Thursday, March 14, 2013

குறுந்தொகை - நின் நெஞ்சு நேர்பவளே


குறுந்தொகை - நின் நெஞ்சு நேர்பவளே 


அவளுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். காதலித்த போதும், திருமணம் ஆன பின்னும் அவளின் அன்பு மாறவில்லை. நாள் ஆக நாள் ஆக அவனுக்குள் ஏதேதோ தேடல்கள். அவனுக்கு அவள் மேல் இருந்த அன்பு குறைந்தது என்று சொல்ல முடியாது ஆனால் ஏதோ ஒரு திரை விழுந்த மாதிரி ஒரு வாழ்க்கை போய்  கொண்டே இருக்கிறது.

அவளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு வேறு யாரையாவது பிடித்திருக்கிறதோ ? தன்னை மணந்து கொண்டதால் அவனுக்கு வாழ்வில் அவன் தேடும் இன்பம் கிடைக்கவில்லையோ என்று அவள் வருந்துகிறாள். அவன் வேறு யாரையாவது தேடுகிறானா ?

நினைக்க நினைக்க அவன் மேல் அன்பு பெருகுகிறதே தவிர குறையவில்லை.

இன்னொரு பிறவி என்று வந்தால் அவன் மனம் முழுவதும் நானே நிறைந்திருக்க வேண்டும் மனதிற்குள் வேண்டிக் கொள்கிறாள்.

பாடல்

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து 
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப 
இம்மை மாறி மறுமை யாயினும் 
நீயா கியரென் கணவனை 
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 


பொருள்:


அணிற்பல் லன்ன = அணிலின் பல்லை போன்ற. (சிறிய, கூரிய பற்கள்)

கொங்குமுதிர் முண்டகத்து = கொங்கு என்றால் பூவில் உண்டாகும் மகரந்தம் அல்லது தேன். மகரந்தம் முற்றி முதிர்ந்த முள்ளிச் செடியில்

மணிக்கே ழன்ன = நீல மணிகளை போன்ற

மாநீர்ச் = பெரிய நீர், கடல்

சேர்ப்ப = சேர்ந்தவனே, தலைவனே

இம்மை மாறி = இந்த பிறவி போய்

மறுமை யாயினும் = மறு பிறவி வந்தாலும்

நீயா கியரென் கணவனை = நீயே என் கணவராக வர வேண்டும்

யானா கியர் = யான் + ஆகியர் = நானே

நின் னெஞ்சுநேர் பவளே.= நின் நெஞ்சு நேர்பவளே = உன் மனதில் இருப்பவளே


நீயே என் கணவனாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நிறுத்தி இருக்கலாம். அவன் கணவன் என்றால் இவள் மனைவி தானே.

அவன் மனதில் இருப்பவளாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவன் மனதுக்கு இனியவளாக, மனதுக்கு பிடித்தவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

இந்தப் பிறவியில் அப்படி இல்லை, அது முடியவும் முடியாது என்று உணர்ந்து அடுத்த பிறவியிலாவது அவன் நெஞ்சு நேர்பவளாக தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.

நேர்பவளே என்ற சொல் மிக இனிமையான சொல். நேர்தல் இயற்கையாக நிகழ்வது.

கணவன் மேல் பாசம் கொண்ட, அவன் அன்பை முழுமையாகப் பெற முடியாத, ஒரு இளம் பெண்ணின் மனக் கேவல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நம் காதில் சன்னமாக ஒலிக்கிறது...அவள் கன்னத்தில் உருண்டோடும் கண்ணீர் துளியின் ஈரத்தை நாம் உணரத் தருகிறது இந்தப் பாடல் ....

Wednesday, March 13, 2013

திருக்குறள் - வெயிலும் அறமும்


திருக்குறள் - வெயிலும் அறமும்



என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பு இல்லாததை வெயில் எப்படி காயுமோ, அதுபோல் அன்பு இல்லாததை அறம் காயும். அது கோனார் தமிழ் உரை.

இதை சொல்ல வள்ளுவர் எதற்கு...பரிமேலழகர் எதற்கு. 

எலும்பு இல்லாதது எது ? புழு. புழுவிற்கு எலும்பு கிடையாது. சில பூச்சிகளுக்கு எலும்பு கிடையாது. 

இந்த புழுவை வெயில் எப்படி வாட்டி எடுக்கும் ? கொதிக்கும் சிமெண்டு தரையில் ஒரு மண் புழுவை போட்டுப் பாருங்கள். அது என்ன பாடு படும் என்று பாருங்கள். 

அது அந்த வெயிலை விட்டு வேகமாக விலகி போக நினைக்கும். அதால் முடியாது. அதனால்   ஊர்ந்து ஊர்ந்து தான் போக முடியும். ஊரும் போது உடல் எல்லாம் வெயில் எரிக்கும். தகிக்கும். என்ன செய்யும் ? ஓட முடியுமா ? முடியாது ? சிறிது நேரத்தில் தண்ணீர் தவிக்கும். எங்கு போய் குடிப்பது ? கடைசியில் அது வெயிலில் சுருண்டு இறந்து போகும் 

இரண்டாவது, நாம தூக்கி வெயிலில் போட வேண்டும் என்று இல்லை. வெயில் குறைவாக இருக்கும் போது , அந்த புழுவே வெளியே  வந்து உலாத்தும்...கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏறும்போது , அது சூட்டில் வாடும். அது போல அன்பு இல்லாதவன் தானே வந்து தவறு செய்வான். இராவணை கொல்லவா இராமன் கானகம் போனான். அன்பில்லாத அந்த அரக்கன், தானே வலிய  வந்து தவறிழைத்து அழிவை தேடிக்கொண்டான்.   

மூன்றாவது, வெயில் வருவது புழுவைக் கொல்ல அல்ல. அது பாட்டுக்கு வருது. ஆனால், இந்த புழு அந்த வெயிலின் கொண்டுமை தாங்காமல் வாடுகிறது. அது போல் அறம் பொதுவாய் இருந்தாலும், அன்பில்லாதவர்களை அறம் சுடும்.








இராமாயணம் - சரண் நாங்களே


இராமாயணம் - சரண் நாங்களே

கீழே உள்ள பாடலைப் படியுங்கள் ஒரு தரம்

உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

படித்து விட்டீர்களா ? நன்றாகப் படித்தீர்களா ? சந்தேகம் இல்லையே ?

மகிழ்ச்சி....இறைவனிடம் சரண் அடைந்ததற்கு மகிழ்ச்சி.

நான் எப்ப சரண் அடைந்தேன், கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன் ...என்னைப் போய் சரண் அடைந்தேன் என்று எப்படி சொல்லாலம் என்று சண்டைக்கு வராதீர்கள்....

தப்புதான்...நீங்கள் மட்டும் சரண் அடைந்ததாக கூறியதற்கு...நீங்களும், உங்களை சேர்ந்த எல்லோரும் ஒன்றாக சரண் அடைந்ததாக கூறியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி....

..நீ என்ன சொல்ல வருகிறாய் என்று நீங்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது தெரிகிறது...

கம்பரின் கருணையை பாருங்கள்....தான் மட்டும் சரணம் அடைந்தால் போதாது, தன் பாடலை படிக்கும் எல்லோரும் அவர்கள் சுற்றத்தார் மற்றும் நண்பர்களுடன் சரண் அடைய வேண்டும் என்று பாடி இருக்கிறார்...

ஒவ்வொரு முறை இந்த பாடலை படிக்கும் போதும்....

"சரண் நாங்களே " என்று நீங்கள் சொல்வதை தவிர்க்க முடியாது.

நாங்கள் என்றால் பன்மை. "சரண் நானே " என்று சொல்லவில்லை.


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்! என்று ஆண்டாள் கூறியது போல....


உனக்கே சரண் நாங்கள் என்று ஆரம்பிக்கிறார் கம்பர்.


"தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே " என்று சொல்லிவிட்டுத்தான் நீங்கள் காப்பியத்தை மேலே படிக்க முடியும்.

இராமாயணம் ஒரு சரணாகதி காப்பியம்.

சரணமே கதி. அது அல்லால் வேறு வழி இல்லை.

தொடக்கத்திலேயே சரணாகதி செய்து விடுகிறார் கம்பர்.

 தான் மட்டும் உய்ந்தால் போதாது என்று காலம் காலமாய் தன் காப்பியத்தை படிக்கும் எல்லோரும் பயன் பெற வேண்டும் என்று எல்லோரையும் சரண் அடைய வைக்கிறார் கம்பர்.

Tuesday, March 12, 2013

அபிராமி அந்தாதி - முருத்தன மூரலும்


அபிராமி அந்தாதி - முருத்தன மூரலும் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று முன்னெச்சரிக்கை செய்து விடலாமா என்று தோன்றியது....

அபிராமி பட்டரின் அன்பு மிக மிக அன்யோன்யமானது. கல்மிஷம் இல்லாதது. உறுத்தல் இல்லாதது. அவரையும், அபிராமியும் தவிர இந்த உலகில் யாரும் இல்லை என்ற நினைப்பில் ஆழ்திருப்பவர் அவர்.....

அவரின் அன்யோன்யத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.....

ஒரு பெண்ணுக்கு மிகுந்த அழகைச் சேர்ப்பது அவளின் மார்பகங்கள்.


கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று.


என்பார் வள்ளுவர் 

அபிராமியின் மார்புகளை பார்க்கிறார் பட்டர்.

இந்த மார்புகள் எப்போதும் என் தந்தையான சிவனின் கருத்திலும், அவன் கண்ணிலும் இருக்கும் என்கிறார்...பெரிய பொன்னாலான மலை போல் இருக்கும் மார்புகள் என்று புகழ்கிறார்...

அந்த மார்புகள், பசி என்று அழுத பிள்ளைக்கு பால் வழங்கியது...

அருட் பசி கொண்டு அலையும், அழும் நமக்கும் அருளை தரும் அவை.

அந்த மார்புகளுக்கு நடுவே தொங்கும் மணி ஆரம்.

அவளுடைய ஒரு கையில் வில், இன்னொரு கையில் அம்பு, புன்முறுவல் பூக்கும் முகம்...

இவற்றோடு நீ என் முன்னால்  வந்து நிற்க வேண்டும் என்று வேண்டுகிறார்....

பாடல்

கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின் 
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் 
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும், 
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

பொருள்


இராமாயணம் - இராவணன் கொண்டது காமமா ? காதலா ?


இராமாயணம் - இராவணன் கொண்டது காமமா ? காதலா ?


வழி எங்கும் இராவணன் கொண்டது காமம் என்றே சொல்லிக் கொண்டு வந்த கம்பன், கடைசியில், அதை காதல் என்று முடிக்கிறான்.

காமத்திருக்கும் காதலுக்கும் வேறுபாடு உண்டு தானே.

இராவணன் கொண்டது காதல் என்று மண்டோதரி வாயால் சொல்ல வைக்கிறான் கம்பன்.

இராவணன் இறந்து கிடக்கிறான். மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

இந்தப் பாடலுக்கு என்றே தனியாக ஒரு புத்தகம் போடலாம்.

”வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும்
இடன் நாடி ழைத்த வாறே?
‘கள் இருக்கும் மலர்க்கூந்தல்’ சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து
தடவிதோ ஒருவன் வாளி ! ”


ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்


‘கள் இருக்கும் மலர்க்கூந்தல்’ சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்

மனம் என்னும் சிறையில் ஒளித்து வைத்திருந்த காதல் என்று சொல்கிறாள். 

மண்டோதரிக்குத் தெரியாதா இராவணனைப் பற்றி ...

மனச்சிறையில் கரந்த  காமம் என்று சொல்லி இருக்கலாம்...சொல்லவில்லை.

அது மட்டும் அல்ல...இராவணன் இறந்த பின் அவன் முகம் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு பொலிவாக இருந்ததாம்....

ஒரு வேளை, தான் இறந்த பிறகாவது சீதை தன் காதலின் ஆழத்தை புரிந்து கொள்வாள் என்று நினைத்து இருப்பானோ ?

மும்மடங்கு பொலிந்ததம்மா அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா 

 Tale of Two Cities என்ற நாவலில், கதாநாயகன் ,  கதாநாயகியை மிகவும் நேசிப்பான். விதி வசத்தால் அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ளுகிறாள். அவளின் கணவனை புரட்ச்சியாளர்கள் சிறையில் அடைத்து விடுகிறார்கள். அவளின் முன்னாள் காதலன், அதாவது கதாநாயகன், அந்த கணவனை தப்பிக்க வைத்து, அந்த இடத்தில் அவன் இருந்து கொள்கிறான். மறு நாள், புரட்சியாளர்கள் அந்த காதலனை, கில்லடின் என்ற இயந்திரத்தில் வைத்து தலையை வெட்டி விடுகிறார்கள். 

துண்டான அவன் தலை கிடக்கிறது. 

They said of him, about the city that night, that it was the peacefullest man's face ever beheld there. Many added that he looked sublime and prophetic.

வெட்டப் பட்டு கிடந்து தலைகளிலேயே மிகவும் அமைதியான முகம் உள்ளதை இருந்த தலை அவனுடையது தான் என்று....அமைதியும், திருப்தியும், ஒரு ஞானி போன்ற லயிப்பும் இருந்ததாம் அந்த முகத்தில்..

காதலிக்காக உயிரை கொடுத்தவனின் இறந்த, துண்டான தலை கூட அவ்வளவு அழகாக இருந்தது  என்பார் சார்லஸ் டிக்கன்ஸ் ...

அதே போல், அவளுக்காக சண்டை போட்டு உயிரை விட்ட இராவணின் முகம் மும்மடங்கு பொலிந்தன என்றான் கம்பன்.

அது ஏன் பொலிந்தது என்று சொல்லவில்லை...நான் நினைக்கிறேன் சீதையையை  எண்ணித்தான் என்று .....



திருக்குறள் - நோயற்ற வாழ்வு

திருக்குறள் - நோயற்ற வாழ்வு

நவீன மருத்துவம், நோய்க்குக் காரணம் நுண்  கிருமிகள் என்று கண்டு சொல்கிறது. பக்டீரியா, வைரஸ், அமீபா என்ற நுண் கிருமிகள்தான் உடலில் நோயை உண்டு பண்ணுகின்றன என்று கூறுவதும் மட்டும் அல்ல, அவற்றை குணமாக்கவும் மருந்துகளை தருகின்றன.

ஆனால், வள்ளுவர் அப்படி சொல்லவில்லை.

மழையில் நனைந்தால் ஒருவனுக்கு சளி பிடிக்கிறது, இன்னொருவனுக்கு ஒன்றும் ஆவது இல்லை. கிருமிகள் தான் காரணம் என்றால் இருவருக்கும் சளி பிடிக்க வேண்டுமே ? ஏன் நிகழ்வது இல்லை ?

ஒரு சாலையோர உணவு விடுதியில் இருவர் உணவு உண்கிறார்கள். ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது, இன்னொருவனுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஏன் ?

தகாத உறவு கொண்டால் எய்ட்ஸ் என்ற நோய் வரும் என்கிறார்கள். சிலருக்கு வருகிறது . சிலருக்கு வருவதில்லை ஏன் ?

நோய் எதிர்ப்பு தன்மை (Immunity ) இருந்தால் கிருமிகள் ஒன்றும் செய்யாது. நோய் எதிர்ப்பு தன்மை குறைந்தால் கிருமிகள் தாக்கி நோய் வரும்.

இப்போது சொல்லுங்கள் நோய்க்குக் காரணம் கிருமிகளா ? நமது நோய் எதிர்ப்பு தன்மையில் உள்ள குறைபாடா ?

வள்ளுவர் நோய் எதிர்ப்பு தன்மை பற்றி கூட சொல்லவில்லை. நோய்க்கு அடிப்படை காரணம் மூன்று விஷயங்கள். அவை கூடினாலோ குறைந்தாலோ நோய் வரும். இப்படி யோசிப்போம், அவை கூடினாலோ, குறைந்தாலோ, நமது நோய் எதிர்ப்பு தன்மை குறையும், அப்படி நோய் எதிர்ப்பு தன்மை குறைந்தால், கிருமிகள் தாக்கி நோய் வரும்.

நவீன மருத்துவம் கண்டுகொண்டதை விட இரண்டு படி மேலே போகிறார் வள்ளுவர்.

கிருமி தாண்டா நோய்க்கு காரணம். கிருமி உன்னை தாக்கக் காரணம் உன் நோய் எதிர்ப்பு தன்மையில் உள்ள குறைபாடு. அந்த குறைபாட்டுக் காரணம் மூன்று விஷயங்கள்....

அது என்ன தெரியுமா ? சொல்கிறேன் கேள் என்று ஆரம்பிக்கிறார் வள்ளுவர்....

கேட்போமே ....






Monday, March 11, 2013

இராமாயணம் - இராம நாமம் பிறந்த கதை

இராமாயணம் - இராம நாமம் பிறந்த கதை

மெய் சிலிர்க்கும் பாடல்

முதன் முதலில் "இராமன்" என்ற பெயர் பிறந்த கதை.

ஒரு நாட்டை ஆயிரம் ஆண்டுகளாக, எத்தனையோ தலைமுறைகளாக மந்திரம் போல் கட்டி போட்ட நாமம் பிறந்த கதை.

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை
தன்னையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை

அந்த இராம என்ற நாமம் பிறந்த கதை      இது.

இராமன் என்ற பெயரை முன்தான் முதலில் யார் சொன்னது தெரியுமா ?


இராமன், இலக்குவன் பரதன், சத்ருகன் என்ற நால்வரும் பிறந்திருக்கிறார்கள்.

வசிட்டனிடம் பெயர் வைக்கச் சொல்லி தசரதன் வேண்டினான்.

அதிலும் ஒரு பாடம் நமக்கு. யார் பெயர் வைப்பது என்று. ஆசாரியனை கொண்டு பெயர் வைக்கச் சொல்கிறான் தசரதன்.

வசிட்டன் நால்வருக்கும் பெயர் வைக்கிறான்.

முதல் பெயர் இராமனுக்கு. முதன் முதலாய் இராம நாமம் காப்பியத்தில் பிறந்த இடம்.