Friday, February 15, 2013

கம்ப இராமாயணம் - கரந்துறையும் காமம்


கம்ப இராமாயணம் - கரந்துறையும் காமம் 


இராமனுக்கு முடி சூட்ட தசரதன் முடிவு செய்து விட்டான். அதற்கான காரணங்களை அடுக்குகிறான்.

அதில் ஒன்று , என்னால் காமத்தை வெல்ல முடியவில்லை என்பது.

பதினாயிரம் மனைவிகள்.

மூன்று பட்டத்து மகிஷிகள்

சக்ரவர்த்தி. கை சொடுக்கும் நேரத்திற்குள் எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும். கிடைத்திருக்கும்.

இருந்தும் அவனால் காமத்தை வெல்ல முடியவில்லை.

என்ன அர்த்தம் ....?

புலன் இன்பங்கள் அனுபவிப்பதன் மூலம் தீர்வதில்லை.

நெய்யை விட்டு தீயை அணைக்க முடியாது.

அனுபவிக்க அனுபவிக்க அது மேலும் மேலும் என்று கொழுந்து விட்டு எரிகிறது.

பாடல்


வெள்ளநீர் உலகினில் விண்ணில் நாகரில்,
தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான்
கள்ளரில் கரந்துறை காமம் ஆதியாம்
உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? 


பொருள் 

வெள்ளநீர் உலகினில் = வெள்ளம் சூழ்ந்த இந்த உலகம்

விண்ணில் = விண்ணுலகம்

நாகரில் = நாகர்கள் வாழும் பாதாள  உலகம்

தள்ளரும் பகையெலாம் = இந்த மூன்று உலகிலும் வெல்ல முடியாத பகை எல்லாம்

தவிர்த்து = வென்ற

நின்றயான் = நின்ற நான்

கள்ளரில் = கள்ளர்களைப் போல

கரந்துறை = மறைந்து வாழும்

காமம் = காமம்

ஆதியாம் = காமத்தை மூலமாகக் கொண்ட

உள்ளுறை = உள்ளத்தில் மறைந்து வாழும்

பகைஞருக்கு = பகைவர்களுக்கு

ஒதுங்கி வாழ்வெனோ? = ஒதுங்கி வாழ்வேனா ?

காமம், கள்ளனை  போல சொல்லாமல் வரும்.

வந்த பின் நம்மிடம் உள்ள மானம், புகழ் போன்றவற்றை கொள்ளை அடித்துச் செல்லும்

அது பகைவர்களை போல, நம்மை மிரட்டும். நம்மை வலிமை குன்றச் செய்யும்.

அது உட்பகை. அதை வெல்ல   படை பலம், ஆள் , அம்பு, சேனை ...இது எல்லாம் தேவை இல்லை.

காமத்தை தூண்டும் பெண்களை விட்டு அவர்கள் இல்லாத இடமான கானகம் நோக்கி போக முடிவு செய்தான் தசரதன்.

நீங்கள் ஒன்றின் மேல் உள்ள பற்றை விட வேண்டுமானால், அதை விட்டு நீங்க வேண்டும்.

பிடியை விட்டால் தானே பற்றை விட முடியும்.

TV யை போட்டு வைத்துக் கொண்டே படிப்பில் கவனம் இல்லை என்றால் எங்கிருந்து வரும்.

எது நம் கவனத்தை சிதறடிக்கிறதோ , அதை விட்டு விலக வேண்டும்.

தன்னால் காமத்தை வெல்ல முடியவில்லை என்று தைரியமாக சபையில் அறிவிக்கிறான்  தசரதன். எத்தனை பேருக்கு அந்த துணிச்சல் வரும் ?

படிக்க வேண்டிய பாடங்கள்


திருக்குறள் - சான்றோன் எனக்கேட்ட தாய்


திருக்குறள் - சான்றோன் எனக்கேட்ட தாய் 



ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

கேள்விப் பட்ட குறள்  தான். 

தன்னுடைய மகனை சான்றோன் என்று மற்றவர் கூறக் கேட்ட தாய், அவனை பெற்ற பொழுதை விட அதிகமாக சந்தோஷப் படுவாள்.

அவ்வளவுதானா ?  
 
கொஞ்சம் சிந்திப்போம். 

மகன் பெரிய ஆள் என்று கேட்டால் தந்தைக்கு உவகை வரதா ?

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தந்தை 

என்று ஏன் சொல்லவில்லை ?

மகன் எவ்வளவு தான் பெரிய ஆள் ஆனாலும் தாய்க்கு அவன் எப்போதும் சின்ன பிள்ளை தான்.  ஊர்ல நூறு பேரு நூறு விதமா சொல்லலாம், தாய்க்கு அவளுடைய பிள்ளைஎப்போதுமே  அவள் மடியில் தவழும் சின்ன பிள்ளை தான். தந்தைக்குத் தெரியும்...பையன் வளர்வது, படிப்பது, பட்டம் வாங்குவது, வாழ்வில் முன்னேறுவது எல்லாம்....தாய்க்கு அவள் பிள்ளை எப்போதுமே பால் மணம்  மாறாத பாலகன் தான். 

பாத்து போப்பா, ரோடு எல்லாம் பாத்து கிராஸ் பண்ணு, வேளா  வேளைக்கு  சாப்பிடு, ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதே என்று சொல்லிக் கொண்டு இருப்பாள் ...அவன் பெரிய நிறுவனத்தில் பெரிய  வேலையில்  இருப்பான் ...அவனுக்கு கீழே ஆயிரம் பேர் இருப்பார்கள்...என்ன இருந்து என்ன, அவன் அம்மாவுக்கு அவன் சின்னப் பையன் தான்....

அவனை சான்றோன் என்று சொன்னால்...அவளுக்கு இரண்டு விதமாமான மகிழ்ச்சி....ஒன்று நம்ம பிள்ளை பெரிய ஆள் ஆகிவிட்டானே என்று..இன்னொன்று...யாரு, இந்த வாண்டா பெரிய ஆளு என்று இன்னொரு மகழ்ச்சி...

எனவே ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும்...

இன்னொரு காரணம்.....

ஒரு தாய்க்கு மிக பெரிய மகிழ்ச்சி எப்போது வரும்....பத்துமாதம் சுமக்கிறாள்...படாத பாடு படுகிறாள்...வலியின் உச்சத்தில் பிள்ளையை பெறுகிறாள்...அப்போது மருத்துவர் "பிள்ளை ஆரோகியமா  நல்லபடியா பிறந்திருக்கு " அப்படின்னு சொன்னவுடன்  ஒரு பெரிய நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும் அந்த தாய்க்கு. அது போல் அவன் வளர்ந்து பெரிய ஆள் ஆன பின், அதைவிட மகிழ்ச்சி பிறக்கும். 

முதலில் கை கால் ஆரோக்கியத்துடன் குழந்தையாய் பிறப்பிப்பது. 
இரண்டாவது சான்றோனாய் பிறப்பிப்பது. 

இரண்டு மகிழ்ச்சியான நேரங்கள். பின்னது முன்னதை விட சிறப்பாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 

மூன்றாவது, ஈன்ற பொழுது என்பது தாய்க்கு உண்டு. தந்தைக்கு கிடையாது. தாய் பத்து மாதத்தில்  இறக்கி வைத்து விடுவாள். தந்தை அந்த சுமையை கடைசி வரை தூக்கித் திரிவான். சான்றோனாக்குவது தந்தைக்கு கடன் என்பார் வள்ளுவர். அவன் மகனை இறக்கி வைப்பதே இல்லை. எனவே, ஈன்ற பொழுது என்பது தந்தைக்கு கிடையாது. மேலும் மேலும் மகனை முன்னேற்றுவதிலேயே குறியாய் இருப்பான் தந்தை. 

பரிட்ச்சைக்கு படிக்கிறான் என்றால், அம்மா சொல்லுவாள் "ரொம்ப நேரம் முழிச்சு இருந்து உடம்ப கெடுத்துகாத " என்று. தந்தைக்கு அந்த பாசம் இருக்கும். இருந்தாலும் அதை வெளியே காட்டாமல்  , "எல்லாம் படிச்சிட்டியா...அதுக்குள்ள என்ன தூக்கம் " என்று அவனை மேலும்  உயர்ந்தவனாக்க பாடு படுவார் 

தாய்க்கு, பிள்ளை சந்தோஷமா இருக்கணும்..

 தந்தைக்கு, பிள்ளை பெரிய ஆளா வரணும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

எவ்வளவு நுட்பம் 

எவ்வளவு அர்த்த செறிவு 

நவில் தொறும் நூல் நயம் போலும்.....

 


  



Thursday, February 14, 2013

அபிராமி அந்தாதி - அபிராமி எந்தன் விழுத்துணை


அபிராமி அந்தாதி - அபிராமி எந்தன் விழுத்துணை 




உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

அபிராமி அந்தாதியின் முதல்  பாடல். 

இறைவனை பாடும் போது  திருவடிகளில் தொடங்கி திருமுடியில் முடிப்பதும், இறைவியை  பாடும் போது  திருமுடியில் தொடங்கி பாதத்தில் முடிப்பதும் மரபு 

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்று ஆரம்பிப்பார் திருவாசகத்தில் மாணிக்க வாசகர் 

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

மன்று உளே மாறி ஆடும் மறைச் சிலம்பு அடிகள்  போற்றி என்று ஆரம்பிக்கிறார் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில் 

இறைவியையை பாடும் போது தலையில் இருந்து ஆரம்பிப்பது மரபு. 

அந்த மரபின் படி, அபிராமி பட்டர் இங்கே அபிராமியின் தலையில் இருந்து ஆரம்பிக்கிறார். 

சிறிது நேரம் கண்ணை மூடி உங்கள் விருப்ப தெய்வத்தை மனதில் நினைத்துப் பாருங்கள். 

மூடிய கண்களில் என்ன நிறம் கோலம் போடுகிறது ? சிவப்பு நிறம் தானே ? அபிராமியின் அழகில் தன்னை மறந்து லயித்து இருக்கும் பட்டருக்கு எல்லாம் அவளாகத் தெரிகிறது. எல்லாம் சிவப்பாகத் தெரிகிறது. 

உதிக்கின்ற செங்கதிர் - அதிகாலை சூரியன். வெளிச்சம் தரும், சுடாது. எரிக்காது.  அவள் கருணை அப்படித்தான். 

வாழ்க்கைக்கு ஒளி  காட்டி வழி காட்டும். 

சுடாது. 

எரிக்காது. 

அஞ்ஞான இருள் விரட்டி, மெய்ஞான ஒளி  ஏற்றும். 

உதிக்கின்ற செங்கதிர். சூரியனை நம் கண்ணால் நேரடியாக காண முடியாது. காலை நேர சூரியனை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியும். அபிராமி அறிவுக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்டு இருந்தாலும், அவளை தியானித்தால் காண முடியும் என்பது உட்பொருள் 
உச்சித் திலகம் - உச்சியில் இடுகின்ற குங்கும திலகம். அவள் நெற்றியில் இடுகின்ற திலகம் உதிக்கின்ற  செங்கதிரைப்  போல சிவப்பாக இருந்தது 

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் = மாணிக்கக் கல் சிவப்பு. உயர்ந்தது. 

எவ்வளவு தான் உயர்ந்தாக இருந்தாலும் அதன் மதிப்பு எல்லோருக்கும் தெரியாது.

கழுதையின் கழுத்தில் கோஹினூர் வைரத்தை கட்டி விட்டால் அதற்கு அதன் மதிப்பு தெரியுமா ? எனவே, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்றார்.  அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சொல்லவில்லை. அவள் அறிவுக்கு அப்பாற்பட்டவள். உணர்வு உடையோர் அவளின் மதிப்பை அறிவார்கள் 

மாதுளம்போது = மாதுளம் மலர் 

மலர்க்கமலை = மாதுளம் மலர் போன்ற தாமரை. சிவந்த தாமரை. வெண் தாமரை அல்ல 

துதிக்கின்ற மின் கொடி = மின்னல் கொடி  போன்ற உருவம் உடையவள்  

மென் கடிக் குங்கும தோயம் = மென்மையான குங்குமத்தில் தோய்த்து எடுக்கப் பட்டதை போன்ற சிவந்த வடிவம் உள்ளவள் 

என்ன = என்ற 

விதிக்கின்ற மேனி அபிராமி = அப்படி எல்லாம் நூல்களில் மறைகளில் சொல்லப்பட்ட மேனி அழகை உடையவள் 

எந்தன் விழுத் துணையே = அவள்  எந்தன் விழுத் துணையே. 

ஒரு இரயில் நிலையத்திற்கோ, கோவில் திருவிழாவிர்க்கோ சின்ன பையனையோ அல்லது பெண்ணையோ அழைத்து செல்லும் அம்மா என்ன சொல்லுவாள். "என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ. கைய விட்டுறாத " அப்படின்னு சொல்லுவாள். அந்த குழந்தையும் அம்மாவின் கையையை பிடித்துக் கொண்டு கவலை இல்லாமல் திரியும். வேடிக்கை பார்க்கும், வருபவர்கள் போபவர்களை பார்க்கும்..அதுக்கு ஒரு கவலையும் இல்லை . அம்மாவின் கையை பிடித்து இருக்கும் வரை, உலகில் என்ன நடந்தாலும் குழந்தைக்கு ஒரு கவலை இல்லை 

சிறந்த துணை. வாழ்கைப் பாதை நீண்டது,  சிக்கலானது, ஆபத்து நிறைந்தது.  துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்பது அவ்வை வாக்கு. நமக்கு, நம் வாழ்க்கைப் பாதையில் எப்போதும் துணை இருப்பவள் அபிராமியே. அவள் கையை பிடித்து கொள்ளுங்கள். அவள் உங்களை வழி நடத்துவாள். அப்புறம் என்ன கவலை ? என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. அவ கையை விட்டுறாதீங்க....




Tuesday, February 12, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அன்று ஏற்றிய விளக்கு


இராமானுஜர் நூற்றந்தாதி - அன்று ஏற்றிய விளக்கு  


சமய பெரியவர்களுக்கு ஏதோ ஒரு உண்மை கிடைத்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் சும்மா இருந்திருக்கலாம். இல்லை அதை வைத்து நாலு காசு பண்ணி இருக்கலாம். காசு  பண்ணிய மாதிரி தெரியவில்லை. காலம் காலத்திருக்கு பின் வரும் சந்ததிகளுக்கு எல்லாம் பயன் பட வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு போய் இருக்கிறார்கள்.

அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு இன்றும் ஒளி  வீசி , இருள் அகற்றி நம் வாழ்க்கைக்கு வழி காட்டி கொண்டிருக்கிறது 

பாடல் 


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள் 

இராமாயணம் - நல் வழி செல்லும் மனம்


இராமாயணம் - நல்  வழி செல்லும் மனம் 


இராமன் மிதிலை நகர் வருகிறான். கன்னி மாடத்தில் சீதை நிற்பதை காண்கிறான். அவன் மனம் அவள் பால்  விடுகிறது. அண்ணலும் நோக்கினான் , அவளும் நோக்கினாள். 

காதல் அரும்பியது 

இதயம் இடம் மாறியது 

இரவில் தனிமையில் இருக்கும் போது இராமன் யோசிக்கிறான். 

நாம அந்த பெண்ணை விரும்பினோம். ஒரு வேளை  அவள் திருமணம் ஆன பெண்ணாய்  இருந்தால் ? பிறன் மனை நோக்குவது தவறு அல்லவா ? எனக்கு எப்படி அப்படி ஒரு ஆசை வரலாம் ? என்று யோசிக்கிறான். 

பின் அவனே சொல்கிறான்....என் மனம் தவறான வழியில் போகவே போகாது. என் மனம் விரும்பியதால் அவள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.

எவ்வளவு நம்பிக்கை இராமனுக்கு தன்  மேல் !


பாடல் 

ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!


பொருள் 

Monday, February 11, 2013

வில்லி பாரதம் - புனிதர் தாள் போற்றுவோம்


வில்லி பாரதம் - புனிதர் தாள் போற்றுவோம் 


பாரதப் போர் தொடங்குவதற்கு முன் கண்ணன் தூது போகிறான். பாண்டவர்கள் சார்பாக, துரியோதனனிடம். 

வில்லிபுத்துராழ்வார் அந்த சருகத்தை தொடங்குமுன் பாயிரம் போல் முதல் பாடல் பாடுகிறார். 

இறைவனின் புகழைச் சொல்லி, அவன் அடியார்களின் திருவடிகளை தொழுவோம் என்கிறார் 

படிக்க கொஞ்சம் கடினம் தான். பதம் பிரித்தால் எளிதாக இருக்கும்.

தேன்  போல் அர்த்தம் சொட்டும் தமிழ். படிக்க படிக்க தெவிட்டாத தமிழ். 

முதலில் பாடலைப் பார்ப்போம் 


அராவணைதுறந்துபோந்தன்றசோதைகண்களிப்பநீடு
தராதலம்விளங்கவெண்ணெய்த்தாழிசூழ்தரநின்றாடிக்
குராமணங்கமழுங்கூந்தற்கோவியர்குரவைகொண்ட
புராதனன்றனையேயேத்தும்புனிதர்தாள்போற்றிசெய்வாம்.

கொஞ்சம் கரடு முரடாய் தெரிகிறதா ? சீர் பிரிப்போம் 

அரா அணை  துறந்து போந்து அன்று யசோதை கண் களிப்ப நீடு 
தரா தலம் விளங்க வெண்ணெய் தாழி சூழ்தர நின்று ஆடி 
குரா  மணம் கமழும் கூந்தல் கோபியர் குரவை கொண்ட 
புராதனன் தன்னையே ஏத்தும் புனிதர் தாள் போற்றி செய்வாம் 

பொருள் 

Sunday, February 10, 2013

சிறுபாணாறு - வறுமை தோய்ந்த வீடு


சிறுபாணாறு  - வறுமை தோய்ந்த வீடு 


அந்தக் காலத்திலும் வறுமை நம் மக்களை வாட்டி இருக்கிறது. 

ஆண்களும் பெண்களும் வறுமையோடு போராடி இருக்கிறார்கள். 

எவ்வளவு வறுமை இருந்தாலும் தங்கள் பண்பாட்டையும், அற  நெறியையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். 

வறுமையையை சமாளிப்பதில் பெண்ணின் பங்கு மிகப் பெரிதாய் இருந்து இருக்கிறது. 

ஆற்றுப் படை என்பது தலைவனை அடைந்து பரிசுகள் பெற்ற புலவன் எதிரில் வருபவனை அந்த தலைவனிடம் செல்லும் வழியை கூறுவது. ஆற்றுப் படுத்துதல் என்றால் வழிப் படுத்துதல். 

சிறுபாணாற்று படை என்ற நூல் அந்தக் காலத்தில் உள்ள வறுமையையும் அதை ஒரு பெண் எப்படி சமாளிக்கிறாள் என்பதையும் காட்டுகிறது. 

அவள் வீடு ஒரு சின்ன குடிசை. சமைத்து நாட்கள் பல ஆகி விட்டன. வீட்டில் உள்ள அடுப்பில் நாய் படுத்து தூங்குகிறது. அதன் குட்டி அந்த நாயிடம் பால் குடிக்க முயல்கிறது. பாவம் அந்த நாயும் சாப்பிட்டு பல நாள் ஆனதால், அதனிடம் பால் இல்லை. 

அந்த வீட்டின் பெண், அவர்கள் வீட்டில் உள்ள வேலியின்  மேல் படர்ந்துள்ள கீரையை கிள்ளி  எடுத்து (தண்டை பிடுங்கினால் மீண்டும் வளராதே, அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது ), அந்த கீரையையை உப்பில்லாமல் சமைத்து (உப்பு வாங்கக் கூட காசு இல்லை ), வீட்டில் உள்ளவர்களுக்கு பரி மாறுகிறாள் ... இது வெளியே தெரிந்தால் நன்றாக இருக்காது என்று கதவை சாத்திவிட்டு பரிமாறுகிறாள் 

பாடல் 


திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்

வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம்" 



பொருள் 

திறவாக் கண்ண = கண்ணை திறக்காமல் 

சாய்செவிக் குருளை = சாய்ந்த காதை உடைய குட்டி 

கறவாப் பான் முலை = இதுவரை யாரும் கறக்காத முலையில் இருந்து 

கவர்தல் நோனாது = பால் அருந்துவதை அறியாத தாய் நாய் 

புனிற்று நாய் குரைக்கும் = சப்த்தம் கூட போட வலு இல்லாத நாய் 

புல்லென் அட்டில் = படுத்து கிடக்கும் அடுப்படியில் 

காழ் சோர் = கட்டப்படாத விறகுகள் சிதறி கிடக்கும் 

முது சுவர்க் = பழைய சுவர் 

கணச் சிதல் அரித்த = செல் அரித்த அடுப்படி 

பூழி பூத்த புழல் காளாம்பி = புழுதி படிந்த, ஈரமான காளான் நிறைந்த அடுப்படியில் 

ஒல்கு பசி உழந்த = பசியால் மெலிந்த உடலை கொண்ட பெண் (உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை என்பது அபிராமி அந்தாதி )

ஒடுங்கு நுண் மருங்குல் = மெலிந்த இடையை கொண்ட 

வளைக்கை கிணை மகள் = வளையலை அணிந்த கைகளை கொண்ட அந்தப் பெண் 

வள் உகிர்க் குறைத்த = உகிர் என்றால் நகம். நகத்தால் கிள்ளி எடுத்து 

குப்பை வேளை = குப்பையில் விளைந்த கீரை 

உப்பு இலி வெந்ததை = உப்பு இல்லாமல் வேக வைத்து 

மடவோர் காட்சி = பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் காண்பார்களே என்று 

நாணி கடை அடைத்து = நாணம் கொண்டு கதவை அடைத்து 

இரும்பேர் ஒக்கலொடு = ஒக்கல் என்றால் சுற்றத்தார். இரும்பேர் என்றால் பெரிய. பெரிய சுற்றாத்தாரோடு 

ஒருங்கு உடன் மிசையும் = ஒன்றாக இருந்து உண்டு 

அழி பசி வருத்தம் = பெரிய வருத்தத்தை தரும் பசியை போக்கினாள் 

பாடலில் எவ்வளவு நுண்ணிய அர்த்தங்கள்....

- வறுமை 
- அவ்வளவு வறுமையிலும் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள் 
- வீட்டை சரியாக பராமரிக்க முடியாமல் செல் அரித்து கிடக்கும் அடுப்படி 
- சுள்ளியும், விறகும் கிடக்கிறது 
- கீரையை கிள்ளி  எடுத்து வருகிறாள் 
- உப்பு போடாத கீரை சமையல். அது மட்டும் தான் உணவு 
- மற்றவர்கள் பார்த்தால் வெட்கக்கேடு என்று கதவை சாத்திக் கொள்கிறாள்
- அந்த ஏழ்மையிலும் ஒன்றாக இருந்து உண்கிறார்கள். 
- உறவு விட்டுப் போகவில்லை.