Saturday, February 22, 2014

குறுந்தொகை - சொல்லோ, பிறவாயினவே

குறுந்தொகை - சொல்லோ, பிறவாயினவே 




பெண்ணுக்கு காதல் சங்க காலம் தொட்டு இன்று வரை சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

குறுந்தொகைப் பெண்ணின் மனம் படும் பாட்டை இந்த பாடல் விளக்குகிறது.

காதலன் போய் விட்டான். என்ன ஆனான் என்று தெரியவில்லை.

 ஏதோ சொல்லிவிட்டு போய் இருக்கிறான். அந்த சொல்லை அவன்  காக்கவில்லை.

அது என்ன சொல் என்று பாடல் சொல்ல வில்லை. நம் கற்பனைக்கு விட்டு விடுகிறது.

ஒரு வேளை "ஒரு மாதத்தில் வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பானோ ?"

தெரியாது.அப்படி எதுவாவது இருக்கலாம்.

அவள், தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

"என் உடல் வருத்தத்தில் மெலிகிறது. என் வளையல்கள் நெகிழ்ந்து விழுகின்றன. இந்த நோய் என் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தால் நான் எப்படி உயிர் வாழ்வேன். இந்த நண்டுகளைப் பார். இங்கு விளையாடும் பெண்கள் அதைப் பிடித்து விளையாட நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயந்து அது கடலை நோக்கி ஓடுகிறது. நல்ல வேளை , கடல் அந்த நண்டை தனக்குள் இழுத்துக் கொண்டு அதன் துயர் தீர்க்கிறது. அவனோ சொன்ன சொல் மாறி விட்டது"



ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்      
நோய்மலி வருத்த மன்னை யறியின்  
உளெனோ வாழி தோழி விளியா  
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை  
ஓரை மகளி ரோராங் காட்ட  
ஆய்ந்த வலவன் றுன்புறு துனைபரி  
ஓங்குவரல் விரிதிரை களையும்  
துறைவன் சொல்லோ பிறவா யினவே. 

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை 




தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.

எல்லோரும் அறிந்த குறள் தான். தெய்வத்தை வணங்க மாட்டாள். கொண்ட கணவனை வணங்கி எழுவாள். அவள், பெய் என்றால் மழை பெய்யும். 

வள்ளுவர் இவ்வளவு சாதரணமாக ஒரு குறளை எழுத மாட்டாரே. இதில் ஆழமான அர்த்தம் எதுவும் இருக்குமா ?

தொழுது எழுவாள் - அது எப்படி முடியும் ? எழுந்து தொழுவாள் என்று தானே இருக்க வேண்டும். தூக்கத்தில் இருந்து எழுந்து, பின் தொழ முடியும். தொழுதுகொண்டே எப்படி எழ முடியும்? 

ஒரு செயலை நாம் நம் உடலுக்கு வழக்கப் படுத்தி விட்டால் பின் அது நாம் நினைக்காமலேயே, சொல்லாமலேயே செய்து விடும். 

சுந்தர மூர்த்தி நாயனார் தன் நாவுக்கு நமச்சிவாய என்ற மந்திரத்தை பழக்கப் படுத்தி  வைத்தார்.

"சொல்லு நா நமச்சிவாயவே"

நான் மறந்தால் கூட என் நாக்கு மறக்காதுஎன்றார் 

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.



நான் மறந்தாலும் என் நா மறக்காது  என்கிறார்.

அது போல் அவளுக்கு அவன் மேல் அவ்வளவு மதிப்பு, மரியாதை. அந்த மதிப்பும் மரியாதையும்  அவனைக் கண்டபோது மட்டும் அல்ல, காணாத போதும்   அது இருக்கும். தூக்கத்தில் கூட அந்த மரியாதை இருக்கும். எனவே, துயில்  எழும் போதே வணங்கி எழுவாளாம். தொழுது எழுவாள். 

தெய்வத்தை தொழ மாட்டாள் ஆனால் கணவனை தொழுது எழுவாள் என்றால் அவ்வளவு சரியாக இல்லையே. கடவுளை விட மனிதன் உயர்வா ? வள்ளுவர் அப்படி எழுதுவாரா ?

பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்...

தெய்வந் தொழுதற்கு மனந் தெளிவது துயிலெழுங் காலத்தாகலின் 'தொழுதெழுவா' ளென்றார். 

தெய்வத்தை தொழுவதற்கு மனம் தெளிவாக இருக்க வேண்டும். தூங்கி எழும் காலத்தில் அவ்வளவு தெளிவு இருக்காது. எனவே முதலில் கணவனை தொழுது எழுந்து , பின் நீராடி, பூஜை செய்து கடவுளை பின் தொழுவாள் என்று அர்த்தம். 

பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை எவ்வளவு இனிமையானது ? நமக்கு  வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவு வேண்டிய இடத்தில் பெய்யும் மழை எவ்வளவு சுகமானது ?

கணவனை தொழுது எழும் பெண் அப்படிப் பட்ட மழைப் போன்றவள். 

வெள்ளமாக வந்து ஊரைக்  கெடுக்காது.

காலத்தில் வரமால் இருந்து பயிரைக் கருக்காது. 

பெய் என்று சொன்னால் பெய்யும் மழை போன்றவள் அந்தப் பெண்.



நீத்தல் விண்ணப்பம் - உடம்பையும், எலும்பையும் உருக்கி

நீத்தல் விண்ணப்பம் - உடம்பையும், எலும்பையும் உருக்கி 




இரண்டு யானைகள் சண்டை போடுகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த சண்டையில் அங்கு இருக்கும் சின்ன சின்ன செடிகள் என்ன ஆகும் ?

இரண்டு அல்ல, ஐந்து யானைகள் சண்டை போடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் சின்ன செடிகளின் நிலை என்ன ஆகும் ?

அது போல இந்த ஐந்து புலன்களும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் அகப்பட்ட குறுஞ் செடிகளாக நாம் கிடந்து அல்லல் படுகிறோம்.

ஒன்று நல்ல ருசியான உணவு வேண்டும் என்கிறது.
ஒன்று உடை வேண்டும், இசை வேண்டும், வீடு வாசல் வேண்டும், உடல் சுகம் வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று நம்மை பாடாய் படுத்துகிறது. அவைகளுக்கு தீனி போட நாம் கிடந்து அழைக்கிறோம்.


அப்படி கிடந்து அல்லல் படும் என்னை கை விட்டு விடாதே. என் மனதினில் இன்பத்தை வார்த்தவனே, என் உடலையும், எலும்பையும் உருக்கியவனே என்று உருகுகிறார்  மணிவாசகர்.

பாடல்

ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத்
தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து,
ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.


பொருள் 

ஆனை = யானைகள்

வெம் போரில் = ஈடுபட்ட பெரிய கொடிய போரில்

குறும் தூறு = குற்றுச் செடிகள்

எனப்  = என

புலனால் = புலன்களால்

அலைப்பு உண்டேனை = அலைக்கழிக்கப் பட்ட என்னை

எந்தாய் = என் தந்தையே

விட்டிடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வினையேன் மனத்துத் = வினை உள்ள என் மனதில்

தேனையும் = தேனையும்

பாலையும் = பாலையும்

கன்னலையும் = கரும்பின் சாற்றையும்

அமுதத்தையும்  ஒத்து  = அமுதம் போல சேர்த்து

ஊனையும் = ஏன் உடலையும்

என்பினையும் = எலும்பையும்

 உருக்காநின்ற = உருக்கி நின்ற

ஒண்மையனே = ஒளி மயமானவனே


இறைவனை தனிமையில் சிந்தித்தால் இனிமை வரும். அந்த இனிப்புக்கு முன்னால் மற்ற இனிப்புகள் எல்லாம் கசந்து போகும்.

"....மெய் அன்பினால் மெள்ள மெள்ள உள்ள...கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து  அறக்கைத்ததுவே" என்பார் அருணகிரிநாதர்.



Friday, February 21, 2014

நீத்தல் விண்ணப்பம் - கொம்பர் இல்லா கொடி போல்

நீத்தல் விண்ணப்பம் - கொம்பர் இல்லா கொடி போல் 


 

நமக்குத் துணை யார் ?

முதலில் பெற்றோரை பற்றி இருக்கிறோம். பின் உடன் பிறப்புகள், நண்பர்கள், துணைவன்/துணைவி, பிள்ளைகள் என்று இது விரிந்து கொண்டே போகிறது.

இவர்கள் எல்லாம் நமக்கு சிறந்த பற்றுகோல்களா ? இல்லை.

அவர்களே நமக்குத் துணையாவார் யார் என்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆகாய விமானத்தில் இருந்து தவறி விழுந்தவன் , அவன் கூடவே விழுந்த ஒரு காகிதத்தை துணைக்கு பற்றிக் கொண்ட மாதிரி.


 ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே 
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே! 

என்பார் பட்டினத்தார்.

எது நிரந்தரமோ அதை பற்றிக் கொள்ள வேண்டும்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்பது அபிராமி பட்டர் வாக்கு.  அபிராமியை துணையாகக் கொண்டார் பட்டர்.


ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

உன் அருளைப் பெற ஒரு ஆதாரமும் இல்லாமல் தவிக்கிறேன் என்றார் அருணகிரி.


பற்றிப் படர ஒரு கொழு கொம்பு இல்லா கொடி போலத் தவிக்கிறேன். என்னை கை விட்டு  விடாதே. விண்ணவர்களும் அறியாத நீ, பஞ்ச பூதங்களும் ஆனவன் நீ என்று உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை.

பாடல்

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.

பொருள் 

கொம்பர் = பற்றி படர ஒரு கொம்பு

இல்லாக் கொடிபோல் = இல்லாத ஒரு கொடி போல

அலமந்தனன் = வழி தெரியாமல் அலைந்தேன்

 கோமளமே = இளமையானவனே

வெம்புகின்றேனை = வெம்புகின்ற என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

விண்ணவர் = தேவர்களும்

நண்ணுகில்லா = அணுக முடியாத இடத்தில்

உம்பர் = உயர்ந்த இடத்தில்
உள்ளாய் = உள்ளாய்

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

அம்பரமே = வானே

நிலனே = நிலமே

அனல் = தீயே

காலொடு = காற்றே

அப்பு = நீரே

ஆனவனே = ஆனவனே


Thursday, February 20, 2014

திருக்குறள் - நாணும் மறந்தேன்

திருக்குறள் - நாணும் மறந்தேன் 


பெண்ணின் மனதை, அவளின் காதலை, அவளின் நாணத்தை வள்ளுவரை போல இன்னொரு கவிஞரால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

வள்ளுவர் குறள் ஒரு பக்கம் என்றால் பரிமேல் அழகரின் உரை இன்னொரு பக்கம்  மெருகூட்டுகிறது.

அவளும் எவ்வளவு நாள் தான் மறைத்து மறைத்து வைப்பாள் தன் காதலை. நாளும் நாளும் அது மனதில் பெருக்கிக் கொண்டே வருகிறது. அவள் தான் என்ன செய்வாள் பாவம். தன் தோழியிடம் தன் காதலைச் சொல்லுகிறாள். வெட்கம் தான், நாணம் தான், என்ன செய்ய. சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. பாழாய்ப்போன இந்த மனம் படுத்தும் பாடு.

நாணத்தையும் மறந்து விட்டேன். அவரை மறக்க முடியாத இந்த மட நெஞ்சினால் என்று வெட்கப் படுகிறாள்.


பாடல்


நாணும் மறந்தேன்-அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு.

பொருள்

நாணும் மறந்தேன் = நாணத்தை மறந்தேன் என்று சொல்லவில்லை. நாணத்தை"யும்" மறந்தேன் என்கிறாள். அப்படியென்றால் நாணத்தோடு கூட அச்சம், மடம் , பயிர்ப்பு என்ற பெண்மைக்கே உரிய குணங்களையும் மறந்தேன் என்று பொருள். 

அவர் மறக்கல்லா = அவரை மறக்க முடியாத 

என் = என்னுடைய

மாணா = மாட்சிமை இல்லாத

மட நெஞ்சின் பட்டு = மட நெஞ்சோடு சேர்ந்து.

இந்த பாடலுக்கு பரிமேல் அழகரின் உரை இதன் சிறப்பை எங்கோ கொண்டு செல்லுகிறது.

பரிமேல் அழகரின் உரை சற்று கடினமானது. கொஞ்சம் எளிமை படுத்தி  தருகிறேன்.

நாணம் என்றால் என்ன ?  வெட்கம்.

வெட்கம் என்றால் ?

முதன் முதலில் ஒரு பெண், தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆணோடு பேசும்போது ,  பழகும் போது உண்டாகும் ஒரு வித கூச்சம் கலந்த பயம் என்று  சொல்லலாம். ஆனால் அது நாள் ஆக நாள் ஆக குறைய வேண்டும் அல்லவா ? அதுதான் இல்லை என்கிறார் பரிமேல் அழகர். ஒவ்வொரு முறை பழகும் போதும்  அந்த உணர்ச்சி இருந்து கொண்டே  இருக்குமாம்.


பரிமேல் அழகரின் உரை

நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல்,

எவ்வளவு நாள் கூடி வாழ்ந்தாலும், ஏதோ அன்றைக்குத் தான் முதன் முதலாக பார்ப்பவர் போல புலன்களை ஒடுக்கி இருத்தல் என்கிறார்.  அடக்கம்.கூச்சம். பயம். என்ற அனைத்தின் கலவை இந்த நாணம்.



மடமை என்றால் ஏதோ முட்டாள் தனம் என்று நினைத்துக்  கொண்டிருக்கிறோம்.பெண்களுக்கு இயல்பாகவே கொஞ்சம் மடத்தனம் இருக்கும் என்று ஒரு நினைப்பு  நமக்கு.

பரிமேல் அழகர் அதற்கு விளக்கம்  தருகிறார்.

மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல்.

புரிகிறதா ? கொஞ்சம் அடர்த்தியான வாக்கியம்.

எளிமைப் படுத்துவோம்.

பெண்கள், தங்கள்  காதலனோ,கணவனோ இல்லாத போது  அல்லது வரத் தாமதம் ஆனால் அவர்களையே நினைத்துக்  கொண்டிருப்பார்கள்.என்ன இன்னும் காணமே, இப்ப வர்ற நேரம்  தானே, ஒரு வேளை ஏதாவது பிரச்சனையா , அவருக்கு ஆபத்தா என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்  அவர்களுக்கு. வரட்டும் , இன்னைக்கு பேசிக்கிறேன் என்று கொப்பிப்பார்கல்.

அந்த கணவனோ, காதலனோ வந்து விட்டால் பின் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் சிறிது நேரத்தில்.


கண்டவழி நினைந்து = பார்க்கும் போது நினைத்து

காணாதவழி மறக்குந் = பார்க்காத போது மறக்கும் 

தவற்றைக் = அந்தத் தவற்றை

காணாவழி நினைந்து  = காணாத போது நினைத்து

கண்டவழி மறத்தல் =   காண்கின்ற போது  மறந்து விடுவார்கள்.

எழுதும் போது கோல் காணாக் கண் போல் என்பார் வள்ளுவர் மற்றொரு இடத்தில்



இதைப் படிக்கும் ஆண்களுக்கு, இன்னும் அர்த்தம் புரியவில்லை என்றால் உங்கள்   ,காதலியிடமோ, மனைவியிடமோ இதை வாசித்துக் காட்டி சரிதானா என்று  கேளுங்கள். அவர்களின் உதட்டோரம் மலரும் ஒரு புன்னகை, இது சரிதான் என்பதற்கு ஒரு அத்தாட்சி முத்திரை.




நீத்தல் விண்ணப்பம் - வினைக் காட்டை எரிக்க

நீத்தல் விண்ணப்பம் - வினைக் காட்டை எரிக்க 




நம் வினைகளை நாம் தான் செய்கிறோம். நாமே செய்வதில்லை. தூண்டப் பட்டு செய்கிறோம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள், சமுதாயம், நம் துணைவன்/துணைவி என்று ஆயிரம் பேரால் தூண்டப் பட்டு வினைகளை செய்கிறோம்.

பல வினைகள் ஆராய்ந்து  .இல்லை. அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு ஏதேதோ செய்து கொண்டு போகிறோம்.

நம் வினைகள் தோட்டம் போல அல்ல, காடு போல வளர்ந்து கிடக்கின்றன. இந்த காட்டை வெட்டி சீர் படுத்த முடியாது. இதை மாற்ற வேண்டும் என்றால் மொத்தமாக கொளுத்த வேண்டும். எரிந்து கரிந்து சாம்பல் ஆன பின், முதலில் இருந்து சரியாக தோட்டம் வளர்க்கலாம்.

இவ்வளவு பெரிய காட்டை எப்படி எரிப்பது. என்னால் ஆகாத காரியம். இறைவா, நீயே என் வல் வினைக் காட்டை எரித்து விடு. உன்னால் முடியாதது எதுவும் இல்லை. கஜமுகாசுரன் என்ற கொடிய யானையை கொன்று அதன் தோலை உரித்து போர்த்துக் கொண்டவன் ஆயிற்றே நீ. உன்னால் முடியாதா ?

என்கிறார் மணிவாசகர்....

பாடல்


மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க, என்தன்னை விடுதி கண்டாய்?என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே


பொருள் 


மடங்க = அழிந்து போக 

என் வல் வினைக் காட்டை = என்னுடைய வினையான காட்டினை 

நின் = உன்னுடைய 

மன் = நிலைத்த 

அருள் தீக் கொளுவும் = அருளினால் தீயிட்டு கொளுத்தவும் 

விடங்க = வீரம் உள்ளவனே 

என்தன்னை = என்னை 

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே 

என் பிறவியை = என் பிறவியை 

வேரொடும் களைந்து = வேரோடு களைந்து. அதாவது மீண்டும் முளைக்காமல்  

ஆண்டுகொள் = என்னை ஆட்கொள் 

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

கொடும்  = கொடுமையான 

கரிக்குன்று = கருமையான குன்றைப் போல் இருக்கும் யானையை 

உரித்து = அதன் தோலை உரித்து 

அஞ்சுவித்தாய் = அச்சத்தை அவித்தாய் 

வஞ்சிக் கொம்பினையே = வஞ்சிக் கொடி  போன்ற உமை அம்மையின்

 

Wednesday, February 19, 2014

நாலடியார் - பேரும் பிறிதாகி தீர்த்தமாம்

நாலடியார் - பேரும் பிறிதாகி தீர்த்தமாம் 


ஊருக்குள் சாக்கடை இருக்கும். கழிவு நீர் எல்லாம் அதன் வழியாகச் செல்லும். கிட்ட போக  முடியாது.துர் நாற்றம்  வீசும்.

அந்த சாக்கடை சென்று கங்கையில் கலக்கும். பின் அந்த கங்கை கடலில் சேரும்.

அப்படி கங்கையில் சேர்ந்த பின் , கடலில் சேர்ந்த பின் அது தீர்த்தம் என்றே அறியப்படும். கங்கை எது, கடல் எது, சாக்கடை எது என்று தெரியாது.

அது போல , நாம் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் நல்லவர்களோடு சேரும் போது , அவர்களோடு பழகும் போது நம் குறைகள் மறைந்து நாமும் தீர்த்தமாவோம்.

அவர்கள் சொல்வது நம் காதில் விழும். அவர்கள் செய்யும் செயல்கள் நம்மையும் அவர்கள் போல இருக்கத் தூண்டும். அல்லவை விலகி நல்லவை வந்து சேரும்.

எனவே நல்லவர்கள் மத்தியில் இருக்க வேண்டும்.

பாடல்


ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓரும்
குல மாட்சியில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து.

பொருள் 

ஊரங்கணநீர் = ஊர் + அங்கண + நீர் = அங்கணம் என்றால் கழிவு, சுத்தம் செய்யும் இடம். அப்படி வரும் கழிவு நீர்

உரவு நீர் = வலிமையான நீர். கடல் என்று கொள்ளலாம். அல்லது கங்கை போன்ற பாவம் தீர்க்கும் நீர் என்றும் கொள்ளலாம்.

சேர்ந்தக்கால் = சேர்ந்த பின்

பேரும் பிறிதாகித் = சாக்கடை என்ற பேர் மாறி 

தீர்த்தமாம் = தீர்த்தம் என்று அறியப்படும் 

ஓரும் = மதிக்கத்தக்க 

குல மாட்சியில்லாரும் = குல மாட்சி இல்லாரும். குலப் பெருமை இல்லாதவர்களும்

குன்றுபோல் நிற்பர் = குன்றைப் போல உயர்ந்து நிற்பார்கள். உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக உயர்ந்து நிற்பார்கள். 

நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து = நல்ல குணம் உள்ள நல்லவர்களை சார்ந்து இருக்கும்போது

சாக்கடை தீர்த்தம் ஆகும் என்றால், நாம் நல்லவர்களாக மாட்டோமா ?

உங்களைச் சுற்றி உள்ளவர்கள், நீங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று ஒரு முறை  நினைத்துப் பாருங்கள்.