Sunday, August 29, 2021

திருவரங்க கலம்பகம் - அற்றவர் சேர் திருவரங்கப் பெருமான்

திருவரங்க கலம்பகம் - அற்றவர் சேர் திருவரங்கப் பெருமான் 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் என்ற வைணவ இலக்கிய வல்லுநர் அருளிச் செய்த நூல் திருவரங்கக் கலம்பகம். 


அதில் இருந்து ஒரு பாடல்.


ஒரு அரசன், தன்னுடைய மகனுக்கு மறவர் குடியில் பிறந்த ஒரு பெண்ணை மணம் பேசி முடிக்க ஓலை அனுப்புகிறான். அந்தப் பெண்ணுக்கோ திருவரங்கத்து பெருமாள் மேல் தீராக் காதல். அந்தப் பெண்ணின் தகப்பன், ஓலை கொண்டு வந்தவனைப் பார்த்துக் கேட்கிறான் 


"அரசனின் திருமுகத்தை (ஓலையை. ஓலைக்கு இன்னொரு பேர் திருமுகம்) கொண்டு வந்த தூதனே, எங்களை யார் என்று நினைத்தாய்? பற்று அனைத்தையும் விட்டவர்கள் சேரும் திருவரங்கனின் தோழர் (குகன்) பரம்பரையில் வந்தவர்கள். 


சரி திருமுகம் கொண்டு வந்ததுதான் வந்தாய், மூக்கு, செவி, கண் எல்லாம் எங்கே? 


இளவரசனுக்கு (இள + அரசு) பெண் வேண்டும் என்றால் அரசுக்கு ஏற்ற ஏதாவது ஒரு ஆல மரத்தை கட்டி வைக்க வேண்டியது தானே"


என்று ஏளனம் செய்து திருப்பி அனுப்புவதாக அமைந்த கவிதை. 


பாடல்  


கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!

குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!

அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்

அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!

மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்த

வாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர்மன்னன்

பெற்ற இளவரசு ஆனால் ஆவின் கொம்பைப்

பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_29.html


(Please click the above link to continue reading)


கொற்றவன் தன் = அரசனுடைய 


திருமுகத்தைக் = ஓலையை 


கொணர்ந்த தூதா! = கொண்டு வந்த தூதா 


குறை உடலுக்கோ = குறை உள்ள உடலுக்கோ (முகம் மட்டும் தானே இருக்கிறது) 


மறவர் = மறவர் குடியில் பிறந்த 


கொம்பைக் கேட்டாய்! = பெண்ணைக் கேட்டாய் 


அற்றவர்சேர் = பற்று அற்றவர்கள் சேரும் 


 திருஅரங்கப் பெருமாள் = திரு அரங்கப் பெருமாளின் 


 தோழன் = தோழன் (குகன்) 


அவதரித்த = பிறந்த 


திருக்குலம் = குலம் 


என்றறியாய் போலும்! = என்று நீ அறியவில்லை போலும் 


மற்றதுதான் திருமுகமே ஆனால் = அது திருமுகம் என்றே வைத்துக் கொண்டாலும் 


அந்த = அதன் 


வாய், செவி, கண், மூக்கு எங்கே?  = வாய், செவி, கண், மூக்கு எங்கே 


மன்னர்மன்னன் = மாமன்னர் 


பெற்ற இளவரசு = பெற்ற பிள்ளையாகிய இளவரசன்


ஆனால் = என்றால் 


ஆவின் கொம்பைப் = ஆலமரத்தின் கொம்பை  அல்லவா 


பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே! = பிறந்த குலத்துக்கு ஏற்ப பேசி முடிக்க வேண்டியது தானே 


என்பது கவிதை. 


(உலகிலேயே மிகக் கடினமான காரியம் எது என்றால் கேட்டால் இது போன்ற மிக எளிமையான பாடலுக்கு உரை எழுதுவதுதான் போலும்....:))


எங்கோ ஒரு குகன், இராமன் மேல் அன்பு வைத்ததால், அவன் பின் வந்த எல்லோரும் இராமன் மேல் அன்பு பாராட்டுகிறார்கள். 


நல்லது என்றால் பின்பற்ற வேண்டியது தானே. 


பழைமை எல்லாம் மூடத்தனம் என்று ஒதுக்கும் ஒரு நிலை வந்து விட்டது. 


இது போன்ற இலக்கியங்கள் நாம் எப்படி வாழ்ந்தோம், நம் கலாசாரம் எப்படி இருந்தது என்று நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 

4 comments:

  1. நல்ல நையாண்டி நிரம்பிய கவிதையைப் படிக்கும்போது புன்முறுவல் வருகிறது.
    நன்றி.

    ReplyDelete
  2. மிகவும்சிறப்பு

    ReplyDelete
  3. திருவரங்க கலம்பகம் முதல் 10 பாடல் விளக்கம் கிடைக்குமா ஐயா.

    ReplyDelete
  4. அலின் கொம்பை....ஆவின் கொம்பல்ல

    ReplyDelete