Wednesday, October 3, 2012

கம்ப இராமாயணம் - தசரதனுக்கு ஏன் முடி நரைத்தது ?


கம்ப இராமாயணம் - தசரதனுக்கு ஏன் முடி நரைத்தது ?


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த உலகை ஆண்டான் தசரதன். அப்போதெல்லாம் நரைக்காத அந்த காதோர ஒற்றை முடி, இப்போது மட்டும் நரைப்பானேன் ?

கேள்வி வருமா இல்லையா ?

கம்பன் அதற்க்கும் பதில் தருகிறான். 

இராவணனின் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போயிற்று. அந்த தீமைதான் நரை முடியாக வந்து சேர்ந்தது என்கிறான் கம்பன். இராவணன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த நரை முடி வந்து இருக்காது என்பது உள் அர்த்தம். 



தீங்கு இழை இராவணன்
     செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
     ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
     படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் -
     அவனி காவலன்.



பொருள் 

தீங்கு இழை = தீங்கு இழைத்த, இழைக்கும், இழைக்கப் போகும் - வினைத் தொகை

இராவணன் = இராவணன்

செய்த தீமைதான் = செய்த தீமைகள் தான்


ஆங்கு = அங்கு


ஒரு நரையது = ஒரு நரை முடியாகி 

ஆய் = ஆகி

அணுகிற்றாம் என, = வந்து சேர்ந்தது

பாங்கில் = பக்குவமாக

வந்திடு நரை = வந்து விட்ட நரை

படிமக் கண்ணடி = வடிவை காட்டும் கண்ணாடி

ஆங்கு அதில் கண்டனன் - = அதில் கண்டான்

அவனி காவலன் = இந்த உலகின் காவலன் - தசரதன்
.

2 comments:

  1. இராவணன் "செய்த" தீமை என்கிறார். அதாவது, செய்து விட்ட தீமை.

    அந்த தீமை, தசரதனின் நரையாக வருவானேன்? அந்த நரை தசரதனுக்குத் தண்டனையோ? அதாவது, இராவணன் தவறு செய்யும்போது தசரதன் ஏதும் செய்யாமல் இருந்ததால் தண்டனையோ?

    அல்லது, இராவணனின் தீமை நரையாக வந்து, இராமனைக் காட்டுக்கு அனுப்ப வைத்ததோ?

    ReplyDelete
  2. கடைசியாக சொன்னது. இராவணன் செய்த தீமையால், தசரதனின் முடி நரைத்தது. அவன் கானகம் போக எண்ணினான். அதானால் இராமன் கானகம் போக நேர்ந்தது. இராவண சம்ஹாரம் நிகழ்ந்தது.
    இராவணன் செய்த தீமையால் வந்தவள் கூனி என்று இன்னொரு இடத்தில் சொல்லுவான் கம்பன்.

    ReplyDelete