Saturday, April 20, 2013

திருவாசகம் - நெஞ்சம் உருகாதால்


திருவாசகம் - நெஞ்சம் உருகாதால் 


ஒரு புரியாத பொருளை, அறியாத பொருளை புரியவைக்க ஒரு தெரிந்த பொருளை, அறிந்த பொருளை சுட்டிக்காட்டி அது இது போல இருக்கும் என்று சொல்லி விளங்க வைக்கலாம்.

அம்மாவும், சகோதரியும் போய் பெண் பார்த்துவிட்டு வருவார்கள்...பையன் கேட்பான்..."அம்மா, பொண்ணு எப்படி இருக்கானு"

அம்மா: நல்லாத்தான் இருக்கா ?

அவன்: நல்லா இருக்கானா எப்படி இருக்கா ? கருப்பா சிவப்பா ? என்ன நிறம் ?

அம்மா: ம்ம்ம்ம்...வந்து...கறுப்பு நு சொல்ல முடியாது, அதுக்காக சிவப்பும் இல்ல...ஒரு புது நிறம்டா ...

அவன்: உயரமா ? குள்ளமா ?

அம்மா: ரொம்ப உயரமும் இல்ல, குள்ளமும் இல்ல...

அவன்: என்னமா...இப்படி போட்டு படுத்துற....யாரு மாதிரி இருப்பான்னு சொல்லு ?


அம்மா: என்னத்த சொல்றது...நம்ம அக்கம் பக்கத்துல யாரு மாதிரியும் இல்ல....அடுத்த வாரம் நீ தான் பாக்க போறியே...அப்ப பாத்துக்கோ ....

என்று சொல்லிவிட்டு போய் விடுவாள்....

இந்த பொண்ணுக்கே இந்த பாடு என்றால்....இறைவனை எதை காட்டி அவன் இப்படி இருப்பான் என்று சொல்லுவது ?

இப்படி எதை காட்டியும் சுட்ட முடியாமல் இருப்பதைத் தான் "சுட்டறுத்தல்" என்று சொல்லுவார்கள்.

இறைவன் நீங்கள் அறிந்த எது மாதிரியும் இருக்க மாட்டான்....அவனுக்கு உதாரணம் சொல்ல முடியாது...

சுட்டறுத்தல் என்பதன் கீழ் மாணிக்க வாசகர் அருளிய ஒரு பாடல்

பாடல்

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மேல் ஆகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம்
கண்ணிணையும் மரமாந்தீ வினையி னேற்கே.


பொருள்


Friday, April 19, 2013

கம்ப இராமாயணம் - உயிர் உமிழா நின்றாள்


கம்ப இராமாயணம் - உயிர் உமிழா நின்றாள் 


இராமன் தான் மட்டும் கானகம் போகிறேன், நீ இங்கேயே இரு என்று சீதையிடம் கூறுகிறான்.

சீதைக்கு வருத்தம் தாங்கவில்லை. கானகம் போக வேண்டுமே என்று அல்ல, தன்னை இங்கேயே இரு என்று சொல்லிவிட்டானே என்று.

பாற்கடலில் இருந்து அயோத்தி வரை ஒன்றாக வந்து விட்டேன், இதோ இருக்கிறது கானகம் அங்கே வரமாட்டேனா என்று வருந்துகிறாள் ?

அவங்க அப்பா அம்மா சொன்னதை கேட்டு கானகம் போகத் துணிந்தது நல்ல காரியம்தான்...என்னை என்னை ஏன் இங்கேயே இரு என்று சொன்னான் என்று நினைத்து நினைத்து உயிரை வெளியே துப்பி விடாமல் இருந்தாள்....

வாயில் போட்டவுடன், ரொம்ப கசந்தது என்றால் உடனே துப்பி விடுவோம்...இராமன் அப்படி சொன்னவுடன், அவளுக்கு தன்  உயிரே கசந்து விட்டதாம்....உமிழ்ந்திருக்க வேண்டும்...அப்படி செய்யவில்லை....மெல்லவும் முடியவில்லை...விழுங்கவும் முடியவில்லை...அப்படி ஒரு சங்கடம்....  

பாடல்


அன்ன தன்மையள், 'ஐயனும், அன்னையும்,
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
என்னை, என்னை, "இருத்தி" என்றான்?' எனா,
உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள்.

பொருள்


திருவாசகம் - கெடுதலிலும் நன்மை


திருவாசகம் - கெடுதலிலும் நன்மை 


ஏதாவது கெட்டுப் போனால் நாம் சந்தோஷப் படுவோமா ?

மாணிக்க வாசகர் சந்தோஷம் மட்டும் அல்ல தோள் கொட்டி ஆடுகிறார்....

இந்த உலகம் ஒரு நாள் மறைந்து போகும்...இந்த சூரியன், விண்மீன்கள் எல்லாம் ஒளி இழந்து, வெப்பம் இழந்து, இருக்கும் இடம் தெரியாமல், வெட்ட வெளியாகப் போகும்.

அந்த வெட்ட வெளி கூட மறைந்து போகும்...எல்லாம் மறைந்தாலும் இறைவன் மறைவது இல்லை....

என் உடல் கெட்டு, உயிர் கெட்டு , உணர்வு கெட்டு , உள்ளமும் போய் , நான் என்ற எண்ணமும் போய் மறையும் ...அந்த மறைவை கொண்டாடுவோம் என்கிறார் வாசகர்.....

என்னுடைய உடல், என்னுடைய உயிர், என் மனம் என்ற அகங்காரம் மறையும்....

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே என்பார் அருணகிரிநாதர். எல்லாம் இழப்பது நலம்.

பாடல்


வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினுந்

தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்
கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டேன் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

பொருள்

புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்


புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்

அந்த காலத்தில் புலவர்கள் ரொம்ப துன்பப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் ஒரே வருமானம் அரசர்கள் தரும் பரிசு தான். அரசனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நிர்வாகம், போர், வரி வசூல், வாரிசு சண்டைகள், உள்நாட்டு குழப்பங்கள் என்று. இதற்க்கு நடுவில் நேரம் ஒதுக்கி, புலவர் பாடும் பாடல்களை கேட்டு, அதற்க்கு பொருள் புரிந்து, பாராட்டி பரிசு தரவேண்டும்.

இங்கு ஒரு புலவர்....

புலவருக்கு கையில் காசு இல்லை. வறுமை. இதில் இவர் திருமணம் வேறு செய்து கொண்டு, பிள்ளை வேறு. இவரை நம்பி யார் பொண்ணு குடுப்பார்களோ தெரியவில்லை. பாவம் அந்த பெண். பிள்ளை பாலுக்கு அழுகிறது.. அவளிடம் பால் இல்லை தருவதற்கு. புலவர் பரிசு பெற்று வந்தால், உணவு சமைக்கலாம் என்று காத்து இருக்கிறாள். வீட்டில் சாப்பிட ஒன்றும் இல்லை. உணவை தேடி தேடி வீட்டில் உள்ள எலிகள் கூட இறந்து போய்விட்டன. 

அரசன் பரிசு தருவாதாய் இல்லை. பாட்டை மட்டும் கேட்டு இரசித்து விட்டு, கடைசி வரை பரிசு தரவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. பரிசை கட்டி இருக்கிறான், ஆனால் தரவில்லை.  அவனுக்கு என்ன பொருளாதார நெருக்கடியோ. அல்லது, வேறு எதுவும் பிரச்சனையில் அவன் மனம் கிடந்து உழன்றதோ தெரியாது.

புலவர் புறப்பட்டுவிட்டார். ...எனக்கு பரிசு தரவில்லையே, உனக்கு வெட்கமே இல்லை என்று போகும் போது நாசுக்காக திட்டிவிட்டு போகிறார்.

பாடல்:


அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே.


பொருள்:

Thursday, April 18, 2013

சித்தர் பாடல் - அறம் செய்ய


சித்தர் பாடல் - அறம் செய்ய 


அறம் செய்வது, பசித்தவருக்கு அன்னம் இடுவது, ஏற்பவருக்கு இடுவது என்பது தமிழ் இலக்கியத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது.

எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது என்பார் அருணைகிரி

பொருள் கொடுக்க முடியாவிட்டால் நாலு நல்ல சொல்லாவது தாருங்கள் என்பார் திருமூலர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றி வள்ளுவரும் கூறுகிறார்

நாம் ஏன் தானம் செய்வது இல்லை ? அல்லது தான தர்மம் செய்வது ஏன் கடினமாக இருக்கிறது ?

இந்த பொருள் எல்லாம் என்னுடையது, நான் சம்பாதித்தது என்ற எண்ணம் இருக்கும் போது கொடுக்கும் மனம் வராது.

இவை எனக்கு என்னை விட ஒரு பெரிய சக்தியால் தரப் பட்டது என்று நினைத்தால் கொடுப்பது எளிதாகும்.

இருந்த சொத்தை எல்லாம் ஒரே இரவில் தானம் செய்த பட்டினத்தார் சொல்கிறார் ....

பாடல்


பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை  பிறந்துமண்மேல் 
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் 
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது 
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.

சீர் பிரித்த பின்

பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை பிறந்து மண் மேல் 
இறக்கும் போது கொண்டு போவது இல்லை இடை நடுவில் 
குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது 
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே 

(குலாமர்  = உலோபி, கஞ்சன்)



அபிராமி அந்தாதி - மகிழ்நன்


அபிராமி அந்தாதி - மகிழ்நன் 

கண் போன்றவன் என்பதால் கணவன். கண் அவன் என்பதால் கணவன். மனைவியோடு கூடி என்றும் மகிழ்ச்சியாக இருப்பதால் மகிழ்நன் என்றொரு புதிய வார்த்தையை தருகிறார் அபிராமி பட்டர். அபிராமி போல ஒரு பெண்ணை மனைவியாக பெற்றால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன குறை ?


அம்மா, என் உயிர் மத்திடை பட்ட தயிர் போல தளர்கிறது. இப்படி தளர்வு அடையும் என் உயிருக்கு ஒரு நல்ல கதியை நீ தான் தர வேண்டும். தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் (படைத்தல்), அயனும் (காத்தல்), நிலவை தலையில் கொண்ட மகிழ்நன் (உன் கணவன் சிவன் - அழித்தல்) இந்த மூவரும் வணங்கும் சிறந்த அடிகளை கொண்டவளே, சிவந்த திலகம் அணிந்தவளே, சுந்தரியே 

 பாடல் 


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் 
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும், 
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும் 
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


பொருள் 


Wednesday, April 17, 2013

திருக்குறள் - பெண் எனும் கூற்று


திருக்குறள் - பெண் எனும் கூற்று 


கூற்றுவன் என்றால் எமன். கூறு போடுபவன் கூற்றுவன். உயிரையும் உடலையும் கூறு போடுபவன் என்பதால் அவன் கூற்றுவன். இருப்பவர்களிடம் இருந்து (உயிர்) இல்லாதவர்களை பிரிப்பதால் அவன் கூற்றுவன். 

கூற்றுவன் தன்னோடு நம் உயிரை கொண்டு சென்று விடுவான். யாராவது எமனை பார்த்து இருக்கிறார்களா ? 

இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை காதலித்தவர்கள் எல்லோரும் எமனை பார்த்து இருக்கிறார்கள். 

அவள் போகும் போது அவன் உயிரை கையோடு கொண்டு சென்று விடுகிறாள். உயிரை கொண்டு செல்பவந்தானே கூற்றுவன். அப்படி என்றால் அவளும் எமன் தானே. 

பெண்ணுக்கு ஆயிரம் குணங்கள்  உண்டு. காலம் காலமாக நாம் பெண்களுக்கு வஞ்சனை செய்து வருகிறோம் ...அவர்களுக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கே குணங்கள்தான் உண்டென்று சொல்லி.

அவளின் அன்பு, காதல், கோபம், செல்ல சிணுங்கல், தன்னவன் மற்றவளை பார்கிறானோ என்ற சந்தேகம், பரிவு, தயை, கருணை, தியாகம் என்று ஆயிரம் குணங்கள் அவளுக்கு 

குணங்களின் குன்று அவள்...

அழியாத குணக் குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. என்று உருகுவார் அபிராமி பட்டர். 


பாடல் 

பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் 
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

சீர் பிரித்த பின் 

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் 
பெண் தகையால் பேரமர் கட்டு 

பொருள் 

பண்டு = முன்பு. அவளைப் பார்பதற்கு முன்பு 

அறியேன் = அறியவில்லை 

கூற்று என்பதனை = கூற்று என்ற எமனை. கூற்றுவன் என்று சொல்லிவிட்டால் அது ஆண் பாலாகிவிடும். இவளோ பெண். எனவே "கூற்று" என்று சொல்லி நிறுத்தி விட்டார்.

இனி அறிந்தேன் = இப்போ தெரியுது அது யாருன்னு 
 
பெண் தகையால் = பெண் தன்மையால். தகை என்றால் அழகு செய்தல், அன்புடன் இருத்தல். 

பேரமர் கட்டு  = பெரிய அழகிய கண்களை கொண்டது என்று. அமர் என்றால் போர் களம். அவள் மட்டும் அல்ல தன் படைகளான கண், போன்ற மற்ற அவயங்கள், அவளின் வெட்கம் போன்ற குணங்கள் என்னும் படை பலத்தோடு போர் களத்திற்கு வந்திருக்கிறாள் 

வெல்வது மட்டும் அல்ல, இந்த போர் களத்தில் இருந்து உயிரையும் எடுத்துக் கொண்டு சென்று விடுவாள்....