Wednesday, February 14, 2024

திரிகடுகம் - முன் செய்த வினை

 திரிகடுகம் - முன் செய்த வினை 


சில சமயம் நம்மால் தீர்க்க முடியாத சில துன்பத்தில் மாட்டிக் கொள்வோம். என்ன செய்தாலும், அதை தீர்க்க முடியாது. அப்போது நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தத் துன்பம் முன் செய்த வினையால் வந்தது என்று. 


அப்படிப்பட்ட மூன்று துன்பங்களை பட்டியலிடுகிறது திரிகடுகம்.


"எதிர்த்துப் பேசும் மனைவி, ஒழுக்கம் இல்லாத வேலையாள், பகைக் கொண்ட சுற்றம். இந்த மூன்றும் முன் செய்த வினையால் வந்து நின்று ஒருவனது இறுதிக் காலம் வரை வந்து துன்பம் தரும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது"


பாடல் 


எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்

செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப

முந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்

நொந்தார் செயக்கிடந்தது இல். . .


பொருள் 


எதிர்நிற்கும் பெண்ணும் = என்ன சொன்னாலும், எதிர் வாதம் செய்யும் மனைவியும். எதிர்த்துப் பேசும் மனைவியும். 



இயல்பில் தொழும்பும் = இயல்பு + இல் + தொழும்பும் = ஒழுக்கம் இல்லாத வேலையாட்களும் 


செயிர்நிற்கும் சுற்றமும்  ஆகி = எப்போதும் பகை கொண்டு இருக்கும் சுற்றத்தாரும் 



 மயிர்நரைப்ப = முடி நரைக்கும் வயதான காலம் வரை 



முந்தை = முன்பு செய்த 


பழவினையாய்த் = பழைய வினைகளாக வந்து 


தின்னும் = ஒருவனது இன்பத்தை தின்றுவிடும், கொன்று விடும் 


இவைமூன்றும் = இந்த மூன்றும் 


நொந்தார்  = நினைத்துத் துன்பப் படுபவர்கள் 


செயக்கிடந்தது இல் = செய்யக் கூடியது ஒன்றும் இல்லை 


இனி வரும் பிறவிகளில் நல்ல அன்பான மனைவி, ஒழுங்காக வேலை செய்யும் பணியாள், அன்பு பாராட்டும் சுற்றத்தார் இவை வேண்டுமானால், நல்ல வினைகளை இப்போதே செய்ய வேண்டும். 




Tuesday, February 13, 2024

திருக்குறள் - அருளற்றானின் அறம்

 திருக்குறள் - அருளற்றானின் அறம் 


பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் பல தான தர்மங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். கோவிலில் சென்று பெரிய நன்கொடை தருவார்கள். அன்னதானம், இலவச அரிசி, சேலை, துணிமணி என்று தருவார்கள். வெள்ளம் போன்ற இடர்கள் வந்தால் இலட்சக் கணக்கில் நன்கொடை தருவார்கள். 


அந்த தர்ம காரியங்களுக்குப் பின்னால் இருப்பது உயிர்கள் மேல் உள்ள அருள் அல்ல. என்னிடம் பணம் இருக்கிறது என்பதைக் காட்ட, அரசியல் செல்வாக்குப் பெற, தனக்குப் புகழ் சேர்க்க என்று பல காரணங்கள் இருக்கும். 


அவர்கள் செய்வதெல்லாம் அறத்தில் சேராது. அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது அறத்தில் சேராது.  


அது எப்படி என்றால், சில சமயம் சில மடையர்கள் வாயில் இருந்து அபூர்வமாக சில நல்ல தத்துவங்கள் வருவதைப் போல. போகிற போக்கில் ஏதாவது சொல்லிவிட்டுப் போவார்கள். "அட...இது இவனுக்கு எப்படித் தெரியும்" என்று ஆச்சரியப்படுவோம். அது அவன் இயற்கை அறிவு அல்ல. ஏதோ வந்து விழுந்தது. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 


ஏறல் எழுத்துப் போல என்பார்கள். கடற்கரையில் நண்டு அங்கும் இங்கும் அலையும். சில சமயம் அதன் தடம் 'ட' மாதிரி இருக்கும், சில சமயம் 'ப' மாதிரி இருக்கும். உடனே, "ஆஹா, இந்த நண்டுக்கு தமிழ் தெரியும்" என்று யாராவது சொல்லுவார்களா? 


அது போல முட்டாள் சொல்லும் மெய்ப் பொருளும், அருள் இல்லாதவன் செய்யும் அறமும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்


பொருள் 


தெருளாதான் = தெளிவு இல்லாதவன் 


மெய்ப்பொருள் = உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்ட உண்மைப் பொருளை 


கண்டற்றால் = கண்டு சொன்னால் 


தேரின் = நினைத்துப் பார்த்தால் 


அருளாதான் = அருள் இல்லாதவன் 


செய்யும் அறம் = செய்யும் அறம் போன்றது 


ஓட்டு வேண்டும் என்று தலைக்கு இவ்வளவு பணம் என்று ஒரு அரசியல்வாதி கொடுக்கலாம். அது அறமா?  இல்லை. 


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் 


என்றார் வள்ளலார்.  அவர் ஒன்றும் செய்யவில்லை. வாடினார். அது அவர் அந்த பயிரின் மேல் கொண்ட அருள். 


அருள்தான் அடிப்படை. அதன் வெளிப்பாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். செயலை வைத்து தீர்மானிக்க முடியாது. மனதை வைத்து தீர்மானிக்க வேண்டும். 




Monday, February 12, 2024

விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்

 விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்


உறவும் நட்பும் நல்லதா?


நமக்கு நாலு பேரு வேண்டாமா? அவரச ஆத்திரத்துக்கு ஒரு மனுஷாள் துணை வேண்டாமா?   தனி மரம் தோப்பாகுமா?  என்றெல்லாம் நாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


நிறைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அப்படி இல்லாதவர்கள் தனிமையில் வாடுகிறார்கள் என்று நினைக்கிறோம்.


அது சரிதானா? 


நட்பினாலும், உறவினாலும் அழிவு வருவது இல்லையா? என்று விவேக சிந்தாமணி கேள்வி எழுப்புகிறது. 


பாடல் 



அருமையும் பெருமை தானு மறிந்துடன் படுவர் தம்மால்

இருமையு மொருமை யாகி யின்புறற் கேதுவுண்டாம்

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்

ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ


சீர் பிரித்த பின் 


அருமையும் பெருமைதானும்  அறிந்து உடன் படுவர் தம்மால்

இருமைம் ஒருமையாகி இன்புறற்கு  ஏதுவுண்டாம்

பரிவிலாச் சகுனி போலப் பண்பு கெட்டவர்கள் நட்பால்

ஒருமையில்  நரகம் எய்தும் ஏதுவே வேய் உயரு மன்னோ


பொருள் 


அருமையும் = அருமையான, சிறப்பான 

பெருமைதானும் = பெருமைகளும் 


அறிந்து = அறிந்து 


உடன் படுவர் தம்மால் = நட்பாக இருப்பவர்களால் 


இருமையும் = இந்தப் பிறவியும், மறு பிறவியும் 


ஒருமையாகி = ஒன்றாகி 


இன்புறற்கு  = இன்பம் அடைவதற்கு 


ஏதுவுண்டாம் = வழி உண்டு 


பரிவிலாச் = பரிவு, பாசம் இல்லாதா 


சகுனி போலப் = சகுனியைப் போல 


பண்பு கெட்டவர்கள் நட்பால் = பண்பு இல்லாதவர்கள் நட்பினால் 


ஒருமையில் = உறுதியாக 


 நரகம் எய்தும் ஏதுவே = நரகத்தை அடையும் வழி அதுவே 


 வேய் உயரு மன்னோ = மூங்கில்கள் உயர்ந்த காட்டினை உள்ள நாட்டினை ஆளும் அரசனே 


அறிவும், பெருமையும் உள்ள நண்பர்களால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சகுனி போன்ற நண்பர்கள் வாய்த்தால் வாழ்க்கை நரகமாகி விடும். 


நாம் அந்த எல்லைகைளைத் தொட வேண்டாம். 


இன்றைய சகுனிகள் நம் நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பவர்கள். கண்ட கண்ட whatsapp ஐ forward செய்பவர்களும் சகுனிகள்தான். நம் நேரத்தை வீணடிப்பவர்கள். நாம் அந்த நேரத்தை வேறு நல்ல வழியில் செலவிட்டு இருந்தால், நமக்கு நன்மைகள் கிடைத்து இருக்கும். அதை தடுப்பவர்கள் அந்த சகுனிகள். 


வெட்டிப் பேச்சு, அரட்டை, தவறான செய்திகளை பரப்புவது, பேசுவது இதெல்லாம் கூட சகுனித்தனம் தான். 


நாம் அப்படி ஏதாவது செய்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். நம்மால் நம் நண்பர்கள் பயன் அடைகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். அவர்கள் வாழ்வை நாம் இனிமையாக்குகிரோமா என்று சிந்திக்க வேண்டும். 





Sunday, February 11, 2024

திருக்குறள் - பொருளும், அருளும்

 திருக்குறள் - பொருளும், அருளும் 


மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பினாலும், திறமையாலும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களாக ஆனவர்கள் உண்டு. பெரிய செல்வந்தர்கள் கூட தொழிலில் நட்டப்பட்டு, இருப்பதை எல்லாம் இழந்து, பின் மறுபடியும் பொருள் ஈட்டி உயர்ந்த நிலைக்கு வந்தவர்களும் உண்டு. 


பொருள் இல்லாவிட்டால் பரவாயில்லை. எப்படியாவது சம்பாதித்து விடலாம். நிறைய பேர் அப்படி சம்பாதித்துக் காட்டி இருக்கிறார்கள். 


ஆனால், அருள் இல்லாவிட்டால், ஒருக்காலும் மீண்டும் அருள் உடையவர்களாக ஆக முடியாது என்கிறார் வள்ளுவர். 


பாடல்  


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற்று ஆதல் அரிது


பொருள் 


பொருளற்றார் = பொருள் இல்லாதவர்கள், செல்வம் இல்லாதவர்கள் 


பூப்பர்  ஒருகால் = ஒரு காலத்தில் செல்வத்தை சம்பாதித்து விட முடியும் 


அருளற்றார் = அருள் இல்லாதவர்கள் 


அற்றார் = அருள் இல்லாதவர்களாகவே இருப்பார்கள் 


மற்று ஆதல் அரிது = மீண்டும் அருள் உடையவர்களாக மாறுவது கடினம். 


ஏன் அருள் இல்லாதவர்கள் மீண்டும் அருள் உள்ளவர்களாக மாற முடியாது?


அருள் இல்லாதவர்கள், அருள் அற்ற வழிகளில் சென்று பல பாவங்களைச் செய்வார்கள். தீயவர்களோடு சேர்ந்து கொண்டு அருள் அற்ற செயல்களைச் செய்வார்கள். 


அதில் இருந்து மீண்டு வருவது கடினம். அவர்கள் மீள நினைத்தால் கூட, கூட்டாளிகள் விட மாட்டார்கள். எங்கே இவன் வெளியே போய் நம்மைக் காட்டி கொடுத்து விடுவானோ என்று அஞ்சி அவனை வெளியே விட மாட்டார்கள். 


மேலும், அருள் அற்ற தீய செயல்களை செய்யும் போது, ஒருவன் அறியாமலேயே அவனுக்கு அதில் ஒரு உருசி வந்து விடும். ஒரு முறை இலஞ்சம் வாங்கி பொருள் சேர்த்து விட்டால், "அட, இது எளிய வழியாக இருக்கிறதே...இப்படியே இன்னும் கொஞ்சம் சேர்த்தால் என்ன " என்று தோன்றும். நிறைய செய்வான். மாட்டிக் கொள்வான். சிறை செல்ல வேண்டி வரும். எங்கிருந்து மீள்வது? 


இப்போதைக்கு கொஞ்சம் அப்படி இப்படி இருந்து பணம் சேர்ப்போம். பின்னால், நன்கொடை, கோவில், அன்ன தானம் என்று செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார் வள்ளுவர். 


அந்தப் பாதையில் போகாதே. போனால் திரும்பி வர மாட்டாய் என்று. 


அருள் அற்ற எந்த செயலை செய்யவும் அஞ்ச வேண்டும். இது நம்மை எங்கே கொண்டு செல்லுமோ, திரும்பி வர முடியாதே என்று அஞ்ச வேண்டும். 


சிலருக்குத் தோன்றும், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடுவேன் என்று. 


முயன்று பார்க்க வேண்டும். செல் போன் பார்ப்பது தீமை என்று தெரிந்தும் நிறுத்த முடிகிறதா?  காப்பி குடிப்பது தீமை என்று தெரிந்தும் நிறுத்த முடிகிறதா?  


எனவே, அருள் அற்ற வழியில் ஒரு அடி கூட எடுத்து வைக்கக் கூடாது. 


Saturday, February 10, 2024

அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை

 அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_10.html

எவ்வளவோ புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் எதைப் படிப்பது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கும். ஒரு நல்ல புத்தகத்தை எப்படி தேர்ந்து எடுப்பது? 


ஒரு நல்ல அற நூல் எதைச் சொல்லும் என்று பட்டியல் இடுகிறது அறநெறிச்சாரம். 


பாடல்  


மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்

செம்மை ஒன்று இன்மை துறவுடைமை - நன்மை

திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன

அறம் பத்தும் ஆன்ற குணம்


பொருள் 


மெய்மை = உண்மையைப் பற்றி சொல்ல வேண்டும் 


பொறையுடைமை = பொறுமை பற்றி போதிக்க வேண்டும் 


மேன்மை =  பெருமை, புகழ் இவற்றைத் தருவதாக இருக்க வேண்டும் 


தவம் = தவத்திற்கு துணை செய்ய வேண்டும் 


அடக்கம் = புலன் அடக்கம் பற்றி சொல்ல வேண்டும் 


செம்மை = சிறப்பான வாழ்க்கை பற்றி போதிக்க வேண்டும் 


ஒன்று இன்மை = தன்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதின் பெருமை பேச வேண்டும் 


துறவுடைமை  = துறவின் நன்மைகளைச் சொல்ல வேண்டும் 


நன்மை = நல்லது செய்வதைப் பற்றிச் சொல்ல வேண்டும் 


திறம்பா விரதம் தரித்தலோடு = மாறுபாடு இல்லாத, தவறாத விரதம் மேற் கொள்வதைப் பற்றி விளக்க வேண்டும் 


இன்ன அறம் பத்தும் ஆன்ற குணம் = இந்த பத்து குணங்களும் நல்ல அறத்துக்கு எடுத்துக் காட்டு. 


ஒரு நல்ல புத்தகம் என்றால் இவற்றைப் பற்றி பேச வேண்டும், எடுத்துச் சொல்ல வேண்டும். 


இருக்கின்ற கொஞ்ச நாளை நல்ல புத்தகங்களை வாசிப்பதில் செலவு செய்வோம். 




Wednesday, February 7, 2024

திருக்குறள் - இடம் இல்லை

 திருக்குறள் - இடம் இல்லை 


அருள் இல்லாமல் வாழ்ந்தால் என்ன ஆகும்?  அரசாங்கம் பிடித்து சிறையில் போட்டு விடுமா? அப்படி வாழ வேண்டும் என்பது என்ன சட்டமா? சட்டம் இல்லை என்றால் எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும்?


அருள் இல்லாமல் வாழ்ந்தால் யாரும் தண்டிக்க மாட்டார்கள். தாரளமாக அப்படி வாழலாம். சிக்கல் என்ன என்றால், வீட்டுலகத்து இன்பம் கிடைக்காது. அதாவது சுவர்க்கம் என்று சொல்கிறோமே, அந்த சொர்கத்தின் அனுபவம் கிடைக்காது. 


சொர்க்கம் என்பது உயர்ந்தபட்ச இன்ப அனுபவம். அது கிடைக்காமல் போய் விடும். 


பாடல் 



அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு


பொருள் 


அருள்இல்லார்க்கு = அருள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு 


அவ்வுலகம் இல்லை= சுவர்க்கம் கிடையாது 


பொருள்இலார்க்கு = பொருள் இல்லாதவர்களுக்கு 


இவ்வுலகம் = இந்த பூ உலகம் 


இல்லாகி யாங்கு = எப்படி இல்லையோ, அது போல. 


பொருள் இல்லாதவர்கள் இந்த உலகில் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏழைகள் இருக்கிறார்களே. அது எப்படி, பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்லலாம்? என்று கேட்டால், அதற்கு பரிமேலழகர் விளக்கம் தருகிறார். 


அவ்வுலகு, இவ்வுலகு என்பதெல்லாம் ஆகு பெயர். 


உலகு என்பது உலகில் உள்ள இன்பங்களுக்கு ஆகி வந்தது. 


அதாவது, பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகில் உள்ள இன்பங்கள் கிடைக்காதது போல, அருள் இல்லாதவர்களுக்கு அந்த உலகின் இன்பம் கிடைக்காது. 


சொர்கத்துக்கு ஒரு வேளை போனால் கூட, அங்குள்ள இன்பங்களை அனுபவிக்க முடியாது என்கிறார். 


அருள் இருந்து, பொருள் இல்லாவிட்டால், இந்த உலக இன்பம் கிடைக்காமல் போகலாம். 


பொருள் இருந்து, அருள் இல்லாவிட்டால், அந்த உலக இன்பங்கள் கிடைக்காது. 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        `


கம்ப இராமாயணம் - தேவரையும் தெறும் ஆற்றல்

 கம்ப இராமாயணம் -  தேவரையும் தெறும் ஆற்றல்


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகையின் புலம்பல் தொடர்கிறது. 


"தேவர்களையும் ஆட்டிப் படைக்கும் இராவணனுக்கும், அவன் தம்பிகளுக்கும் இந்த ஊண் உடம்பைக் கொண்ட மானிடர்களைக் கண்டு வலி குன்றிப் போனதென்ன" என்று புலம்புக்கிறாள். 


பாடல் 


தேனுடைய நறுந் தெரியல்

     தேவரையும் தெறும் ஆற்றல்

தான் உடைய இராவணற்கும், தம்பி

     யர்க்கும், தவிர்ந்ததோ?

ஊனுடைய உடம்பினர் ஆய், எம்

     குலத்தோர்க்கு உணவு ஆய

மானுடவர் மருங்கே புக்கு

     ஒடுங்கினதோ வலி? அம்மா!`


பொருள் 


தேனுடைய = தேன் வடியும் 


நறுந் = நல்ல, அழகிய 


 தெரியல் = பூ மாலை (அணிந்த)  


தேவரையும் = தேவர்களையும் 


 தெறும் ஆற்றல் =  வெற்றி பெறும் வலிமை  


தான் உடைய  = உடைய 


இராவணற்கும் = இராவணனுக்கும் 


தம்பியர்க்கும் = அவனுடைய தம்பியற்கும் 


தவிர்ந்ததோ? = அந்த வலிமை நீங்கிப் போய் விட்டதா? 


ஊனுடைய உடம்பினர் ஆய் = மாமிசத்தை உடைய உடலைக் கொண்ட 


எம் குலத்தோர்க்கு உணவு ஆய = எம் குல அரக்கர்களுக்கு உணவாகும் 


மானுடவர் = மனிதர்கள் 

 

மருங்கே புக்கு = உடலிடம் சென்று 


 ஒடுங்கினதோ வலி? அம்மா! = ஒடுங்கி விட்டதா அந்த வலிமை எல்லாம்