Sunday, November 24, 2013

வில்லிபாரதம் - உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன்

வில்லிபாரதம் - உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன் 



பாண்டவர்கள் சார்பாக கண்ணன் தூது வந்து, விதுரன் அரண்மனையில் தங்கி இருக்கிறான்.

மறு நாள் துரியோதனனை அரசவையில்  காணவேண்டும்.

அவன் வருவதற்கு முன்னால் துரியோதனன் ஆலோசனை செய்கிறான்.

அவனுக்கு சகுனி துர்போதனை செய்கிறான்.

"நாளை கண்ணன் வந்தால் அவனுக்கு மரியாதை செய்யாதே...." என்று அவனை தூண்டி விடுகிறான்.

துரியோதனன் மனதில் சினம் ஏறுகிறது.

தன்  சபையில் உள்ள மன்னர்களை எல்லாம் பார்த்து கூறுகிறான்....

"நாளைக்கு அந்த இடை சாதியில் பிறந்த கண்ணன் இந்த சபைக்கு வரும் போது , யாராவது எழுந்து அவனை வணங்கி அவனுக்கு மரியாதை செய்தால் உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன் "

என்று மிரட்டுகிறான்.

பாடல்

காவன்மன்னவர்முகங்கடோறுமிருகண்பரப்பியமர்கருதுவோ
ரேவலின்கண்வருதூதனாமிடையனின்றுநம்மவையிலெய்தினால்
ஓவலின்றியெதிர் சென்று கண்டுதொழுதுறவுகூரிலினியுங்களூர்
தீவலஞ்செயவடர்ப்பனென்று நனிசீறினான் முறைமைமாறினான்.


படிக்கவே கடினமாக இருக்கிறதா ? கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

காவல் மன்னவர் முகங்கள் தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் 
ஏவலின் கண் வரும் தூதனாம் இடையன் இன்று நம் அவையில் ஏய்தினால் 
ஓவலின்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்களூர் 
தீ வலம் செய்ய அடர்பேன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் 

அப்பாட...ஒரு வழியா சீர் பிரிச்சாச்சு...இனிமேல் அர்த்தம் புரிவது எளிது...

காவல் மன்னவர் = நாட்டையும், மக்களையும் காவல் செய்யும் மன்னவர்கள்

முகங்கள் தோறும் = ஒவ்வொருவர் முகத்தையும் தனித் தனியாக நோக்கி

இரு கண் பரப்பி = தன் இரண்டு கண்களாலும் உற்று நோக்கி

அமர் கருதுவோர்  = சண்டை விரும்பும்  (பாண்டவர்களின்)

ஏவலின் கண் வரும் = ஏவலில் வரும்

தூதனாம் = தூதனாம்

இடையன் = இடை சாதியில் தோன்றிய கண்ணன்

இன்று நம் அவையில் ஏய்தினால் = இன்று நம் அவைக்கு வந்தால்

ஓவலின்றி = ஒழிதல் இன்றி

எதிர் சென்று கண்டு = எதிரில் சென்று

தொழுது = வணங்கி

உறவு கூறில் = உறவு கூறி, நலம் விசாரித்தால்

இனி = இனி

உங்களூர் = உங்கள் ஊரை

தீ வலம் செய்ய அடர்பேன் = தீ வைத்து கொளுத்தி விடுவேன்

என்று  = என்று

நனி = மிகவும்

சீறினான் = கோபப் பட்டான்

முறைமை மாறினான்  = வழி தவறியவன்


அற்புதத் திருவந்தாதி - அறிவானும் அறிவிப்பானும்


அற்புதத் திருவந்தாதி - அறிவானும் அறிவிப்பானும் 

கீதை சொல்கிறது - எல்லாவற்றிலும் தன்னை காண்பானும், தன்னை எல்லாவற்றிலும் காண்பானும் உயர்ந்த யோகி என்று. 

இந்த உலகம் நம்மால் உருவாக்கப் பட்டது. "பன்னிய  உலகினில் பயின்ற பாவத்தை நன்னின்று அறுப்பது நமச்சிவாயவே " என்பார் நாவுக்கரசர். 

இது பன்னிய உலகம். 

 அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார் காரைக்கால் அம்மையார். 

பாடல் 

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

பொருள் 

அறிவானுந் தானே = அறிபவனும் தானே 
அறிவிப்பான் தானே = அறிவை  தருகின்றவனும் தானே 
அறிவாய் அறிகின்றான் தானே = அந்த அறிவாய் தன்னை அறிபவனும் தானே 

 அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே = அறிந்து கொள்ளும் மெய் பொருளும் தானே 

 விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன் = ஞாயிறு, ஆகாயம், என்று எல்லா பொருள்களும் அவன். 

அறியும் பொருள் 
அறிபவன் 
அறியும் அறிவு 
அறிவு 

எல்லாம் ஒன்றே. ஒன்றில் இருந்து ஒன்று வேறல்ல. 

இது ஒரு பார்வைக் கோணம் (point of view ). அது எப்படி என்று யோசித்துப் பார்ப்போமே. 




இராமாயணம் - ஆவி வேக

இராமாயணம் - ஆவி வேக 


சீதையின் நினைவாகவே இருக்கிறான் இராவணன்.  அவன் படுக்கையில் தூவி இருந்த மலர்கள் எல்லாம் அவன் உடல் சூட்டில் கருகுகின்றன.

அவன் அட்ட திக்கு யானைகளை வென்ற தோள் வலிமை கொண்டவன். காதல் அவனை வலிமை குன்றச் செய்கிறது. உடம்பு தேய்கிறது. தேய்கிறது என்றால் மெலிந்து போகிறான். உள்ளம் நைந்து போகிறது. ஆவி வேகிறது.

காதல் சூட்டில் இரத்தம் கொதிக்கிறது. அந்த சூட்டில் ஆவி வேகிறது.

அவன் தான் என்ன செய்வான் , பாவம்.

பாடல்

நூக்கல் ஆகலாத காதல் நூறு 
     நூறு கோடி ஆய்ப் 
பூக்க, வாச வாடை வீசு சீத நீர் 
     பொதிந்த மென் 
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் 
     எட்டும் வென்ற தோள், 
ஆக்கை, தேய, உள்ளம் நைய, 
     ஆவி வேவது ஆயினான்.


பொருள்

நூக்கல் ஆகலாத காதல் = தவிர்க்க முடியாத காதல்

நூறு நூறு கோடி ஆய்ப் பூக்க = ஆயிரம் தாமரை மொட்டுக்கள். காதல் நூறு நூறு கோடியாக உள்ளத்தில் பூத்தது.


வாச = வாசனை பொருந்திய

வாடை = குளிர்ந்த காற்று

வீசு = வீசும்போது

சீத நீர் = குளிர்ந்த நீர்

பொதிந்த மென் சேக்கை  வீ =  வாசனையும் குளிர்ச்சியும் பொதிந்து வைத்த படுக்கை

கரிந்து = அவன் உடல் சூட்டால் கரிந்து

திக்கயங்கள் = திக்கு யானைகளை (திக்கு = திசை; கயம் = யானை)

எட்டும் வென்ற தோள் = எட்டு திசைகளில் உள்ள யானைகளை வென்ற தோள்கள்

ஆக்கை = அவற்றை கொண்ட உடல்

தேய = மெலிய

உள்ளம் நைய = உள்ளம் நைய

ஆவி வேவது ஆயினான் = ஆவி வேவது ஆயினான்.

காமம் சுடுகிறது.

அப்பேற்பட்ட இராவணனை உருக்கி போடுகிறது இந்த காதல் அல்லது காமம்.

நாமெல்லாம் எந்த மூலை.

மோகத்தின் சூட்டை தாங்க முடியாமல் "மோகத்தை கொன்று விடு இல்லால் என் மூச்சை  நிறுத்தி விடு " என்றார் பாரதியார்




Saturday, November 23, 2013

திருக்கோயில் திருவெண்பா

திருக்கோயில் திருவெண்பா 


இந்த திருக் கோவில் திரு வெண்பாவை அருளிச் செய்தது ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர்.

மூப்பு வருமுன், இறைவனை நினை என்று ஒவ்வொரு கோவிலாகக் கூறுகிறார்.  அந்த கோவிலில் உள்ள , அந்த பெயர் உள்ள இறைவனை போய் வணங்கு என்று பெரிய பட்டியலைத்  தருகிறார்.

வாழ்வின் நிலையாமையை மிக மிக ஆழமாக, மனதில் தைக்கும்படி சொல்லும்படி பாடல்கள்.


பாடல்

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

பொருள்

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது = உயிர் இருக்கிறதா என்ற தொட்டு தடவி பார்த்து, நாடித் துடிப்பை காணாமல்....


பெட்டப் பிணமென்று பேரிட்டுக் = இதுவரை இருந்த பெயரை நீக்கி, பிணம் என்று பெயரிட்டு

 கட்டி எடுங்களத்தா என்னாமுன் = சுடுகாட்டுக்கு கட்டி எடுத்துக் கொண்டு போங்கள் என்று மற்றவர்கள் சொல்லும் முன்னே 

ஏழைமட நெஞ்சே = வரிய என் நெஞ்சே


நெடுங்களத்தான் பாதம் நினை = நெடுங்களுத்தூர் என்ற ஊரில் உள்ள சிவனின் பாதத்தை நினை



வில்லிபாரதம் - இறைவன் எங்கு வருவான்

வில்லிபாரதம் - இறைவன் எங்கு வருவான் 


பாண்டவர்களுக்காக , கண்ணன் துரியோதனிடம் தூது போகிறான். அஸ்தினாபபுரம் வந்து விட்டான்.

எங்கு தங்குவது ?

துரியோதனன் மாளிகை இருக்கிறது, பீஷ்மர், துரோணர், சகுனி, துச்சாதனன் இவர்கள் மாளிகை எல்லாம் இருக்கிறது.

கண்ணன் எங்கு தங்குவான் ?

செல்வமும், படை பலமும், புகழும், நிறைந்த துரியோதனன் அரண்மனையிலா ?

வயதில் மூத்தவர், பிரமச்சரிய விரதம் பூண்ட பீஷ்மர் அரண்மனையிலா ?

கல்வி கேள்விகளிலும் , வில் வாள் வித்தையிலும் சிறந்த துரோணர் அரண்மனையிலா ?

இல்லை.

இங்கு எங்கும் தங்கவில்லை.

இவை எதுவும் இல்லாத நீதிமான், அற வழியில் நிற்கும் விதுரன் அரண்மனையில் தங்கினான்.

விதுரனே சொல்கிறான்....

"கண்ணா, நீ பாற்கடலில் தங்குவாய், ஆதிசேஷனை பாயாகக் கொண்டு தூங்குவாய், ஆல் இலையில் துயில்வாய், வேதங்களில் நீ இருப்பாய், நீ இங்கு வருவதற்கு என் குடிசை என்ன மாதவம் செய்ததோ "

பாடல்

'முன்னமே துயின்றருளிய முது பயோததியோ! 
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல் இலையோ! 
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு 
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான்.

பொருள்

'முன்னமே = முன்பே

 துயின்றருளிய = துயின்று அருளிய

முது பயோததியோ! = பழமையான பாற்கடலோ

பன்னகாதிபப் பாயலோ!  = பன்னக அதிபன் பாயாலோ. பாம்புகளுக்கு அரசனான ஆதி சேஷன் என்ற பாயோ ?

பச்சை ஆல் இலையோ! = பச்சை ஆல் இலையோ ?

சொன்ன நால் வகைச் சுருதியோ! = நான்கு வேதங்களோ

கருதி நீ எய்தற்கு  = நீ வந்து இருப்பதற்கு

என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான் = என்ன மாதவம் செய்தது என் இந்த சிறு குடில்


இறைவனை தேடி நீங்கள் போக வேண்டாம். அவன் உங்களை தேடி வருவான். 

எப்போது என்று இந்த பாடல் சொல்கிறது. 


Friday, November 22, 2013

வில்லி பாரதம் - நாடு இரந்தோம்

வில்லி பாரதம் - நாடு இரந்தோம் 


வல் என்றால் சூதாட்டம்.

வல்லினால் இழந்த நாட்டை வில்லினால் பெறுவதை விட ஒரு சொல்லினால் பெறுவது நல்லது என்று எண்ணி, கண்ணன் , பாண்டவர்கள் சார்பாக தூது போக தயாராகிறான்.

போகும் முன் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்கிறான்.

கண்ணன்: நகுலா நீ என்ன சொல்கிறாய் ?

நகுலன்: கண்ணா, நாங்கள் எவ்வளவோ அவமானப் பட்டு விட்டோம். பட்டதெல்லாம் போதும். இப்ப நீ போய் நாடு கேட்டு அவன் தராவிட்டால் "நாடு பிச்சை கேட்டவர்கள் " என்ற அவப் பெயரும் வந்து சேரும்.

கண்ணன்: அதனால் ?

நகுலன்: நாடு பிச்சை கேட்பதை விட , சண்டை போட்டு நாட்டை வெல்லலாம்.

பாடல்

கேவலந்தீர் வலியபகை கிடக்கமுதற் கிளர்மழைக்குக்
                               கிரியொன்றேந்து, 
கோவலன் போயுரைத்தாலுங் குருநாடுமரசுமவன்
                             கொடுக்கமாட்டான், 
நாவலம்பூதலத்தரசர் நாடிரந்தோமென நம்மை நகையாவண்ணங், 
காவலன்றன் படைவலியுமெனது தடம்புயவலியுங் காணலாமே.


சீர் பிரித்த பின்


கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்றை ஏந்திய 
கோவலன் போய் உரைத்தாலும் குரு நாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான் 
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையா வண்ணம் 
காவலன் தன் படை வலியும் எனது தடம் புய வலியும் காணலாமே 

பொருள்

கேவலம் தீர் = சிறுமை தீர. பெரிய என்று பொருள்

வலிய பகை கிடக்க = வலிமையான பகை கிடக்க

முதல் கிளர் மழைக்கு = முன்பு ஆயர்பாடியில் கிளர்ந்து எழுந்த மழைக்கு

கிரி ஒன்றை ஏந்திய  = கோவர்த்தன கிரியை குடை போல ஏந்திய

கோவலன் போய் உரைத்தாலும் = கோவலனான கண்ணன் போய் சொன்னாலும்

குரு நாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான் = நாட்டையும், அதை ஆளும் அரச உரிமையும் அவன் (துரியோதனன்) கொடுக்க மாட்டான்


நாவலம் பூதலத்து = இந்த பூமியில் உள்ள

அரசர் = அரசர்கள் எல்லோரும்

நாடு இரந்தோம் = நாட்டை பிச்சையாக கேட்டோம்

என நம்மை நகையா வண்ணம்  = என்று நம்மை பார்த்து சிரிக்காமல் இருக்க

காவலன் தன் படை வலியும் = நாட்டுக் காவலன் ஆன துரியோதனின் படை வலியும்

எனது தடம் புய வலியும் காணலாமே  = என் தோள்களின் வலிமையையும் கானாலாமே



கோவில் திருவெண்பா - ஐயாறு வாயாறு

கோவில் திருவெண்பா - ஐயாறு வாயாறு


மூப்பு.

மனிதனை மாற்றி  போடும் காலத்தின்  கணக்கு.எல்லாம் என்னால் முடியும், என்னால் முடியாதது என்ன என்று இறுமார்த்திருக்கும் மனிதனை பார்த்து சிரிக்கும் காலத்தின் சிரிப்பு மூப்பு....

நரை வந்து, இருமி, உடல் வளைந்து, தோல் சுருங்கி, பல் விழுந்து, கண் பார்வை மங்கி....

மனிதனின் ஆணவம் வடியும் இடம்....

மனிதனின் ஆற்றலை வரையறுக்கும் இடம் ...முதுமை.


குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.


குந்தி நடந்து = நாலு அடி தொடர்ந்து நடக்க முடியாது. மூச்சு வாங்கும். கொஞ்சம்  தரையில் அமர்ந்து (குந்தி) பின் நடந்து , பின் அமர்ந்து...

குனிந்தொருகை கோலூன்றி = நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் போய்  உடல் வழிந்து, ஒரு கை கோலைப் பற்றி


நொந்திருமி = நொந்து, இருமி....நெஞ்சு வலிக்கும் இருமி இருமி

ஏங்கி = மூச்சு விடக் கூட கஷ்டப் பட்டு ....

நுரைத்தேறி = நுரை ஏறி


வந்துந்தி = வந்து உந்தி. உந்துதல் என்றால் தள்ளுதல். எது உந்தி வரும் ?


ஐயாறு = "ஐ" என்றால் வாந்தி. அல்லது எச்சில் 

வாயாறு = வாயில் இருந்து ஆறாகப்

பாயாமுன் = பாயும்முன்

நெஞ்சமே

ஐயாறு =  ஐயாறு என்றால் திருவையாறு . அந்த ஊரில் உள்ள சிவனை அல்லது அந்த ஊரின் பெயரையே

வாயால் அழை.= வாயால் அழை

வாயில் வாந்தி வரும், எச்சில் ஒழுகும்...அப்போது நாக்கு குழறும்...சொல்ல வேண்டும்  என்று நினைத்தால் கூட வார்த்தை வராது....


ஐயாரா  என்று அழைத்து வையுங்கள்...ஐயாறு வாயாறு பாயும்முன்