Saturday, November 16, 2013

நல் வழி - எங்கே தேடுவது ?

நல் வழி - எங்கே தேடுவது ?



நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

உண்மையை,  இறைவனை,மெய் பொருளை, ஆத்மாவை எங்கே தேடுவது ?

மக்கள் எங்கெல்லாமோ தேடித் தேடி அலைகிறார்கள்...கோவிலில், சாமியார் மடங்களில், காட்டில், குகையில், புத்தகங்களில் என்று எல்லா இடங்களிலும் தேடித் அலைகிறார்கள்.

அவர்கள் தேடிக் கொண்டிருக்கட்டும்....

காட்டில் மரம் சுள்ளி எல்லாம் வெட்டப் போவார்கள்.  ,வெட்டிய பின் அதை எப்படி கட்டுவார்கள் தெரியுமா ? அதற்கென்று தனியாக ஒரு கயறு தேடி போக மாட்டார்கள். அவர்கள் வெட்டி எடுத்த மர பட்டை அல்லது நீண்ட புல் இவற்றை எடுத்து கயறு போல திரித்து கட்டுவார்கள்.

அது போல நீங்கள் தேடிக் கொண்டிருப்பது உங்களிடமே இருக்கிறது.




நன்றென்றும் = நல்லதும்

தீதென்றும் = தீதும்

நானென்றும் = நான் என்பதும்

தானென்றும் = தான் என்பதும்

அன்றென்றும் = அன்று என்பதும் 

ஆமென்றும் = உள்ளது என்பதும் 

ஆகாதே = ஆகாதே

நின்ற நிலை = இருந்த நிலை

தானதாந் தத்துவமாஞ் = தான் அது ஆம் தத்துவமாம் 

சம்பறுத்தார் = சம்பு அறுத்தார் = சம்பு என்பது ஒரு வகை புல்

யாக்கைக்குப் = கட்டுவதற்கு. யாக்குதல் என்றால்  கட்டுதல். யாக்கை என்றால் உடல். எலும்பு, தோல், இவற்றால் கட்டப் பட்டதால் அது யாக்கை எனப் பட்டது. எழுத்து, சீர், தளை இவற்றால் கட்டப் படும்

போனவா தேடும் பொருள் = போனவர்கள் தேடும் பொருள்



Friday, November 15, 2013

இராமாயணம் - மழைச் சாரல் வாழ்கை

இராமாயணம் -  மழைச் சாரல் வாழ்கை 



‘விண்ணு நீர் மொக்குகளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்’ என்றான்.

தசரதன் இறந்த செய்தி கேட்டு அயர்ந்து நின்ற இராமனை தேற்றிக் கூறுகிறான் வசிட்டன்.

வானிலிருந்து விழும் மழைத் துளிகள் எத்தனை இருக்கும். இதுவரை விழுந்த துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்.

ஒரு மழைத் துளி வரும்போதே தெரியும் அது தரையில் மோதி சிதறி தெறிக்கப் போகிறது என்று.

கீழிறங்கி வரும் போது அழகாக இருக்கும் ...அது வானவில்லை உண்டாக்கும்....ஆனால் வரும்போதே தெரியும் அதன் வாழ்க்கை முடியப் போகிறது என்று.

மழை நீர் கீழே விழுந்து சிதறி விட்டதே என்று யாராவது வருந்துவார்களா ?

அப்படி வருந்தினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரியதாய் இருக்கும்.


இராமா !, நீ இதற்காக (தசரதன் ) இறந்ததற்காக அழுவது உன் பெருமைக்கு இழுக்கு . அழுவதை விட்டு விட்டு அவனுக்கு உரிய நீர் கடனை செய்.

பொருள்

விண்ணு நீர்   = விண்ணில் இருந்து வரும் நீர் துளிகள்

மொக்குகளின் = அரும்புகள் போல இருக்கும்

விளியும் யாக்கையை = அழியும் உடலை

எண்ணி = நினைத்து

நீ =  நீ

அழுங்குதல்= வருந்துதல்

இழுதைப்பாலதால் = இழுக்கு ஆகும்

கண்ணின் நீர் = கண்ணீர் 

உகுத்தலின் = விடுவதால்

கண்டது இல்லை = கண்ட பயன் ஒன்றும் இல்லை.

போய் = நீ போய்

மண்ணு நீர் உகுத்தி = நீர்க் கடனை செய்

நீ மலர்க்கையால் = உன்னுடைய மலர் போன்ற கையால்

என்றான் = என்றான் வசிட்டன்

சாமாறே விரைகின்றேன் என்பார் மணி வாசகர். இறப்பதற்காக விரைவாக போய் கொண்டிருக்கிறேன்.



Wednesday, November 13, 2013

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?


பாண்டவர்களை அஸ்தினா புரத்தில் தான் கட்டிய மண்டபத்தை காண வரும்படி ஓலை அனுப்புகிறான் துரியோதனன்.

அந்த ஓலையை திருதராஷ்டிரனை கொண்டு கையெழுத்து இட வைக்கிறான்.

அந்த ஓலையை விதுரனிடம் கொடுத்து அனுப்புகிறான்.

ஓலையை பெற்ற தருமன், தம்பிகளிடம் கேட்கிறான் "போகலாமா , வேண்டாமா " என்று.

அர்ஜுனன் போக வேண்டாம் என்று கூறுகிறான் ....


பாடல்

தேற லார்தமைத் தேறலுந்தேறினர்த் தேறலா மையுமென்றும் 
மாற லாருடன் மலைதலு மாறுடன்மருவிவாழ் தலுமுன்னே 
ஆற லாதன வரசருக் கென்றுகொண்டரசநீ தியிற்சொன்னார் 
கூற லாதன சொல்வதென் செல்வதென்கொடியவ னருகென்றான்.

சீர் பிரிக்காமல் புரியாது....:)

தேறலார் தம்மை தேறலும் தேறினார் தேறலாமையும் என்றும் 
மாறலார் உடன் மலத்தலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே 
ஆறு அலாதன அரசர்க்கு என்று கொண்ட அரச நீதியில் சொன்னார் 
கூறலாதன சொல்வதென் செல்வதென் கொடியவன் அருகு என்றான் 

நம்பாதவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது
நட்பு கொண்டவர்களை நம்பாமல் இருக்கக் கூடாது
நண்பர்களோடு சண்டை போடக் கூடாது
பகைவர்களோடு நட்பு பாராட்டக் கூடாது
இவை அரசர்களுக்கு என்று சொல்லப் பட்ட வழி
இதை விட்டு அவனிடம் போவது என்ன ?


பொருள்

தேறலார் = நம் நம்பிக்கையில் தேராதவர்கள்

தம்மை = அவர்களை

தேறலும் = ஏற்றுக் கொள்ளுதலும்

தேறினார் = ஏற்றுக் கொண்டவர்களை (நண்பராக)

தேறலாமையும் = நம்பாமல் இருப்பதும்

என்றும் = எப்போதும்

மாறலார் உடன் = மாறாமல் ஒன்றாக நம்முடன் இருப்பவர்களிடம்

மலத்தலும் = சண்டை இடுதலும்


மாறுடன் = மாறு பட்டவர்களுடன் (பகைவர்களுடன் )

மருவி வாழ்தலும் = ஒன்றாக வாழ்தலும்

முன்னே  = முன்பே

ஆறு அலாதன = ஆறு என்றால் வழி. வழி அல்லாதன

அரசர்க்கு என்று கொண்ட = அரசர்களுக்கு என்று

அரச நீதியில் சொன்னார்  = அரச நீதியில் சொன்னார்

கூறலாதன சொல்வதென் = அதில் கூறாதவற்றை நீ (தருமனே) ஏன் சொல்கிறாய். அறம் இல்லாததை ஏன் கூறுகிறாய்

செல்வதென் = செல்வது என் ? ஏன் போக வேண்டும் ?

கொடியவன் அருகு என்றான் = கொடியவனான துரியோதனன் அருகில் என்றான்

கொடியவர்கள் கிட்ட கூட போகக் கூடாது.



இராமாயணம் - எது வரை விளக்கு எரியும் ?

இராமாயணம் -  எது வரை விளக்கு எரியும் ?




புண்ணிய நறு நெயில்,
    பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில்,
    விதி என் தீயினில்,
எண்ணிய விளக்கு அவை
    இரண்டும் எஞ்சினால்,
அண்ணலே! அவிவதற்கு
    ஐயம் யாவதோ? ‘‘

விளக்கு எதுவரை எரியும் ? திரியும் எண்ணையும் உள்ள வரை எரியும்...அதற்குப் பின் அணைந்து போகும். இதில் என்ன சந்தேகம் ?

நம் வாழ்க்கை என்று தீபம் நாம் செய்த புண்ணியம் என்ற எண்ணெய் , காலம் என்ற திரி இருக்கும் வரை ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

செய்த புண்ணியம் எல்லாம் நாம் அனுபவிக்க உதவுவது காலம் என்ற திரி.

புண்ணியத்தின் பலன் முடியும் போது வாழ்கை முடிந்து போகும்.

எண்ணையும், திரியும் தீர்ந்த விளக்கின் தீபம் போல....

பொருள்


புண்ணிய நறு நெயில் = புண்ணியம் என்ற நல்ல நெய்யும்

பொரு இல் = ஒப்பற்ற

காலம் ஆம் = காலம் என்ற

திண்ணிய திரியினில் = திடமான திரியில்

விதி என் தீயினில் = விதி என்ற தீயில் , தீபம்

எண்ணிய விளக்கு = உண்டான விளக்கு

அவை  இரண்டும் எஞ்சினால் = அவை இரண்டும் தீர்ந்து போனால்

அண்ணலே! = அண்ணலே 

அவிவதற்கு = அணைந்து போவதற்கு

ஐயம் யாவதோ? = சந்தேகம் ஏதும் உண்டோ ? (கிடையாது)

பாவம் செய்தால் அதை அனுபவிக்க வாழ்கை கிடையாதா ?

புண்ணியம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். நீண்ட நாள் வாழ வேண்டும் என்றால்  புண்ணியம் செய்யுங்கள்.

தசரதன் இறந்த செய்தி கேட்டு தளர்ந்த இராமனுக்கு ஆறுதலாக வசிட்டன் கூறியது.





Tuesday, November 12, 2013

வில்லி பாரதம் - தமிழ் மகள் வாழ்த்து

வில்லி பாரதம் - தமிழ் மகள் வாழ்த்து 




பொருப்பிலேபிறந்துதென்னன்புகழிலேகிடந்துசங்கத்து
இருப்பிலேயிருந்துவைகையேட்டிலேதவழ்ந்தபேதை
நெருப்பிலேநின்றுகற்றோர்நினைவிலேநடந்தோரேன
மருப்பிலேபயின்றபாவைமருங்கிலேவளருகின்றாள்.

தமிழை தாயாகத்தான் எல்லோரும் சொல்லி வந்திருக்கிறார்கள்.

வில்லிபுத்துரார் தமிழை மகளாக, சின்ன பெண்ணாக பார்கிறார்.

தமிழ் தாய் என்கிறோம்.

கன்னித் தமிழ் என்கிறோம்.

வில்லியார் தமிழை மகளாகப் பார்க்கிறார்.

பொருப்பிலே பிறந்து = பொருப்பு என்றால் மலை. பொதிகை மலையில் அகத்தியனிடம் இருந்து பிறந்து

தென்னன் புகழிலே கிடந்து = பாண்டிய மன்னர்களின் புகழிலிலே தங்கி இருந்து

சங்கத்து இருப்பிலே இருந்து = மூன்று சங்கத்திலும் நிலையாக இருந்து 

வைகை யேட்டிலேதவழ்ந்த = புனல் வாதம் செய்த போது, தமிழ் பாடல்களை ஏட்டில் எழுதி வைகை வெள்ளத்தில் விட்டார்கள். அது கரையேறி வந்தது.

பேதை = சின்னப் பெண்

நெருப்பிலே நின்று = அனல் வாதம் செய்யும் போது, ஏட்டினை தீயில் இடுவார்கள். நல்ல தமிழ் பாடல்களை கொண்ட ஏடுகள் தீயில் கருகாமல் இருக்கும். அப்படி வளர்ந்த தமிழ். 

கற்றோர் நினைவிலே நடந்தோரேன = கற்றவர்கள் நல்ல தமிழ் பாடல்களை நினைவில் வைத்து இருப்பார்கள். அவர்கள் நினைவிலே நடந்து வருவாள்.


மருப்பிலேபயின்றபாவைமருங்கிலேவளருகின்றாள் = திருமால் பன்றியாக உருவம் எடுத்து உலகை தன் கொம்பில் தூக்கி காத்த போது (மருப்பு = கொம்பு ), அதனுடன் சேர்ந்து பிறந்து வளர்ந்த தமிழ். (மருங்கு = உடன் )





இராமாயணம் - நீ இரங்கல் வேண்டுமோ ?

இராமாயணம் - நீ இரங்கல் வேண்டுமோ ?


‘கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த,
உள் முதல் பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன,
மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது,
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கள் வேண்டுமோ?

கண் முதலிய புலன்கள் காணும் கண்டு உணரும் எண்ணற்ற பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களும் அழியும் என்ற போது, இந்த உயிர்கள் இறந்ததற்கு நீ வருத்தப் படலாமா?

என்று தசரதன் இறந்த செய்தி கேட்டு வருந்தும் இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

கண் முதல் காட்சிய = கண்கள் முதலிய புலன்கள் கண்டு உணரும் 

கரை இல் நீளத்த = எல்லை அற்ற எண்ணிக்கை கொண்ட பொருள்களின்

உள் முதல் = மூலமான

பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன = அவைகள் எல்லாவற்றுக்கும் ஊற்று போல ஆதாரனமான

மண் முதல் பூதங்கள் = மண், தீ, நீர், வானம் போன்ற பூதங்கள்

மாயும் என்றபோது = அழியும் என்ற போது

எண் முதல் உயிர்க்கு = இவற்றை விட எளிய உயிர்களுக்கு

நீ இரங்கல்  வேண்டுமோ? = நீ வருத்தப் பட வேண்டுமா ? வேண்டாம்.


இந்த உலகில் தோன்றிய எல்லாம் அழியும். பொருள்கள் மட்டும் அல்ல, அந்த பொருகளின் மூலமான பஞ்ச பூதங்களும் அழியும் தன்மை கொண்டது. அப்படி இருக்கும் போது , இந்த உடல் அழிவதைப் பற்றி நீ வருத்தப் படலாமா


நாம் தங்கம் பார்த்து இருக்கிறோம். தங்கத்தில் இருந்து மோதிரம், வளையல் போன்ற ஆபரணங்கள் உருவாவதைப் பாத்து இருக்கிறோம்.  ஒரு வளையலை அழித்து  இன்னொரு வளையல் செய்கிறோம். அழிவது வளையல்தான். தங்கம் அல்ல. தங்கம் அப்படியே இருக்கிறது. 

கம்பர் சொல்கிறார் ...வளையல் மட்டும் அல்ல, தங்கமும் அழியும். 

மோதிரம் அழியும். 

அது உருவாக காரணமாக இருந்த தங்கமும் அழியும்.

அப்படி என்றால், அதை அணிந்தவன் அழியாமல் எப்போதும் இருப்பான் என்று நினைக்க முடியுமா  ?


Monday, November 11, 2013

இராமாயணம் - காலம் என்று ஒரு வலை

இராமாயணம் - காலம் என்று  ஒரு வலை 




“சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையாய்!
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? “

நல்ல ஒழுக்கமும், தர்மமும் சிதைவு இல்லாமல் செயல்களை செய்பவனே (இராமனே) சிவனுக்கும், திருமாலுக்கும், பிரம தேவனுக்கும் உதவி செய்த மூலப் பொருளே ஆயினும் காலம் என்ற வலையை கடக்க முடியாது.

தசரதன் இறந்த செய்தி கேட்டு கலங்கிய இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

காலம் என்ற ஒன்றை யாராலும் கடக்க முடியாது. இறக்கும் காலம் வந்தால் அது நிகழ்ந்தே  தீரும்.அதை அந்த கடவுளாலும்  முடியாது. அப்படியென்றால் சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்.

பொருள்


“சீலமும் = நல் ஒழுக்கமும்

 தருமமும் = அறமும்

 சிதைவு இல் செய்கையாய் = சிதைவு இல்லாத செய்கை கொண்டவனே

சூலமும் = சூலத்தை கொண்ட சிவனும்

திகிரியும் = சக்கரத்தை கொண்ட மாலும்

சொல்லும் = வேதத்தை கொண்ட பிரமனும்

தாங்கிய  = அப்படி அந்த மூவரையும் தாங்கிய

மூலம் = மூலப் பொருளான அந்த பரம் பொருள்

வந்து உதவிய = வந்து உதவிய  

மூவர்க்கு ஆயினும் = அந்த மூவர்கள் ஆயினும்

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? = காலம் என்ற வலையை கடக்க முடியுமா ? முடியாது.

மூவர்க்கும் மேலான ஒரு பரம் பொருள் பற்றி கம்பர் இங்கு கூறுகிறார்.

அது பற்றி பின்னொரு நாள் பார்ப்போம்.