Saturday, May 4, 2019

கம்ப இராமாயணம் - ஊசலின் உலாவுகின்றாள்

கம்ப இராமாயணம் - ஊசலின் உலாவுகின்றாள் 


சூர்பனகைக்கும் இராமனுக்கும் நடந்து கொண்டிருக்கின்ற உரையாடலை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

யார் என்று இராமன் கேட்டதற்கு, சூர்ப்பனகை பதில் சொல்லுகிறாள். அதற்கு இராமன் மேலும் சந்தேகம் கேட்கிறான். சூர்ப்பனகை விளக்குகிறாள். கடைசியில், தன் மனதில் உள்ள ஆசையை சொல்லி விடுகிறாள்.

இராமன் பேசாமல் நிற்கிறான்.

"எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. உன் எண்ணம் தவறானது. வேறு இடம் பார்" என்று சொல்லி இருக்கலாம்.

அல்லது, பலதார மணம் என்பது அந்தக் காலத்தில் உள்ள ஒன்று தான் (பாடல்களை அது நடந்த காலத்தோடு சேர்த்து வைத்துப் பார்த்தல்). எனவே, இராமன் இன்னொரு பெண்ணை நினைப்பதில் தவறில்லை என்று சூர்ப்பனகை நினைத்திருக்கலாம்.

இராமனின் உரையாடல் சூர்பனகைக்கு ஒரு தெளிவான முடிவைத் தரவில்லை. குழம்புகிறாள்.

"இப்படி பேசாமல் நிற்கிறானே. அவன் உள்ளத்தில் என்ன இருக்கிறது. என் மேல் ஆசை இருக்கிறதா ? அல்லது நான் வேண்டாம் என்று  நினைக்கிறானா. ஒரு குழப்பமாக இருக்கிறதே "

என்று தவிக்கிறாள் சூர்ப்பனகை.

பாடல்


பேசலன், இருந்த வள்ளல் உள்ளத்தின் 
     பெற்றி ஓராள்; 
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள், 
     'புகன்ற என்கண் 
ஆசை கண்டருளிற்று உண்டோ? அன்று 
     எனல் உண்டோ?' என்னும் 
ஊசலின் உலாவுகின்றாள்; மீட்டும் 
     ஓர் உரையைச் சொல்வாள்;

பொருள்


பேசலன் = பேசாமல் இருக்கிறான்

 இருந்த வள்ளல்  = இருக்கின்ற வள்ளலான இராமனின்

உள்ளத்தின் = மனதின்

பெற்றி ஓராள்;  = தன்மை, நிலைமை தெரியாதவள்

பூசல் வண்டு அரற்றும்  = பூவில் வண்டு முரலும்

கூந்தல் = கூந்தலைக் கொண்டவள்

பொய்ம் மகள்,  = பொய்யானவள்

'புகன்ற = இவற்றை எல்லாம் சொல்லிய

என்கண்  = என்னிடத்தில்

ஆசை கண்டருளிற்று உண்டோ?  = ஆசை கண்டு அருள் செய்வானா

அன்று எனல் உண்டோ?' = இல்லை வேண்டாம் என்று நினைக்கிறானா

 என்னும் = என்று

ஊசலின் உலாவுகின்றாள் = ஊஞ்சல் ஆடுவதைப் போல அவள் மனம் அங்கும் இங்கும் ஆடுகிறது

மீட்டும்  = மீண்டும்

ஓர் உரையைச் சொல்வாள்; = ஒரு செய்தி சொல்வாள்


ஒரு சிக்கலான, தர்ம சங்கடமான இடம்.

இராமன் உண்டு அல்லது இல்லை என்றது சொல்லி இருக்க வேண்டும்.

தேவை இல்லாமல் பல கேள்விகளை கேட்டுவிட்டு, பின் அவள் மனதில் உள்ள ஆசையை  சொன்ன பின், அமைதியாக நின்றால் என்ன அர்த்தம்?

நமக்குத் தெரியும் இராமன் ஏக பத்தினி விரதன் என்று.

சூர்பனகைக்குத் தெரியாதே.

வாசகர்களை ஒரு குழப்பத்தில், ஒரு நிலையற்ற தன்மையில், ஒரு எதிர்பார்ப்பில் கொண்டு வந்து  நிறுத்துகிறான் கம்பன்.

கதை சொல்லும் உத்தி அது.

வாசிப்பவனுக்கு  ஒரு tension , anxiety , suspense இருக்க வேண்டும். அப்போதுதான் கதை படிக்க சுவையாக இருக்கும்.

"ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அது ஒரு நாள் என்ன பண்ணுச்சு தெரியுமா ?..."

என்று கேள்வி கேட்டு நிறுத்தும் போது, கேட்பவர்களுக்கு ஒரு ஆவல் உண்டாடுகிறது.

"சொல்லு சொல்லு...என்ன பண்ணுச்சு " என்று கேட்பார்கள்.

சரி, இதுக்கு மேலேயும் சூர்ப்பனகை என்னதான் சொல்லி இருப்பாள் ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post.html

Monday, April 29, 2019

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை 


அம்மையே அப்பா என்று இறைவனை தொழுது கேட்டு இருக்கிறோம்.

என்ன பெத்த இராசா என்று குழந்தையை கொஞ்சுவதை கேட்டு இருக்கிறோம்.

"என்னை பெற்ற தாயார்" என்று ஒரு திருத்தலத்தில் அம்பாளின் பெயர் இருக்கிறது தெரியுமா ? அம்பாள் பெயரே "என்னைப் பெற்ற தாயார்" என்பது தான்.

அந்தத் திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

எல்லோரும் இறைவனிடம் சென்று அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள். பொருள், பதவி , வேண்டாவிட்டாலும், முக்தி கொடு, பரம பதம் கொடு, வைகுந்தம் கொடு, சுவர்க்கம் கொடு என்று ஏதோ ஒன்றைக் கேட்பார்கள்.

பக்தனிடம் இறைவன் கேட்டு வந்தான் என்று கேள்விப் பட்டதுண்டா? அதுவும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பகவானே நேரில் சென்று பக்தனிடம் கை ஏந்தி நின்ற கதை தெரியுமா ?

இறைவனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன பக்தனிடம் இருந்து விடப் போகிறது ?

எல்லாவற்றிற்கும் விடை, இந்தத் திருத்தலத்தில் இருக்கிறது. 


திரு நின்ற ஊர் !

சென்னைக்கு மிக சமீபத்தில், பூந்தமல்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

திரு நின்ற ஊர் என்பது எவ்வளவு அழகான பெயர். திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர். அது காலப் போக்கில் நம் மக்கள் வாயில் சிதிலமடைந்து திண்ணனூர் என்று ஆகி  விட்டது.

இடிந்த கோயில்களை புனரமைத்தது கும்பாபிஷேகம் செய்வது போல, திரிந்து போன ஊர் பெயர்களையும் மீட்டு எடுத்தால் எவ்வளவோ நல்லது.

இந்த திருத்தலத்தை திருமங்கை ஆழ்வார் மங்களாசானம் செய்து இருக்கிறார்.


பாடல்


ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
          இம்மையை மறுமைக்கு மருந்தினை
     ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
          ஐ யனைக் கையிலாழி யொன்றேந்திய
     கூற்றினை, குருமாமணிக் குன்றினை
          நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
     காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
          கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் - (1642)
                          பெரியதிருமொழி 7-10-5


பொருள் 

ஏற்றினை = ஏறு போல கம்பீரமானவனை 

இமயத்து = இமய மலையில் 

ளெம் மீசனை = எம் ஈசனை 

இம்மையை = இப்பிறவிக்கு 

மறுமைக்கு = மறு பிறவிக்கு 

மருந்தினை = மருந்து போன்றவனை 

ஆற்றலை = சக்தி வடிவானவனை 

அண்டத் தற்புறத் துய்த்திடும் = அண்டத்து அப்புறம் உயித்திடும் 

ஐ யனைக் = ஐயனை 

கையிலாழி யொன்றேந்திய = கையில் ஆழி ஒன்று ஏந்திய 

கூற்றினை = தீயவர்களுக்கு எமன் போன்றவனை 

குருமாமணிக் குன்றினை = நீல மாணிக்க மணி போன்ற குன்றினை 

நின்றவூர் = திரு நின்ற ஊரில் 

நின்ற = நின்ற 

நித்திலத் தொத்தினை = முத்தை போன்றவனை (நித்திலம் = முத்து) 

காற்றினைப் = காற்றினை 

புணலைச் = நீரை 

சென்று = சென்று 

நாடிக் = நாடி 

கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் = திரு கண்ணமை என்ற ஊரில் கண்டு கொண்டேனே 

திருமால் இருந்த ஊர் திருநின்றவூர் என்கிறார். கண்டது திருக்கண்ணமையில் என்கிறார். என்ன குழப்பம் இது ?

ஒரு முறை திருமங்கை ஆழ்வார் திருநின்றவூர் வழியாகச் சென்றாராம். சென்றவர், இந்த கோவிலை தரிசனம் செய்து விட்டு, மங்களாசாசனம் செய்யமால் சென்று விட்டாராம்.

அப்போது, இலக்குமி "சுவாமி, எல்லா ஊரிலும் மங்களாசாசனம் செய்யும்  திருமங்கை ஆழ்வார் நம்ம ஊரை மட்டும் விட்டு விட்டாரே, அவரிடம் சென்று ஒரு பாசுரம் வாங்கி வாருங்கள்" என்று சொன்னாளாம்.

"அதுவும் சரிதான். எப்படி இந்த ஊரை மட்டும் விட்டு விட முடியும். இப்பவே போய்  வாங்கி வருகிறேன் " என்று சுவாமி கிளம்பி விட்டார்.

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருமல்லை என்ற மாமல்லபுரத்துக்கு சென்று விட்டாராம். பெருமாள் விடவில்லை. மாமல்லபுரம் வரை தொடர்ந்து சென்று பாசுரம் வாங்கி வந்துவிட்டார்.

அந்தப் பாசுரம் ...

நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
          நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
     காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
          கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே

இப்போது கூட, மனைவிமார்கள் கணவனிடம் ஏதாவது வாங்கி வரும் படி சொல்லுவார்கள். சொல்லும் போது முழுதாக சொல்லுவது கிடையாது. அரைகுறையாக சொல்லிவிட வேண்டியது. கணவன் வாங்கி வந்த பின், "அய்ய , இதையா வாங்கிட்டு வந்தீங்க...போய் திருப்பிக் கொடுத்துட்டு வேற வாங்கிட்டு வாங்க" என்று சொல்லி திருப்பி அனுப்புவார்கள்.

பெருமாள், ஒரு பாசுரம் வாங்கி வந்து, இலக்குமியிடம் காட்டினார். உடனே இலக்குமி "என்ன எல்லா ஊருக்கும் பத்து பாட்டு பாடுகிறார். நமக்கு மட்டும் ஒரு பாட்டுத்தானா? போய்  இன்னொரு பாசுரம் வாங்கிட்டு வாங்க " என்று அனுப்பிவிட்டாள்.

வேற வழியில்லை. பெருமாள் மறுபடியும் கிளம்பி விட்டார்.

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணமை என்ற ஊருக்கு சென்று விட்டார். அங்கு வரை போய், பாடல் பெற்று வந்தாராம் பெருமாள்.

அந்தப் பாடல் தான் மேலே இருக்கும் "ஏற்றினை" என்று ஆரம்பிக்கும் மேலே சொன்ன பாடல்.

பக்தன் வாயால் பாடல் வேண்டும் என்பதால் ஆண்டவனுக்கு அவ்வளவு விருப்பம்.

இறைவனே வந்து எனக்கு ஒரு பாசுரம் கொடு என்று ஒன்றுக்கு இரண்டாக கேட்டு வாங்கிப் போன இடம் இது.


ஒரு முறை, இலக்குமி ஏதோ ஒரு காரணத்துக்காக சமுத்திர இராஜனிடம் கோபித்துக் கொண்டு பாற் கடலை விட்டு இங்கே வந்து விட்டாளாம்.

திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் அதற்கு "திரு நின்ற ஊர்" என்று பெயர் வந்தது.

சமுத்திர இராஜன் எவ்வளவோ சொல்லியும் தேவி சமாதானம் ஆகவில்லை.

கடைசியில், " நீ என்னை பெற்ற தாய் அல்லவா" என்று சொல்ல, தேவிக்கு மனம் குளிர்ந்து விட்டது. எந்தத் தாய்க்குத் தான் பிள்ளை மேல் தீராத கோபம் வரும்.

சமுத்திர இராஜன் "என்னை பெற்ற தாய்" என்று சொன்னதால், அம்பாளுக்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது.


இம்மைக்கும் மறுமைக்கும் மருந்தினை என்கிறார் திருமங்கை.

இந்த பிறவி இருக்கிறதே, அது ஒரு பிணி.

நோய் என்றால் மருந்து சாப்பிட்டால் குணம் ஆகிவிடும். பிணி அப்படி அல்ல.

உதாரணமாக பசி பிணி என்று சொல்லுவார்கள். எத்தனை உணவு சாப்பிட்டாலும், நாலு அஞ்சு மணி நேரம் கழித்து மீண்டும் பசிக்கும். அதுக்கு மருந்தே கிடையாது.

இந்தப் பிறவி இருக்கிறதே. அதுக்கும் மருந்தே கிடையாது. மருந்து கிடையாது என்றால் , கடையில், வைத்தியரிடம் கிடையாது.

ஆண்டவன் ஒருவன் தான் பிறவி நோய்க்கு மருந்து.

இராமாயணத்தில், இராமனையும் இலக்குவனையும் கண்ட அனுமன் சொல்லுவான், இவர்கள் "அரு மருந்து" என்று.

தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள்.

என்பது கம்ப வாக்கு.



அடுத்த முறை சென்னைப் பக்கம் போனால், பூந்தமல்லிக்கு பக்கத்தில் தான் இருக்கிறது இந்த இடம். ஒரு எட்டு போய் விட்டு வாருங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_29.html

Saturday, April 27, 2019

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை 


அம்மையே அப்பா என்று இறைவனை தொழுது கேட்டு இருக்கிறோம்.

என்ன பெத்த இராசா என்று குழந்தையை கொஞ்சுவதை கேட்டு இருக்கிறோம்.

"என்னை பெற்ற தாயார்" என்று ஒரு திருத்தலத்தில் அம்பாளின் பெயர் இருக்கிறது தெரியுமா ? அம்பாள் பெயரே "என்னைப் பெற்ற தாயார்" என்பது தான்.

அந்தத் திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

எல்லோரும் இறைவனிடம் சென்று அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள். பொருள், பதவி , வேண்டாவிட்டாலும், முக்தி கொடு, பரம பதம் கொடு, வைகுந்தம் கொடு, சுவர்க்கம் கொடு என்று ஏதோ ஒன்றைக் கேட்பார்கள்.

பக்தனிடம் இறைவன் கேட்டு வந்தான் என்று கேள்விப் பட்டதுண்டா? அதுவும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பகவானே நேரில் சென்று பக்தனிடம் கை ஏந்தி நின்ற கதை தெரியுமா ?

இறைவனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன பக்தனிடம் இருந்து விடப் போகிறது ?

எல்லாவற்றிற்கும் விடை, இந்தத் திருத்தலத்தில் இருக்கிறது. 


திரு நின்ற ஊர் !

சென்னைக்கு மிக சமீபத்தில், பூந்தமல்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

திரு நின்ற ஊர் என்பது எவ்வளவு அழகான பெயர். திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர். அது காலப் போக்கில் நம் மக்கள் வாயில் சிதிலமடைந்து திண்ணனூர் என்று ஆகி  விட்டது.

இடிந்த கோயில்களை புனரமைத்தது கும்பாபிஷேகம் செய்வது போல, திரிந்து போன ஊர் பெயர்களையும் மீட்டு எடுத்தால் எவ்வளவோ நல்லது.

இந்த திருத்தலத்தை திருமங்கை ஆழ்வார் மங்களாசானம் செய்து இருக்கிறார்.


பாடல்


ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
          இம்மையை மறுமைக்கு மருந்தினை
     ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
          ஐ யனைக் கையிலாழி யொன்றேந்திய
     கூற்றினை, குருமாமணிக் குன்றினை
          நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
     காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
          கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் - (1642)
                          பெரியதிருமொழி 7-10-5


தொடரும்

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_27.html

Friday, April 26, 2019

திருக்குறள் - மெல்ல நகும்

திருக்குறள் - மெல்ல நகும் 



திருக்குறள் என்றால் ஏதோ எப்பப் பார்த்தாலும் அறிவுரை சொல்லும் நூல் என்று நினைக்கக் கூடாது. காதலை, வள்ளுவரைப் போல மென்மையாக, இனிமையாகச் சொன்னவர் இன்னொருவர் இல்லை.

காதல் பற்றி சொல்வது என்பது கத்தி மேல் நடப்பது போல. கொஞ்சம் பிசகினாலும் விரசமாகிவிடும். ஆண் பெண் நெருக்கத்தை மென்மையாக, இனிமையாகச் சொல்ல வேண்டும்.

காமத்துப் பாலை ஒரு தாயும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு தகப்பனும் மகளும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு இடத்தில் கூட ஒரு இம்மி கூட தடம் மாறாமல் இருக்கும்.

உலக அறத்தை சொன்ன வள்ளுவரா இப்படியும் எழுதி இருக்கிறார் என்று வியக்கவைக்கும் பகுதி.

அதில் , குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறள்.

காதலன் சொல்கிறான், "நான் அவளைப் பார்க்கும் போது, நாணத்தால் தலை குனிந்து தன் நிலத்தைப்  பார்ப்பாள். நான் அவளை பார்க்க்காதபோது  என்னைப் பார்த்து மெல்ல புன்னகை பூப்பாள்"



பாடல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும் 


பொருள்

யான்நோக்கும் காலை  = நான் அவளை பார்க்கும் போது

நிலன்நோக்கும் = நிலத்தைப் பார்ப்பாள்

நோக்காக்கால் = நான் அவளை பார்க்காத போது

தான்நோக்கி = அவள் என்னை நோக்கி

மெல்ல நகும் = மெல்ல நகும்

இதில் என்ன அப்படி ஒரு romance இருக்கிறது என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

இந்த குறளில் ஒரு பிழை இருப்பது போலத் தெரிகிறது அல்லவா ?

நான் அவளை பார்க்கும் போது அவள் நிலத்தைப் பார்ப்பாள். அது சரி.

நான் அவளை பார்க்காத போது, அவள் என்னை பார்த்து, புன்முறுவல் செய்வாள்...என்று சொல்கிற போது எங்கேயோ இடிக்கிறதே.

நான் அவளைப் பார்க்காத போது, அவள் என்னை பார்த்தது எனக்கு எப்படி தெரியும்?

அதுவம் அவள் சிரித்தாள் என்பது எப்படி தெரியும் ?

வள்ளுவர் தவறி சொல்லி விட்டாரோ?

இல்லை.

அது ஒரு கல்லூரி வகுப்பறை என்று வைத்துக் கொள்வோம்.

அங்கே பையன்களும் பெண்களும் படிக்கிறார்கள்.

அவனுக்கு அவள் மேல் காதல். அவளுக்கும் தான். இருந்தும் இருவரும் வாய் விட்டு சொல்லிக் கொள்ளவில்லை. அப்பப்ப பேசிக் கொள்வார்கள். பட்டும் படாமல்  இருக்கும் அந்தப் பேச்சு.

இருந்தும் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வகுப்பு நடக்கும் போது அவன் அவளை மெல்ல திரும்பிப் பார்ப்பான். அவள் அவனை பார்ப்பதே இல்லை. அவள் உண்டு, அவள் பாடம் உண்டு என்று இருப்பாள்.

அவனுக்கான மனதுக்குள் ஏக்கம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் தாபம்...ஒரு நாளாவது  தன்னை திரும்பிப் பார்க்க மாட்டாளா என்று ஏங்குவான்.

அப்படி இருக்கும் போது, ஒரு நாள் அவன் வகுப்பை கவனித்துக் கொண்டு இருந்தான். எதேச்சையாக அவள் பக்கம் திரும்பினான்.

அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் பார்ப்பதை அவன் பார்த்து விட்டானே என்று அவளுக்குள் நாணம் ஒரு பக்கம். "சே...நான் பார்ப்பதை அவன் பார்த்து விட்டானே..." என்று வெட்கம் ஒரு பக்கம். நான் அவனை விரும்புகிறேன் என்றும் அவனுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என்று ஒரு காதல் ஒரு பக்கம். இத்தனையும் மனதில் அலை மோதுகிறது அவளுக்கு.

தலையை குனிந்து கொண்டு லேசாக சிரிக்கிறாள். புன் முறுவல் பூத்தாள் என்கிறார் பரிமேல் அழகர்.

தான் அவனை இரசிப்பதை அவன் அறிந்து கொண்டான் என்றவுடன் அந்தப் பெண்ணின் மனதில் பிறக்கும் வெட்கம், நாணம், கொஞ்சம் பயம், ரொம்ப காதல்  எல்லாம் அவளை அலைக்கழிக்கிறது.

என்ன செய்வாள் பாவம். வந்த நாணத்தில் மெல்ல ஒரு புன்முறுவல் பூக்கிறாள்.

இப்போது கூட பல திரைப்படங்களில் பார்க்கலாம்.

கதாநாயகன் வேகமாக போய் விடுவான். கதாநாயகி தூணுக்கு பின்னால் இருந்து  லேசாக அவனை எட்டிப் பார்ப்பாள். அவன் சட்டென்று திரும்பிப் பார்ப்பான்.

கதாநாயகிக்கு வெட்கம் பிடுங்கி தின்னும். நாக்கை கடித்துக் கொண்டு , கண்ணை மூடிக் கொண்டு "சீ" என்று செல்லமாக சிணுங்குவாள். முகம் எல்லாம் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும். தன்னை அறியாமலேயே ஒரு புன்னகை பிறக்கும்.

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன . காதல் அப்படியேதான் இருக்கிறது.

மனித மனத்தின் உணர்ச்சிகள் ஈரம் மாறாமல் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

இன்றும் பெண்கள், வெட்கத்தில் முகம் சிவந்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காதல் உணர்ச்சியை இதை விட மென்மையாக சொல்ல முடியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_26.html

Thursday, April 25, 2019

கம்ப இராமாயணம் - இராமனின் காதல் திருமணம்

கம்ப இராமாயணம் - இராமனின் காதல் திருமணம் 


இராமாயணம் என்றால் இராமன் + அயனம் என்று அர்த்தம். அயனம் என்றால் வழி, பாதை என்று பொருள். தட்சிணாயனம், உத்தராயணம் என்று சொல்லுவதுப் போல.

இராமாயணம் என்றால் இராமன் காட்டிய வழி என்று பொருள்.

இராமனை தெய்வமாகத் தொழுபவர்கள், அவன் வழியில் நடக்க விரும்புபவர்கள், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது ஏன் என்றால் இராமன் காதல் திருமணம் தான் செய்து கொண்டான்.

இது என்ன புதுக் கதையாக இருக்கிறது. இதுவரை யாருமே சொல்லவில்லையே. எத்தனையோ முறை இராமாயணம் படித்து இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம், யாரும், இதுவரை இராமன் காதல் திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னதே இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.

கம்பன் சொல்லியதை திரும்பிச் சொல்கிறேன். முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

காதல் எப்படி வரும் ? முதல் பார்வையிலேயே எங்கோ ஒரு மணி அடிக்கும். அடி வயிற்றில் இனம் புரியாத ஒரு சங்கடம். இவள் தானா  ? இவன் தானா என்று இதயம் ஒரு தடம் துடிப்பது மறக்கும். மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும். பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். கிட்ட போக வேண்டும். பேச வேண்டும், கூடவே இருக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும் என்று சொல்லுகிறார்கள்.  ஒரு கணம் கூட பிரிந்து இருக்க முடியாது. பிரிந்தாலும் மற்றவர் நினைவாகவே இருக்கும் என்றும் சொல்லுகிறார்கள்.

அப்படி எல்லாம் இராமாயணத்தில் இருந்ததாக சொல்லி இருக்கிறதா ? ஒரு வேளை அப்படி சொல்லி இருந்தால் அது காதல் என்று ஏற்றுக் கொள்வீர்களா? இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இராமன் மிதிலை நகர் வீதியில் வருகிறான். மாடத்தில் சீதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். கை தவறி பந்து வீதியில் செல்லும் இராமன் மேல் விழுந்து விடுகிறது.

மாடத்தில் இருந்து சீதை எட்டிப் பார்க்கிறாள். பந்து எங்கிருந்து வந்தது என்று இராமன் மேலே பார்க்கிறான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

அந்த ஒரு கணத்தை கம்பன் புகைப்படம் கிளிக் செய்வது போல படம் படிக்கிறான்.

"கணக்கில் அடங்காத நல்ல குணங்கள் உள்ள சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். அவர்கள் கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது. அவர்கள் உணர்வுகள் ஒன்று பட்டது. அண்ணலும் நோக்கினாள் , அவளும் நோக்கினாள்"

என்கிறான் கம்பன்.

உலகில் எந்த மூலையில் தேடினாலும் இது போல ஒரு romantic பாடல் கிடைப்பது அரிது.


பாடல்

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.

பொருள்

எண்ண அரு  = எண்ணிப்பார்க்க அருமையான, கடினமான. எண்ணில் அடங்காத

நலத்தினாள் = நல்ல குணங்களை உடையவள்

இனையள் = இந்தத் தன்மை உடையவள்

நின்றுழி. = நின்ற பொழுது

கண்ணொடு கண் இணை கவ்வி  = இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி

ஒன்றை ஒன்று உண்ணவும் = ஒன்றை மற்றொன்று உண்ணவும்

 நிலைபெறாது உணர்வும் ஒன்றிட. = நிலை பெறாத உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் = அண்ணலும் நோக்கினான்

அவளும் நோன்கினாள் = அவளும் நோக்கினாள்

சரி. இந்தப் பாடலை எத்தனை ஆயிரம் முறை கேட்டு இருப்போம். இதில் என்ன பெரிய புதுமை இருக்கிறது. ஆனாலும், அதற்கு இவ்வளவு build up தேவையா என்று  நீங்கள் கேட்பது புரிகிறது.

பார்ப்போம்.

இருவரில் யார் முதலில் பார்த்தது ? சீதை முதலில் பார்த்தாளா? இராமன் முதலில் பார்த்தானா ?

அண்ணல் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்று சொல்லி இருந்தால் முதலில் இராமன்  பார்த்தான், பின் சீதையும் பார்த்தாள் என்று வரும்.

அவள் நோக்கினாள் . அண்ணலும் நோக்கினான் என்று சொல்லி இருந்தால் முதலில் சீதை  பார்த்தாள். பின் இராமன் பார்த்தான் என்று வரும்.

கம்பன் அப்படி சொல்லவில்லை.

அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்கிறான்.

இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பார்வைகள் ஒன்றை ஒன்று ஒரே சமயத்தில் பார்த்துக் கொண்டன. இன்னும் சொல்லப் போனால், பார்வைகள் பார்த்துக் கொள்ள வில்லையாம்.

பார்வைகள் சந்தித்தன. அவர்களால் அந்த பார்வையை நகர்த்த முடியவில்லை. கண்ணை எடுக்க முடியவில்லை. அவளோ தோழிகளோடு மாடத்தில் நிற்கிறாள். அவனோ, வீதியில் பல வித மக்களோடு நடந்து போய் கொண்டிருக்கிறான். நின்று பார்க்க முடியாது. பார்வையை தவிர்த்தே ஆக வேண்டும். ஆனாலும் முடியவில்லை.

"கண்ணொடு கண் இணை கவ்வி"

கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டனவாம். கவ்விக் கொண்டது என்றால் அதை எளிதில் எடுக்க முடியாது. lock ஆகி விட்டது என்று சொல்வார்களே அது மாதிரி. இழுத்தாலும் வர மாட்டேன் என்கிறது. இருவருக்கும் சங்கடம்தான். பார்வையை மாற்ற விரும்புகிறார்கள். முடிந்தால்தானே. கண்கள் கவ்விக் பிடித்துக் கொண்டன. அறிவு சொல்கிறது, "ஏய் , எல்லோரும் பார்க்கிறார்கள். அப்படி பார்க்காதே, நாகரீகம் இல்லை " என்று. கண் விட்டால்தானே.

சரி, இப்படி ஒரு பெண் முன் பின் தெரியாத ஒரு ஆணை இப்படி பார்க்கலாமா? அது அவ்வளவு நல்ல செயலா. ஒரு பெண் பால்கனியில் நின்று  தெருவில் போகும் ஆணை முறைத்துப் பார்த்து கொண்டிருந்தால், நாம் அவளைப் பற்றி என்ன நினைப்போம்.

அப்படி எதுவும் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்று முதலிலேயே கம்பன் சொல்லி விடுகிறான்


"எண்ண அரு நலத்தினாள்"

எண்ணில் அடங்கா நல்ல குணம் கொண்டவள் என்று.  பொறுமை, கருணை, அன்பு, பாசம், நேசம், அருள் என்று எத்தனை நல்ல குணங்கள் உன்டோ அதற்கெல்லாம் மேலும்  நல்ல குணங்கள் உள்ளவள் அவள். இருந்தும் என்னவோ  அவனைப் பார்த்ததும் காதல் வந்து விட்டது. 

சரி, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் மனதில் என்ன ஓடியது?

'அடடா, இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளை திருமணம் செய்து கொண்டால்  எவ்வளவு நல்லா இருக்கும். அதுக்கு முன்னாடி அவளை கூட்டிக் கொண்டு  பார்க், பீச், சினிமா என்று ஜாலியா சுத்தலாம்" என்றெல்லாம் நினைத்திருப்பானோ?  அவள் என்ன நினைத்து இருப்பாள் ? "என்ன ஒரு கம்பீரமான  ஆள் இவன். இவனை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில்  ஆகி விடலாம் " என்று அவள் நினைத்து இருப்பாளோ . 

இரண்டுமே இல்லை. அதெல்லாம் நம்ம ஊரு லோக்கல் கதாநாயகன், கதாநாயகி நினைப்பது. 

பின் அவர்கள் என்னதான் நினைத்தார்கள். 

ஒன்றுமே நினைக்கவில்லை என்கிறான் கம்பன். 

"நிலைபெறாது உணர்வும் ஒன்றிட"

இந்த உணர்ச்சிகள் இருக்கிறதே ஒரு நிலையில் நிற்காது. அலைந்து கொண்டே இருக்கும். அவர்கள் பார்த்த அந்த ஒரு கணத்தில் உணர்ச்சிகள் ஒன்று பட்டுவிட்டன.  வேறு எந்த எண்ணமும் இல்லை. ஒன்றி விட்டது. 

இத்தனையும் நிகழ்ந்தது ஒரு நொடியில்.  அல்லது அதற்கும் குறைவான நேரத்தில். 

சரி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அதை வைத்துக் கொண்டு அவர்கள் ஒருவரை ஒருவர்   காதலித்தார்கள் என்று எப்படி சொல்லுவது ?

கம்பன் அதோடு நிற்கவில்லை. ....

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_25.html

Wednesday, April 24, 2019

கம்ப இராமாயணம் - நல்லளும் அல்லள்

கம்ப இராமாயணம் - நல்லளும் அல்லள் 


"மன்மதனிடம் இருந்து என்னைக் காப்பாற்று" என்று சூர்ப்பனகை இராமனிடம் வேண்டினாள்.

இதைக் கேட்ட இராமன், என்ன செய்திருக்க வேண்டும்.

சீ சீ இவள் கெட்டவள். தீய நோக்கத்தோடு வந்திருக்கிறாள் என்று அவளை போகச் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா. அது தான் இல்லை.

இராமன் அவளை எடை போடுகிறான்.

"இவள் நாணம் இல்லாதவள். விநோதமானவள். கீழான எண்ணங்கள் கொண்டவள். நல்லவள் அல்லள்" என்று நினைக்கிறான்.


பாடல்


சேண் உற நீண்டு, மீண்டு, செவ் 
     அரி சிதறி, வெவ்வேறு 
ஏண் உற மிளிர்ந்து, நானாவிதம் புரண்டு, 
     இருண்ட வாள்-கண் 
பூண் இயல் கொங்கை அன்னாள் 
     அம் மொழி புகறலோடும், 
'நாண் இலள், ஐயள், நொய்யள்; நல்லளும் 
     அல்லள்' என்றான்.

பொருள்

சேண் உற = நீண்ட தொலைவு சென்று

நீண்டு = நீளமாக சென்று

மீண்டு = மீண்டும் இங்கு வந்து

செவ் அரி சிதறி = கணங்கள் சிவந்து. கண்ணில் இரத்த நாளங்கள் சிவந்து இருக்க

வெவ்வேறு  = வெவ்வேறு

ஏண் உற மிளிர்ந்து = சிறப்பு கொண்டு பின் அதில் இருந்து பிறழ்ந்து

நானாவிதம் புரண்டு,  = நாலா பக்கங்களிலும் அலைந்து

இருண்ட = கரிய

வாள் = கூர்மையான கத்தி போன்ற

கண் = கண்களை உடையவள்

பூண் இயல் கொங்கை அன்னாள் = அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடையவள்

அம் மொழி புகறலோடும்,  = அவ்வாறு சொன்னவுடன்

'நாண் இலள் = நாணம் இல்லாதவள்

ஐயள் = கீழான எண்ணம் கொண்டவள்

நொய்யள் = விநோதமானவள்

 நல்லளும்  அல்லள்' என்றான். = நல்லவள் அல்லள் என்று இராமன் முடிவு செய்கிறான்.


எவ்வளவு தான் ஆடை அலங்காரம் பண்ணிக் கொண்டாலும், தேனொழுக பேசினாலும், உள்ளத்தில் உள்ளதை கண்கள் காட்டிக் கொடுத்து விடும்.

சூர்ப்பனகையின் கண்கள் அலை பாய்கின்றன.

தூரத்தில் உள்ளதை நோட்டம் விடுகிறது.

பின் பக்கத்தில் வருகிறது.

காமத்தால் சிவந்து இருக்கிறது.

நாலா பக்கமும் உருள்கிறது.

வள்ளுவர் சொல்லுவார்,

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம் 

என்று.

சேண் என்றால் தொலை தூரம் என்று பொருள்.

சேண் விளங்கு அவிர் ஒளி என்பார் நக்கீரர், திருமுருகாற்றுப் படையில்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .


தூரத்தில் இருக்கும் சூரிய ஒளி.

அவளின் சொல் மட்டும் கண்ணை வைத்து அவள் நல்லவள் இல்லை என்று அறிந்து கொள்கிறான்  இராமன். 

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_24.html

Monday, April 22, 2019

கம்ப இராமாயணம் - காமன் செய்யும் வன்மையை காத்தி

கம்ப இராமாயணம்  - காமன் செய்யும் வன்மையை காத்தி 


"உன்னிடம் ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது" என்று சூர்ப்பனகை இராமனிடம் கூறினாள். அதற்கு இராமன்

"என்ன வேண்டும் என்று சொல். முடிந்தால் செய்து தருகிறேன்" என்று கூறுகிறான்.

முன் பின் தெரியாத ஒரு இளம் பெண் வந்து உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது என்று சொன்னால், உடனே "சொல்லும், முடிந்தால் செய்து தருகிறேன்" என்று வாக்களிக்க வேண்டிய அவசியம் என்ன.

"என்ன காரியம்" என்று கேட்டு விட்டு, பின் செய்யலாமா  வேண்டாமா என்று முடிவு செய்யலாமே.

வந்த சூர்ப்பனகை சொல்கிறாள்.

அராக்கிதான் என்றாலும் அவளும் ஒரு பெண் தானே. பெண்ணுக்கு தன் உணர்ச்சிகளை வெளியே சொல்லத் தயக்கம் இருக்கும்தானே. நீட்டி முழக்கி சொல்லுகிறாள்.

"தாங்கள் கொண்ட காமத்தை தாங்களே உரைப்பது என்பது குல மகளிருக்கு ஏற்றது அல்ல. இருந்தும் ஏக்கம் தரும் அந்த நோய்க்கு என்ன செய்வேன். எனக்கு என்று யாரும் இல்லை. காமன் என்ற ஒருவன் என்னை ரொம்ப துன்பப் படுத்துகிறான். அவனிடம் இருந்து என்னை நீ காப்பாற்று" என்கிறாள்.


பாடல்

தாம் உறு காமத் தன்மை தாங்களே 
     உரைப்பது என்பது 
ஆம் எனல் ஆவது அன்றால், அருங் குல 
     மகளிர்க்கு அம்மா! 
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்? 
     யாரும் இல்லேன்;
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக்
     காத்தி' என்றாள்.


பொருள்

தாம் உறு  = தாங்கள் உற்ற, தாங்கள் பெற்ற

காமத் தன்மை = காமத்தை

தாங்களே = அவர்களே

உரைப்பது என்பது = சொல்வது என்பது

ஆம் எனல்  ஆவது = சரி என்று ஆவது

அன்றால் = இல்லை.

அருங் குல மகளிர்க்கு அம்மா!  = சிறந்த குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு

ஏமுறும் = ஏக்கம் தரும்

உயிர்க்கு = உயிருக்கு

நோவேன் = துன்பப் படுகிறேன்

என் செய்கேன்?  = என்ன செய்வேன் ?

யாரும் இல்லேன்; = துணை யாரும் இல்லை

காமன் என்று ஒருவன் = காமன் என்ற ஒருவன்

செய்யும் வன்மையைக் = செய்யும் வன்மையில் இருந்து

காத்தி' என்றாள். = என்ன காப்பாற்று என்றாள்

அந்தக்  காலத்தில் மடலேறுதல் என்று ஒரு வழக்கம் இருந்தது.

ஒரு ஆணுக்கு ஒரு பெண் மேல் காதல் வந்து விட்டால், அதை அந்தப் பெண்ணின் தகப்பனோ, குடும்பமோ எதிர்த்தால், அந்தப் பையன் பனை ஓலையில் குதிரை   மாதிரி செய்து, அதில் அமர்ந்து கொண்டு, ஊரில் உள்ள சின்ன பசங்களை கூப்பிட்டு அந்தக் குதிரையை இழுத்துக் கொண்டு போய் , தான் காதலித்த பெண்ணின்  வீட்டு வாசலில் நிறுத்தி விடுவான். அந்த குதிரை மேல் அவன் அமர்ந்து கொள்வான்.

ஊருக்கே தெரிந்து விடும். இந்தப் பையன், அந்த வீட்டுப் பெண்ணை விரும்புகிறான் என்று. வேறு யார் அந்தப் பெண்ணை மணந்து கொள்வார்கள்? ஊரில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து, பஞ்சாயத்து பண்ணி, பையனையும் பெண்ணையும் சேர்த்து வைப்பார்கள்.

அதற்கு மடல் ஏறுதல் என்று பெயர்.

இந்த மடல் ஏறுதல் என்பது ஆண்கள்தான் செய்து இருக்கிறார்கள். எந்தப் பெண்ணும் அப்படி செய்தது இல்லை.

பெண்ணுக்கு மட்டும் ஆசை இருக்காதா ? இருக்கும். இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்வது இல்லை.

இதைக் கண்டு வியக்கிறார் வள்ளுவர் ?

கடல் போல காமம் வந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெண்ணின் அடக்கம்  மிகப் பெரியது என்கிறார்.

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் 

பெண்ணின் பெருந்தக்கது இல் 


காமம் கடல் போன்றது என்கிறார் வள்ளுவர். மிகப் பெரியது. கடல் பொங்கி வந்தால் அதை கரை கட்டி தடுக்க முடியாது. இருந்தும் , இந்தப் பெண்கள் அந்த காமத்தை  வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெரிய சிறப்பை உடையவர்கள் என்று அவர்களை பாராட்டுகிறார்.

நல்ல குல பெண்கள், தாங்களே தங்கள் காமத்தை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது குறிப்பு.

இருந்தும், "நான் சொல்கிறேன். எனவே, நான் நல்ல குடியில் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்ளாதே. என்ன செய்வது, காமன் என்னை வருந்துகிறான்" என்கிறாள்.

தீயவர்களை எப்படி இனம் கண்டு கொள்வது?

அவர்கள் பார்க்க நன்றாக இருப்பார்கள். தேனொழுகப் பேசுவார்கள்.

அந்தப் பேச்சில் இருந்து அவர்களை கண்டு கொள்ளலாம்.

நல்லவர்கள் வாயில் சில சொற்கள் வரவே வராது. அப்படி வந்தால், அவர்கள் நல்லவர்கள் இல்லை என்று அறிந்து கொள்ளலாம். மறந்தும் கூட தீய வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து வராது.

ஆற்றில் வெள்ளம் வற்றி விட்டது. கால் வைக்க முடியவில்லை. சுட்டுக் பொசுக்கிறது. அந்த சமயத்தில் கூட, ஆற்று மண்ணை தோண்டினால் ஊற்று நீர் வரும். அது தாகம் தணிக்கும். அது போல, நல்லவர்கள் ஏழ்மை வயப் பட்டாலும், தங்களிடம் உதவி வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு "இல்லை" என்று சொல்ல மாட்டார்கள்.



ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.


உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்யாதவன் , நல்ல குடியில் பிறந்தவன் அல்ல. அவன் வாயில் "இல்லை" என்ற சொல் வராது. 

அது போல நல்ல குடியில் பிறந்த பெண்களுக்கு, தங்கள் காமத்தை வெளிப்படுத்தும் சொல் வராது. வந்தால், அவள் நல்ல குடியில் பிறந்தவள் அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். 

பண்பாட்டு பாடம். 


தீயவர்களை , அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ளும் பாடம்.

மேலும் படிப்போம்.