Thursday, November 15, 2012

தேவாரம் - யாதும் சுவடு படாமல்


தேவாரம் - யாதும் சுவடு படாமல்


கோவிலுக்கு செல்லும் போது அமைதியாக, பக்தி நிறைந்த மனதுடன் செல்ல வேண்டும்.

சில பெண்கள் கோவிலுக்குப் போவதே தங்களிடம் உள்ள பட்டு சேலையை காண்பிக்க, புதிதாக வாங்கிய நகைகளை மற்றவர்களுக்கு காண்பிக்கத்தான். 

கோவிலுக்கு வரும் சில பெண்களைப் பார்த்தால் தெரியும்...ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்ததவர்கள் மாதிரி இருப்பார்கள். 

சத்தம் போட்டு பேசிக் கொண்டு வருவது, இறைவன் திருநாமம் அல்லாமால் மற்ற விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வருவது...அது எல்லாம் சரி அல்ல. 

நாவுக்கரசர் கோவிலுக்குப் போகிறார். எப்படி ?

பக்தர்கள் முன்னால் போகிறார்கள். அவர், அவர்களின் பின்னால் போகிறார். அதுவும் யாது ஒரு சுவடும் படாமல்...சத்தம் இல்லாமல், தான் வந்ததே தெரியாமல் போகிறார்...அவ்வளவு பணிவு, அடக்கம்....

அப்படி போனதால் அவருக்கு இறை தரிசனம் கிடைத்தது...கண்டறியாதன கண்டேன் என்றார். இந்த உலகமே இறைவனும் இறைவியும் சேர்ந்த திருக் கோலமாய் தெரிந்தது அவருக்கு. 

 

Wednesday, November 14, 2012

இராமாயணம் - உணவுக் கட்டுப்பாடு


இராமாயணம் - உணவுக் கட்டுப்பாடு 


தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும். வீட்டில் நிறைய பலகாரம் செய்வார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தும் தின் பண்டங்கள் வரும். 
வந்ததை தூரவா போடா முடியும் என்று எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் உண்டால் கூட உடம்புக்குத் தீமை தான். 

சாப்பிடாவிட்டால் கொடுத்தவர்கள் மனம் சங்கடப் படும்...என்ன செய்யலாம் ?

இராமாயணத்தில் ஒரு இடம். இராமன் குகனின் இருப்பிடத்தில் இருக்கிறான். குகன் தேனும், தினை மாவும், மீனும், பக்குவப் படுத்தி கொண்டு வந்து தருகிறான். 

இராமான் என்ன செய்தான் ? எல்லாவற்றையும் உண்டானா ? 

ஆஹா, அருமையான உணவு..இனிமேல் எப்ப கிடைக்குமோ என்று ஒரு பிடி பிடிக்கவில்லை. 

" நீ அன்போடு கொண்டு வந்த இந்த உணவு அமிழ்தை விட சிறந்தது ... நானும் இதனை இனிமையாக உண்டாதகக் கொள்" என்று சொன்னான். சாப்பிடவில்லை. 

இராமன் உணவு கட்டுப்பாட்டை நமக்கு காண்பிக்கிறான்.

பாடல்

Saturday, November 10, 2012

திருக்குறள் - பிறவிப் பெருங்கடல்


திருக்குறள் - பிறவிப் பெருங்கடல் 


பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா:    
ரிறைவ னடிசேரா தார்:                              .

பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இந்த குறளுக்கு பொதுவாகப் பொருள் சொல்லும் போது பிறவியாகிய பெருங்கடலை நீந்துபவர்கள் இறைவனின் திருவடியை அடைவார்கள். மற்றவர்கள் அடைய மாட்டார்கள் என்று கூறுவார்கள்.

பரிமேல் அழகர் உரையும் அப்படித்தான் இருக்கிறது 

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச்சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் = அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போமே.

ஒரு பரிட்ச்சை இருக்கிறது. அதை எழுதினால் தேர்ச்சி பெறலாம் என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. எழுதாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?

"நீந்தார் இறைவனடி சேராதார்" என்று சொல்லுவதன் மூலம் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் ?

நீந்தாதவர்கள் கட்டாயம் இறைவனடி சேர முடியாது. அதாவது பரீட்ச்சை எழுதாவிட்டால் கட்டாயாம் தேர்ச்சி பெற முடியாது. அதில் ஒண்ணும் சந்தேகம் இல்லை.  

சரி பரிட்ச்சை எழுதியவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவார்களா என்றால், அதுவும் இல்லை. நன்றாகப் படித்து, ஒழுங்காக எழுதினால் ஒரு வேலை தேர்ச்சி பெறலாம். 

இந்த பிறவியான பெருங்கடல் ஆழமானது, அகலமானது, ஆபத்து நிறைந்தது, நிற்க இடம் இல்லாதது, ஒதுங்க நிழல் கிடையாது....எந்நேரமும் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். நிறுத்தினால் மூழ்கி விடுவோம். 

பிறவியை பெரிய மலை என்றோ, அடர்ந்த காடு என்றோ சொல்லி இருக்கலாம். நிலத்தில் நடந்து போனால், சற்று நேரம் நின்று இளைப்பாறிக் கொள்ளலாம். கடலில் இளைப்பாற முடியாது. 

எந்நேரமும் அவன் திருவடி நோக்கி நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். கை வலிக்கிறதே, கால் வலிக்கிறதே என்று நிறுத்தி விட்டால், உள்ளே போக வேண்டியதுதான். 

நீந்தார் இறைவனடி சேராதார். 

நீந்துங்கள்.

இராமாயணம் - நீ என்னை கட்டி அணை


இராமாயணம் - நீ என்னை கட்டி அணை 


இராமர் பட்டாபிஷேகம் முடிந்து விட்டது. இராமன் எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்து விடை கொடுத்து அனுப்புகிறான். அனுமன் முறை. 

என்ன கொடுப்பது என்று யோசிக்கிறான் ?

நீ என்னை கட்டி அணை என்கிறான். நமது பண்பாட்டில் , அணைப்பவன் ஒரு படி மேலே, அணைக்கப் படுபவன் ஒரு படி கீழே என்பது மரபு. கட்டி அணைத்து தட்டிக் கொடுத்தால் , அணைத்து தட்டிக் கொடுப்பவன் உயர்ந்தவன், தட்டி கொடுக்கபடுபவன் சிறியவன் என்பது முறை. 

இங்கே இராமன் அவனே போய் அனுமனை கட்டி அணைக்கவில்லை. அனுமனைப் பார்த்து சொல்கிறான், நீ என்னை கட்டி அணை என்று. அனுமனுக்கு தன்னை விட ஒரு உயர்ந்த இடத்தை அளிக்கிறான் இராமன். வேறு யாருக்கும் அவன் தராத இடம். 

பக்தனை கடவுள் உயர்த்தும் இடம். 

அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்றார் வள்ளலார். 

யான் உன்னை தொடர்ந்து சிக்கன பிடித்தேன் என்றார் மணிவாசகர்.

பக்தனுக்குள் கடவுள் அடங்கிய இடம். 

பாடல்

Friday, November 9, 2012

முத்தொள்ளாயிரம் - மாலை வராமல் இருக்க


முத்தொள்ளாயிரம் - மாலை வராமல் இருக்க


யார் சொல்லி கேட்கிறது இந்த மாலை வேளை. வந்து பாடாய் படுத்துகிறது. வந்தால் சட்டென்று போகவும் மாட்டேன் என்கிறது. மாலை மட்டும் வந்தால் பரவாயில்லை, அதோடு கூட இந்த ஆயர்கள் வாசிக்கும் புல்லாங்குழல் ஒலியும் சேர்ந்து அல்லவா வருகிறது. 

இளவளவன் என்ற இந்த நாட்டு இராஜா இருந்து என்ன பிரயோஜனம். இந்த மாலை பொழுது வரக்கூடாது என்று ஒரு கட்டளை போட்டா என்னவாம். அப்படி ஒரு கட்டளை போட்டு , மாலை பொழுது வராமால் தடுத்து என் உயிரை காப்பாற்ற முடியலை, இவன் தான் இந்த உலகை எல்லாம் காப்பாற்றப் போறானாக்கும்...ஹும்.....

பாடல் 

Thursday, November 8, 2012

திருக்குறள் - நீண்ட நாள் வாழ


திருக்குறள் - நீண்ட நாள் வாழ 

நீண்ட நாள் வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது ? 

ஆனால் எப்படி நீண்ட நாள் வாழ்வது ? 

வள்ளுவர் அதற்க்கு வழி காட்டுகிறார்..

பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க     
நெறிநின்றார் நீடுவாழ் வார்                           

அதாவது,

பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.

பொறி வாயில் ஐந்து அவித்தான் = மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் 

பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது;

பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் = மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்;

நீடு வாழ்வார் = பிறப்பின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய் வாழ்வார்.

என்பது பரிமேலழகர் உரை. 

எனக்கென்னமோ திருவள்ளுவர் ஒரு உரைக்குள் அடங்குபவர் அல்ல என்று தோன்றுகிறது. 

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.

நாக்கை எடுத்துக் கொள்வோம். உடம்புக்கு சர்க்கரை வியாதி. இனிப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் சொல்லி விட்டார். எனவே இனிப்பு சாப்பிடுவது இல்லை.  இருந்தாலும் இனிப்பு வேண்டும் என்கிறது நாக்கு. அறிவு சொல்கிறது சாப்பிடாதே என்று. மனம் சொல்கிறது, "ஒரே ஒரு லட்டு தானே,சாப்பிடு பரவா இல்லை, மாத்திரை போட்டுக் கொள்ளலாம்...இதை எல்லாம் சாப்பிடாமல் இருந்து என்ன பயன் " என்று.

யாரும் பார்க்க வில்லை. ஒரு லட்டு சாப்பிட்டால் ஒண்ணும் குடி முழுகி போய் விடாது. இன்னைக்கு மட்டும் சாப்பிடலாம் என்று சாப்பிட்டு விடுகிறோம். 

ஒழுக்கமாகத்தான் இருக்கிறோம். இருந்தாலும், நடுவில் ஒரு கள்ளத்தனம். 

உன்னது அல்ல. தொடாதே என்று அறிவு  சொல்கிறது. ஒரு முறை தானே என்று மனம் உந்துகிறது. நமக்கு நாமே உண்மையாக இல்லை. பொய் கொஞ்சம் இருக்கிறது. பொய் தீர வேண்டும். 

அதைத் தான் வள்ளுவர் " பொய் தீர் ஒழுக்க நெறி" என்கிறார். 

அது என்ன பொறி வாயில் ஐந்து அவித்தான் ? கடலை பொரியா? இல்லை.

பொறி என்றால் கூண்டு. எலிப் பொறி என்கிறோம் அல்லவா. இந்த ஐந்து புலன்களும் நம்மை பொறியில் சிக்க வைக்கப் பார்க்கின்றன. எப்படி வடையின் வாசனையால் பொறியில் எலி அகப்பட்டுக் கொள்கிறதோ அது போல், இந்த ஐந்து புலன்களும் நம்மை சிக்கலில் மாட்டி விடுகின்றன. வாழ் நாளை குறைக்கின்றன.

வீட்டைப் பார்த்தால் வாங்க வேண்டும், நகையை பார்த்தால் வாங்க வேண்டும், புது கார், புது செல் போன் என்று அலைகிறது.

கடைத் தெருவில் உள்ள ஒவ்வொரு கடையும் ஒரு எலிப் பொறி மாதிரி..மனிதப் பொறிகள். மந்தை மந்தையாகப் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.

பொறி வாயில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். 

சரி அதுக்காக ஆசையே படமால் இருக்க முடியுமா ? ஒண்ணுமே வேண்டாம் என்றால் எப்படி உயிர் வாழ்வது ?

ஐந்து அவித்தான் என்றார். அவித்தல் என்றால் என்ன ? 

நீராவியால் வைத்து வேக வைப்பதற்கு அவித்தல் என்று பெயர். அவித்தால் பொருள் மென்மையாக மாறும். அவித்த பொருள் உடலுக்கு நன்மை செய்யும். அவிக்காத அரிசி, காய் கிழங்கு, மாமிசம் போன்றவை உடலுக்கு தீங்கு செய்யும். அவித்த பின் அதுவே உடலுக்கு உரம் செய்யும். 

மென்மையான ஆசைகள், தேவையான ஆசைகள், அளவான ஆசைகள் நமக்கு நன்மை செய்யும். 

ஐம்புலன்கள் வழியே செல்லும் ஆசைகளை அப்படியே பச்சையாக அனுப்பாமல் அவற்றை பிடித்து கொஞ்சம் அவித்து பக்குவப் படுத்தி அனுப்ப வேண்டும். 

நிற்றல் என்றால் நிலைத்து நிற்றல் என்று பொருள் . இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று தண்ணி அடிப்பது, புகை பிடிப்பது, இனிப்பு சாப்பிடுவது போன்றவை கூடாது. பொய் தீர் ஒழுக்க நெறியில் நிலைத்து நிற்க வேண்டும்.

அது நீண்ட நாள் வாழும் வழி. 

வள்ளுவர் வழி காட்டி விட்டார். போவது உங்கள் விருப்பம்.




திருவாசகம் - என் வேண்டுதல், உன் விருப்பம்


திருவாசகம் - என் வேண்டுதல், உன் விருப்பம்


ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.

அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு. பசி. தாகம். கொஞ்சம் பயம் வேறு.

சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கர்ந்து விட்டான்.

அது கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.

ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால், அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி, அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான்.

சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான், அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும், களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்த பழங்களை உண்டு பசி ஆறினான். 

பிரயாணக் களைப்பு, உண்ட மயக்கம், தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அட டா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான், உடனே ஒரு கட்டில் வந்தது. 

ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்....டங் என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள். 

அசந்து தூங்கினான். திடீரென்று முழிப்பு வந்து விழித்துக் கொண்டான்.

என்னடா இது, நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே, ஒரு வேளை இது ஏதாவது பேய் பிசாசு வேலையா இருக்குமோ...அந்த பிசாசு இங்க வந்துட்டால் ? என்று நினைத்தான். டங் என்று ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே. 

ஐயோ, இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ ? என்று நினைத்தான், அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது. 

இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம்.

நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன், ஐயோ, இவளுக்கா ஆசைப் பட்டேன் என்று நொந்து கொள்ளுகிறான்.

ஆசை ஆசையாக வீட்டை வாங்குகிறான், கட்டுகிறான்...அக்கம் பக்கம் தொல்லை ... ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது...

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன ... மனம் கிடந்து கவல்கிறது...

இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலிக்கும் படி ஆகி விடுகிறது...
 

கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று. அவன் பார்த்து செய்யட்டும் என்று எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விட்டார் மணி வாசகர்...


பாடல்