Thursday, February 28, 2013

இராமாயணம் - இராவணன் மறந்ததும் மறக்காததும்


இராமாயணம் - இராவணன் மறந்ததும் மறக்காததும் 


இராவணனின் காமம் தொடர்கிறது.

சொல்லின் செல்வி சூர்பனகை இட்ட காமத்தீ பற்றி எரிகிறது இராவணனின் நெஞ்சில்.

பார்க்காமலே காதல்.

சூர்பனகை சொல்லிவிட்டு போய்  விட்டாள். இராவணன் எல்லாவற்றையும் மறந்து விட்டான். சீதை மட்டுமே அவன் மனத்தில்.

பாடல்

கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்

பொருள்


Wednesday, February 27, 2013

இராமாயணம் - இராவணனின் காதல்


இராமாயணம் - இராவணனின் காதல் 


சீதையின் அழகைப் பற்றி சூர்பனகை எடுத்துச் சொல்லுகிறாள் இராவணனிடம். கேட்டவுடன் காதல் கொள்கிறான் இராவணன். 

காமம் படுத்தும் பாட்டை கம்பன் கற்பனையில் இழைக்கிறான். 

 அற்புதமான பாடல்கள். 

இராவணன் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. எவ்வளவு பெரிய ஆள்....சீதையின் காதலுக்காக தவிக்கிறான். உருகுகிறான். 

அதிலிருந்து சில பாடல்கள் 

கோபமும், மறனும், மானக் கொதிப்பும், 
     என்று இனைய எல்லாம், 
பாபம் நின்ற இடத்து நில்லாப் 
     பெற்றிபோல், பற்று விட்ட; 
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் 
     ஆம் செயலின், புக்க 
தாபமும் காமநோயும் ஆர் உயிர் 
     கலந்த அன்றே.



பொருள் 

எண்ணெய்  விட்டு, திரி போட்டு ஒரு விளக்கு இருக்கிறது. அதில் இன்னும் தீபம் ஏற்ற வில்லை. எரிகின்ற இன்னொரு விளக்கை கொண்டு வந்து எரியாத விளக்கை ஏற்றுகிறோம். முதல் விளக்கில் தீபம் பற்றிக் கொள்கிறது. இரண்டு தீபங்களும் ஒன்றாக எரிகின்றன. அப்படி ஒன்றாக எரியும் தீச் சூடரில், எது எந்த விளக்கின் சூடர் என்று தெரியுமா ? இரண்டும் ஒன்றாக கலந்து விடுவதைப் போல இராவணனின் உயிரோடு காமமும் தாபமும் இரண்டற கலந்தது.

தீபம் சுடர் விட்டு எரியும் போது திரி கருகும், எண்ணெய்  வற்றும். காமம் பற்றிய போது  இராவணனின் உயிர் வற்றியது, உடல் உருக ஆரம்பித்தது.

சீதையின் அழகு என்ற தீபத்தை கொண்டு வந்து இராவணனின் உயிரில் காமத் தீயை கொளுத்தி விட்டாள் சூர்பனகை. அனலிடைப் பட்ட மெழுகாய் உருகுகிறான் இராவணன். 



கோபமும் = கோபமும். தன் தங்கையை அவமானப் படுத்தி விட்டார்களே என்ற கோபமும்

மறனும் = அறனும் (எது நல்லது, எது கெட்டது என்று அறியும் தர்மமும்). 

மானக் கொதிப்பும் = கொப்பளிக்கும் தன்  மான உணர்வும். இப்படி நம் குலத்திற்கு ஒரு அவமானம்  நேர்ந்து விட்டதே என்ற தன்  மான உணர்வும்
 
என்று இனைய எல்லாம் = என்ற இந்த உயர்ந்த குணங்கள் எல்லாம் 
 
பாபம் நின்ற இடத்து நில்லாப்  பெற்றிபோல் =  பாவம் உள்ள இடத்தில் இல்லாத புகழும் செல்வமும் போல் (பெற்றி = வழக்கம், நெறி, முறை, இயல்பு ). ஒருவன் எவ்வளவுதான் நல்லவற்றை (புகழ், செல்வம், ) சேர்த்து வைத்து இருந்தாலும், பாவம் செய்ய ஆரம்பித்தவுடன்  எப்படி அவன் பெற்றவை எல்லாம் அவனை விட்டு விலகிப் போகுமோ அது போல 


பற்று விட்ட = நல்லவைகள், அவன் சேர்த்தவைகள் அவனை விட்டன  
 
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் = தீபங்கள் ஒன்றில் இருந்து ஒன்று பற்றிக் கொண்டதைப்

என்னல்  ஆம் செயலின் = செயல்  போல 

புக்க = புகுந்துகொண்ட 
 
தாபமும் = தாபமும் 

காமநோயும் = காம நோயும் 

ஆர் உயிர் கலந்த அன்றே = அவனுடைய அருமையான உயிரில் கலந்தது 

அதனால் என்ன ஆயிற்று ?

இன்னும் வரும் ப்ளாகுகளில் அவற்றைப் பற்றி சிந்திப்போம் 

திரு அருட்பா - நள்ளிரவில் பெற்ற பேறு


திரு அருட்பா - நள்ளிரவில் பெற்ற பேறு 



இராமலிங்க அடிகள் இரவு உறங்கிக் கொண்டிருக்கிறார். திடீரென்று விழிப்பு வருகிறது. என்னோவோ நடக்கிறது. ஒரே மகிழ்ச்சி.  வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

காலை எழுந்து அவர் எங்க போனாலும் எல்லாரும் கேக்குறாங்க, என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்க என்று....சந்தோஷம் தெரிகிறது, அதன் காரணம் தெரிகிறது, ஆனால் அதை சொல்ல முடியவில்லை....திணறுகிறார்...

"என்னால் சொல்ல முடியவில்லை....அந்த இன்பத்தை நீங்களும் அடைந்தால் தான் அது உங்களுக்கு புரியும் " என்கிறார் ....

என்ன நடந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை.

அந்த சந்தோஷம் எல்லோருக்கும் வேண்டும் என்று வேண்டுகிறார்.

எவ்வளவு பெரிய மனம். அருள் உள்ளம்.


பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே 

பாதி இரவில் = நள்ளிரவில்.


நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே "ஓ" வென்று
சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரு மேத்தப் பணிந்து

என்பார் மாணிக்க வாசகர் 


எழுந்தருளிப் = இறைவா, நீயே எழுந்தருளி

பாவியேனை எழுப்பி = என்னை எழுப்பி

அருட் சோதி அளித்து = அருள் சோதி அளித்து

என் உள்ளகத்தே = என் உள்ளத்தின் உள்ளே (அகத்தே)

சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் = சூழ்ந்து + கலந்து + துலங்குகின்றாய் 

நீதி = உலகுக்கே நீதியாணவனே

நடஞ்செய் = நடம் ஆடும்

பேரின்ப நிதி = பேரின்ப நிதி போன்றவனே

நான் பெற்ற நெடும்பேற்றை = நான் பெற்ற இந்த பெரும் பேற்றை

ஓதி முடியாது = சொல்லி மாளாது

என்போல் = என்னை போல

இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே  = இந்த உலகில் உள்ளவர்கள் அனைவரும் பெற வேண்டுவனே 




இந்த பாடலை பொய் என்று எப்படி நினைப்பது ?


Tuesday, February 26, 2013

இராமாயணம் - இராமனா ? பரதனா ? யார் தியாகம் பெரியது ?


இராமாயணம் - இராமனா ? பரதனா ? யார் தியாகம் பெரியது ?

இராமனை காண பரதன் கங்கை கரை வருகிறான். முதலில் அவனை சரியாகப் புரிந்து கொள்ளாத குகன் அவன் மேல் போர் தொடுக்க முனைகிறான். பின், பரதனை   நன்கு அறிந்து கொண்ட பின்,

தாயின் உரை கேட்டு தந்தை கொடுத்த இந்த உலகத்தை தீயது என்று நினைத்து  நீ வந்து இருக்கிறாய், ஆயிரம் இராமர் சேர்ந்தாலும் உன் புகழுக்கு இணை ஆவார்களா

என்று சொல்கிறான் குகன்.

அது எப்படி ஆயிரம் இராமர் சேர்ந்தாலும் பரதனுக்கு இணை ஆக மாட்டார்கள் என்று சொல்ல முடியும் ? அது கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்டது போல இல்ல ?

இல்லை.

அதை புரிந்துகொள்ள ஒரு கதை சொல்லுகிறேன்...

ஒரு முறை ஒரு பாதிரியார் ஒரு பள்ளி கூடத்திற்கு சென்று இருந்தார்.

அங்கிருந்த மாணவர்களிடம் அவர் கேட்டார்...

பாதிரியார்: குழந்தைகளே உங்களிடம் இரண்டு சைக்கிள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத் தருவீர்களா ?

பிள்ளைகள்: ஓ  எஸ் தருவோம் பாதர் ....

பா: நல்லது.உங்களிடம் இரண்டு நல்ல ஜோடி  ஷூ இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் ....அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத்  தருவீர்களா?

பிள்ளைகள்: ஓ  எஸ் ...தருவோம் பாதர்....

பா: நல்லது, உங்களிடம் இரண்டு பென்சில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் ...அதில் ஒன்றை உங்கள் நண்பருக்குத் தருவீர்களா ?

பி: மாட்டோம், தர மாட்டோம்

பாதிரியார் திகைத்து போனார்.  ஏன் குழந்தைகளே சைக்கிள், ஷூ எல்லாம் தருவேன் என்றீர்கள், ஆனால் பென்சில் மட்டும் தர மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்க்கு பிள்ளைகள் சொன்னார்கள் ...எங்களிடம் பென்சில் இருக்கிறது...சைக்கிள், ஷூ எல்லாம் இல்லையே ...என்று...

இல்லாததை கொடுக்க முடியாது. இருப்பதை கொடுப்பது கடினம்.

தசரதன், இராமனுக்கு அரசை தருகிறேன் என்று சொன்னான்..தந்து விடவில்லை. இராமனுக்கு முடி சூட்டு விழா நடக்க வில்லை.

பரதனுக்கு அரசை தந்து விட்டான். அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.

இல்லாத அரசை தந்த இராமனை விட கையில் இருந்த அரசை துறந்த பரதன் ...ஆயிரம் இராமனை விட உயர்ந்தவன் என்பது குகனின் எண்ணமாக இருந்து இருக்கலாம்.

பாடல்


'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
"தீவினை" என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா! 

பொருள்


அகநானுறு - அவனோடு சென்ற நெஞ்சம்


அகநானுறு - அவனோடு சென்ற நெஞ்சம்

காதலனின் பிரிவால் காதலி வாடி இருக்கிறாள். அப்போது அவளுடைய தோழி வந்து கேட்க்கிறாள்...

தோழி: என்னடி, ஒரு மாதிரி இருக்க, உடம்பு கிடம்பு சரி இல்லையா ?

அவள்: அதெல்லாம் ஒண்ணும்  இல்லை, இந்த காலத்துல யாரை நம்பறது யாரை நம்பாம இருக்கிறது அப்படின்னு தெரியல..ஒரே குழப்பமா இருக்கு ...

தோழி: என்னடி ரொம்ப பொடி  வச்சு பேசுற...இப்ப என்ன ஆச்சு ? யாரு என்ன சொன்னாங்க ...யார நம்ப முடியல ?

அவள்: வேற யாரும் இல்லடி, என் மனசைத்தான்...

தோழி: என்னது உன் மனசை நீ நம்ப முடியலையா ? சரிதான் பித்து முத்தி போச்சுன்னு நினைக்கிறேன் ...விளக்கமா சொல்லுடி...

அவள்: அவன் ஊருக்கு போனானா ?

தோழி: யாரு ? ஓ ... அவனா ...சரி சரி...

அவள்: அவன் பின்னாடியே என் மனமும் போயிருச்சு....

தோழி: போயி?

அவள்: அவன் எப்படி இருக்கான் சாப்பிட்டானா, தூங்கினானா, நல்லா இருக்கானான்னு அவனையே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தது...

தோழி: சரி..அப்புறம் ?

அவள்: அப்புறம் என்ன அப்புறம்...திருப்பி என் கிட்ட வரவே இல்லை...

தோழி: ஐயோடா...பாவம்...

அவள்: போடி, நீ ஒருத்தி, காலம் நேரம் தெரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு...ஒரு வேளை இப்படி இருக்குமோ ?

தோழி: எப்படி ?

அவள்: என் நெஞ்சம் திருப்பி வந்திருக்கும்...அவன பார்க்காமால் எனக்குத் தான் சோறு தண்ணி இறங்கலியே ...தூக்கமும் போச்சுல...நான் மெலிஞ்சு, சோர்ந்து இருக்கிறத பார்த்து இது வேற யாரோன்னு நினைச்சு என்னை கண்டு பிடிக்க முடியாமல் என் நெஞ்சம் தேடிக் கொண்டிருக்குமோ ?

தோழி: சரிதான்...ரொம்ப தான் முத்தி போச்சு ... கால காலத்துல ஆக வேண்டியதை பண்ணிற வேண்டியதுதான்...இப்படி கூடவா காதலிப்பாங்க உலகத்துல...

காலங்களை கடந்து உங்கள் கதவை தட்டும் அகநானூற்றுப் பாடல்



குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ 
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் 
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை 
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் 
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய் 
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ  
அருளா னாதலின் அழிந்திவண் வந்து 
தொன்னலன் இழந்தவென் பொன்னிற நோக்கி 
ஏதி லாட்டி இவளெனப்  
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே. 


பொருள் 

குறுநிலைக் = சின்ன ஊரில்

குரவின் = குரா என்ற மரத்தின்

சிறுநனை = சிறிய அரும்புகள்

நறுவீ வண்டுதரு நாற்றம் = வண்டுகள் மொய்க்கும் மலரில் இருந்து வீசும் நறுமணம்  

வளிகலந்து ஈய  = காற்றில் மிதந்து வர

கண்களி பெறூஉங் = கண்கள் களிப்படையும்

கவின்பெறு காலை = கவித்துவமான இந்த காலை நேரத்தில்

எல்வளை = என்னுடைய வளையல்கள்

ஞெகிழ்த்தோர்க் = நெகிழ செய்தவர்க்கு (எப்படி ? ஒரு வேளை அவன் அதை கழட்டி விளையாடி கொண்டிருக்கலாம், அல்லது காதல் உணர்ச்சி மேலீட்டால் அவள் உணவு மறந்து மெலிந்து வளையல் நெகிழ்ந்து இருக்கலாம், அல்லது அவளுடைய நினைவாக அவன் அவளிடம் அதை வாங்கிச் சென்று இருக்கலாம் ... அனுபவித்தவர்களுக்குத் தெரியும் )


கல்லல் உறீஇயர் = எனக்கு துன்பம் தந்தவர் தான் என்றாலும் (என்ன வெல்லாம் துன்பம்...கன்னத்தை கிள்ளாமல் , விரல் நெறிய கை பற்றாமல், கண்ணீர் வர கண்ணில் கண் மை போட்டு விடாமல்...எவ்வளவு துன்பம் தருகிறார் )


சென்ற நெஞ்சு - அவர் பின் சென்ற என் நெஞ்சு

செய்வினைக் குசாவாய் = அவர் வேலை செய்யும் போது அவருக்கு உதவியாய் இருந்து

ஒருங்குவரல் = அவன் கூடவே இருந்து, அவனோடு ஒண்ணா வருவதருக்கு 

நசையொடு = நசை என்றால் அன்பு செய்தல்.

வருந்துங் கொல்லோ = அன்பும் செய்கிறது, வருத்தமும் படுகிறது
 
அருளா னாதலின் = அவன் எனக்கு அருள் செய்ய மாட்டான். அருளான் + ஆதலின்

அழிந்திவண் வந்து = அழிந்த, துன்பப்பட்ட என் நெஞ்சம் என்னிடம் வந்து

தொன்னலன் = தொன்மையான நலம் (பழைய அழகு )

இழந்தவென் = இழந்த என்

பொன்னிற நோக்கி = பசலை படர்ந்த என் மேனியின் நிறத்தை நோக்கி

ஏதி லாட்டி இவளெனப் = யார் இவள் என்று எண்ணி
 
போயின்று கொல்லோ = திரும்பி போய் விட்டதோ

நோய்தலை மணந்தே. = துன்பப்பட்டு, வருத்தப்பட்டு (என்னை காணாமல்)

அவளுடைய மனதிற்கே அவளை அடையாளம் தெரியவில்லை. அப்படி மாறிப் போனாள்.

கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படாமல், பத்திரமாய் நீந்தி கரை சேர்ந்து வந்த இந்த பாடல்...இன்றும் காற்றில் கரைந்த கற்பூரமாய் மணம் வீசும் காதலை பேசிக் கொண்டே இருக்கிறது...இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளும் இது மனம் - மணம்  பரப்பும் ... 

இன்னும் கொஞ்சம் கூட விரிவாக எழுதலாம் ... கவிதையை கட்டுரை ஆக்குவது  பாவம் என்று கருதி விடுகிறேன்...

கவிதையை நேரடியாக உணர்வதுதான் சிறந்தது....சில பல வார்த்தைகள் புரியாமல் போகலாம்...

எல்லாம் புரிய அது என்ன கட்டுரையா ? கவிதை கண்ணா மூச்சி ஆடும்....கண்ணில் தின் பண்டத்தை காட்டி விட்டு தர மாடேன் என்று பின்னால் மறைத்து ஓடும் காதலி போல...ஓடிப் பிடித்து, அவள் கையில் இருந்து பிடுங்கி விடலாம் தான்....அதுவா சுகம்....? ... அவளிடம் கெஞ்சி அவள் கொஞ்சம் பிகு பண்ணி, "கண்ணை மூடு ..அப்பத்தான் தருவேன் " என்று  அவள் அன்புக் கட்டளை போட்டு ...பின் ஒரு துண்டு உங்கள் வாயில் போடும் சுகம், சுகமா ?

கவிதை அப்படித்தான்...கண்ணில் தெரியும், கைக்கு எட்டாமல் போக்கு காட்டும்...விட்டுப் பிடியுங்கள்... 

வார்த்தை வார்த்தையாய் கவிதையை பிரிக்காதீர்கள் 

ரோஜாவில் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாய் பிச்சு பிச்சு தேடித் பார்க்க முடியாது....

கடைசியில் காம்பு தான் மிஞ்சும்...அதுவா அழகு ?

மீண்டும் ஒரு முறை கவிதையை படியுங்கள்....உங்கள் உதட்டோரம் ஒரு புன்னகை மலர்ந்தால் உங்கள் கவிதை புரிந்து விட்டது என்று அர்த்தம் ....






அபிராமி அந்தாதி - அறிதலும் புரிதலும்

இறைவனை அறிந்து கொள்ள முடியுமா ? அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ? அறிந்த பின் அவர்கள் என்ன செய்தார்கள் ? அறியும் முன் என்ன செய்தார்கள் ? இறைவனை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

பட்டர் சொல்கிறார்

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பொருள்

Sunday, February 24, 2013

ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல்

ஆத்தி சூடி - இடம் பட வீடு எடேல் 


இப்போது எங்கு பார்த்தாலும் விளையும் நிலங்களை பிளாட் போட்டு வீட்டு மனைகளாக மாற்றி அதில் வீடு கட்டி விடுகிறார்கள். இதனால், விவசாயம் நசிகிறது. வீடு எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். பயிர் விளைய நல்ல மண் வேண்டும், நீர் வரும் பாதையில் இருக்க வேண்டும், இப்படி நிறைய தேவைகள் இருக்கின்றன . அப்படி இருக்கும் இடங்களில் வீடு கட்டக் கூடாது. 

இடம் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. பட்டு போதல் என்றால் கருகிப் போதல். பயிர் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. 

எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு   முன், மக்கள் தொகை இவ்வளவு இல்லாத காலத்தில் அவ்வை சொல்லி இருக்கிறாள் ...இடம் பட வீடு எடேல் என்று.

எங்க கேக்கிறோம் ? விவசாய உற்பத்தி குறைந்து, உணவு பொருட்களின் விலை ஏறி திண்டாடுகிறோம். 

பெரியவங்க சொன்னா கேட்கணும். 

சிறுக கட்டி பெருக வாழ் அப்படின்னு தெரியாமையா சொன்னாங்க.

எவ்வளவு தீர்க்க தரிசனம் ? 

காலம் காலமாக ஆத்தி சூடி பள்ளிகளில் சொல்லித் தரப் படுகிறது. ஒழுங்காக சொல்லித் தந்திருந்தால், சொல்லிய படி நடந்திருந்தால் ...


ஹ்ம்ம்ம்ம்ம்