்றால் ஏதோ வராத , வருவான்னு எதிர்பார்க்காத ஆள் வந்த வியப்பு, சந்தோஷம்.  அவர் வந்து பத்திரிகை கொடுத்தார் என்பதற்கும், "அவரே" வந்து பத்திரிகை கொடுத்தார் என்று சொல்லுவது போல.

ஒன்பதாவது, ,ஓஒ உளரே அவர். அது என்ன ஓ ஓ ? அந்த ஓ விற்குப் பின்னால் ஆயிரம் அர்த்தம். வேலை முடியலை'யோ' அதனால் என்னை நினைக்க நேரம் இல்லை'யோ' ? ஒரு வேளை உடம்பு கிடம்பு சரியில்லை'யோ' ? நான் ஏதாவது தப்பாக சொல்லி அல்லது செய்திருப்பே'னோ'. அதனால் கோபித்துக் கொண்டிருப்பா"னோ ". ஒரு வேளை இனிமேல் என்னை நினைக்கவே மாட்டா"னோ" என்று  ஆயிரம்  "ஓ" அந்த இரண்டு ஓஓ வில். இன்னும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு  நீங்கள் நீட்டிக் கொள்ளுங்கள். அது ஓஓஓ.....குறளைப் படித்துப் பாருங்கள். அந்த நீண்ட ஓ ஓ புரியும்.


இப்போது இந்த அர்த்தத்தை எல்லாம் விட்டு விடுங்கள். அந்த குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

தனிமையில் , பிரிவில் வாடும் ஒரு பெண்ணின் சோகம் ஊதுவத்தி புகையாக  பரவுவதை உணர்வீர்கள்.

வார்த்தைகளை சுருக்க சுருக்க கவிதை பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்கும்.

அப்படி என்றால் மௌனம் எவ்வளவு உயர்ந்தது ?


http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_22.html




Wednesday, September 21, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன்

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன் 



ஒரு சாபத்தால் அரக்கனாக பிறந்த விராதன், இராமனிடம் போராடி, அவன் பாதம் பட்டதால் , சாப விமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன், சில சொல்லுகிறான்.

பிரமனுக்கும், மற்றும் உள்ள தேவர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் நீயே முதல் தந்தை.  நீ தந்தை என்றால் , தாய் யார் ? தருமத்தின் வடிவாக நின்றவனே.


பாடல்

ஓயாத மலர் அயனே முதல் ஆக
     உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று
     ஒழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை, நெறி முறையால்
     ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே?-தருமத்தின்
     தனி மூர்த்தி!


பொருள்


ஓயாத = இடைவெளி இல்லாமல், தொடர்ந்து

மலர் அயனே = தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன்

முதல் ஆக = தொடங்கி

உளர் ஆகி = உள்ளவர்கள் ஆகி

மாயாத வானவர்க்கும் = இறப்பு என்பது இல்லாத வானவர்களுக்கு

மற்று ஒழிந்த = அவர்களைத் தவிர

மன்னுயிர்க்கும் = நிலைத்த உயிர்களுக்கும்

நீ ஆதி முதல் தாதை, = நீயே முதலில் தோன்றிய தந்தை

நெறி முறையால் = சரியான வழியில்

ஈன்று எடுத்த = பெற்றெடுத்த

தாய் ஆவார் யாவரே?- = தாயாக இருப்பவர் யார் ?

தருமத்தின் = அறத்தின்


தனி மூர்த்தி! = தனிச் சிறப்பானவனே

எனக்கு ஒரு அப்பா இருக்கிறார். அவருக்கு ஒரு அப்பா இருக்கிறார், அதாவது என் தாத்தா. இப்படி போய் கொண்டே இருந்தால், முதன் முதலில் ஒருவர் வேண்டும் அல்லவா . அந்த முதல் தந்தை நீதான் என்று இராமனை வணங்குகிறான் விராதன்.

பிரமனுக்கும், தேவர்களுக்கும், மற்றும் உள்ள உயிர்களுக்கும் நீயே தந்தை என்று சொல்லிவிட்டு, "சரி, தந்தை நீயானால், தாய் யார் " என்று கேள்வியும் கேட்கிறான்.

கேள்வியிலேயே பதிலை ஓட்ட வைக்கிறார் கம்பர் ?

தாய் யாராக இருக்க முடியும் என்று கேட்கிறான். கேட்டு விட்டு, "தர்மத்தின் தனி மூர்த்தி" என்று முடிக்கிறான்.


அது மட்டும் அல்ல, உடலுக்கு தந்தை யார் என்று தெரியும். உயிருக்கு யார் தந்தை ?  "நீயே தர்மத்தின் தனி மூர்த்தி" என்று சொல்கிறான்  விராதன்.

சரி, தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்றால், தாய் வேண்டுமே ? தாய் இல்லாமல் தந்தை எப்படி என்ற கேள்வி எழும் அல்லவா ?

ஆதி மூலத்துக்கு தந்தை என்ன, தாய் என்ன ? எல்லாம் ஒன்று தான்.

அவன்  தந்தையானவன். தாயும் ஆனவன்.

நீயே தாயும் தந்தையும் என்று சொல்லி முடிக்கிறான் விராதன்.



அம்மையும் நீ, அப்பனும் நீ என்பார் மணிவாசகர். அம்மையே அப்பா.


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


அப்பன் நீ, அம்மை நீ என்பார் நாவுக்கரசர்.


அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.


மூன்று வயது  ஞான சம்பந்தர், குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய  தந்தை திருக்குளத்தில் நீராட , நீரில் மூழ்கினார். தந்தையை க் காணாத குழந்தை அழுதது. குளத்தை பார்த்தல்லவா அழ வேண்டும்.  அது கோபுரத்தைப் பார்த்து அழுதது. எப்படி ?

அம்மே, அப்பா என்று அழுதது.

மெய்ம்மேற்கண் டுளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
 தம்மேலைச் சார்புணர்ந்தோ? சாரும்பிள் ளைமைதானோ?
 செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்
"தம்மே! யப்பா! வென்றென்றழுதருளி யழைத்தருள.


சேக்கிழார் உருகுகிறார்.

அம்மே அப்பா என்று எண்ணி அழைத்து அருளி அழைத்து அருள என்று  சேக்கிழார் நெகிழ்கிறார். மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் ததும்பும் பாடல்.

காணாமல் போனது அப்பா. பிள்ளை அழுவதோ, அம்மே, அப்பா என்று. அம்மாவைத் தேடி பின் அப்பாவைத் தேடுகிறது.

இரண்டும் வேறா என்ன ?

காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன், 
கண்டேன் அவர் திருப்பாதம் 
கண்டரையாதன கண்டேன் என்றார் நாவுக்கரசர். 

ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக  அனுப்புடன் இருப்பதைப் பார்த்த  அவருக்கு , அது இறை வடிவமாகவே தெரிகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதுதான் மூலம். அது தான்  ஐக்கியம்.

சொல்லிக் கொண்டே போகலாம்.

காலம் கருதி சுருக்கி உரைத்தேன்.

சிந்தித்துணர்க.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_21.html


Monday, September 19, 2016

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு


பாடல்

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

பொதுவாக எல்லா பாடல்களுக்கும் முதலில் கொஞ்சம் முகவுரை எழுதிவிட்டு பின் பாடலும், பொருளும் எழுதுவது என் வழக்கம்.

அபிராமி அந்தாதி மட்டும் விதி விலக்கு . இவ்வளவு அழகான , உணர்ச்சிமயமான பாடலை முதலில் நீங்கள் படித்து விடுங்கள். பொருள் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

அபிராமி அந்தாதிக்கு பொருள் எழுதுவது என்பது அதை அவமதிப்பதாகவே கருதுகிறேன். அது அதுதான். அதற்கு என்ன விளக்கம் சொல்ல முடியும் ?

இருந்தும், ஒரு சேதி சொல்ல ஆசை.

முதலில் பொருள் ,பின்னர் சேதி

சிறக்கும் = சிறந்து கொண்டே இருக்கும்

கமலத் = தாமரை மலரில் இருக்கும்

திருவே = திருமகளே

நின் சேவடி =   உன்னுடைய செம்மையான திருவடிகளை

சென்னி = தலையில்

வைக்கத் = வைக்க

துறக்கம் தரும்= துறக்கம் தரும்

நின் துணைவரும் = உன் கணவரும்

நீயும் = நீயும்

துரியம் அற்ற = துரியம் அற்ற

உறக்கம் தர வந்து = உறக்கத்தை தர வந்து

உடம்போடு = உடலோடு

உயிர் உறவு அற்று = உயிர் தன் தொடர்பை அறுத்துக் கொண்டு

அறிவு = அறிவானது

மறக்கும் பொழுது  = மறக்கும் போது

என் முன்னே வரல் வேண்டும் = என் முன்னே வரவேண்டும்

வருந்தியுமே = உனக்கு அது கடினமாக இருந்தால் கூட

அது என்ன துறக்கம், துரியம் ?

மனிதர்களை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம்.

உடல் சார்ந்தார்கள். உணவு, புலன் இன்பம், உறக்கம், இதுதான் இவர்களுக்குத்  தெரியும். இதுதான் இவர்களுக்குப் பிரதானம். தன்    சுகம்.  அது உடல் சார்ந்த சுகம்.  உடலை வைத்துத்தான் எல்லாம் அவர்களுக்கு. விலங்குகளுக்கு சற்று மேலே. அவ்வளவுதான்.

அதை அடுத்த உயர்ந்த நிலை,  அறிவு சார்ந்த நிலை. சிந்தனை, யோசனை, என்பது இவர்களின்   பிரதானம். அவர்கள் தங்களை அறிவால் செலுத்தப் படுபவர்களாக  காண்பார்கள்.  They identify themselves with intelligence.  எதையும் அறிவு பூர்வமாக   அணுகுவார்கள்.  இசை, இலக்கியம், ஓவியம், கணிதம், அறிவியல், தர்க்கம்,  நடனம், என்று இவர்களின்  உலகம்    விரியும்.

அதை அடுத்த உயர்ந்த நிலை, மனம் சார்ந்தவர்கள். உணர்ச்சியை மையமாக  கொண்டவர்கள். அன்பு, காதல், பக்தி, பாசம், உறவு என்பது  இவர்கள் உலகம்.

யாரும் ஒரு நிலையில் மட்டும் இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு நிலையில்  அதிகமான நேரம் இருப்பார்கள். ஒரு அறிவியல் அறிஞர் கூட  காதலிக்கலாம். ஆனால் அந்த உணர்வு சார்ந்த நேரங்கள் மிக   மிக கொஞ்சமாக இருக்கும்.

இந்த நான்கு நிலைகளையும் கடந்த நிலை துரிய நிலை. துரிய என்றால்  நான்காவது.

அது என்ன நான்காவது ? அது எதை சார்ந்து நிற்கும் ? தெரியாது. அதனால் தான்   அதை "நாலாவது நிலை " என்றார்கள்.

இந்த மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

உடல், அறிவு, மனம் என்ற மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

அந்த நிலையில்  கூட தெரியாது.  கடவுள் தெரிய வேண்டும் என்றால்  அறிவு   வேலை செய்ய வேண்டும்.

இது கடவுள் என்று  அறியும் அறிவு வேண்டும்.

துறக்க நிலை இந்த மூன்றையும் கடந்த நிலை.

நான் அந்த நிலை அடையும் போது , அபிராமி நீயே வந்துரு. உன்னை நினைக்க வேண்டும், கூப்பிட வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது.   எனவே,இப்பவே சொல்லி  வைக்கிறேன். அந்த சமயத்தில் நீயும் உன் கணவரும் வந்து விடுங்கள்.

நீங்கள் வந்தாலும் நான் அடையாளம் கண்டு கொள்ள மாட்டேன்.உனக்கு அது  ஒரு சிக்கல் தான்.  வருத்தம் தான். இருந்தாலும்   வந்துரு.

என்று பதறுகிறார் பட்டர்.


(தொடர்ந்தாலும் தொடரும் )

Sunday, September 18, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்

திருவாசகம் - அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்


மனிதன் நாளும் அலைகிறான். அங்கும் , இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். ஏன் ? எதற்கு ? எதை அடைய இந்த ஓட்டம் ?

எதை எதையோ அடைய அலைகிறான். தேடியதை அடைந்த பிறகு, அமைதியாக இருக்கிறானா என்றால் இல்லை. ஒன்றை அடைந்த பிறகு அடுத்ததை தேடி ஓடுகிறான்.

இந்த ஓட்டத்தில், எது வாழ்க்கைக்கு முக்கியம் என்று அறியாமல் போய் விடுகிறான்.

உடல் நிலை, குடும்பம், உறவுகள், இரசனை, நட்பு, கல்வி, ஓய்வு என்று ஆயிரம் நல்ல விஷயங்களை இழந்து விடுகிறான். ஏதோ ஒன்றை அடைகிறான். அதை அடைய ஆயிரம் நல்லவைகளை இழக்கிறான்.

தேடியதை அடைந்தபின் , எதை எல்லாம் இழந்தோம் என்று கணக்குப் போடுகிறான். இழந்தது அதிகம். பெற்றது கொஞ்சம் என்று அறியும் போது தன் மேல் தானே வருத்தம் கொள்கிறான்.

இது தானே வாழ்க்கை. இப்படித்தானே போகிறது.

மணிவாசகர் சொல்கிறார்.

ஒரு பெரிய சட்டியில் கெட்டி தயிர் இருக்கிறது. உறுதியாக இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்களுக்குத் தெரியும், தயிர் உறைய வேண்டும் என்றால் அதை அசைக்கக் கூடாது. ஆடாமல், அசையாமல் இருந்தால் நீராக இருக்கும் பால், உறை ஊற்றிய பின் கெட்டியான தயிராக மாறும். அது உறைந்து கொண்டு இருக்கும் போது , அதில் ஒரு சின்ன மத்தை போட்டு கடைந்தால் என்ன ஆகும் ? தயிர் உடையும். நீர்த்துப் போகும். கொஞ்சம் கடைவது. பின் நிறுத்தி விடுவது. பின் சிறிது நேரம் கழித்து , மீண்டும் கொஞ்சம் கடைவது என்று என்று இருந்தால் என்ன ஆகும் ? தயிரும் உறையாது. வெண்ணையும் வராது. தயிர் தளர்ந்து போகும் அல்லவா.

பாடல்

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.


பொருள்


மாழை = மா என்றால் மா மரம். மாவடுவைப் போன்ற

மைப் = கண் மை

பாவிய = பூசிய

கண்ணியர் = கண்களைக் கொண்ட

வன் = வன்மையான

மத்து இட = மத்தை இட்டு

உடைந்து = உடைந்து


தாழியைப் = தயிர் வைத்த பாத்திரத்தை

பாவு = பரவும்

தயிர் போல் = தயிர் போல

தளர்ந்தேன் = தளர்ந்து விட்டேன்

தட = பெரிய (தடக் கை )

மலர்த் தாள் = மலர் போன்ற திருவடிகளை கொண்டவனே

வாழி! = வாழ்க

எப்போது வந்து = நான் எப்போது வந்து

எந் நாள் = எந்த நாள்

வணங்குவன் = வணங்குவேன்

வல் வினையேன்? = கொடிய வினைகளைச் செய்தவன்

ஆழி அப்பா! = ஆழி என்றால் கடல். கடல் போல பரந்து விரிந்தவனே

 உடையாய்! = அனைத்தும் உடையவனே

அடியேன் உன் அடைக்கலமே = அடியேன் உன் அடைக்கலம்


பெண்ணாசை ஒன்று தானா இந்த உலகில் ? மணிவாசகர் போன்ற பெரியவர்கள்  நம் குற்றங்களை தங்கள் மேல் ஏற்றிச் சொல்வார்கள்.

பெண்ணாசை என்பது ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கும். பெண்களுக்கு ஆசையே  கிடையாதா ?

இருக்கும்.

எல்லோரின் ஆசைகளையும் ஒரு பாட்டில் பட்டியல் இட முடியாது.

பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசை என்ற ஒன்று வரும்போது  அது உறைந்த, உறைகின்ற தயிரை அலைக்கழித்து தளர்ச்சி அடைய செய்யும்.

கொஞ்ச நேரம் எடுத்து யோசியுங்கள்.

எந்த ஆசை உங்களை இந்த நேரத்தில் அலைக்கழிக்கிறது என்று ....

ஆசை நல்லதா , கெட்டதா என்பதல்ல கேள்வி.

ஆசை வரும்போது அது உங்களை அலைக்கழிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது வேண்டுமா , வேண்டாமா என்பது உங்கள்  முடிவு.

ஒவ்வொரு ஆசைக்கும் ஒரு விலை இருக்கிறது.

நீங்கள் தரும் விலை சரியானது தானா என்று அறிந்து கொள்ளுங்கள்.

நல்லதே நடக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_18.html