Wednesday, June 26, 2013

இராமாயணம் - முறிந்த வில்கள்

இராமாயணம் - முறிந்த வில்கள் 


ஜனகன் வில்லை கொண்டு வந்து வைத்து விட்டான். அதை வளைத்து நான் ஏற்றுபவர்களுக்குத் தான் சீதை. விஸ்வாமித்திரன் வில்லைப் பார்த்தான், இராமனைப் பார்த்தான். விச்வாமித்ரனின் மனதில் உள்ளதை எல்லாம் இராமன் அறிந்தான் என்று கம்பன் சொல்லுவான்.

அந்த இடம் தொடங்கி இராமன் வில்லை நான் ஏற்றும்வரை கம்பன் காட்டுவது அற்புதமான ஒரு அதிவேக சினிமா காட்சி போல இருக்கும். காமிரா அங்கும் இங்கும் அலைகிறது. அங்கங்கே உள்ளவர்கள் பேசுவது. அங்குள்ள மக்களின் மன நிலை...அத்தனையும் கம்பன் படம் பிடிக்கிறான்....ஏதோ அவன் அந்த கூட்டத்தில் , அந்த மக்கள் மத்தியில் இருந்து கேட்ட மாதிரியும் பார்த்த மாதிரியும்...அவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறான்.

அதை படிக்கும் போது நீங்களும் அங்கே இருப்பதை போல் உணர்வீர்கள்.

முதல் பாடல்

அரங்கம் நிறைந்து இருக்கிறது. இராமன் எழுந்து நிற்கிறான். அங்குள்ள பெண்கள் எல்லாம் அவன் அழகில் மயங்குகிறார்கள். இராமன் அந்த வில்லை முறிக்கும் முன் மன்மதன் ஆயிரம் வில்லை முறித்தானம் . அங்குள்ள பெண்களின் மேல் மலர் அம்புகளை எறிந்து எறிந்து அவன் விற்கள் முறிந்து கொண்டே இருந்ததாம்.


பாடல்

தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்.
சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா.
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்.


பொருள்


Tuesday, June 25, 2013

திருவருட்பா - தடைகள்

திருவருட்பா - தடைகள் 


 

சில பேர் இருக்கிறார்கள் ... எந்த வேலை சொன்னாலும் அதை ஏன் செய்ய முடியாது என்று கூறித் திரிவார்கள்.

காலேஜ் முடிச்சப்பறம் ஏன் மேல படிக்கல ? வீடு நிலைமை சரியில்லை.

சும்மாதான வீட்டுல உட்கார்ந்து இருக்க - உருப்படியா ஏதாவது செய்யக் கூடாதா என்றால் - என் மகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் பாரு என்று சொல்வார்கள்.

வேலை செய்யாமல் இருக்க ஏதாவது ஒரு தடை சொல்லித் திரிவது.

காரணமா கிடைக்காது வேலை செய்யாமல் இருக்க.

மழை பெய்தது, ஒரே கூட்டமா இருந்தது, உடம்பு சரியில்லை ...இப்படி ஏதாவது சாக்கு.

வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய் விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால் ஒரு தடையும் இல்லை...இருந்தும் துறவறம் மேற்கொள்ளவில்லை. அவருக்கே தெரியவில்லை ஏன் என்று. இப்படி தடை சொல்லி சொல்லி   பழகி வேலை செய்யவே முடிய மாட்டேங்குது. என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று புலம்புகிறார்.

வள்ளலார் துறவிதான். இப்படி உலகம் இருக்கிறதென்று தன்னை கற்பனை பண்ணிச் சொல்கிறார் அடிகளார்.

தாய்தடை என்றேன் பின்னர்த்
          தாரமே தடைஎன் றேன்நான்
     சேய்தடை என்றேன் இந்தச்
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
     தோய்தடைச் சிறியேன் இன்னுந்
          துறந்திலேன் எனைத் தடுக்க
     ஏய்தடை யாதோ எந்தாய்
          என்செய்கேன் என்செய் கேனே.

தடைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். தடையே இல்லாத போதுதான் வேலை செய்வேன் என்று  நினைத்து இருந்தால் ஒரு  நடக்காது. அது மட்டுமல்ல , எல்லா தடைகளும் விலகினாலும் எப்படி வேலை செய்வது என்று தெரியாது. ஏன் என்றால் இதுவரை வேலை செய்து பழகவில்லையே....

எனவே, தடை ஒரு பக்கம் இருக்கட்டும்....வேலையை ஆரம்பியுங்கள்.

வெற்றி உங்களுக்கே.


திருக்குறள் - யார் பெரியவர்

திருக்குறள் - யார் பெரியவர்


" பெரியவங்க சொன்னா கேட்கணும் " என்று வீட்டில் உள்ள வயதானவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

பெரியவர் என்றால் யார்.

வயதால், படிப்பால், அறிவால் , செல்வத்தால், உடல் உயரத்தால், உடல் எடையால், செல்வாக்கால் ....எதில் பெரியவர் ?

வள்ளுவர் சொல்கிறார். பெரியவர் என்றால் இது எல்லாம் இல்லை.

செய்வதற்கு அரிய செயல்களை செய்பவர் பெரியவர்.

கல்யாணம் பண்ணிக் கொள்வது, பிள்ளைகளை பெறுவது, வேலைக்குப் போய் சம்பாதிப்பது, சமைப்பது, துணி மணி மடித்து வைப்பது போன்றவை "செயற்கு அரிய செயலில் " வராது.

உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்....இதுவரை செயற்கரிய செயல் ஏதாவது செய்திருக்கிறீர்களா ? என்று.

செய்வதற்கு அரிய செயல் என்றால் என்ன ?

மற்றவர்களால் செய்ய முடியாத செயல். அரிதானது என்றால் எளிதில் கிடைக்காதது. எப்போதாவது நிகழ்வது. அந்த மாதிரி செயல் செய்பவர்கள் பெரியவர்கள்.

இது சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல, மத குரு மார்கள், அரசியல் தலைவர்கள், என்று யார் யார் எல்லாம் தங்களை பெரியவர்கள் என்று கூறிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இது பொருந்தும்.

எனவே, பெரியவர் என்பது செயலைப் பொருத்தது.

சரி, பெரியவர்கள் செய்வதற்கு அரிய செயல்களை செய்வார்கள்.

அப்படியானால் சிறியவர்கள் ?

சிறியவர்கள் சின்ன செயல்களை செய்வார்கள் என்று சொல்லவில்லை.

சிரியர் செய்வதற்கு அறிய செயல்களை செய்ய மாட்டார்கள். அப்படி என்றால் சின்ன செயல்களை செய்வார்களா என்றால், அதையும் கூட செய்யாத சோம்பேறிகளாக இருக்கலாம்.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்கரிய செய்கலா தார்.

ஒரு அரிய செயலை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து முடித்து விட முடியாது. அதை செய்து முடிக்க நாள் பிடிக்கும்.

அந்த கால கட்டத்தில் உங்கள் செயலும், எண்ணமும் ஒரு பெரிய செயலை செய்வதில் மூழ்கி  இருக்கும் போது  உங்களை அறியாமலேயே உங்கள் மனம் நல் வழிப் படும், பெரியவர்களின் தொடர்பு ஏற்படும், சில்லறை விஷயங்களில் ஈடுபட   நேரம் இருக்காது.

அந்த செயலை நோக்கி நீங்கள் நகரும்போது தானகவே உங்கள் ஆளுமை (personality ) மாறும். பெரியவர் ஆவீர்கள்

பெரியவர்களாக அது ஒன்றுதான் வழி.

நீங்கள் இதுவரை அரிய செயல் எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை...இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்....வாழ்நாளில் ஏதாவது ஒரு பெரிய  செயல வேண்டும் என்று.

எப்பதான் பெரியவராகப் போகிறீர்கள் ?

பிறக்கும் போது சின்னவராக இருந்தோம். இறக்கும் போதும் அப்படியேவா இருப்பது  ?

பெரியவனாக, பெரியவளாக வளர வேண்டாமா ?

வளருங்கள்.

செயர்கரியதை செய்து முடிக்கும் வரை , நான் பெரியவன் / ள் என்ற எண்ணத்தை தவிருங்கள்.

முடிவு செய்து விட்டீர்களா ? என்ன செய்யப் போகிறீர்கள் ?

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?


நளனின் காதலை தமயந்தியிடம் அன்னப் பறவை  சொன்னது. நளன்  உன் மேல்  எப்படி எல்லாம் காதல் கொண்டிருக்கிறான் என்று கூறியது.

அதை கேட்ட தமயந்தி உருகுகிறாள். ஐயோ , என் மேல் இத்தனை அன்பா, இத்தனை காதலா என்று அவள் மனம் கரைகிறது. ஏற்கனவே அவனை திருமணம் முடித்து, அவனை கட்டி அணைத்தார்ப் போல இருக்கிறது அவளுக்கு. அந்த அபரிமிதமான காதலால், மகிழ்ச்சியில் அவள்  மார்புகள் விம்முகின்றன. அதை அவள் பார்க்கிறாள். மயங்குகிறாள்.

பாவம் பெண், வேறு என்ன செய்ய முடியும் ?

பாடல்

மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று.

பொருள்



Monday, June 24, 2013

இராமாயணம் - அவளை காணும் காலம் வருமா ?

இராமாயணம் - அவளை காணும் காலம் வருமா ?



திருமணத்திற்கு முதல் நாள். இராமன் தனிமையில் அமர்ந்து சீதையின் அழகைப் பற்றி எண்ணுகிறான்.

அவனுக்குள் காதல் பொங்கி எழுகிறது.

அவளுடைய உருவம் அவன் கண் முன் வந்து போகிறது. அவளோட அழகிற்கு முன்னால் நான் எம்மாத்திரம் என்று எண்ணுகிறான்.

அவளுடைய அந்த அழகிய மார்புகள், வாள்  போன்ற கூறிய கண்கள், நிலவு போன்ற முகம், அதில் நெளியும் ஒரு புன் முறுவல், அந்த புன்னகை பூக்கும் இதழ்கள்...அவளை இன்னொரு முறை பார்க்கும் காலம் வருமா ?

திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. விடிந்தால் திருமணம். அதற்குள் இராமனுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று ஆவல்.

உங்கள் வாழ்விலும் நடந்த மாதிரி இருக்கிறதா ?...:)

பாடல்

பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவதுஓர் காலம் உண்டாம் கொலோ?


பொருள்


திருக்குறள் - காலத்தினால் செய்த உதவி

திருக்குறள் - காலத்தினால் செய்த உதவி 



காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும் . ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா ?

சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்.

அதுவே, ஒரு பாலை வனத்தில், நாக்கு வறண்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு அந்த ஒரு குவளை தண்ணீர் எவ்வளவு பெரிய உதவி ?

உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல

உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது.

மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

இதையே கொஞ்சம் மாத்தி யோசித்துப் பார்ப்போம்.

காலம் அல்லாத காலத்தில் செய்த உதவி பெரிது அல்ல. அதற்காக எப்போதும் சாகிற  காலத்தில்தான் உதவி செய்ய வேண்டும் என்பது அல்ல.

"நான் அவனுக்கு அவ்வளவு செய்தேனே...அவனுக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லை " என்று நிறைய பேர் அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.

உதவி செய்தவனுக்கு வேண்டுமானால் அது பெரிதாய் இருக்கலாம். உதவி பெற்றவனுக்கு  அது சரியான காலமாய் இருக்காது. அவனை நொந்து பயன் இல்லை.

அதே போல், மிக இக்கட்டான காலத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் உதவி மிகப் பெரிதாய்  நினைக்கப் படும்.

இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் ஒருவனுக்கு இறுதி வந்த காலத்தில் செய்த உதவி  பெரிதாய் நினைக்கப் படும் என்று கூறினார்.

அதுக்காக மருத்துவமனைக்குப் போய் , சாகக் கிடக்கிறவனாய்  பாத்து உதவி செய்ய கூடாது

இறுதி என்பதற்கு ஒரு இக்கட்டான சமயம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொன்றையும் யோசிக்கலாம்.

அதாவது, ஒருவன் உதவி என்று கேட்கும் போது, அதன் அவசரம் தெரிந்து உதவி செய்ய வேண்டும்.   கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் அந்த உதவியின் பயனோ  பலனோ வெகுவாக குறைந்து போகலாம்.


எனக்கு இதில் வேறு ஒரு அர்த்தம் தோன்றுகிறது.இலக்கணப்படி அது சரியாக வருமா என்று தெரியவில்லை. இருந்தாலும்.....

ஒருவனுக்கு பணம் காசு தந்து உதவி செய்யலாம். வேலை வாங்கித் தரலாம். அது எல்லாவற்றையும் விட  மிகச் சிறந்த உதவி அவனுக்கு உங்கள் நேரத்தை தருவது. காலத்தினால் செய்த உதவி. பொருளினால் செய்த உதவி அல்ல. காலத்தினால்  செய்த உதவி.

காலம் என்பது எப்போதும் அரிதான ஒன்று. உங்கள் காலத்தை (நேரத்தை ) நீங்கள்  மற்றவருக்கு தருகிறீர்கள் என்றால் உங்களையே தருகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் காலத்தை மட்டும் தனியே அனுப்ப முடியாது.

உதவி வேண்டுபவனை நேரில் போய் பார்ப்பது , அவனுடைய துன்பத்தை தீர்க்க  நீங்கள் முயற்சி செய்வது, உங்களுக்குத் தெரிந்தவர்களை கண்டு பேசி அவனுடைய துன்பத்திற்கு  வழி தேடுவது, அவனுக்காக பணம் திரட்டுவது, அவனுக்காக பரிந்து பேசுவது இப்படி பல வழிகளில் உங்கள் காலத்தை அவனுக்காக செலவிடலாம். அவன் துன்பத்தை தீர்க்க உங்கள் நேரத்தை நீங்கள் செலவிடுவது பெரிய உதவி.

ஒண்ணும் இல்லை, கொஞ்சம் நேரம் செலவழித்து அவனை நேரில் போய்  பார்க்கிறீர்கள் என்று  வைத்துக் கொள்வோம், அவன் துன்பத்தின் ஆழம் தெரியும், அவன் மேல் பரிவு உண்டாகும், மேலும் உதவி செய்யவேண்டும் என்று தோன்றும்.

அவன் கூட பேசினால் (தொலை பேசியில், வள்ளுவர் தொலை பேசி என்று நினைத்து இருக்க மாட்டார் என்றாலும் ), அவன் என்ன வேண்டும் என்று சொல்வான். அவனுக்கு வேண்டியது ஒரு வேளை பணமாக இருக்காது. உங்கள் அறிவு, உங்கள் அனுபவம், உங்கள் தொடர்பு இவை எல்லாம் அவனுக்கு உதவி செய்யப் பயன் படலாம்.

கொஞ்சம் பணத்தை அனுப்பி விட்டு இருந்துவிட்டால் சிக்கல் தீர்ந்து விடாது.

வாழ்வில் எல்லா சிக்கலும் பணத்தால் தீர்ந்து விடாது.

எனவே, காலத்தினால் செய்த உதவி உலகை விட பெரியது.

அடுத்த முறை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் நினைத்தால், கொஞ்சம் நேரமும்  செலவிடுங்கள். உதவி தேவைப் படுபவருக்கு உங்கள் நேரம் மிகப் பெரிய  உதவியாய் இருக்கும். உங்கள் பணத்தை விட உங்கள் நேரம் அவருக்கு மிகப் பெரியதாய் தோன்றும்.

காலத்தினால் செய்த உதவி.


யோசித்துப் பாருங்கள்.


திருவெம்பாவை - எய்யாமற் காப்பாய்

திருவெம்பாவை - எய்யாமற் காப்பாய்


அழகான சின்ன கிராமம். அந்த கிராமத்தில் ஒரு கோவில். அந்த கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு திருக் குளம். அந்த குளத்தில் சில தாமரை மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. அந்த தாமரையில் தேன் குடிக்க வண்டுகள் வருகின்றன. வண்டுகளின் ரீங்காரம் அந்த அதி காலையில் தெளிவாகக் கேட்கிறது.

அதி காலை நேரத்தில் சில பெண்கள் அந்த குளத்தில் நீராட வருகிறார்கள்.
மார்கழி மாதம். குளிர் காற்று உயிர் உரசி போகும் நேரம்.குளத்தின் நீர் ஜில் என்று இருக்கிறது. தண்ணீரில் கால் வைத்தால் குளிர் எலும்பு வரை எட்டி பாயும்.

அந்த பெண்கள் ஆனது ஆகட்டும் என்று நீரில் "முகேர்" என்று குதித்து விட்டார்கள்.

குளிர்கிறது . சிறிது நேரத்தில் குளிர் பழகி விட்டது. தண்ணீர் சுகமாக இருக்கிறது.

தூரத்தில் கோவில் மணி அடிக்கிறது.

அந்த பெண்கள்  இறைவனின் திருவடிகளை  போற்றி பாடுகிறார்கள்.

"ஐயா, வழி வழியாய் உந்தன் அடியார்களாக வாழ்ந்து வருகிறோம்.  சிவந்த சிவந்த மேனியில் பால் போன்ற திருவெண்ணீறு அணிந்தவனே.  அந்த உமா தேவியின் மணவாளனே.  நீ அடியார்களை ஆட் கொண்டு விளையாடும் விளையாட்டில், பலன் அடைந்தவர்கள் சென்ற வழிகளை அறிந்தோம். எங்களை கை விடாமல் காப்பாற்றுவாய்"

அவர்களின் பாடலும், வண்டுகளின் ஒலியும் , கோவிலின் மணியும், அவர்கள் நீராடும் போது தோன்றும் நீரின் சல சலப்பு ஒலியும் காற்றில் கலக்கின்றது....


பாடல்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.


பொருள்