Sunday, June 30, 2013

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகம் - நான் யார் ?


திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று

நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

சீர் பிரித்த பின்

நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி 
ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் 
தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 

நான் என்பது என்ன ? என் ஞாபங்கள், என் அறிவு  இதைத்  தவிர வேறு என்ன ? நான் அறிந்த அனைத்தும் மறந்து போனால் நான் என்ற நான் யார் ? என் பெயர், என் மனைவி/கணவன், என் பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், நான் கற்ற கல்வி எல்லாம் மறந்து போனால் நான் , நானாக இருப்பேனா ?

மாணிக்க வாசகருக்கு இது நிகழ்ந்தது.

இறைவன் அவரை ஆட்கொண்டான்.

நான் என்பது மறைந்து விட்டது ? நான் என்பது போன பின் உள்ளம் என்பது எது ?

ஞானம் இரண்டு வகைப்படும் - கற்ற அறிவு, அனுபவ அறிவு. பர ஞானம், அபர ஞானம் என்று சொல்வார்கள். நானும் போன பின், என் உள்ளமும் போன பின் என் ஞானம் என்பது என்ன ?

நான் போய் விட்டேன். நான் என்பது இல்லை

என் உள்ளம் போய் விட்டது.

என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ? 

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?



பொருள்


Saturday, June 29, 2013

நன்னெறி - நல்லதே ஆயினும் அறிந்து செய்யுங்கள்

நன்னெறி - நல்லதே ஆயினும் அறிந்து செய்யுங்கள் 


நல்லது செய்யலாம். உண்மை பேசலாம். தான தருமங்கள் செய்யல்லாம். இவற்றை எல்லாம் ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்று அறிந்து செய்ய வேண்டும். அறியாமல் செய்யும் அறங்கள் அவ்வளவு வலிமையானது அல்ல என்று கூறுகிறது நன்னெறி.

ஏன் அப்படி ? செயல் செய்தால் போதாதா ? அது பற்றி ஏன் தெரிந்திருக்க வேண்டும் ?

தானம் செய்வது நல்லதுதான். யாருக்கு தானம் செய்ய வேண்டும், எந்த காரியத்திற்கு தானம் செய்ய வேண்டும் என்று அறிந்து செய்ய வேண்டும். அந்த அறிவை தருவது நம அற  நூல்கள்.

தவறான ஆட்களுக்கு உதவி செய்தால் அது நமக்கே தீங்காய் முடியும்.

ஒரு கதவு எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும், ஒரு சின்ன தாழ்பாழ் இல்லையென்றால் அந்த கதவால் என்ன பயன்  ?

அது போல, எவ்வளவுதான் நல்ல குணங்கள் இருந்தாலும் அறிவு முக்கியம். அறிவில்லாத நல்ல குணம், தாழ்பாழ் இல்லாத கதவு போல்.

பாடல்

பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே – நன்னுதால்
காழொன்று உயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.

பொருள்


திருக்குறள் - செவிச் செல்வம்

திருக்குறள் - செவிச் செல்வம்



செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

ஏன் விழிச் செல்வத்தைவிட செவிச் செல்வம் உயர்ந்தது ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவது, கண்ணின் உதவியால் நாம் புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள முடியுமே ? எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களில் இருந்து நேற்று வெளியான புத்தகம் வரை எல்லாம் ஒரு நொடியில் கிடைக்குமே ? வாங்கிப் படித்து அறிவைப் பெருக்கலாமே ?

பிரச்சனையே அதுதான். புத்தகங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் எழுதப் பட்டவை. இன்றைய சூழலுக்கு அது சரி வருமா ? உங்களின் தனிப்பட்ட பிரச்சனைக்கு அது வழி சொல்லுமா ? சந்தேகம் தான்.

இரண்டாவது, புத்தகங்களை படித்து புரிந்து கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. எத்தனை பேரால் திருக்குறளை படித்து அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும் ?


மூன்றாவது, எழுதப் பட்டது ஒரு கோணத்தில் இருக்கலாம். நீங்கள் புரிந்து கொண்டது இன்னொரு  கோணத்தில் இருக்கலாம். அர்த்தம் , அனர்த்தமாகப் போய் விடும். உதாரணமாக, பதஞ்சலியின் யோக சூத்திரத்தை சொல்லலாம். அதற்க்கு  எழுதப்பட்ட உரைகளை படித்தால் எது பதஞ்சலி சொன்னது என்று புரிந்து கொள்ள முடியாது.


நான்காவது, புத்தகங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண் படலாம். அல்லது முரண் படுவது போல நமக்குத் தெரியலாம். எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். எப்படி முடிவு எடுப்பது.


ஐந்தாவது, உலகில் உள்ள புத்தங்களை எல்லாம் படித்து அறிந்து கொள்வது என்பது மிக மிக காலம் பிடிக்கும் காரியம். யாரவது அவற்றை எல்லாம் படித்து அறிந்து, நமக்குச் சொன்னால் எவ்வளவு எளிதாக இருக்கும்.

ஆறாவது, படிப்பறிவோடு, அனுபவ அறிவும் சேரும்போது அந்த அறிவு மிக மிக தெளிவாக இருக்கும். ஒரு சிறுவனின் கையில் கீதையை கொடுத்து படித்து அறிந்து கொள்  என்றால் அவன் என்ன அறிவான் ? ஏன், நாமே கூட படித்தால் எவ்வளவு புரியும் ? அதே கீதையை அதை நன்கு படித்து அறிந்த ஒரு பெரியவர்  மூலம் கேட்டால் எப்படி வேகமாக புரிந்து கொள்ள முடியும் ?


ஏழாவது, பெரியவர்களிடம் நாம் சென்று கேட்க்கும் போது அவர்கள் நம் அறிவின் திறம் , நமது பிரச்சனைகள், நமது திறமை என்று நம்மை பற்றி அறிந்து, அதற்க்கு தக்க மாதிரி சொல்லுவார்கள்.

எட்டாவது, எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருந்தாலும், நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் நாம்  மருத்துவரை போய் பார்க்கிறோம். புத்தகம் வாங்கிப் படித்து  அதில் உள்ளது போல மருந்து உட்கொள்ளுவது இல்லை. ஏன் ?  படிப்பறிவோடு, அனுபவ அறிவும், நம்மை பற்றிய தனிபட்ட தகல்வல்களும் அறிந்து மருத்துவர் மருந்து  சொல்லுவார் என்பதால்.

ஒன்பதாவது, திருப்புகழை நாமே படித்து அறிந்து கொள்வதற்கும், திருமுருக கிர்பானந்த வாரியார்  சொல்லிக் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. எது சிறந்தது ?


பத்தாவது, வருடா வருடம் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகிறது. அதன் நகல் நமக்குக் கிடைக்கிறது. இருந்தும் பட்ஜெட் விளக்கக் கூட்டம் என்று  பெரிய வல்லுனர்களை கொண்டு பேச வைகிறார்கள். அதற்கு மிகப் பெரிய  கூட்டம் வருகிறது. ஏன், படித்து அறிந்து கொள்ள முடியாதா ? வல்லுனர்களிடம் இருந்து  கேட்டு அறிவது நம் அறிவை மிக விரைவாக ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கும்.

பதினொன்றாவது, நாமே படித்து, குழம்பி, பின் தெளிய நாள் பல ஆகும். ஒரு இருபது இருபத்தி ஐந்து வருடம்   ஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் போய் கேட்டால் நம் குழப்பங்களை மிக எளிதில் தீர்த்து வைத்து விடுவார்.

எப்படி பார்த்தாலும் கற்றலை விட கேட்பது சிறந்தது.

கேட்பது என்றால் உயர்ந்தவர்களிடம் போய் கேட்க்க வேண்டும்.

தமிழ் கேட்க்க வேண்டும் என்றால் கி. வா. ஜா, கி. ஆ. பெ. விஸ்வநாதம் , வாரியார் ஸ்வாமிகள் , போன்ற பெரியவர்களிடம் கேட்க்க வேண்டும். தமிழ் அறிஞர்கள் என்று   சொல்லிக் கொண்டு திரியும் பட்டி மன்ற ஆட்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ  போய் கேட்க்கக் கூடாது.

நன்றாக யோசித்துப் பாருங்கள், நீங்கள் அதிக பயன் பெற்றது வாசித்ததன் மூலமா ? கேட்டதன் மூலமா என்று ?

நிறைய கேளுங்கள். படித்து அறிந்த அறிஞர்கள் கூறுவதை கேளுங்கள். தேடித் போய் கேளுங்கள்.

செவிச் செல்வத்தைப் பற்றி வள்ளுவர் இன்னும் கூறுவார்.

 

Friday, June 28, 2013

திருக்குறள் - செவிச் செல்வம்

திருக்குறள் - செவிச் செல்வம்


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

செல்வங்களில் எல்லாம் பெரிய அல்லது உயர்ந்த செல்வம் செவியாகிய செல்வம். அந்த செவிச் செல்வம் மற்ற எல்லா செல்வங்களையும் விட உயர்ந்தது.

நான் ரொம்ப நாள் யோசித்து இருக்கிறேன்...ஏன் செல்வத்துள் செல்வம் விழிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று விழியைச் சொல்லவில்லை.

செவியை விட கண் தானே உயர்வு. காது கேட்காவிட்டால் வரும் துன்பம் கண் தெரியாததால் வரும் துன்பத்தை விட குறைவு தானே.

மேலும், காதால் கேட்பது என்றால் சொல்லும் ஆள் ஒருவர் வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆளைத் தேடித் போக வேண்டும். அவருக்கு நேரம் இருக்க வேண்டும். அதைவிட நமக்கு எது வேண்டுமோ அது சம்பந்தப் பட்ட புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ளலாமே ? ஒரு நல்ல புத்தகக் கடைக்குப் போனால், ஒரு நூலகத்திற்கு போனால் எவ்வளவு புத்தகங்கள் கிடைக்கும். வாங்கி வசித்து அறிந்து கொள்ளலாமே ...அதற்க்கு கண் எவ்வளவு முக்கியம்...அப்படி இருக்க ஏன் வள்ளுவர் செவியை பெரிதாகச் சொன்னார் என்று மண்டையை உடைத்து கொண்டிருக்கிறேன்

அப்புறம் நான்  நினைத்தேன், வள்ளுவர் காலத்தில் எல்லாம் ஓலைச் சுவடிதான். ரொம்ப எழுத முடியாது. ஒரு  ரொம்ப சுருக்கமாக எழுத வேண்டும். அர்த்தம் புரிய வேண்டும் என்றால்  யாரிடமாவது கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அப்படி சொல்லி இருப்பார் என்று விட்டு விட்டேன்.

மேலும், இப்போது கம்ப்யூட்டர் கூகிள் எல்லாம் இருக்கிறது. எது வேண்டுமானாலும்  ஒரு நொடியில் நமக்கு கிடைக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

எனவே கண்தான் உயர்ந்தது. செவி அப்படி ஒன்றும் பெரிய செல்வம் இல்லை என்று நினைத்து,....ஏதோ வள்ளுவர் அந்த காலத்திற்கு எழுதியது இந்த காலத்திற்கு சரி வராது என்று இந்த குறளை காலாவதியான குறள் என்று ஒதுக்கி விட்டேன்.

பல உரைகளை படித்துப் பார்த்தேன். புதிதாக ஒன்றும் புலப்படவில்லை.

சரி, ஒரு குறள் காலத்திற்கு ஒவ்வாத குறள் என்று முடிவு செய்தேன்.

வயது வயது ஆக இந்த  குறளின்  உண்மையான அர்த்தம் பிடிபடத் தொடங்கியது.

வள்ளுவர் எவ்வளவு பெரிய ஆள் என்று பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு மடத்தனமாக நான் வள்ளுவரை குறைவாக எடை போட்டு விட்டேன் என்று தோன்றியது.

வள்ளுவர் சொன்னதுதான் சரி. நான் நினைத்தது தவறு.

ஏன் என்பதை அடுத்த ப்ளாகில் எழுதுகிறேன். ஒரே ப்ளாகில் ரொம்ப எழுதினால்  உங்களுக்கும் சலிப்பு ஏற்படும்.

நாளை அடுத்த ப்ளாக் வரும்வரை நீங்களும் யோசித்துக்  கொண்டு இருங்கள்.

ஏன் கண்ணை விட காது சிறந்தது ?




முறிந்த வில்கள் - பிள்ளை முன் இட்டது பேதைமை

முறிந்த வில்கள் - பிள்ளை முன் இட்டது பேதைமை

சீதையை மணமுடிக்க வேண்டும் என்றால் சிவனின் வில்லை வளைக்க வேண்டும் என்பது நிபந்தனை. இராமன் எழுகிறான் அதை வளைக்க.

அங்குள்ள பெண்களுக்கு எல்லாம் ஒரே பதட்டம். ஒரு வேளை இராமன் இந்த வில்லை வளைக்கா விட்டால் ? இந்த இராசாவுக்கு (ஜனகனுக்கு) அறிவே இல்லை. மாப்பிளைய பிடிசிருஞ்சா பேசாம மணம் பேச வேண்டியதுதானே, இவ்வளவு பெரிய வில்லை எடுத்து இந்த சின்ன பிள்ளையின் முன் போட்டு இதை வளை என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று ஜனகனை மக்கள் திட்டுகிறார்கள்.

பாடல்

வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்,
"கொள்" என் முன்பு கொடுப்பதை அல்லால்,
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து, இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை' என்பார்.

பொருள்


Thursday, June 27, 2013

திருக்குறள் - களவு

திருக்குறள் - களவு



களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

பொருள் : களவின் மூலம் உண்டாகிய செல்வம் நிறைய அளவு கடந்து ஆவது போல தோன்றி, பின்னால் அழியும்.

இது பள்ளிகளில் நாம் படித்தது.

அதாவது தீய வழியில் சேர்த்த செல்வம் நிலைத்து நிற்காது என்பதாக பொருள் சொல்லப் பட்டது.

வள்ளுவராவது அவ்வளவு லேசா எழுதுவதாவது.

கொஞ்சம் குறளை மாற்றிப் போடுவோம்

களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

அதாவது, களவினால் ஆகிய ஆக்கம் முதலில் ஆவது போல தோன்றினாலும் பின் அளவு இன்றி கெடும்.

தீய வழியில் வந்த செல்வம் முதலில் பெரிதாக வளர்வது போலத் தோன்றினாலும், அது போகும் போது அந்த செல்வம் மட்டும் அல்ல போவது அதற்கு முன் சேர்த்து வைத்த செல்வத்தையும், நல்ல பெயரையும், புகழையும் சேர்த்து கொண்டு போய் விடும்

அது மட்டும் அல்ல, மீண்டும் செல்வம் வரும் வழியையும் அது அடைத்து  விடும்.

மேலும், பாவத்தையும் பழியையும் களவு செய்தவன் மேல் சுமத்தி விட்டு போகும்.

இந்த பிறவியில் வறுமையும், பழியும் சேர்க்கும்

மறு பிறவிக்கான வீடு பேறு அடைய முடியாமல் பாவத்தை சேர்த்து வைக்கும்.

அதனால், களவினால் ஆகிய ஆக்கம் அளவற்ற கெடுதலை செய்யும்.

இன்னொரு பொருள் என்ன வென்றால்.....

நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க நாள் பல ஆகும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான்  செல்வம் சேரும்.

ஆனால், களவின் மூலம் சேரும் செல்வம் மிக வேகமாக வளரும்.  குறுகிய காலத்தில் மிகுந்த செல்வம் சேரும், களவின் மூலம்.

 களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

வள்ளுவர் சொல்கிறார், அது எந்த வேகத்தில் வந்ததோ (ஆவது போல்) அதை விட வேகமாக கெடும். 

எப்படி ஆகியதோ அதே போல் கெடும். சொல்லப் போனால், "ஆவது போல் கெடும்"  என்று  சொல்லி இருந்தால் எப்படி ஆனதோ அதே போல் கெடும் என்று அர்த்தம் கொள்ளலாம் .

வள்ளுவர் ஒரு படி மேலே போய் "ஆவது போல் அளவிறந்து கெடும் " என்கிறார் 

இதை எல்லாம் சின்ன வயதில், பிள்ளைகளுக்கு சொல்லிக்  கொடுத்தால் அவர்கள் மனதில்  பசு மரத்து ஆணி போல் பதியும். அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள். நல்ல சமுதாயம் வரும். 

சரியாக சொல்லிக் கொடுக்காமல் , பாட நூல்களை அரசியல்வாதிகள் கையில் கொடுத்து , பல தலைமுறைகளை இந்த மாதிரி உயர்ந்த கருத்துகள் சென்று அடைய விடாமல்   தடுத்து விட்டோம்.

இப்படி ஒரு பொக்கிஷத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது ? 

 

Wednesday, June 26, 2013

திருக்குறள் - பொறுத்தல் வேண்டும்

திருக்குறள் - பொறுத்தல் வேண்டும் 



அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை தோண்டுபவர்களையும் தாங்கும் நிலத்தை போல ஒருவரை இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் தலை சிறந்தது.

அம்புடுதான்.

இதைசொல்ல வள்ளுவர் வேண்டுமா ? யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். வள்ளுவர் ஆழமில்லாமல் எதையும் சொல்ல மாட்டாரே....இந்த குறளில் அப்படி ஒன்றும் ஆழம் இருப்பது மாதிரி தெரியவில்லையே. ரொம்ப சாதரமான குறள் மாதிரிதானே இருக்கு ?

கொஞ்சம் ஆராய்வோம்.

அகழ்வாரை தாங்கும் நிலம்....நிலம் தன்னை புண் படுத்தி கடப்பாரை, மண் வெட்டி போன்ற கூறிய ஆயுதங்களால் தோண்டுபவர்களை பதிலுக்கு தண்டிப்பது இல்லை.

அது மட்டும் அல்ல...அப்படி தோண்டுபவர்களுக்கு நல்லதும் செய்கிறது நிலம். கொஞ்சம் தோண்டி  விதை நட்டால் செடியும் மரமும் தழைத்து அதில் இருந்து நிழலும் காயும் கனியும்   கிடைக்கச் செய்கிறது.

மேலும் தோண்டினால் சுவையான நிலத்தடி நீர் தந்து தாகம் தீர்கிறது. உயிர் காக்கிறது.

இன்னும் தோண்டினால் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தருகிறது.

வள்ளுவர் காலத்தில் பெட்ரோல் டீசல் இது எல்லாம் கிடையாது. இப்போது அதுவும் கிடைக்கிறது.

தனக்கு கெடுதல் செய்பவர்களை பொறுப்பது மட்டும் அல்ல, நிலம் அவர்களுக்கு நல்லதும் செய்கிறது.

அது போல, உங்களுக்கு தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

சரி, வள்ளுவர் "இகழ்வார்" என்று தானே சொல்லி இருக்கிறார். இகழ்தல் என்றால்   தரக் குறைவாக பேசுதல், திட்டுதல், வைதல்...எனவே நம்மை பற்று இகழ்வாக பேசுபவர்களை  மட்டும் பொறுத்தால் போதும்...நமக்கு உடல் ரீதியாகவோ, உள்ள ரீதியாகவோ தீமை செய்பவர்களை பொறுக்கும் படி வள்ளுவர் சொல்லவில்லையே  என்று வாதிக்கலாம்.

அதற்குத் தான் "அகழ்வாராய் தாங்கும் நிலம்" என்ற உதாரணம். நம்மை திட்டுபவர்கள் மட்டும் அல்ல, மற்ற செயல்களால் துன்பம் தந்தவர்களையும் பொறுக்க  வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மேலும் சொல்லுகிறார்....