Wednesday, March 27, 2013

இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி


இராமாயணம் - இராமன் என்னும் வாழ்க்கை நெறி  


அவதாரம் என்ற சொல்லுக்கு எது கீழே இறங்கி வர வேண்டிய அவசியமே இல்லாவிட்டாலும், கீழே இருப்பவர்களை மேலே ஏற்றிவிட வந்ததோ அது என்று பொருள் படும். 

திருமாலுக்கு இந்த பூமிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இங்குள்ள மக்களை மேலே உயர்த்தி விட அந்த சக்தி கீழே இறங்கி வந்தது. எனவே அது அவதாரம். 

இரு கை வேழத்து இராகவன்தன் கதை

வேழம் (யானை ) என்ன செய்யும்...தன் காலை பிடித்தவர்களை தன் தலைக்கு மேலே தூக்கி விடும். அது போல நம்மை கடைந்தேற்ற வந்த ஒரு சக்தி இராமன். 

நீங்கள் இறைவனை நம்புங்கள், நம்பாமல் இருங்கள். 

நீங்கள் இராமன் என்று ஒருவன் இருந்தான் என்பதை நம்புங்கள், அல்லது நம்பாமல் போங்கள்.

இராமாயணம் ஒரு கதை என்றே இருக்கட்டும். 

நான் எதற்கு இராமாயணம் படிக்க வேண்டும் ? வேற வேலை இல்லையா ? அதைவிட ஆயிரம் முக்கியமான வேலை இருக்கு...இது எல்லாம் தாத்தா பாட்டி  வயசுல படிக்க  வேண்டியது ..இப்ப என்ன அவசரம் என்று நினைக்கும் இளைய தலை முறைக்கு அவர்கள் வாழ்வை எதிர் கொள்ள உதவும் ஒரு அற்புதமான நூல்  கம்ப இராமாயணம். 

இளைய தலைமுறை தான் இதை முதலில் படிக்க வேண்டும். 

அந்த கதையில் வாழ்ந்த ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்று காட்டி இருக்கிறான். 

நம் வாழ்வின் வரும் ஒவ்வொரு சிக்கலும் அவன் வாழ்விலும் வந்தது. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட பல மடங்கு துயரம் அவனுக்கு வந்தது. அவன் அவற்றை எப்படி எதிர் கொண்டான், எப்படி வாழ்ந்தான் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது 

தொழிலில் சின்ன நஷ்டம், வாங்கிய பங்கு (share ) விலை குறைந்து விட்டால், வீடு ஒரு மாதம் வாடகைக்கு  போகாமல் பூட்டி இருந்து விட்டால் ஏதோ உலகமே இருண்டு போன மாதிரி  கவலைப் படுகிறோம்....

நாம் மலை போல் நம்பிய ஒருவர் நம்மை கை விட்டால் நாம் எப்படி உடைந்து போவோம்..

உறவினர்களை, நண்பர்களை எப்படி அரவணைத்துப் போவது, பெரியோரிடம் மரியாதை, ஆசிரியரிடம் பக்தி, மனைவியிடம் அன்பு, அண்டியவர்களை காக்கும் உயர் குணம், மற்றவர்களின் உயர் குணங்களை பாராட்டும் நற்பண்பு, பொறுமை, வீரம், இதமாக பேசுவது, இனிமையாகப் பேசுவது, மக்களை எடை போடுவது, அன்பு பாராட்டுவது, மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்வது , பாசம், இறை உணர்வு, என்று வாழ்வின் அத்தனை  பரிணாமங்களையும் தொட்டுச் செல்கிறது இராமன் என்ற அந்த கதா பாத்திரம். 

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டிச் செல்கிறது. 

வாழ்வில் சிக்கல் வரும்போது, துன்பம் வரும் போது , கவலை வரும்போது, இழப்புகளும், நட்டங்களும்  வரும்பொழுது என்ன செய்யலாம், எப்படி செய்யாலாம் , யாரக் கேட்கலாம் என்று நாம் தவிக்கும் போது, நமக்கு வழி காட்டியாய் இருப்பது இராமனின் வாழ்க்கை. 


கம்ப இராமாயணம் காட்டும் இராமனின் வாழ்க்கை நமக்கு எப்படி உதவும், வழி காட்டும், துன்பங்களை தாங்கிக் கொள்ள, சிக்கல்களை விடுவிக்க, எப்படி அது உதவும் என்ற  அடுத்து வரும் சில ப்ளாகுகளில் சிந்திப்போம். 



குறுந்தொகை - மொழி தெரியாத காதலன்

 குறுந்தொகை - மொழி தெரியாத காதலன் 



காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள்...காதுமா இல்லை ? மொழி தெரியாத  பற்றிய ஒரு பாடல் குறுந்தொகையில்...


கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் 
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி 
ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே 
எழுவினி வாழியென் னெஞ்சே முனாது 
குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 
மொழிபெயர் தேஎத்த ராயினும் 
வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே. 


படிச்சாச்சா ? நல்லா இருக்குல ? எவ்வளவு இனிமையான பாடல்...அப்படின்னு சொல்லிட்டு போனா "உன்னை தூக்கி சைப்ரஸ்ல போட "னு  என்கூட சண்டைக்கு வருவீர்கள் 

சீர் பிரிக்கு முன், வார்த்தைக்கு வார்த்தைக்கு அர்த்தம் பார்க்குமுன் , பாடலின் பின்னணியை பார்ப்போம் ...


அவளுக்கு அவன் மேல் காதல். 

இரண்டு பேருக்கும் மொழி கூட பொது கிடையாது. எப்படிதான் காதலை சொன்னார்களோ. அதுதான் சுவாரசியமான விஷயம் 

அவன், அவனுடைய சொந்த ஊருக்குப் போய் விட்டான்....காதலிக்கு   வழக்கம் போல் கை வளையல்கள் நெகிழ்கிறது, தூக்கம்  வரவில்லை, (மின்சாரம், மின் விசிறி இல்லாமல் அந்த காலத்தில் எப்படி  தான் தூங்கினார்களோ ?)...பேசாம அவன் இருக்கும் ஊருக்கு போயிரலாமா  என்று யோசிக்கிறாள் ..என்ன அந்த ஊரில் எல்லோரும் வேறு மொழி பேசுபவர்கள் ... 

முதலில் பாடலை சீர் பிரிப்போம் 



கோடு ஈர் இலங்கு வளை நெகிழும் நாள் தொறும் 
பாடு இல் கலி உழும் கண்ணோடு புலம்பி 
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே 
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது 
குல்லை கண்ணி வடுகர் முனை அது 
பல் வேறு கட்டி நல் நாட்டு உம்பர் 
மொழி பெயர்த்தே எத்தர் ஆயினும் 
வழி பாடல் சூழ்ந்திசினி அவருடைய நாடே 

நிறையவே புரியுது இல்ல ?

வார்த்தை வார்த்தையா பிரிச்சு மேஞ்சுருவோமா ?



Tuesday, March 26, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 4



கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 4




அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் மூன்று  அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று கடைசி அடி

தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே


ஒளியில் விளைந்த, உயர் ஞானமான மலையின் உச்சியில், அன்பில் அருளில் விளைந்த  ஆனந்தத் தேனை, வெறும் பாழில், வெறும் தனியில் உதித்த அதை  அருளியவன்  தேசிகன். தேசிகன் என்றால் குரு என்று பொருள்

எத்தனையோ குரு உண்டு அதில் இது எந்த குரு என்ற கேள்வி வரும் அல்லவா ?

முகம் ஆறு உடை தேசிகன்...ஆறுமுகம் உள்ள குரு ஒரே ஒருவன் தான், அவன் தான் முருகன்

அவன் என்ன செய்தான் ...

அருணகிரி தெரிய சொல்லவில்லை, தெளிய சொன்னான்...அதாவது தெரிதல் அறிவின்பால் பட்டது...தெளிதல் உணர்வின் பால் பட்டது...."பட்டு தெளிஞ்சா தான்  உனக்கு புத்தி வரும் " என்று சொல்வதைப்  போல ....சொன்னால் புரியாது  அனுபவித்தால் தான் தெரியும்.எனவே தெளிய விளம்பியவா என்றார்

இப்படி ஒரு பாடலில் இவ்வளவு அர்த்தம்....

வேறு என்ன சொல்லப் போகிறேன் ...முடிந்தால் மூல நூலை படித்துப்  பாருங்கள் ...இப்படி எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன

திருக்குறள் - தீவினை என்னும் செருக்கு


திருக்குறள் - தீவினை என்னும் செருக்கு 




தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

தீய செயல்களை செய்ய கெட்டவர்கள் அஞ்ச மாட்டார்கள், நல்லவர்கள் அஞ்சுவார்கள்.

இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ? நமக்கே தெரியும் இல்லையா ?

சற்று உன்னிப்பாக கவனிப்போம்.

தீவினையார் அஞ்சார், விழுமியவர் அஞ்சுவர் - ஏன் ?

ஒரு தீய செயலை செய்ய முதன் முதலில் முற்படும் போது  நிறையவே பயம் இருக்கும். ஒரு வேளை மாட்டிக் கொள்வோமோ என்று ? அதுவே நாள் ஆக ஆக பழகி விடும். பயம் விட்டுப் போகும்.

பயம் இல்லாமல் ஒருவன் ஒரு தீய செயலை செய்கிறான் என்றால் அவன் அதை நிறைய நாட்களாகச் செய்கிறான் என்று அர்த்தம்.

மேலும்,  அப்படி செய்து செய்து அதில் பெரிய வல்லுனராகி விடுவான். அந்த தீச் செயல்  செய்வதில் அவனுக்கு ஒரு பெருமையும் கூட இருக்கும். "தீவினை என்னும் செருக்கு " என்றார் வள்ளுவர்.

மறை பொருள் என்ன வென்றால்,

தீய செயல்கள் செய்ய ஆராம்பிக்காமல் இருப்பதே நல்லது. முதலில் பயம் வரும். அப்பவே விட்டு விட வேண்டும். என்ன தான் ஆகும் பார்க்கலாம் என்று ஆரம்பித்தால் , பின் பயம் போய் விடும்...அது மட்டும் அல்ல அந்த தீவினை செய்வதே பெரிய பெருமை போல்  ஆகி விடும்.....பயம் போய் செருக்கு வந்து விடும்.  செருக்கு கண்ணை மறைக்கும். கருத்தை மறைக்கும். அழிவு நிச்சயம்.

ஒரே ஒரு தடவை என்று ஆரம்பிப்பது பின்னால் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும்.

நாம் நிறைய பேரை பார்க்கலாம் ... தண்ணி அடிப்பது, புகை பிடிப்பது, லஞ்சம் கொடுத்து காரியம்  சாதிப்பது இதை எல்லாம் பெரிய பெருமை போல் சொல்லிக் கொள்வார்கள்..

அது எல்லாம் தவறு என்பதே மறந்து போகும். ...

குழந்தைகளுக்கும் சொல்லி வையுங்கள்....பின்னாளில் உதவும் அவர்களுக்கு.


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3



அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் இரண்டு அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று மூன்றாவது அடி


வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை

அந்த ஆனந்தத்தேன் எங்கு விளைந்தது தெரியுமா ?

தனிமையில் விளைந்தது.....

எப்படிப்பட்ட தனிமை 

வெறும் தனிமை...

அது என்ன வெறும் தனிமை...?

தனிமைக்கும் , வெறும் தனிமைக்கும் என்ன வித்தியாசம் ? 

நீங்க உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கு ஒரு விடுமுறை தினத்தன்று போகிறீர்கள் என்று  வைத்துக் கொள்வோம் ? அங்க யார் இருப்பா ? யாரும் இருக்க மாட்டார்கள். வாசலில் ஒரு காவல் காரன் மட்டும் தனியா இருப்பான்.

அவன் தனியாகவா இருக்கிறான் ? பள்ளிக் கூட கட்டிடம் , அங்கு உள்ள மரம் செடி கோடி எல்லாம் இருக்கிறதே ...எப்படி தனியாக இருப்பான் ?  

தனி என்றால் வேறு மனிதர்கள் யாரும் இல்லாமல் என்று குறிப்பு. அதாவது தன்  இனம் இல்லாதது தனிமை.  அந்த புகை வண்டி நிலையத்திற்கு சென்றேன்..ஒரே ஒரு என்ஜின் மட்டும் தனியா நின்று கொண்டிருந்தது என்று சொல்லுவோமே அத போல. 

இனம் இல்லாதது தனிமை. மற்ற பொருள்களும் இல்லை என்றால் ? ஏதுமற்ற தனிமை? 

பள்ளிக்கூட கட்டிடம் இல்லை, மரம் செடி கொடிகள் இல்லை, தரை இல்லை, காற்று இல்லை, வெளிச்சம் இல்லை அந்த காவல் காரன் மட்டும் இருந்தான் என்றால் அது வெறும் தனி 


அந்த வெறும் தனிமையில் விழைந்தது பாழ்... பாழ் என்றால் ஒன்றும் இல்லாதது....

அதோ தெரிகிறதே அது ஒரு பாழடைந்த கட்டிடம், அது ஒரு பாழ் நிலம் (பாலை நிலம்) என்று கூறுவது போல. 

பாழ் நிலம், என்றால் அதை அடுத்து வேறு எதாவது இருக்கும். 

அருணகிரி சொல்லுகிறார் ...

வெறும் பாழ் 

அப்படி என்றால் அந்த பாழை தாண்டி ஒன்று இல்லை.

வெறும் பாழ் பெற்ற வெறும் தனிமை.....


அந்த வெட்ட வெளியில் விளைந்த பாழில் இருந்து விளைந்த ஆனந்தத் தேன் 


என்னய்யா இது பாழ், தனிமை, தேன் அது இதுனு போட்டு ஒரே குழப்பமா இருக்கே..இது எல்ல்லாம் யாரு சொன்னா ? இதை எல்லாம் எப்படி நம்புறது ? 

அதையும் சொல்கிறார் அருணகிரிநாதர் 











சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து


சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து 


முதலிலேயே சொல்லி விடுகிறேன்...இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

சிலபதிகாரத்தில், கானல் வரிப் பாடல்

அது ஒரு கடற்கரை உள்ள ஊர். கடற்கரை காற்று நீர்த் திவலைகளை சுமந்து வந்து உங்கள் முகத்தோடு உரசிப் போகும். வெண்மையான மணர் பரப்பு.

கரையின் கன்னத்தில் ஓயாமல் முத்தமிடும் அலைகள்.

அந்த கடற்கரையில் வலம்புரி சங்குகள் அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலைந்ததால், கடற்கரை மணலில் வரி வரியாக கோடு  விழுகிறது. .

அந்த கடற்கையில் நிறைய புன்னை மரங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்த புன்னை மரங்கள் பூத்து குலுங்குகின்றன.

காற்றடிக்கும் போது, புன்னை மலர்கள் உதிர்கின்றன. புன்னை மரங்கள் பூமிக்கு பூவால் அர்ச்சனை செய்வது போல் இருக்கிறது.

சங்கு வரைந்த கோடுகள், தடங்கள் எல்லாம் இந்த பூக்கள் விழுந்து மறைந்து விட்டன.

காதலனும் காதலியும் ஒருன்றாக இருக்கும் போது ஏற்படும் சில பல தடங்களை ஆடையிட்டு மறைப்பதில்லையா...அது மாதிரி..

அந்த கடற் கரையில் அவனும் அவளும் நாளும் பேசாமல் பேசியது அந்த கடலுக்கு மட்டும் தெரியும்.

இன்று அவள் இல்லை. வரவில்லை. அவன் மட்டும் தனித்து இருக்கிறான்.

இருக்கப் பிடிக்கவில்லை. போகலாம் என்றால் , போய் தான் என்ன செய்ய ?

காதலும் கருணையும் கலந்த அவள் கண்களை காணாமல் அவன் வாடுகிறான்.

இந்த கவலை நோய்க்கு என்னதான் மருந்து ? ஒரே ஒரு மருந்து இருக்கிறது...அதுவும் அவ கிட்டதான் இருக்கு....

பாடல்

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
    தோற்ற மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது
    போர்க்குங் கானல்
நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
    தீர்க்கும் போலும்.

பொருள்


Monday, March 25, 2013

சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும்


சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும் 


அவள்: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா ?

தோழி: ம்ம்..சொல்லு...என்ன விஷயம்

அவள்: அவனுக்கு வர வர என் மேலே அன்பே இல்லைன்னு தோணுது

தோழி: ஏன், என்ன ஆச்சு ...

அவள்: அப்ப எல்லாம் என் பின்னாடி எப்படி சுத்துவான் ? இப்ப என்னடானா , கண்டுக்க கூட மாட்டேங்கிறான்....

தோழி: அப்படி எல்லாம் இருக்காது...அவனுக்கு என்ன பிரச்சனையோ....கொஞ்சம் பொறு...

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

சீர் பிரித்தபின்


காதலராகி கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யான் அறியோம் ஐய 
மாதரார் கண்ணும் மதி நிழல் நீரினை கொண்டு மலர்ந்த நிலப் 
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகார் எம்மூர் 

பொருள்

காதலராகி = காதலராகி

கழிக் கானற் = மிக விரும்பி காண்பதற்கு


கையுறை = பரிசு பொருள்கள்

 கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு என் பின் வந்தார்

ஏதிலர் தாமாகி = (இன்னைக்கு என்னடா என்றால் ), ஏதோ அயலானைப் போல

யாம் இரப்ப நிற்பதை = நான் விரும்பி வேண்டி நின்றாலும்

 யான் அறியோம் ஐய = அறியாதவர் போல் நிற்கிறார்

மாதரார் கண்ணும் = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலை

 நீரினை கொண்டு = நீரில் கொண்டு

 மலர்ந்த = மலர்ந்த

 நிலப் போதும் = மலர்களை (போது = மலர் )

அறியாது = எது என்று அறியாது

வண்டு ஊசலாடும் = வண்டு ஊசலாடும்

புகார் எம்மூர் = புகார் எங்கள் ஊர்

வண்டுகள் பெண்களின் முகத்திற்கும், நிலவின் நிழல் சேர்ந்த நீரில் உள்ள மலருக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கும்  வண்டுகள் உள்ள ஊர் எங்கள் ஊர்.

அந்த வண்டு மாதிரி இந்த தலைவனும், நான் என்று நினைத்து வேறு எவ பின்னாடியோ போய் விட்டானோ என்பது தொக்கி நிற்கும் பொருள்.