Wednesday, October 26, 2016

நாலடியார் - நம் குற்றம் எண்ணும் கொல் ?

நாலடியார் - நம் குற்றம் எண்ணும் கொல் ?


பிரிவு உறவை ஆழப் படுத்துகிறது. உறவை உறுதிப் படுத்துகிறது.

தலைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியூர் போய் இருக்கிறான். திரும்பி வர நாள் ஆகிறது.

தலைவியைப் பற்றி சிந்திக்கிறான்.

அவள் எப்படியெல்லாம் தன்னைப் பிரிந்து வருந்துவாள் என்று சிந்திக்கிறான்.

தூக்கம் வராமல் விழித்து இருப்பாளோ ? படுக்கையில் படுக்காமல் தரையில் , தன்னுடைய கையையே தலையணையாக வைத்துப் படுத்துக் கிடைப்பாளோ ? பிரிவுத் துயரில் அழுவாளோ ? என்னைப் பற்றி என்னென்ன நினைப்பாள் ? பாவம் அவளுக்காக நான் ஒன்றும் செய்தது இல்லை. ரொம்ப கஷ்டப் படுத்தி இருக்கிறேன். நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்ப்பாளோ ? என்று தலைவன் உருகுகிறான்.

காதலின் பிரிவை சொல்லும் , நாலடியார் பாடல்


செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.


பொருள்

செல்சுடர் = செல்லுகின்ற சுடர். சூரியன். சூரியன் சென்று மறையும் மாலை நேரம்.

நோக்கிச் = அதை நோக்கி

சிதரரிக் கண் = செவ்வரி ஓடிய கண்கள். சிவந்த கண்கள்  

கொண்டநீர் = ததும்பிய கண்ணீர்

மெல்விரல் = மெல்லிய விரலால்

ஊழ்தெறியா = முறையாக தெறிக்கும் படி விரலால் சுண்டி

விம்மித்தன் = பிரிவின் துயர் பொறுக்காமல் விம்மி

மெல்விரலின் = மெல்லிய விரலின்

நாள்வைத்து = நாட்களை எண்ணி

நங்குற்றம் = நம்முடைய குற்றங்களை

எண்ணுங்கொல் = நினைப்பாளோ ?

அந்தோதன் = ஐயோ , தன்னுடைய

தோள்  = தோளை யே

வைத்து = வைத்து

அணை மேல்  = தலையணை போல்

கிடந்து = படுத்து

தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு , தலையணை போல் வைத்து  இருக்கிறாள். கண்ணில் நீர் வழிகிறது. அதை விரலால் எடுத்து சுண்டி விடுகிறாள்.

என்று கற்பனை செய்கிறான் தலைவன்.

அவனுக்குத் தன்னிரக்கம் மேலிடுகிறது.  என்னைப் பற்றி பெரிதாக நினைக்க என்ன இருக்கிறது. அவள் மகிழும்படி என்ன செய்து விட்டேன் ? அவளுக்குத் தந்தது எல்லாம் துன்பம் தான். நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள் அவள் என்று வருந்துகிறான்.

பிரிவை, அதன் வலியை , அதன் சோகத்தைக் கூட இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா ?

Tuesday, October 25, 2016

ஒளவையார் தனிப்பாடல் - கற்றது கைம்மண் அளவு

ஒளவையார் தனிப்பாடல் - கற்றது கைம்மண் அளவு

தமிழ் கூறும் நல் உலகம் யாரை இழந்தாலும் ஒளவையை இழந்து விடக்  கூடாது.

ஒளவையின் பாடல்கள் அத்தனை எளிமையானவை, இனிமையானவை, நடைமுறைக்கு, அன்றாட வாழ்க்கைக்கு வழி காட்டுபவை.

கொஞ்சம் படித்து விட்டு ,ஏதோ எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று பேசுபவர்களைக் கண்டு ஒளவை சொல்லுகிறாள்...

"கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு. கலை மகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். சும்மா நான் ரொம்பக் கற்றவனா, நீ ரொம்பக் கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்"

பாடல்

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்

பொருள்

கற்றது = இதுவரை கற்றது

கைம் மண்ணளவு = கையில் உள்ள மண் அளவு

கல்லா து = கல்லாதது

உலகளவென் (று) = உலகம் அளவு பெரியது

உற்ற = உடைய

கலைமடந்தை = கலைமகளான சரஸ்வதியும்

ஓதுகிறாள் = படிக்கின்றாள்

மெத்த = பெரிய

வெறும் = வெறும்

பந்தயம் = நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பந்தயம்

கூற வேண்டாம் = கட்ட வேண்டாம்

புலவீர் = புலவர்களே

எறும்பும் = சின்ன எறும்பு கூட

தன் = தன்னுடைய

கையால் = கையால்

எண் சாண் = எட்டு சாண் அளவு உயரம் இருக்கும்

நமக்கு ஏதோ ஒரு துறையில் ஏதோ கொஞ்சம் தெரியும் - கணிதமோ, அறிவியலோ , வர்தகமோ ஏதோ ஒன்றில் கொஞ்சம் தெரியும். மற்றவனுக்கு  சமையல்  தெரியலாம், சங்கீதம் தெரியலாம், படம் வரையத் தெரியலாம், நன்றாக விளையாடாத் தெரியலாம். நமக்கு அதில் ஒன்றும் தெரியாமல் இருக்கலாம்.

ஒவ்வொருவரும், அவர்கள் துறையில் பெரியவர்கள்தான்.

இதைச் சொல்ல வந்த ஒளவை, மூன்று பெரிய விஷயங்களை போகிற போக்கில் சொல்லி விட்டு ப் போகிறாள்.

முதலாவது, இந்த உலகில் கடல் எவ்வளவு பெரியது. அந்த கடலின் கரையிலும், கடலின் அடியிலும் எவ்வளவு மண் இருக்கும். இந்த உலகம் எல்லாமே  மண்ணால் நிறைந்ததுதான். அவ்வளவு மண்ணில், ஒரு பிடி மண் எடுத்தால் எவ்வளவு இருக்கும். இந்த பூமியை மட்டும் ஏன் கொள்ள வேண்டும். இந்த அண்ட சராசரங்களை எடுத்துக் கொண்டால் அதில் எவ்வளவு மண் இருக்கும்.  கற்பனை கூட செய்ய முடியாது. அந்த கோடானு கோடி அண்டத்தில், ஒரு பிடி மண்ணை கையில் எடுத்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு நாம் படித்தது. பிடிக்காதது இந்த அண்டத்தில் உள்ள மண்ணின் அளவு.  ஏதாவது தொடர்பு இருக்கிறதா. இதை வைத்துக் கொண்டு நாம் பெரிய ஆள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இரண்டாவது, நமது மதத்தில் ஒரு துறைக்கு ஒரு கடவுள் என்றால் அவர் தான்  அதில் அதிக பட்சம் ஆற்றல் உள்ளவராக இருப்பார். அவருக்கு மேல் ஒன்றும் இல்லை. அவரால் முடியாதது எதுவும் இல்லை. இலக்குமி தான் செல்வத்திற்கு அதிபதி  என்றால், அவளிடம் எல்லாம் இருக்கிறது. அவள் தினமும்  வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியை சொன்ன நம் முன்னவர்கள், அவள்  கூட அனைத்தையும் படித்து முடித்து விடவில்லையாம். இன்னும் படித்துக்  கொண்டுதான் இருக்கிறாளாம். கல்விக் கடவுளே கல்வியை முற்றுமாக அறிந்து கொள்ளவில்லை என்றால் கல்வியின் அகல ஆழத்தை நாம் அறிந்து கொள்ள  வேண்டும்.

கையில் ஏடு உள்ளவள் என்பார் கம்பர்

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்றுமிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயி ரும்படைப் பாளைப் பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே

என்பது சரஸ்வதி அந்தாதி. 

புத்தகம் வித்யார்த்தி இலட்சணம் என்பது வடமொழி வழக்கு.



இந்தக் காலத்தில் பிள்ளைகளிடம் ஏண்டா படிக்காமல் டிவி பார்த்து கொண்டிருக்கிறாய் என்று  கேட்டால் "எல்லாம் படிச்சாச்சு" என்கிறார்கள்.

சில பெண்களிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டால், "படித்து முடித்து விட்டு சும்மா இருக்கிறேன்" என்பார்கள். படித்து முடிக்க முடியுமா ?

மூன்றாவது, சரஸ்வதி ஏதோ நேரம் கிடைக்காமல் , கிடைத்த நேரத்தில் படிக்கவில்லை. ஓதுகிறாளாம். ஓதுதல் என்றால் திருப்பி திருப்பி சொல்லுதல். மனனம் செய்தல். புரியும்படி சொல்லுதல்.


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், நாம் படித்ததை நாலு பேர் தெரியச் சொன்னால் தானே நமக்குத் பெருமை. இல்லை என்றால் நாம் படித்தது யாருக்குத் தெரியும்  என்று நினைத்து எந்நேரமும், எல்லா விஷயங்களிலும் ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டே இருப்போம். வள்ளுவர் சொல்கிறார், அடக்கமாக இருந்தால்  பெரிய புகழ் வந்து சேரும் என்று.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின்.

என்பது வள்ளுவம். அடக்கம் அளவற்ற பெருமையை தருமாம்.

ஆணவம் கொள்ளாமல், அடக்கமாக இருந்து பழகுவோம்.




Monday, October 24, 2016

நாலடியார் - வாழ்வின் தொடக்கம்

நாலடியார் - வாழ்வின் தொடக்கம் 


ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழவைத் தொடங்கப் போகிறார்கள்.

குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும், உறவுகளை எப்படி அனுசரித்துப் போக வேண்டும், சேமிப்பு, சிக்கனம், என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. விட்டு கொடுத்து போவது, சமரசம் செய்து கொள்வது. இதெல்லாம் எந்த பள்ளியிலும், கல்லூரியிலும் சொல்லித் தருவது இல்லை.

தட்டு தடுமாறி , இதை வாழ்க்கையில்  நேரடியாக கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

தோழி கேட்கிறாள் தலைவியிடம், " செல்ல பிள்ளையாக வளர்ந்து விட்டாய். நாளை உன் கணவன் பின்னால் கடினமான காட்டு வழியில் போக வேண்டுமே. நடந்து விடுவாயா ? உன்னால் முடியுமா ? "

அதற்கு தலைவி சொல்கிறாள் "ஒருவன் ஒரு குதிரையை வாங்குகிறான் என்றால், வாங்கிய அன்றே அதை எப்படி செலுத்துவது என்று அறிவானா ? கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பழகுவான். அது போலத்தான் வாழ்க்கையும்."

பாடல்



கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி ; - சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.


பொருள்


கடக்கருங் = கடக்க + அருங் = கடக்க கடினமான

கானத்துக் = காட்டில்

காளைபின் = கணவனின் பின்னால் 

நாளை = நாளை

நடக்கவும் = நடந்து செல்ல

வல்லையோ = வல்லமை உள்ளவளா

என்றி ; = என்று கேட்டாய்

சுடர்த்தொடீஇ = சுடர் விடும் வளையல்களை அணிந்தவளே (தோழியே) !

பெற்றானொருவன் = ஒருவன் பெற்றால்

பெருங்குதிரை = பெரிய குதிரை ஒன்றை

அந்நிலையே = அந்த நேரத்திலேயே

கற்றான் = கற்றான்

அஃதூரும் ஆறு = அதை செலுத்தும் வழியை

குதிரையை வாங்கிய அன்றேவா அதை செலுத்தும் வழியும்  தெரியும். தெரியாது. ஆனால், வாங்கிய அந்த நிமிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  அதை செலுத்தும் வழியை அறிந்து கொள்ளுவாள் அல்லவா அது போல   நானும் இந்த திருமண வாழ்க்கையை எப்படி நடத்திச் செல்ல வேண்டும்  என்று அறிந்து கொள்வேன் என்கிறாள்.

யதார்த்தத்தை பேசும் பாடல்



Sunday, October 23, 2016

நாலடியார் - பூம்பாவை செய்த குறி

நாலடியார் - பூம்பாவை செய்த குறி


அந்தப் பெண் அவளுடைய காதலனோடு நாளை ஓடிப் போகப் போகிறாள். ஏதோ காரணத்தினால் அவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்தில் நடக்காது என்று தெரிந்து விட்டது.

காதலனும் காதலியும், வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்வது கொள்வது என்று தீர்மானம் செய்து விட்டார்கள்.

அவளுக்கு மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.

அவளுடைய தாயை பார்க்கும் போது உணர்ச்சி கொந்தளிக்கிறது.

என்னை எப்படியெல்லாம் வளர்த்து இருப்பாள். என்னை வளர்க்க எப்படி எல்லாம் கஷ்டப் பட்டு இருப்பாள். என்னைப் பற்றி என்னவெல்லாம் கனவு இருப்பாள் ? என்னை மாலையும் கழுத்துமாக காண எவ்வளவு ஆசை பட்டிருப்பாள் ...நானும் என் கணவனும் ஒன்றாக வெளியில் போகும் போது எங்களை பார்த்து எவ்வளவு மகிழ்திருப்பாள் ...அத்தனையையும் கலைத்து விட்டு இப்போது என் காதலனோடு போகப் போகிறேன். நான் இந்த வீட்டை விட்டு போன பின், அவள் மனம் எவ்வளவு பாடு படும் என்று நினைக்கிறாள்.

தாய் பாசம் ஒரு புறம். காதலனோடு செல்ல வேண்டும் என்ற ஆவல் மறுபுறம். அல்லாடுகிறாள்.

அவள், தன்னுடைய தாயை மீண்டும் மீண்டும் இறுக கட்டி அணைத்துக் கொள்கிறாள். தாய்க்கு புரியவில்லை.

மறு நாள். மகள் வீட்டை விட்டு போன மறுநாள். தாய் புலம்புகிறாள். "அவள் என்னை அப்படி மார்பு அழுந்தும் படி, அவள் கழுத்தில் அணிந்திருந்த மாலையில் உள்ள முத்து என் உடலில் அழுந்தும்படி, உடல் பூராவும் படும்படி ஏன் கட்டிப் பிடித்தாள் என்று நான் அறியவில்லை. புலிகள் உள்ள காட்டில் மான் செல்லுவதைப் போல அவளும் செல்கிறாள் என்பதை குறிக்கவோ அப்படி செய்தாள் " என்று அறியாமல் புலம்புகிறாள்.

சோகம் ததும்பும் அந்தப் பாடல்

பாடல்

முலைக்கண்ணும், முத்தும், முழுமெய்யும், புல்லும் 
இலக்கணம் யாதும் அறியேன்; -- கலைக்கணம் 
வேங்கை வெருஉம் நெறிசெலிய போலும், என்
பூம்பாவை செய்த குறி

பொருள்

முலைக்கண்ணும் = அவளுடைய மார்பும்

முத்தும் = அவள் கழுத்தில் உள்ள மாலையில் உள்ள முத்து, வைரம் போன்றவை

முழுமெய்யும் = முழு உடம்பும்

புல்லும் = அணைத்ததின்

இலக்கணம் = காரணம்

யாதும் = எதுவும்

அறியேன்; = நான் அறிய மாட்டேன்

கலைக்கணம் = கலை என்றால் பெண் மான். பெண் மான்கள்

வேங்கை = புலிகள்

வெருஉம் = கோபித்து அலையும்

நெறிசெலிய = வழியில் செல்வதற்காக

போலும் = போலும்

என் = என்னுடைய

பூம்பாவை = பூ போன்ற பெண்

செய்த குறி = செய்த அடையாளங்கள்

தன்னுடைய பெண்ணை குறிக்கும் போது , பூம் பாவை என்கிறாள். பூ போன்ற பெண் என்கிறாள்.

அவள் போன வழி தாய்க்குத் தெரியாது. இருந்தும், புலிகள் அலையும் காட்டில் மான்கள் செல்வதைப் போல அவளும் போய் இருப்பாளோ என்று பயப்படுகிறான்.

தாயின் மனம்.

என்ன நேர்ந்தது என்று தெரியாது. "இதற்காகத்தானா அப்படி கட்டிப் பிடித்தாள் " என்று  நினைக்கிறாள்.

ஒரு பெண்ணுக்குத்தான் மற்றொரு பெண்ணின் மனம் புரியும். அதுவும், ஒரு தாய்க்கு மகளின் மனம் புரியாதா ?

அவள் அப்படி கட்டி பிடித்ததற்கு காரணம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறாள்.

இந்த பாடல் நிகழ்வதற்கு முன் என்ன நடந்தது, அதற்கு பின் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

இந்த பாடலில் உள்ள நான்கு வரிகளைக் கொண்டு நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான்.

காதலை, பிரிவை, பாசப் போராட்டத்தை, எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையை, உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை இதை விட அழகாக சொல்ல முடியுமா ?




அவ்வையார் தனிப் பாடல் - கீச்சுக்கீச் சென்னும் கிளி

அவ்வையார் தனிப் பாடல் - கீச்சுக்கீச் சென்னும் கிளி


பெரிய உயர்ந்த நூல்களை படிக்கும் போது , பெரியவர்கள் பேசுவதை கேட்கும்போது "அடேயப்பா இதில் இவ்வளவு இருக்கிறதா...இத்தனை நாள் இதெல்லாம் தெரியாமல் இருந்து விட்டோமே ...இன்னும் இதைப் போல எவ்வளவு இருக்கிறதோ " என்ற ஒரு பிரமிப்பு வரும். இதெல்லாம் தெரியாமல் ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரிந்தது போல இத்தனை நாள் பேசிக் கொண்டிருந்தோமே என்று ஒரு நாணம் வரும்.

இனிமேலாவது ரொம்ப பேசுவதை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வர வேண்டும்.

ஒருவன் ஒரு கிளி வளர்த்தான். அதற்கு பேசக் கற்றுக் கொடுத்தான். அந்தக் கிளியும் அவன் வீட்டுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரும் போதெல்லாம் பேசிக் காட்டி அவர்களை மகிழ்விக்கும். கிளியின் சொந்தக் காரனுக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஒரு நாள் அவன் வெளியில் சென்றிருந்த சமயம், அவன் வீட்டில் இருந்த ஒரு பூனை , இந்த கிளி இருக்கும் கூட்டை நோக்கி தாவி , கிளியை பற்ற நினைத்தது.

பூனையைக் கண்டவுடன் கிளிக்கு இதுவரை படித்தது எல்லாம் மறந்து விட்டது. தன் சந்த குரலில் கீச் கீச் என்று கத்தத் தொடங்கியது.


பாடல்

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

பொருள்

காணாமல் = (கற்றறிந்த பெரியவர்களை) காணாத போது

வேணதெல்லாம் = நமக்கு வேண்டியது எல்லாம்

கத்தலாம் = பேசலாம்

கற்றோர்முன் = கற்றறிந்தவர்கள் முன்

கோணாமல் = வளைந்து நெளிந்து கோணாமல்

வாய்திக்கக் கூடாதே = வாய் திறக்க முடியாது

நாணாமல் = கூச்சம் இல்லாமல்

பேச்சுப்பேச் சென்னும் = எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்

பெரும்பூனை வந்தக்கால் = பெரிய பூனை வந்தபோது

கீச்சுக்கீச் சென்னும் கிளி = கீச் கீச் என்னும் கிளி

கிளி பேசுகிறதே என்றால் அதற்கு அந்த பேச்சுக்கு அர்த்தம் தெரியாது. ஏதோ சத்தம்  உண்டாக்கும். அவ்வளவுதான். அதே போல வாழ்வில் நிறைய பேர் என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம், பேசுவதால் என்ன பயன் என்று அறியாமல்  "கத்தி"க் கொண்டு இருப்பார்கள்.

அர்த்தம் அற்ற பேச்சு அடங்க வேண்டுமானால், அர்த்தம் உள்ள பேச்சுகளை கேட்க வேண்டும். படிக்க வேண்டும்.

அறிவு வளர வளர , அமைதி தோன்றும்.

மௌனம், ஞான வரம்பு என்று சொல்லுவார்கள்.

 அருணகிரியாருக்கு முருகன் சொன்ன உபதேசம் ஒன்றே ஒன்று தான்.


"சும்மா இரு"

அவ்வளவுதான்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

என்பது கந்தர் அனுபூதி.

சும்மா இருப்பது பெரிய விஷயம். அம் "மா" பொருள் ஒன்றும் அறிந்திலனே என்கிறார்  அருணகிரியார்.

சும்மா இருக்கும் சுகம் என்பார் வள்ளலார்

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற் 
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல 
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து 
சும்மா இருக்கும் சுகம். 

என்பது திருவருட்பா 

நல்ல விஷயங்களை படியுங்கள். கற்றறிந்தவர்கள் பேசுவதைக் கேளுங்கள். பேச்சு குறையும். ஞானம் பெருகும்.

பெருகட்டும்.



Saturday, October 22, 2016

திருக்கடை காப்பு - குரங்கின் ஊடல்

திருக்கடை காப்பு - குரங்கின் ஊடல் 


திருஞான சம்பந்தர் குழந்தையாக இருக்கும் போதே பாடல் பாடத் தொடங்கினார். சின்ன பிள்ளை தானே, குரங்கைப் பார்த்தால் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. எங்கு போனாலும் குரங்கைப் பற்றி , அது செய்யும் செயல்களை பற்றி பாடுவார்.

திருச்சிராப்பள்ளிக்கு வருகிறார். அங்கே, மலை மேலே ஒரு பெண் குரங்கு, தன்னுடைய துணையான ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு, குட்டிக் குரங்கை தூக்கிக் கொண்டு , முகம் சிவந்து , மரங்களின் ஊடே பாய்கிறது. அப்படிப் பட்ட ஊரில் உள்ள சிவனே நீ ஒன்றுக்கு ஒன்று முரணான பாம்பையும் நிலவையும் தலை மேல் வைத்து இருப்பது பிழை அல்லவா என்று வினவுகிறார்.

பாடல்

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?


 பொருள்


கைம் மகவு = கை பிள்ளையை

ஏந்திக் = எடுத்துக் கொண்டு

கடுவனொடு = ஆண் குரங்கோடு

ஊடிக் = ஊடல் கொண்டு

கழை = மரங்களுக்கு

பாய்வான் = (இடையில்) பாய்ந்து செல்லும்

செம்முக = சிவந்த முகத்தை கொண்ட

மந்தி = பெண் குரங்கு

கரு = கரிய

வரை = மலை

ஏறும் = ஏறும்

சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

வெம் முக = வெம்மையான முகத்தைக் கொண்ட

வேழத்து = யானையின்

ஈர் உரி போர்த்த = தோலினை மேலே போர்த்துக் கொண்ட

விகிர்தா! = தலைவா

நீ = நீ

பைம்முக = படத்துடன் கூடிய முகம் கொண்ட

நாகம் = நாகப் பாம்பையும்

மதி = நிலவையும்

உடன் வைத்தல் = ஒன்றாக வைத்து இருப்பது

பழி அன்றே? = தவறு அல்லவா ?

இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று இதை ஒரு பெரிய  தோத்திர பாடல் என்று போற்றி மகிழ்கிறார்கள் ?

குரங்குகளுக்குள் சண்டை வருவதும், சிவன் தலையில் பாம்பையும், நிலவையும்  வைத்து இருப்பதும் என்ன பெரிய செய்தியா ?

சிராப்பள்ளி குன்று இருக்கிறது. அதன் மேல் சிவன் கோவில் இருக்கிறது. அங்கே இருக்கும்  குரங்குக்கு அது எல்லாம் முக்கியம் இல்லை. ஆண் குரங்கும்  பெண் குரங்கும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, மரத்துக்கு மரம் தாவிக் கொண்டு இருக்கின்றன.

எது முக்கியம் வாழ்வில் என்று தெரியாமல்.

குரங்கைப் பற்றி சொன்னால் என்ன, நம்மைப் பற்றி சொன்னால் என்ன. அதில் இருந்து வந்தவர்கள் தாமே நாம்.

உலகில் என்னென்னெவோ செய்ய வேண்டியது இருக்கிறது. அதை விட்டு விட்டு, சாப்பாடு, ஊடல், கூடல் , பிள்ளைகள், குடும்பம் என்று அலைகிறோம் .

அந்த குரங்குகளுக்கும் நமக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா

நாம் அந்த குரங்குகளை பார்த்து சிரிக்கிறோம். திருஞான சம்பந்தர் போன்ற பெரியவர்கள்  நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்.

பொருள் சேர்ப்பதும், உண்பதும், உறங்குவதும், பிள்ளை வளர்ப்பதும்...இது மட்டும்தானா  வாழ்க்கை.

மதியையும் பாம்பையும் வைத்து இருக்கிறாயே என்கிறார்.

இருவினை ஒப்பு என்பது சைவ சித்தாந்தத்தில் ஒரு முக்கிய பாடம்.

நன்மை தீமை, உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன், படித்தவன் முட்டாள், இன்பம் துன்பம்  என்று வாழ்வில் எல்லாம் இரண்டு துருவங்களாக இருக்கிறது.


இன்பம் வேண்டும், துன்பம் வேண்டாம்.

நன்மை வேண்டும், தீமை வேண்டாம்.

செல்வம் வேண்டும், வறுமை வேண்டாம்


இப்படி நாம் ஒன்று வேண்டும், மற்றது வேண்டாம் என்று இருக்கிறோம்.

ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும், இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றோடு  ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில்லாமல் மற்றது இல்லை.

பிறப்பு உண்டு என்றால், இறப்பு கட்டாயம் உண்டு.

பதவி உயர் வரும்போது மகிழ்ச்சி என்றால், ஓய்வு பெற்று வீட்டுக்குப் போகும் போது  துன்பம் கட்டாயம் உண்டு.

இன்பம், தலை என்றால், துன்பம் வால் . தலையை பிடித்து தூக்கினால் வாலும் கூடவே வரும்.

துன்பம் வேண்டாம் என்றால், இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக பார்க்கும் சம நோக்கு  வேண்டும்.

அதற்குத் தான் "இருவினை ஒப்பு" என்று  பெயர்.

"இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்பார் மணிவாசகர்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பது வள்ளுவம்.

அரசை கொடுத்த போதும் மகிழவில்லை, அது இல்லை காட்டுக்குப் போ என்று சொன்னபோதும் இராமன் துன்பப் படவில்லை.

நடுவில் நில்லுங்கள். இன்பமும் துன்பமும் உங்களை ஒன்றும் செய்யாது.



இராமாயணம் - வீடணன் அடைக்கலப் படலம்

இராமாயணம் - வீடணன் அடைக்கலப் படலம் 


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரை கூறினான் வீடணன். இராவணன் கேட்டான் இல்லை.  பின்,அவனை விட்டு பிரிந்து வந்து, தன்னுடைய மந்திரிகளிடம் என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டான். அவர்களும், இராமனிடம் போய் சேர்வோம் என்று கூறினார்கள்.

வீடணனும், "நல்லது சொன்னீர்கள். இராமனைச் சேர்ந்து இந்த பிறவியை போக்கிக் கொள்ளலாம் " என்று கூறுகிறான்.

இங்கே சற்று நிறுத்தி யோசிப்போம்.

இராவணன் செய்த செய்கை சரி இல்லை என்றால், அவனுக்கு உதவி செய்யாமல் தனித்து நின்றிருக்கலாம். பரசுராமன், விதுரன் போன்றோர் துரியோதனன் செய்தது தவறு என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் பாண்டவர் பக்கம் போக வில்லை. துரியோதனனுக்கு துணை செய்யவில்லை. அவ்வளவுதான். எப்படியோ போ என்று விட்டு விட்டார்கள்.

அதே போல வீடணனும் செய்து இருக்கலாம். எதற்காக இராமன் பக்கம் சேர்ந்து, இராவணனுக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் ? அது சரியா என்று  வீடணனை ஆழ்வார் என்று கொண்டாடுபவர்கள் கூட மனதுக்குள் சங்கடப்படுவதை நான் கேட்டு இருக்கிறேன். ஏன் அப்படி செய்தான் ?

இந்தப் பாடலில் விடை தருகிறான்.

பாடல்

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.

பொருள்

'நல்லது சொல்லினீர்; = (மந்திரிகளே ) நல்லது சொன்னீர்கள்

நாமும், = நாமும்

வேறு இனி = வேறு இனி

அல்லது செய்துமேல் = மற்றயது எது செய்தாலும்

அரக்கர் ஆதுமால் = அது அரக்க செயலே ஆகும் என்பதால்

எல்லை இல் = எல்லை இல்லாத

பெருங் குணத்து = பெரிய குணங்களை உடைய

இராமன் = இராமனின்

தாள் = திருவடிகள்

இணை = இரண்டையும்

புல்லுதும் = அடைவோம்

புல்லி = அடைந்து

இப் பிறவி போக்குதும் = இந்த பிறவியைப் போக்குவோம்

இராமன் திருவடிகளை  சேராமல் வேறு எதைச் செய்தாலும், அது அரக்க குணமே என்று வீடணன் நினைக்கிறான். இராவணனை விட்டு விலகிப் போய் , இராமன் கூட சேராமல் தணிந்து நின்றாலும் அது அரக்க குணமே என்பது அவன் எண்ணம்.

தவறு என்று தெரிந்தால் அதை எதிர்க்க வேண்டுமே அல்லால், நமக்கு என்ன , அவன் பாட்டுக்கு  செய்து விட்டுப் போகட்டும், நம்மை பாதிக்காதவரை நல்லது என்று  ஒதுங்கிப் போகக் கூடாது. அப்படி செய்தால், அது அரக்க குணமே.

அது மட்டும் அல்ல,  வீடணனின் எண்ணம் எல்லாம், இராவணனை தண்டிப்பதோ, சீதையை விடுவிப்பதோ அல்ல.

அவன் இராமனை சேர வேண்டும் நினைத்தது,  அறத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக  அல்ல.

இந்தப் பிறவி என்னும்  சூழலில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு இராமனின்  திருவடிகளே துணை என்று நினைத்து போய் சேர்ந்தான். இராவணனுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்பதோ, இராவணன் இறந்தால் தனக்கு  அந்த அரசு கிடைக்கும் என்பதோ அவன் எண்ணம் அல்ல. இந்தப் பிறவி பிணியை போக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம்.

அதற்காக இராமனை சென்று சேர்கிறான்.

வாழ்க்கையில் துன்பங்கள் வரும். சலனங்கள் வரும். சூழ்நிலைகள் மாறும். நினைப்பது நடக்காது. நினையாதது நடக்கும்.

என்ன நடந்தாலும், நமக்கு வாழ்வில் என்ன குறிக்கோள் என்பதை மறந்து விடக் கூடாது. அதை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

அலைகள் போல் மேலும் மேலும் எழும் பிறவிகள் நீங்கள் வேண்டும்...ஆர்த்து எழும் பிறவி துயர் நீங்க வேண்டும் என்பார் மணிவாசகர்.


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 



பிறவி பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பது வள்ளுவம்.

இந்த பிறவி என்ற பெருங்கடலில் நம்மை தூக்கி போட்டு இருக்கிறார்கள். சும்மா  போடவில்லை, பந்த பாசம், ஆசை, கோபம், பொறாமை போன்ற கற்களை சேர்த்து  கட்டி தூக்கி போட்டு இருக்கிறார்கள். அதில் இருந்து நீந்தி கரை சேர  துணையாய் இருப்பது "நமச்சிவாய" என்ற மந்திரமே என்பார் அப்பரடிகள்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

என்பது தேவாரம்.

"எல்லை இல் பெருங்குணம்" எல்லை இல்லாத பெரிய குணங்கள். இராமனுக்கு  இவ்வளவு தான் உயர்ந்த குணங்கள் என்று ஒரு பட்டியல் போட்டுக் காட்ட  முடியாது. எவ்வளவு பெரிய பட்டியல் போட்டாலும், அதையும் தாண்டி அவன் பெரிய குணங்கள் நீளும்.

இவ்வளவுதான் உயர்ந்த குணங்கள் என்று சொல்ல முடியாது , உயர்வு அற உயர் நலம் உடையவன் அவன் என்பார் நம்மாழ்வார்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

என்பது பிரபந்தம்.

அவன் திருவடிகளை பற்றினால் இந்த பிறவி என்ற பெருங்கடலை தாண்டலாம்.