Wednesday, July 1, 2020

வில்லி பாரதம் - கண் மலரில் கை படாதோ ?

வில்லி பாரதம் - கண் மலரில் கை படாதோ ?



உறவுகளுக்குள்ளும், நட்பினிலும் சில சமயம் சிக்கல்கள் வந்து விடுகின்றன. உணர்ச்சி வேகத்தில் ஏதோ சொல் வந்து விழுந்து விடுகிறது அல்லது செயல் நிகழ்ந்து விடுகிறது.

அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அந்த உறவும் நட்பும் அற்றுப் போய் விடும்.

சரி சரி என்று ஏற்றுக் கொண்டு போகப் பழக வேண்டும்.

பதிலுக்கு பதில் சொல்வது, செய்வது என்று இருக்கக் கூடாது.

சில சமயம் தவறி நம் விரல் நம் கண்ணில் பட்டு விடுகிறது. வலி தான். கண் கலங்கித்தான் போகிறது. அதற்காக நாம் விரலை வெட்ட முடியுமா?

நம்மையும் அறியாமல் நம் பல் நம் நாக்கை நறுக்கென்று கடித்து விடுகிறது. என்ன செய்ய. சில சமயம் இரத்தம் கூட வரும். "என் நாக்கையா கடித்தாய்" என்று அந்தப் பல்லை பிடுங்கி வீச முடியுமா?

அது போல நண்பர்களும், உறவினர்களும் சில சமயம் நமக்குத் தவறு இழைத்து விடலாம். மன்னித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வனவாசம், அஞ்ஞாத வாசம் எல்லாம் முடிந்த பின் பாண்டவர்கள் கௌரவர்களிடம் கண்ணனை தூது அனுப்புகிறார்கள்.

அப்போது, தர்மன் சொல்கிறான்.

"கௌரவர்கள் செய்தது தவறுதான். பாஞ்சாலியின் துகிலை பற்றியது தவறுதான். என்ன செய்ய. சில சமயம் கண்ணில் கை படுவது போல  நிகழ்ந்தது அது.  நாங்கள் ஒருவருக்குள் ஒருவர். என் கண்ணில் என் கை பட்டால்  என் விரலை நான் வெட்டுவேனா. அது போல அவன் மேல் கோபித்து சண்டை போட வேண்டாம். சமாதானமாகப் போய் விடலாம்"

என்கிறான்.

பாடல்


'உரிமையுடன் தம்பியர் அன்று, உணர்வு அறியாமையின்,
                  அவைக்கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ? கேட்டோர்க்குப் பரிபவம் என்பது பிறரால்
                  பட்டால் அன்றோ?
கருதில், இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? கண் மலரில்
                  கை படாதோ?
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே!' என
                  மொழிந்தான்-புகழே பூண்பான்.

பொருள்


'உரிமையுடன் = உரிமையுடன் (பகையினால் அல்ல)

தம்பியர் அன்று = கௌரவர்கள் அன்று

உணர்வு அறியாமையின் = உணர்வு அல்லாமல்

அவைக்கண் = அரசவையில்

உரைத்த மாற்றம் = சொன்ன சொற்கள்

பரிபவமோ? = அவமானமா?

கேட்டோர்க்குப் = கேட்பவர்களுக்கு (அதாவது நமக்கு)

பரிபவம் என்பது  = அவமானம் என்பது

பிறரால் = நமக்கு உறவு அல்லாத பிறரால்

பட்டால் அன்றோ? = வருவது அன்றோ

கருதில் = இதை கருத்தில் கொண்டால்

இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? = இதை புரிந்து கொண்டால், இது எல்லோருக்கும் பொருந்தும் என்பது புரியும்

கண் மலரில் = கண்ணின் மேல்

கை படாதோ? = கை பட்டு விடாதா ?

பொரு தொழிலும் = பொருதல் சண்டை பிடித்தல். சண்டை பிடிக்கும் தொழில்

கடை நிலத்தில் கிடந்ததே!'  = கடைசியாக வருவது

என மொழிந்தான் = என்று கூறினான்

புகழே பூண்பான். = புகழை மட்டுமே அடைபவன்

இந்தப் பாட்டில் சில விடயங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

நாம் படிப்பது நமக்கு பயன் தர வேண்டும். சும்மா படித்து கொண்டே போவது. எவ்வளவு நல்ல நூல்களை படித்தாலும் வாழ்வில் ஒரு துளி கூட மாறாமல் அப்படியே செல்வது என்பது அறிவீனம்.

"அதெல்லாம் படிக்க நல்லா இருக்கும். நடை முறைக்கு சாத்தியம் இல்லை " என்று செக்கு மாடு மாதிரி பழைய வாழ்க்கையிலே சுத்தி சுத்தி வரக் கூடாது.

"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று படித்து இருக்கிறோம்.

குற்றம் பார்க்காமல் இருக்கிறோமா? பின் படித்ததின் பயன் என்ன?

தர்மன் அதை நடைமுறை படுத்திக் காட்டுகிறான்.

தனக்கும் தன் தம்பிகளுக்கும் எவ்வளவோ துன்பம் செய்து இருந்தாலும், அது கை விரல் கண்ணைக் குத்துவது மாதிரித்தான் என்று சொல்கிறான். கோபமே இல்லை.

இரண்டாவது,

"இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ?"

இது கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, எல்லோரும் நம் சொந்தம்தான்.  அப்படி   நினைத்து விட்டால், பின் யார் நம்மை அவமானம் செய்ய முடியும்?  சொல்பவன் அல்லது செய்பவன்  மற்றவன் என்று நினைத்தால்தானே கோபம் வரும்,  பகை வரும்..எல்லோரும் ஒரு குடும்பம் என்று நினைத்து விட்டால் பின் எங்கிருந்து அவமானம் வரும்.

இன்றைய சிக்கல் என்ன என்றால், பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி, உடன் பிறப்புகள் ஏதாவது சொன்னால் கூட தவறாக எடுத்துக் கொண்டு பகைமை பாராட்டும் ஒரு உலகிற்குள் வந்து விட்டோம் நாம்.

தர்மன், இந்த உலகத்தில் எல்லோரும் என் குடும்பம் தான். அவர்கள் சொன்னால் என்ன , செய்தால் என்ன என் தம்பிதானே என்று நினைக்கும் பக்குவத்துக்கு வந்து விட்டான்.

நம்மால் அந்த அளவு முடியாவிட்டாலும், நெருங்கிய சொந்தத்திற்குள்ளாவது  நாம் இதை கடை பிடிக்க முயல வேண்டும்..

மூன்றாவது,


"பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே"

சிக்கல் என்று வந்து விட்டால் சாம, தான, பேத , தண்டம் என்று சொல்லப் படும் நான்கு உபாயங்களில், தண்டம் அதாவது தண்டனை, சண்டை என்பது  நான்காவதாக, கடைசியில் வருவது. முதலில் சமாதானத்தை  செய்ய முயல்வோம்  என்கிறான்.

படித்ததை செயல் வாழ்க்கையில் கடை பிடிக்கிறான்.

நான்காவது,


"உரிமையுடன் தம்பியர் அன்று"


அவர்கள் செய்தது  கோபத்தால்,பொறாமையால். ஆனால் தர்மன் சொல்வதோ, "தம்பி என்ற உரிமையில் அப்படி செய்து விட்டார்கள்" என்று பெருந்தன்மையோடு  பார்க்கிறான். "சொன்னது யாரு, கணவன் தானே / மனைவி தானே/ பெற்றோர் தானே/ நம் பிள்ளை தானே...அவர்களுக்கு இல்லாத உரிமையா ...அவர்கள் என்னோடு இல்லாவிட்டால் வேறு யாரோடு சண்டை போடுவார்கள் " என்று நினைக்கும் பரி பக்குவம் வேண்டும்.

ஐந்தாவது,

உரிமை என்றால் ஏதோ நல்லது செய்வதற்கு மட்டும் தான் உரிமை என்று அல்ல. சில சமயம் கோபிக்கவும், அதனால் சில பல சொற்கள் வந்து விழுவதும், செயல் நிகழ்வதும் கூட உரிமையால் தான்.

ஆறாவது

"உணர்வு அறியாமையின்"

குழந்தைக்கு பல்  வளரும் போது  நம் கை விரலை இழுத்து வாயில் வைத்து  கடித்து விடும். கடிப்பது மட்டும் அல்ல, கடித்து விட்டு சிரிக்கவும் செய்யும்.  அது வலிக்கத்தான் செய்யும். அதற்காக குழந்தையை அடிக்க முடியுமா?  "நீ என் விரலை கடித்தாய் அல்லவா,  பார் பதிலுக்கு நான் உன் விரலை கடிக்கிறேன்" என்று  குழந்தையின் விரலை நாம் எடுத்துக்  கடிக்க முடியுமா?

நமக்கு வலிக்கும் என்று குழந்தைக்குத் தெரியாது. அதுக்கு ஈறு உறுத்தும். எதையாவாவது   கடிக்கும். தெரியாமல் செய்து விடும்.

அது போல, நம் சுற்றத்தார் நமக்கு ஏதாவது தவறு செய்தால், "தெரியாமல் செய்து விட்டார்கள் " என்று நினைத்து அதை பெரிது படுத்தக் கூடாது.

இதெல்லாம் வாழ்க்கையில் நடைமுறை படுத்த வேண்டும்.

இல்லை என்றால், பாடவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த குடும்பப் பகையை  அறிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? என்றோ நடந்த குடும்பச் சண்டை.  அதை ஏன் வேலை மெனக்கெட்டு படிக்க வேண்டும்?

கதையாகப் படிக்கக் கூடாது.

வாழ்க்கைப் பாடமாக படிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post.html

1 comment:

  1. மிக அருமையான பாடல். மிக அற்புதமான விளக்கம். நன்றி!

    ReplyDelete