Wednesday, February 16, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - விளையாட்டை விடுமின்

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - விளையாட்டை விடுமின் 


நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, மாலையில் விளையாடப் போவோம். விளையாட்டு மும்முரத்தில் நேரம் போவது தெரியாது. அப்போது, அம்மா வந்து "விளையாடினது போதும், விளக்கு வைக்கும் நேரம், வந்து கை கால் முகம் கழுவி படிக்க உக்காரு" என்று கூப்பிடுவாள். 


நாமும், இந்த உலகில் ஏதோ விளையாட்டாகத் தொடங்கினோம். ஒன்றில் இருந்து மற்றொன்றாக விளையாட்டு போய்க் கொண்டே இருக்கிறது. நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறோம். இரவு நெருங்குகிறது. விளையாட்டை நிறுத்திவிட்டு வேலையைப் பார்க்க வேண்டாமா? 


மணிவாசகர் அழைக்கிறார். "போதும் விளையாடியது. அடியவர்களாகிய நீங்கள், இந்த உலக விளையாட்டை விட்டுவிட்டு, இறைவன் திருவடியை அடைந்து, அவன் உளக் குறிப்பை அறிந்து அதன் படி நடவுங்கள். துன்பத்துக்கு இடமான இந்த உடலை விடுத்து, நம்மை சிவலோகம் கொண்டு செல்லும், அந்த பாம்பை அணிந்தவனது திருவடிகளை சரண் அடையுங்கள்" என்கிறார். 



பாடல் 




அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை;

கடி சேர் அடியே வந்து அடைந்து, கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பை;

செடி சேர் உடலைச் செல நீக்கி, சிவலோகத்தே நமை வைப்பான்

பொடி சேர் மேனிப் புயங்கன் தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_16.html


(Please click the above link to continue reading)


அடியார் ஆனீர் எல்லீரும் = அடியவர்களான நீங்கள் எல்லோரும் 


அகலவிடுமின் = தூர தள்ளிப் போடுங்கள் 


விளையாட்டை = விளையாட்டை 


கடி சேர் அடியே = சிறந்த திருவடிகளை 


வந்து அடைந்து = வந்து அடைந்து 


கடைக்கொண்டு இருமின் = கடைசி வரை பற்றிக் கொண்டு இருங்கள் 


திருக் குறிப்பை = எதை? அவன் உள்ளக் குறிப்பை 


செடி சேர்  உடலைச் = துன்பத்துக்கு இடமான இந்த உடலை 


செல நீக்கி = விட்டு நீங்கி 


சிவலோகத்தே நமை வைப்பான் = நம்மை சிவலோகத்தில் வைக்கும் 


பொடி சேர் மேனிப்  = சாம்பலை உடலில் பூசிக் கொண்ட 


புயங்கன் = பாம்பை அணிந்தவன் 


தன், பூ ஆர் கழற்கே = அவனுடைய பூக்கள் அணிந்த திருவடிகளில் 


புகவிடுமே = புக விடுவான் 


சிறு பிள்ளைகள் கடற்கரையில் விளையாட்டும் போது அங்குள்ள சிப்பி, சங்கு இவற்றை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ பெரிய பொக்கிஷம் கிடைத்த மாதிரி மகிழ்வார்கள். கொஞ்சம் வயது ஆகும் போது தெரியும் அது ஒண்ணும் அவ்வளவு பெரிய செல்வம் அல்ல என்று. அதை தூக்கிப் போட்டு விடுவார்கள். 


அது போலத்தான், சிகரெட் பெட்டி, குளிர்பானங்களின் மூடிகள், பேனா, கை கடிகாரம், என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை சேர்ப்பதும்,  பின் அது ஒன்றும் இல்லை என்று அதை தூக்கி போட்டுவிட்டு மற்றதின் போவதும் இயற்கையாக இருக்கிறது. 


அப்படி என்றால், இன்று நாம் சிறந்தது, உயர்ந்தது, முக்கியமானது என்று எதைக் கருதிக் கொண்டு இருக்கிறோமோ அது இன்னும் கொஞ்சக் காலத்தில் அர்த்தம் இல்லாதது என்று நாமே தூக்கி எறிவோம்.


பிள்ளையிடம் கேட்டால் சங்கும், சிப்பியும் விலை மதிக்க முடியாத ஒன்று என்று தான் சொல்லும். அதே பின்னொரு நாளில் அதை தூக்கி குப்பையில் போடும்.  அறிவு வளர்ச்சி.  அறிவு வளராமல் இருந்தால் நாற்பது வயதிலும் சங்கையும், சிப்பியையும் சேர்த்துக் கொண்டு இருக்கும். 


உறவுகள், பணம், பதவி, புகழ் என்று நாம் இன்று இன்றியமையாதது என்று நினைப்பவற்றை நாளை நாமே வேண்டாம் என்று தள்ளி வைப்போம்.  


அப்படி வேண்டாம் என்று தூக்கி போடுவதை இன்று ஏன் இவ்வளவு மெனக்கெட்டு தேடி பாதுகாப்பனேன்? அதை விட்டு விட்டு என்றும் மதிப்பு குறையாத ஒன்றை தேடலாம் அல்லவா?


அது, இறைவன் திருவடி என்கிறார் மணிவாசகர். இந்த பணம், புகழ், பதவி என்று தேடும் விளையாட்டு விளையாடினது போதும். நல்லதை தேடுவோம் என்கிறார். 


இல்லை, இறைவன் திருவடி ஒன்றும் உயர்ந்தது அல்ல, பணமும், பதவியும், புகழும் தான் உயர்ந்தது, நிரந்தரமானது என்றால், நம் பிள்ளை பருவத்தை நாம் நினைக்க வேண்டும். அப்போது எது நிரந்தரம் என்று நினைத்தோம்? பின் ஏன் அதை விட்டுவிட்டோம் என்று. 


ஊர் போக நேரம் ஆகிவிட்டது. வில்லையாட்டை விட்டுவிட்டு, பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் யாத்திரைக்கு என்று அழைக்கிறார். 


2 comments:

  1. நாம் இந்த உலகில் மதிப்பு வைத்துச் சேமிப்பவை விளையாட்டுப் பொருள்களே என்பது எண்ணத்தகுந்தது.

    ReplyDelete