Wednesday, October 3, 2012

கம்ப இராமாயணம் - தசரதனுக்கு ஏன் முடி நரைத்தது ?


கம்ப இராமாயணம் - தசரதனுக்கு ஏன் முடி நரைத்தது ?


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த உலகை ஆண்டான் தசரதன். அப்போதெல்லாம் நரைக்காத அந்த காதோர ஒற்றை முடி, இப்போது மட்டும் நரைப்பானேன் ?

கேள்வி வருமா இல்லையா ?

கம்பன் அதற்க்கும் பதில் தருகிறான். 

இராவணனின் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போயிற்று. அந்த தீமைதான் நரை முடியாக வந்து சேர்ந்தது என்கிறான் கம்பன். இராவணன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த நரை முடி வந்து இருக்காது என்பது உள் அர்த்தம். 

கம்ப இராமாயணம் - உவமை இல்லா அழகு


கம்ப இராமாயணம் - உவமை இல்லா அழகு


ஒரு பொருளுக்கு இன்னொன்றை உவைமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உவமை பொருளை விட சிறப்பாக இருக்க வேண்டும்.

நிலவு போன்ற முகம் என்றால் முகத்தை விட நிலவு அழகு.

தாமரை போன்ற பாதம் என்றால் பாதத்தை விட தாமரை அழகு.

கீழான ஒரு பொருளை யாரும் உவைமையாக சொல்ல மாட்டார்கள்.

உவமை என்பது உயர்த்திச் சொல்வது.

அப்படி பார்த்தால் சீதையின் அழகுக்கு எதை உதாரணமாக சொல்வது ? 

எல்லாவற்றையும் விட அவளின் அழகு உயர்வாக இருக்கிறது.

எதைச் சொன்னாலும் அவளின் அழகு அதையும் விஞ்சி நிற்கிறது. 

கம்பன் திணறுகிறான்.

சீதையை பார்த்து விட்டு வந்து இராவணனிடம் சூர்பனகை சொல்கிறாள்.

"இராவணா, அந்த சீதை எப்படி இருக்கிறாள் தெரியுமா...

அவள் நெற்றி வில் போல் இருக்கும், 

அவள் விழி வேல் போல் இருக்கும்,

அவள் பல் முத்துப் போல் இருக்கும்,

அவள் இதழ்கள் பவளம் போல் இருக்கும்,

என்றெல்லாம் சொன்னாலும், சொல்வதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் அது உண்மை இல்லை. 

அவளின் அழகுக்கு உவமையே இல்லை.

இந்த நெல் இருக்கிறதே அது புல்லு மாதிரி இருக்கும் அப்படின்னு சொன்னா அது சரியா இருக்குமா ? இருக்காதுல? அது போலத் தான் இந்த உவமைகளும் 

என்று சொல்கிறாள்.

அப்படி சொல்வதன் மூலம், அவளின் அழகு இந்த உவமைகளை விட சிறப்பானது என்று சொல்கிறார். புல்லை விட நெல் எவ்வளவு உயர்ந்ததோ அது போல் இந்த உவமைகளை விட அவளின் அழகு உயர்ந்தது என்று சொல்லாமல் சொல்கிறார் கம்பர். 

கவிஞ்ஞர்கள் உவமை சொல்லும் போது , நிலவு போன்ற முகம் என்பார்கள். 

இன்னும் ஒரு படி மேலே போய் "நிலவு முகம்", " முகத் தாமரை" என்று உவமையையும் உருவகத்தையும் ஒன்றாக்கி ஒரே வார்த்தை  போல் சொல்வார்கள். கம்பர் ஒரு படி மேலே போகிறார். 

முதலில் வில் ஒக்கும் நுதல் என்றார் - வில்லைப் போல் நெற்றி

பின் வேல் ஒக்கும் விழி என்றார் - வேலை போன்ற விழி

கொஞ்சம் மாற்றி யோசிக்கிறார் 

முத்துப் போல் பல் என்று சொல்லவில்லை. பல் போல முத்து இருக்கும் 
என்றார். இப்போ எது உயர்வு ? அவளின் பல்லா அல்லது முத்தா ?

இன்னும் கொஞ்சம் மாற்றி யோசிக்கிறார், பவழமே இதழ் என்றார். 

பவளம் போல் இதழ் என்றோ, இதழ் போன்ற பவளம் என்றோ சொல்லவில்லை. 

பவளம் தான் இதழ் என்று எப்படி எல்லாமோ சொல்லி பார்க்கிறார்.

நீங்களும் படித்துப் பாருங்களேன்....
 

பாடல்

Tuesday, October 2, 2012

கம்ப இராமாயணம் - நமக்காக வாழ்வது எப்போது


கம்ப இராமாயணம் - நமக்காக வாழ்வது எப்போது 


கணவனுக்காக, மனைவிக்காக, குழந்தைகளுக்காக, நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக, வேலை செய்யும் நிறுவனத்திற்காக என்று நாம் மற்றவர்களுக்காகவே நம் வாழ்நாளை செலவிட்டுக் கொண்டு இருக்கிறோம்.

எப்போது நமக்காக வாழ்வது ? இவ்வளவும் இல்லாவிட்டால் நாம் என்ன செய்து கொண்டிருப்போம் ?

ஒரு நாள் தசரதன் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். காதோரம் ஒரே ஒரு நரைமுடி. அந்த நரை முடி அவனிடம் ஏதோ சொல்லுவது போல் இருந்தது. உன்னிப்பாக கேட்டான். 

'மன்னனே, நீ இந்த அரசாட்சியை உன் மகனிடம் தந்து விட்டு, கானகம் சென்று தவம் செய்யச் செல் ' என்று சொல்லியது. 

நமக்குத்தான் எத்தனை நரை முடி. அது எவ்வளவு சொல்கிறது. எங்கே கேட்கிறோம். பத்தா குறைக்கு அதன் மேல் சாயத்தை பூசி மறைக்கிறோம்.

தசரதனிடம் அந்த நரை முடி சொன்ன பாடல்...

Monday, October 1, 2012

அபிராமி அந்தாதி - நம்ம வீட்டுப் பெண்

அபிராமி அந்தாதி - நம்ம வீட்டுப் பெண்


திடீரென்று கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் எப்படி இருக்கும் உங்களுக்கு ?

அவர் கடவுள் தானா என்று கூடத் தெரியாது உங்களுக்கு.
அவரோ, அவளோ , அதுவோ உங்களை விட உயரமா ? குள்ளமா ? கறுப்பா? சிவப்பா ? குண்டா ? ஒல்லியா ?

ஒண்ணும் தெரியாது. 

முன்ன பின்ன பார்த்து இருந்தாதான ?

அபிராமி தெருவில் நடந்து வருகிறாள். சேலை கட்டி, காலில் செருப்பு அணிந்து, கையில் என்ன புத்தகமா? 

நம் கூட + 2 விலோ , கல்லூரியிலோ  படிக்கும் பெண் போல இருக்கிறாள்.

பக்கத்து வீட்டிலோ, எதிர் வீட்டிலோ, பேருந்து நிலையத்திலோ, எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு அவளை.

நம்ம அக்கா தங்கை மாதிரி, நம்ம அம்மா மாதிரி, அத்தை மாதிரி, சித்தி மாதிரி...ஏதோ நம்ம குடும்ப பெண் மாதிரி இருக்கிறாள் 

"காணுதற்கு அந்நியள் அல்லாத"  பெண் அவள். 

நம்ம வீட்டு பெண் மாதிரியே இருக்கிறாள். 

அவளை முதல் முதலில் பார்த்த உடனேயே அவள் மேல் ஒரு காதல். 

காதலா அது ? இல்லை பக்தியா ? இல்லை வேறு ஏதாவது ஒன்றா ? 

எல்லா உறவுக்கும் பெயர் இருக்கிறதா என்ன ? 

அன்பு என்று சொல்லலாமா ?

அவள் மேல் அன்பு பிறந்ததே கூட என் முன் ஜன்ம புண்ணியம் தான்.

எத்தனையோ பேர் அவளை பார்க்கிறார்கள். எல்லோருக்குமா அவள் மேல் காதல் வருகிறது ?

எனக்கு மட்டும் தானே வந்தது..ஏதோ முன் ஜன்ம புண்ணியம்....

அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய்த புண்ணியமே

...அவள் தான் ஆதி...அவள் தான் அந்தம்.. அவளால் தான் இந்த அந்தாதி...

அவள் தன இந்த உலகை எல்லாம் காக்கிறாள். இருந்தாலும் எனக்கு என்னவோ அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

மற்றவர்களால் அவளுக்கு ஒரு துன்பம் வரக் கூடாது....எல்லோரும் கடவுளிடம் " கடவுளே என்னைக் காப்பாற்று" என்று வேண்டுவார்கள்...எனக்கு என்னவோ நான் அவளைக் காப்பாற்ற வேண்டும் போல் இருக்கிறது....என்னே என் பேதை மனம்...அவள் ஆதி பராசக்தி...அவளை போய் நான் காப்பாற்றுவதா...


பேணுதற்கு எண்ணிய எம் பெருமாட்டியையை 

அபிராமி பட்டர் உருகுகிறார்...படித்துப் பாருங்கள்...உங்கள் மனமும் உருகலாம்....

Sunday, September 23, 2012

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


எருமை.

மந்த புத்தி மகிஷம்.

வெயில் என்றாலும் விலகாது.

மழை வந்தாலும் மயங்காது.

என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.

அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை. 

அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. மாட்டிற்கும் யானைக்கும் உடல் எல்லாம் வயிறு தானே.

எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். அதிலே 
ஒரு குவளை மலர்.

அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியது.

அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.

அந்த இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.

அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தி.

அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...

பாடல் 

கம்ப இராமாயணம் - மின்னலோடு வருகின்ற மேகம்


கம்ப இராமாயணம் - மின்னலோடு வருகின்ற மேகம்


இராமன் கருமை நிறம். "மையோ, மரகதமோ, மழை முகிலோ" என்பான் கம்பன்.

சீதை மின்னல் போல் இருப்பாள். மின்னல் போல் இடை. மின்னல் போல் நிறம். மின்னல் போல் மெலிந்த வளைந்த உடல் அழகு.

இராமனும் சீதையும் நடந்து வரும் போது மேகத்தோடு சேர்ந்து மின்னல் வருவது போல் இருந்ததாம்....

பாடல்:

Thursday, September 20, 2012

தேவாரம் - மலரும் காதல்


தேவாரம் - மலரும் காதல் 


பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்றெல்லாம் கேட்டு இருப்பீர்கள்...சில திரைப் படங்கள் கூட வந்து இருக்கின்றன.

இதற்கெல்லாம் முன்னோடி நாவுக்கரசர். 

அவள், அவனைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறாள். "அவன் பேரு என்னடி"என்று அவளுடைய நண்பிகளிடம் கேட்டு தெரிந்து கொள்கிறாள்.

"அவன் எப்படி இருப்பான், கருப்பா சிவப்பா, உயரமா, குள்ளமா" என்று அவனைப் பற்றி மேலும் விசாரிக்கிறாள்.

" அவன் இருக்கும் ஊரு, சொந்த ஊரு" எல்லாம் கேட்டு அறிந்து கொள்கிறாள்

கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மேல் காதல் வயப்படுகிறாள் 

அவள் சொந்த வீடே அவளுக்கு அந்நியமானது.

அப்பா அம்மா கூட யாரோ மூன்றாம் மனிதர்கள் போல நீங்கிப் போனார்கள்

அவளுடைய பழக்க வழக்கங்கள் மாறின. எந்நேரமும்  அவன் நினைப்பு தான். 

தன்னை தானே மறந்தாள்.

தன் பெயரையே மறந்தாள்

அவனுக்கே எல்லாம் என்று ஆனாள்