Saturday, July 1, 2017

இராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ !

இராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ !


காட்டில் இராமனைக் கண்டு, அரசை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். இராமன் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. பார்த்தார் வசிட்டர், இது வேலைக்கு ஆகாது. பரதன் சொன்னால் இராமன் கேட்க மாட்டான். நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று , பரதனை இடை மறித்து "நீ அரசை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் . இது என் ஆணை " என்கிறார்.

குருவின் ஆணை. மீறவும் முடியாது.

தர்ம சங்கடத்தில் இராமன்.

இராமன் என்ன செய்தான் ?

முனிவரை வணங்கி, அறிஞனே , நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது என்று கூறத் தொடங்குகிறான் ...


பாடல்


கூறிய முனிவனைக் குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது, செங்கணான்,
‘ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை
கூறுவது உளது’ எனக் கூறல் மேயினான்:


பொருள்

கூறிய முனிவனைக் = ஆட்சியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறிய முனிவனை

குவிந்த தாமரை = குவிந்த தாமரை போன்ற

சீறிய கைகளால் = சிறந்த கைகளால்

தொழுது = வணங்கி

செங்கணான் = சிவந்த கண்களை உடைய

‘ஆறிய சிந்தனை அறிஞ! = ஆறிய சிந்தனை உள்ள அறிஞனே

ஒன்று உரை கூறுவது உளது’  = நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது

எனக் கூறல் மேயினான் = என்று கூறத் தொடங்கினான்



சொன்னது  ஆசிரியன். அவர் சொன்னதை மறுத்துச் சொல்லப் போகிறான் .

அப்படி சொல்வதற்கு முன்னால் , கை கூப்பி , தொழுது பின் சொல்லத் தொடங்குகிறான்.

இது நமது பண்பாடு. கலாச்சாரம்.

பெரியவர்களிடம் பேசும் போது ஒரு மரியாதையோடு பேச வேண்டும்.

இன்று , பெரியவர்கள் பேசுவதை கேட்பது கூட கிடையாது. அப்படியே கேட்டாலும், அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் பாதியில் இடை மறித்து பேசும் பழக்கம் இருக்கிறது.  

பெரியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் பேசும் போது , அவர்களை வணங்கி, மரியாதையுடன் பேச வேண்டும். .

இராமன் ஒரு மாற்றுக் கருத்தை கூறப் போகிறான். நாம் பெரியவர்களின் கருத்துக்களோடு முரண் படலாம். அதை சொல்லும் முறை இருக்கிறது.

இராமனிடம் பாடம் கற்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, "ஆறிய சிந்தனை அறிஞ" என்று மரியாதையோடு அவர் பெருமையையும்  சேர்த்துச் சொல்கிறான்.


"நீ பெரிய அறிஞன் என்பது எனக்குத் தெரியும் " என்று சொல்லிவிட்டு சொல்லாத் தொடங்குகிறான்.

இது ஒரு பேசும் கலை.

நாம் இன்னொருவரின் கருத்தை மறுத்துச் சொல்ல வேண்டி இருந்தால், அவர்களோடு கடுமையான முகத்தை வைத்துக்கொண்டு, கடு கடு என்று பேச வேண்டியது இல்லை.

"நீங்கள் சொல்வது சரிதான். உங்களுக்குத் தெரியாதது இல்லை. உங்க அறிவுக்கும், அனுபவத்துக்கும், நீங்க சொல்வது சரியாத்தான் இருக்கும். ....இருந்தாலும், எனக்கு சொல்ல ஒன்று இருக்கிறது "

என்று சொல்ல ஆரம்பித்தால், எதிரில் இருப்பவரும் நீங்கள் சொல்வதை கேட்பார்.

முதலில் இனிய சொற்களோடு ஆரம்பிக்க வேண்டும்.

"ஆறிய சிந்தனை அறிஞ" என்று சொன்னவுடன் வசிட்டரின் கோபம் கொஞ்சம் தணியும். என் அறிவின் வீச்சை இராமன் அறிவான். அவன் என்ன தான் சொல்கிறான் கேட்போம் என்று அவன் சொல்வதை கேட்கத் தலைப்படுவார்.


ஆறிய சிந்தனை என்றால் என்ன ?

நம் சிந்தனை எந்நேரமும் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. காமம், கோபம், பொறாமை, எரிச்சல் என்ற பல்வேறு குணங்களால் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. ஆறிய சிந்தனை என்பது, சலனம் இல்லாமல், அமைதியாக, தெளிவாக இருப்பது. உணர்ச்சி வசப்படாமல், அமைதியான சிந்தனை என்று பொருள்.

இராமன் ஆண்டால் என்ன, பரதன் ஆண்டால் என்ன ? வசிட்டனுக்கு ஒன்றும் இல்லை.  இராமன் மேல் உள்ள அன்பினாலோ, அல்லது பரதன் மேல் உள்ள வெறுப்பினாலோ  அவன் அதைக் கூறவில்லை என்று இராமன் முன்னமேயே தெரிவித்து விடுகிறான்.


இரண்டு விஷயங்கள்


ஒன்று, பெரியவர்களோடு பேசும் போது , அவர்களை வணங்கி மரியாதையோடு பேச வேண்டும்.

இரண்டு, மாற்று கருத்து இருந்தாலும், பெரியவர்களின் அறிவை, திறமையை குறைத்து  மதிப்பிடக் கூடாது. நம் கருத்தை பணிவாக வெளிப்படுத்த வேண்டும்.





Friday, June 30, 2017

இராமாயணம் - ஆசிரியன் ஆணை

இராமாயணம் - ஆசிரியன் ஆணை 


நாட்டை ஏற்றுக் கொள் என்று பரதன் பல விதங்களில் கெஞ்சிப் பார்க்கிறான் இராமனிடம். இராமன் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. "இப்போது இது  இராஜ்யம். இதை நான் உனக்குத் தருகிறேன். யார் என்ன சொல்வது. ஏற்றுக் கொள் " என்கிறான்.

இராமனோ மறுத்து, "அப்படியே நான் ஏற்றுக் கொண்டாலும், 14 வருடம் கானகம் போவதாக என் தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். அதை நிறைவேற்ற வேண்டும் . எனவே நீயே ஆள் " என்கிறான்.

இவர்களுக்குள் இப்படி வாதம் நடந்து கொண்டிருந்த போது , அருகில் இருந்த குல குருவான வசிட்டன் இடைப்பட்டு , "நான் உனக்கு அறம் சொல்லித் தந்த குரு. நான் ஆணையிடுகிறேன். போய் அரசை ஏற்றுக் கொள் " என்று ஆணையிட்டு கூறுகிறான்.

பாடல்

என்றலால், யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்,
“அன்று” எனாது, இன்று எனது ஆணை; ஐய! நீ
நன்று போந்து அளி, உனக்கு உரிய நாடு’ என்றான்.

பொருள்

என்றலால் = என்று கூறுவதால். (பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர் தலைவர்கள் என்று கூறுவதால்)

யான் = நான்

உனை எடுத்து = வளர்த்து எடுத்து

விஞ்சைகள் = வித்தைகள்

ஒன்று அலாதன பல = ஒன்று அல்ல , பல விதமான வித்தைகளை

உதவிற்று = கற்றுத்தந்தது

உண்மையால் = உண்மையானனால்

“அன்று” எனாது = சரி அல்ல என்று மறுக்காமல்

இன்று எனது ஆணை; = இன்று எனது ஆணை

ஐய! = ஐயனே

நீ = நீ

நன்று போந்து அளி = போய்  நன்றாக நாட்டை காப்பாற்று

உனக்கு உரிய நாடு’ என்றான் = அது உனக்கு உரிய நாடு என்றான்

மிகப் பெரிய சிக்கல்.

 ஒரு புறம் தான் படித்த அறங்கள்.  இன்னொரு புறம் தந்தைக்கு   வாக்கு.  மறு புறம்  அரசை ஏற்க மறுக்கும் பரதன். இப்போது, இன்னொரு சிக்கல், குல குருவான  வசிட்டனின் ஆணை.

இராமன் என்ன செய்யப் போகிறான் ?

என்ன செய்தாலும் தவறாகப் போக வாய்ப்பு உள்ளது.

நாட்டை ஏற்றுக் கொண்டால் , கொடுத்த வாக்கில் இருந்து தவறியாக ஆகும்.

நாட்டை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , ஆசிரியனின் ஆணையை மீறியதாகும்.

இராமன் எப்படி இந்த சிக்கலை விடுவிக்கிறான் ? 

Wednesday, June 28, 2017

இராமாயணம் - வாய்மையும் தீமையும்

இராமாயணம் - வாய்மையும் தீமையும்


தயரதன் ஆணை கொண்டு இராமன் கானகம் போனான். போன இராமனைத் தேடி பரதன் வருகிறான். வந்தவன், இராமனை பார்த்துச் சொல்கிறான், "நடந்தது எல்லாம் தவறு. நீ வந்து அரசை ஏற்றுக் கொள் " என்கிறான்.

அதற்கு இராமன், "அதெல்லாம் முடியாது. எனக்கு என் தந்தை சொல்லை காப்பதுதான் தர்மம். அவர் சொன்ன சொல் தான் எனக்கு வேத வாக்கு" என்று சொல்கிறான்.

பரதனுக்கு சொல்லும் மறுமொழியில் இராமன் ஒரு மிகப் பெரிய உண்மையை உலகுக்கு எடுத்து உரைக்கிறான்.

தீமை என்றால் என்ன ? கெட்டது என்று எதைச் சொல்வது ?

சத்தியத்தில் இருந்து விலகுவதுதான் தீமை என்கிறான் இராமன்.

சத்தியத்தின் வழி நடப்பதுதான் தூய்மையான வழி என்று சொல்கிறான்.

பாடல்

வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம்,
“தூய்மை” என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?
தீமைதான், அதின் தீர்தல் அன்றியே,
ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே?


பொருள்


வாய்மை என்னும் ஈது அன்றி = வாய்மை என்ற இது அல்லாது

வையகம் = உலகம்

“தூய்மை” என்றும் = தூய்மையான என்று

ஒன்று = ஒன்று உண்டென்று

உண்மை சொல்லுமோ? = ஒரு உண்மையைச் சொல்லுமோ ?

தீமைதான், = தீமை என்பது எது என்றால்

அதின் தீர்தல் அன்றியே = அதின் என்றால் அந்த வாய்மையின். சத்தியத்திற்கு புறம்பாக

ஆய் மெய்யாக = போவது அன்றி உண்மையிலேயே

வேறு = வேறு ஏதாவது

அறையல்  = சொல்ல

ஆவதே? = முடியுமா ?

வாய்மை, உண்மை, மெய்மை என்ற மூன்று சொற்களை சொல்கிறான் இராமன்.


இந்த மூன்றும் ஒரு பொருளை குறிப்பது தானே ? எதற்காக மூன்று சொற்கள் ?

மூன்றுக்கும் வேறுபாடு  இருக்கிறது.

மன , மொழி, மெய்யால் குற்றமில்லாமல் ஒருவன் ஒருவன் இருக்க வேண்டும். (மெய் , வாக்கு, காயம் என்று வட மொழியில் சொல்லுவார்கள் ).

உள்ளத்தில் (மனம்) இருந்து வருவது = உள்  + மை  = உண்மை
வாயில் இருந்து வருவது = வாக்கு + மை  = வாய்மை
மெய்யில் (உடல்) இருந்து வருவது = மெய் + மை  = மெய்மை

பரதா , நீ சொல்கிறாய் , "இப்போது நான் தானே அரசன் ? அப்படி என்றால் என் அரசை உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள் " என்று.

அது வாதத்திற்கு சரியாக இருக்கலாம்.

ஆனால், உன்னுடைய உள்ளத்திற்கும், என் மனதிற்கும் தெரியும் அது சரி இல்லை என்று.

மன , மொழி, மெய்யால் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறான் இராமன்.

அதுதான்  தூய்மை. அதை அன்றி தூய்மை வேறு இல்லை.

புறத்தூய்மை நீரான் அமையும், அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்பார்  வள்ளுவர்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

என்பதும் அவர் வாக்கே.

எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன். 

Tuesday, June 27, 2017

திருக்குறள் - உலகிலேயே பெரிய முட்டாள்

திருக்குறள் - உலகிலேயே பெரிய முட்டாள் 


நிறைய பேர் நிறைய படிப்பார்கள். படித்தவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். அதை தீர அலசி ஆராய்ந்து அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்வார்கள்.

யார் கேட்டாலும், அதில் இப்படி சொல்லி இருக்கிறது, இதில் இப்படி சொல்லி இருக்கிறது என்று மேற் கோள் காட்டுவார்கள்.

படித்தது போதாது என்று மேலும் மேலும் படிப்பார்கள்.

சரி, இவ்வளவு படித்து அறிந்து கொண்டு இருக்கிறாயே, அதன் படி நடக்கிறாயா, அவற்றை வாழ்வில் கடை பிடிக்கிறாயா என்று கேட்டால்

"ஹாங்...அது எல்லாம் நடை முறைக்கு சரி வராது,  படிக்க வேண்டுமானால் நல்லா இருக்கும், வாழ்க்கைக்கு ஒத்து வராது, அதெல்லாம் செய்ய முடியாது, ரொம்ப கடினம் " என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விட்டு , மீண்டும் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தார்களோ , அப்படியே வாழ்க்கையை தொடருவார்கள்.

அவர்களைத்தான், உலகிலேயே பெரிய முட்டாள்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் 
பேதையின் பேதையார் இல்.


பொருள்


ஓதி  = அறிய வேண்டியவற்றை படித்து அறிந்து

உணர்ந்தும் = அவற்றின் பயன்களை உணர்ந்து

பிறர்க்குரைத்தும் = பிறர்க்கு அதை எடுத்துச் சொல்லியும்

தானடங்காப் = தான் அடங்கா

பேதையின் பேதையார் இல் = முட்டாளைப் போல பெரிய முட்டாள் இல்லை .


ஓதி என்பதற்கு , மன மொழி மெய் அடங்குவதற்கு ஏதுவான நூல்களை ஓதி என்று குறிப்பிடுகிறார் பரிமேலழகர்.

புலன்களை அடக்கி, மனதையும், பேசும் மொழியையும் அடக்க உதவி செய்யும்  நூல்களை கற்று.

படித்தது மட்டும் அல்ல, அதன் பயன்களை உணர்ந்தும்.

அது மட்டும் அல்ல, ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து கொண்டு.

தான் அடங்கா - தான் ஆசைகளை அடக்காமல் இருக்கும் முட்டாளை விட பெரிய முட்டாள் இல்லை.


நல்லவற்றை படிக்க வேண்டும்.

நல்லவை என்றால் - மன மொழி மெய் அடங்க உதவும் நூல்கள். அப்படி என்றால் சிற்றின்பத்தை தூண்டும் நூல்களை படிக்கக் கூடாது.

படித்ததன் பலன்களை உணர வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, படித்து உணர்த்தவற்றின் படி வாழ வேண்டும்.

படிப்பு ஒரு பக்கம், வாழ்க்கை ஒரு பக்கம் என்று இருக்கக் கூடாது.

அப்படி என்றால், படிக்கவே வேண்டாமே.

நிற்க அதற்கு தக என்பார் வள்ளுவர்.

நல்லதைப் படித்து அதன் படி வாழவேண்டும்.

Sunday, June 25, 2017

இராமாயணம் - இசைந்த ஆண்டு எலாம் இன்றோடு ஏறுமோ ?

இராமாயணம் - இசைந்த ஆண்டு எலாம் இன்றோடு ஏறுமோ ?


கானகத்தில் இராமனைக் கண்டு, "நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று பரதன் வேண்டுகிறான்.

"இராமா, தயரதன் அரசை என்னிடம் கொடுத்தான். நான் ஏற்றுக் கொண்டதாகவே வைத்துக் கொள் . இப்போது இந்த அரசு என்னுடையது. என் அரசை உன்னிடம் தருகிறேன். நீ ஏற்றுக் கொள் " என்று கூறியதை முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அப்படி சொன்ன பரதனை, இராமன் மடக்குகிறான்.

"பரதா , நீ சொல்லியபடி நான் இந்த அரசை ஏற்றுக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தயரதன் , அரசை உனக்குக் கொடுத்தான். நீ அதை எனக்குத் தருகிறாய். அது எல்லாம் சரி தான்.  ஆனால்,பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல வேண்டும் என்பது தயரதனின் ஆணை. அந்த பதினான்கு ஆண்டுகள் இன்றோடு முடிந்து விடுமா ? " என்று கிண்டலாக கேட்கிறான்.

பாடல்

‘பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு
அசைந்த எந்தையார் அருள, அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ?


பொருள்


‘பசைந்த சிந்தை = அன்பு கொண்ட மனத்தை உடைய

நீ  = பரதனாகிய நீ

பரிவின் = என் மேல் கொண்ட பரிவினால் , அன்பினால்

வையம் = உலகை

என் வசம் செய்தால் = என்னிடம் தந்தால்

அது முறைமையோ? = அது முறையாகுமா ?

வசைக்கு = பழிக்கு

அசைந்த  = பயந்த

எந்தையார் = என் தந்தையான தயரதன்

அருள = கைகேயிக்கு கொடுத்த வரத்தினால்

அன்று நான் = அன்று நான்

இசைந்த = ஏற்றுக் கொண்ட

ஆண்டு எலாம் = பதினான்கு ஆண்டுகள் எல்லாம்

இன்றொடு ஏறுமோ? = இன்றோடு முடிந்து விடுமா ?


பதினான்கு ஆண்டுகள் கானகம் போவதாய் நான் ஏற்றுக் கொண்டு வந்து இருக்கிறேன். இப்போது நான் அரசை ஏற்றுக் கொண்டால் அது தயரதனின் சொல்லை மீறிய செயலாகும். தயரதன் , கைகேயிக்கு வரம் கொடுத்து இருக்கிறான். என் தந்தையான அவரின் வாக்கை காப்பாற்ற வேண்டியது என் கடமை. நான் அரசை ஏற்றுக் கொண்டால், அது தயரதன் வாக்கு தவறியதாக ஆகும். அவர் பழிக்கு அஞ்சியவர். எனவே நான் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.


எவ்வளவு தான் துன்பமாக இருந்தாலும், தந்தையின் வார்த்தையை காப்பது மகனின் கடமை.   அது மட்டும் அல்ல, நான் கானகம் போவதாக வாக்கு கொடுத்து விட்டேன்.  என் வாக்கையும் காக்க வேண்டும். எனவே, நான் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.

உயர்ந்த கொள்கைகளுக்காக வாழ்ந்த பாத்திரங்களை காட்டுகிறார் கம்பர். எப்படி வாழ வேண்டும் என்று பாடம் நடத்துகிறார்.  எப்படியும் வாழலாம் என்று உலகம் நினைக்கும் போது , இல்லை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று கோடு கிழித்து காட்டுகிறார்.

நம் வார்த்தையை மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர்களின் வார்த்தைகளையும் நாம் காக்க வேண்டும். 

Friday, June 23, 2017

இராமாயணம் - மன்ன ! போந்து நீ மகுடம் சூடு

இராமாயணம் - மன்ன ! போந்து நீ மகுடம் சூடு 


ஆசை இல்லாத மனிதன் யார் ?

ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கு மட்டும் அல்ல பாவங்களுக்கும் காரணமாய் இருக்கிறது.

இல்லாத  மேல் ஆசைப் பட்டு மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். அது வேண்டும், இது வேண்டும் என்று அனைத்தையும் அடைய ஆசை பட்டு துன்பப் படுகிறார்கள்.

ஆசையை விட முடியுமா ? ஆசை இல்லாத வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்கிறதா ? ஆசைதானே நம் முன்னேற்றத்திற்கு காரணம். ஆசை இல்லாத மனிதன் ஒரு மனிதனா ? என்று நாம் நினைக்கலாம்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்...நம்மிடம் எவ்வளவு ஆசைகள் இருக்கின்றன. பணம், செல்வாக்கு, பதவி, சொத்து, சுகம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்பு, என்று எண்ணில் அடங்கா ஆசைகள்.

அத்தனை ஆசைகளையும் தூர எறிந்து விட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

உப்பு சப்பு இல்லாமல் வெறுமையாக இருக்கும் அல்லவா ? அப்படித்தானே நினைக்கிறீர்கள் ?

 இல்லை.

ஆசை இல்லாமலும் முடியும். ஆசை இல்லாத வாழ்விலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. சுகம் இருக்கிறது என்று காட்டுவதற்குத் தான் இந்த திருவடி சூட்டு படலம் என்ற ஒன்றை வைத்து இருக்கிறார் கம்பர்.

மிகப் பெரிய இராஜ்யம்.  ஞானிகளையும் பாவ வழியில் செல்லத் தூண்டும் செல்வம் என்பாள் கூனி. அவ்வளவு செல்வம். கணக்கில் அடங்காத செல்வம். அதிகாரம்.  பெயர். புகழ். ஆள். அம்பு. சேனை.  சுகம்

அத்தனையும் காலடியில் கிடக்கிறது.

இராமனும் பரதனும் அதை வேண்டாம் என்கிறார்கள்.

பத்து ரூபாய் காணாமல் போனால் இரண்டு நாள் தூக்கம் வராது
நமக்கு.

எனக்கு இந்த அரசு வேண்டாம் என்று பரதன் சொல்கிறான். இராமா, நீ இதை வைத்துக் கொள் என்கிறான்.

இல்லை, இல்லை, எனக்கு வேண்டாம். நீயே அரசாள் என்று பரதனிடம் இராமன் கூறுகிறான்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ?

பரதன் கூறுகிறான், "இந்த மூன்று உலகிலும் உனக்கு நிகரான ஒருவன் யாரும் இல்லை. எனக்கு முன் பிறந்தவன் நீ. நீ அந்த அரசை எனக்குத் தந்து விட்டாய் அல்லவா. இப்போது அது என்னுடைய சொந்தமான அரசு தானே ? அதை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா ?" என்று இராமனிடம் கேட்கிறான்.

இராமன் : "ஆம், அது உன்னுடைய அரசு. அதை நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீ தான் சக்கரவர்த்தி "

பரதன்: சரி அப்படினா, என் அரசை நான் உனக்குத் தருகிறேன். நீ ஆண்டு கொள் என்கிறான்.

பாடல்


‘முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென்;
மன்ன! போந்து நீ மகுடம் சூடு ‘எனா.

பொருள்


‘முன்னர் = எனக்கு முன்னால்

வந்து = வந்து

உதித்து = நீ உதித்து

உலகம் மூன்றினும் = இந்த மூன்று மூன்று உலகிலும்

நின்னை = உன்னை

ஒப்பு இலா = இணை இல்லா

நீ பிறந்த பார் = இந்த பிறந்த இந்த உலகில்

என்னது ஆகில் = என்னுடையது என்று நீ சொன்னால்

யான்  = நான்

இன்று தந்தனென் = இன்று அதை உனக்குத் தந்து விட்டேன்

மன்ன! = மன்னா

போந்து = போய்

நீ மகுடம் சூடு ‘எனா = நீ மகுடம் சூட்டு என்றான்

நீ எனக்கு முன் இந்த பாரில் பிறந்தாய். இந்த மூன்று உலகிலும் உனக்கு இணையானவன் யாரும் இல்லை. நீ எனக்குத் தந்த அரசை நான் உனக்குத் தருகிறேன். நீ போய் முடி சூட்டிக் கொள்

என்கிறான் பரதன்.

அரச முறைப் படி - நீ முதலில் பிறந்தவன். எனவே நீ தான் ஆள வேண்டும்.

மூன்று உலகிலும் நீ திறமையானாவான் = எனவே ஆள நீயே சரியான ஆள்.

நீ எனக்குத் தந்தாய். நான் ஏற்றுக் கொண்டேன். இப்போது அந்த அரசு என்னுடையது. என்னுடைய அரசை நான் உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள்.

அப்படி பார்த்தால், இது தயரதனின் அரசு அல்ல. என் அரசு. அதை நான் உனக்குத் தருகிறேன். அதை ஏற்றுக் கொள்வதில் உனக்கு ஒரு தடையும் இல்லை.

ஒரு அரசை எப்படி ஒரு அண்ணணனும் தம்பியும் எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டாம்  என்று சொல்கிறார்கள்.

அப்படியும் வாழ முடியும்.

வாழ்திருக்கிறார்கள். 

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்


புற இருளை எவ்வாறு சூரியன் போக்குகிறதோ , அது போல அக இருளை நீக்க வந்தது இந்த பெரிய புராணம் என்று பாயிரத்தில் குறிக்கிறார் சேக்கிழார்.

இருள் , தான் எவ்வளவு தான் முயன்றாலும் அது தன்னை தானே வெளிச்சமாகிக் கொள்ள முடியாது.

அது போல, அக இருளை நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நாமே அதே போக்கிக் கொள்ள முடியாது. குருவருளும் , இறை அருளும் தேவை . இறைவனின் அருள் இல்லாமல் அது நிகழாது என்பதை பெரிய புராணம் முழுவதும் நாம் காண முடியும்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"  என்பார் மணிவாசகர்.

பெரிய புராணத்தில் முதல் கதை தடுத்தாட்கொண்ட புராணம்.

ஒரு பிரச்சனை, தவறு , சிக்கல் நிகழப் போகிறது என்றால் அது நிகழ்வதற்கு முன்னால் அதை தடுத்து நிறுத்தி, அதை செய்ய  இருந்தவர்களை அதில் இருந்து காப்பாற்றுவது தடுத்து + ஆண்டு + கொள்வது.

சுந்தரர், திருமணம் செய்து கொள்ள  இருந்தார். அப்போது சிவ பெருமான், வயோதிக வேதியர் வடிவில் வந்து, "இந்த சுந்தரன் எனக்கு அடிமை. இவனுடைய தாத்தா எனக்கு ஓலை எழுதி தந்திருக்கிறார். எனவே இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது " என்று தடுத்தார்.

சுந்தரர் வாது புரிகிறார். "பித்தா " என்று அந்த வேதியரை ஏசுகிறார்.

வேதியர் ஓலையை காண்பிக்கிறார்.  அந்த ஓலையை வாங்கி கிழித்துப் போட்டு விடுகிறார் சுந்தரர். வேதியர் விடுவதாய் இல்லை. "இது படி (copy ) ஓலை தான். மூல ஓலை என்னிடம் இருக்கிறது " என்று எல்லோரையும் கூட்டிக் கொண்டு போய் காண்பிக்கிறார். ஊரில் உள்ள எல்லோரும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். சுந்தரர் அடிமைதான் என்று சொல்லி விடுகிறார்கள்.

பின், சிவன் தன் சுய உருவத்தை காட்டி , "நீ இந்த சம்சார சாகரத்தில் கிடந்து அழுந்தாமல் இருக்கவே வந்து உன்னை தடுத்தாட்கொண்டேன்" என்று அருள் புரிகிறார்.

"என்னை பித்தா என்று திட்டினாய் அல்லவா, எனவே என்னை பித்தா என்றே ஆரம்பித்து பாடு " என்றார்.

"பித்தா  பிறை சூடி, பெருமானே அருளாலா " என்று பாடுகிறார்.

அந்தக்  கதைதான் நாம் பார்க்கப் போகிறோம்.

முதல் பாடல் சுந்தரர் பிறந்த நாட்டின் பெருமையை பற்றி பேசுகிறது.

பாடல்  

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு,
மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஓடிச்
செங் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு.

பொருள்


கங்கையும்  = கங்கை நதியும்

மதியும் = நிலவும்

பாம்பும்  = பாம்பையும்

கடுக்கையும் = கொன்றை மலர்

முடி மேல் வைத்த = முடி மேல் வைத்த

அங்கணர் = அழகிய கண்ணை உடைய அவர் (சிவன்)

ஓலை காட்டி = ஓலையை காட்டி

ஆண்டவர் = ஆட்கொண்ட

தமக்கு நாடு = உரிமையாகக் கொண்ட நாடு

மங்கையர் = பெண்கள்

வதன = முகம்

சீத = குளிர்ச்சியான

மதி = நிலவு போன்ற

இரு மருங்கும் ஓடிச் = இரண்டு பக்கமும் ஓடி

செங் கயல் = சிறந்த மீன்கள்

குழைகள் = காதில் அணியும் ஆபரணங்களை

நாடும் = தேடும்

திருமுனைப்பாடி நாடு = திருமுனைப்பாடி  என்ற நாடு



நாடு நன்றாக  இருக்கிறது என்று சொல்ல வந்த சேக்கிழார் அதை  எப்படி சுருக்கமாக சொல்வது என்று யோசித்து சொல்கிறார்.

பெண்களின் முகம் குளிர்ந்த நிலவைப் போல இருந்தது என்கிறார் . பெண் மகிழ்ச்சியாக இருந்தால்  அவள், இருக்கும் வீடும், சமுதாயமும்,  நாடும் சிறந்து  விளங்கும். தான் இருக்கும் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் பெண் மகிழ்ச்சியாக இருப்பாள். எல்லா பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றால் , அங்குள்ள எல்லா குடும்பங்களும் மகிழ்வாக இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்ல, அவர்களின் மீன் போன்ற கண்கள் , அவர்களின் காதில் உள்ள குழையை தேடி போனதாம்.  கண்கள் நீண்டு இருந்தன என்று சொல்கிறார்.  நீண்ட கண்கள் பெண்களுக்கு ஒரு அழகு.

உறவுகள் கண்ணில் தொடங்கி , காதின் வழியே உறுதி அடைகின்றன.

ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்தவுடன் ஏதோ ஒன்று பிடித்துப் போகிறது. எனக்கேற்ற பெண் / ஆண் இவள்/இவன் தான் என்று மனதில் எங்கோ பட்சி சொல்கிறது.

அப்புறம் கொஞ்ச கொஞ்சமாய் அவளோடு பேசி , அவள் பேசுவதை கேட்டு மேலும் பிடித்துப் போகிறது.

காதல் கண்ணில் ஆரம்பிக்கிறது.

உருவ வழிபாடு அது தான். பார்த்தவுடன் பக்தி வருகிறது. பின் இறைவனைப் பற்றி கேட்டு, படித்து அறிந்து கொள்கிறோம்.

அதை சொல்ல வந்த சேக்கிழார், அந்த ஊரில் உள்ள பெண்களின் கண்கள் காது வரை நீண்டு இருந்தது என்று  கூறுகிறார்.

சுந்தரை  -  ஓலை காட்டி ஆண்டார்
ஞான சம்பந்தரை  - பாலை (ஞானப்பால்) தந்து ஆண்டார்
மணி வாசகரை - காலை (திருவடி) காட்டி ஆண்டு கொண்டார்
நாவுக்கரசரை -  சூலை நோய் தந்து ஆண்டு கொண்டார்

இவைகள் வெறும் கதைகள் அல்ல. மிகப் பெரிய தத்துவங்களை சொல்ல வந்த ஒரு ஊடகம். அந்தத் தத்துவம் என்ன என்று பெரிய புராணம் முழுவதும் படித்தால் புரியும்.

நேரம் இருப்பின், முடிந்தவரை, தெரிந்தவரை பகிர்ந்து கொள்ள ஆசை.