Sunday, March 22, 2015

குமர குருபரர் பாடல் - எது பெருமை ?

குமர குருபரர் பாடல் - எது பெருமை ?


சில பேர் பெரிய இடங்களுக்கு எளிதாகப் போய் வருவார்கள். அமைச்சரைப் பார்த்தேன், கலெக்டரைப் பார்த்தேன், கம்பெனி சேர்மனை பார்த்தேன், என்று பெருமை பேசுவார்கள்.

மற்றவர்கள் எவ்வளவோ கடுமையாக உழைத்தாலும், அறிவில், திறமையில் உயர்ந்து இருந்தாலும் பெரிய இடங்களுக்கு போக முடியாது.

பெரிய இடங்களுக்கு போவது ஒரு பெருமையா ? அப்படி போக முடியாமல் இருப்பது ஒரு சிறுமையா ?

குமர குருபரர் சொல்கிறார்....

அரண்மனையில், பூனை அந்தப்புரம் வரை சர்வ சாதாரணமாகப் போய் வரும். பட்டத்து யானை வெளியே கொட்டகையில் கட்டி கிடக்கும்.

அந்தப்புரம் போனதால் பூனைக்கு பெருமையா ? அரண்மனைக்கு உள்ளே போக முடியவில்லை என்பதால் யானையின் பெருமை குறைந்து போய் விடுமா ?

பாடல்

வேத்தவை காவார் மிகன் மக்கள், வேறு சிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் -மாத்தகைய
அந்தபுரத்து பூஞை புறங்கடைய

கந்துகொல் பூட்கை களிறு.

சீர் பிரித்த பின்

வேந்து  அவைக்கு ஆவார் மிகன் மக்கள், வேறு சிலர் 
காத்து அது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார் - மாத்தகைய 
அந்தபுரத்து பூனை புறம் கடை 
கந்துக் கொல் புட்டிய கை களிறு 


பொருள்


வேந்து = அரசனின்

அவைக்கு = அவைக்கு

ஆவார் மிகன் மக்கள் = போனால் தான் பெரியவர் என்று எண்ணி இருக்க மாட்டார்கள் பெரியவர்கள்

வேறு சிலர் = வேறு சிலரோ

காத்து அது கொண்டு = காத்து கொண்டு

ஆங்கு உவப்பு எய்தார் = அதனால் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்

 மாத்தகைய = மா + தகைய = பெருமை மிக்க

அந்தபுரத்து பூனை = அந்தப் புரத்து பூனை

புறம் கடை = வெளியில்

கந்துக் கொல் = காவல் கொண்டு

புட்டிய = கட்டப்பட்ட

கை களிறு = கையை உடைய யானை

அந்தப் புரம் செல்வதால் பூனையின் மதிப்பு உயர்ந்து விடுவதில்லை

அரண்மனைக்கு வெளியே இருப்பதால் யானையின் பெருமை குறைந்து விடுவதில்லை.

குமர குருபரர் பல அருமையான நூல்களை எழுதி உள்ளார்.



கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

நேரமிருப்பின், இவற்றைப் படித்துப் பாருங்கள்.

வாழ்நாள் முழுவதும் படிக்க தமிழில் ஆயிரம் நூல்கள் உள்ளன.

Saturday, March 21, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு 


நல்லது வேண்டும் என்று சிலவற்றைச் செய்யத் தொடங்குகிறோம். ஆரம்பித்த சில நாட்களில் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் அதை விட்டு விடுகிறோம்.

ஒரு மாதமாக நடை பயிற்சி செய்கிறேன்....தொப்பை குறையவே மாட்டேன் என்கிறது. இது பிரயோஜனம் இல்லை என்று நிறுத்தி விடுவது.

பொறுமை கிடையாது. விடா முயற்சி கிடையாது.

இந்த மாதிரி சின்ன விஷயங்களுக்கே இப்படி என்றால், இறையருள் போன்ற விஷயங்களுக்கு எப்படி இருக்கும் ?

என்று வருமோ, எப்போது வருமோ...தெரியாது. நம்பிக்கையில் தொடர வேண்டியதுதான்.

திருமழிசை ஆழ்வார் சொல்கிறார்.....

இன்றோ, நாளையோ, இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம்...எவ்வளவு நாள் ஆனால் என்ன, உன் அருள் எனக்கு கிடைத்தே ஆக வேண்டும். எனக்கும் உன்னை விட்டால் ஆள் இல்லை; உனக்கும் என்னை விட்டால் ஆள் இல்லை.

பக்தன் இல்லாமல் கடவுள் இல்லை.

கடவுள் இல்லாமல் பக்தன் இல்லை.


இறைவன் பெரியவன் தான். அளவற்ற ஆற்றல் உடையவன் தான். அன்பும் கருணையும் உடையவன்தான்.

இதை எல்லாம் வைத்துக் கொண்டு அவன் என்ன செய்வான் ?

அன்பையும், கருணையும் செலுத்த ஒரு ஆள் வேண்டாமா ?

இறைவா, உன் அருளைத் தர என்னை விட சிறந்த ஆள் உனக்குக் கிடைகப் போவது இல்லை....உனக்கும் என்னை விட்டால் வேறு ஆள் யாரும் இல்லை. அது போல இறை அருளைப் பெற உன்னைவிட்டால் எனக்கும் வேறு யாரும் இல்லை.

பாடல்

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.



பொருள்

இன்றாக = இன்றைக்கு

நாளையே யாக = இல்லேனா நாளைக்கு

இனிச்சிறிதும் நின்றாக = இன்னும் கொஞ்சல் நாளில்

நின்னருளென் பாலதே, = நின் அருள் என் பாலதே - உன் அருள் எனக்குத்தான்

நன்றாக = சரியாக

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய் = நான் உன்னை அன்றி வேறு இல்லை

நாரணனே = நாரணனே

நீயென்னை யன்றி யிலை = நீ என்னை அன்றி இல்லை


Tuesday, March 17, 2015

திருவாசகம் - திருச் சதகம் - நாடக வேஷம்

திருவாசகம் - திருச் சதகம் - நாடக வேஷம் 


ஒருவன் நாடகத்தில் இராஜா வேஷம் போடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனுக்குத் தெரியும் அவன் இராஜா இல்லை என்று. அது ஒரு நடிப்பு என்று. உள்ளத்தில் ஒட்டாத ஒன்று. ஏதோ வருவான்,  நாலு வசனம் பேசுவான், அன்றைய நடிப்பு கூலியை பெற்றுக் கொண்டு போய் விடவேண்டும்.

தான் உண்மையிலேயே ஒரு இராஜா என்று அவன் நினைத்துக் கொண்டு, எங்கே என் படை, என் மாதிரி , என் செல்வம் என்று கேட்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் ?

அது போல,

இறைவா, உன் அடியார் போல நானும் நடிக்கிறேன். உன் அடியார்கள் மத்தியில் நானும் ஒரு அடியவன் போல புகுந்து , உன் திருவடிகளை அடைய விரைந்து வருகிறேன். அரசன் வேடம் போட்டவன் அரசாங்கம் கேட்டது போல. என் மனதில் அன்பு இல்லை. நான் என்ன செய்வேன். உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாய்

என்று உருகுகிறார்  மணிவாசகர்.

பாடல்


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.


பொருள்

நாடகத்தால் = நடிப்பால்

உன்னடியார் போல் = உன்னுடைய அடியவனைப் போல

நடித்து = நடித்து

நானடுவே = நான் நடுவே

வீடகத்தே = வீட்டின் அகத்தே - வானுலகத்தின் உள்ளே

புகுந்திடுவான் = புக வேண்டி

 மிகப்பெரிதும் = மிக வேகமாக

 விரைகின்றேன் = விரைந்து செல்கின்றேன்

ஆடகச்சீர் = உயர்ந்த தங்கத்தால் ஆன

மணிக்குன்றே = மணிகள் நிறைந்த குன்றே , மலையே

இடையறா = இடைவிடாத

அன்புனக்கென் = அனுப்பு உனக்கு என்

ஊடகத்தே = உள்ளத்தில்

நின்றுருகத் = நின்று , அதனால் என் உள்ளம் உருக

தந்தருள் = தந்து அருள்வாய்

எம் உடையானே.= என்னை உடையவனே

இறைவனை அடைய அறிவைக் கேட்கவில்லை, ஆற்றலை கேட்கவில்லை....உருகும் அன்பு வேண்டும் என்று  கேட்கிறார்.

"உள்ளம் உருகும் அன்பு படைத்தனை " என்பார் அபிராமி பட்டர்


(உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு 
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே 
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் 

துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.)

"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரி நாதர்


(நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.)

"உள்ளி உருகும் அவர்களுக்கு அருளும்" ...என்பார் வள்ளலார் 

உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு 
வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும் 
கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ 
எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.



இராமாயணம் - பதவி சுகமா ?

இராமாயணம் - பதவி சுகமா ?


இன்று பதவி என்றால் ஏதோ சுகம், அதிகாரம், பொருள் செய்யும் வழி என்று பலர் நினைக்கிறார்கள்.

பதவி என்பது எவ்வளவு பெரிய சுமை என்று அதை ஒழுங்காக செய்பவர்களுக்குத்தான் தெரியும்.

ஒவ்வொரு பதவியும் ஒரு சுமை.

கூரிய வாளின் மேல் நடப்பது மாதிரி என்கிறார் வசிட்டர். கொஞ்சம் நடை பிசகினாலும், காலை அறுத்து விடும்.

இத்தனை நாள் ஒழுங்காக நடந்தேனே, இன்று ஒரு நாள் சற்று பிசகி விட்டதே என்று சொன்னால் முடியுமா ? எல்லா நேரமும் எச்சரிக்கையோடு இருக்க
வேண்டும்.

வேலையின் பளு, மேலதிகாரிகளின் நெருக்கடி, பொது மக்களின் எதிர்பார்ப்பு என்று ஏகப்பட்ட சிக்கல்களுக்கு நடுவில் வேலை செய்ய வேண்டி வரும்.


சாதாரண பதவிக்கே இப்படி என்றால்,சக்கரவர்த்தி என்றால் எப்படி இருக்கும் ?

பாடல்

கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள்
நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு; அன்னது,
வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே!

பொருள்

கோளும் = கோள்களைப் போல தத்தமது  வழியில் செல்லும்

ஐம்பொறியும் = ஐந்து பொறிகளும் (புலன்களும் )

குறைய = கட்டுப் பாட்டுக்குள் இருக்க

பொருள் = செல்வத்தை

நாளும் கண்டு =ஒவ்வொரு நாளும் பெருக்கி

நடுக்குறு நோன்மையின் = பகைவர்கள் கண்டு நடுங்கும்படி

ஆளும் அவ் அரசே அரசு = ஆளும் அரசே நல்ல அரசு

அன்னது = அது

வாளின் மேல் வரு மா தவம் = கூர்மையான கத்தியின் மேல் நடப்பது போன்ற பெரிய தவம்

மைந்தனே! = மைந்தனே

ஒரு தலைவனுக்கு முதலில் வேண்டியது அறிவு, ஆற்றல், எல்லாம் இல்லை. 

ஒரு தலைவனுக்கு முதலில் வேண்டியது புலனடக்கம். அது இல்லாவிட்டால் மற்றது எது இருந்தும் பலன் இல்லை. 

அடுத்து வேண்டியது , பொருளை பெருக்கும் வழி. 

மூன்றாவது, பகைவர் நடுங்கும் ஆற்றல் 

புலனடக்கம் இல்லாமல்  கெட்டான் இராவணன். அறிவு, ஆற்றல், தவ வலிமை  என்று எல்லாம் இருந்தும், புலனடக்கம் இல்லாததால் அழிந்தான். 


Saturday, March 14, 2015

இராமாயணம் - போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது

இராமாயணம் - போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது 


சில பேர் எதுக்கு எடுத்தாலும் வாதம் பண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

எதைச் சொன்னாலும் அது எப்படி, ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று வாதம் பண்ணுவார்கள்.

மேலும்  சிலர்  விவாதம் என்று வந்து விட்டால், எப்படியும் அந்த விவாதத்தில் வென்றே ஆக வேண்டும் கழுத்து நரம்பு எல்லாம் புடைக்க விவாதம் செய்வார்கள்.

வாதத்தில் வெற்றி பெறுவார்கள், ஆனால் யாருடன் விவாதம் பண்ணுகிறார்களோ அவர்களின் அன்பை, நட்பை, உறவை இழப்பார்கள்.

சண்டை போடாமல் வெற்றி கிடையாது என்று . நம்புகிறார்கள்.  நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் வேறு யாரவது ஒருவர் தோற்கத் தானே வேண்டும்.

வெற்றி பெறாமல் எப்படி புகழ் வரும் ?

எனவே சண்டை போட்டுக் கொண்டே இருப்போம் என்று பலர் நினைக்கலாம்.

அப்படி அல்ல என்கிறார் வசிட்டர்


யாரோடும் பகை இல்லை என்ற பின், போர் இல்லாமல் போகும். போர் இல்லை என்றால் படை வீரர்கள் சாக மாட்டார்கள். படையின் அளவு குறையவில்லை என்றால் படை பலம் பெருகும். படை பலம் பெருகினால் எதிரிகள் அஞ்சி போர் செய்ய வர மாட்டார்கள். அது மேலும் போர் வருவதை தடுக்கும்.

யாரும் சண்டைக்கு வர அஞ்சி, போர் செய்யாமல் இருந்தால், முழு நேரத்தையும்  நாட்டின் நிர்வாகத்தில் செலவிடலாம். அதனால் நல்ல பெயரும் புகழும்  கிடைக்கும்.

போர் ஒடுங்கும். புகழ் ஒடுங்காது.

பாடல்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? ‘

பொருள்

‘யாரொடும் = யாரோடும்

பகை கொள்ளலன்  என்ற பின் = பகை கொள்ளாமல் இருந்தால்

போர் ஒடுங்கும் = போர் என்பது இருக்காது

புகழ் ஒடுங்காது; = ஆனால் புகழ் ஒடுங்காது

தன் = தன்னுடைய

தார் ஒடுங்கல் செல்லாது; = மாலை கெடாது. அதாவது ஆட்சி ஒழுங்காகச் செல்லும்.

அது தந்தபின் = அது நிகழ்ந்த பின்

வேரொடும் = வேரோடு

கெடல் வேண்டல் உண்டாகுமோ?  = கெட வேண்டியது இருக்காது

போரை விட அமைதி முக்கியம்.

பகையை விட நட்பு முக்கியம்.



Wednesday, March 11, 2015

இராமாயணம் - துன்பம் வரும் வழி

இராமாயணம் - துன்பம் வரும் வழி 


எல்லா உயிர்களும் இன்பத்தை விரும்புகின்றன. துன்பத்தை வெறுக்கின்றன.

ஆனாலும், அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு வழியில் துன்பத்தில் உழல்கின்றன.

துன்பம் எப்படி வருகிறது ? துன்பம் எங்கிருந்து வருகிறது ?

ஆழ்ந்து சிந்தித்தால் இன்று நமக்கு இருக்கும் துன்பத்திற்கு நாம் முன்பு செய்த அல்லது செய்யாமல் விட்ட ஏதோ ஒன்று காரணமாக இருக்கும்.

நான் முற்பிறவியில் செய்ததைப் பற்றி சொல்லவில்லை.

படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் இருந்தால் பின்னாளில் ஏழ்மை வரத்தான் செய்யும்.

இளமைக் காலத்தில் நல்லது சொன்னால் கேட்காமல் இருந்தால் பின்னாளில் துன்பப் படத்தான் வேண்டும்.

பொறாமை, பேராசை, போன்றவை அளவுக்கு மீறிய செயல்களை செய்யத் தூண்டும்...அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவது, நிறைய வட்டி வரும் என்று எதிலோ பணத்தை போட்டு முதல் இழந்து வருந்துவது நிகழும்.

நீங்கள் இப்போது செய்யும், செய்யாமல் விடுவது பின்னாளில் உங்களுக்கு விளைவுகளைத் தரும்.

என்ன செய்கிறீர்கள் என்று அறிந்து செய்யுங்கள்.

வசிட்டர் சொல்கிறார்....இராமா இதுவரை நீ சூது முதலிய செயல்களில் ஈடுபடவில்லை.  எனவே,அதனால் வரும் துன்பங்கள் உனக்கு இல்லை. இருப்பினும், அனைத்து துன்பங்களுக்கும் சூது முதலிய கெட்ட செயல்களே காரணம். துன்பங்களுக்கு மூல காரணம் என்ன என்பதை அறிந்து செயல்படு  என்கிறார்.

பாடல்

‘சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்,
நீதி மைந்த! நினக்கு இலை; ஆயினும்,
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே.

பொருள்

‘சூது = சூது

முந்துறச் = அதற்கு முற்பட்ட தீய செயல்கள் 

சொல்லிய மாத் துயர் = சொல்லப் பட்ட பெரிய துன்பங்கள்

நீதி மைந்த! = நீதியின் மைந்தனே

நினக்கு இலை;= உனக்கு இல்லை

ஆயினும் = இருப்பினும்

ஏதம் என்பன யாவையும் = துன்பம் என்று சொல்லப்பட்டவை யாவையும்

எய்துதற்கு = அடைவதற்கு

ஓதும் மூலம் = சொல்லிய மூலம்

அவை என ஓர்தியே = அவை என்று உணர்

அவை என்று அவர் சொல்லி விட்டு விட்டார்.

அந்த 'அவை"யில் எது எது வரும் என்று நிறைய பட்டியல் தருகிறார்கள்...

சோம்பேறித்தனம், கள் உண்ணல் , காமம், கோபம், இன் சொல் சொல்லாமை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எதுவானாலும், துன்பத்திற்கு காரணம் நல்லன அல்லாத செயல்கள்.

அன்று செய்தது இன்று வந்தது.

இன்று செய்தால் நாளை கட்டாயம் வரும்.

நாளை துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இன்றை சரி செய்யுங்கள்.



திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - தேனீ

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - தேனீ 


அரும்பாடு பட்டு செல்வம் சேர்க்கிறோம்.

சேர்த்த எல்லாவற்றையும் நம்மால் அனுபவிக்க முடிகிறதா ? நாம் இறக்கும் போது எல்லாவற்றையும் செலவழித்து விட்டா போகிறோம் ? இந்த வீடு எங்கே இருக்கிறது, அதை நீ எடுத்துக் கொள், அந்த பெட்டகத்தில் உள்ள நகைகளை நீ எடுத்துக் கொள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் கொடுத்து விட்டு வெறுங் கையோடு செல்கிறோம்.

சரி, அதற்காக செல்வமே சேர்க்காமல் இருந்தால் சரி வருமா ? அப்படியே கொடுத்தாலும் யாருக்கு கொடுக்கிறோம் ... பெண்டாட்டி பிள்ளைகளுக்குத் தானே கொடுக்கிறோம்...அதில் என்ன தவறு.

தவறு செல்வம் சேர்பதில் அல்ல...

செல்வம் சேர்க்கும் முனைப்பில் உண்மை எது, வாழ்கை என்றால் என்ன, இதன் நோக்கம் என்ன, என்று  தன்னை அறியாமல் செக்கு மாடு போல சுத்தி சுத்தி வருவதுதான்....

செல்வம்  சேர்ப்பது மட்டும்தான் வாழ்க்கையா ?

கடைசி நேரத்தில் "அடடா வாழ் நாள் எல்லாம் வீணாக்கி விட்டோமே" என்று வருந்தி சாகக் கூடாது.

தேனீக்கள் அரும்பாடு பட்டு ஆயிரக்கணக்கான பூக்களில் இருந்து தேனை சேகரிக்கும். அது சேர்த்து வைத்த பின், அதனால் அதை முழுவதும் அனுபவிக்க முடியாது. வலிமையான மனிதர்கள் வந்து அந்த தேனை கொண்டு செல்வார்கள்.

பாடல்

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்1
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொருள்


ஈட்டிய = சேர்த்த

தேன் = தேன்

பூ மணங்கண் = பூவின் மணமும்

 இரதமும் கூட்டிக் = தன் உமிழ் நீரையும் சேர்த்து  


கொணர்ந்தொரு = கொண்டு வந்து ஒரு

கொம்பிடை வைத்திடும் = மரக் கிளையில் வைத்திடும்

ஒட்டித்  துரந்திட் டது = பல விதங்களில் அந்த தேனீக்களை துரத்தி விட்டு

வலி யார்கொளக் = வலிமையானவர்கள் கொள்ள

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே = காட்டி கொடுத்து அது கை விட்டவாறே

இயற்கை பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.

விழித்துக் கொண்டால்  படிக்கலாம்.