Sunday, April 15, 2012

கம்ப இராமயாணம் - இராமன் கேட்ட வரம்


கம்ப இராமயாணம் - இராமன் கேட்ட வரம்



இராமன், இராவணனை கொன்றபின், சீதையை சிறை மீட்டு வரும் வழியில் வானுலகில்  இருந்து தசரதன் வருகிறான்.

இராமனை கட்டி அணைக்கிறான்.

அப்போது சொல்கிறான் "இராமா,  அன்று கைகேயி கேட்ட கொடிய வரம் என் மனத்தில் வேல் போல் குத்தி நின்றது.

இன்று உன்னை தழுவிய போது உன் மார்பு என்ற காந்தத்தால் அது இழுக்கப்பட்டு வெளியே வந்து  விட்டது. நான் சந்தோஷமாய் இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறான்.
 .
 இராமனும் இரண்டு வரம் கேட்கிறான்.
 .
 "நீ தீ எனத் துறந்த கைகேயியும் , பரதனையும் உன் மனைவி, மகன் என்று நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று வரம் கேட்கிறான்.
 .

 ----------------------------------------------------------------------------------
 ’ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை’   என, அழகன்
 ”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
 தாயும் தம்பியும் ஆம்  வரம் தருகஎனத் தாழ்ந்தான்
 வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம்  வழுத்தி
 --------------------------------------------------------------------------------
 
 ஆயினும் = ஆனாலும்
 

 
 உனக்கு அமைந்தது ஒன்று உரை = உனக்கு
 வேண்டியது ஒன்று கேள் என்று தசரதன் இராமனிடம் சொன்னான்.

 
 என, அழகன் = அப்படி சொன்ன உடன், அழகனான இராமன்

 தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் = தீயவள் என்று நீ துறந்த என்
 தெய்வமும் (கைகேயியும்)
 

 மகனும் = மகனாகிய பரதனும்


 தாயும்  தம்பியும் = தாயும், தம்பியும்
 

 ஆம் வரம் தருகஎனத் தாழ்ந்தான் =

ஆகும் வரம் தருக என்று தசரதன் அடி பணிந்து நின்றான்
 

 வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர்
 எலாம் வழுத்தி = அப்படி கேட்டவுடன், உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் வாய் திறந்து இராமன் வாழ்த்தி ஆராவாரம் செய்தன.
 

 ஆர்த்தல் என்றால் ஆரவாரம் செய்தல், நிறைத்தல்
 என்று பொருள்
 

 எவ்வளவு கருணை இருந்தால் இந்த வரம் கேட்கத்  தோன்றும்.

கைகேயியால் பட்ட துன்பம் கொஞ்சம் அல்ல.

பதினாலு வருடம் காட்டில் கஷ்டப்   பட்டான் இராமன்.

மனைவியை பிரிந்தான்.

இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணமான கைகேயியை "என்  தெய்வம்" என்கிறான்.

 நினைத்துக் கூட பார்க்க முடியாத கருணை  உள்ளம்.

Saturday, April 14, 2012

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம்

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம் 


மரண பயத்திற்கு முதல் காரணம் உடம்பின் மேல் உள்ள பற்று. மரண பயம் நீங்க வேண்டும் என்றால் உடல் பற்று நீங்க வேண்டும். இந்த உடல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.  பட்டினத்தார் இந்த உடலின் மேல் உள்ள கவனத்தை குறைக்க பல பாடல்கள் பாடி உள்ளார்...அதில் ஒன்று ....

கம்ப இராமாயணம் - எல்லை இல்லா இராமனின் அழகு


கம்ப இராமாயணம் - எல்லை இல்லா இராமனின் அழகு 


ஒவ்வொரு சமயமும் தங்கள் கடவுள் தான் உயர்ந்தவர் என்று அடம் பிடிக்கின்றன. 

மற்ற மதங்களின் கடவுளையோ , அந்த மதம் சொல்லும் உண்மையையோ பார்க்க கூட தயாராய் இல்லை.

தங்கள் கடவுள், தங்கள் உண்மை என்று அதிலேயே லயித்து விடுகிறார்கள் .. 

அது எப்படி இருக்கிறது என்றால் ராமனின் தோள் அழகை கண்டவர்கள் அதை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது மாதிரி இருந்ததாம் ..

அந்தப் பாடல் 

கம்ப இராமாயணம் - ஆண்களும் விரும்பும் இராமனின் அழகு



ஒரு ஆணின் அழகை ஒரு பெண் இரசிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. 

ஒரு ஆணின் அழகை இன்னொரு ஆண் விரும்புவது என்றால் அவன் எவ்வளவு அழகாய் இருக்க வேண்டும். 

இராமனின் பின்னால் சென்ற விஸ்வாமித்திரன், இராமனின் அழகைப் பார்த்து, வியக்கிறான், இவனின் அழகைப் பார்த்தால் ஆண்கள் எல்லாம் நாம் பெண்ணாய் பிறக்கவில்லையே என்று நினைப்பார்களாம்.....

அந்தப் பாடல் 

திரு அருட்பா - வள்ளலார் விண்ணப்பம்



இராமலிங்க அடிகளார் என்ற வள்ளலார், ஒரு சமய புரட்சியாளர். கோவில் பணம் பண்ணும் இடமாவது கண்டு இறைவனை ஜோதி ரூபகமாக வணங்கி, இறைவனை கோவிலில் இருந்து பக்தர்களின் பூஜை அறைக்கு கொண்டு வந்தார்.

அவரது திருஅருட்பா தித்திக்கும், உள்ளத்தை நெகிழ வைக்கும் பாடல்களின் தொகுப்பு ஆகும். 


-------------------------------------------------------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
----------------------------------------------------------------------------------------------------

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம். 

நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம்.
அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும். 

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம்.  உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை.
நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். 

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்

இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார். 

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்

மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்துறணும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும்.

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்

நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். 


தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே

வள்ளலார் காலத்தில் சென்னை வாழ் மக்கள் மிகுந்த தர்ம சிந்தனை உள்ளவர்களாய் இருந்து இருக்கிறார்கள். ஒரு வேளை அவர் இப்போது இருந்து இருந்து இருந்தாலும் அப்படித்தான் நினைத்து இருப்பாரோ ? அப்படி பட்ட சென்னையில் உறையும் கந்தவேளே 

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார் 

Friday, April 13, 2012

கம்ப இராமாயணம் - தம்பியா? சேவகனா?


 

தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொன்னான், இராமன் அரசன் வார்த்தைக்கு கட்டுப் பட்டு போனான். அவன் மனைவி சீதை, இராமன் கூட போனதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

லக்ஷ்மணன் போக வேண்டிய அவசியம் இல்லை. "நான் இங்கேயே இருந்து பரதனுக்கு உதவியா இருக்கேன்" என்று சொல்லி இருந்தால், யாரும் ஒன்றும் சொல்லி இருக்க முடியாது.

லக்ஷ்மணன் செய்தது மிகப் பெரிய தியாகம்.

இராமன் கானகம் போகப் புறப்பட்டு விட்டான், லக்ஷ்மணன் நானும் கூட வருகிறேன் என்று கிளம்பினான்.

லக்ஷ்மனனின் தாயிடம் (சுமித்திரை) விடை பெறச் செல்கிறான். மொத்த கம்ப ராமயணத்தில் அவள் இரண்டே இரண்டு பாடல் தான் சொல்லுகிறாள். அந்த இரண்டாவது பாடல் இது.
.
"நீ இராமன் கூட போ. தம்பியாக இல்ல, ஒரு அடிமை மாதிரி போ. அவன் திரும்பி வந்தால் வா, இல்லை என்றால் அவனுக்கு முன் நீ முடி" என்றாள்.
.
தம்பி என்ற உறவு இருந்தால், ஒரு வேளை அண்ணனிடம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.

அண்ணனையே கொஞ்சம் வேலை வாங்கலாம். "எனக்கு இன்னைக்கு ரொம்ப கால் வலிக்குது, நீயே போய் சாப்பிட ஏதாவது கொண்டு வா" என்று சொல்லலாம். அது எல்லாம் கூடாது, நீ ஒரு அடிமை மாதிரி கூடப் போ என்கிறாள்.
.
பின்னால் வரும் பாடல்களில், இராமன் லக்ஷ்மணன் பாசப் பிணைப்பை கம்பன் பல இடங்களில் சொல்லுகிறான். சீதையை பிரிந்த போது இராமன் அழவில்லை. லக்ஷ்மணன் போரில் மூர்ச்சை ஆனபோது அழுது புலம்புகிறான். "வாள் வித்தை, வில் வித்தை எல்லாம் கற்றாய், இந்த குடிசை போடும் வித்தையை எங்கு கற்றாய்" என்று இராமன் நெகுழுகின்ற இடங்களும் உண்டு.
.
லக்ஷ்மணனை இராமனுடன் கானகம் போகச் சொன்ன அந்தப் பாடல்....

புறநானூறு - காதலும் வீரமும்




கணவனோ காதலனோ போரில் அடிபட்டு கிடக்கிறான்.

அவனை தேடி அந்தப் பெண் போகிறாள்.

நேரமோ இரவு நேரம்

அவன் அடிபட்டு கிடப்பதை பார்க்கிறாள்.

இறக்கவில்லை. ஆனால் அவனால் எழுந்து நடக்க முடியாது.

அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு துக்கம் பொங்கி பொங்கி வருகிறது. வாய் விட்டு அழ வேண்டும் போல இருக்கிறது. அழுதால் அந்த சத்தம் கேட்டு பக்கத்து காட்டில் இருந்து புலி ஏதும் வந்து விடுமோ
 என்று பயப் படுகிறாள். அவனிடம் சொல்கிறாள் "உன்னை தூக்கி செல்லலாம் என்றாள் நீயோ கனமான ஆளாய் இருக்கிறாய். என்னால் உன்னை தூக்க முடியாது. என் வளையல் அணிந்த கையை பிடித்துக் கொள், மெல்ல நடந்து அந்த மலை அடிவாரம் போய் விடலாம்" என்கிறாள்.

  காதலும் வீரமும் ததும்பும் அந்தப் பாடல்