Thursday, January 12, 2023

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை - சிவன்பெருந் தன்மையே

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை  - சிவன்பெருந் தன்மையே


நீங்கள் ஏதோ ஒரு வெளிநாடு சென்று அங்கு உள்ள ஒரு நல்ல இனிப்புப் பண்டத்தை சுவைத்து மகிழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதுவரை கண்டும், கேட்டும் இராத ஒரு சுவை. மிக அருமையாக இருக்கிறது. 


திரும்பி ஊருக்கு வருகிறீர்கள். உங்கள் நண்பரிடம் அந்த பண்டம் பற்றி கூறுகிறீர்கள். அவர் "அது என்ன நம்ம ஊர் இலட்டு போல இருக்குமா" என்கிறார். நீங்கள், "இல்ல இல்ல ..இலட்டு மாதிரி இருக்காது...அது வேற மாதிரி சுவை" என்கிறீர்கள். அவரோ "இலட்டு மாதிரி இல்லை என்றால் பாதுஷா மாதிரி இருக்குமா?" என்று கேட்கிறார். 


அவருக்கு எப்படிச்  சொல்லி விளங்கச் செய்வது? 


அது போலத் தான் ஆன்மீக அனுபவங்களும். 


ஆன்மீக அனுபவம் பெற்ற ஒருவர், முன் பின் தெரியாத ஒருவருக்கு எப்படி அதை விளங்கச் செய்வது?


ஒரு ஊரில் ஒரு நரி இருந்ததாம். அது அந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லை. அந்த ஊருக்கு வெளியூரில் இருந்து ஒரு நரி வந்தது. அந்த புது நரி கடற்கரை ஓரம் உள்ள ஒரு இடத்தில் இருந்து வந்தது. புதிய நரி, உள்ளூர் நரியிடம் கடலைப் பற்றி கூறியது. "கடல் ரொம்ப பெரிசா இருக்கும். ரொம்ப ஆழமா இருக்கும். எந்நேரமும் அலை அடித்துக் கொண்டே இருக்கும் " என்றெல்லாம் சொன்னது. 


உள்ளூர் நரி "சரி சரி நிறுத்து உன் கடல் புராணத்தை...இங்க பார்...இந்த கிணற்றைப் பார்" என்று சொல்லிவிட்டு, தன் வாலை கொஞ்சம் அதில் விட்டது. "இவ்வளவு ஆழம் இருக்குமா உன் கடல்" என்று கேட்டது. 


அதற்கு அந்த வெளியூர் நரி சிரித்துக் கொண்டே சொன்னது "இல்லப்பா...அதை விட ரொம்ப ஆழம்" என்றது. 


உள்ளூர் நரி, இன்னும் கொஞ்சம் வாலை உள்ளே விட்டது. "இவ்வளவு ஆழம்?" என்று கேட்டது. 


உள்ளூர் நரிக்கு தெரிந்தது எல்லாம் கிணறும், தன் வாலின் அளவும் தான். 


அது போல இன்னொரு கதை. கடல் அமையும், கிணற்று அமையும். கிணற்று ஆமை, கிணற்றுக்குள் கொஞ்சம் தூரம் நீந்தி காட்டி "கடல் இவ்வளவு பெரிசா இருக்குமா" என்று கேட்டதாம். 


அறியாத ஒன்றை நேரடியாக அனுபவம் இருந்தால் தான் அறிய முடியும். யார் எவ்வளவு சொன்னாலும் புரியாது. 


எவ்வாளவு புத்தகங்கள் படித்தாலும், எத்தனை உபன்யாசம் கேட்டாலும், எத்தனை ப்ளாக் படித்தாலும் தன் அனுபவம் இல்லாமல் நரி வாலால் கடல் அழ்ந்த கதையாகத்தான் முடியும். 


பாடல் 



கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_12.html


(pl click the above link to continue reading)


கூவ லாமை  = கூவல் + ஆமை = கிணற்று ஆமை 


குரைகட லாமையைக் = குரை கடல் ஆமையை = கடல் ஆமையை 


கூவ லோடொக்கு மோ  = கூவலோடு ஒக்குமோ = கிணறு போல பெரிசா இருக்குமா 


கட லென்றல்போல் = கடல் என்று கேட்டது போல 


பாவ காரிகள் = பாவம் செய்தவர்கள், அறியாதவர்கள் 


பார்ப்பரி தென்பரால் = பார்ப்பது அரிது என்பரால். சிவனை காண்பது அரிது என்பார்கள் 


தேவ தேவன் = தேவர்களுக்கு தேவன் ஆன 


சிவன்பெருந் தன்மையே.= சிவனின் பெருந்தன்மையை 


அதாவது, சிவன் , தன் பெருந்தன்மையால் எளியவர்களுக்கும் அருள் புரிவான். அதை அறியாத பாவிகள், சிவன் அருளை பெறுவது கடினம் என்று சொல்லித் திரிகிறார்கள். அவர்கள் கிணற்று ஆமை போன்றவர்கள் என்கிறது இந்த சிறு குறுந்தாண்டகம். 





No comments:

Post a Comment