Wednesday, July 10, 2013

திருக்குறள் - காதலியின் கடிதம்

திருக்குறள் - காதலியின் கடிதம் 


தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.



காதலியிடம் இருந்து உங்களுக்கு கடிதம் வந்து இருக்கிறதா ?

முதன் முதலில் அவள் எழுதிய கடிதம் இருக்கிறதே...அதற்கு ஈடு இணை கிடையாது. அது தான் உலகத்தில் உள்ள இலக்கியங்களிலேயே மிக உன்னதமான இலக்கியம்.

அது தரும் சந்தோஷம் உலகத்தில் வேறு எதுவும் தராது. அந்த காகிதத்தை தொட்டுப் பார்த்தால் அவள் விரலைத் தொடுவது மாதிரி இருக்கும்.

அந்த காகிதத்தில் அவள் மனம் மணம் வீசும்.

உச்சி வெயிலில் அந்த கடித்ததை படித்தால் கூட உள்ளுக்குள் குளிர் காற்று வீசும்.

அதைப் படிக்கும் போது பசி தாகம் போய் விடும்.

நட்சத்திரங்கள் காதில் வந்து இரகசியம் பேசும்.

பசி சுகமாய் இருக்கும்.

நிலவு உங்களைப் பார்க்கும் புன்னகை வீசும்.

தெருவோர மரங்கள் சில பல பூக்களை நீங்கள் நடக்கும் வழியில் உதிர்க்கும்.

கால்களுக்கு இறக்கை முளைக்கும்.

அந்த மேகங்கள் உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் இருக்கும்.

தொலைக் காட்சியில் வரும் அத்தனை பாடல்களும் இனிமையாக இருக்கும்.

படம் வரையத் தோன்றும்.

கவிதை ஊற்று பொங்கும். வார்த்தைகள் எல்லாம் காணாமல் போகும். வெற்றுத் தாளில் எழுதாத கவிதை ஆயிரம் இருக்கும்.

அவள் எழுதிய கடிதத்தில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் உங்களை கை நீட்டி அழைப்பது போல இருக்கும்.

அம்மாவும், தங்கையும், அக்காவும் தேவதைகளாகத் தெரிவார்கள்.

பாடல்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

பொருள் 

தொடலைக் = மாலை அணிந்த அவள். தங்கச் செயின் என்று வைத்துக் கொள்ளுங்களேன்

குறுந்தொடி = தொடி என்றால் வளையல். குறுந்தொடி என்றால் சின்ன சின்ன வளையல், அணிந்த அந்தப் பெண்

தந்தாள் = தந்தாள்

மடலொடு = மடல் என்றால் லெட்டர். மடலொடு என்றால் லெட்டர் கூட வேறு ஒன்றையும் தந்தாள்


மாலை உழக்கும் துயர் = மாலை நேரும் தரும் துயரையும் தந்தாள்.

இந்த காதல் மத்த நேரங்களில் இருக்கும் என்றாலும், மாலை நேரத்தில் ரொம்பவும் படுத்தும். அப்படி படுத்தும் துன்பத்தை அவள் தந்தாள். அவளை பார்பதற்கு முன்  இந்த துன்பம் இல்லாமல் இருந்தது. இப்பதான் இந்த இம்சை.

அவளுடைய மடல் இந்த துன்பத்திற்கு மருந்து போல. ஒரு ஆறுதல் போல. அவளைப் பார்க்க முடியாவிட்டாலும் , அவளுடைய லெட்டெரைப் பார்த்தாவது ஆறுதல் அடையலாம்.

இல்லை இல்லை...இந்த லெட்டெர் எங்க ஆறுதல் தருது...

இதை படிக்க படிக்க அவளை இப்பவே போய் பாக்கனும்னு தோணுது...நாளைக்கு அவளைப் பார்க்கும் போது  எப்படி இருப்பாள்...வெட்கப் படுவாளா ....

இது எல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்னு வள்ளுவர் சொல்றார்...எனக்கு என்ன தெரியும்....



ஜடாயு - கரும்பு உண்ட சொல்

ஜடாயு - கரும்பு உண்ட சொல்


இராவணா, இராமன் வரும் முன், இந்த சீதையை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடி விடு என்று ஜடாயு சொன்னான்.

இராவணனுக்கு பயங்கர கோபம்.

அடேய் ஜடாயு, என் வாள் உன் மார்பை புண் ஆக்குவதற்குள் இங்கிருந்து ஓடி விடு. கொதிக்கின்ற இரும்பின் மேல் விழுந்த நீர் எப்படி மீளாதோ அது போல் இந்த கரும்பினும் இனிய சொல்லினை உடையவள் என்னிடம் இருந்து மீள மாட்டாள்

என்று கர்ஜிக்கிறான்


பாடல்


'வரும் புண்டரம்! வாளி  உன் மார்பு உருவிப் 
பெரும் புண் திறவாவகை  பேருதி நீ; 
இரும்பு உண்ட நீர்  மீளினும், என்னுழையின் 
கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்,'

பொருள்


Tuesday, July 9, 2013

அபிராமி அந்தாதி - அடியாரை தொழும் அவர்க்கு

அபிராமி அந்தாதி - அடியாரை தொழும் அவர்க்கு



 மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் 
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை 
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, 
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

பட்டருக்கும் அபிராமிக்கும் உள்ள உணர்வு, உறவு புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது பக்தியா ? காதலா ? அன்பா ? சிநேகமா ? இது எல்லாவற்றையும் கடந்து வார்த்தையில் வராத ஒரு உறவா ?

அபிராமியை பார்க்கும் போதெல்லாம் அவளின் அழகு அவரை கொள்ளை கொள்கிறது. உடனே அவளுடைய கணவனின் நினைப்பும் வருகிறது. அவளின் அழகை வர்ணித்த கையோடு சிவனைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறார்.

ஏன் ?

மெல்லிய நுண்மையான இடையை உடையவளே;  மின்னலைப் போன்றவளே; சடை முடியை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் சிவன் அணைக்கும் மென்மையான மார்புகளை உடையவளே ; பொன் போன்றவளே; உன்னை மறைகள் சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அடியார்களுக்கு  மேள தாளத்துடன் ஐராவதம் என்ற வெள்ளை யானை மேல் செல்லும்  வரம் கிடைக்கும்.


பொருள்

மெல்லிய நுண் இடை = மெலிந்த சிறிய இடை

மின் அனையாளை  = மின்னலைப் போன்றவளை

விரிசடையோன் = சடையை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் சிவன் 

புல்லிய மென் முலைப் = அணைத்த மென்மையான மார்புகளை உடையவளை

பொன் அனையாளை = பொன் போன்ற நிறம் உடையவளை

புகழ்ந்து = அவளைப் புகழ்ந்து

மறை சொல்லியவண்ணம் = மறை நூல்கள் சொல்லிய வண்ணம்

தொழும் அடியாரைத் = தொழுகின்ற அடியவர்களை

 தொழுமவர்க்கு, = தொழுகின்றவர்களுக்கு

பல்லியம் ஆர்த்து எழ = பல வித வாத்தியங்கள் ஒலி எழுப்ப

வெண் பகடு ஊறும் பதம் தருமே = வெண்மையான யானை (ஐராவதம்) மேல் செல்லும் பதவி தருமே



ஜடாயு - காமம், காதையும் மறைக்கும்

ஜடாயு - காமம், காதையும் மறைக்கும் 


தன்னிடமுள்ள வரங்களை நினைத்து இராவணனுக்கு இறுமாப்பு. நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பில். முக்கோடி வாழ் நாள், முயன்று உடைய பெரும் தவம், எக்கோடி யாராலும் வெல்லப் படாய் என்ற வரங்களை நினைத்து, நினைத்ததை முடித்து வந்தான்.

இராவணா, உன் வரங்களும் வித்தைகளும் இராமன் வில்லில் அம்பை தொடுக்கும்வரை தான் இருக்கும்.

அதற்கப்புறம், அந்த வரங்கள் பலிக்காது என்ற உண்மையை சொல்கிறான்.

நடந்தது அது தானே. உண்மை சில சமயம் நாம் எதிர் பார்க்காத இடத்தில் இருந்து வெளிப் படுகிறது. நாம் தான் காது கொடுத்து கேட்பதில்லை.

இராவணனுக்கு இந்த உண்மை மனதில்  தைத்திருந்தால் ?

விதி.

காமம் காதை மறைத்தது.

பாடல்

'புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும், மற்று  உள விஞ்சைகளும்,
உரம் பெற்றன ஆவன-  உண்மையினோன்
சரம் பற்றிய சாபம்      விடும் தனையே.


பொருள்


Monday, July 8, 2013

குசேலோபாக்கியானம் - கடலும் கண்ணனும்

குசேலோபாக்கியானம் - கடலும் கண்ணனும் 


குசேலருக்கு எல்லாம் கண்ணனாகத் தெரிகிறது.  கடலைப் பார்க்கிறார். அது கண்ணனாகவே தெரிகிறது.

எப்படி ?

கடலில் சங்கு இருக்கிறது, அதன் கரைகளில் தங்கிய நீர் நிலைகளில் குவளை மலர்கள் இருக்கிறது, ஆமையும் மீனுமாகி உயிர்களை காக்கிறது, சிவந்த பவளம் இருக்கிறது, அதன் அடியில் பொன் இருக்கிறது, குளிர்ச்சி இருக்கிறது, கருமை நிறமாக இருக்கிறது, மேகமாகப் பொழிகிறது.....

இது எல்லாம் கண்ணன் தானே .....கண்ணனிடமும் சக்கரம் இருக்கிறது, அவன் நாபிக் கமலத்தில் இருந்து தாமரை மலர் பூத்தது, மச்ச அவதாரமும், கூர்ம அவதாரமும் எடுத்து உயிர்களை காத்தான், அவன் அதரம் சிவந்த நிறம் பவளம் போல், பொன் போன்ற திருமகளை அணைத்தவன், கருமை நிறத்தவன், தன் அருளை மேகம் போல் பொழிபவன் ....

பாடல்

சீருறு சங்கம் வாய்ந்து
          செழுங்குவ லயமுண் டாக்கி
     ஓருறு கமடம் மீனம்
          உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி
     ஏருறு பவளச் செவ்வாய்
          இயைந்துபொன் புணர்ந்து தண்ணென்
     காருறு நிறமுங் காட்டிக்
          கண்ணனைத் துணையும் வாரி.


பொருள் 

சீருறு சங்கம் வாய்ந்து =  சிறப்பான சங்கை கொண்டு

செழுங்குவ லயமுண் டாக்கி = செழுமையான குவளை மலர்களை உண்டாக்கி

ஓருறு கமடம் மீனம் = (ஆராயும் போது , ஆமை மீன்

உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி = உருவம் கொண்டு உயிர்களைக்  காத்து

ஏருறு பவளச் செவ்வாய் =  அழகான பவளம் போன்ற சிவந்த வாய் (கபெற்ற)

இயைந்துபொன் புணர்ந்து  = பொன்னை தானுள் கொண்டு, பொன் போன்ற திருமகளைப் புணர்ந்து

 தண்ணென் காருறு நிறமுங் காட்டிக் = குளிர்ச்சியான கருமையான நிறத்தை காட்டி

கண்ணனைத் துணையும் வாரி = கண்ணன் போல் துணை புரியும் மழை



ஜடாயு - தெரியாமல் உண்ட விஷம்

ஜடாயு - தெரியாமல் உண்ட விஷம்


ஜடாயு மேலும் இராவணனிடம் சொல்லுவான்....

கோபம் கொண்டு வரும் யானை மேல் மண் உருண்டையை எடுத்து எரிவதையா நீ விரும்புகிறாய் ? அது உன்னை கொல்லும் என்று நீ அறியவில்லையா ? விஷத்தை தெரியாமல் உண்டாலும் அது கொல்லாமல் விடுமா.

பாடல்

'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல் 
விடும் உண்டை கடாவ விரும்பினையே? 
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன் 
கடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்!

பொருள்

திருக்குறள் - நிலவும் நட்பும்

திருக்குறள் - நிலவும் நட்பும் 


வள்ளுவர் நிலவைப் பார்க்கிறார். அது நாளும் வளர்கிறது. தேய்கிறது. ஒரு நாள் பௌர்ணமியாகிறது . ஒரு நாள் அம்மாவாசையாகிறது. இதை பார்க்கும் போது வள்ளுவருக்கு நட்பு பற்றி தோன்றுகிறது.


நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

நல்லவர்களுடனான நட்பு பிறை மதி நாளும் வளர்ந்து முழு நிலவாவது போல வும் , பேதையர் நட்பு முழு நிலவு நாளும் தேய்ந்து அம்மாவாசையாக போவதும் போல இருக்கிறது என்கிறார் 

நீரவர் கேண்மை பிறை நிறை நீர = நல்லவர்களின் நட்பு பிறை (நிலவு) நிறைவதைப் போல 

பேதையார் நட்பு மதிப் பின் நீர - பேதையர் நட்பு முழு நிலவு பின் தேவதைப் போல 

சரி அவ்வளவுதானா ?

இது ஒண்ணும் பெரிய விஷயம் மாதிரி தெரியலையே...

இரண்டு அறிவுடையவர்களுக்கு இடையேயான நட்பு முதலில் மிக மிக சாதரணமாகத்தான்  தொடங்கும். ஏன் என்றால் இருவரும் ஒருவர் அறிந்து இருக்க மாட்டார்கள் . அறிவு எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்வது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, ஒருவரை ஒருவர் அறிந்து, ஒருவர் மற்றவரின் அறிவை , திறமையை அறிந்து, வியந்து அந்த நட்பு ஆழமாக மாறும் 


ஆனால் இரண்டு முட்டாள்கள் நட்பு கொள்ளும் போதோ, முதல் நாளே ஏதோ   பலநாள்  பழகியவர்களைப் போல ஆரம்பிக்கும், நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும், ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாமல் நட்பு கொண்டு விட்டு  , பின் நாளும் அவஸ்த்தைப் பட்டு பின் ஒரு நாள் அந்த நட்பு முறிந்தே போகும் . அம்மாவாசை நிலவைப் போல. 

அதாவது, நட்பு கொள்ளும்போது நிதானமாக இருங்கள் என்கிறார். சிறிது சிறிதாக வளரும் நட்பு  பின் பிரகாசமாய் இருக்கும், எல்லோருக்கும் ஒளி தரும்.