Tuesday, July 22, 2014

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே 


முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நீண்ட போர்.

முருகன் தன் விஸ்வரூபத்தை காண்பிக்கிறான்.

அதை கண்டு மகிழ்ந்து, வியந்து அவன் சொல்கிறான் ...

"குற்றம் இல்லாத தேவர்களை நான் சிறை வைத்தது தவறு என்று அனைவரும் கூறினார்கள். அப்படி செய்ததும் நல்லதாய் போய் விட்டது. நான் தேவர்களை சிறை வைத்ததால்தானே இன்று முருகனின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது "

பாடல்

ஏதம் இல் அமரர் தம்மை யான் சிறை செய்தது எல்லாம் 
தீது என உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கையாலே 
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா 
நாதன் இங்கு அணுகப் பெற்றேன் நன்றதே ஆனது அன்றே.

பொருள்

ஏதம் இல் = குற்றம் இல்லாத

அமரர் தம்மை = தேவர்களை

யான் சிறை செய்தது எல்லாம் = நான் சிறை செய்தது எல்லாம்

தீது என = குற்றம் என்று

உரைத்தார் பல்லோர் = பலர் சொன்னார்கள்

அன்னதன் செயற்கையாலே = அந்த செய்கையாலே

வேதமும் = வேதங்களும்

அயனும் = பிரமனும்

ஏனை விண்ணவர் பலரும் = மற்ற தேவர்கள் எல்லோரும்

காணா = காணாத

நாதன் = நாதனை (முருகனை )

இங்கு அணுகப் பெற்றேன் = இங்கு அருகில்  பெற்றேன்

 நன்றதே ஆனது அன்றே = நல்லது, ரொம்ப நல்லது



Sunday, July 20, 2014

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்  


குடும்பத்தை நல்லபடியாக கொண்டு செல்ல பொருள் வேண்டும்.

அதே சமயம், கணவனும் கூடவே இருக்க வேண்டும்.

எல்லா பெண்களும் அல்லாடும் இரண்டு பிரச்சனைகள் இவை. சங்க காலம் முதல் இன்று வரை இதற்கு ஒரு வழி தோன்றவில்லை.

பொருளும் வேண்டும், கணவனும் கூடவே இருக்க வேண்டும்...என்னதான் செய்வாள் அவள்.

அவர்கள் காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்து இருக்கிறார்கள். அவளை செல்வ செழிப்போடு சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதற்காக வெளிநாடு சென்று பொருள் திரட்ட நினைக்கிறான்.

அவளுக்கோ, அவன் வெளிநாடு எங்கும் போகாமல், அவள் கூடவே இருக்க வேண்டும் என்று ஆவல்.

தன் தோழியிடம் சொல்கிறாள்.

பாலை நிலத்தில் கானல் நீர் தெரியும். அதை உண்மையான நீர் என்று நினைத்துக் கொண்டு யானைகள் கால் வெடிக்க ஓடி, பின் தளர்ந்து விழும். அது போல,  என் காதலன் பொருள் தேடி சென்று வாழ்வின் உண்மையான இன்பங்களை  இழக்க மாட்டான் என்று கூறுகிறாள்.

பாடல்

கடிதோடும் வெண்டேரை நீராமென் றெண்ணிப்
பிடியோ டொருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானஞ் சேர்வார்கொ னல்லாய் !
தொடியோடி வீழத் துறந்து.

பொருள்

கடிதோடும் = வேகமாக ஓடும்

வெண்டேரை  = கானல் நீரை

நீராமென் றெண்ணிப் = உண்மையான நீர் என்று எண்ணி

பிடியோ டொருங்கோடித் = பிடியோடு ஒருங்கு ஓடி = பெண் யானைகளோடு ஒன்றாக ஓடி

தாள் பிணங்கி வீழும் = கால்கள் (தாள்) தளர்ந்து வீழும்

வெடியோடும் = வெடிப்புகள் நிறைந்த

வெங்கானஞ் = வெம்மையான கானகம் 

சேர்வார்கொ னல்லாய்  ! = சேர்வார் என்று எண்ணாதே

தொடியோடி = தொடி என்றால் வளையல். வளையல் கழன்று ஓடி

வீழத் துறந்து = விழும்படி (என்னைத் ) துறந்து. என்னை விட்டு விட்டு

பொருள் என்பது கானல் நீர் போல. அதைத் தேடி தேடி திரியும்போது வாழ்கை முடிந்து  போகிறது. பொருள் எல்லாம் சேர்த்து வைத்த பின் , அனுபவிக்கலாம் என்றால்  அதற்குள் வயதாகி விடுகிறது. 

காலம் காலமாய் தொடரும் சிக்கல் இது. 

அவன் அவளை விட்டுப் பிரியப் போகிறான் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள்  உடல் மெலிந்து வளையல் கழண்டு கீழே விழுந்து உருண்டு  ஓடி விடுமாம். 

அந்த வளையல் உருண்டோடும் சத்தம் உங்களுக்கு கேட்கிறதா ?


Thursday, July 17, 2014

திருவரங்க அந்தாதி - தருக்காவலா என்று

திருவரங்க அந்தாதி - தருக்காவலா என்று 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் எழுதியது திருவரங்க அந்தாதி.

யமகம் என்ற யாப்பில் எழுதப்பட்டது. ஒரே வார்த்தை பல்வேறு பொருள் தாங்கி வரும்படி அமைப்பது.

அதில் இருந்து ஒரு பாடல்

இது என்ன வாழ்க்கை. ஒண்ணும் இல்லாதவனை இந்தரேனே சந்திரனே என்று புகழ் பாடி, விலை மாதரை மயில் என்றும் குயில் என்றும் புகழ்ந்து வாழ் நாளை எல்லாம் வீணாக்கிக் கொண்டு. இருக்கிற நாளில் பக்தர்களுக்கு அருள் வழங்க பலராமனுக்கு பின்னே தோன்றிய கண்ணனை வணங்குங்கள்.

பாடல்

தருக்காவலாவென்றுபுல்லரைப்பாடித்தனவிலைமா
தருக்காவலாய்மயிலேகுயிலேயென்றுதாமதராய்த்
தருக்காவலாநெறிக்கேதிரிவீர்கவிசாற்றுமின்பத்
தருக்காவலாயுதன்பின்றோன்றரங்கர்பொற்றாளிணைக்கே.

சீர் பிரித்த பின்

தரு காவலா என்று புல்லரைப் பாடித் தன விலைமா
தருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதராய்த்
தருக்கு அலா நெறிக்கே திரிவீர் கவி சாற்றும் இன்பத் 
தருக்காவலாயுதன் பின் தோன்ற அரங்கர் பொற் தாளிணைக்கே.

பொருள்

தரு காவலா  = எனக்கு அதைத் தா , இதைத் தா

என்று = என்று

புல்லரைப் பாடித் = கீழானவர்களைப் பாடி, துதித்து

தன = அழகிய தனங்களைக் கொண்ட 

விலைமாதருக்கு = விலை மாதருக்கு

 ஆவலாய் = ஆவலாய், அவர்கள் மேல் விருப்பு கொண்டு

மயிலே குயிலே என்று = மயிலே குயிலே என்று அவர்களை வர்ணித்து 

தாமதராய்த் = தாமதம் செய்பவர்களாய்

தருக்கு = செருக்கு கொண்டு 

அலா = அல்லாத

நெறிக்கே= வழியில்

திரிவீர் = செல்வீர்கள்

கவி சாற்றும் = பாடுங்கள்

இன்பத் = இன்பம் தர

தருக்கா ஆயுதன் = கலப்பையை ஆயுதமாகக் கொண்ட (பலராமன்)

 பின் தோன்ற = பின் தோன்றிய, தம்பியான கண்ணன்

அரங்கர் பொற் தாளிணைக்கே = திருவரங்கத்தில் எழுந்து அருளியுள்ள அவன் பொன் போன்ற இரண்டு திருவடிகளையே




Tuesday, July 15, 2014

கம்ப இராமாயணம் - ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ ?

கம்ப இராமாயணம் - ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ ?

இறைவன் இருக்கிறானா இல்லையா என்று தான் கேட்கிறோமே தவிர இருக்கிறாளா இல்லையா என்று கேட்பது இல்லை. ஆண்டவன், இறைவன், எல்லாம் ஆணைக் குறிப்பதாகவே அமைந்து இருக்கிறது.

காரணம் ஒருவேளை சமய இல்லக்கியயங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதாலோ என்னவோ.

அங்கொரு ஆண்டாள், இங்கொரு காரைக்கால் அம்மையார் என்பதைத் தவிர பெண்கள் பெரும்பாலும் மதங்களுக்குள் வருவது இல்லை.

பெண்களுக்கு மதம் பிடிக்காது போல் இருக்கிறது.

இறைவனை எப்படி அழைப்பது - அவன் என்றா ? அவள் என்றா ? அது என்றா ? அல்லது இவை அனைத்தையும் தாண்டிய ஒன்று என்றா ?

அவன் காண்பவர் மற்றும் காணப் படுபவை இரண்டுக்கும் கண்ணாக இருக்கிறான்.

அவன் எல்லா வற்றிலும் இருக்கிறான், அவனுக்குள் எல்லாம் இருக்கிறது.

அவன் உலகத்தில் இருக்கிறான். இந்த உலகம் முழுவதும் அவனுக்குள் இருக்கிறது.

அவன் ஆண்பாலா, பெண் பாலா , அவற்றைத் தாண்டி அப்பாலா ? எந்த பாலோ தெரியவில்லையே என்று கவந்தன் இராமனைத் துதிக்கிறான்.

பாடல்


“காண்பார்க்கும் காணப்படு பொருட்கும்
    கண் ஆகிப்
பூண்பாய் போல் நிற்றியால்,
    யாது ஒன்றும் பூணாதாய்!
மாண்பால் உலகை
    வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ?
    அப்பாலோ? எப்பாலோ? ‘‘

பொருள்

“காண்பார்க்கும் = கான்கின்றவர்களுக்கும்

காணப்படு பொருட்கும் = காணப் படுகின்ற பொருள்களுக்கும்

கண் ஆகிப் = கண் ஆகி  நின்றவன்.சாட்சியாக நின்றவன்.

பூண்பாய் போல் நிற்றியால் = பூணுதல் என்றால் சூடிக் கொள்ளுதல், உடுத்திக் கொள்ளுதல், அணிந்து கொள்ளுதல். அவன் எல்லாவற்றையும் சூடிக் கொண்டிருக்கிறான்.

யாது ஒன்றும் பூணாதாய்! = எதிலும் தொடர்பு இன்றி இருக்கிறான்

மாண்பால் = பெருமையால்

உலகை = இந்த உலகம் அனைத்தையும்

வயிற்று ஒளித்து வாங்குதியால் = தன்னுடைய வயிற்றிற்குள் அடக்கி பின் வெளிப் படுத்தி

ஆண்பாலோ?  = அது ஆண்பாலோ

பெண்பாலோ? = பெண் பாலோ ?

அப்பாலோ? = இரண்டையும் தாண்டி அதற்கு அப்பாலோ

எப்பாலோ?  = எந்தப் புறமோ ?

காண்பதும், காணப் படுவதும் வேறு வேறு அல்ல. எல்லாம் இறை தான் என்ற உயரிய  தத்துவத்தை கவந்தன் வாயிலாக கம்பர் நமக்குத்  தருகிறார்.

இரண்டும் ஒன்று என்றால் - ஆசை போகும், கோபம் போகும், பொறாமை போகும்...மனதில் உள்ள துன்பங்கள் போகும்.


Monday, July 14, 2014

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை 


இதயத்தில் உள்ள ஒரு வால்வு பழுதாகி விட்டால் அதற்கு பதில் ஒரு செயற்கை வால்வு பொருத்துவார்கள். பல இலட்சங்கள் செலவாகும். அந்த வால்வை நமக்கு இலவசமாகத் தந்த கடவுளுக்கு என கைம்மாறு செய்வது ?

காலை எடுக்க ஒரு இலட்சம் கேட்கிறார்கள்...என்றால் காலைத் தந்தவனுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று முருகன் சந்நிதியில் சென்று விழுந்தார் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

இறைவன் தனக்கு தந்த ஒவ்வொன்றையும் எண்ணி அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

சீர் பிரித்த பின்

இருகை யானையை ஒத்திருந்த என் உள்ளக் 
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே 
வருக என்று பணித்தனை வானுளோர்கு 
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

பொருள்

இருகை யானையை ஒத்திருந்து = மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு வசதி யானைக்கு உண்டு...அது தான் அதற்கு அமைந்த கை. அந்தக் கையால் யாருக்கும் ஒன்றும் நல்லது செய்யாது. தனக்கு தனக்கு என்று எடுத்து உண்ணும். அதனால் அதை இருகை யானை என்றார். இருகை என்பது சற்று மரியாதை குறைவான ஒரு தொடர். இருகால் மாடே என்று பயனில்லாத மனிதர்களை குறிப்பிடுவார்கள்.

நமக்கு இரன்டு கைகள் இருக்கிறது. யாருக்காவது ஏதாவது தருகிறோமா ? எனக்கு எனக்கு என்று   எடுத்துக் கொள்வதிலேயே இருக்கிறோம்.

என் உள்ளக்  கருவை யான் கண்டிலேன் = என் உள்ளத்தின் கருவை, ஆணி வேரை நான் கண்டிலேன். எது உள்ளத்தின் ஆதி, அடிப்படை என்று அறியாமல் இருக்கிறேன்.

 கண்டது எவ்வமே = கண்டது எல்லாம் துன்பமே

வருக என்று பணித்தனை  = அப்படி இருக்கும் போது , என்னை வருக என்று நீ பணித்தாய்.

வானுளோர்கு ஒருவனே = வானில் உள்ளவர்களுக்கு ஒருவனே. ஒருவனே என்றால் நிகர் இல்லாதவன் என்று பொருள்


கிற்றிலேன் =  வலிமை இல்லாதவன்

கிற்பன் உண்ணவே. = இருக்கின்றேன் உலக இன்பங்களை அனுபவிக்கவே




திருக்குறள் - காதலர் இல்லாத மாலை

திருக்குறள் - காதலர் இல்லாத மாலை


காதல ரில்வழி மாலை கொலைக்களத் 
தேதிலர் போல வரும்.



 சீர் பிரித்த பின் 

காதலர் இல் வழி மாலை கொலைக் களத்து 
ஏதிலர் போல வரும் 

பொருள் 

காதலர் = காதலர் 

இல் வழி = இல்லதா நேரம் 

மாலை = மாலை நேரமானது 

கொலைக் களத்து = கொலை களத்தில் உள்ள  

ஏதிலர் போல வரும் = அன்பும் அருளும் அற்றவர்கள் போல வரும், ஏதிலார் என்ற சொல்லுக்கு, அருள் அற்றவர், அன்பு அன்றவர், அயலவர் என்று பொருள் .
 
 
காதலர் இல்லாத மாலை கொலைக் களத்தில் உள்ள கொலைஞரைப் போல வரும். 

அவ்வளவுதான் அர்த்தம். 

இருந்தாலும், வள்ளுவர் அப்படி சாதாரணமாக எழுதுபவர் அல்ல. உள்குத்து ஏதாவது இருக்கும். பார்க்கலாம்.


போர்க்களம் - கொலைக் களம்.

போர்க்களம் என்றால் இரண்டு எதிரிகள் இருப்பார்கள். ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவார்கள். இருவரிடமும் ஆயுதங்கள் இருக்கும்.

கொலைக் களம் என்றால் கைதிகளை கொலை செய்யும் இடம். இங்கே கைதி போராட முடியாது. உயிர் போகப் போகிறது என்று தெரியும். இருந்தும் ஒன்றும் செய்ய முடியாது.

போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் தாக்கும் போது ஒரு பகைமை இருக்கும்.

கொலைக் களத்தில் அப்படி இருக்காது. இருவரிடமும் பகைமை இல்லை.

போர்க் களத்தில் சண்டையிட முடியவில்லை என்றால் தப்பி ஓடி விடலாம். கொலைக் களத்தில் அது முடியாது.

காதலனைப் பிரிந்த காதலிக்கு மாலை நேரமானது அருள் அற்றவர்கள் இருக்கும்  கொலைக்  களம் போல  .
 
மாலை எல்லோருக்கும் ஒன்றாகத்தான் வருகிறது. இன்னும் சொல்லப் போனால், காதலனோடு இருக்கும் போதும் இதே மாலைதான் வந்தது. அப்போது இந்த மாலை இப்படி இரக்கமற்றதாகத் தெரியவில்லை. இப்போது என்னடா என்றால்  உயிரை எடுக்க வரும் கொலையாளி போல இருக்கிறது.


இதில் இன்னொரு சிறப்பு என்ன என்றால், தவறு செய்யாத ஒருவனை அரசன் கொல்லும்படி கட்டளை இடுகிறான். அந்த மனிதன் வெட்டப் படப் போகிறான். ஒரு தவறும் செய்யாதவன். அவன் நிலை எப்படி இருக்கும். தன்னை வெட்டப் போகும் அந்த கொலையாளியைப் பார்க்கிறான். அவன் முகத்தில் ஒரு துளி அருளும் இல்லை. நேற்றுவரை தனக்கு எதிரியாக இல்லாதவன் இன்று தன் உயிரை எடுக்கும் யமனாகி நிற்பதைப் பார்க்கிறான்.

அது போல, நேற்று வரை நட்பாக இருந்த இந்த மாலைப் பொழுது இன்று உயிரை எடுக்கும்  கூற்றாக வந்து நிற்கிறது.

கொலைக் களத்தில் இருக்கும் கொலையாளி.

கொல்லப் படப் போகும் கைதி.

காதலி

மாலை நேரம்

சிந்தித்துப் பாருங்கள்.




Sunday, July 13, 2014

சிலப்பதிகாரம் - மனைவியின் வாடிய மேனி கண்டு

சிலப்பதிகாரம் - மனைவியின் வாடிய மேனி கண்டு 


மாதவியோடு சில காலம் தங்கி, பொருளை எல்லாம் தொலைத்து விட்டு கண்ணகியைத் தேடி வருகிறான் கோவலன்.

தான் செய்த தவறுக்கு  காரணம் சொல்லவில்லை. கண்ணகியை நேருக்கு நேர் பார்த்து

"பொய்யான பெண்ணோடு கூடி, நம் முன்னோர்கள் சேர்த்துத் தந்த பொருள் யாவும் தொலைத்து விட்டேன். இப்போது ஒன்றும் இல்லாமல் வந்து நிற்கிறேன். இது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது "

என்றான்.

வீடு வந்தவுடன் நேரே படுக்கை அறைக்குப் போகிறான். "பாடு அமை சேக்கை " என்கிறார் இளங்கோ. பெருமை வாய்ந்த படுக்கை அறை என்று அதற்கு பெருமை சேர்கிறார் இளங்கோ. அங்கே கண்ணகி வாடி வதங்கி படுத்து இருக்கிறாள். அவளை கண்டு வருந்துகிறான் கோவலன்.

பாடல்

பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன


 சீர் பிரித்த பின்

பாடு அமை சேக்கையுள் புகுந்து தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் 
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி 
குலம் தரும்  வான் பொருள் குற்றைத்  தொலைந்த
இலம் பாடு நானும் தரும் எனக்கு என 

பொருள்

பாடு அமை = பெருமை சேர்ந்த

சேக்கையுள் = படுக்கை அறையுள். ஒன்று சேரும் அறை சேக்கை

புகுந்து = நுழைந்து

தன் = தன்னுடைய

பைந்தொடி = ஆபரணங்களை அணிந்த பெண். ஒரு வேளை அணிந்திருந்த என்ற நோக்கில் கூறி இருப்பாரோ

வாடிய மேனி = வாடிய மேனி

வருத்தம் கண்டு = வருந்தம் கண்டு

யாவும் = அனைத்தையும்

சலம் புணர் கொள்கைச் = வஞ்சகக் கொள்கை கொண்ட

சலதியொடு ஆடி = பொய்யான பெண்ணின் பின்னால் போய்

குலம் தரும்  = என் முன்னோர்கள் சேர்த்து வைத்த

வான் பொருள் குற்றைத் = வானத்தை எட்டும் அளவுக்கு குன்று போல குவித்து இருந்த செல்வத்தை 

தொலைந்த = தொலைத்த

இலம் பாடு = ஒன்றும் இல்லாமல் படும் பாடு , இலம் பாடு

 நாணும் தரும் எனக்கு என = நாணத்தையும் தரும். நாணும் என்பதில் உள்ள "ம்" பலப் பல பொருள்களைத் தருகிறது.  வருமையைத் தரும், இழிவைத் தரும், துன்பத்தைத் தரும் , நாணத்தையும் தரும்.

எனக்குள் ஒரு சந்தேகம்....

அழகான மனைவி - கண்ணகி ஒன்றும் அழகில் குறைந்தவள் அல்ல.

குன்றைப் போல குவித்து வைத்த செல்வம்.

ஏன் கோவலன் கண்ணகியை விட்டு மாதவி பின் போனான் ?

கோவலனைப் போகத் தூண்டியது எது ?

கண்ணகிகள் சிந்திக்க வேண்டிய விஷயம்.