Sunday, March 17, 2013

இராமாயணம் - முடிசூட்டு விழாவிற்கு வரதாவர்கள்


இராமாயணம் - முடிசூட்டு விழாவிற்கு வரதாவர்கள் 


இராமனின் முடி சூட்டு விழா. யார் யாரெல்லாமோ வந்து இருக்கிறார்கள். அந்த பட்டியலை சொல்லிக்கொண்டு போனால் மிக நீளமாக இருக்கும்.

யார் வரவில்லை என்று சொல்லிவிட்டால் மற்றவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள் என்று அர்த்தம் பண்ணிக்க் கொள்ளலாம் அல்லவா ?

வராதவர்கள் பட்டியல் ரொம்ப சின்னது. மூணே மூணு பேர் மட்டும் வரவில்லை

முதாலவது - மலைகள். அவைகளால் நகர முடியாது. அவை வரவில்லை.

இரண்டாவது - எட்டு திக்கும் காக்கும் யானைகள். அவை வந்து விட்டால் திசைகளை யார் காப்பாற்றுவது ? எனவே அவை வரவில்லை.

மூன்றாவது - இலங்கை வாழ் அரக்கர்கள்.

நலம் கிளர் பூமி என்னும்
     நங்கையை நறுந் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம்
     காண வந்து அடைந்திலாதார் -
இலங்கையின் நிருதரே; இவ்
     ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும், ஆசை நின்ற
     விடா மத விலங்கலேயால்.

பொருள்

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 2


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 2 


காமம் ஆண்களின் மிகப் பெரிய பலவீனம். இது பற்றி புலம்பாத சித்தர்கள் இல்லை. அவர்களின் பலவீனத்தை பெண்கள் மேல் ஏற்றி, பெண்களை வசைபாடி எழுதித் தள்ளி இருக்கிறார்கள். 


பெண்ணாகி வந்தொரு மாயப்பிசாசம் பிடித்திட் டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப் பொருள் பறிக்க
எண்ணா துனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

என்று பெண்களை மாயப் பிசாசு என்று கூறுகிறார் பட்டினத்தடிகள். 

பெண்ணாசையால் அழிந்தான் இராவணன். இந்திரன் கதையும் , சந்திரன் கதையும் அதுதான். 

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஒழுக்க நெறியாக கொண்ட தமிழர் சமுதாயத்திலும் பொது மகளிர், வரைவின் மகளிர் என்ற அங்கம் திருவள்ளுவர் காலம் தொட்டு இருந்திருக்கிறது. தொல்காப்பியர் இந்த பெண்களைப் பற்றி கூறுகிறார், அருணகிரிநாதர் கூறுகிறார், கம்பர் பாடி இருக்கிறார்....

தவறுவது மனித இயல்பு. தவறை உணர்ந்த பின் மனிதன் திருந்த வேண்டும் திருத்திக் கொள்ள வேண்டும். அற   நூல்களும் பெரியவர்களும் இதைத்தான் கூறி கொண்டே இருக்கிறார்கள். தவறு செய்து, பின் திருந்தியவர்களை இந்த சமுதாயம் என்றுமே வெறுத்து ஒதுக்கியது இல்லை. பட்டினத்தாரையும் அருணகிரியையும் இன்று கோவிலில் வைத்து வழிபடுகிறோம் 

இராவணன் திருந்த வில்லை. துரியோதனன் திருந்தவில்லை. பீஷ்மர் சொன்னார், துரோணர் சொன்னார், கிருஷ்ணன் சொன்னான்...எங்கே கேட்டான் ? திருந்தாத தவறால் அழிந்தான் அவன். 

நேற்று எங்கே விட்டோம்...

திருநீலகண்டர் மனைவியை ஆசையுடன் நெருங்கினார். அந்த அம்மையார் "தீண்டுவீராகில் எம்மை திருநீலகண்டம்" என்று அவரை விலக்கினார். 

பெண்களின் மேல் எவ்வளவு ஆசை இருந்ததோ அதை விட ஒரு படி மேலே இறைவன் மேல் பக்தி இருந்தது. 

கீழே உள்ள பாடலைப் படியுங்கள்...ஒரு மனிதன் தலைகீழாக ஒரு கணத்தில் மாறியது தெரியும், பக்தி காமத்தை வென்ற கதை தெரியும், சேக்கிழாரின் தமிழ் புலமை தெரியும்...


ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் 
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை 
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் 
 
பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் ஆதியான, மூலமான அவர். ஆதியார் 

 நீல கண்டத்து = நீல கண்டமான சிவன் மேல் 

 அளவு தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட அளவு கடந்த ஆர்வம் 

 பேதியா = பேதலிக்காமல். ஒரு புறம் மாணவி மேல் கொண்ட காதல், ஆசை...மறு புறம் எம்மை தொட்டால் திருநீலகண்டம் என்று அவர் சொன்னதால், அதை மீறி தொட்டால் தன் பக்திக்கு வரும் இழுக்கு...இந்த இரண்டுக்கும் நடுவில் நின்றாலும், ஒரு குழப்பமும் இல்லாமல், 

ஆணை கேட்ட = மனைவியின் ஆணை கேட்ட 

பெரியவர் = பெரியவர். யார் பெரியவர், எதில் பெரியவர் ...படிப்பில்லா, அறிவிலா, செல்வத்திலா, சமூக அந்தஸ்திலா, பதவியிலா...எதிலும் அவர் பெரியவர் அல்ல. சேக்கிழார் அவரை பெரியவர் என்கிறார். பெரியது என்பது பணத்திலும், புகழிலும், பதவியிலும் வருவது அல்ல. மிகச் சாதாரண மனிதன்,மண்பாண்டம் செய்து விற்கும் ஒரு குயவன் , பொது மகளிடம் சென்று வரும் ஒரு ஆணை, பெரியவர் என்கிறார் சேக்கிழார். காரணம் இல்லாமல்  இதை பெரிய புராணம் என்று சொல்லுவார்களா? இவர் வாழக்கை முழுவதையும் படித்த பின் உங்களுக்குத் தெரியும் ஏன் அவர் பெரியவர் என்று. 

 பெயர்ந்து நீங்கி = பெயர்ந்து என்றாலும் நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் எதற்கு பெயர்ந்து நீங்கி ? 

எழுதியவர் தெய்வப் புலவர் சேக்கிழார். காரணம் இல்லாமல் எழுதுவாரா ? 

அந்த அம்மையார் சொன்னவுடன் முதலில் மனம் நீங்கியது, பின் உடல் நீங்கியது.

 மனம் நீங்காமல் உடல் மட்டும் நீங்கி என்ன பயன்?

 குற்றங்கள் எல்லாம் முதலில் மனதில் செய்யப்படுகின்றன.

பின்தான் உடல் செய்கிறது." உங்களில் மனதால் கெட்டுப் போகாதவர்கள் இவள் மேல் முதல் கல்லை எரியட்டும்" என்றார் இயேசு பிரான்.

மனத்திர்க்கன் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீற பிற என்பார் வள்ளுவர்

மனம் பெயர்ந்தது, உடல் நீங்கியது.

அது எல்லாம் இல்லை, ஏதோ ஒரு வார்த்தையை பாடலின் இலக்கணம் கருதி போட்டிருக்கலாம், அதுக்கு இவ்வளவு பெரிய விளக்கமா என்று நீங்கள் கேட்கலாம்.  மேலே படியுங்கள். 


ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் அயலார். மற்றவர்கள். ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்பார் வள்ளுவர். தன் சொந்த மனைவியை அயலார் போல் நோக்கினார். பொது மகளிர் வீட்டுக்கு சென்று வந்த அவர், சொந்த மனைவியை அயலார் போல் நோக்கினார். அது மட்டும் அல்ல... 

 எம்மை என்றதனால் = அந்த அம்மையார் என்னை என்று சொல்லவில்லை, எம்மை என்று கூறினார். எம்மை என்பது பன்மை. 

மற்றை  மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் = மற்ற எந்த பெண்ணையும் மனத்தாலும் தீண்டேன் என்றார். உன்னை மட்டும் அல்ல, மற்ற பெண்களையும் மனதாலும் தொடேன் என்றார்.

முடிகிற காரியமா ? குயவனார் வீடு எவ்வளவு பெரிசு இருக்கும் ? அருகில் அழகே உருவான மனைவி.   உடல் தள்ளி இருந்தாலும், உள்ளம் சும்மா இருக்குமா ? தொடச் சொல்லி தூண்டுமா இல்லையா ?

எப்படி வாழ்ந்தார்...

Saturday, March 16, 2013

திருக்குறள் - நோய் செய்தார்


திருக்குறள் - நோய் செய்தார்


நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் வரும் கடைசிக் குறள் (319).

எளிய உரை - மற்றவர்களுக்கு துன்பம் செய்தால் அது நமக்கே வரும். நமக்கு துன்பம் வேண்டாம் என்றால் பிறருக்கு துன்பம் செய்யக் கூடாது.

சொல்லுவது வள்ளுவர். ஆழமான அர்த்தம் ஏதும் இருக்கும்.

நோய் என்ற சொல் இங்கே துன்பம் என்ற பொருளில் வந்தது. மருந்து என்ற அதிகாரத்தில் நோய் எப்படி வருகிறது என்று வள்ளுவர் கூறுகிறார்.

மனிதனுக்கு நோய் வெளியில் இருந்து வருவது இல்லை. மனிதனுக்கு நோய் உள்ளே இருந்துதான் வருகிறது என்பது வள்ளுவரின் முடிபு.

நம் உடம்பில் மூன்று விஷயங்கள் குறைந்தாலும், மிகுந்தாலும் நோய் வரும் என்கிறார் வள்ளுவர்.

எப்படி நோய் நம்மால் வருகிறதோ அது போல் நமக்கு வரும் துன்பங்களும் நம்மால் தான் வருகின்றன

சரி, ஒரு சில துன்பம் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்...எல்லா துன்பமும்  அப்படியா ? பிறர் நமக்கு துன்பம் செய்வதே இல்லையா என்று நீங்கள் கேட்பீர்கள் என்று வள்ளுவருக்குத் தெரியும்

"நோய் எல்லாம்" என்றார். ஒரு விதி விலக்கும் கிடையாது. உங்களுடைய எல்லா துன்பங்களுகும்  நீங்கள் தான் காரணம். நீங்கள் பிறருக்கு துன்பம் செய்தால் ஏதோ அவனுக்கு கொஞ்சமும், உங்களுக்கு கொஞ்சமும் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை மறந்து விடுங்கள். நீங்கள் யாருக்கு என்ன துன்பம் செய்தாலும் அந்த துன்பம் "எல்லாமே" உங்களுக்குத்தான் வரும். அவனுக்கு கொஞ்சம் கூட போகாது.

உங்களுக்குத் துன்பம் வேண்டாம் என்றால், நோய் செய்யார், நோய் இன்மை வேண்டுபவர்


  பிணி என்பது உடலுக்கு வருவது மட்டும் அல்ல....உடற் பிணி, உள்ளப் பிணி, காமப் பிணி  என்று பல நோய்களை கூறுகிறார் வள்ளுவர்.

தரையில் ஓங்கி அறைந்தால், தரைக்கு எவ்வளவு வலிக்கும் உங்கள் கைக்கு எவ்வளவு வலிக்கும் ?

உங்களுக்கு துன்பம் வேண்டாம் என்றால், பிறருக்கு துன்பம் தருவதை நிறுத்துங்கள் என்கிறார் வள்ளுவர்.

நான் யாருக்குமே துன்பம் செய்ததே இல்லையே...எனக்கு ஏன் துன்பம் வருகிறது  என்று சிலர் கேட்கலாம்...

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் = கடைசி இரண்டு எழுத்து "ஆம்" என்றால் ஆகும், வரும் என்று அர்த்தம். இப்ப செய்திருக்க மாட்டீர்கள், முன் எப்போதாவது செய்தது இப்போது "ஆகி" வருகிறது.

ஆகும், ஆகாமல் போகவே போகாது...

எவ்வளவு ஆழமான அர்த்தம் உள்ள குறள். படியுங்கள். குறிப்பாக அடுத்த தலைமுறைக்கும் சொல்லுங்கள்

நாம் சேர்த்த, பெற்ற சொத்துகளை நம் பிள்ளைகளுக்கு பயன்படும்படி விட்டு செல்வதுதானே ஒவ்வொரு பெற்றோரின் கடமை. திருக்குறள் என்ற பொக்கிஷம், சொத்து நீங்கள் பெற்றது. இப்படி ஒன்று இருக்கிறது என்று பிள்ளைகளிடம் சொல்லி வைத்துவிட்டு போங்கள்.


பெரிய புராணம் - தீண்டுவிராகில், திருநீலகண்டம்

பெரிய புராணம் - தீண்டுவிராகில், திருநீலகண்டம் 


திருநீலகண்டர் , திருநீலகண்டர் என்று ஒருவர் இருந்தார். பிறப்பால் அவர் குயவர். மண்பாண்டம் செய்து விற்பவர்.சிறந்த சிவ பக்தர்


ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
 நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார்

மண்பாண்டம் செய்து விற்று வரும் வருமானம் எவ்வளவு இருந்து விடும் ?
வறுமைதான். ஏழ்மைதான். ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தார் ....அவர் வாழ்ந்த வாழ்கையை சொல்ல வந்த சேக்கிழார்

 பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
 மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார் 

பொய் சொல்ல மாட்டார். அற வழியில் வாழ்ந்து வந்தார். சிவனின் அன்பர். மெய் அடியார்க்கு வேண்டியதை விருப்புடன் செய்து வந்தார்.


அப்படி வாழ்ந்து வந்த அவர், பருவத்தில் திருமணம் செய்து கொண்டார். 
அவருடைய மனைவியும் அவரைப் போலவே சிறந்த சிவ பக்தி உள்ளவர்

அப்படி இருக்கும்போது, ஒரு நாள் திருநீலகண்டர் ஒரு பொது மகளின் வீட்டிற்கு சென்று வந்தார். கணவன் இன்னொரு பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவது எந்த மனைவிக்குத்தான் பிடிக்கும் ? பயங்கர கோவம் அந்த அம்மாவுக்கு. அவருக்கு வேண்டிய எல்லாம் செய்வார், ஆனால், நெருங்கிய உறவு மட்டும் கிடையாது


ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண 
 மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை 
 ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் 
 தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்



அவருக்கோ அவருடைய மனைவின் மேல் அளவு கடந்த பாசம். தேன் சிந்தும் தாமரைப் பூவில் வாழும் இலக்குமியை விட அழகானவர் அந்த அம்மையார்.

அவளின் ஊடலை தீர்க்க வேண்டி, அவளிடம் சென்று கெஞ்சுகிறார். கணவனை கெஞ்ச வைப்பதில் மனைவிக்கு ஒரு சுகம். கெஞ்சுவதாகவே சேக்கிழார் சொல்கிறார்


மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று 
 பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி  அனையார் தம்மை 
 வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் 
 தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்


வேண்டுவது இரந்து கூறி - இரத்தல் என்றால் பிச்சை வேண்டுதல்.
மெய் உற அணையும் போதில் = கட்டி பிடிக்க போகும் போது

எம்மை தீண்டினால் , திருநீலகண்டத்தின் மேல் ஆணை என்றார் அந்த அம்மையார்.

அடுத்து என்ன நடந்தது என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்











Friday, March 15, 2013

இராமாயணம் - சுந்தரி, சொல்


இராமாயணம் - சுந்தரி, சொல்


இராமன் வில்லை முறித்துவிட்டான் .. அதை அங்கு நின்று பார்த்த சீதையின் தோழி, அந்த செய்தியை சீதையிடம் சொல்ல மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓடி வருகிறாள்.

அவளுக்கு அளவுக்கு மீறிய மகிழ்ச்சி. பித்து பிடித்தவளை போல ஓடி வருகிறாள்.

வந்தவள் சீதையை கண்டதும் மேலும் மகிழ்ச்சி கொள்கிறாள். ஆனந்தம் பொங்குகிறது.

சீதையின் தோழிதானே. சீதையை கண்டவுடன் அவளுக்கு வணக்கம் சொல்ல வேண்டியவள் தானே.?

வந்தவள் சீதையை தொழவில்லை, மூச்சு வாங்குகிறது ஓடி வந்த வேகத்தால், ஆ ஊ என்று சந்தோஷத்தில் சப்தம் போடுகிறாள். சீதைக்கு அதை பார்க்க சிரிப்பாய் வருகிறது. சீதை, அவளின் தோளைத் தொட்டு, "சுந்தரி, சொல்" என்று சொன்னபின், தோழி ஒரு நிலைக்கு   வருகிறாள். தான் யார், என்ன செய்தோம் என்ற நினைவு அப்போதுதான் அவளுக்கு வருகிறது.

அப்போது தான் சீதையை பணிந்து, வந்த விஷயத்தை சொல்கிறாள்...

ஒரு மிகப் பெரிய காப்பியத்தை எழுதிக் கொண்டு போகும் போது , இந்த மாதிரி சின்ன சின்ன சம்பவங்களை கூட விட்டு விடாமல் அழகாகச் சொல்வதில் கம்பன் மிக உயர்ந்து நிற்கிறான்....

பாடல்

வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தம் இல் உவகையள். ஆடிப் பாடினள்;
‘சிந்தையுள் மகிழ்ச்சியும். புகுந்த செய்தியும்.
சுந்தரி! சொல்’ என. தொழுது சொல்லுவாள்;



பொருள்


வந்து அடி வணங்கிலள்  = வந்தவுடன் சீதையை அடி பணியவில்லை

வழங்கும் ஓதையள் = ஓதை என்றால் அர்த்தம் இல்லாத சப்த்தம்

அந்தம் இல் உவகையள் = எல்லை இல்லாத மகிழ்ச்சியுடன்

ஆடிப் பாடினள் = ஆடினாள் பாடினாள்

சிந்தையுள் மகிழ்ச்சியும் = உன் சிந்தையின் மகிழ்ச்சியும்

புகுந்த செய்தியும் = அதில் புகுந்த செய்யும்

சுந்தரி! சொல்’ என = சுந்தரி சொல் என்று சீதை சொன்ன வுடன் சுய உணர்வு பெற்று

தொழுது சொல்லுவாள் = தொழுது சொல்லுவாள் (அதற்க்கு பின் தான் தொழுதாள் ). அவ்வளவு சந்தோஷம்.



பெரிய புராணம் - இரண்டு இருள்


பெரிய புராணம் - இரண்டு இருள் 


இருட்டு. கும்மிருட்டு.  எதிரில் இருப்பது கூட தெரியவில்லை. கண் திறந்து தான் இருக்கிறது. இருந்தாலும் பார்க்க முடியவில்லை. தட்டு தடுமாறி, தொட்டு, தடவி ஒரு மாதிரி என்ன என்ன எங்கே இருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ள முயல்கிறோம். கண்  ஒளி இல்லாதவர்கள் உலகை அறிந்து கொள்வது இல்லையா ?

வெளியே உள்ள இருள் மற்ற பொருள்களை நம் பார்வையில் இருந்து மறைக்கும். ஆனால், அது நம்மை நாம் உணர்வதை தடுக்காது. எந்த இருளிலும் நாம் நம்மை அறிந்து கொள்ள முடியும்....


உள்ளுக்குள்ளே ஒரு இருள் இருக்கிறது. அக இருள். அந்த இருள், உலகை மட்டும் அல்ல நம்மை நாமே அறிந்து கொள்ளவதை மறைக்கும்.

புற இருள் நம்மை சார்ந்தது அல்ல. அந்த இருள் வரும் போகும். ஆனால், இந்த அக இருள் இருக்கிறதே அதை நாமே உருவாக்குகிறோம், அது நம்மை சார்ந்தே வாழ்கிறது, நம்மை சார்ந்தே வளர்கிறது.

அதை அறியாமை இருள் என்று சொல்லலாம், ஆணவ இருள் என்று சொல்லலாம்...வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்...இந்த அக இருள் உங்களால் உருவாகி, உங்களை சார்ந்து நின்று உங்களால் நாளும் நாளும் வளர்கிறது.

இந்த இருளை யார் போக்க முடியும் ? உங்களுக்குத் தெரியாது நீங்கள் இருளில் இருக்கிறீர்கள் என்று....இருளே சுகம், இருளே நிரந்தரம் என்று இருகிறீர்கள்....வெளியில் இருந்து யாராவது ஒரு விளக்கை கொண்டு வந்தால்  அன்றி இந்த அக இருளில் இருந்து விடுபட முடியாது....

அந்த விளக்குதான் இந்த திரு தொண்டர் புராணம் என்ற அடியார்களின் வரலாறு கூறும் நூல் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார் ...


பாடல்


இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற  
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற  
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்


பொருள்



Thursday, March 14, 2013

பெரிய புராணம் - ஒரு அறிமுகம்

பெரிய புராணம் - ஒரு அறிமுகம் 


அறுபத்து மூன்று நாயன்மார்களை பற்றி பாடல்களின் தொகுப்பு பெரிய புராணம். எழுதியவர் தெய்வப் புலவர் சேக்கிழார்.

கம்ப இராமாயணம் போல் படிக்க அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் தீந்தமிழால் எதற்கும் குறைவானது அல்ல இந்த நூல்.

சேக்கிழார் ஒவ்வொரு பாடலையும் மிக மிக நுணுக்காமாக பாடி இருக்கிறார்.

சிவ புராணம், கந்த புராணம் என்று பதினெட்டு புராணங்கள் உண்டு என்றாலும் அவை எல்லாம் "பெரிய" புராணம் என்ற அடை மொழியை பெறவில்லை.

அடியார்களை பற்றி கூறும் இந்த புராணம் மட்டும்தான் பெரிய என்ற அடை மொழியை பெற்றது.

ஏன் ?

அடியார்கள் மனத்தில் ஆண்டவன் இருப்பான். ஆண்டவன் மனத்தில் அடியார் இருக்க மாட்டார்

அடியாரை தொழும் போது ஆண்டவனையும் சேர்த்துத் தொழுவதனால், அடியார் புராணம் பெரிய புராணம் என்று பெயர் பெற்றது.

அடியார் மனதில் ஆண்டவன் இருப்பான் என்று நான் சொல்லவில்லை....


என் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

என்று மாணிக்க வாசகர் சொல்லுகிறார்.


இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று அறிந்து கொள்ள அல்ல

அடியவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்று அறிந்து கொள்ள அல்ல...

தமிழின் சுவைக்காக, தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழ் பாடல்களுக்காக பெரிய புராணம் படிக்கலாம்.

மிக மிக நுணக்கமான பாடல்கள்.

இதில் வரும் முதல் பாடலான "உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன் " என்ற பாடலுக்கு இராமலிங்க அடிகளார் மூன்று நாட்கள் அர்த்தம் விரித்துச் சொன்னாராம்.  ஒரு பாடலில் அவ்வளவு அர்த்தச் செறிவு.

எவ்வளவு தான் அடியார்களின் புகழை கூடிச் சொன்னாலும் அது அதிகாமாகாது என்று ஆரம்பிக்கிறார் சேக்கிழார்..... 

 அளவிலாத பெருமையராகிய

 அளவிலா  அடியார் புகழ் கூறுகேன்  
 அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்  
 அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.

பெரிய புராணத்தில் எனக்கு பிடித்த பாடல்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்....அவை  உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் ....