Sunday, August 23, 2015

சீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள்

சீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள் 

(வயது வந்தவர்களுக்கு மட்டும். ஆண் பெண் ஈர்பை கேட்டு முகம் சுளிப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)

பெண்கள் , ஆண்களை விரும்பி பார்ப்பார்களா. பார்ப்பார்கள் என்கிறது சீவக சிந்தாமணி.

அப்படி அவர்கள் பார்க்கும் போது , ஆண்களும் தங்கள் அழகை இரசிக்க வேண்டும் என்று நினைத்து அலங்காரம் பண்ணிக் கொண்டு வருகிறார்களாம்.

ஆண்கள் தங்களை எப்படி இரசிக்கிறார்கள், அப்படி தங்களை இரசிக்கும் ஆண்களை பெண்கள் எப்படி எப்படி இரசிக்கிறார்கள் ....

வாள் போன்ற கூர்மையான கண்களைப் பார்த்து, நாளும் வளரும் மார்புகளைப் பார்த்து, அழகு பொங்கும் இடுப்பை நோக்கி, பண் பாடும் வண்டுகள் வட்டமிடும் மலர்களை சூடிய கூந்தலை நோக்கும் அந்த ஆண்களை பார்த்து விருப்போடு நின்றார்கள் வளை அணிந்த அந்தப் பெண்கள்



பாடல்

வாண்மதர் மழைக்க ணோக்கி
வருமுலைத் தடமு நோக்கிக்
காண்வர வகன்ற வல்குற்
கண்விருப் புற்று நோக்கிப்
பாணுவண் டாற்றுங் கோலச்
சிகழிகைப் படியு நோக்கி
யாண்விருப் புற்று நின்றா
ரவ்வளைத் தோளி னாரே.

சீர் பிரித்த பின்

வாள் மதர் மழைக் கண் நோக்கி 
வரு முலைத்  தடமும் நோக்கிக்
காண் வரவு அ கன்ற அல்குல் 
கண் விருப்புற்று நோக்கிப்
பாணு வண்து ஆற்றும் கோலச்
சிகழிகைப் படியும்  நோக்கி
ஆண் விருப்புற்று நின்றா
அவ் வளைத் தோளினாரே.

பொருள்

வாள் = வாள் போன்ற கூர்மையான

மதர் = மதர்ப்பு என்ற சொல்லுக்கு செழிப்பு, இறுமாப்பு, உள்ளக்களிப்பு; ஆசைப்பெருக்கம்; அழகு; வலிமை; மிகுதி; புலவி என்று பல பொருள்கள் உண்டு. உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

மழைக் கண் நோக்கி = மழை போன்ற குளிர்ச்சியான கண்களை நோக்கி, மழை தரும் மேகம் போன்ற கரிய கண்களை நோக்கி, நீரில் மிதக்கும் கண்களை நோக்கி

வரு முலைத்  தடமும் நோக்கிக் = வரு முலை  - வினைத்தொகை. வந்த, வருகின்ற, வரும். அந்தப் பெண்களின் மார்புகளை நோக்கி

காண் = காணக் கூடிய அழகான

வரவு அகன்ற அல்குல் = பரந்த இடுப்பு (அவ்வளவு தான் சொல்ல முடியும்)

கண் விருப்புற்று நோக்கிப் = கண்ணால் விருப்புடன் நோக்கி

பாணு = பண் பாடும்

வண்டு  ஆற்றும் = வண்டு ஆடும்

கோலச் சிகழிகைப் படியும்  நோக்கி = அழகிய முடியையும் நோக்கி

ஆண் விருப்புற்று நின்றார் = ஆண்கள் விரும்பும்படி நின்றார் . ஆண்கள்மேல் விருப்புற்று நின்றார்

அவ் வளைத் தோளினாரே. = அந்த வளையல் அணிந்த தோள்களை கொண்ட பெண்களே

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்




இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்

இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்


நான் பெற்ற இரு வரத்தால், இராமன் கானகம் போனான், உன் தந்தை வானகம் போனான்,  நீ அரசு பெற்றாய் என்றாள் கைகேயி பரதனிடம்.

பரதனுக்குப் புரியவில்லை. இராமன் ஏன் கானகம் போனான் என்று. தசரதன் ஏன் இராமனை கானகம் அனுப்பினான் ? அவன் என்ன தவறு செய்தான் ? இராமன் தவறு செய்ய மாட்டானே. அப்படியே அவன் தவறு செய்து இருந்தாலும், அது ஒரு தாய் அவளுடைய பிள்ளைக்கு செய்யும் தீமை போல அல்லவா இருக்கும்.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால், அதை பிடித்து இழுத்து, தன் கால்களுக்கு இடையில் அமுக்கி, அதன் வாயை வலு கட்டாயாமாகத் திறந்து மருந்தைப் புகட்டுவாள் . வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் ஏதோ கொடுமை செய்வது போலத் தெரியும். பிள்ளை குணமாக வேண்டுமே என்று அவள் அப்படிச் செய்வாள். அது போல, இராமன் தீமையே செய்திருந்தாலும், அது நல்லதற்கே அன்றி வேறு ஒன்றும் அதில் தீமை இருக்காது என்று பரதன் நம்பினான்.

பாடல்

‘தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?

ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

பொருள்

‘தீயன = தீமையை

இராமனே செய்யுமேல் = இராமனே செய்திருந்தாலும்

அவை = அவை

தாய் செயல் அல்லவோ = ஒரு தாயின் செயல் போன்றது அல்லவா

தலத்துளோர்க்கு எலாம்? = இந்த பூ உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்

போயது  = இராமன் கானகம் போனது

தாதை விண் புக்க பின்னரோ? = தந்தையாகிய தசரதன் வானகம் போன பின்பா


ஆயதன் முன்னரோ?  = அல்லது அதன் முன்பா

அருளுவீர்’ என்றான் = அருள் கொண்டு சொல்லுங்கள் என்று கைகேயி பரதன்  கெஞ்சிக் கேட்கிறான்.

இன்று பிள்ளைகள் பெற்றோரோ ஆசிரியரோ, மற்ற பெரியவர்களோ ஏதாவது  கண்டித்துச்  சொன்னால், அவர்களை அந்த பிள்ளைகள் விரோதிகளைப் போல பார்க்கிறார்கள். அவர்கள் தங்களது நன்மைக்குத் தான் சொல்கிறார்கள் செய்கிறார்கள்  என்ற நம்பிக்கை இல்லை.

பெரியவர்கள் மேல், பெற்றவர்கள் மேல், ஆசிரியர்கள் மேல் பிள்ளைகளுக்கு நம்பிக்கை இல்லை.

நீ என்ன சொல்வது. நான் என்ன கேட்பது என்று இருக்கிறார்கள்.

எது சொன்னாலும் காரணம் கேட்கிறார்கள். சந்தேகம், நம்பிக்கை இன்மை பெரிதும் வளர்ந்து  விட்டது.

இராமன் மேல் பரதனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே அவன் செய்தது தவறு போலத் தோன்றினாலும், அது  தவறாக இருக்காது.  அது ஒரு நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்புகிறான்.

இப்படி ஒரு நம்பிக்கை பெற்றவர்கள் மேலும், ஆசிரியர்கள் மேலும், பெரியவர்கள் மேலும்  பிள்ளைகளுக்கு இருந்தால் அவர்கள் உயர்வார்களா இல்லையா ?

பரதன் உயர்ந்தான் என்று வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் கம்பன் சொல்கிறான்.

பிள்ளைகள் மனதில் நம்பிக்கையை வளர்க்க பரதன் கதை உதவும்.

சொல்லி வையுங்கள்.

விதை போடுவது உங்கள் வேலை. போடுங்கள்.

வளரும் , பலன் தரும் என்று நம்புங்கள்.

பரதன் நம்பினான். நீங்களும் நம்புங்கள்.

நம்புவதைத் தவிர வேறு என்னதான் வழி இருக்கிறது ?





Saturday, August 22, 2015

பிரபந்தம் - மூப்பு வருமுன்

பிரபந்தம் - மூப்பு வருமுன் 




மூப்பு என்பது ஏதோ ஒரு நாளில் வருவது இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் மூப்பு அடைந்து கொண்டே இருக்கிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக வயது எறிக் கொண்டே போகிறது.

அங்கங்கே சில பல நரை முடிகள். கண்ணாடியின் வலிமை (பவர்) ஏறிக் கொண்டே போகும். காது கொஞ்சம் கொஞ்சம் கேட்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்லில் பிரச்னை. 

இருந்தும், ஏதோ மூப்பு என்பது பின்னாளில் வரும் ஒன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

இதைப் படிக்கும் இந்த நேரத்திலும் உங்கள் வயது ஏறிக் கொண்டிருக்கிறது. 

மூப்பு வருவதற்கு முன் எல்லாவற்றையும் செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன ஒரு நாளில் வரும் ஒன்றா என்ன. 

மேலும், மூப்பு வந்த பின், நம் உடல் நம் வசம் இருக்காது.  நட என்றால் கால்கள் நடக்காது. முட்டு வலிக்கும். பேசலாம் என்றால் இருமல் வந்து தடுக்கும். பிறர் சொல்வது காதில் சரியாக விழாது. 

தள்ளிப் போடாதீர்கள். கை கால்கள் மற்றும் ஏனைய புலன்கள் நன்றாக இருக்கும் போது நல்ல விஷயங்களை செய்து விடுங்கள். 

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்.....

பாடல்  

முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.

சீர் பிரித்த பின் 

முற்ற மூத்துக் கோல் துணையாக  முன்னடி நோக்கி வளைந்து,
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் ,
பெற்ற தாய் போல்வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு, உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.

பொருள் 

முற்ற மூத்துக் = ரொம்பவும் வயதாகி 

கோல் துணையாக = கோலைத் துணையாகக் கொண்டு 

முன்னடி நோக்கி வளைந்து = முதுகு காலை பார்க்கப் போவது போல வளைந்து 

இற்ற கால் போல் = உடைந்த காலால் நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி 

தள்ளி = தள்ளித் தள்ளி நடந்து 

மெள்ள இருந்து = கொஞ்ச தூரம் நடந்தவுடன், மேலே நடக்க முடியாமல் ஓய்வு எடுத்து 

அங்கு = அன்று 

இளையா முன் = மூச்சு இரைத்து வலிமை குன்றும் முன் 
,
பெற்ற தாய் போல்வந்த = பெற்ற தாய் போல வடிவு கொண்டு வந்த 

பேய்ச்சி = பூதகி என்ற அரக்கியின் 

பெரு முலை ஊடு = பெருத்த முலைகளின் ஊடே 

உயிரை = அவளின் உயிரை 

வற்ற வாங்கி = ஒட்ட உறிஞ்சி வாங்கி 

உண்ட வாயான் = உண்ட வாயை கொண்ட கண்ணனை 

வதரி வணங்குதுமே = பத்ரி நாத்தில் வணங்குவோமே 


மூப்பை அறிந்து கொள்ளுங்கள். அது என்றோ வருவது இல்லை.  நாளும் வருவது. ஒவ்வொரு நொடியும் வருவது. 

புலன்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே நல்லதைச் செய்யுங்கள். 

Friday, August 21, 2015

இராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?

இராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?


பாட்டனார் வீட்டில் இருந்து வருகிறான் பரதன். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. நேராக வந்து தாயைப் பார்க்கிறான்.

தான் கேட்ட வரத்தால் தசரதன் மாண்டான், இராமன் கானகம் போனான், நீ அரசு பெற்றாய் என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறாள் கைகேயி.

அதைக் கேட்ட பரதன் துடித்துப்  போகிறான்.

"உன் சூழ்ச்சியினால் என் தந்தை இறந்து போனான், என் அண்ணன் கானகம் போனான்,  என்ற சொல்லைக் கேட்ட பின்னும், உன் வாயைக் கிழிக்காமல் இருக்கிறேனே...உலகில் உள்ளவர்கள் என்ன சொல்லுவார்கள் ...பரதனுக்கும் இந்த அரசை ஆள வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் போல என்று தானே சொல்லுவார்கள் " என்று நினைத்து துடிக்கிறான்.


பாடல்

‘மாண்டனன் எந்தை என் தன்முன் மாதவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டில் என் வாய்; அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?


பொருள் 

‘மாண்டனன் எந்தை = என் தந்தை இறந்தான்

என் தன்முன்  = எனக்கு முன் பிறந்தவன்

மாதவம் = பெரிய தவம் செய்ய

பூண்டனன் = தவ வேடம் பூண்டு கானகம் சென்றான்

நின் கொடும் புணர்ப்பினால் = உன்னுடைய பெரிய சூழ்ச்சியால்

என்றால் = என்று

கீண்டில் என் வாய் = கிழிக்க வில்லையே உன் வாயையை

அது கேட்டும் நின்ற யான் = இவற்றை கேட்டும் ஒன்றும் செய்யாமல் இருந்த நான்

ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்? = இந்த அரசை ஆசையால் ஆண்டதற்கு சமம் என்று ஆகும் அல்லவா ?

ஒரு தவற்றை நாமே செய்ய வேண்டும் என்று இல்லை.  நமக்காக மற்றவர்கள் செய்யும் போது அதை தட்டிக் கேட்காமல் இருந்தாலே அந்தத் தவற்றை நாமே செய்தது போலத்தான்.

ஒரு அலுவலகம், ஒரு நிறுவனம், ஒரு அரசு நடக்கிறது என்றால் அதன் தலைமையில் உள்ளவர்கள் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. அவர்களுக்கு கீழே உள்ளவர்களும் ஒழுங்காக இருக்கிறார்களா என்று அந்த தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால் அங்கு நடக்கும் தவறுகள் அவர்களே செய்தது மாதரித்தான்.

பிரதம மந்திரி நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு கீழே உள்ள மந்திரிகளும்  நல்லவர்களாக இருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, யாரோ ஒரு தவறைச் செய்து அதன் மூலம் நமக்கு ஒரு பலன்  கிடைக்கும் என்றால், அதையும் விலக்க வேண்டும்.

 பரதன் சொல்லிச்  வரம் கேட்கவில்லை கைகேயி

இருந்தாலும், அந்த வரத்தால் வரும் நன்மை தனக்கு வேண்டாம் என்று ஒதுக்குகிறான் பரதன்.

யார் செய்த தவறில் இருந்தும் நமக்கு ஒரு நன்மை வரும் என்றாலும், அது வேண்டாம் என்றே  வைக்க வேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஏன் பரதன் கோடி இராமர்களை விட உயர்ந்தான் என்று தெரிகிறதா ?

இன்னும் வரும்


இராமாயணம் - பரதன் - தவறான வழியில் வந்த செல்வம்

இராமாயணம் - பரதன் - தவறான  வழியில் வந்த செல்வம் 


தவறான வழியில் வரும் செல்வத்தை வெறுத்து ஒதுக்க வேண்டும். 

இன்று சிக்கல் என்ன என்றால் தவறு செய்ய யாருக்கும் கூச்சமோ தயக்கமோ இல்லை. மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் கொஞ்சம் இருக்கிறது. மத்தபடி தவறான வழியில் செல்வம் சேர்க்க நிறைய பேர் தயார்தான்.

ஓட்டுக்கு காசு என்றால் வாங்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களை பார்க்கலாம். 

உழைக்காமல், இலவசமாக ஏதாவது கிடைக்கிறது என்றால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அதைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். 

தவறு செய்வதில் சுகமும் சுவையும் வந்து விட்டது. 

இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் ஒரு கலை என்றே ஆகி விட்டது இந்த நாட்டில். 

எப்படி சாமர்த்தியமாக கொடுப்பது, எப்படி மாட்டிக் கொள்ளாமல் வாங்குவதில்  போட்டி நிலவுகிறது. 

இதற்கு வேறு வேறு பெயர்கள் - அன்பளிப்பு, capitation fee , நன்கொடை ,lobby என்று. 

தனக்கு சொந்தமில்லாத ஒன்றை யார் கொடுத்தாலும், எப்படி கொடுத்தாலும் தொடக் கூடாது. 

அயோத்தியின் அரசாட்சி பொறுப்பை கைகேயி கேட்ட வரத்தால் தசரதன் பரதனுக்கு கொடுத்தான். 

அதை, பரதன் ஏற்றுக் கொண்டிருந்தால் யாரும் அவன் மேல் குறை காண முடியாது. 

தனக்கு சொந்தமில்லாத ஒன்றை யார் தந்தாலும் எடுத்துக் கொள்ளக் கூடாது அதை "தீ வினை" என்று ஒதுக்கி விட்டான் பரதன். நாம் என்றால் "தீ வினை" செய்வது போல அதை எடுத்துக் கொண்டிருப்போம். தீ வினையை யார் ஒதுக்கிறார்கள் ?

சற்று நேரம் யோசித்துப் பார்ப்போம். 

பதவி என்றால் ஏதோ சாதாரண பதவி இல்லை. சக்கரவர்த்தி பதவி. முடி சூடிக் கொண்டால், பரதனை எதிர்த்து யார் பேச முடியும். அளவற்ற செல்வத்துக்கு அதிபதி ஆகி இருக்கலாம். 

 பரதனுக்கு தகாத வழியில் வரும் செல்வத்தின் மேல் துளியும் ஆசை இல்லை. அதை வெறுத்தான்.

எல்லோரும் அப்படி இருந்தால், இந்த நாட்டில் கறுப்பு பணம் இருக்குமா, கொள்ளை, திருட்டு, இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், கோர்ட்டு, வாய்தா, வக்கீல் என்று இதெல்லாம் இருக்குமா ? தனக்கு சொந்தமில்லாத ஒன்றின் மேல் ஆசை வைக்காமல் இருக்கும் ஒரு நல்ல குணம் ஒன்று இருந்தால் எவ்வளவு  நன்மை என்று யோசித்துப் பாருங்கள்.


‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
     தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
     சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
     தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
     தெரியன் அம்மா!


பொருள்

‘தாய் உரைகொண்டு = தாயின் வரத்தினால்

தாதை உதவிய = தந்தை கொடுத்த

தரணி தன்னை,= இந்த உலகை

‘‘தீவினை” என்ன நீத்து = தீவினை என்று விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கி = யோசனையை முகத்தில் தேக்கி

போயினை என்றபோழ்து, = சென்றாய் என்ற பொழுது

புகழினோய்! = புகழ் உடையவனே

தன்மை கண்டால், = உன் தன்மையைப் பார்த்தால்

ஆயிரம் இராமர்= ஆயிரம்  இராமர்கள்

நின் கேழ் ஆவரோ, = உனக்கு உவையாவரொ ?

தெரியன் அம்மா! = எனக்குத் தெரியவில்லை

மனத் தூய்மை என்றால் அது பரதன் தான் !

Thursday, August 20, 2015

இராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு இணையா?

இராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு இணையா?


பதினான்கு ஆண்டுகள் கழித்து வருவேன் என்று சொல்லிச் சென்றான் இராமன்.

பதினான்கு ஆண்டுகள் முடியப் போகிறது. கடைசி நாள். இராமன் வந்தபாடில்லை.

இராமன் வராததால் பரதன் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் விடுவேன் என்று கூறி தீயில் விழத் துணிகிறான்.

கோசலை ஓடி வருகிறாள்.

"நின்னும் நல்லன் என்றே" என்று இராமனைப் பார்த்து கூறிய கோசலை என்று பரதனைப் பார்த்துக்

"எண்ணிக்கையில் அடங்க முடியாத கோடிக் கணக்கான இராமர்களை ஒன்று சேர்த்தாலும், அண்ணல், உன் அருளுக்கு அருகில் கூட வர முடியாது. புண்ணியமே வடிவான உன் உயிர் பிரிந்தால் இந்த உலகில் ஒரு உயிரும் வாழாது "

என்று கூறினாள்


பாடல்

‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?


பொருள் 

‘எண் இல் = எண்ணிக்கை இல்லாத, எண்ணிக்கையில் அடங்காத

கோடி இராமர்கள் என்னினும் = கோடி இராமர்கள் சேர்ந்தால் கூட

அண்ணல் = அண்ணலே

நின் அருளுக்கு = உன்னுடைய அருளுக்கு

அருகு ஆவரோ? = அருகில் வர முடியுமா ?

புண்ணியம் எனும் = புண்ணியமே வடிவனான

நின் உயிர் போயினால் = உன் உயிர் போய் விட்டால்

மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? = மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ

பரதனின் அருளை நோக்கின்னால் அது ஆயிரம் இராமர்களின் அருளை விட அதிகமாக  இருக்கும் என்று இராமனைப் பெற்ற கோசலை கூறுகிறாள்.

பரதனால் நாடிழந்த இராமனின் தாய் கோசலை கூறுகிறாள் என்றால் அவன் அருள் அவ்வளவு  இருந்திருக்க வேண்டும்.

முதலில் இராமனுக்கு இணையாக இருந்தவன், பின் இராமனை விட நல்லவனாக மாறினான்  ("நின்னினும் நல்லன் "), பின் இராமனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தான் ("ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ") பின் கோடி இராமனை விட உயர்ந்தான் (எண்ணில் கோடி இராமர்).

அப்படி அவன் என்னதான் செய்து விட்டான் ?

அவன் மனத்தால் உயர்ந்தான்.

மனம் உயர் வாழ்வு உயரும். வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது  உயர்வு.

எப்படி பரதன் மனதால் உயர்ந்தான் என்று பார்ப்போம்.



Monday, August 17, 2015

திருவாசகம் - நீ செய்தது சரிதான்

திருவாசகம் - நீ செய்தது சரிதான் 


நமக்கு வாழ்க்கையில் எவ்வளவோ நல்லவை கிடைதிருகின்றன.

நல்ல நாடு - போர் இல்லாத நாடு, மக்களாட்சி உள்ள நாடு, அதிகம் இல்லாவிட்டாலும் போதுமான அடிப்படை வசதிகள் உள்ள நாடு...

நல்ல பெற்றோர், பிள்ளைகள், கணவன் அல்லது மனைவி, அருமையான பிள்ளைகள், சுகமான சூழ்நிலை, நல்ல படிப்பு, தகுதிக்கு தக்க வேலை என்று எவ்வளவோ நல்லது நமக்கு கிடைத்திருக்கிறது.

இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்கிறோம் ? என்ன சாதித்து இருக்கிறோம்.

உண்பதும், உடுத்துவதும், சில பல இன்பங்களை தூய்பதுமாய் வாழ்நாள் கழிந்து கொண்டிருகிறது.

மாணிக்க வாசகர் உருகுகிறார்.....

எனக்கு என்னவெல்லாம் நடந்ததோ, அது எனக்கு வேண்டியதுதான். நான் மீண்டும் பிறந்தது, சரிதான்.  கிடைத்தற்கரிய இந்த பிறவி கிடைத்த பின்னும், என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? பெண்ணின் துடிக்கும் உதடுகளையும், அவளின் நெகிழ்ந்து விலகிக் கிடக்கும் உடைகளையும், அவள் முகத்தில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளையும் பார்த்து இரசித்துக் கொண்டு என் காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறேன்....எனக்கு நல்லது எங்கே நடக்கப் போகிறது.

என்னை விட்டுவிட்டு, உன் அடியார்களுக்கு நீ அருள் தந்தாய், அதுவும் சரிதான்.

 பாடல்

முடித்தவாறும் என்றனக்கே தக்கதே, முன் அடியாரைப்
பிடித்தவாறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்தவாறும் துகில் இறையே சோர்ந்தவாறும் முகம் குறுவேர்
பொடித்தவாறும் இவை உணர்ந்து கேடு என்றனக்கே சூழ்ந்தேனே!

 பொருள்

தக்கதே என்ற சொல்லை

"முடித்தவாறும் என்றனக்கே"

"முன் அடியாரைப் பிடித்தவாறும்"

என்ற இரண்டு தொடர்களுக்கும் பின்னால் சேர்த்து

முடித்தவாறும் என்றனக்கே  தக்கதே என்றும்

முன் அடியாரைப் பிடித்தவாறும் தக்கதே என்றும் படிக்க வேண்டும்.

முடித்தவாறும் என்றனக்கே = எனக்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நீ நினைத்து முடித்து வைத்தாயோ

தக்கதே = அது சரியானதுதான்

முன் அடியாரைப் = முன்னால் அடியவர்களை

பிடித்தவாறும் = நீ சென்று பிடித்தவாறும் (தக்கதே)

சோராமல் = சோர்வில்லாமல், விடாமல்

சோரனேன் = சோரம் போன நான், கெட்டவனான நான்

இங்கு = இங்கு

ஒருத்தி = ஒருத்தி

வாய் துடித்தவாறும் = உதடுகள் துடிப்பதையும்

துகில் = உடை

இறையே = இரைந்து கிடப்பதும் (சிதறி கிடப்பதும்)

சோர்ந்தவாறும் = நெகிழ்ந்து (சோர்ந்து) கிடப்பதையும்

முகம் = முகத்தில்

குறுவேர் = சின்ன சின்ன வேர்வை

பொடித்தவாறும் = பொடிப் பொடியாக துளிர்பதையும்

இவை உணர்ந்து = இவற்றை உணர்ந்து

கேடு என்றனக்கே சூழ்ந்தேனே! = எனக்கு கேடே சூழ்ந்தது

சிற்றின்பத்தை மணிவாசகர் சொன்ன மாதிரி யார் சொன்னார்கள் !