Monday, August 12, 2013

இராமாயணம் - நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள்

இராமாயணம் - நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள் 


சீதை மேலும் சொல்லுகிறாள் மாறு வேடத்தில் வந்த இராவணனிடம், "தீயவர்களோடு சேர்ந்தவர்கள் நல்லவர்கள் அல்லர். சொல்லப் போனால், தூயவர்கள், நல்லவர்கள், என்றும் காலம் காலமாக தொடர்ந்து வரும் அற வழியில் நிற்பார்கள். தீயவர்கள் ஒரு நெறியில் நிற்க மாட்டார்கள். இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று இருப்பார்கள். இதை எல்லாம் அறிந்த சீதை, அவர்கள் கொள்கை மாறுவார்கள் என்று அறிந்தாள் , ஆனால் உருவமும் மாறுவார்கள் என்று அறியவில்லை.

தீயவர்களோடு சேர்ந்து, அவர்களை நல் வழிப் படுத்துவோம் என்று நல்லவர்கள் நினைக்க மாட்டார்கள். நல்லவர்கள், தூய்மையானவர்கள் என்று சொன்னாலே அவர்கள் தீயவர்களோடு  சேராதவர்கள் என்று அர்த்தம். மாறி சேர்ந்து விட்டால், என்ன காரணத்திற்காகவும், அவர்கள் நல்லவர்கள் அல்லாதவர்களாக மாறி விடுவார்கள்.

பாடல்  

சேயிழை-அன்ன சொல்ல,-'தீயவர்ச் சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர், சொல்லின், தொல்  நெறி தொடர்ந்தோர்' என்றாள்;
'மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு உரு வரிக்க' என்பது,
ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின், அயல் ஒன்று எண்ணாள். 

பொருள்


சேயிழை = சிறந்த அணிகலன்களை பூண்ட சீதை

அன்ன சொல்ல = இராவணன் , அப்படி சொல்லக் கேட்டு

'தீயவர்ச் சேர்தல் செய்தார் = தீயவர்களோடு சேர்ந்தவர்கள்

தூயவர் அல்லர் = நல்லவர்கள் அல்லர். அது என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சை விட்டால் அது அந்த பாலை கெடுக்குமே அன்றி தான் நல்லதாக மாறாது.

சொல்லின்= சொல்லப் போனால்

தொல்  நெறி தொடர்ந்தோர்' என்றாள் = நல்லவர்கள், பழைய, காலம் காலமாக இருந்து வரும் அற வழியில் செல்பவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள். தீயவர்களோ கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நேற்று ஒரு வாழ்க்கை என்று வேறு ஒன்று என்று இருப்பார்கள். அவர்களுக்கு என்று ஒரு வழி  முறை கிடையாது. பாதைகள் நாளும் மாறிக் கொண்டே இருக்கும்.


'மாய வல் அரக்கர் வல்லர் = மாயங்கள் செய்யும் அரக்கர்கள் வல்லவர்கள்

வேண்டு உரு வரிக்க' என்பது = விரும்பிய உரு எடுக்க வல்லவர்கள் என்று

ஆயவள் அறிதல் தேற்றாள் = அவள் அறிந்து இருக்கவில்லை

ஆதலின், அயல் ஒன்று எண்ணாள்.  = ஆதலால் வேறு ஒன்றும் அவள் நினைக்கவில்லை

சீதை வாயிலாக கம்பன் ஒரு பாடம் நடத்துகிறான்....

1. நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள். அப்படி சேர்ந்தால் அவர்கள் நல்லவர்கள் இல்லை. 

2. நல்லவர்கள் என்றும் ஒரு வழியில் நடப்பார்கள்.

4. தீயவர்கள் அடிக்கடி தங்கள் கொள்கைகளை, வழிகளை மாற்றிக் கொள்வார்கள். அவர்களை நம்ப முடியாது.

5. கொள்கைகளை மட்டும் அல்ல, அவர்கள் உருவத்தையும் மாற்றிக் கொள்வார்கள். உருவம் என்றால் நடை  , உடை, பாவனை, தோளில் போடும் கட்சித் துண்டு , எல்லாம் மாறும். நேற்றுபோல் இன்று இருக்க மாட்டார்கள். 

6. அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பவன் நல்லவன் அல்ல. 

"அவனை நம்பி மோசம் போய் விட்டேன் "

"அவன் இப்படி மாறுவான் என்று நான் நினைக்கவே இல்லை "

"எப்படி இருந்தான், இப்ப எப்படி மாறிப் போய் விட்டான்...கைல நாலு காசு வந்ததும் ஆளே  அடையாளம் தெரியாம மாறிட்டான் "

என்று மோசம் போனவர்கள் பேசக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ?


Sunday, August 11, 2013

இராமாயணம் - வரம்பு இலான் மறுமொழி

இராமாயணம் - வரம்பு இலான் மறுமொழி 


இராவணன் கபட சந்நியாசி  வேடத்தில் வந்து சீதையிடம் தான் இலங்கையில் இருந்து வருவதாகவும் அங்கு ஆட்சி செய்யும் இராவணன் மிகச் சிறந்த பலசாலி என்று  கூறியதோடு அல்லாமல் அவன் சிறப்புகளை மேலும் மேலும் எடுத்துக்  கூறினான்.

சீதை கொஞ்சமும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவள் இராவணனிடம் திருப்பி " நீங்கள் இந்த தவ முனிவர்கள் இருக்கும் கானகத்திலோ அல்லது புனிதர்கள்  வாழும் நகரத்திலோ இருந்து இருக்கலாமே...அதை விட்டு விட்டு ஏன் அரக்கர்கள் வாழும் இலங்கையில் போய் இருந்தீர்கள் " என்று கேட்டாள் ....

இராவணன் சொல்கிறான் 

மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு
     இலான், "மறுவின் தீர்ந்தார், 
வெங் கண் வாள் அரக்கர்" என்ன 
     வெருவலம்; மெய்ம்மை நோக்கின், 
திங்கள் வாள் முகத்தினாளே! 
     தேவரின் தீயர் அன்றே; 
எங்கள் போலியர்க்கு நல்லார் 
     நிருதரே போலும்' என்றான்.

" குற்றமற்ற அவர்களை கொடுமையான வாள் வீசும் அரக்கர் என்று கூறினாலும்  நான் அஞ்ச மாட்டேன்...உண்மையை  அறியப் போனால் சந்திரனைப் போல் ஒளி வீசும்   முகம் கொண்டவளே அவர்கள் (அரக்கர்கள்) தேவர்களை  விட கொடியவர்கள் அல்லரே...எம் போன்றோருக்கு அரக்கர்களே   நல்லவர்கள் "


பொருள்

மங்கை = சீதை

அஃது உரைத்தல் = அப்படி சொன்னதை

கேட்ட = கேட்ட

வரம்பு  இலான் = எல்லை  இல்லாதவன். வரம்பு என்றால் நெறி, ஒழுக்கம் என்ற உண்டு. அவன் ஆற்றலுக்கு வரம்பு இல்லை. அவன் அரசுக்கு எல்லை இல்லை. அவனும் எந்த எல்லைக்கும் உட்பட்டவன் அல்ல . கம்பனின் வார்த்தை விளையாட்டு

 "மறுவின் தீர்ந்தார் = மறு என்றால் கறை . மறுவின்  தீர்ந்தார் என்றால் குற்றமற்றவர்கள்

வெங் கண் வாள் அரக்கர் = வெம் கண் என்றால் வெம்மையான கண். அருள் இல்லாத, கருணை இல்லாத கண்கள் என்று ஒரு பொருள். வெங்கண் என்றால் பாவம். பாவம் உள்ள வாளைக்  கொண்ட அரக்கர்கள்

என்ன   வெருவலம் = அப்படி சொன்னால் அச்சப்  படமாட்டோம் அல்லது கவலைப் பட மாட்டோம்

மெய்ம்மை நோக்கின், = உண்மையை சொல்ல வேண்டும் என்றால்

திங்கள் வாள் முகத்தினாளே! = சந்திரனைப் போல் ஒளி வீசும் முகத்தை கொண்டவளே

தேவரின் தீயர் அன்றே = (அவர்கள்) தேவர்களை விட   தீயவர்கள் அல்லவே

எங்கள் போலியர்க்கு = எங்களைப் போன்றவர்களுக்கு. எங்களைப் போன்ற போலியானவர்களுக்கு என்றும்  அர்த்தம் சொல்லலாம்


 நல்லார் = நல்லவர்கள்

நிருதரே போலும்' என்றான் அரக்கர்களே என்றான்


Saturday, August 10, 2013

திருவாசகம் - வானாகி மண்ணாகி

திருவாசகம் - வானாகி மண்ணாகி 


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்  வீடு,என்  மனைவி, என்  மக்கள்,என் செல்வம்,   நான் எவ்வளவு  ஆள், எவ்வளவு படித்தவன், எவ்வளவு புத்திசாலி என்று மனிதன் நான் எனது என்று சொந்தம் கொண்டாடுகிறான்.

 எது அவன் சொந்தம் ? எது அவன் உடமை ? மனிதன் தான் ஒரு பொம்மலாட்ட பொம்மை என்று அறிந்தான் இல்லை. எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என்று  நினைக்கிறான்.

அப்படி நினைப்பவர்களையும் ஆட்டுவிப்பவன் அந்த  இறைவன்.

அவனை எப்படி வாழ்த்துவது ? நாம் வாழ்த்தி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ? வாழ்த்துவது என்று முடிவு செய்து விட்டால் என்ன சொல்லி வாழ்த்துவது.

மாணிக்கவாசகர் திகைக்கிறார் ....

சீர்  பிரித்த பின்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


பொருள் 

வானாகி = வானமாகி

மண்ணாகி =  பூமியாகி

வளியாகி = காற்றாகி

ஒளியாகி = வெளிச்சமாகி

ஊனாகி = உடலாகி

உயிராகி = உயிராகி 

உண்மையுமாய்  = உண்மையானவையாகி

இன்மையுமாய் = உண்மை இல்லாதனவாகி

கோனாகி = எல்லாவற்றிற்கும் அரசனாகி

யான் எனது என்றவரை = நான் எனது என்று கூறுபவர்களை

கூத்தாட்டு வானாகி = கூத்தாடுபவனாகி. உயிர்களை எல்லாம் ஆட்டுவிப்பவன் அவன்.

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே என்பார் நாவுக்கரசர்.

தில்லையுட் கூத்தனே தென் பாண்டி நாட்டானே என்பது மணிவாசகம்

 கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவர் யார் தருவார் அச்சோவே என்பதும் மணிவாசகம்

நின்றாயை = நின்ற தாய் போன்றவனை 

என்சொல்லி வாழ்த்துவனே = என்ன சொல்லி வாழ்த்துவேன் ?

தேவாரம் - மீண்டும் பிறந்தால் மறப்பேனோ ?

தேவாரம் - மீண்டும் பிறந்தால் மறப்பேனோ ?




துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்

மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே. 

உயிருக்கு இந்த  உடல் மேல் தீராத  காதல். விடவே  விடாது. இருப்பினும் ஒரு நாள் நான் இந்த உடலை விட்டு விட்டு கால தூதரோடு வானுலகம் போவேன். போன பின், என்  வினைப் பயனால் மீண்டும் வந்து பிறப்பேன். இறப்பதற்கோ, வானுலகம் போவதற்கோ, மீண்டும் வந்து பிறப்பதற்கோ எனக்கு ஒரு குழப்பமும் இல்லை. ஆனால், அப்படி மீண்டும் வந்து  போறது , இறைவா உன்னை மறந்து விடுவேனோ என்று என் மனம் கிடந்து மறுகுகிறது .

சீர் பிரித்த பின்

துறக்கப் படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு 
இறப்பன் , இறந்தால் இரு விசும்பு ஏறுவன் , ஏறி வந்து 
பிறப்பன் , பிறந்தால் பிறை அணிவார் சடை  பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே 

பொருள்

துறக்கப் படாத உடலை = துறப்பதற்கு கடினமான இந்த உடலை

துறந்து = துறந்து

வெம் தூதுவரோடு = வெம்மையான (காலனின் ) தூதுவர்களோடு

இறப்பன் = இறப்பேன் 

இறந்தால் = இறந்தபின்

இரு விசும்பு ஏறுவன் = வானுகலம் போவேன் 

ஏறி வந்து = அங்கு போன பின்

பிறப்பன் = மீண்டும் பிறப்பேன் 

பிறந்தால் = அப்படி பிறந்தால்

பிறை அணிவார் = பிறைச் சந்திரனை அணியும்.

நிலவு உலாவிய நீர் மலி வேனியன் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்

சடை = சடை முடி கொண்ட

பிஞ்ஞகன் =  அழிப்பவன்.எதை அழிப்பவன் ? நம் பாவங்களை, நம் இருவினை பயன்களை, நம் பிறவித் தொடரை  அழிப்பவனை.

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க என்பார் மணிவாசகர் 

பேர் மறப்பன் கொலோ = ஒரு வேளை  மறந்து போவேனோ

என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே = என்று என் உள்ளம் கிடந்து மயங்குகின்றது

திருநாவுக்கரசருக்கே இந்த கதி என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் 




Thursday, August 8, 2013

நளவெண்பா - பூவாளி உள்ளரிக்க

நளவெண்பா - பூவாளி உள்ளரிக்க 


தமயந்தியைப் பார்த்த பின் நளன் பிரிந்து சென்று  விட்டான்.

தமயந்தி  வாடுகிறாள்.

அவள் உள்ளம் அவன் பின்னே போய்  விட்டது.அதனால் அவள் நாணமும் சென்று விட்டது.  பேச்சில்லை.கண்ணில் நீர் வற்றி விட்டது.  தளிர் போன்ற அவள் உடல்  வேகிறது. மன்மதன் பூவால் செய்த கணைகளை அவள் மேல்   விடுகிறான்.அது அவளின் உள்ளத்தை  அரிக்கிறது. அவள் உயிரும்  சோர்கிறது.

பாடல்

உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல்-பிள்ளைமீன்
புள்ளரிக்கு நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர்.


பொருள்

உள்ளம்போய் = அவள் உள்ளம் அவன் பின்னே போய் விட்டது

நாண்போய் = அதனால் நாணமும் போனது

உரைபோய் =  மனமும்,நாணமும் போனதால் திகைத்து அவள் பேச்சு மூச்சு அற்றுப் போய் விட்டாள்

வரிநெடுங்கண் = நீண்ட நெடுங்கண்

வெள்ளம்போய் = கண்ணீர் வற்றிப் போய்

வேகின்ற மென்தளிர்போல் = வெயிலில்   மென்மையான தளிரைப் போல்

பிள்ளைமீன் = மீன் குஞ்சுகளை

புள்ளரிக்கு = கொக்கு உண்ணும்

நாடன் திருமடந்தை= நாட்டைச் சேர்ந்த அரசனின் (வீமன்) மகளான தமயந்தி

பூவாளி = பூவால் செய்யப்பட்ட அம்பு

உள்ளரிக்கச் = உள்ளத்தை அரிக்க

 சோர்ந்தாள் உயிர் = உயிர் சோர்ந்தாள்

இராமாயணம் - அற நெறி நினைக்கிலாதவர்

இராமாயணம் - அற நெறி நினைக்கிலாதவர் 




வனத்திடை மாதவர் 
     மருங்கு வைகலிர்; 
புனல் திரு நாட்டிடைப் 
     புனிதர் ஊர் புக 
நினைத்திலிர்; அற 
     நெறி நினைக்கிலாதவர் 
இனத்திடை வைகினிர்; என் 
     செய்தீர்!' என்றாள்.

சீதை மேலும் கபட வேடத்தில் இருக்கும் இராவணனிடம் வினவுகிறாள்....

தவம் செய்யும் முனிவர்கள் வாழும் கானகத்தில்   வாழவில்லை. சரி காடுதான் வேண்டாம் என்றால், நீர் நிரம்பிய, புனிதர்கள் நிரம்பிய ஊர்களிலாவது வாழ்ந்து  இருக்கலாம்.அதை எல்லாம் விட்டு விட்டு 
அற நெறியை பற்றி நினைக்கக் கூட செய்யாத அரக்கர்கள் வாழும் இடத்திற்குச் சென்றீர், இது என்ன செயல் என்று  வினவினாள் .

பொருள்



வனத்திடை = கானகத்தில்

 மாதவர் = பெரிய தவம் செய்யும் முனிவர்கள்

மருங்கு வைகலிர்= அவர்களோடு சேர்ந்து இருக்க நினைக்கவில்லை 

புனல் = நீர் நிரம்பிய 

திரு நாட்டிடைப்  = சிறந்த நாட்டில்

புனிதர் ஊர் புக =நல்லவர்கள் வாழும் ஊரில் சென்று வாழ 

நினைத்திலிர் = நினைக்கவில்லை

அற நெறி நினைக்கிலாதவர் = அற  நெறிகளை பற்றி நினைக்கக் கூட செய்யாத

இனத்திடை வைகினிர் = அது போன்ற இனத்தவர்கள் (அரக்கர்கள்) இடையில் சென்று இருந்தீர்


என் செய்தீர்!' என்றாள். = என்ன காரியம் செய்தீர்கள் என்றாள்

நல்லவர்களோடு இருக்க  வேண்டும். தீயவர்களோடு இருக்கக் கூடாது என்ற  கருத்தில்.

ஏன், நல்லவர்கள் தீயவர்களோடு கலந்து பேசி அவர்களை நல்லவர்களாக ஆக்கக் கூடாதா ? பின் கெட்டவர்கள் எப்படிதான் நல்லவர்களாக  ஆவது என்று கம்பனுக்குத்  தோன்றவில்லை.நம்மில் சில பேருக்கு அப்படித்  தோன்றலாம்.

ஹ்ம்ம்...என்ன செய்வது....

Wednesday, August 7, 2013

குசேலோபாக்கியானம் - ஊர் வளம்

குசேலோபாக்கியானம் - ஊர் வளம் 


 எத்தனையோ இலக்கியங்களில் ஊர் வளம் பற்றிப் படித்து இருக்கிறோம். ஆனால்,   குசேலோபாக்கியானம் போல ஒரு வர்ணனையை பார்த்து  இருக்க
முடியாது.

இந்த பொருள்களில் என்ன சுகம் இருக்கிறது என்று அவற்றை வெறுத்து துறவறம் போனவர்கள் கூட இந்த ஊருக்கு வந்தால் அடடா நாம் இதை எல்லாம் இழந்து விட்டோமே என்று எண்ணி வருந்தும் அளவுக்கு அந்த ஊரில் செல்வம் நிறைந்து  கிடந்தது.

சரி, துறவிகள் பாடு அப்படி என்றால் இல்லறத்தில் இருப்பவர்கள் சங்கடம் வேறு  மாதிரி  இருந்தது.அந்த ஊரில் உள்ளவர்கள் விருந்து என்று  வந்தாலும் விருந்தினர்களை நன்றாக உபசரித்து அவர்களுக்கு நிறைய பரிசுகள்  தருவார்கள். இப்படி கையில் இருந்ததை எல்லாம் மற்றவர்களுக்குத் தந்துவிட்டு அவர்கள் ஏழையாகப் போய் மற்றவர்கள் சிரிக்கும்படி  ஆகி,   யாரும் கண் காணாத இடத்திற்கு துறவியாகப் போய்  விடுவார்கள்.

இப்படி துறவிகள் இல்லறத்தானைப் பார்த்து ஏங்க , இல்லறத்தில் உள்ளவர்கள் துறவியாகப் போக எண்ண , அந்த ஊரில், போகத்தை விற்கும் பெண்கள் நிறைந்த  தெருக்கள்  பல இருந்தன.

பாடல்

 துறவறத் தடைந்தோ ரில்லந்
          துறந்தமைக் கிரங்க இல்லத்
     துறவிருக் கின்ற மாந்தர்
          உள்ளன வெல்லாம் ஈந்து
     பிறர்நகை பொறாமல் அந்தப்
          பெருந்துற வடையப் போகந்
     திறமுற விற்கும் மின்னார்
          செறிதருந் தெருக்கள் பல்ல.


சீர்  பிரித்த பின்

துறவரத்து அடைந்தோர் இல்லம்
இல்லம் துறந்தமைக்கு இரங்க

இல்லத்து உறவிருக்கின்ற  மாந்தர்
 உள்ளன எல்லாம் ஈந்து
பிறர் நகை  பொறாமல் அந்த
பெரும் துறவு அடைய

போகம் திறமுற விற்கும் மின்னார்
செறி தரும் தெருக்கள் பல்ல
 
அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....