Saturday, February 8, 2014

சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க

சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க 


சிவபுராணம் - மாணிக்க வாசகர் அருளிச் செய்தது.

அற்புதமான பாடல்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

முதல்  ஐந்து வரிகள் மேலே உள்ளவை.

பெரிய புத்தகங்களை படிக்கும் போது நல்ல கருத்துகள் நடுவிலோ, கடைசியிலோ இருந்தால் ஒரு வேளை நாம் அந்த புத்தகத்தை முழுமையாக படிக்காவிட்டாலோ அல்லது சரியாகப் படிக்கா விட்டாலோ, அந்த நல்ல கருத்தை நாம் அறியாமல் போகலாம்.

அதனால் எடுத்த எடுப்பிலேயே "நமச்சிவாய வாழ்க" என்று ஆரம்பிக்கிறார்.

நீங்கள் திருவாசகம் முழுதும் படிப்பீர்களோ இல்லையோ, முதல் வரியிலேயே நல்லதை சொல்லி ஆரம்பிக்கிறார்.

கம்பரும் அப்படித்தான்  செய்தார்."தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்று முதல்  பாடலிலேயே நம்மையும் சேர்த்து அவனிடம் சரண் அடையச் செய்தார்.

"நமச்சிவாய வாழ்க" என்று சொல்லி விட்டீர்களா ?

சில சமயம் நாம் பெரிய பக்தன் என்று கூட நம் தலையில் அகங்காரம் ஏறி விடும். நான் எத்தனை கோவில் போய் இருக்கிறேன், எவ்வளவு விரதம் இருந்து இருக்கிறேன், எவ்வளவு கோவில்களுக்கு எவ்வளவு நன்கொடை தந்திருக்கிறேன் என்று  பணிவில் கூட, நல்லது செய்வதில் கூட அகங்காரம் வந்து விடலாம்.

எனவே அடுத்து

"நாதன் தாள் வாழ்க" என்று அவன் திருவடிகளைப்  போற்றுகிறார். அடிபணிந்து இருக்க வேண்டும்  என்று சொல்லாமல்  சொல்கிறார்.

நம் வாழ்க்கை சிக்கல் நிறைந்தது. கோவிலுக்குப் போய் இறைவனை வழிபடும்  நேரத்திலும் வீட்டு நினைவு, அலுவலக நினைவு, என்று ஆயிரம் நினைவுகள். அதை எல்லாம் விட்டு விட்டாலும், பக்கத்தில் நிற்கும் பச்சை சேலை மனதை  அலைக் கழிக்கிறது.

அவன் நினைவு எங்கே வருகிறது.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"

எப்போதும் என் நெஞ்சில் இருப்பவன் என்கிறார்.

.....

இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் ஆயிரம் அர்த்தங்கள்....

நேரமிருப்பின், மூல நூலைப் படித்துப் பாருங்கள்...

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம்  விளங்கும்.

படித்துப் பாருங்கள்...உருகுகிறதா என்று தெரியும்.....


Friday, February 7, 2014

தேவாரம் - ஊர் கோபிக்கும் உடல்

தேவாரம் - ஊர் கோபிக்கும் உடல் 


பெரிய மனிதர், நல்லவர்,  படித்தவர், பண்புள்ளவர், பக்திமான் என்று கொண்டாடிய ஊர், உயிர் இந்த உடலை விட்டு போனவுடன் இந்த உடலை எவ்வளவு வெறுப்பார்கள். "என்ன இன்னும் எடுக்கவில்லையா, ஒரு மாதிரி நாத்தம் வருகிறதே, காலாகாலத்தில் எடுங்கள்" என்று இந்த உடல் இங்கே கிடப்பது கூட குற்றம் என்று கோபித்து பேசுவார்கள்.

அந்த நிலை வரும் முன்னால், இந்த உடலைக் கொண்டு சாதிக்க வேண்டியவற்றை சாதித்துக் கொள்ள வேண்டும்.

நாம் நிரந்தரமாக இங்கே இருக்கப் போவது இல்லை.

அது நமக்கு அடிக்கடி மறந்து போய் விடுகிறது.

நாவுக்கரசர் சொல்கிறார்

துன்பம் தரும் இந்த வாழ்வில் என்ன செய்தீர்கள் ? இடுகாட்டுக்கு இந்த உடல் செல்வது உறுதி. அவன் கை விட்டு விட்டால் இந்த உடலை ஊரார் கோபித்து எடுத்துச் செல்லும்படி சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடும்.

பாடல்


 நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்
              சுடலை சேர்வது சொற்பிர மாணமே
              கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
              உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பொருள் 

நடலை  = துன்பம்
வாழ்வு = நிறைந்த வாழ்கையை
கொண் டென்செய்தீர் = கொண்டு என்ன செய்தீர் ?
நாணிலீர் = வெட்கம் இல்லாதவர்களே
சுடலை = சுடுகாடு
சேர்வது  = சென்று அடைவது
சொற்பிர மாணமே = சத்தியமான சொல்லே
கடலின் = பாற்கடலில்
நஞ்சமு துண்டவர் = தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவர்
கைவிட்டால் = கை விட்டு விட்டால்
உடலி னார் = இந்த உடலை
கிடந் தூர்முனி பண்டமே = ஊரார் கோவிக்கும் நிலையில் இருக்கும் இந்த உடல் .


சிவன் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாக உண்டான். 

என்ன அர்த்தம் ?

அவ்வளவு கொடிய விஷத்தையே அவன் ஏற்றுக் கொண்டான். 

நீங்கள் அவ்வளவு கொடியவர்களா என்ன ?

உங்களையும் ஏற்றுக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்லும் கதை அது. 


திருவாசகம் - உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தேன்

திருவாசகம் - உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தேன்

நம் ஐந்து புலன்களும் நமக்கு இன்பத்தை தருவதாக ஏமாற்றி நம்மைத் துன்பத்தில் தள்ளி  விடுகின்றன.

நல்லா இருக்கும், சாப்பிடு சாப்பிடு என்று நாக்கு தூண்டி, முதலில் இன்பம் தருவது போல தந்தாலும் பின்னாளில் சர்கரை வியாதி, உடல் பருமன் என்று ஆயிரம் துன்பத்தில் நம்மை கொண்டு செலுத்தி விடுகின்றன.

இப்படி புலன்கள் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இருந்ததனால் உன்னை மறந்து விட்டேன். அதற்காக என்னை கை விட்டு விடாதே. திரு நீறு பூசி ஒளிவிடும் உடலைக் கொண்டவனே என்று இறைவனை வேண்டுகிறார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற இந்த பதிகம் முழுவதும் நமக்குள் அன்றாடம் நடக்கும் போராட்டங்களை அடிகள் படம் பிடித்து  காட்டுகிறார்.

இந்தப் பாடலில் புலன் இன்பங்களுக்கும், இறைவனை நாடும் நோக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார்.

பாடல்

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே
ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.

பொருள் 

மாறுபட்டு = என்னில் இருந்து மாறுபட்டு

அஞ்சு = ஏன் ஐந்து புலன்களும்

என்னை வஞ்சிப்ப = என்னை வஞ்சனையைச் செய்ய. நல்லது செய்வதாக தொடங்கி தீயதில் தள்ளி விடும் புலன்கள்.  "மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய" என்பார் அடிகள் சிவபுராணத்தில்

யான்  = நான்

உன் மணி மலர்த் தாள் = உன் மலர் போன்ற திருவடிகளை

வேறுபட்டேனை  = விட்டு வேறுபட்டு நின்றேன்

விடுதி கண்டாய்? = என்னை கை விட்டு விடாதே. புலன் இன்பங்களும் வேண்டும், இறைவன் அருளும் வேண்டும். அல்லாடுகிறார் அடிகள். அதையும்  விட முடியவில்லை. இதையும் விட முடியவில்லை.

வினையேன் மனத்தே = வினை உடையவனாகிய என் மனதில்

ஊறும் மட்டே = ஊற்றாக பொங்கி வரும் தேனே. (மட்டு = தேன் ). இறைவனை நினைத்தால் உள்ளத்தில் உவகைத் தேன் ஊற்றெடுத்து பெருக வேண்டும். பெருகும்.

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

நீறு பட்டே = திரு நீறு அணிந்து

ஒளி காட்டும் = ஒளி விடும்

பொன் மேனி நெடுந்தகையே = பொன்னை போன்ற மேனியைக் கொண்ட பெருமை கொண்டவனே



நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவனுக்கே இவ்வுடல் அர்ப்பணம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவனுக்கே இவ்வுடல் அர்ப்பணம் 



ஆண்டாள் தன் காதலைத் தொடர்கிறாள்.

வானத்தில் வாழும் தேவர்களுக்கு என்று வேள்வியில் பெய்த அவிர் பாகத்தை காட்டில் உள்ள நரி உண்பது எவ்வளவு சரியான செயல் இல்லையோ அது போல நாராயணனுக்கு என்று இருக்கும் இந்த உடலை வேறு மானிடர் தொடுவார்கள் என்று பேசப் பட்டால் கூட உயிர் வாழ மாட்டேன், ஏ காமதேவனே என்று காமதேவனிடம் கூறுகிறாள்.

பாடல்

வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து  கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

பொருள்

வானிடை = வானத்தில்
வாழுமவ் = வாழும் அந்த

வானவர்க்கு = தேவர்களுக்கு
மறையவர் = வேதம் ஓதுவோர்
வேள்வியில் = வேள்வியில், யாகத்தில்
வகுத்த அவி = இட்ட அவிர்ப் பாகத்தை

கானிடைத் = காட்டில்

திரிவதோர் = திரியும் ஒரு

நரி புகுந்து = நரி புகுந்து

கடப்பதும்  = காலால் தீண்டுவதும்

மோப்பதும் = மூக்கால் முகர்வதும்

செய்வதொப்ப = செய்வதைப் போன்றது

ஊனிடை = தன் உடம்பில்

யாழிசங் குத்தமர்க்கென்று = ஆழி, சங்கு என்று தரித்த உத்தமர்கு என்று

உன்னித்  = பொங்கி , பூரித்து

தெழுந்தவென் = எழுந்த என்

தட முலைகள் = பெரிய மார்புகள்

மானிட வர்க்கென்று = வேறு மனிதர்களுக்கு என்று

பேச்சுப்படில் = பேசப் பட்டால்

வாழகில் லேன் = வாழ மாட்டேன், உயிரை விட்டு விடுவேன்

கண்டாய் = நீ அறிந்து கொள்

மன்மதனே = மன்மதனே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக் கைகளால் என்னை தீண்டும் வண்ணம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக் கைகளால் என்னை தீண்டும் வண்ணம்


ஆண்டாளுக்கு கண்ணன் மேல் அவ்வளவு காதல்.

காதல் என்றால் அப்படி இப்படி இல்லை.

பெண்களுக்கு இயல்பாகவே நாணம் மிகுந்து இருக்கும். மனதில் உள்ளதை அவ்வளவு எளிதில் சொல்ல மாட்டார்கள். வெட்கம். நாணம்.

அதையும் மீறி, தங்கள்  காதலர்களிடம்,கணவனிடம் கொஞ்சம் கொஞ்சம்  சொல்வார்கள். மற்றவற்றை அவர்களே கண்டு பிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவார்கள்.

ஆனால், ஆண்டாள் அதை எல்லாம் பார்க்கவில்லை. அவள் காதலில் அவள் உண்டு, அவன் உண்டு. வேறு யாரைப் பற்றியும் அவளுக்கு  .கவலை இல்லை.

தன் காதலை தேன் தமிழில் வடிக்கிறாள். கால காலத்திற்கும் அவள் காதலை பறை சாற்றிக் கொண்டிருக்கும் அவைகள்.

முதலில், தன் காதல் கை கூட காதல் கடவுளான மன்மதனை வேண்டுகிறாள்.

"மன்மதனே, உனக்கு காய் கறி , கரும்பு, நெல் எதை எல்லாம் படைத்து, உன்னை வணங்குகிறேன். உலகளந்த திரிவிக்கிரமன் என் வயிற்றையும், என் மென்மையான மார்புகளையும் தீண்டும் வரம் தருவாய்"

பாடல்



காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே



பொருள்

காயுடை = காய் கறிகள் 
நெல்லொடு = நெல்லும்
கரும்பமைத்துக் = கரும்பும் சேர்த்து
கட்டி யரிசி யவலமைத்து = கட்டி அரிசி, அவல் இவற்றைச் சேர்த்து
வாயுடை = நல்ல சொற்களை உடைய
மறையவர் = வேதம் ஓதுபவர்கள்
மந்திரத்தால் = சொன்ன மந்திரங்களால்
மன்மதனே = மன்மதனே
உன்னை வணங்குகின்றேன் = உன்னை வணங்குகின்றேன்
தேய = தேசத்தில். இந்த உலகில்
முன் னளந்தவன் = முன்னொரு காலத்தில் அளந்தவன்
திரி விக்கிரமன் = திருவிக்கிரமன்
திருக் கைகளாலென்னைத் = திரு கைகளால் என்னை
தீண்டும்வண்ணம் = தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் = ஒளி பொருந்திய என் வயிற்றையும்
மென் = மென்மையான
தட = பெரிய
முலையும் = மார்புகளையும்
தரணியில் = உலகில்
தலைப்புகழ் = சிறந்த புகழ்
தரக்கிற்றியே = தந்தருள்வாயாக

அவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள் - பயம் போயிற்று. வெட்கம் போயிற்று. அவனே எல்லாம் என்று ஆனாள்.

ஒரு பெண் எல்லோரும் அறிய தன் காதலை, அதனால் வரும் ஆசைகளை வாய் விட்டுச்  சொல்வதென்றால் அவனை எந்த அளவுக்கு அவள் நேசித்திருக்க  வேண்டும் ?

திருவாசகம் - மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்

திருவாசகம் - மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்


சந்தேகம். பயம். ஆசை.

சந்தேகம் மனிதனை விடுவதே இல்லை. எது கிடைத்தாலும், இது அதுதானா, , இதையா நாம் தேடினோம், இதற்க்கா இந்த அலைச்சல்  என்ற சந்தேகம் எழுகிறது. நம்பிக்கையே கிடையாது. 

கிடைத்தது போய் விடுமோ ? இது நிலைக்காதோ ? யாரவது பறித்துக் கொண்டு போய் விடுவார்களோ ? என்ற பயம்.

இதை விட சிறப்பாக என்ன இருக்கும் ? அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும், எல்லாம் வேண்டும் என்று ஆசை , பேராசை.

இது சாதாரண பொருள்கள் , மனிதர்கள், அவர்களின் உறவுகள் இருந்து மட்டும் வருவது இல்லை....இறை அருள் கிடைத்தால் கூட இந்த பயமும், சந்தேகமும், ஆசையும் மனிதனை விடுவதில்லை.

மாணிக்க வாசகர் சொல்கிறார்.....

"உன் திருவடிகளை அடைந்த பின்னும், என் உடல் பொருள் ஆவி எல்லாம் உனக்காக தந்த பின்னும் நான் மெலிந்து கொண்டே இருக்கிறேன். அதற்காக என்னை கை விட்டு விடாதே. திரி புரங்களை எரித்தவன் நீ...."


பாடல்

பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே.

பொருள் 

பொலிகின்ற = ஒளிவிடும்

நின் தாள் =உன் திருவடிகளை

புகுதப்பெற்று = அடைந்த பின்னும்

ஆக்கையைப் போக்கப் பெற்று = உடல் என்பதே இல்லை என்ற ஆனா பின்

மெலிகின்ற என்னை = இன்னும் மெலிகின்ற என்னை. மெலிவு ஏன்? இது நிலைக்குமோ என்ற சந்தேகம், பயம் போன்ற உணர்வுகளால் மெலிந்து.  இறை அருளே ஆனாலும், வெளியில் இருந்து வரும் எதுவும் மனிதனை இட்டு நிரப்ப முடியாதுதான் போலிருக்கிறது.

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

அளி = வண்டு

தேர்= தேர்ந்து , ஆராய்ந்து

விளரி = ஒரு வித இசை

ஒலி நின்ற = இசை நிறைந்த

பூம் பொழில் = பூஞ்சோலைகள் உள்ள

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

வலி நின்ற = வலிமை நிறைந்த

திண் = திண்மையான

சிலையால் = வில்லால்

எரித்தாய் = அழித்தாய்

புரம் = திரி புரங்களை

மாறுபட்டே = மாறுபாடு கொண்டு, பகை கொண்டு


Wednesday, February 5, 2014

திருவாசகம் - பொறுப்பர் அன்றே பெரியோர்

திருவாசகம் - பொறுப்பர் அன்றே பெரியோர் 


சிலருக்கு நல்லது செய்தால் கூட அது நல்லது என்று தெரியாமல் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்கள்.

மருத்துவர் சொல்கிறார் ...உடற்பயிற்சி செய்யுங்கள், இனிப்பைத்  .தவிருங்கள் என்று. கேட்கிறோமா?

இல்லாத நோயெல்லாம் வாங்கிக் கொள்கிறோம்.

அதே போல, இறைவன் அருளை அள்ளித் அள்ளித் தருகிறான். அது வேண்டாம் என்று மறுத்து கண்டதன் பின்னே போகிறோம்.

நான் அப்படியே போனாலும், என்னை கை விட்டு விடாதே என்று இறைவனிடம்  கெஞ்சுகிறார்.

தவறு செய்வது மனித இயல்பு. அதற்காக என்னை வெறுத்து விட்டு விடாதே. சிறியவர்கள் செய்த பிழை என்றாலும் பெரியவர்கள் பொறுப்பது இல்லையா.

மணிவாசகர் தன்னை நாய் என்று பல இடத்தில் தாழ்த்திச் சொல்லுவார்.

ஏன் நாய் என்று சொல்ல வேண்டும் ? வேறு ஏதாவது விலங்கை சொல்லலாமே ?

நாயிடம் ஒரு குணம் உண்டு.

வீட்டில் நன்றாக வளர்ப்பார்கள். அதை குளிப்பாட்டி, மருந்து பௌடர் போட்டு, வேளா வேளைக்கு உணவு தந்து பராமரிப்பார்கள். வீட்டில் யாரும் இல்லை என்றால், வெளியில் போய் வேறு எதையாவது தின்று விட்டு வரும்.

கெட்டதின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு.

சட்டம், போலீஸ், நீதி மன்றம் என்று இல்லா விட்டால் நாமும் அப்படித்தான்  இருப்போம்.

நல்லதைத் தந்தாலும் அதை விட்டு விட்டு கெட்டதின் பின் போகும் புத்தி நாய் புத்தி.

பாடல்

மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே;
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி
ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

பொருள் 

மறுத்தனன் யான் =வேண்டாம் என்று மறுத்தேன் யான்

உன் அருள் அறியாமையின் = உன்  அருளின் மகிமையை அறியாமல்

என் மணியே = என் கண்ணின் மணி போன்றவனே

வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? = அதற்காக என்னை வெறுத்து விட்டு விடாதே

வினையின் தொகுதி = வினையின் மொத்த தொகுதிகளை . இந்தப் பிறவி மட்டும் அல்ல, முன் எத்தனையோ பிறவிகளில் செய்த வினைகளின் தொகுதி

ஒறுத்து = அறுத்து

எனை ஆண்டுகொள் = என்னை ஆண்டுகொள்

உத்தரகோசமங்கைக்கு அரசே =  உத்தரகோசமங்கைக்கு அரசே

பொறுப்பர் அன்றே பெரியோர = பெரியவர்கள் பொறுப்பார்கள் அல்லவா

சிறு நாய்கள் தம் பொய்யினையே? = சிறு நாய்கள் செய்யும் பிழைகளை