Friday, July 11, 2014

இராமாயணம் - மூலமே இல்லாத முதல்வன்

இராமாயணம் - மூலமே இல்லாத முதல்வன் 


எல்லாவற்றிர்க்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி என்றால் இறைவனுக்கும் ஒரு தொடக்கம் மற்றும் ஒரு முடிவு இருக்க வேண்டும் அல்லவா ?

கவந்தன் சிந்திக்கிறான்.

அவனுக்குள் சில கேள்விகள்.

நீ மூலமே இல்லாத முதல்வன். அனைத்திற்கும் முதல்வன் நீ. இந்த உலகம் நீ பல விதங்களில் முயன்று பார்க்கும் கோலோமோ ? இந்த உலகம் முழுவதும் இறைவனின் பல வித கோலங்கள். அப்படி என்றால் கடவுள் ஏன் இப்படி பல உருவங்கள் எடுத்து முயல வேண்டும்.

கடவுள் ஏன் அவற்றைச் செய்கிறான் என்பது யாராலும் அறிந்து கொள்ள முடியாத ஒன்று.

சரி, இந்த உலகம் தோன்றுவதற்கு முன் தோன்றினான் கடவுள். இந்த உலகம் அழியும் போது அவனும் அழிவானா ? அவன் நிலை என்ன ?

 ஊழிக் காலத்தில் இந்த உலகம் அனைத்தும் நீரால் சூழப் படும்போது, தனித்து நிற்கும் அந்த ஆல மரமோ, அல்லது அந்த மரத்தின் ஒரு இலையோ, இல்லை அதில் துயிலும் பாலகனோ, அந்த கடலே நீதானோ ? என்று இறைவனின் முடிவும் பற்றி  நம்மால் அறிய முடியாது  என்கிறான்.

அவன் மூலம். மூலம் இல்லாத மூலம். அவன் நமக்கு முந்தியவன் என்பதால் அவன் மூலத்தை நாம் அறிய முடியாது.

அடுத்து, அவன் பல விதங்களில் வெளிப்படுகிறான். அவன் எண்ணங்களை நாம் அறிய முடியாது.

ஊழிக் காலத்தில் அவன் என்ன ஆவான் என்று நாம் அறிய முடியாது.

இறைவனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியாது.  அது நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல்  சொல்கிறான்.


பாடல்

'மூலமே இல்லா முதல்வனே! 
     நீ முயலும் 
கோலமோ, யார்க்கும் தெரிவு 
     அரிய கொள்கையவால்; 
ஆலமோ? ஆலின் அடையோ? 
     அடைக் கிடந்த 
பாலனோ? வேலைப் 
     பரப்போ? பகராயே!


பொருள் 

'மூலமே இல்லா முதல்வனே! = மூலம் இல்லாத முதல்வனே 

நீ முயலும் கோலமோ = நீ முயன்று செய்யும் பல்வேறு கோலங்கள் இந்த உலகே

யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால் = யாரும் அறிந்து கொள்ள முடியாத கொள்கையால் நீ இவற்றை செய்கிறாய்

ஆலமோ? = ஊழிக் கால கடலோ

ஆலின் அடையோ?  = ஆல மரத்தின் இலையோ

அடைக் கிடந்த பாலனோ? = அதில் கிடைந்த சிறு பாலகன் நீதானோ ?

வேலைப் பரப்போ? = ஒரு வேளை அந்த கடலோ நீ தானோ ?

பகராயே! = நீயே சொல்


கேள்விக் குறிகளாய் போட்டு அடுக்குகிறான். சந்தேகம் சந்தேகம். கந்தர்வனான அவனுக்கே சந்தேகம். 

இறை என்பது அறிய வேண்டிய ஒன்றல்ல போலிருக்கிறது. 

அது அறிய முடியாத ஒன்று. அறிவின் துணை கொண்டு அறிந்தே தீருவேன் என்று முனைவது வியர்த்தம். 



Thursday, July 10, 2014

இராமாயணம் - மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ

இராமாயணம் - மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ 


சாபம் தீரப் பெற்ற கவந்தன் இராமனின் பெருமைகளைச் சொல்கிறான்.

இறை சக்தியின் மூலத்தை பற்றி மிக உயர்ந்த கருத்துகளை கவந்தன் வாயிலாக கம்பர் எடுத்து உரைக்கிறார்.

அனைத்து பொருள்களையும் தோற்றுவித்தவன் நீ தானோ ? எல்லை அற்ற அறத்தின் சான்றாக இருப்பவன் நீ தானோ ? தேவர்கள் செய்த தவத்தின் பயனோ ? மூன்று கிளைகளாக பிரிந்த மூல மரமோ ? என்னுடைய சாபத்தை துடைத்தவன் நீ தானா ?

என்று இராமனை துதிக்கிறான்

பாடல்

“ஈன்றவனோ எப்பொருளும்?
    எல்லைதீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர்
    தவத்தின் தனிப்பயனோ?
மூன்று கவடாய்
    முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அருவினையேன்
    சாபத் துயர் துடைத்தாய்! ‘‘


பொருள்

“ஈன்றவனோ எப்பொருளும்? = அனைத்து பொருளையும் தோற்றுவித்தவன் நீ தானோ ?


எல்லைதீர் நல் அறத்தின் சான்றவனோ? = எல்லை அற்ற அறத்தின் சான்றாக இருப்பவன் நீ தானோ ? அறத்திற்கு எல்லை இல்லை. எங்கும் நிறைந்து இருப்பது அறம். அனைத்து காலத்திலும் நிரந்தரமாக இருப்பது அறம் . வள்ளுவனும், கம்பனும் பிறப்பதற்கு முன்னும் அறம் என்பது  இருந்தது. இவர்கள் அதை கண்டு சொன்னார்கள்.

நம் தமிழ் இலக்கியம் அறம் அறம் என்று  எப்போதும்  சொல்லிக் கொண்டே  இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் அறம் பற்றி பேசும் நம் இலக்கியம். 


தேவர் தவத்தின் தனிப்பயனோ? = தேவர்கள் செய்த தவத்தின் பயனோ

மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ? = மூன்று கிளையாய் முளைத்து எழுந்த மூலமோ ?  இராமன் என்பவன் திருமாலின் அவதாரம் என்ற நிலை தாண்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவர்க்கும் மூலம் அவன் தான் என்கிறார்.   ஆக்குதல், காத்தல்,அழித்தல்  என்ற மூன்றுக்கும் காரணம் அவன்தான்.

அந்த மூலமான இறைவன் - தவத்தின் பயன், அறத்தின் சான்று. சைவம், வைணவம், என்று வேறுப்பாடு இல்லாமல், அனைத்தையும் தாண்டி நிற்பவன் அந்த இறைவன்.  நம் வசதிக்கு நாம் இறைவனுக்கு பல பெயர்களையும், குணங்களையும்   தருகிறோம்.அவன் அனைத்தையும் கடந்தவன்.

இதை சொல்ல வந்த வில்லி புத்துராழ்வார் ,

  
மேவரு ஞானா னந்த வெள்ளமாய் விதித்தோ னாதி
மூவரு மாகி யந்த மூவர்க்குண் முதல்வ னாகி
யாவரும் யாவு மாகி யிறைஞ்சுவாரிறைஞ்சப் பற்ப
றேவரு மாகி நின்ற செங்கண்மா லெங்கள் கோவே

மூவரும் ஆகி, அந்த மூவர்க்கும் முதல்வனாகி என்று குறிப்பிடுகிறார்.



 தோன்றி = அவ்வாறு தோன்றி

அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய்!  = வினை கொண்ட என் சாபம் தீர்த்தாய்.

செயலுக்கு பலன் உண்டு.

நல்லது செய்தால் நல்லது வரும். அல்லது செய்தால் துன்பம் வரும். வினைக்கு, பதில் வினை உண்டு என்பது விதி.  

அப்படி வினையின் பலனாக வரும் துன்பங்களை வழிபாடு தீர்க்கும், குறைக்கும் என்பது நம் மதங்கள், இலக்கியங்கள் கண்ட முடிவு.

வினையின் பலனாக வரும் சாபத்தை இறை அருள் போக்கும் என்பது  நம்பிக்கை.

வினை ஓட விடும் கதிர் வேல் என்பார் அருணகிரி.

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

இறை அருள் வினையை ஓட விடும்.  சாபம் தீர்க்கும்.

படித்துப் படித்து சொல்கிறது நம் இலக்கியங்கள்.

ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ ?





Wednesday, July 9, 2014

இராமாயணம் - கண்ணில் நின்றவன் இவன்

இராமாயணம் - கண்ணில் நின்றவன் இவன் 


கவந்தனின் இரண்டு தோள்களையும் இராமனும் இலக்குவனும் போரிட்டு வெட்டினார்கள்.

அவன் சாபம் நீங்கி, அரக்க உடலை விட்டு, கந்தர்வ வடிவம் கொண்டு வானில் ஏறி நின்றான்.

பின், இராமனின் பெருமைகளை கூறுகிறான்....

பாடல்

விண்ணில் நின்றவன், 'விரிஞ்சனே 
     முதலினர் யார்க்கும் 
கண்ணில் நின்றவன் இவன்' 
     எனக் கருத்துற உணர்ந்தான்; 
எண் இல் அன்னவன் குணங்களை, 
     வாய் திறந்து, இசைத்தான்; 
புண்ணியம் பயக்கின்றுழி 
     அரியது எப் பொருளே?

பொருள் 

விண்ணில் நின்றவன் = விண்ணில் ஏறி நின்றவன்

விரிஞ்சனே = பிரமன்

முதலினர் யார்க்கும் = முதலிய தேவர்கள் யாவர்க்கும்

கண்ணில் நின்றவன் இவன் = கண்ணில் நின்றவன் இவன்

எனக் கருத்துற உணர்ந்தான் = என் கருத்து மனதில் படும்படி உணர்ந்தான்

எண் இல் அன்னவன் குணங்களை = கணக்கில் அடங்கா குணங்களை

வாய் திறந்து, இசைத்தான் = வாய் திறந்து கூறத் தொடங்கினான்

புண்ணியம் பயக்கின்றுழி = செய்த புண்ணியங்கள் பயன் தரத் தொடங்கிவிட்டால்

அரியது எப் பொருளே? = எது தான் கடினம் ?

ஒருவன் செய்த புண்ணியங்கள்  பலன் தரத் தொடங்கிவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.

புண்ணியம் செய்து கொண்டிருங்கள். அது பலன் தர கொஞ்சம் நாள் ஆகலாம். ஆனால், தரத் தொடங்கிவிட்டால் அதை யாராலும் தடுக்க  முடியாது.

 இனி வரும் பாடல்களில் இராமனின் பெருமைகளை கூறத் ..தொடங்குகிறான்....மிக அருமையானப் பாடல்கள்.

அவற்றைப் பார்ப்போம். 

இராமாயணம் - பெண்ணின் அன்பின் வலிமை

இராமாயணம் - பெண்ணின் அன்பின் வலிமை 


 மனைவியின் பிரிவு ஒரு கணவனை எவ்வளவு பாதிக்கும் என்று கம்பர் இராமன் வாயிலாக காட்டுகிரார்.

இராமனுக்கும் சீதைக்கும் இடையே உள்ள அந்த பாசப் பிணைப்பை படம் பிடிக்கிறார் கவிச் சக்கரவர்த்தி.

இப்படியும் கூட அன்பு செய்ய முடியுமா என்று வியக்க வைக்கும் அன்பு. அப்படி ஒரு அன்பு கிடைக்காதா என்று எங்க வைக்கும் அன்பு.  கணவன் மனைவி என்றால் இப்படி அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தூண்டும் அன்பு.

சீதையை பிரிந்து இராமனும், அவன் கூட இலக்குவனும் சவரி காட்டிய வழியில் ரிஷ்ய முக மலைக்கு செல்கிறார்கள்.

செல்லும் வழியில் கவந்தன் என்ற அரக்கன் வருகிறான். மிக பிரமாண்டமானவன். அவன் கையில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். கை என்றால் ஏதோ நம் மாதிரி அல்ல அவன் கைகள். ஒரு காட்டை அப்படியே கைக்குள்  .கொள்வான்.

அவன் கையில் சிக்கிக் கொண்ட இராமன் சொல்கிறான் இலக்குவனிடம் ..." சீதையை  சென்று கொடுமை செய்யும் இராவணனின் ஊர் இங்குதான் இருக்கிறது போல் இருக்கிறது. விலங்குகள் எல்லாம்  துன்பத்தில் அலறுகின்றன...இராவணனை அழித்து நம் துன்பம் தீர்க்கலாம் "

பாடல்

இளவலை நோக்கினன் 
     இராமன், 'ஏழையை 
உளைவு செய் இராவணன் 
     உறையும் ஊரும், இவ் 
அளவையது ஆகுதல் அறிதி; 
     ஐய! நம் 
கிளர் பெருந் துயரமும் 
     கீண்டது ஆம்' என,

பொருள்


இளவலை நோக்கினன்  = இலக்குவனை நோக்கினான்
இராமன் = இராமன் 
ஏழையை = ஏழையான சீதையை 
உளைவு செய் = துன்பம் செய்யும்
இராவணன்  உறையும் ஊரும் = இராவணன் இருக்கும் இடமும்
இவ்  அளவையது = இதுதான்
ஆகுதல் அறிதி; = ஆகும் என்று அறிந்து கொள்
ஐய! = ஐயனே
நம் = நம்முடைய 
கிளர் பெருந் துயரமும் = கிளர்ந்து எழும் துன்பமும் 
கீண்டது ஆம்' என, = மறைந்தது என்று

போக வேண்டியது ரிஷ்ய முக மலைக்கு. அவர்கள் மலையைப் பார்க்கவே  இல்லை.அதற்குள், இராவணன் இருக்கும் இடம் இதுதான் என்று இராமன்  நினைக்கிறான். அவ்வளவு மனம் குழம்பிக் கிடக்கிறான்.

அது மட்டும் அல்ல

இலக்குவனை - ஐயனே என்று அழைக்கிறான்.

பாவப்பட்ட சீதை என்ற அர்த்தத்தில் "ஏழையை உளைவு செய்"  என்கிறான்.

எதைப் பார்த்தாலும் , சீதை இங்குதான் இருக்கிறாள் என்று நினைக்கிறான்.

பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாரதி உருகியதைப் போல.

அரசு கிடையாது , கானகம் போ என்று சொன்னபோது தடுமாறாமல், அப்போதுதான் மலர்ந்த தாமரையை போல மலர்ந்து இருந்த இராமன், சீதையைப் பிரிந்த  பின் புத்தி தடுமாறுகிறான்.

பெண்ணின் அன்பின் வலிமை அது. வலி அது.

சீதையை அசோக வனத்தில் கண்ட அனுமன் சொல்லுவான் "பித்து நின் பிரிவில்  பிறந்த வேதனை எத்தனை உள அவை இன்னும் ஈட்டவோ " என்று.

இராமன் பித்து பிடித்துவனைப் போல இருந்தான் என்பது அனுமனின்  வாக்குமூலம்.

காதலின் ஆழத்தை பிரிவின் வேதனையின் ஆழத்தை வைத்து  அறியலாம்.

அனுபவித்தவர்களுக்குத் தெரியும். 

Monday, July 7, 2014

கந்த புராணம் - மேன்மை கொள் சைவ நீதி விளங்குக

கந்த புராணம் - மேன்மை கொள் சைவ நீதி விளங்குக 


கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது கந்த புராணம். அதில் வரும் வாழ்த்துப் பாடல் இது.


மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும்.

எவ்வளவு ஒரு உயர்ந்த மனம்.

பாடல்


வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் 
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் 
                                       வாழ்க 
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க 
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

பொருள்


வான் முகில் = வானில் உள்ள மேகங்கள்

வழாது பெய்க = குற்றம் இல்லாமல் பெய்க. அதிகமாகவும் பெய்யக் கூடாது. குறைவாகவும் பெய்யக் கூடாது. காலம் அல்லாத நேரத்தில் பெய்யக் கூடாது. வழுவாமல் பெய்க.

மலிவளம் சுரக்க = மலி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு.

மிகுதல். நிறைதல். நெருங்குதல். புணர்ச்சியின் மகிழ்தல். செருக்குதல். விம்முதல். பரத்தல். விரைதல்.

நிறைய வளங்கள் வேண்டும். அது எல்லோருக்கும் வேண்டும். அதுவும் விரைவாக வேண்டும். மிகுதியாக வேண்டும். வளங்களினால் பெருமை பட வேண்டும்.

மன்னன் கோன் முறை அரசு செய்க = மன்னன் நல்லாட்சி செய்ய வேண்டும். கொடுங்கோலனாக இருக்கக் கூடாது.


குறைவு இலாது உயிர்கள் வாழ்க = அனைத்து உயிர்களும் ஒரு குறைவும் இன்றி வாழ வேண்டும்.

நான் மறை அறங்கள் ஓங்க = நான்கு வேதங்களில் சொல்லப் பட்ட தர்மங்கள் ஓங்கி வளர வேண்டும்.

நல்தவம் வேள்வி மல்க = நல்ல தவமும், வேள்விகளும் நிறைய வேண்டும்

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் = சிறந்த சைவ நீதி உலகெல்லாம் பரவ வேண்டும்

அது என்ன சைவ நீதி ? அதை அறிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் போதும் என்று தோன்றவில்லை. கடல் போல விரிந்து கிடக்கிறது அது. மிக மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.


எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். நல்லாட்சி வேண்டும்...எவ்வளவு பெரிய மனம். எவ்வளவு உயர்ந்த மனம்.

இதை தினம் ஒரு முறை வாசியுங்கள்.

மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்குகிறதா இல்லையா என்று பாருங்கள்.




Saturday, July 5, 2014

திருவாசகம் - இனி எங்கே போவது ?

திருவாசகம் - இனி எங்கே போவது ?



பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

எண்ண எண்ண இனிக்கும் பாடல். அர்த்தங்கள் பொங்கி வரும் பாடல்.


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து

குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நினைந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனினை தந்து, வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே, நான் உன்னை தொடர்ந்து


அது ஒரு கைக் குழந்தை. அதற்குப் பசிக்கிறது. ஆனால், "எனக்குப் பசிக்கிறது, பால் தா" என்று சொல்ல இன்னும் பேச்சு வரவில்லை. அதற்கு தெரிந்ததெல்லாம் அழுகை ஒன்றுதான்.

அழுதால் அம்மா வந்து பால் தருவாள் என்று நினைத்து, அது வாய் திறந்து அழத் தொடங்குமுன் தாய் ஓடி வது பால் தருவாள்.

பிள்ளை அழுத பின் தருவோம் என்று இருக்க மாட்டாள். குழந்தைக்கு இப்போது பசிக்கும் என்று தாய்க்கு தெரியும்.

"பால் நினைந்து ஊட்டும் தாய் ".

இப்போதெல்லாம் , குழந்தை அழுதாலும் தாய் பால் தருவது இல்லை....அழகு குறைந்து விடும் என்று.  மாணிக்க வாசகர் சொல்லும் தாய், வேறு தாய்.

அப்படிப் பட்ட தாயினும்

"சாலப் பரிந்து" . சால என்றால் மிகுதியாக. சால, உறு , தவ, நனி, கூர், கழி என்பன பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல். மிகுதி என்பதை குறிக்கும் பல சொற்கள்.

அது என்ன தாயை விட அன்பு செய்து ? அதெப்படி இறைவன் தாயை விட அன்பு செய்ய முடியும் ?

பின்னால் சொல்கிறார்.

தாய் உடலுக்கு உணவு தருவாள். இறைவன் உடலுக்கு மட்டும் அல்ல, நமக்குள் இருக்கும் உள் ஒளியையும் பெருக்குவான். உயிருக்கு உறுதி செய்வான்.

  பாவியேனுடைய ஊனினை உருக்கி

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று சொன்னவர், அடுத்த வரியில்  ஊனினை உருக்கி என்கிறார். ஊன் எப்போது உருகும் ? சரியாக சாப்பிடாவிட்டால் உடல் மெலியும். நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அன்பு என்றால்  நிறைய உண்ணத் தருவது என்று. அல்ல.

மணிவாசகரின் ஊன் உருகியது....அதனால் என்ன ஆனது ?

 உள் ஒளி பெருக்கி

உள்ளே உள்ள ஒளி பெருகியது. ஒளி முதலிலேயே இருக்கிறது. அதை பெருக்குபவன்  இறைவன். உள் ஒளி தந்து என்று சொல்லவில்லை. உள் ஒளி பெருக்கி என்கிறார். எரியும் சுடரை தூண்டி விடுவது போல.

உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து

உலப்பு என்றால் அழிவு, முடிவு, இறுதி. உலப்பு இலா என்றா முடிவு இல்லாதா, அழிவு இல்லாத என்று பொருள். இல்லை இல்லாத ஆனந்தம். கரை காண முடியா  இன்பம்.

புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

இறைவன் எங்கே இருக்கிறான் எங்கே இருக்கிறான் என்று வெளியில் எல்லாம் தேடுகிறோம்.  கோயில் , குளங்கள், புண்ணிய தலங்கள் என்று எல்லா இடத்திலும்  தேடுகிறோம். மணி வாசகரும்  தேடினார்.கடைசியில் இறைவன்  இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டார்.  இறைவனைப் பிடித்து விட்டார்.

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்;

நான் உன்னை தொடர்ந்து வந்து இறுக்கி பிடித்துக் கொண்டேன்.

எங்கு எழுந்தருளுவது, இனியே?

இனி வேறு எங்கும் போக முடியாது. இறுதியில் தனக்குள்ளேயே இறைவனை கண்டார். வேறு எங்கும் போக முடியாதபடி இறைவன் அவருக்குள்ளேயே எழுந்தருளினான்.










இராமாயணம் - வலிமை இல்லாத அரசனின் குடிகள் போல...

இராமாயணம் - வலிமை இல்லாத அரசனின் குடிகள் போல...


கவந்தன் என்ற அரக்கன் உள்ள வனத்தை இராமனும் இலக்குவனும் அடைந்தார்கள்.

கவந்தன் இருக்கும் கானகத்தில் உள்ள உயிர்கள் எப்படி வருந்தின என்பதற்கு கம்பர் ஒரு உவமை சொல்கிறார்.

வலிமை இல்லாத ஒரு அரசனின் கீழ் உள்ள குடிகள் எவ்வாறு வருந்துவார்களோ அப்படி அந்த விலங்குகள் வருந்தின என்கிறார்.

வலிமை இல்லாத அரசன் இருந்தால், அந்த நாட்டு மக்களுக்கு பல விதங்களில் இன்னல் விளையும்.....

உள்ளூர் தாதாக்களால் ஒரு புறம் துன்பம், அரசாங்க அதிகாரிகள் தரும் குடைச்சல் மறுபுறம், அயல் நாட்டவர் தரும் துன்பம் இன்னொரு புறம், மழை தண்ணி இல்லாமல் வரும் வறட்சி போன்ற துன்பங்களை சரி வர கவனிக்காமல் அதனால் வரும் துன்பங்கள் என்று பலவிதங்களில் துன்பம் அனுபவிப்பார்கள்.

அது போல அந்த கானகத்து விலங்குகள் தவித்தன என்றார்....

பாடல்

மரபுளி நிறுத்திலன், 
     புரக்கும் மாண்பிலன், 
உரன் இலன் ஒருவன் நாட்டு 
     உயிர்கள் போல்வன; 
வெருவுவ, சிந்துவ, 
     குவிவ, விம்மலோடு 
இரிவன, மயங்குவ, 
     இயல்பு நோக்கினர்.

பொருள்

மரபுளி நிறுத்திலன் = ஒரு அளவில் நிறுத்த இயலாதவனும் 

புரக்கும் மாண்பிலன் = காப்பாற்றும் மாண்பு இல்லாதவனும்

உரன் இலன் = வலிமை இல்லாதவனுமான

ஒருவன் = ஒரு அரசனின்

நாட்டு உயிர்கள் போல்வன = நாட்டில் வாழும் உயிர்கள் போல

வெருவுவ,= பயந்து

சிந்துவ = சிதறி ஓடி

குவிவ = கும்பல் கும்பலாய் சேர்ந்து 

விம்மலோடு இரிவன = துன்பத்தோடு ஓடி

மயங்குவ = மயங்கி

இயல்பு நோக்கினர். = அந்த இயல்பை அடைந்தன

மரபும், அன்பும், வலிமையையும் இல்லாத அரசனின் கீழ் உள்ள குடிகள் எவ்வாறு எல்லாம்  துன்பப்படும் என்று கம்பர் சொல்கிறார். பயந்து  ஓடுவார்கள்,, சிதறிப் போவார்கள், கும்பல் சேர்வார்கள், துன்பப் படுவார்கள் , என்ன செய்வது என்று அறியாமல்   மயங்குவார்கள்....அது போல அந்த கானகத்து  விலங்குகள் துன்பப் பட்டன.