Tuesday, December 6, 2016

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும் 


குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை சொல்கிறாள்.

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

பொருள்

தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்

தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்

சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும் 

 ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை

உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்

உடற்பிறப்பால் தோள்வலிபோம் = உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய் விடும்

பொற்றாலி யோடெவையும் போம் = தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


எளிமையான பாடல் தான்.

தாயோடு அறுசுவை போம் ...குழந்தை பிறந்தது முதல் அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது.   தாயின் கை பக்குவம் தான் ஒரு குழந்தையின்  அடிப்படை  சுவை. உலகில் எவ்வளவு பெரிய சுவையான உணவு செய்தாலும், "எங்க அம்மா செய்தது போல வருமா " என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம், சுவை என்ற ஒன்றை அறிவதே தாயின் உணவில் இருந்துதான்.  எப்போதாவது கணவன் அவனுடைய மனைவியிடம் "எங்க அம்மா கை பக்குவம் உனக்கு இல்லை " என்று கூறினால், மனைவி கோபம் கொள்ளக் கூடாது.  மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும், அம்மாவின்  சாப்பாட்டின் சுவை தான் அடிப்படை (base ). அதை மாற்ற முடியாது.

தந்தையோடு கல்வி போம் ... ஏன் ? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும்,  தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக  வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.

எவ்வளவோ வீட்டில் , தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே ?

அவ்வை சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல.

தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொன்னது அதனால் தான். ஒரு மகனின் அல்லது மகளின்   முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்"


சேயோடு தான் பெற்ற செல்வம் போம் .... பிள்ளைகள் தவறி விட்டால் எவ்வளவு  செல்வம் சம்பாதித்து என்ன பயன் ? அவர்கள் இல்லை என்றால் இருக்கும் செல்வத்திற்கு  ஒரு மதிப்பு இல்லை. 

மனைவி  என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக,  பிள்ளையாக ...எல்லாமாகி நிற்கிறாள்.

மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி.  

மனைவியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க   வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள். 

மனைவி என்பவள் ஒருவனுக்கு, தாயைப் போல அன்பு காட்டி, தகப்பனைப் போல   அறிவுரை கூறி,  உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளை போல  வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட  மனைவி போனால், எல்லாம் போய் விடும். 

இத்தனையும் தரும் மனைவியை , ஒருவன் எப்படி கொண்டாட வேண்டும் ....

Sunday, December 4, 2016

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு 


பொருள் கிடைப்பது கடினம்.  கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? அல்லது பெரும்பாலனோர் என்ன செய்கிறார்கள் ? வீடு வாங்குவது, மனை வாங்குவது, நகை நட்டு வாங்குவது, வங்கியில் போட்டு வைப்பது என்று ஏதோ செய்கிறார்கள். தங்கத்தின் விலை கீழே போகும். வட்டி விகிதம் குறையும். சில சமயம் முதலுக்கே மோசம் ஆகும். என்ன செய்யலாம் ?


பாடல்

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பாலிடை மூழ்கிப் புறள்வர்கீர்த்தி
யருட்பாலர் மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க ளறிவொன்றில்லார்
குருப்பாலர்க் கடவுளர்பால் வேதியர்பால்பு ரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்தீவார்.

பொருள்

பொருட்பாலை விரும்புவார்கள்  = பொருள் சேர்ப்பதை விரும்புவார்கள்

காமப்பாலிடை மூழ்கிப் = காமத்தில் மூழ்கி

புறள்வர் = புரளுவார்கள்

கீர்த்தி = புகழ்

யருட்பாலர்= அருள்தரும்

அறப்பாலைக் = அறச் செயல்களை

கனவிலுமே =  கனவில் கூட

விரும்பார்கள் = விரும்ப மாட்டார்கள்

அறிவொன்றில்லார் = அறிவில்லாதவர்கள்

குருப்பாலர்க் = நல்ல குருமார்களிடம்

கடவுளர்பால் = கடவுளிடம்

வேதியர்பால் = வேதியர்களிடம்

புரவலர்பால் = அரசனிடம்

கொடுக்கக் கோரார் = கொடுக்க நினைக்க மாட்டார்கள்

செருப்பாலே யடிப்பவர்க்கு = செருப்பால் அடிப்பவர்க்கு

விருப்பாலே = விருப்பமுடன்

கோடி = கோடி

செம்பொன் = உயர்ந்த  பொன்னை

சேவித்தீவார் = வணங்கி தருவார்கள்


பணம்  இருந்தால் முதலில் அதை வைத்து என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று  பார்க்க வேண்டும். குருவிடம் தருவது என்றால் , வித்தை கற்றுக் கொள்ள பணத்தை  செலவிட வேண்டும். வித்தை என்றால் ஏதோ பாடம் படிப்பது பட்டும் அல்ல. உடற் பயிற்சி கற்றுக்  கொள்ளுவது, நல்ல உணவு முறைகளை கற்றுக் கொள்ளுவது, ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்ளுவது, நம் ஆளுமையை (personality ) முன்னேற்றக் கற்றுக் கொள்ளுவது, குழந்தை வளர்ப்பு,  என்று பல விதங்களில் நம்மை உயர்த்திக் கொள்ள பணத்தை செலவிட வேண்டும்.

அடுத்து, கடவுளுக்கு தர வேண்டும். கடவுளுக்கு தருவது என்றால் ஏதோ கடவுள் பணம்  இல்லாமல் நம்மிடம் கையேந்தி நிற்கிறார் என்று அர்த்தம் அல்ல. தர்ம காரியங்களுக்கு செலவிட வேண்டும்.

அடுத்து, வேதியற்கு. உயர்ந்த வேதங்கள்,  தேவாரம்,திருவாசகம், பிரபந்தம்  போன்றவை யாரும்  வாசிக்காமல் , பாடாமல் நாளடைவில் தேய்ந்து நலிந்து போகும். அவை வழக்கொழிந்து போனால் மிகப் பெரிய நட்டம் நமக்கும்  நம் வருங்கால சந்ததிக்கும். அவை அப்படி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் , வேதியர்களை போற்றி, அவர்களுக்கு பொருள் கொடுத்து  காக்க வேண்டும்.

அடுத்து, செல்வாக்கு உள்ளவர்களை பரிச்சியம் செய்து கொள்ள பணம் செலவிட  வேண்டும். பெரிய இடத்தில் உள்ளவர்களின் தொடர்பு நமக்கு மிகுந்த நன்மையைத் தரும்.

அடுத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக செலுத்த வேண்டும்.

இப்படி எல்லாம் செய்யாமல் , கேளிக்கைகளில், மது, மாது என்று தீய வழிகளில்  பணத்தை செலவிட்டால், பின் தீயவர்கள் சகவாசம் ஏற்பட்டு, அவர்கள்  நம் பணத்தை நம்மிடம் இருந்து நம்மை துன்பப்  படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

யோசித்துப் பாருங்கள், உங்கள் வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று.

சம்பாதிப்பது மட்டும் அல்ல , சரியான வழியில் செலவழிப்பதும் ஒரு கலை.

அதையும் கற்றுக்  கொள்ளுங்கள்.

விவேக சிந்தாமணி உங்களை அந்த திசையில் சிந்திக்க தூண்டுகிறது.

சிந்தியுங்கள்.


திருக்குறள் - பரத்த நின் மார்பு

திருக்குறள் - பரத்த நின் மார்பு 


புலவி என்றால் பொய் கோபம். ஊடல். புலவி நுணுக்கம் என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். எப்படி மிக நுணுக்கமாக பெண்கள் ஒன்றை கண்டு பிடித்து கணவனோடு சண்டை போடுவார்கள் என்று சொல்ல வருகிறார். காதலில் அதுவும் ஒரு பகுதிதான்.

பாடல்

பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பொருள்

பெண்ணியலா ரெல்லாரும் = பெண் இயல்பு கொண்ட எல்லாரும்

கண்ணிற் = கண்ணால்

பொதுவுண்பர் = பொதுவாக உண்பார்கள், அல்லது இரசிப்பார்கள்

நண்ணேன் = பொருந்த மாட்டேன்

பரத்தநின் = பரத்தன்மை கொண்டவனான உன்

மார்பு = மார்பை

பெண் இயல்பு கொண்ட எல்லோரும் உன் மார்பை இரசிக்கிறார்கள். எனவே நான் உன்னை கட்டி பிடிக்க மாட்டேன் என்கிறாள் தலைவி.

பாடல் என்னவோ அவ்வளவுதான்.

அதில் உள்ள நுணுக்கம் எவ்வளவு தெரியுமா ? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பரத்த = ஒரு பெண் தவறான வழியில் வாழ்க்கை நடத்தினால் அவளை பரத்தை என்று  இந்த சமூகம் கூறுகிறது. அந்த வழியில் செல்லும் ஆணுக்கு ஒரு பெயரும் இல்லையா ?  வள்ளுவர் சொல்கிறார், அப்படி செல்பவனுக்குப் பெயர் "பரத்தன்".  நாலு பெண்களிடம் சென்று வருபவனுக்கு பரத்தன் என்று பெயர் தருகிறார்  வள்ளுவர்.


பெண்ணியலா ரெல்லாரும் = பெண்கள் எல்லாரும் என்று சொல்லவில்லை. பெண் இயல்பு  கொண்ட எல்லாரும். அப்படி என்றால் என்ன அர்த்தம் ?  பெண்களுக்கு  கற்பு, நாணம் போன்ற நல்ல குணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு  பெண் வடிவம், ஆணோடு சேரும் இயல்பு மட்டும் கொண்ட பெண்களை  பெண் இயல்பு கொண்டவர்கள் என்கிறார். பெண்கள் எல்லோரும் என்று  சொல்லி இருந்தால் அது சரியாக இருக்குமா ? இருக்காது.  தன் கணவனை தவிர   வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காத பெண்கள் இருப்பார்கள்  அல்லவா ? எனவே, பெண்கள் எல்லாரும் என்று சொல்ல முடியாது.

கண்ணிற் பொதுவுண்பர் = கண்ணால் பொதுவாக இரசிப்பார்கள் . பெண்களுக்கு  அவர்களுடைய கணவன் பெரிய ஆள் என்று மற்றவர்கள் போற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அதே சமயம் , தன் கணவனை தான் மட்டுமே இரசிக்க வேண்டும் என்ற  தன்னுடைமை உணர்வும் இருக்கும். கணவனை இன்னொரு பெண்  நெருங்குவதை எந்த பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டாள். இங்கே , தலைவி சொல்கிறாள், பெண் இயல்பு கொண்ட பெண்கள் கண்களால் பொதுவாக  பார்த்து இரசித்தார்களாம். அருகில் வரவில்லை. தொடவில்லை. கண்களால்  இரசித்தார்கள் . அவ்வளவுதான்.

பொது உண்பர் - ஒரு அழகான பெண் தெருவில் சென்றால் ஆண்கள் அவளை உன்னிப்பாக  கவனிப்பார்கள். அவள் அழகை வைத்த கண் வாங்காமல் ரசிப்பார்கள். பெண்களுக்கும் ஆண்கள் மேல் ஒரு கவர்ச்சி உண்டு. ஆனால், அவர்கள்  கூர்ந்து நோக்குவது இல்லை. அப்படி லேசாக கடை கண்ணால், அல்லது  கண் பார்வையை மேலோட்டமாக பார்ப்பது என்று உண்டு. ஆங்கிலத்தில்  tunnel vission , peripheral vision என்று  சொல்லுவார்கள்.

ஆண்களுக்கு வீட்டில் ஒரு பொருள் அந்த இடத்தில் இல்லை என்றால் தவித்துப் போவார்கள். கொஞ்சம் பக்கத்தில் இருக்கும். அது அவர்கள் கண்ணில் படாது. மனைவி வந்து "இங்க தான இருக்கு " என்று எடுத்து கையில் கொடுத்தால் அசடு வழிவார்கள். காரணம், அவர்கள் பார்வை ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டுமே பார்க்கும். அக்கம் பக்கம் பார்க்காது.

ஆனால் பெண்கள் பார்வை அப்படி அல்ல. சுத்து வட்டாரத்தை ஒரு அலசு அலசும். எனவேதான் பெண்கள் வேகமான வாகனங்களை ஓட்ட சற்று சிரமப் படுவார்கள்.  பார்வை நேரே சாலையில் மட்டும் இருப்பது இல்லை. அப்படியே அலசிக் கொண்டிருக்கும்.

இதை அறிந்த வள்ளுவர், "பொதுப் பார்வை" என்றார்.

நண்ணேன் = விரும்ப மாட்டேன், பொருந்த மாட்டேன். கட்டி அணைக்க மாட்டேன் என்கிறாள். அவனை அனைத்துக் கொள்ள ஆசைதான். இருந்தும், கூச்சம். எல்லாரும் பார்த்த மார்பு இது. எப்படியெல்லாம் பார்த்து இருப்பார்கள். சீ,  இப்படி எல்லோரும் பார்த்த மார்பை நான் எப்படி அணைப்பேன் என்று தள்ளி நிற்கிறாள்.

இதில் குறிப்பாக பார்க்க வேண்டியது என்ன என்றால்,  கணவன் மேல் தவறு இல்லை. மத்த பெண்கள் பார்த்தார்கள். அதற்கு அவன் என்ன செய்வான். அவன்  அழகாக இருக்கிறான் என்ற பெருமை அவளுக்கு. அவனை எல்லோரும் இரசிக்கிறார்கள் என்ற பெருமிதம் அவளுக்கு. இருந்தும், அவன் யாரையும்  பார்க்கவில்லை. என்னை மட்டுமே விரும்புகிறான் என்ற காதல் எண்ணம் அவளுக்கு.

ஆணின் ஆளுமையை படம் பிடிக்கிறார்.

பெண்ணின் காதலை படம் பிடிக்கிறார்.

மற்ற பெண்கள் பார்த்ததற்கே ஊடல் கொள்ளும் உன் மனைவி, நீ நிஜமாகவே அந்த பெண்கள் பின்னால்  போனால் எவ்வளவு வருந்துவாள் என்று சொல்லாமல் சொல்கிறார்.

அப்படி செய்தால் , உன் மனைவியின் உண்மையான காதலை இழப்பாய் என்று  கணவனுக்கு இரகசியமாக சொல்கிறார்.

காமத்துப் பாலிலும் அறம் சொல்லிச் செல்கிறார். 

Wednesday, November 30, 2016

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?


பாடல்

பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்  
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்  
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற  
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்  
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்  
அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்  
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்  
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!

பொருள்

பொய்விளக்கப் புகுகின்றீர் - நமக்கு எது சரி , எது தவறு என்று சரியாகத் தெரிவதில்லை. நாம் நினைப்பதுதான் சரி என்று நினைத்துக் கொண்டு , அவற்றை மற்றவர்களுக்கு விளக்கமாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று. ஒரு வேளை நாம் மெய் என்று நினைத்துக் கொண்டிருப்பது பொய்யாக இருந்தால் ? வாழ் நாள் எல்லாம் பொய்யை விளக்கிக் கொண்டு இருந்திருப்போம் அல்லவா ? அது சரியா ? நாம் மெய் என்று நம்புவதை மெய் தானா என்று அறிய வேண்டாமா ? யாரோ சொன்னார்கள், ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தோம் என்பதற்காக அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா ?


போது கழிக்கின்றீர் = பொழுதை வீணே கழிக்கின்றோம். டிவி, whatsapp , facebook , வார மற்றும் மாத இதழ்கள் , சினிமா , வெட்டி அரட்டை என்று பொழுதை வீணாக கழித்துக் கொண்டு இருக்கிறோம்.

புலைகொலைகள் புரிகின்றீர் = புன்மையான கொலைகள் செய்கின்றோம். நாம் உண்பதற்காக  மற்ற உயிர்களை கொல்கிறோம் . நான் தான் சைவம் ஆயிற்றியே , மாமிசம் சாப்பிடுவது இல்லையே என்று சொல்பவர்கள் கூட , தங்கள் தேவைக்காக  காலணி , கையுறை, belt , suitcase , wallet , purse போன்ற தேவைகளுக்காக  உயிர்க்கொலை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காபி டீ குடிப்பதற்காக  நாம் உபயோகப் படுத்தும் பாலுக்காக மாடுகள் எவ்வளவு துன்பப் படுத்தப்  படுகின்றன. உயிர் கொலை இல்லாவிட்டாலும், ஒருவரின் மனதை  எத்தனை விதங்களில் கொலை செய்கிறோம். கடின வார்த்தைகளால், அவர்களை உதாசீனப் படுத்துவதின் மூலம் எவ்வளவோ மனக் கொலைகள் செய்கிறோம்.

கலகல என்கின்றீர் = அர்த்தமில்லாத சிரிப்பு, பேச்சு நாளும் எத்தனை.

கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் = நாமும் சில பல நல்ல புத்தங்களை படித்திருப்போம்; நல்லவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி ஒன்றும் சுத்த  முட்டாளாக நாம் இருப்பது இல்லை. கீதை, குறள்  போன்ற உயர்ந்த நூல்களை  பற்றி கொஞ்சம் அறிந்திருப்போம். இருந்தும், அவை எல்லாம் கேட்க/படிக்க நல்லா இருக்கு. நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்று கூறி அவற்றை  ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் செல்கிறோம். கையில் விளக்கு இருந்தும்  பாழும் கிணற்றில் விழும் அறிவிலிகளைப் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கருத்திருந்தும் கருதீர் = அறிவு இருக்கிறது. நல்லது கெட்டது தெரிகிறது. இருந்தும் அவற்றை  கடை பிடிப்பது இல்லை. சின்ன உதாரணம், அதிகமாக  இனிப்பு உண்ணக் கூடாது என்று தெரிகிறது. இருந்தும் சமயம் கிடைக்கும் போது  விடுவது இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் என்று உள்ளே தள்ளி விடுகிறோம். கருத்து இருந்தும் கருதாமல் விட்டு விடுகிறோம்.

ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ  = ஐந்து புலன்களால் வரும் துன்பம், மூப்பு, மரணம் இவற்றைப் பற்றி எல்லாம்  நினைத்தால் அடிவயிற்றில் ஒரு பயம் வராதா ? ஏதோ நமக்கு மூப்பே வராது என்பது போலவும், நமக்கு மரணமே வராது என்பது போலவும்  நாம் நினைத்துக் கொண்டு வாழ்கிறோம். அது சரியா. மூப்பையும், மரணத்தையும் நினைத்தால் பயம் வர வேண்டாமா ?

கொடிய முயற்றுலகீர்  = கொடுமையான பலவற்றை செய்து கொண்டு இருக்கும்  உலகத்தீரே

மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம் = உண்மையை விளக்க எனது தந்தையாகிய இறைவன்  வரும்போது

மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே = அவனுடைய ஸ்பரிசம் கிடைக்கும் போது  நீங்கள் உயிர்ப்பு அடைவீர்கள்

என்கிறார் வள்ளலார்.

பொய்யானவற்றை விட்டு, பொழுதை நல்ல வழியில் செலவழித்து, உயிர் கொலை புரியாமல், இருக்கின்ற காலம் கொஞ்ச நாள் தான் என்று உணர்ந்து செயல்பட்டால்  ஆன்மீக அனுபவம் நிகழும் என்கிறார் வள்ளல் பெருமான்.

சிந்திப்போம்.


Tuesday, November 29, 2016

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப 


ஒரு அரசனிடமோ  அல்லது ஒரு வள்ளலிடமோ பரிசுகள் பெற்ற ஒருவன், எதிர் வரும் மற்றவனை அந்த அரசனிடமோ அல்லது வள்ளலிடமோ வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று அழைக்கப்படும். ஆற்றுப் படுத்துதல் என்றல் வழி காட்டுதல் என்று அர்த்தம்.

முருகனிடம் அருள் பெற்ற நக்கீரர் , மற்ற பக்தர்களை அவனிடம் வழி காட்டுவதாக அமைந்தது திரு முருகாற்றுப்படை என்ற நூல்.

அதில் முதல் பாடல்....

"உலகம் மகிழ்ச்சி அடைய, வானில் வலப்புறம் எழும் , பலர் புகழும் சூரியனை கடலில் இருந்து எழும் போது கண்டவர்களை போல , இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில் சுடர் விடும் ஒளி"

பாடல்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .

பொருள்

உலகம் = உலகம்

உவப்ப = மகிழ

வலன் = வலப்புறமாக

ஏர்பு = எழும்

திரிதரு =  வானில் திரிகின்ற

 பலர்புகழ் = பலரும் புகழும்

ஞாயிறு = சூரியன்

கடல்கண் டாஅங்கு = கடலில் இருந்து எழுவதைப் போல

 ஓஅற = இடைவெளி இல்லாமல் 

இமைக்கும் = இமைக்கும் நேரம்

சேண்விளங்கு = சேண் என்றால் உயரம். உயரே விளங்கும்

அவிர் = பிரகாசமான

ஒளி = ஒளி , வெளிச்சம்


இது என்ன பாடல். கடலில் எழும் சூரியனைப் போல உயரே சுடரும் வெளிச்சம். இது ஒரு பாடலா ? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது ? இதைப் படித்து  என்ன ஆகப் போகிறது ? என்று கேள்விகள் எழலாம்.

சற்று சிந்திப்போம்.

உலகம் உவப்ப - உலகம் மகிழ.

முதலாவது, எதையும் மங்கலச் சொல்லோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது தமிழ் மரபு. உலகம் என்பது மிக உயர்ந்த மங்கலச் சொல்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று  ஆரம்பித்தார் கம்பர்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். 

என்று ஆரம்பித்தார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

உலகம் என்பது நல்லோர் மாட்டு என்பது நிகண்டு.

உலகம் என்றால் உலகில் உள்ளவர்களை குறிக்கும். குறிப்பாக உலகில் உள்ள நல்லவர்களை குறிக்கும்.

இரண்டாவது,  உலகில் உள்ள அனைவரும் மகிழ என்று ஆரம்பிக்கிறார். இந்தியாவில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது இந்து சமயத்தில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது சைவ சமயத்தில் உள்ளவர்கள் மட்டும் மகிழ  என்றோ குறுகிய மனத்தோடு ஆரம்பிக்கவில்லை. உலகில் உள்ள அத்தனை மக்களும் இன்புற வேண்டும் என்று நினைக்கிறார்.

சேரவாரும் ஜெகத்தீரே என்று தாயுமானவர் அழைத்தார் போல.

மூன்றாவது, உலகம் எப்போது மகிழும் ? உலகில் உள்ள எல்லோரும் மகிழ வேண்டும். தினமும் எல்லோரும் மகிழ வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா ? அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறதா ? என்று யோசித்தார்.

இரவில் அனைத்து உயிர்களும்  உறங்குகின்றன. தவறு செய்யாதவன் நிம்மதியாக உறங்குகிறான். கடமையை ஒழுங்காகச் செய்தவன் நமதியாக உறங்குகிறான். எல்லா உயிர்களும் இரவில் உறங்கி காலையில் சூரியன் ஒளி வந்தவுடன்  எழுந்து சுறுசுறுப்பாக தங்கள் தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகின்றன. உலகமே விழித்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வீடும், நித்தமும் விழிக்கிறது.

இருள் துன்பத்திற்கு உதாரணம். ஒளி இன்பத்திற்கு உதாரணம். எப்படி சூரியன் வந்தவுடன் உலகம் விழித்து , வேலை செய்து, அதன் பலனைப் பெற்று இன்பமாக இருக்கிறதோ அது போல இன்பம் பெற வேண்டும் என்கிறார். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


நான்காவது, சூரியன் தினமும் வரும், போகும். அப்படியானால் இன்பமும் வந்து வந்து   போகுமா.நிரந்தரமான இன்பம் இல்லையா ?  மேலும் சில சமயம் சூரிய ஒளி மோகத்தால் மறைக்கப் படலாம். அல்லது சில இடங்களில் விழாமல் போகலாம். அல்லது சூரியன் ஒரு நாள் தீர்ந்து போகலாம். நிரந்தரமான ஒரு ஒளி உண்டா ? சூரியன் என்பது ஒரு உதாரணம். அதற்கும் மேல் ஒரு ஒளி உண்டு. அந்த ஒளி....

ஐந்தாவது, ஓஅற இமைக்கும், ஒரு நொடி கூட இல்லாமல் இருக்காது. எப்போதும் சுடர் விடும் ஒளி. அது  மட்டும் அல்ல.

ஆறாவது,  சேண்விளங்கு, உயரத்தில் விளங்கும். உயரம் என்றால் எங்கே ? எவ்வளவு உயரத்தில் ?

நமது உடலில் 7 சக்கரங்கள், அல்லது சக்தி இருக்கும் இடங்கள் என்று கூறுகிறார்கள். அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்யா, சஹஸ்ரார் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதில் கடைசியாக கூறிய சஹஸ்ரார் என்பது உடலுக்கு வெளியே உள்ள சக்கரம். நம் தலைக்கு மேல் ஒரு அங்குல உயரத்தில் உள்ள ஒரு இடம்.  சஹஸ்ரார் என்றால் ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை மலர் என்று அர்த்தம்.  

மூலாதாரம் - தண்டுவடத்தின் அடிப் பகுதி
ஸ்வாதிஸ்தானம் - பிறப்புறுப்பு
மணிப்பூரஹம் - தொப்புள்
அனாஹதம் - இருதயம்
விசுத்தம் - கழுத்து
ஆக்ஞா - புருவ மத்தி
சஹஸ்ரார் - உச்சந்தலைக்கு ஓரங்குலம் மேலே

இறைவனை வணங்கும் போது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்க வேண்டும் என்று கூறியது எதற்கு என்றால் , சஹஸ்ரார் என்ற அந்த இடத்தில் உள்ள அந்த ஒளியை தொட்டு காண்பிக்க.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

என்பார் மணிவாசகர்.

சிரம் குவிப்பவரை ஓங்கி வளரச் செய்வான். கரம் குவித்து நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குவது ஒரு முறை. இரு கையையும் தலைக்கு மேலே உயர்த்தி வணங்குவது இன்னொரு முறை.

மணிவாசகர் வேலை மெனக்கெட்டு இரண்டு வரியை எதற்காக செலவிடுகிறார் ? இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு பலன்களை சொல்கிறார்.

ஏன் ?

இரண்டும் வெவ்வேறானவை என்பதால்.

சேண் விளங்கு என்றால், அந்த உயர்ந்த இடத்தில் என்று பொருள்.

சற்று கூர்ந்து நோக்கினால் ஒன்று தெரியும். உடலுக்கு வெளியே உள்ள ஒரு இடம் , உடலில் உள்ள மற்ற சக்கரங்களோடு தொடர்பு கொண்டது. சக்தியை மூலாதாரத்தில் இருந்து கிளப்பி அங்கே கொண்டு செல்ல முடியும் என்கிறார்கள். அது போல, அங்கே உள்ள ஒளி உள்ளுக்கும் செல்லும் என்பது சொல்லாமல் சொன்ன கருத்து.

அந்த இடத்தில் என்ன நிகழ்கிறது ?


சேண் விளங்கு அவிர் ஒளி

பிரகாசமாக இருக்கும் ஒளி. இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் சுடர் விடும் ஒளி.

சூரியனின் ஒளியை கண்ணை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். வீட்டின்  கதவை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். இந்த சேண் விளங்கு அவிர் ஒளி  உள்ளுக்குள் சுடர் விடும் ஒளி. அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை தரும் ஒளி.

எல்லோரிடமும் ஏதோ ஒரு ஞானம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லாம் அறிந்தாரும் இல்லை, ஏதும் அறியாதரும் இல்லை.

ஆனால், நம் ஞானம் ஆணவம், கோபம், காமம் இவற்றால் மறைந்து நிற்கிறது.  இவை நீங்கும் போது , அந்த ஞான ஒளி மேலே    சென்று ஒளி விடும்.

இது முதல்  மூன்று வரிக்கு அர்த்தம்.

முழு  புத்தகத்தையும் படித்துப் பாருங்கள். 

Thursday, November 24, 2016

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு 


வாழ்க்கை நிலையாமை கூட எல்லோருக்கும் புரிந்து இருக்கிறது. இன்றில்லா விட்டால் என்றாவது ஒரு நாள் மரணம் வரும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆனால், தெரியாத இரண்டு நிலையாமை இருக்கிறது.

ஒன்று, செல்வம்.

இன்னொன்று இளமை.

இளமை எப்போதும் இருக்கும் என்று மனிதன் நினைக்கிறான். முதுமை எட்டிப் பார்த்தால் கூட அதை மறுதலிக்கிறான். எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அதை மறுக்கப் பார்க்கிறான்.

முடி நரைக்கிறது  - சாயம் பூசி அதை மீண்டும் கறுப்பாக காட்டுகிறான்.

பல் ஆடுகிறது, விழுகிறது - ஏதேதோ சிகிச்சை செய்து முன்பு போல் செய்து கொள்கிறான்.

எத்தனை க்ரீம்கள், பவுடர்கள் , பூச்சுகள், என்று கல்லறைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அழகாக , இளமையாக தோன்ற வேண்டும் என்று நினைப்பது என்ன தவறா ?

தவறில்லைதான்...இருந்தாலும், அந்த இளமையை பற்றிக் கொண்டு இருப்பதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

பாடல்

மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!-
முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு!

பொருள்

மற்று = பின்னால்

அறிவாம் = அறிவோம், செய்வோம்

நல் வினை; = நல்ல வினைகளை

யாம் இளையம்' = நாம் இளமையானவர்கள் என்று

என்னாது = எண்னாமல்


கைத்து = கையில்

உண்டாம் = உள்ள

போழ்தே = போதே

கரவாது = மறைக்காமல்

அறம் செய்ம்மின்! = தான தர்மங்களை செய்யுங்கள்

முற்றி = முற்றி

இருந்த = இருக்கும்

கனி ஒழிய = கனியை விட்டுவிட்டு

தீ வளியால் = வெப்பக் காற்றில்

நல் காய் = நல்ல காய்

உதிர்தலும் உண்டு! = உதிர்ந்து விடுவதும் உண்டு

எப்போதும் இளமையாக இருக்க நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்படி இளமையாக இருப்பதாக  நினைத்துக் கொண்டு, நல்ல காரியங்களை பின்னால் பார்த்துக்  கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், சில சமயம் கனிந்த பழம் இருக்க காய் உதிர்வதும் உண்டு.

வயதான பின் தான் மரணம் வரும், நினைவு தவறும் என்று நினைக்கக் கூடாது.

வாழ்க்கை என்பது நீர் குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் .

எனவே, நல்ல காரியங்களை தள்ளிப் போடாமல் உடன் செய்வது நல்லது.



Wednesday, November 23, 2016

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை 


ஒரு பெண் திருமணம் ஆன பின் தன் பெற்றோர், உடன் பிறந்தோர், தோழிகள் என்று எல்லோரையும் விட்டு விட்டு கணவன் பின்னால் வந்து விடுகிறாள். இத்தனையும் விட்டு விட்டு வருவது எவ்வளவு பெரிய கடினமான செயல் என்று ஆண்களுக்கு புரிவது இல்லை, காரணம் அவர்கள் அப்படி எதையும் விட்டு விட்டு வருவது இல்லை.

சரி, அந்த வலி புரியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஒரு ஆறுதல் கூட சொல்லுவது கிடையாது. என்ன பெரிய தியாகம் என்று அதை ஒரு சாதாரண செயலாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

மனைவியின் அருமை எப்போது தெரிகிறது என்றால் ஒன்று வாழ்வில் அடிபடும் போது அல்லது வயதான காலத்தில் புரிகிறது.

கோவலன் ரொம்பத்தான் ஆட்டம் போட்டான். கையில் மிகுந்த செல்வம். இளமை. கண்ணகியின் அருமை புரியவில்லை.

நாளடைவில் எல்லா செல்வமும் கரைந்து, அடி பட்டு , கண்ணகியிடம் வந்து நிற்கிறான். கண்ணகியும் அவனை வெறுத்து ஒதுக்கவில்லை. கால் கொலுசு இருக்கிறது என்று தருகிறாள்.

இருவரும், மதுரைக்கு போகிறார்கள்.

கண்ணகியை வீட்டில் வைத்துவிட்டு, சிலம்பை விற்க கோவலன் கிளம்புகிறான்.

இந்த இடத்தில்  , கோவலன் , கண்ணகியை போற்றுகிறான். "நீ எல்லோரையும் விட்டு விட்டு என் பின்னால் வந்து விட்டாய். நான் செய்த தவறுகளை எல்லாம் பொறுத்து  எனக்கு துணையாக இருந்தாய். பொன்னே, மணியே, பூவே ...கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி ...நான் போய் இந்த சிலம்பை விற்று, கொஞ்சம் பொருள் கொண்டு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

பாடல்

குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்

பொருள்

குடிமுதற் = குடி முதல், உன் குடும்பம் முதல்

சுற்றமும் = உறவினர்கள்

குற்றிளை யோரும் = குற்று + இளையோரும்.  குற்றேவல் செய்யும் வேலை ஆட்களையும் 

அடியோர் பாங்கும் = வேலை ஆட்களையும்

ஆயமும் நீங்கி = தோழிகளையும் விட்டு வந்தாய் 

நாணமும் = நாணத்தையும்

மடனும் = மடனையும்

நல்லோ ரேத்தும் = நல்லவர்கள் போற்றும்

பேணிய கற்பும் = பெருமையக்குரிய கற்பையும்

பெருந்துணை யாக = பெரிய துணையாகக்

என்னொடு = என்னோடு

போந்து = என்னோடு வந்து

ஈங்கு  = இங்கு

என் = என்னுடைய

துயர் = துன்பத்தை

களைந்த = போக்கிய

பொன்னே = பொன் போன்றவளே

கொடியே = கொடி போன்றவளே

புனைபூங் கோதாய் = பூக்களை புனைந்தவளே )சூடிக் கொண்டவளே )

நாணின் பாவாய் = நாணமே உருவான பெண்ணே

நீணில விளக்கே = நீண்ட இந்த நில உலகிற்கு விளக்கு போன்றவளே

கற்பின் கொழுந்தே = கற்பின் கொழுந்தே

பொற்பின் செல்வி = செல்வம் நிறைந்தவளே

சீறடிச் = உன்னுடைய சிறந்த பாதங்களில் உள்ள

சிலம்பி னொன்று = சிலம்பில் ஒன்று

கொண் டியான்போய் = கொண்டு யான் போய்

மாறி  வருவன் = மாற்றி வருவேன்

மயங்கா தொழிகெனக் = கவலைப் படாதே

பாடலின் உள்ளோடும் சில விஷயங்களை பார்ப்போம்.

முதலாவது,  மனைவியின் தியாகம் என்பதை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு துன்பம் வரும் வரை அல்லது வயதான காலம் வரை காத்திருக்கக் கூடாது.

இரண்டாவது, பெண்ணின் இயல்புகளில் ஒன்று "மடமை" என்பது. மடமை என்றால்  ஏதோ முட்டாள் தனம் என்று கொள்ளக் கூடாது. "கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" என்பார்கள். அதாவது, சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது, தான் கொண்ட எண்ணத்தில் இருந்து மாறாமை. ஒரு பெண் மனதில் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்ற யாராலும் முடியாது. சரி, தவறு, போன்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் இடம் இல்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும்  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு , கடைசியில் தான்  முதலில் எங்கு ஆரம்பித்தாளோ அங்கேயே வந்து நிற்பாள். தான் கொண்டவற்றின்  விளைவுகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை.

உதாரணம் , கைகேயி. கணவனை இழந்தாள் , ஆசை ஆசையாக வளர்த்த இராமனை  இழந்தாள் , பரதனும் அவளை இகழ்ந்தான். அதெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. தான் வேண்டும் என்று கேட்டது வேண்டும்.

உதாரணம், சீதை. பொன் மான் வேண்டும் என்று அடம் . இராமானுக்குத் தெரிந்திருக்கிறது. அவளிடம் சொல்லி புண்ணியம் இல்லை. இராமனுக்குத் தெரியும் பொன் மான் என்று ஒன்று கிடையாது. இலக்குவன் சொல்கிறான். இலக்குவனுக்குத் தெரிந்தது  இராமானுக்குத் தெரியாது. தெரியும். இருந்தும், சீதையிடம் சொல்லி பயனில்லை. அது தான் பெண் மனம்.

இவன் தான் என் கணவன், இது என் குடும்பம் , இதை நான் போற்றி பாதுகாக்க வேண்டும்  என்று ஒரு பெண்ணின் மனதில் விழுந்து விட்டால், பின் அங்கே என்ன நிகழ்ந்தாலும் அவள் அதை விட மாட்டாள்.  கணவனோ, பிள்ளைகளோ, மாமனார் மாமியார் என்று புகுந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவள் அதை விட்டு கொடுக்க மாட்டாள்.

கோவலன் செய்தது அனைத்தும் தவறு தான். இருந்தாலும் , அவனுக்கு துணை செய்வது  என்று அவள் முடிவு செய்து விட்டாள் . கடைசியாக இருப்பது சிலம்பு ஒன்று தான். இந்தா, இதையும் பெற்றுக் கொள் என்று நின்றாள்.

அரிச்சந்திரனுக்காக தன்னையே விற்க முன் வந்தாள் சந்திரமதி.

பெண்ணை, என்ன என்று சொல்லுவது. !

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றான் பாரதி.


 மூன்றாவது, எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும். மறந்தும்  அமங்கல சொற்களை  சொல்லக் கூடாது. மொழியிலேயே, அதன் இலக்கணத்திலேயே  மங்கல வழக்கு என்று வைத்த மொழி தமிழ் மொழி. இறந்தார் என்று  சொல்லுவது இல்லை. அமரர் ஆனார், இறைவன் திருவடி அடைந்தார் என்று தான்   சொல்லுவது வழக்கம். 

இங்கே, கோவலன் சிலம்பை விற்று வருகிறேன் என்று சொல்ல வேண்டும்.  விதி,  அவன் வாயில் அவனை அறியாமலேயே அமங்கல சொல் வந்து விழுகிறது. 

 "மாறி வருவன் மயங்கா தொழிகெனக்"

போய் மாறி வருவேன், நீ மயங்காது ஒழிக  என்கிறான்.

அவனுக்குத் தெரியாது  நடக்கப் போவது. இருந்தும், அவன் வாயில் அமங்கலச் சொல்  வருகிறது. பாடலை எழுதிய இளங்கோவுக்குத் தெரியும். கோவலன் வாயில் இருந்து அப்படி ஒரு சொல்லை வரும்படி எழுதுகிறார்.

நமக்கு ஒரு பாடம் அது. 

கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது. 

திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில்  விழுந்து விடக் கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள். 

நல்ல சொற்களை பேச வேண்டும். கேட்க வேண்டும்.

இப்படி ஆயிரம் வாழ்க்கைக்கு வேண்டிய நல்லவற்றை சொல்லுவது நம் தமிழ் இலக்கியம். படியுங்கள். 

நல்லதே நடக்கட்டும்.