Wednesday, May 30, 2012

திருக்குறள் - காதல் என்றும் புதிது


திருக்குறள் - காதல் என்றும் புதிது



நாம் புதியதாய் ஒன்றை படித்து அறிந்து கொள்ளும் போது நமக்கு ஒரு சந்தோஷம் வரும் தானே?

"அட, இதை இத்தனை நாள் அறியாமல் போனோமே" என்று தோன்றும்.
தெரிந்த பின், ஒரு சந்தோஷம் தோன்றும். மேலும் மேலும் அந்த விஷயத்தை பற்றி அறிந்து கொள்ள தோன்றும்.


அது போல, இந்த பெண்ணுடன் பழகும் ஒவ்வொரு நாளும் புதியதாய் இருக்கிறது.


அந்த சிணுங்கல், அந்த வெட்கம், அந்த கனிவு, பரிவு, பாசம், என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று புதியதாய் இருக்கிறது.

ஒரு விஷயத்தை படித்து அறிந்தவுடன் , அந்த விஷயம் நமக்கு பழையதாகிப் போகிறது.


அதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடுகிறது.


ஆனால், நம் அறியாமை மட்டும் அப்படியே இருக்கிறது.


அது மேலும் மேலும் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள தூண்டிக் கொண்டே இருக்கிறது.


அறிய அறிய நம் அறியாமை புதிது புதிதாக தோன்றுவதைப் போல, இந்த பெண்ணோடு பழகும் போது ஒவ்வொரு தடவையும்
ஏதோ புதியதாய் தோன்றி கொண்டே இருக்கிறது.


கம்ப இராமாயணம் - இராமனின் சகோதர சோகம்


கம்ப இராமாயணம் - இராமனின் சகோதர சோகம்


இந்திரஜித்தின் அம்பினால் இலக்குவன் அடிபட்டு மூர்ச்சையாகிக் கிடக்கிறான்.

அவன் இறந்து விட்டானோ என்று எண்ணி, இராமன் புலம்புகிறான்.

"என் தந்தை தசரதன் இறந்தான், 

இந்த உலகம் எல்லாம் ஆளும் அரசுரிமையை தந்தேன், 

அப்போது எல்லாம் நீ என்னுடன் இருக்கிறாய் என்ற தைரியத்தில் இருந்தேன்.

இப்போது நீ போய் விட்டாய்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன்...நானும் உன்னோடு வந்து விடுகிறேன்" என்று கதறுகிறான் இராமன்.


நெஞ்சை உருக்கும் சோகம்.

Tuesday, May 29, 2012

கம்ப இராமாயணம் - இராவணன் ஏன் இறந்தான்?


கம்ப இராமாயணம் - இராவணன் ஏன் இறந்தான்?


விபீஷணனை தொடர்ந்து மண்டோதரி வருகிறாள்.

இராவணன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

தாரை புலம்பலும், மண்டோதரி புலம்பலும் மிக மிக அர்த்தம் உள்ள புலம்பல்கள்.

அவர்களின் அறிவு திறம் வெளிப்படும் இடம்.

சோகமும், விரக்தியும், மனச் சோர்வும், கவித்துவமும் நிறைந்த பாடல்கள்.


மடோதரியின் புலம்பலில் இருந்து ஒரு பாடல்.


இராவணன் இறந்ததற்கு எவ்வளவோ காரணங்கள்...

அவன் ஜானகி மேல் கொண்ட காதல்.

ஜானகியின் கற்பு.

சூர்பனகியின் இழந்த மூக்கு

தசரதனின் கட்டளை

அதை ஏற்று வந்த இராமனின் பணிவு

எல்லாவற்றிற்கும் மேலாக இந்திரனின் தவம்

இவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து இராவணின் உயிரை கொண்டு சென்று விட்டது என்கிறாள்.

கந்தர் அலங்காரம் - வயதான காலத்தில்


கந்தர் அலங்காரம் - வயதான காலத்தில்


சிறை படாத நீர் போல் காலம் கசிந்து கொண்டே இருக்கிறது.

நமக்கும் வயது ஏறும். படித்தது மறக்கும். 

நம் உடல் அவயங்கள் நாம் சொல்வதை கேட்காத காலம் வரும்.

நம் உறவினார்களும் நண்பர்களும், "அடடா, எப்படி இருந்த ஆளு, இப்படி ஆய்டானே என்று நினைத்து வருந்தும் காலம் வரும்.

அப்போது, முருகா, உன்னை வணங்கும் செயலன்றி வேறு ஒன்றும் அறியேன்....

அருணகிரி நாதர் கரைகிறார்....

கம்ப இராமாயணம் - யாருடைய பிழை?


கம்ப இராமாயணம் - யாருடைய பிழை?


இராமன் கானகம் போக வேண்டும் என்ற செய்தியை கேட்ட இலக்குவன் கோபத்தால் கொந்தளிக்கிறான்.

அவன் கோபம் எல்லோர் மேலும் பாய்கிறது. 

தசரதனையும், பரதனையும் கொன்று, அவர்களுக்கு துணையாக யார் வந்தாலும் அவர்களையும் கொன்று இந்த அரசை உனக்கு தருவேன் என்று மிகுந்த கோபம் கொண்டு இராமனிடம் சொல்லுகிறான்.


அவனை சமாதானப் படுத்துகிறான் இராமன்.

நதியில் நீர் இல்லை என்றால் அது நதி செய்த குற்றம் இல்லை, 

மழை பொழியாத விதியின் குற்றம். 

அது போல் என்னை கானகம் போகச் சொன்னது தந்தையின் குற்றம் அல்ல, 

தாயின் குற்றம் அல்ல, பரதனின் குற்றம் அல்ல, விதியின் குற்றம். இதற்க்கு யார் மேல் கோபிப்பது என்று அவனை சமாதனப் படுத்துகிறான்.


நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மைஅற்றே,
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்றுமைந்த!
விதியின் பிழைநீ இதற்கு  என்னை வெகுண்டது?’ என்றான்.

நதியின் பிழை அன்று = நதியின் குற்றம் அல்ல

நறும் புனல் இன்மை = நல்ல தண்ணீர் இல்லாதது. மேலோட்டமாகப் பார்த்தால், தண்ணி இல்லாதது நதியின் குற்றம் அல்ல என்று சொல்லத் தோன்றும். கம்பர் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கிறார். "நல்ல" தண்ணி இல்லாதது நத்யின் குற்றம் அல்ல. நதியில் நல்ல தண்ணி தான் வரும், ஊரில் உள்ளவர்கள் அதில் கழிவு நீரை சேர்த்து விடுவதால் அது கெட்ட நீராக மாறி விடுகிறது. அது போல் நம் தாயும் தந்தையும் நல்லவர்கள் தான், ஆனால் யாரோ அவர்கள் மனதை கெடுத்து இருக்கலாம் என்று ஒரு அர்த்தம் கொள்ளலாம்.

அற்றே, = அது அன்றி

பதியின் பிழை அன்று; = தசரதனின் பிழை அன்று

பயந்து = பயந்து...எதுக்கு பயப்படனும் ? குழந்தைக்கு என்ன கொடுத்தால் என்ன ஆகுமோ, என்று பயந்து பயந்து வளர்த்தவள் கைகேயி. இன்னொரு பொருள், பாராட்டி/சீராட்டி

நமைப் புரந்தாள் = நம்மை வளர்த்தவள் (கைகேயி)

மதியின் பிழை அன்று = அவள் மதியின் பிழை அன்று

மகன் பிழை அன்று; = மகனின் பிழை அன்று (பரதன்) 

மைந்த! = மகனே (இலக்குவனே)

விதியின் பிழை; = விதியின் பிழை

நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். = இதுக்கு போய் ஏன் கோபித்துக் கொள்கிறாய்

இவ்வளவு சொன்ன பின்னும் இலக்குவன் சமாதானம் ஆனானா? 

இல்லை.

"விதிக்கும் விதி காணும் என் விற்தொழில் காண்டி என்றான்" என்று சண்ட மாருதாமாய் புறப்படுகிறான்...

அது அடுத்து வரும் blog குகளில் பார்ப்போம் 


கம்ப இராமாயணம் - இராவணன் தழுவிய பெண்கள்


கம்ப இராமாயணம் - இராவணன் தழுவிய பெண்கள்


இராவணன் இறந்து கிடக்கிறான்.

குப்புற விழுந்து கிடக்கிறான்.

அகன்ற மார்பு. பரந்து விரிந்த இருபது கைகள். 

பார்பதர்ற்கு அவன் நிலத்தை கட்டி பிடித்து கொண்டு கிடப்பது போல 

இருக்கிறது. 

விபீஷணன் அவன் மேல் விழுந்து கதறி கதறி அழுகிறான்.

மண்டோதரி புலம்பலை விட சோகம் ததும்பும் பாடல்கள் விபீஷணன் துக்கம் ததும்பும் பாடல்கள்.

அதில் இருந்து இன்னொரு பாடல்...

கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா

கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா


கலிங்கத்துப் பரணி என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப் பட்டது.

எழுதிய காலம் கி.பி. 1112 என்று சொல்கிறார்கள்.

ஆயிரம் வருஷம் முந்தியது.

குலோத்துங்க மன்னன் கலிங்கத்தை வென்றதை பாராட்டி எழுதிய பாடல்.

பரணிக்கு ஒரு புலவன் ஜெயங்கொண்டார் என்று சிறப்பு பெற்றவர்.

காதல், வீரம், அந்த கால வாழ்கை முறை, என்று பல விஷயங்களை சேர்த்து எழுதி இருக்கிறார்.

அதில் கடை திறப்பு என்று ஒரு பகுதி.

ஜொள்ளர்களுக்கு பெரிய விருந்து.

வள்ளுவரின் காமத்துப் பாலோடு போட்டியிடும் பாடல்கள்.


படித்து முடித்தவுடன், உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகையையை வரவழைக்கும் பாடல்கள்.

கடை (வாசல்) திறப்பு என்ற பகுதியில், வீரர்கள் போர் முடிந்து வீட்டிற்கு வருகிறார்கள்.

அவர்களின் மனைவியோ, காதலியோ அவர்கள் மேல் ஊடல் கொண்டு கதவை திறக்காமல் முரண்டு பண்ணுகிறார்கள்.

அவர்களை சமாதனம் பண்ணி கதவை திறக்க சொல்லும் பாடல்களின் தொகுப்பு.

romance இன் உச்ச கட்டம் !